திருமுருகன்பூண்டி --- 0950. அவசியம் உன்வேண்டி

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

அவசியம் உன்வேண்டி (திருமுருகன்பூண்டி)

 

முருகா! 

உனது சரணத்தைப் பற்றி இருக்க அருள்.

 

 

தனதனனந் தாந்தத் ...... தனதான

 

 

அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும்

 

அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில்

 

தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச்

 

சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே

 

சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய்

 

சடுசமயங் காண்டற் ...... கரியானே

 

சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே

 

திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

அவசியம் உன் வேண்டிப் ...... பலகாலும்,

 

அறிவின் உணர்ந்து ஆண்டுக்கு ......ஒருநாளில்,

 

தவ செபமும் தீண்டிக் ...... கனிவு ஆகி,

 

சரணம் அதும் பூண்டற்கு ...... அருள்வாயே.

 

சவதமொடும் தாண்டித் ...... தகர் ஊர்வாய்!

 

சடுசமயம் காண்டற்கு ...... அரியானே!

 

சிவகுமர! அன்பு ஈண்டில் ...... பெயரானே!

 

திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

            சவதமொடும் தாண்டித் தகர் ஊர்வாய்--- எளிதாக ஆட்டின் மீது தாவி ஏறி அதனை வாகனமாகச் செலுத்துபவரே! 

 

            சடுசமயம் காண்டற்கு அரியானே--- ஆறு சமயத்தவராலும் காணுதற்கு அரியவரே!

 

            சிவகுமர--- சிவக் குமாரரே! 

 

            அன்பு ஈண்டில் பெயரானே--- அன்போடு வழிபடுபவரைப் பிரியாதவரே! 

 

            திருமுருகன் பூண்டிப் பெருமாளே--- திருமுருகன்பூண்டி என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            அவசியம் உன் வேண்டிப் பலகாலும்--- உன்னைத் தொழுவது அவசியம் எனப் பலமுறையும் வேண்டி இருந்து,

 

            அறிவின் உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில்--- அறிவினில் உன்னை உணர்ந்து ஆண்டில் ஒரு நாளாவது 

 

            தவ செபமும் தீண்டிக் கனிவாகி --- தவத்தையும் செபத்தையும் மேற்கொண்டு உள்ளம் கனிந்து

 

            சரணம் அதும் பூண்டற்கு அருள்வாயே--- தேவரீரது திருவடிகளை மனத்தில் தரித்திருப்பதற்கு அருள்வாயாக. 

 

 

பொழிப்புரை

 

 

            எளிதாக ஆட்டின் மீது தாவி ஏறி அதனை வாகனமாகச் செலுத்துபவரே! 

 

            ஆறு சமயத்தவராலும் காணுதற்கு அரியவரே!

 

            சிவக் குமாரரே! 

 

            அன்போடு வழிபடுபவரைப் பிரியாதவரே! 

 

            திருமுருகன்பூண்டி என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            உன்னைத் தொழுவது அவசியம் எனப் பலமுறையும் வேண்டி இருந்துஅறிவினில் உன்னை உணர்ந்து ஆண்டில் ஒரு நாளாவது  தவத்தையும் செபத்தையும் மேற்கொண்டு உள்ளம் கனிந்து,  தேவரீரது திருவடிகளை மனத்தில் தரித்திருப்பதற்கு அருள்வாயாக. 

 

 

விரிவுரை

 

அவசியம் உன் வேண்டி ---

 

இறைவனைத் தொழுவது அவசியம் என்பதை உணர்ந்து அவன் அருளை வேண்டி இருத்தல் வேண்டும். 

 

பலகாலும் அறிவின் உணர்ந்து --- 

 

அறிவு என்பது ஞானம் ஆகும். 

 

ஞானம் என்பதுபசு ஞானம்பாச ஞானம்பதி ஞானம் என மூவகைப்படும்.

 

பசு ஞானம் என்பது உயிர் அறிவுஆன்ம அறிவு. ஆன்மபோதம் எனப்படும்.

 

பாச ஞானம் என்பது ஆன்மாவானது பண்டங்களால் பெறுகின்ற அறிவு.

 

பதி ஞானம் என்பது,மேற்குறித்த இரண்டிலும் சாராது இறையைச் சார்வதால் பதிகின்ற உண்மை அறிவு. பதிவதால் பதிஅறிவு என்றும் பதிஞானம் என்றும் காட்டப்பட்டது.  

 

பாச ஞானம்

 

ஆன்மாக்களாகிய நாம் உடம்பையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் சார்ந்து நின்று அவற்றால் அறிவு விளங்கப் பெறுகிறோம். கருவி கரணங்களால் உலகப்பொருள்களை அறிவதால் பெறுகின்ற அறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் எனப்படும். அறி கருவிகளாகிய அவையும்அவற்றால் அறியப்படும் பொருள்களும் ஆகிய அனைத்தும் மாயையின் காரியங்களே ஆகும். மாயை பாசம் எனப்படும் என்பது நாம் அறிந்தது. எனவே மாயையின் காரியங்களாகிய உடம்பும்கண் முதலிய புறக்கருவிகளும்மனம் முதலிய அகக் கருவிகளும்அவற்றால் அறியப்படும் உலகப் பொருள்களும் ஆகிய எல்லாம் பாசப் பொருள்கள் என்பது தெளிவு. பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகத்தை அறியும் "பாசஞானம்" எனப்படுவது. ஆன்மா பாசமாகிய கருவிகளையும் பாசமாகிய உலகப் பொருள்களையும் தனக்கு வேறானவை என்று உணராமல்அப்பொருள்களையே தானாகவும் தனது என்றும் மயங்கி அறிகிறது. வேறான அவற்றைத் தானாக அறிவதனால் தனது உண்மையியல்பையோஅறிகின்ற பொருள்களின் உண்மை இயல்பையோஅறியாது போகிறது.

 

பொன்னால் செய்த அணிகலனில் உள்ள அழகிய வேலைப்பாடு பொன்னை மறைத்துத் தனது அழகினையே உணரச் செய்து மக்களை மயக்குகிறது. அதுபோல,ஆன்மாவை உடம்பும் ஐம்பொறி முதலிய கருவி கரணங்களும் தம் வயப்படுத்தி ஆன்மா தன்னை அறியாதபடி மறைத்து மயங்கச் செய்து விடுகின்றன. பொன் போல இருப்பது ஆன்மாவின் உண்மையியல்பு. பொன்னைப் பொருந்தி நின்று மயக்கும் அழகிய வேலைப்பாடு போன்றவை ஆன்மாவைப் பொருந்தி நின்று மயக்கும் தனுகரணங்கள். நிலையில்லாத இக்கருவிகரணங்கள் ஆன்ம அறிவில் நிலையாத உணர்வுகளை எழுப்புதலால் பொய் எனப்பட்டன. பொய் என்பதற்கு நிலையாதது என்பது பொருள் இல்லாதது என்பது கருத்தன்று.

 

பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம்,

பொன்னில் மறைந்தது பொன் அணி பூடணம்,

தன்னை மறைத்தது தன் கரணங்களாம்,

தன்னில் மறைந்தது தன்கரணங்களே.

 

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதல் பூவே.

 

என்னும் திருமூலர் திருமந்திரப் பாடல்களின் கருத்தை ஓர்க.

 

பசு ஞானம்

 

ஞானாசிரியரை அடைந்து அவரது உபதேசத்தைப் பெற்றால்ஆன்மா தன்னைச் சார்ந்துள்ள கருவி கரணங்கள் அறிவில்லாத சடப்பொருள்களே என்பதையும்தான் அவற்றின் வேறாகிய அறிவுப் பொருள் என்பதையும் உணரும். உணர்ந்துஅக் கருவிகள் நாம் அல்ல என்று அவற்றினின்றும் நீங்கும். அவற்றினின்றும் நீங்குதலாவதுஅவற்றின் வசப்படாமை. அவற்றின் வழியில் நில்லாமை. ஒவ்வோர் ஆன்மாவும் வியாபகப் பொருளாய் இருப்பதுஎங்கும் நிறைந்த பொருளாய் இருப்பது. அதனால் வியாபக அறிவே அதற்குரிய இயல்பான அறிவாகும். உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ள கட்டு நிலையில் தனது உண்மை இயல்பை உணராமல்அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்கு உரிய அறிவு என்று அது மயங்கி உணரும். ஞானாசிரியருடைய அருளுரையைப் பெற்ற முத்தி காலத்தில்,அது கருவி கரணங்களினின்றும் நீங்கியவுடன் தனக்கு இயற்கையாகவுள்ள வியாபகவுணர்வு விளங்கப் பெறும். எடுத்துக்காட்டாகமேக படலம் மூடி இருந்த காலத்தில் ஆகாயத்தின் விரிந்த தன்மை புலப்படாது. காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மேக படலம் நீங்கிய போது ஆகாயத்தின் அளப்பரிய பரப்பு விளங்கித் தோன்றும். அதுபோலஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கிஅவற்றால் உண்டான சிற்றறிவும் நீங்கிய காலத்தில் ஆன்ம உணர்வு தன் அளப்பரிய வியாபக இயல்பு விளங்கப் பெறும். 

 

கருவி கரணங்களால் உயிர்க்கு உண்டாகும் சிற்றறிவே சுட்டறிவு என்றும்கருவியறிவு என்றும்பாசஞானம் என்றும் கூறப்படும். அஃது ஆன்மாவின் பொது இயல்பு,செயற்கை இயல்பு. வியாபக அறிவே அதன் உண்மை இயல்பு.

 

இவ்வாறு கருவி அறிவாகிய பாசஞானம் நீங்கி,வியாபக அறிவைப் பெற்றபோது எல்லாவற்றையும் அறியும் நிலை கைகூடும். அந்நிலையில் ஆன்மா நானே எல்லாவற்றையும் அறிகிறேன். என்றும்,என்னால் எல்லாம் செய்தல் கூடும் என்றும்,நானே பெரும்பொருள் என்றும் கருதித் தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும். அவ்வறிவு பசு அறிவு அல்லது பசு ஞானம் எனப்படும். பசுவிற்கு மேல் உள்ள பதியாகிய முதற்பொருளை அறியமாட்டாது பசுவாகிய தன்னையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசு அறிவு எனப்படுவதாயிற்று. அளப்பரிய ஆகாயம் இரவெல்லாம் விளக்கமின்றி இருண்டு கிடக்கிறது. விடிந்தவுடன் அது விளக்கமுற்றுத் தோன்றுகிறது. அவ்வாறு விளங்கித் தோன்றுவதற்குக் காரணம்காலையில் எழுந்த சூரிய வொளி அதன்கண் உடன் கலந்து அதனை விளக்கி நிற்பதேயாகும். இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல்தன்னறிவு வியாபக நிலையை எய்தியதைக் கண்டு தன்னையே பெரிய பொருளாக பதிப்பொருளாக மதிப்பது அறியாமையின் விளைவாகும். அவ்வியாபக நிலையிலும் திருவருள் உடனிருந்து அறிவிக்கத்தான் ஆன்மா அறிகிறதேயன்றித் தானே அறியவில்லை. எந்நிலையிலும் ஆன்மாவின் இயல்புஅறிவிக்கவே அறிவதாகும்.

 

நாம் அல்ல இந்திரியம்நம் வழியின் அல்லவழி

நாம் அல்லநாமும் அரன் உடைமை. - ஆம் என்னில்

எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லை வினை;

முற்செய்வினை யும்தருவான் முன். --- சிவஞானபோத வெண்பா.

 

பார்ஆதி பூதம் நீ அல்லை --- உன்னிப்

பார்இந்திரியம் கரணம் நீ அல்லை,

ஆராய் உணர்வு நீ என்றான் --- ஐயன் 

அன்பாய்உரைத்த சொல் ஆனந்தம் தோழி. --- தாயுமானார்.

 

பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்கும் கால்,அப்பரத்தின்

சீர் ஆக நிற்கும் கண்டாய் --- நேர் ஆக

சிற்கும் திருவருளில் நெஞ்சேயாம் நிற்பது அல்லால்

கற்கும் நெறி யாது இனிமேல் காண்.        --- தாயுமானார்.

 

பார்ஆதி அண்டம்எலாம் படர்கானல் சலம்போல்

     பார்த்தனையே,முடிவில் நின்று பார்துதான் நின்றது?

ஆராலும் அறியாத சத்து அன்றோ?அதுவாய்

    அங்கு இரு நீ,எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய்,

பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்துப்

     புலம்பாதே,சஞ்சலமாப் புத்தியை நாட்டாதே,

ஓராதே ஒன்றையும் நீ,முன்னிலை வையாதே,

    உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே. --- தாயுமானார்.

                                         

பதிஞானம்

 

இறைவனது அருளின் உண்மையை ஆன்மா உள்ளத்தில் கொள்ளுமாறு ஆசாரியர் அறிவுறுத்துவார். இத்தனை நாள் வரையில் பிறப்பு இறப்பிற்பட்டு இடர்ப்பாடுபாசத்தோடு கூடிய நீ பசு ஆவாய். உன்னைப் பாசத்தினின்றும் நீக்கி எடுத்து உனது வியாபக அறிவை விளக்கிய முதற்பொருள் தூய அருளே ஆகும் என்பதை உணர்வாயாக என்று உணர்த்துவார். இங்ஙனம் ஞானாசிரியர் உணர்த்தஅவ்வான்மா அதனைச் சிந்தித்துத் தன்னுள்ளே ஊன்றி நோக்கியபோதுதன் அறிவிற்கு அறிவாய் நிற்கும் பதிப்பொருளினது அறிவாகிய திருவருள் அதற்குப் புலப்படும். அதுவே பதிஞானம் எனப்படுவது. அந்தப் பதிஞானமாகிய பேருணர்வில் ஆன்மவுணர்வு அடங்கித் தன் முனைப்பின்றி நிற்பின்,அவ்வருளுக்கு முதலாகிய சிவமானது பேரின்பப் பொருளாய் அனுபவப்படும்.

 

மேற்கூறிய மூவகை ஞானங்களில் பாசஞானமும் பசுஞானமும் நிலையில்லாத உணர்வுகளாய்க் கழிவன ஆதலின் பொய் எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். அதுவே மெய்ப் பொருளாகிய சிவத்தைக் காட்ட வல்லது. சேய்மையில் உள்ள சூரியனை அதன்கண் உள்ள ஒளியை நமது கண்ணிற்குக் காட்டி நிற்கும். அது போலஅறிய வாராத இறைவனை அவனது அருளொளியாகிய பதிஞானமே காட்டவல்லதாகும். ஏனைய ஞானங்களால் அவனை அறிய ஒண்ணாது. 

 

பதிஞானம் என்னும் உண்மை ஞானம் உணர்ந்தோர் எப்படி இருப்பர் என்பதைப் பட்டினத்து அடிகள் கூறுமாறு காண்க.

 

பேய்போல் திரிந்துபிணம்போல் கிடந்துஇட்ட பிச்சை எல்லாம்

நாய்போல் அருந்திநரிபோல் உழன்றுநன்மங்கையரைத்

தாய்போல் கருதித்தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்

சேய்போல் இருப்பர் கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!

 

அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்

பிறிவு ஒன்று அற நின்ற பிரான் அலையோ?

செறிவு ஒன்று அற வந்து இருளே சிதை,

வெறி வென்றவரோடு உறும் வேலவனே.    --- கந்தர் அனுபூதி.

 

ஆண்டுக்கு ஒரு நாளில் தவ செபமும் தீண்டிக் கனிவாகி --- 

 

இதையே அடிகளார்பிறிதொரு திருப்புகழில், "தவமுறை தியானம் வைக்க அறியாத" என்று அருளினார்.

 

எப்போதும் தவமுறை தியானம் வைத்து இருக்கவேண்டும். ஆண்டுக்கு ஒருநாளிலாவது முயலவேண்டும். முயன்றால்,எப்போதும் இருக்கும் நிலை வந்து வாய்க்கும்.

 

தவமுறையாவது உற்ற நோய் நோன்று உயிர்க்கு உறுகண் செய்யாதுபொறி புலன் அடக்கிமனத்தை ஒரு முகப்படுத்திசித்திரத் தீபம் போல் அசைவற்று நின்றுஉயிராவணம் இருந்துஉள்ளக் கிழியில் அவன் உருவு எழுதிஉற்று நோக்கி இருக்கும் நிலை ஆகும்.

 

நீறு ஆர்த்த மேனி உரோமம் சிலிர்த்துஉளம் நெக்குநெக்குச்

சேறாய்க் கசிந்து கசிந்தே உருகிநின் சீரடிக்கே

மாறாத் தியானம் உற்று ஆனந்தம் மேற்கொண்டுமார்பில் கண்ணீர்

ஆறாய்ப் பெருகக் கிடப்பது என்றோகயிலாயத்தனே!      --- பட்டினத்தடிகள்.                                                                                                                                                         

 

சரணம் அதும் பூண்டற்கு அருள்வாயே--- 

 

திருவடிகளை அடைக்கலமாகப் கொண்டு வாழ்வதற்கு இறைவன் திருவருளை வேண்டுகின்றார் அடிகளார்.


சவதமொடும் தாண்டித் தகர் ஊர்வாய்---

 

சவதம் --- எளிமை.

 

தகர் --- ஆட்டுக் கிடா. 

 

திருமாலின் புதல்வர் பிரமதேவர். பிரமாவின் புதல்வர் நாரதமுனிவர். இவர் தேவரிஷி. இவர் ஒரு சமயம் சிறந்த யாகம் புரிந்தார். அந்த யாகத்தில் பேராற்றல் படைத்த ஓர் ஆடு தோன்றி உலகங்களை எல்லாம் கலக்கி அழிக்கத் தொடங்கியது. தேவர்கள் துன்புற்று முருகனிடம் முறையிட்டார்கள். எம்பெருமான் வீரவாகு தேவரைக் கொண்டு அந்த ஆட்டுக்கடாவை அடக்கித் தமக்கு வாகனமாகக் கொண்டருளினார்.

 

"மருப் பாயும் தார் வீரவாகுநெருப்பில் உதித்துஅங்கண் புவனம் அனைத்தும் அழித்து உலவும்செங்கண் கிடாய் அதனைச் சென்றுகொணர்ந்து, "எம்கோன்விடுக்குதி" என்று உய்ப்பஅதன்மீது இவர்ந்துஎண்திக்கும் நடத்தி விளையாடும் நாதா!" என்று கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர அடிகள் அருளியது காண்க.

 

சடுசமயம் காண்டற்கு அரியானே--- 

 

சடுசமயம் --- ஆறு சமயங்கள். ஆறுசமயத்தவராலும் காண முடியாதது பரம்பொருள்.

 

சமயவாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று கூறிப் பிற சமயத்தைப் பழித்தும் கடல் போல முழங்கி வாதிட்டும் போரிடுவர். அத்தகைய சமயவாதம் கூடாது. சமய வாதத்தால் இறைவனை உணர முடியாது. "சமயவாதிகள் பெற அரியது" என்றார் பொறிதொரு திருப்புகழில். "கலகல எனச்சில் கலைகள் பிதற்றுவ" என்பார் அடிகள் பிறிதொரு திருப்புகழில். 

 

சமயநூல்கள் உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்று,ஞானமே வடிவாகிய இறைவன் திருத்தாளை அடைந்துதன் செயல் ஏதும் இன்றிசிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலையினை அறிவிப்பவை ஆகும்.

 

பதிஞானத்தைப் பெறாதவர்கள்சமய நூல்களால் பெற்ற அறிவையே தமது அறிவு என்று கொண்டுதம்மைத் தாமே உவந்துகொண்டும்பிறரைக் காய்ந்து கொண்டும்ஏற்றத் தாழ்வுகளைத் தமது அறிவிற்கு ஏற்றவாறு கற்பித்துக் கொண்டுகலகமிட்டுத் திரிவர்.

 

கலகல கல என,கண்ட பேரொடு

     சிலுகு இடு சமயப் பங்க வாதிகள்

     கதறிய,வெகுசொல் பங்கம் ஆகிய ...... பொங்கு அளாவும்,

 

கலைகளும் ஒழிய,பஞ்ச பூதமும்

     ஒழி உற,மொழியில் துஞ்சு உறாதன

     கரணமும் ஒழியத் தந்த ஞானம் ......இருந்தவாறு என்?

                                                                       --- (அலகில் அவுணரை) திருப்புகழ்.

 

"சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகனார். மேலும்,


"உவலைச் சமயங்கள்ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க்கிடந்து,தடுமாறும்

கவலைக் கெடுத்துகழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவிநாம்தெள்ளேணம் கொட்டாமோ"

 

என்றும் பாடினார் மணிவாசகப் பெருமான்.

 

புன மடந்தைக்குத் தக்க புயத்தன்,

     குமரன் என்று எத்தி,பத்தர் துதிக்கும்

     பொருளைநெஞ்சத்துக் கற்பனை முற்றும்,......பிறிதுஏதும்

புகலும் எண்பத்தெட்டு எட்டு இயல் தத்வம்,

     சகலமும் பற்றி,பற்று அற நிற்கும்

     பொதுவைஎன்று ஒக்கத் தக்கது,ஓர்அத்தம்...தனைநாளும்

 

சினமுடன்,தர்க்கித்துசிலுகிக் கொண்டு,

     அறுவரும் கைக் குத்து இட்டுருவர்க்கும்

     தெரிவு அரும் சத்யத்தைத்  தெரிசித்து,உன் ......செயல்பாடி,

திசைதொறும் கற்பிக்கைக்குனி அற்பம்

     திருவுளம் பற்றி,செச்சை மணக்கும்

     சிறு சதங்கைப் பொன் பத்மம் எனக்கு என்று....அருள்வாயே.   --- திருப்புகழ்.

 

நிகர் இல் பஞ்ச பூதமும்,நினையும் நெஞ்சும் ஆவியும்,

     நெகிழ வந்து நேர் படும் ...... அவிரோதம்,

நிகழ் தரும் ப்ரபாகர! நிர் அவயம்பராபர!

     நிருப! அம் குமாரவெள்,...... என வேதம்,

 

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்,

     சமய பஞ்ச பாதகர் ...... அறியாத,

தனிமை கண்டது ஆனகிண் கிணிய தண்டை சூழ்வன,

     சரண புண்டரீகம் ...... அது அருள்வாயே.                                --- திருப்புகழ்.

 

அன்பு ஈண்டில் பெயரானே--- 

 

ஈண்டுதல் --- நிறைதல்நெருங்கி இருத்தல். கூடி இருத்தல்.

 

பெயர்தல் --- மாறுதல்,சலித்தல்இணைப்பு நெகிழ்தல். தேய்தல்.

 

அன்போடு வழிபாடு செய்யும் அன்பர்களின் இதயத்தை விட்டு என்றும் நீங்காமல் இருப்பவன் இறைவன்.

 

அன்பே! என் அன்பே! என்று அன்பால் அழுது,அரற்றி,

அன்பே அன்பாக அறிவு அழியும் --- அன்பு அன்றித்

தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யும் அவை

சாற்றும் பழமன்றே தான்.    

 

என்கின்றது "திருக்களிற்றுப்படியார்" என்னும் சைவசித்தாந்த சாத்திர நூல்.

 

அன்பே வடிவாகியவனேஎன் அன்புக்கு உரியவனே! என்று பலவாறும் அன்பினால் அழுதும் அரற்றியும்,அன்பின் நிறைவினால் தன் முனைப்பற்றும்அறிவும் உணர்வும் இழந்து சிவபெருமான் மீது அன்பு பாராட்டுவது ஒன்றே அவனை அடைவதற்குரிய நெறியாகும். அன்பு இல்லாமல் புண்ணிய தீர்த்தங்களிலே நீராடுவதும் தியானத்தை மேற்கொள்ளுவதும் பூவும் மலரும் இட்டுப் போற்றி வழிபடுவதும் ஆகிய எவையும் பயன் தரா.

 

            அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் என்னும் திரு மந்திரம்சைவ சமயத்தில் அன்பிற்குரிய பெருமையினை எடுத்து விளக்குவதாகும். அன்பால் அகம் குளிர்ந்து நெக்கு உருகுவார்க்கு அருளும் சிவபெருமான் ஆரவாரமான புறப் பூசை செய்வாரைக் கண்டு நாணி நிற்பான் என்பதனை,  

 

"நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் 

பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு,

 நக்கு நிற்பன் அவர்தமை நாணியே"

 

என்ற அப்பர் அடிகள் அருள் வாக்கால் உணரலாம். 

 

மணிவாசகரை அழுது அடி அடைந்த அன்பர் என்றே பெரியோர் பாராட்டுவர். அழுதல் அவரது அன்பின் முதிர்ச்சியைக் காட்டும்.

 

"அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை 

ஆனந்தமாய்க் கசிந்து உருக

என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்,

யான் இதற்கு இலனஒ ஓர் கைம்மாறு"

 

என்பது மணிவாசகப் பெருமான் இறைவன் மீது கொண்ட அன்பின் திறத்தை வெளிப்படுத்தும் திருவாசகப் பாடல்.

 

திருமுருகன் பூண்டிப் பெருமாளே--- 

 

திருமுருகன்பூண்டிகொங்கு நாட்டில் உள்ள மற்றொரு திருத்தலமான அவிநாசியில் இருந்து 5 கி.மி. தொலைவில்அவிநாசி - திருப்பூர் சாலை வழியில் உள்ளது.

 

இறைவர்: முருகநாதேசுவரர்முருகநாதசுவாமி.

 

இறைவியார்  : முயங்குபூண்முலையம்மை,  ஆவுடைநாயகிமங்களாம்பிகை.                                        

தல மரம்     : வில்வம்.

தீர்த்தம்       : பிரமதீர்த்தம்ஞானதீர்த்தம்சுப்பிரமணியதீர்த்தம்.

 

     சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது. 

 

     நொய்யல் ஆற்றின் வடபகுதியில் அமைந்த மேற்கு நோக்கிய திருத்தலம். இந்தக் கோயிலில் மற்ற கோயில்களைப் போல நுழைவு கோபுரம் இல்லை. கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் தீபத்தம்பம் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் உயர்ந்த மதில் சுவர்களை உடையதாய் இரண்டு திருச்சுற்றுக்களுடன் அமைந்திருக்கிறது. மூலவரான திருமுருகநாதர் சிவலிங்க வடிவத்தில் தரிசனம் தருகிறார். மேற்குப் பார்த்து மூலவர் சந்நிதி உள்ளது. கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர். கருவறை விமானத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் முயங்கு பூண்முலைவல்லியம்மையின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவியின் இப்பெயரை சுந்தரர் தனது திருப்பதிகத்தின் ஐந்தாம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

 

     கோயிலுக்கு உள்ளே சுப்பிரமணிய தீர்த்தமும்வெளியே பிரம்ம தீர்த்தமும்ஞான தீர்த்தமும் இருக்கிறது. சித்தப் பிரமை பிடித்தவர்களை இந்தத் திருத்தலத்திற்கு அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்து அன்றாடம் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை வழிபட்டுவர அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 

     

     சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களை திருப்பித் தரும்படி இறைவனிடம் பாடி முறையிட்ட பதிகம் இதுவாகும்.


சுந்தரர் திருப்பதிக வரலாறு:

 

     கொடுங்கோளூரில் சேரமான் பெருமாளின் வழிபாட்டை ஏற்றிருந்த சுந்தரர், "ஆருரானை மறக்கலுமாமே" என்று திருப்பதிகம் பாடி, 'திருவாரூரைச் சென்று தொழுவேன்என்று கூறி எழுந்தருளசேரர்பெருமான் பிரிவாற்றாமையால் வருந்துவதை அறிந்து, "வருந்தாது பகை அழித்து உமது பதியின் கண் இருந்து அரசாளும்" என்றார். சேரர் பெருமான், "பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாதமலரேஆயினும் நீர் திருவாரூர்க்கு எழுந்தருள்வதைத் தடுக்க அஞ்சுகின்றேன்என்று சொல்லசுந்தரர், "என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர்ப் பெருமானை மறந்து இரேன்" என்று கூறி எழுந்தருளினார். அது கண்ட சேரர் பெருமான்,அமைச்சர்கள் வாயிலாகநவமணிகளும்மணிப்பூண்களும்துகில் வருக்கம் முதலியவைகளும் ஏவலாளர் தலையின் மேல் நிரம்ப ஏற்றி அனுப்பினார். வழியில் திருமுருகன்பூண்டிக்கு அருகில் சிவபெருமான்பூதங்களை வேடர் வடிவாக்கிப் பொருள்களைக் கவர்ந்து வருமாறு அனுப்பஅவைகள் அவ்வாறே சென்று எல்லாப் பொருள்களையும் பறித்து மறைந்தபின் சுவாமிகள்திருக்கோயிலை அடைந்து"கொடுகு வெஞ்சிலை"எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி அருளினார். இறைவன் அருளால் பூதகணங்கள்,  தாங்கள் பறித்த பொருள்களை எல்லாம் திருவாயிலின் முன்னர் கொண்டு வந்து சேர்த்தன. சுந்தரமூர்த்தி சுவாமிகள்இறையருளால் பெற்ற பொருள்களை எல்லாம் கொண்டு திருவாரூர் புறப்பட்டார்.

 

கருத்துரை

 

முருகா! உனது சரணத்தைப் பற்றி இருக்க அருள்.

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...