மதுரை --- 0970. முகமெலாம் நெய்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

முகமெலாம் நெய் (மதுரை)

 

முருகா! 

தேவரீரது திருவடியில் அன்பை அடியேனுக்குத் தந்து அருளவேண்டும்.

 

 

தனன தான தானத் தனந்த

     தனன தான தானத் தனந்த

          தனன தான தானத் தனந்த ...... தனதான

 

 

முகமெ லாநெய் பூசித் தயங்கு

     நுதலின் மீதி லேபொட் டணிந்து

          முருகு மாலை யோதிக் கணிந்த ...... மடமாதர்

 

முதிரு மார பாரத் தனங்கள்

     மிசையி லாவி யாய்நெக் கழிந்து

          முடிய மாலி லேபட் டலைந்து ...... பொருள்தேடிச்

 

செகமெ லாமு லாவிக் கரந்து

     திருட னாகி யேசற் றுழன்று

          திமிர னாகி யோடிப் பறந்து ...... திரியாமல்

 

தெளியு ஞான மோதிக் கரைந்து

     சிவபு ராண நூலிற் பயின்று

          செறியு மாறு தாளைப் பரிந்து ...... தரவேணும்

 

அகர மாதி யாம க்ஷரங்க

     ளவனி கால்வி ணாரப் பொடங்கி

          அடைய வேக ரூபத் திலொன்றி ...... முதலாகி

 

அமரர் காண வேயத் தமன்றில்

     அரிவை பாட ஆடிக் கலந்த

          அமல நாத னார்முற் பயந்த ...... முருகோனே

 

சகல வேத சாமுத் ரியங்கள்

     சமய மாறு லோகத் ரயங்கள்

          தரும நீதி சேர்தத் துவங்கள் ...... தவயோகம்

 

தவறி லாம லாளப் பிறந்த

     தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று

          தவிர ஆல வாயிற் சிறந்த ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

முகம் எலாம் நெய் பூசி,தயங்கு

     நுதலின் மீதிலே பொட்டு அணிந்து,

          முருகு மாலை ஓதிக்கு அணிந்த ...... மடமாதர்,

 

முதிரும் ஆர பாரத் தனங்கள்

     மிசையில்,ஆவியாய் நெக்கு அழிந்து,

          முடிய மாலிலே பட்டு அலைந்து,...... பொருள்தேடி,

 

செகம் எலாம் உலாவிக் கரந்து,

     திருடன் ஆகி ஏசற்று உழன்று,

          திமிரன் ஆகி ஓடிப் பறந்து ...... திரியாமல்,

 

தெளியும் ஞானம் ஓதிக் கரைந்து,

     சிவ புராண நூலில் பயின்று,

          செறியுமாறு தாளைப் பரிந்து ...... தரவேணும்.

 

அகரம் ஆதியாம் அக்ஷரங்கள்,

     அவனி கால் விண் ஆர் அப்பொடு அங்கி,

          அடைய வேக ரூபத்தில் ஒன்றி ...... முதலாகி,

 

அமரர் காணவே அத்த மன்றில்

     அரிவை பாட ஆடிக் கலந்த,

          அமல நாதனார் முன் பயந்த ...... முருகோனே!

 

சகல வேத சாமுத்ரியங்கள்,

     சமயம் ஆறு,லோக த்ரயங்கள்,

          தரும நீதி சேர் தத்துவங்கள்,...... தவயோகம்

 

தவறு இலாமல் ஆளப் பிறந்த

     தமிழ்செய் மாறர் கூன்,வெப்பொடு அன்று

          தவிர,ஆல வாயில் சிறந்த ...... பெருமாளே.

 

பதவுரை

 

            அகரம் ஆதியாம் அக்ஷரங்கள்--- அகரம் முதலாகிய ஐம்பத்தோரு எழுத்துக்கள்,

 

            அவனி --- இந்த மண் (உலகம்)

 

            கால் --- காற்று.

 

            விண் --- ஆகாயம்வான்.

 

            ஆர் அப்பு ஒடு --- நிறைந்த நீர் உடன்,

 

            அங்கி அடைய--- தீ எல்லாம்,

 

            ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி--- ஓர் உருவமாக அமைந்து (அம்பலவாணப் பெருமானாக) முதற்பொருளாக விளங்கி,

 

            அமரர் காணவே--- தேவர்கள் கண்டு தொழுது வணங்கும்படியா,

 

           அத்த மன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த அமலநாதனார்--- பொற்சபையில்சிவகாமசுந்தரி பாடஆடல் புரிந்துஉயிர்களில் கலந்து நின்ற மலமற்ற தலைவராகிய சிவபரம்பொருள்,

 

           முன் பயந்த முருகோனே --- முன்பு பெற்றருளிய முருகப் பெருமானே!

 

            சகல வேத சாமுத்ரியங்கள்--- அனைத்து வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள இலக்கணங்கள்,

 

           சமயம் ஆறு--- ஆறு சமயங்கள்,

 

           லோக த்ரயங்கள்--- மூவுலகங்கள்,

 

           தரும நீதி சேர் தத்துவங்கள்--- அறநெறியைச் சார்ந்த உண்மைகள்,

 

           தவ யோகம் --- தவம் யோகம் ஆகியவை,

 

           தவறு இ(ல்)லாமல் ஆளப் பிறந்த தமிழ் செய்--- சிறிதும் பிழை இல்லாமல் உயிர்களை ஆட்சி புரிவதற்கு அவதரித்த தமிழ்க் குழந்தையே!

 

            மாறர் கூன் வெப்பொடு அன்று தவிர--- நின்றசீர் நெடுமாற பாண்டிய மன்னனுடைய கூனும்அவரைப் பற்றிய வெப்பு நோயும் நீங்க,

 

            ஆலவாயில் சிறந்த பெருமாளே--- மதுரையில் திருவிளையாடல் புரிந்து அருளிய பெருமையில் மிக்கவரே!

 

            முகம் எ(ல்)லாம் நெய் பூசி--- முகம் முழுதும் நறுமணம் பொருந்திய நெய்யைப் பூசி,

 

            தயங்கு(ம்) நுதலின் மீதிலே பொட்டு அணிந்து--- ஒளி பொருந்திய நெற்றியில் பொட்டு இட்டு,

 

           முருகு மாலை ஓதிக்கு அணிந்த மடமாதர்--- மணம் மிக்க மாலையைக் கூந்தலிலே முடித்துள்ள அழகிய பெண்கள் (ஆகிய விலைமாதரின்)

 

            முதிரும் ஆரபார தனங்கள் மிசையில் --- முற்றியும்,முத்துமாலைகளை அணிந்தும்,பருத்தும் உள்ள கொங்களைகளின் மீது

 

           ஆவியாய் நெக்கு அழிந்து--- உயிராய் இருந்து உள்ளம் அழிந்து,

 

           முடிய மாலிலே பட்டு--- முற்றும் காம மயக்கத்தில் விழுந்து,

 

            அலைந்து பொருள் தேடி--- (விலைமாதர்க்கு வேண்டிய) பொருளை அலைந்து தேடி,

 

            செகம் எ(ல்)லாம் உலாவி--- உலகம் முழுதும் உலாவித் திரிந்தும்,

 

            கரந்து--- (நான் இவ்வாறு உழல்வதைப் பிறர் அறியாதவண்ணம்) ஒளித்தும்,

 

            திருடனாகியே--- திருட்டுத் தொழிலன் ஆகிய.

 

            சற்று உழன்று--- சற்று உழன்று,

 

            திமிரன் ஆகி ஓடிப் பறந்து திரியாமல்--- மந்த புத்தியை உடையவன் ஆகிஅங்கும் இங்கும் ஓடித் திரியாமல்,

 

            தெளியும் ஞானம் ஓதிக் கரைந்து--- அறிவில் தெளிவைத் தருகின்ற ஞான நூல்களை ஓதி உள்ளம் உருகி,

 

            சிவபுராண நூலில் பயின்று செறியுமாறு--- சிவனது அநாதியாகிய முறைமைகளை அறிவிக்கும் நூல்களைப் பயின்றுஅறிவு நிரம்புமாறு,

 

            தாளைப் பரிந்து தர வேணும்--- தேவரீருடைய திருவடிகளில் அன்பை,அன்புடன் அடியேனுக்குத் தரவேண்டும். 

 

பொழிப்புரை

 

     அகரம் முதலாகிய ஐம்பத்தோரு எழுத்துக்கள்,மண்காற்று. ஆகாயம், (வான்)நிறைந்த நீருடன்தீ ஆகிய எல்லாம்பொருந்தியஓர் உருவமாக அமைந்து அம்பலவாணப் பெருமானாக,முதற்பொருளாக விளங்கிதேவர்கள் கண்டு தொழுது வணங்கும்படியாபொற்சபையில்சிவகாமசுந்தரி பாடஆடல் புரிந்துஉயிர்களில் கலந்து நின்ற மலமற்ற தலைவராகிய சிவபரம்பொருள்,முன்பு பெற்றருளிய முருகப் பெருமானே!

 

            அனைத்து வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள இலக்கணங்கள், ஆறு சமயங்கள் மூவுலகங்கள்,அறநெறியைச் சார்ந்த உண்மைகள்தவம் யோகம் ஆகியவைசிறிதும் பிழை இல்லாமல் உயிர்களை ஆட்சி புரிவதற்கு அவதரித்த தமிழ்க் குழந்தையே!

 

            நின்றசீர் நெடுமாற பாண்டிய மன்னனுடைய உடல் கூனும்,அவரது உடலிலே பற்றிய வெப்பு நோயும் நீங்க மதுரையில் திருவிளையாடல் புரிந்து அருளிய பெருமையில் மிக்கவரே!

 

            முகம் முழுதும் நறுமணம் பொருந்திய நெய்யைப் பூசிஒளி பொருந்திய நெற்றியில் பொட்டு இட்டு,மணம் மிக்க மாலையைக் கூந்தலிலே முடித்துள்ள அழகிய பெண்கள் ஆகிய விலைமாதரின்முற்றியும்முத்துமாலைகளை அணிந்தும்பருத்தும் உள்ள கொங்களைகளின் மீதுஉயிராய் இருந்து உள்ளம் அழிந்துமுற்றும் காம மயக்கத்தில் விழுந்துவிலைமாதர்க்குத் தருவதற்கு வேண்டிய பொருளை அலைந்து தேடிஉலகம் முழுதும் உலாவித் திரிந்தும்,நான் இவ்வாறு உழல்வதைப் பிறர் அறியாதவண்ணம் ஒளித்தும்திருட்டுத் தொழிலன் ஆகிசற்று உழன்றுமந்த புத்தியை உடையவன் ஆகிஅங்கும் இங்கும் ஓடித் திரியாமல்,அறிவில் தெளிவைத் தருகின்ற ஞான நூல்களை ஓதி உள்ளம் உருகிசிவனது அநாதியாகிய முறைமை ஆகிய பழமையை அறிவிக்கும் நூல்களைப் பயின்றுஅறிவு நிரம்புமாறு,தேவரீருடைய திருவடிகளில் அன்பை,அன்புடன் அடியேனுக்குத் தரவேண்டும். 

 

 

விரிவுரை

 

முகம் எ(ல்)லாம் நெய் பூசி--- 

 

மினுமினுப்பு வேண்டி முகத்தில் மணம்மிக்க தைலங்களைப் பூசிக் கொள்ளுதல்.

     

தயங்கு(ம்) நுதலின் மீதிலே பொட்டு அணிந்து--- 

 

தயங்குதல் --- விளங்குதல்ஒளி விடுதல்தெளிவாய் இருத்தல்.

 

முருகு மாலை ஓதிக்கு அணிந்த மடமாதர்---

 

முருகு --- நறுமணம்.

 

ஓதி --- கூந்தல். 

 

முதிரும் ஆரபார தனங்கள் மிசையில் --- 

 

ஆர பார தனம் --- முத்து மாலைகளை அணிந்துள்ள பருத்த கொங்கைகள்,

 

அலைந்து பொருள் தேடிசெகம் எ(ல்)லாம் உலாவி--- 

 

விலைமாதர் தரும் இன்பத்துக்கு மாற்றாகப் பொருளைத் தரவேண்டும். அதற்கு வேண்டிய பொருளைத் தேடி எல்லா இடங்களிலும் அலைந்து திரிவர். பொருள் உள்ளோரைத் தேடிச் சென்று,உயர்ந்த பொருள்களோடு கூடிய பாடல்களைப் பாடினாலும் அவ் உலோப சிகாமணிகளாகிய செல்வந்தர்தாராளமாகப் பொருளைத் தராமல்இன்று வாநாளை வா என்று அலைய வைத்துமிகச் சிறிய அளவில் பொருள் தருவர். அங்ஙனம் கிடைக்கின்ற பொருளைச் சிறிது சிறிதாகச் சேர்த்துத் திரட்டிக் கொணர்ந்துஅதனை அறவழியில் செலவிடாமலும்தானும் அநுபவிக்காமலும்பொதுமகளிர்க்கு வழங்கி அழிவர்.

 

கரந்து--- 

 

அவ்வாறு பொருள் தேடி அலையுங்கால் தம்மை யாரும் கண்டுஇகழாமல்இருக்க,மறைந்து வாழ்தலும் உண்டு.

 

திருடனாகியே சற்று உழன்று--- 

 

பொருள் வேண்டிதிருட்டுத் தொழிலிலும் ஈடுபடுவது உண்டு. திருடப் போன இடத்தில் எல்லாம் பொருள் கிடைத்து விடாது. திருட்டுத் தொழிலிலும் அலைச்சல் உண்டு.

 

திமிரன் ஆகி ஓடிப் பறந்து திரியாமல்--- 

 

திமிரன் --- மந்த புத்தியை உடையவன்.

 

தெளியும் ஞானம் ஓதிக் கரைந்துசிவபுராண நூலில் பயின்று செறியுமாறுதாளைப் பரிந்து தர வேணும்--- 

 

இவ்வாறு அலைந்து அவமே திரிந்து கலங்கிய அறிவானது துன்பத்தையே தரும் என்பதை உணர்ந்துஉண்மை அறிவினைப் பெறஞான நூல்கள் ஓதித் தெளியவேண்டும். 

 

சிவபுராணம் --- சிவனது அநாதி முறைமை ஆகிய பழமை. இறைவன் தொன்று தொட்டே உயிர்களுக்கு அருள் பாலிக்கும் முறைமை. இந்த முறைமையைத் தெரிவிக்கின்ற நூல்களைப் பயின்றுஅறிவில் செறிவு பெறவேண்டும்.

 

இறைவன் திருவடி தியானத்தில் இருந்து பயின்றால் தெளிவு கிடைக்கும். நாமாக முயன்று பயின்றால்,தெளிந்த அறிவு வாய்க்காது என்பதால்திருவடிகளில் அன்பு வைக்கின்ற உள்ளத்தைஅன்பு வைத்துத் தரவேண்டும் என்று வேண்டுகின்றார்.

 

     "ஆடகச் சீர் மணிக்குன்றே! இடையறா அன்பு உனக்கு என் ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள்" என்றார் மணிவாசகப் பெருமான். இறைவன் திருவடியின் அன்பு வைப்பதற்கும் இறைவன் திருவருள் வாய்க்கவேண்டும்.

 

அகரம் ஆதியாம் அக்ஷரங்கள்அவனி.... அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி--- 

 

அகரம் முதலாக உள்ள ஐம்பத்தோரு எழுத்துக்கள்.

 

இணையார் திருவடி எட்டு எழுத்து ஆகும்

இணையார் கழலிணை ஈரைஞ்சது ஆகும்

இணையார் கழலிணை ஐம்பத்தொன்று ஆகும்,

இணையார் கழலிணை ஏழாயிரமே.     --- திருமந்திரம்.

.

சிவனதுதிருவடிகளே வித்தெழுத்துக்கள் மூன்றோடு கூடி எட்டெழுத்தாய் நிற்கும் பஞ்சாக்கரமும்பத்துக் கூறுகளாகப் பகுக்கப்பட்டு நிற்கும் பிரணவமும்மூல எழுத்துக்களாகிய (மாதுருகாட்சரங்களாகிய) அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள ஐம்பத்தோரெழுத்துக்களும்ஏழு கோடிகளையுடைய பல மந்திரங்களுமாய் நிற்கும்.

 

ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்

ஐம்ப தெழுத்தே அனைத்தா கமங்களும்

ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின்

ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.     --- திருமந்திரம்.

 

மேற் சொல்லிய ஐம்பத்தோரெழுத்துக்களே வேதம்ஆகமம் அனைத்துமாய் நிற்கும். அவ் உண்மையை உணர்ந்த பின் `ஐம்பதெழுத்து அல்லது ஐம்பத்தோரெழுத்துஎன்றெல்லாம் எண்ணுகின்ற அலைவு நீங்கி, `ஐந்தெழுத்துஎன்று உணர்ந்து நிற்கின்ற அடக்கம் உண்டாகும்.

 

அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்

அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்

அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன்

அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே .       --- திருமந்திரம்

 

சிவபெருமான் ஐம்பூத தத்துவங்களைப் படைத்தும்,அவற்றின் காரியமாகிய எண்பத்து நான்கு நூறாயிர வகைப் பிறவிகளான உடம்புகளையும் ஆக்கி உயிர்கட்குத் தந்தும்அவைகளைக் காத்தும்அவ்வுயிர்கள் தன்னை மன மொழி மெய்களால் வழிபட்டு நலம் பெறுதற் பொருட்டுத் திருமேனி கொண்டு எழுந்தருளியிருப் பதும் ஆகிய எல்லாம் திருவைந்தெழுத்தாலேயாம்.

 

பூதங்கள் ஐந்தாகிப்

    புலனாகிப் பொருளாகிப்

பேதங்கள் அனைத்துமாய்ப்

    பேதமிலாப் பெருமையனைக்

கேதங்கள் கெடுத்தாண்ட

    கிளரொளியை மரகதத்தை

வேதங்கள் தொழுதேத்தும்

    விளங்குதில்லை கண்டேனே.   --- திருவாசகம்.

 

ஐம்பூதங்களாகிச் சுவைஒளிஊறுஓசைநாற்றம் என்ற புலன்களாகி ஏனைய எல்லாப் பொருள்களுமாகிஅவற்றிற் கேற்ப வேறுபாடுகளுமாய்த் தான் வேறுபடுதலில்லாத பெருமை யுடையவனாய்த் துன்பங்களைப் போக்கி எம்மை ஆண்டு அருளிய ஒளிப்பொருளானவனைப் பச்சைமணி போன்றவனை வேதங்கள் வணங்கித் துதிக்கின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

 

அத்த மன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த அமலநாதனார்--- 

 

அத்தம் --- பொன். மன்று --- சபை.

 

பொன்னம்பலத்தில்சிவகாமசுந்தரி பாடஆனந்தத் திருகூத்தினை இயறுகின்றார் கூத்தப் பெருமான்.

 

சகல வேத சாமுத்ரியங்கள்சமயம் ஆறுலோக த்ரயங்கள்தரும நீதி சேர் தத்துவங்கள்தவ யோகம்தவறு இ(ல்)லாமல் ஆளப் பிறந்த தமிழ் செய்   --- 

 

சாமுத்திரியம் --- இலக்கணங்கள். இலக்கணம் என்னும் தமிழ்ச்சொல்வடமொழியில், "இலட்சணம்" என வந்தது.

 

செய் --- சேய் என்னும் சொல் செய் வன வந்த்து. சேய் --- குழந்தை.

 

சகல வேத இலக்கணங்கள் தழைக்க வந்து அருளியவர் திருஞானசம்பந்தப் பெருமான். "வேதநெறி தழைத்து ஓங்க" என்னும் தெய்வச் சேக்கிழார் அருள் வாக்கை எண்ணுக.

 

ஆறு சமயங்கள்--- சைவம்வைணவம்காணாபத்யம்கௌமாரம்சாக்தம்சவுரவம் என்னும் ஆறுவகையான சமயங்களும் தழைக்க வந்து அருளியவர் திருஞானசம்பந்தப் பெருமான். "மிகு சைவத்துறை விளங்க" மற்றும் "சைவமுதல்வைதிகமும் தழைத்துஓங்க"

என்னும் தெய்வச் சேக்கிழார் அருள் வாக்கை உன்னுக.

 

மூவுலகங்கள் --- "தூயதிரு நீற்றுநெறிஎண்திசையும் தனிநடப்பஏழ்உலகும் களிதூங்கஅண்டர்குலம் அதிசயிப்பஅந்தணர் ஆகுதி பெருகவண்தமிழ்செய் தவம்நிரம்பமாதவத்தோர் செயல்வாய்ப்ப" திருஞானசம்பந்தர் அவதரித்தார் என்னும் தெய்வச் சேக்கிழார் அருள் வாக்கை எண்ணுக.


மாறர் கூன் வெப்பொடு அன்று தவிர--- 

 

நெடுமாற பாண்டிய உடலில் ஒன்றி இருந்த கூனும்அவனது உடலைப் பற்றி இருந்த வெப்பு நோயும் அகலுமாறு திருவருள் புரிந்தவர் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

சீகாழியில் வாழ்ந்திருந்த சிவபாத இருதயர் வழக்கம்போல் ஒருநாள் நீராடப் போனார். பிள்ளையார் அழுதுகொண்டே அவரைப் பின்தொடர்ந்தார். சிவபாத இருதயர் திரும்பிப் பார்த்து, முனிவார் போலப் பிள்ளையாரை விலக்கினார். பிள்ளையார் விடவில்லை, பின் தொடர்ந்தார். சிவபாத இருதயர் அவரை அழைத்துக் கொண்டு போய், பிரமதீர்த்தக் குளக்கரையை அடைந்தார். பிள்ளையாரைக் குளக்கரையில் வைத்து, தாம் மட்டும் நீரிலே மூழ்கி, அகமருடம் செய்தார்.

 

கரையில் இருந்த பிள்ளையார், தந்தையைக் காணாது, நொடிப் போதும் தரியாதவர் ஆனார். அச் சமயத்தில், சிவபெருமானை வழிபட்ட முன்னுணர்ச்சி அவர்பால் மூண்டு எழுந்தது. பிள்ளையார் அழத் தொடங்கினார். கண்மலர்களில் நீர் ததும்புகின்றது. கைம்மலர்கள் கண்களைப் பிசைகின்றன. மணிவாய் துடிக்கின்றது. பிள்ளையார் அழுகின்றார். முன்னைத் தொடர்பு உணர்ந்தோ, பிள்ளைமையாலோ அழுகின்றார். திருத்தோணிச் சிகரம் பார்த்து, "அம்மே! அப்பா!" என்று அழுகின்றார்.

 

தடங்கருணைப் பெருங்கடலாகிய சிவபெருமான், பிள்ளையாரின் அழுகையைத் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு, உமையம்மையாருடன் குளக்கரையை அடைந்தார். சிவபெருமான், உமையம்மையைத் திருநோக்கம் செய்து, "உனது முலைகளில் பொழிகின்ற பாலைப் பொன் கிண்ணத்தில் கறந்து, இவனுக்கு ஊட்டு" என்றார். உமையம்மையார் அப்படியே, திருமுலைப் பாலைப் பொன் கிண்ணத்தில் கறந்து அருளி, எண்ணரிய சிவஞானத்தைக் குழைத்து, பிள்ளையாருக்கு ஊட்டினார். பிள்ளையாரின் அழுகை தீர்ந்தது. சிவஞானப் பாலை உண்டமையால், சிவஞானசம்பந்தர் ஆயினார்.

 

"எண்ணரிய சிவஞானத்து 

     இன் அமுதம் குழைத்து அருளி

உண் அடிசில் என ஊட்ட

     உமையம்மை எதிர்நோக்கும்

கண்மலர்நீர் துடைத்து அருளிக்

     கையிற்பொற் கிண்ணம்அளித்து

அண்ணலை அங்கு அழுகை தீர்த்து

     அங்கணனார் அருள்புரிந்தார்".      -- பெரிய புராணம்.

 

"யாவருக்கும் தந்தைதாய் எனும் இவர் இப்படி அளித்தார்.

ஆவதனால் ஆளுடையபிள்ளையாராய் அகில

தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும்

தாவில்தனிச் சிவஞான சம்பந்தர் ஆயினார்". -- பெரிய புராணம்.

 

"சிவன் அடியே சிந்திக்கும்திருப்பெருகு சிவஞானம்,

பவம் அதனை அறமாற்றும்பாங்கினில் ஓங்கிய ஞானம்,

உவமை இலாக் கலைஞானம்உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்,

தவ முதல்வர் சம்பந்தர்தாம்உணர்ந்தார் அந்நிலையில்".  --- பெரிய புராணம்.

                                          

பலவித நல் கற்பு அடர்ந்த சுந்தரி,

     பயில்தரு வெற்புத் தரும் செழுங்கொடி

     பணைமுலை மெத்தப் பொதிந்து பண்பு உறு ......கின்றபாலை,

பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்

     பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள்

     பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.   ---  திருப்புகழ்.

                                           

 

நுகர் வித்தகம் ஆகும் என்று உமை 

மொழியில் பொழி பாலை உண்டிடு

     நுவல்மெய்ப்பு உள பாலன் என்றிடும் ......இளையோனே!  ---  திருப்புகழ்.

                                    

இறைவனுக்கு எம்மதமும் சம்மதமே. "விரிவிலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்" என்பார் அப்பமூர்த்திகள். நதிகள் வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல்சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று பிணங்கிமுடிவில் ஒரே இறைவனைப் போய் அடைகின்றன. ஒரு பாடசாலையில் பல வகுப்புக்கள் இருப்பன போல்பல சமயங்கள்அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவங்கட்கேற்ப வகுக்கப்பட்டன.  ஒன்றை ஒன்று அழிக்கவோ நிந்திக்கவோ கூடாது.

 

தொன்று தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலேகொல்லாமை மறைந்து உறையும் சமண சமயம் பரவிஅரசனும் அம் மாய வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின.உலகெலாம் செய்த பெருந்தவத்தின் வடிவால்சோழ மன்னனது திருமகளாய்பாண்டிமா தேவியாய் விளங்கும் மங்கையர்க்கரசியாரும்,அவருக்கு சீதனமாக சோழமன்னனால் தரப்பட்டு வந்து,பாண்டிய அமைச்சராய் இருந்துசைவநிலைத் துணையாய்அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்திஆலவாய் அண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள். 

 

அப்போது திருஞானசம்பந்தரது அற்புத மகிமையையும்அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதையும் உணர்ந்துமுறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த ஏவலரை அனுப்பினார்கள்அவர்கள் வேதாரணியத்திற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்துபாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து,சமண நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்துஅதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்து வருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து நின்றார்கள். 

 

சம்பந்தர் மறைக்காடு மணிகண்டரை வணங்கிஅப்பரிடம் விடை கேட்டனர். திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை உன்னி ”பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்றுகோளும் நாளும் வலியில்லை” என்றனர்.

 

வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்

            மிகநல்ல வீணைதடவி

 மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்

            உளமே புகுந்த அதனால்,

 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

            சனி பாம்பு இரண்டும் உடனே,

 ஆசு அறும் நல்லநல்ல,அவைநல்லநல்ல

            அடியாரவர்க்கு மிகவே”

 

என்ற திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்துஅப்பரை உடன்படச் செய்து விடைபெற்றுமுத்துச் சிவிகை ஊர்ந்துபல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று கடல்போல் முழங்கபாண்டி நாட்டிற்கு எழுந்தருளி வருவாராயினார். 

 

எண்ணாயிரம் சமண குருமார்களுக்கும்,அவரைச் சார்ந்த பல்லாயிரம் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனம் ஏற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலி வேந்தர் வரவை உணர்ந்த மங்கையர்க்கரசியார் வரவேற்குமாறு அமைச்சர் பெருமானை அனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர்.

 

சீகாழிச் செம்மல் பல விருதுகளுடன் வருவதை நோக்கிகுலச்சிறையார் ஆனந்தக் கூத்தாடிகண்ணீர் ததும்பி கைகூப்பிமண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க் கிடந்தார். இதனை அறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டிழிந்துஅவரைத் தமது திருக்கைகளால் எடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையீர்! உமக்கும் நம் பெருமான்றன் திருவருள் பெருகு நன்மைதான் வாலிதே” என்னலும்குலச்சிறையார் கைகூப்பி,

 

 “சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் 

     இனி எதிர் காலத்தின் சிறப்பும்

இன்றெழுந்தருளப் பெற்ற பேறிதனால் 

     எற்றைக்கும் திருவருள் உடையேம்

நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் 

     நற்றமிழ் வேந்தனும் உய்ந்து,

வென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும்

     மேன்மையும் பெற்றனம் என்பார்"    --- பெரியபுராணம்.

 

மதுரையும் ஆலவாயான் ஆலயமும் தெரியமங்கையர்க்கரசியாரையும்குலச்சிறையாரையும் சிறப்பித்து திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடிகோயிலுள் புகுதலும்அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார் ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க,பிள்ளையார் அவரை எடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறிஆலவாயானைத் தெரிசித்துதமக்கு விடுத்த திருமடத்தில் தங்கியருளினார். 

 

சமணர்கள் அது கண்டு வருந்தி, “கண்டுமுட்டு” “கேட்டுமுட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவன் அனுமதி பெற்று,திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரஞ் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றது. சமணர்கள் அது கண்டு கவன்றுதாமே இரவிற் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை யடியார்கள் அவித்து,ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்கதிருஞானசம்பந்தர் இது அரசனாணையால் வந்ததென்றுணர்ந்து,

 

செய்ய னேதிரு வாலவாய் மேவிய

ஐயனே அஞ்ச லென்றருள் செய்யெனைப்

பொய்யராம் அம ணர்கொளு வுஞ்சுடர்

பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”

 

என்று பாடியருளினார். 

 

“பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது சுர நோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரஞ் சொல்லிமயிற் பீலியால் பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்மி வந்த அமணர்களுடைய உடலும் உயிரும் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான். 

 

மங்கையர்க்கரசியார் மகிணனை வணங்கிதிருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச் சுரநோய் பிடித்ததென்றும்அவர் வந்தாலொழிய இது தீராதென்றும் கூறஅரசன் “இந்நோய் தீர்த்தார் பக்ஷத்தில் நான் சேருவேன்அவரை அழைமின்” என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,

 

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை

வானத்தின் மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்

தேன் நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்

கானத்தின் எழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.”.  --- பெரியபுராணம்

                                        

 

கண்டு வணங்கி நிகழ்ந்தது கூறிஅரசனையும் தம்மையும் உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பஞ் செய்தனர். சம்பந்தர் அபயந்தந்துஅடியார் குழத்துடன் புறப்பட்டு திருக்கோயில் சென்றுதென்னவனாயுல காண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே ” என்று பாடி விடைபெற்றுபாண்டியர் கோன் மாளிகை புக்கார். 

 

ஆலமே அமுதமாகஉண்டுவானவர்க்கு அளித்துக்

காலனை மார்க்கண்டர்க்காக்காய்ந்தனை,அடியேற்கு இன்று

ஞாலம்நின் புகழே ஆகவேண்டும்நான் மறைகள் ஏத்தும்

சீலமே! ஆல வாயில்சிவபெருமானே! என்றார்.               .--- பெரியபுராணம்.

 

பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பிதலைப்பக்கத்தில் பொன்னால் ஆன இருக்கை தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க,சமணர் பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச,கவுணியர் வேந்து,

 

மானின் நேர் விழிமாதராய்! வழுதிக்கு மாபெருந் தேவி! கேள்

பானல்வாய் ஒருபாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்,

ஆனைமாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர்

ஈனர்கட்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”

 

என்று பாடித் தேற்றினார்.

 

அரசன் சமணரையும் திருஞானசம்பந்தரையும் சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாமெனஅமணர் இடப்புறநோயை நீக்குவோமென்று மந்திர உச்சாடனத்துடன் மயிற் பீலியால் தடவ நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி புகலி வேந்தரை நோக்க,சுவாமிகள்ழுமந்திரமாவது நீறுழு என்ற திருப்பதிகம் பாடிவலப்பக்கத்தில் தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து வெருட்டிவிட்டுபாலறாவாயரைப் பணியபிள்ளையார் மீண்டுத் திருநீறு பூசநோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை பணிந்து ஆனந்தமுற்றான்.

 

பின்னர்சமய உண்மையைக் கூறி வாதிக்கும் ஆற்றலற்ற சமணர்கள் அனல் வாதம் தொடங்கினர். பெரு நெருப்பு மூட்டினர். சம்பந்தர் தாம் பாடிய தேவராத் திருமுறையில் கயிறு சாத்தி ‘போகமார்த்த’ என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து, “தளரிள வளரொளி” என்ற பதிகம் பாடி நெருப்பிலிட்டனர். அது வேகாது விளங்கியது. சமணர்கள் தங்கள் ஏடுகளை யிடஅவை சாம்பலாயின. புல் புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழுவேறுவதென்று துணிந்தனர். வையை யாற்றில் சமணர்கள் தமது ஏடுகளை விடஅது நீருடன் கீழ்நோக்கிச் சென்றதுதிருஞானசம்பந்தப் பெருமான் "வாழ்க அந்தணர்" எனத் தொடங்கும் அற்புதத் திருப்பாசுரம் பாடிஅந்த ஏட்டினை வைகையாற்று வெள்ளத்தில் இட்டார். அந்த ஏடு நீரை எதிர்த்துச் சென்றது."வேந்தனும் ஓங்குக” என்றதனால் பாண்டியன் கூன் நிமிர்ந்துநின்ற சீர் நெடுமாறனாயினார். அவ்வேடு நிற்க “வன்னியும் மத்தமும்” என்ற திருப்பதிகம் பாடினார். குலச்சிறையார் ஓடி அவ்வேட்டை எடுத்த இடம் திருவேடகம் என்பர். மும்முறையுங் தோற்ற சமணர் கழுவேறி மாய்ந்தனர். பாண்டியன் சைவசீலம் மேவி வாழ்ந்தனன்.

 

திருஞானசம்பந்தரின் அருள் நோக்கத்தால்உடல் கூனும்உள்ளக் கூனும் நீங்கிமீண்டும் சைவனாக மாறிய பாண்டிய மன்னவனுக்கு திருஞானசம்பந்தர் திருநீறு வழங்கினார். அவன் அதனை இருகரத்தும் ஏந்தி அணிந்து இன்புற்றான். அதனைக் கண்ட மக்கள் அனைவரும் திருநீறு இட்டு சைவர்கள் ஆனார்கள்.

 

தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார்,

முன்னவன் பணிந்து கொண்டு,முழுவதும் அணிந்து நின்றான்,

மன்னன் நீறு அணிந்தான் என்று,மற்றவன் மதுரை வாழ்வார்,

துன்னி நின்றார்கள் எல்லாம் தூயநீறு அணிந்து கொண்டார். --- பெரியபுராணம்

                                                                                            .

பூதிமெய்க்கு அணிந்து,வேந்தன்

            புனிதனாய் உய்ந்த போது,

நீதியும் வேத நீதி

            ஆகியே நிகழ்ந்தது எங்கும்,

மேதினி புனித மாக

            வெண்ணீற்றின் விரிந்த சோதி

மாதிரம் தூய்மை செய்ய

            அமண்இருள் மாய்ந்தது அன்றே.    --- பெரியபுராணம்.

 

எம்பிரான் சிவனே எல்லாப்

    பொருளும்என்று எழுதும் ஏட்டில்

தம்பிரான் அருளால் வேந்தன்

    தன்னைமுன் ஓங்கப் பாட

அம்புய மலராள் மார்பன்

    அநபாயன் என்னுஞ் சீர்த்திச்

செம்பியன் செங்கோல் என்னத்

    தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே   --- பெரியபுராணம்.

 

இரத்தினச் சுருக்கமாக,இந்த அருள் வரலாற்றை அருணகிரிநாதர் பாடி அருளுமாறு காண்க.

 

திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு

     செழியன் உடல் சென்று பற்றி,ஆருகர்

     திகையின் அமண் வந்து விட்ட போதினும் ......அமையாது,

சிறிய கர பங்கயத்து நீறு,ஒரு

     தினை அளவு சென்று பட்ட போதினில்

     தெளிய,இனி வென்றி விட்ட மோழைகள் ......கழு ஏற,

மகிதலம் அணைந்த அத்த!                 --- திருப்புகழ்.

 

ஆலவாயில் சிறந்த பெருமாளே--- 

 

மதுரை ஆலவாய் ஆன திருவிளையாடல்திருவிளைசாடல் புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.

 

அதுலகீர்த்திப் பாண்டியனுக்கு மகனான கீர்த்திபூஷண பாண்டியன் மதுரையை ஆட்சி செய்யும்போது ஏழுகடல்களும்,தமக்குக் காவலாக விளங்கும் கரையைக் கடந்து பொங்கி எழுந்தது. இதனால் எல்லா உலகங்களும் நீரில் மூழ்கினஆயினும் மீனாட்சியம்மை திருக்கோயிலின் இந்திரவிமானம்,பொற்றாமரைக்குளம் மற்றும் சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலில் தோன்றிய இடபமலைபசுமலையானைமலைநாகமலைபன்றிமலை என்பன அழியாது விளங்கின.

 

பிரளயம் வற்றிய பின்னர் மீண்டும் உலகங்களும் உயிர்களும் உண்டாகுமாறு ஆசன் திருவருள் செய்தார்அப்போது சந்திரனது குலத்தில் பாண்டியர்களைத் தோற்றுவித்தார். அப் பாண்டிய வம்சத்தில் வங்கியசேகர பாண்டியன் தோன்றினான்ஒருசமயம். வங்கியசேகர பாண்டிய மன்னன் "மதுரை மக்கள் எல்லாம் வசிக்கத் தக்க தகுதியுடையதாக நகரினை உண்டாக்க வேண்டும் என விருப்பமுற்று. மதுரை நகரின் பழைய எல்லைகளை வரையறுத்துத் தரவேண்டும்" என இறைவனிடம் வேண்டி நின்றான்.

 

மன்னனது விருப்பத்தை நிறைவு செய்யும் பொருட்டு வானில் இருந்து ஒரு விமானத்தில் இறங்கிய சோமசுந்தரக்கடவுள்,ஒரு சித்தமூர்த்தியாகி,அற அருட்கடலாகித் தோன்றினார். பாம்பினால் அரைஞாணும் கோவணமும் அணிந்திருந்தார். பிளவுடைய நாக்கையுடைய பாம்பினையும் குழையும் குண்டலமும்காலில் சதங்கை கோர்த்த கயிறும் கை வளையும் உடையவராகத் திகழ்ந்தார். அவ்வாறு வந்த சித்தமூர்த்தியானவர் தனது கையில் கட்டியிருந்த நஞ்சுடைய பாம்பை ஏவி நீஇம் மன்னனுக்கு மதுரையின் எல்லைகளைக் காட்டு எனக் கட்டளையிட்டார்.

 

கண்டவர்களுக்கு அச்சத்தினை உண்டாக்கும் படியான அப் பாம்பும் விரைந்து சென்றதுகிழக்குத் திசையில் திருப்பூவணம் சென்று வாலை நீட்டிப் பெரிய அம்மாநகர்க்கு வலமாக நிலத்தில் படிந்து உடலை வளைத்து. வாலைத் தன் வாயில் வைத்துப் பெரிய வளையமாக்கி அதன் உட்புறப் பகுதியே மதுரை நகரின் பழைய எல்லையென பாண்டிய மன்னனுக்குக் காட்டியது. சித்தமூர்த்தியானவர் தம்முடைய திருக்கோயிலில் எழுந்தருளினார். பாண்டிய மன்னன்பாம்பு வளைத்து எல்லையை வரையறுத்துக் காட்டியபடி மதில் சுவர் உண்டாக்க எண்ணினான்.

 

கிழக்கு எல்லைகாட்டிய இடத்தில் மன்னன் இவ் எல்லையின் வாயிலில் சக்கரவாள மலையை அடியோடு தோண்டி எடுத்து வைத்தது போன்று முகில் தவழும்படியான பெரிய மதிலை அமைத்தான். மதுரைக்குக் கிழக்கில் சோலைகள் சூழ்ந்த திருப்பூவண நகரானது எல்லையாக இருக்கும்படி அம்மதில்களை அமைத்தான்அந்த உயரமான. நீண்ட மதிலை ஆலவாய் மதில் என்று கூறுவர். நான்கு பெரிய வாயில்களுக்கும்தெற்கில் திருப்பரங்குன்றமும்வடக்கில் ஆனைமலையும்மேற்கில் திருவேடகமும்கிழக்கில் சோலைகள் சூழ்ந்த பூவண நகரம் எல்லைகளாக இருக்கும்படி அம்மதில்களை அமைத்தான். ஆலத்தை தனது வாயில் கொண்ட அந்தப் பாம்பு சித்தர் வடிவில் தோன்றிய இறைவனின் பாதங்களை வணங்கி,இனி இந்த நகரமானது தன்னுடைய பெயரால் "ஆலவாய்" என்று விளங்கவேண்டும் என விண்ணப்பம் செய்தது.  சித்தராய்த் தோன்றிய இறைவனும் அவ்வாறே ஆகுக என்று வரம் அருளினார். இதனால் மதுரை மாநகரம் "திருவாலவாய்" என்ற பெயரால் விளங்குவதாயிற்று. பின்னர் அப்பாம்பானது இறைவனுடைய திருக்கரத்தில் கங்கணம் ஆனது

 

கருத்துரை

 

முருகா! தேவரீரது திருவடியில் அன்பை அடியேனுக்குத் தந்து அருளவேண்டும்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...