திருக் குற்றாலம் --- 0982. ஏடுக் கொத்தார் அலர்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

ஏடுக்கொத் தாரலர் (திருக்குற்றாலம்)

 

முருகா! 

அடியேன் நரகத்தில் விழாமல் அருள்வாய்

 

 

தானத்தத் தானன தானன

     தானத்தத் தானன தானன

          தானத்தத் தானன தானன ...... தனதான

 

 

ஏடுக்கொத் தாரலர் வார்குழ

     லாடப்பட் டாடைநி லாவிய

          ஏதப்பொற் றோள்மிசை மூடிய ...... கரமாதர்

 

ஏதத்தைப் பேசுப ணாளிகள்

     வீசத்துக் காசைகொ டாடிகள்

          ஏறிட்டிட் டேணியை வீழ்விடு ...... முழுமாயர்

 

மாடொக்கக் கூடிய காமுகர்

     மூழ்குற்றுக் காயமொ டேவரு

          வாயுப்புற் சூலைவி யாதிக ...... ளிவைமேலாய்

 

மாசுற்றுப் பாசம்வி டாசம

     னூர்புக்குப் பாழ்நர கேவிழு

          மாயத்தைச் சீவியு னாதர ...... வருள்வாயே

 

தாடுட்டுட் டூடுடு டீடிமி

     டூடுட்டுட் டூடுடு டாடமி

          தானத்தத் தானத னாவென ...... வெகுபேரி

 

தானொத்தப் பூதப சாசுகள்

     வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்

          சாகப்பொற் றோகையி லேறிய ...... சதிரோனே

 

கூடற்கச் சாலைசி ராமலை

     காவைப்பொற் காழிவெ ளூர்திகழ்

          கோடைக்கச் சூர்கரு வூரிலு ...... முயர்வான

 

கோதிற்பத் தாரொடு மாதவ

     சீலச்சித் தாதியர் சூழ்தரு

          கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

ஏடுக் கொத்து ஆர் அலர் வார்குழல்

     ஆபட்டாடை நிலாவிய,

          ஏதப்பொன் தோள்மிசை மூடிய ...... கரமாதர்,

 

ஏதத்தைப் பேசு பண ஆளிகள்,

     வீசத்துக்கு ஆசை கொடு ஆடிகள்,

          ஏற இட்டிட்டு ஏணியை வீழ்விடு ...... முழுமாயர்,

 

மாடு ஒக்கக் கூடிய காமுகர்,

     மூழ்கு உற்று,காயமொடே வரு

          வாயுபுன் சூலை வியாதிகள் ...... இவைமேலாய்,

 

மாசு உற்று,பாசம் விடா சமன்

     ஊர் புக்கு,பாழ் நரகே விழும்,

          மாயத்தைச் சீவி,உன் ஆதரவு ...... அருள்வாயே.

 

தாடுட்டுட் டூடுடு டீடிமி

     டூடுட்டுட் டூடுடு டாடமி

          தானத்தத் தானத னா என ...... வெகுபேரி

 

தான் ஒத்த,பூத பசாசுகள்

     வாய்விட்டு,சூரர்கள் சேனைகள்

          சாகபொன் தோகையில் ஏறிய ...... சதிரோனே!

 

கூடல்கச்சாலைசிராமலை,

     காவைபொன் காழிவெளூர்திகழ்

          கோடைகச்சூர்கருவூரிலும்,...... உயர்வான

 

கோதுஇல் பத்தாரொடு மாதவ

     சீலச் சித்த ஆதியர் சூழ்தரு

          கோலக் குற்றாலம் உலாவிய ...... பெருமாளே.

 

பதவுரை

 

      தாடுட்டுட் டூடுடுடு டீடிமி டூடுட்டுட் டூடுடு டாடமி தானத்தத் தானதனா என வெகு பேரி --- தாடுட்டுட் டூடுடுடு டீடிமி டூடுட்டுட் டூடுடு டாடமி தானத்தத் தானதனா என ஒலிக்கும் பலவகையான முரசுகளுடன்,

 

      தான் ஒத்தப் பூத பசாசுகள் வாய்விட்டு--- ஒத்த குரலில் பூதங்களும் பேய்களும் வாய் விட்டு ஓலமிட,

 

     சூரர்கள் சேனைகள் சாக--- சூராதி அவுணர்களுடைய சேனைகள் அழி,

 

     பொன் தோகையில் ஏறிய சதிரோனே--- அழகிய மயிலின் மேல் ஏறிய பெருமை மிக்கவரே!

 

     கூடல்--- கூடல் என்னும் மதுரை

 

     கச்சாலை --- காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேச்சரம்,

 

     சிராமலை --- திரிசிராப்பள்ளி,

 

     காவை --- திரு ஆனைக்கா,

 

     பொன் காழி--- அழகிய சீகாழி,

 

     வெளூர்--- வைத்தீசுரன் கோயில் என்னும் புள்ளிருக்குவேளூர்,

 

     திகழ் கோடை--- விளங்கும் வல்லக்கோட்டை,

 

     கச்சூர்--- திருக்கச்சூர்,

 

     கருவூரிலும்--- கருவூர் முதலிய

 

     உயர்வான--- மேன்மை பொருந்திய திருத்தலங்கள் பலவற்றிலும்,

 

      கோது இல் பத்தாரொடு--- குற்றமற்ற அடியார் பெருமக்களுடன்,

 

      மாதவ சீலச் சித்தாதியர் சூழ்தரு--- சிறந்த தவ ஒழுக்கம் வாய்ந்த சித்தர் முதலானோர் இருந்து வாழ்கின்ற

 

      கோலக் குற்றாலம் உலாவிய பெருமாளே--- அழகிய திருக்குற்றாலம் என்னும் திருத்தலத்தில் உலவி வாழ்கின்ற பெருமையில் சிறந்தவரே!

 

      ஏடுக் கொத்து ஆர் அலர் வார் குழல் ஆட--- இதழ்களை உடைய பூங்கொத்துக்களைக் கொண்ட நீண்ட கூந்தல் அசைந்து ஆ,

 

     பட்டு ஆடை நிலாவிய --- பட்டு ஆடையை அணிந்துள்ள,

 

     ஏதம் பொன் தோள் மிசை மூடிய கர மாதர்---  துன்பம் விளைக்கும்,அழகிய தோள்கள் மீது மூடியநெஞ்சிலும் கரவு கொண்டவிலைமாதர்.

 

      ஏதத்தைப் பேசு பண ஆளிகள்--- குற்றம் கண்டே பேசிப்பணத்தைக் கைக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளவர்கள்.  

 

     வீசத்துக்கு ஆசை கொடு ஆடிகள்--- ஒரு வீசம் (சிறிது) அளவே ஆசை கொண்டவர்களாக நடிப்பவர்கள்.

 

     ஏற இட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர்--- ஏறிவிட்ட பின் ஏணியைத் தள்ளி விடுகின்ற முழுமையான வஞ்சகர்கள்.

 

      மாடு ஒக்கக் கூடிய காமுகர்--- மாடு போலப் புணரும் காமம் கொண்டவர்கள் 

 

     மூழ்கு உற்று--- வசத்திலே பட்டு முழுகி இருந்து,

 

     காயமொடே வரு--- அதன் விளைவாக உடலில் தோன்றுகின்ற

 

     வாயுப் புல் சூலை வியாதிகள் இவை மேலாய்--- வயிற்றில் உண்டாகும் வாயுத் தொல்லையும்சூலை நோய் முதலானவையும் மிகுந்து,

 

      மாசு உற்று--- உடலும் உள்ளமும் கேடு அடைந்து,

 

     பாசம் விடா--- பாசக் கயிற்றை வீசுகின்ற 

 

     சமனூர் புக்கு --- இயமனுடைய உலகத்தை அடைந்து,

 

     பாழ் நரகே விழு--- பாழான நரகத்திலே விழுகின்,

 

     மாயத்தைச் சீவி--- கொடுமையைக் கழித்து,

 

     உன் ஆதரவு அருள்வாயே --- தேவரீருடைய திருவருள் கருணையைத் தந்து அருள் புரிவாயாக.

 

பொழிப்புரை

 

     தாடுட்டுட் டூடுடுடு டீடிமி டூடுட்டுட் டூடுடு டாடமி தானத்தத் தானதனா என ஒலிக்கும் பலவகையான முரசுகளுடன்தமக்கே ஒத்த குரலில் பூதங்களும் பேய்களும் வாய் விட்டு ஓலமிடசூராதி அவுணர்களுடைய சேனைகள் சா,அழகிய மயிலின் மேல் ஏறிய பெருமை மிக்கவரே!

 

     கூடல் என்னும் மதுரை,  காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேச்சரம்திரிசிராப்பள்ளிதிரு ஆனைக்காஅழகிய சீகாழிவைத்தீசுரன் கோயில் என்னும் புள்ளிருக்குவேளூர்விளங்கும் வல்லக்கோட்டைதிருக்கச்சூர்கருவூர் முதலியமேன்மை பொருந்திய திருத்தலங்கள் பலவற்றிலும்குற்றமற்ற பக்தர்களுடன்சிறந்த தவ ஒழுக்கம் வாய்ந்த சித்தர் முதலானோர் இருந்து வாழ்கின்றஅழகிய திருக்குற்றாலம் என்னும் திருத்தலத்தில் உலவி வாழ்கின்ற பெருமையில் சிறந்தவரே!

 

      இதழ்களை உடைய பூங்கொத்துக்களைக் கொண்ட நீண்ட கூந்தல் அசைந்து ஆ,பட்டு ஆடையை துன்பம் விளைக்கும்,அழகிய தோள்கள் மீது மூடியநெஞ்சிலும் கரவு கொண்டவிலைமாதர்.குற்றம் கண்டே பேசும்பணத்தைக் கைக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளவர்கள். ஒரு வீசம் அளவே ஆசை கொண்டவர்களாக நடிப்பவர்கள்.ஏறிவிட்ட பின் ஏணியைத் தள்ளி விடுகின்ற முழுமையான வஞ்சகர்கள்.மாடு போலப் புணரும் காமம் கொண்டவர்கள் வசத்திலே பட்டு முழுகி இருந்துஅதன் விளைவாக உடலில் தோன்றுகின்ற வயிற்றில் உண்டாகும் வாயுத் தொல்லையும்சூலை நோய் முதலானவையும் மிகுந்து, உடலும் உள்ளமும் கேடு அடைந்துபாசக் கயிற்றை வீசுகின்ற இயம உலகத்தை அடைந்து,பாழான நரகத்திலே விழுகின்ற கொடுமையைக் கழித்து,தேவரீருடைய திருவருள் கருணையைத் தந்து அருள் புரிவாயாக.

 

விரிவுரை

 

ஏதத்தைப் பேசு பண ஆளிகள்--- 

 

காம இச்சை கொண்டு தன்னிடம் வந்தவர்களிடத்தில் ஏதாவது ஒரு குற்றத்தைக் கண்டதாகக் காட்டி அவர்களிடம் வாதாடுவார்கள். தம்மைப் போக்க விடக் கூடுமோ என்னும் அச்சத்தால் காமுகர்கள் தளர்ந்து உள்ள நிலையைத் தமக்குச் சாதகமாக அக்கிக் கொண்டுஅவர்களிடம் உள்ள பணத்தைப் பறிக்கின்ற உபாயத்தை மேற்கொள்ளுவார்கள்.

 

வீசத்துக்கு ஆசை கொடு ஆடிகள்--- 

 

பொருளின் மீது மிகுந்த பற்றினை வைத்துக் கொண்டுபெரும்பற்று இல்லூதவர்கள் போல் நாடகம் ஆடுவார்கள்.

 

ஏற இட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர்--- 

 

தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரை மேல் நிலைக்கு உயர்த்துவதைஏணி வைத்து ஏற விடுதல் என்பர். இது உயர்ந்தவர்கள் செயல். இறைவனும்உலகியல் நிலையில் ஆழ்ந்து இருக்கும் உயிர்களைஅருள் நிலைக்கு உயர்த்தசரியைகிரியையோகம் என்னும் படிநெறிகளை வைத்து உள்ளான். அன்பர்களை செந்நெறியில் செலுத்திமேல் நிலைக்கு உயர்த்திபின்பு கீழ் இறங்காவண்ணம் ஏணியை எடுத்து விடுவது இறைவன் அருள். அருளாகிய தனது கையைக் கொடுத்துஅன்பர்களை மேல்நிலைக்கு ஏற்றுவது இறைவன் திருவடி.

 

போற்றும் தகையன,பொல்லா முயலகன் கோபப்புன்மை

ஆற்றும் தகையன,ஆறு சமயத்து அவர் அவரைத்

தேற்றும் தகையன,தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே

ஏற்றும் தகையன,இன்னம்பரான் தன்இணைஅடியே.

 

இரள் தரு துன்பப் படல மறைப்பமெய்ஞ்ஞானம் என்னும்

பொரள் தரு கண் இழந்துஉண்பொருள் நாடிபுகல் இழந்த

குருடரும் தம்மைப் பரவகொடு நரகக்குழி நின்று

அருள்தரு கைகொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே.

 

பேணித் தொழும் அவர் பொன்னுலகு ஆளபிறங்கு அருளால்

ஏணிப் படிநெறி இட்டுக் கொடுத்துஇமையோர் முடிமேல்

மாணிக்கம் ஒத்துமரகதம் போன்று வயிரம் மன்னி

ஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே.

 

என்று அப்பர் பெருமான் அருளியது காண்க.

 

ஆனால்விலைமாதர்கள்தம்மை நாடி வந்தவரின் பொருளைப் பறித்துஅவரது பெருமைகள் அத்தனையும் சிதைந்து போகுமாறு செய்துஅவரை பொருள் நிலையிலும்அருள் நிலையிலும் தாழ்ந்து போக வழிசெய்து விட்டுமீளா நரகம் என்னும் படுகுழியில் தள்ளி விடுவார்கள். அதில் இருந்து மீளச் செய்யஏணி இடஅவர்கள் இடம் தரமாட்டார்கள். உயிர்க்கூடு விடும் அளவும் உம்மைக் கூடி மருவுவதை ஒருக்காலும் மறவேன் என்று சூள் உரைப்பார்கள். எல்லாம் பொருள் வரும் அளவு மட்டுமே. பொருள் இருந்தால் பிணத்தையும் கூடத் தழுவுவார்கள். அது இல்லை என்றால் யாரையும் கைவிட்டு விடுவார்கள்.

 

விளக்கு ஒளியும் வேசையர் நட்பும் இரண்டும்

துளக்குஅற நாடின் வேறுஅல்ல,-விளக்குஒளியும்

நெய்அற்ற கண்ணே அறுமேஅவர்அன்பும்

கைஅற்ற கண்ணேஅறும்.                    --- நாலடியார்.

 

பாடகச் சிலம்போடு செச்சை மணி

     கோ எனக் கலந்து ஆடு பொன் சரணர்,

     பாவை சித்திரம் போல்வர்,பட்டு உடையின் ....இடைநூலார்,

பார பொன் தனம் கோபுரச் சிகரம்

     ஆம் எனப் படர்ந்து ஏமலிப்பர்இதம்

     ஆகு நல் கரும்போடு சர்க்கரையின் ...... மொழிமாதர்,

 

ஏடகக் குலம் சேரும் மைக்குழலொடு,

     ஆடு அளிக்குலம் பாட,நல் தெருவில்

     ஏகி,புள்குலம் போல,பற்பலசொல் ...... இசைபாடி,

ஏறி இச்சகம் பேசிஎத்தி இதம்,

     வாரும் முன்பணம் தாரும் இட்டம் என,

     ஏணி வைத்து வந்து ஏற விட்டிடுவர் ......செயல்ஆமோ?   --- திருப்புகழ்.

                                                                                                                       

காயமொடே வரு வாயுப் புல் சூலை வியாதிகள் இவை மேலாய் மாசு உற்று--- 

 

அரிதில் தேடிய பொருளை நல்வழியில் செலவழிக்காமல்பொருட் பெண்டிருக்கு அளவின்றித் தந்துஅவர் விரும்பிய ஆபரணங்களை எல்லாம் பூட்டியதற்குப் பதிலாக அவர்கள் இவர்களுக்கு வாதம் சூலை முதலிய அணகலன்களைப் பூட்டி அனுப்புவர்.

  

வாதமொடு,சூலைகண்டமாலைகுலை நோவுசந்து

     மாவலிவியாதிகுன்ம ...... மொடுகாசம்,

வாயு உடனே பரந்த தாமரைகள்பீனசம்பின்

     மாதர்தரு பூஷணங்கள்......    என ஆகும்

 

பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,

     பாயலை விடாது மங்க, ...... இவையால்நின்

பாதமலர் ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,

     பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,

 

ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று,

     ஈன மிகு சாதியின்கண் ...... அதிலே,யான்

ஈடு அழிதல் ஆனதின் பின்மூடன் என ஓதும் முன்புஉன்

     ஈர அருள் கூர வந்து ...... எனை ஆள்வாய்.                  --- திருப்புகழ்.

                                                                                                 

கூடல்...... உயர்வான,கோது இல் பத்தாரொடு மாதவ சீலச் சித்தாதியர் சூழ்தரு கோலக் குற்றாலம் உலாவிய பெருமாளே--- 

 

கொந்து வார் குரவு அடியினும்,அடியவர்

     சிந்தை வாரிஜ நடுவினும்,நெறிபல

          கொண்ட வேத நல் முடியினும் மருவிய ....குருநாதா!

கொங்கில் ஏர் தரு பழநியில் அறுமுக!

     செந்தில் காவல! தணிகையில் இணைஇலி....

 

என அடிகளார் பாடியுள்ளதன்படிமுருகப் பெருமான் பல திருத்தலங்களிலும்குற்றமற்ற அடிவர்களின் சிந்தையிலும் குடிகொண்டு இருக்கின்றான். அவன் திருக்குற்றாலம் என்னும் திருத்தலத்திலும் எழுந்தருளி இருக்கின்றான்.

 

           திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5கி.மீ. தொலைவிலும்செங்கோட்டையில் இருந்து 7கி.மீ. தொலைவிலும் குற்றாலம் உள்ளது. 

 

           கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் இத்தலத்தில் திருமாலை சிவனாக்கி வழிபட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது. திருக்கயிலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற போதுஅங்கு கூடியிந்தவர்களின் பாரம் தாங்காமல் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயரத் தொடங்கியது. பூமியின் நிலையை சரிப்படுத்த சிவபெருமான் அகத்தியரை தென்திசையிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்புகிறார். அகத்தியருக்கு அங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டுவதாகவும் வாக்களிக்கிறார். அகத்தியரும் பொதிகைமலை வந்து அருவியில் நீராடிவிட்டு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றார். ஆனால் அக்கோவில் ஒரு வைணவக் கோவில். அகத்தியர் வைணவர் இல்லை என்று கோயிலுக்குள் செல்ல தடை விதித்தனர். மிகுந்த கவலையுடன் அருகிலுள்ள இலஞ்சி சென்று அங்குள்ள முருகரை வழிபட்டார். முருகப் பெருமான் அகத்தியரை வைணவர் வேடத்தில் கோவிலுக்குள் செல்லும் படியும்,உள்ளே சிவனின் திருமணக் கோலத்தைக் காணலாம் என்றும் கூறினார்.

 

           கோயிலுக்குள் அவ்வாறே சென்ற அகத்தியர் திருமால் சிலாவுருவில் கருவறையில் இருப்பதைக் கண்டார். கண்களை மூடிக்கொண்டு அச்சிலையின் தலையில் தனது கையை வைத்து அழுத்தவிஷ்ணுவின் சிலை குறுகி ஒரு சிவலிங்கமாக மாறியது. அகத்தியருக்கு சிவபார்வதி திருமணக் காட்சியும் கிடைத்தது. அகத்தியரால் சிவத் திருமேனியாக மாற்றப்பட்டதால் இலிங்கத் திருமேனியின் மீது அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்த அடையாளம் இருப்பதைக் காணலாம். திருமாலின் சிலைவடிவம் சிவலிங்கமாக மாறியதைப் போல சீதேவியை குழல்வாய் மொழியம்மை ஆகவும்பூதேவியை பராசக்தியாகவும் மாற்றியதாகவும் ஐதீகம்.

 

          திருக்கோயில் மலைகள் சூழ்ந்த இயற்கை அழகு வாய்ந்த சூழலில் சுமார் 5000அடி உயரம் கொண்ட மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைத்தொடர் திரிகூடமலை என்றழைக்கப்படுகிறது. ஆலயம் சுமார் 3.5ஏக்கர் பரப்பளவில் நான்கு வாயில்களோடு சங்கு வடிவத்தில் அமைந்திருக்கிறது. இக்கோயில் திருமால் தலமாக இருந்தபோதுசங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோயில் சங்கின் வடிவில் இருப்பதை திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி கோயிலுக்குச் செல்லும் வழியில்அருவியின் மேற்பரப்பில் இருந்து காணலாம். திரிகூடநாதர் என்றும் குற்றாலநாதர் என்று அழைக்கப்படும் இறைவன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குழல்வாய் மொழியம்மை சந்நிதியும் சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கு அமைந்துள்ளது. திருச்சுற்றை வலமாக வரும்போது அகத்தியரால் தாபிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பராசக்தி பீடம் உள்ளது.

 

            இத்தலத்தின் மரமாகப் பலாமரம் உள்ளது. இந்த பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும்பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள்லிங்கத்தின் வடிவில் இருப்பது பார்த்து பரவசப்பட வேண்டிய ஒன்றாகும்.

 

            திருக் குற்றாலநாதர் கோயில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் சித்திர சபையாகத் திகழ்கிறது. குற்றால அருவிக்கு அருகிலேயே இது தனிக்கோயிலாக அமைந்திருக்கிறது. 

 

கருத்துரை

 

முருகா! அடியேன் நரகத்தில் விழாமல் அருள்வாய்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...