பேரூர் --- 0958. மைச் சரோருக

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

மைச் சரோருக (பேரூர்)

 

முருகா!

தாயாய் எழுந்தருளி

அடியேன் மாயாமல் காத்து அருளவேண்டும்.

 

 

தத்த தானன தத்த தானன

     தானா தானா தானா தானா ...... தனதான

 

 

மைச்ச ரோருக நச்சு வாள்விழி

     மானா ரோடே நானார் நீயா ...... ரெனுமாறு

 

வைத்த போதக சித்த யோகியர்

     வாணாள் கோணாள் வீணாள் காணா ...... ரதுபோலே

 

நிச்ச மாகவு மிச்சை யானவை

     நேரே தீரா யூரே பேரே ...... பிறவேயென்

 

நிட்க ராதிகண் முற்பு காதினி

     நீயே தாயாய் நாயேன் மாயா ...... தருள்வாயே

 

மிச்ச ரோருக வச்ர பாணியன்

     வேதா வாழ்வே நாதா தீதா ...... வயலூரா

 

வெற்பை யூடுரு வப்ப டாவரு

     வேலா சீலா பாலா காலா ...... யுதமாளி

 

பச்சை மாமயில் மெச்ச வேறிய

     பாகா சூரா வாகா போகா ...... தெனும்வீரா

 

பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்

     பாரூ ராசூழ் பேரூ ராள்வார் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

மைச் சரோருக நச்சு வாள்விழி

     மானாரோடே நான் ஆர்,நீ யார் ...... எனுமாறு

 

வைத்த போதக சித்த யோகியர்

     வாழ்நாள்,கோள்நாள்,வீண்நாள் காணார்,......அதுபோலே

 

நிச்சமாகவும் இச்சை ஆனவை

     நேரே தீரா ஊரே பேரே ...... பிறவே என்,

 

நிட்கர ஆதிகள் முன் புகாதுனி

     நீயே தாயாய் நாயேன் மாயாது ...... அருள்வாயே.

 

மிச் சரோருக வச்ர பாணியன்,

     வேதா,வாழ்வே! நாத அதீதா! ...... வயலூரா!

 

வெற்பை ஊடுருவப் படா வரு

     வேலா! சீலா! பாலா! கால் ...... ஆயுதம் ஆளி,

 

பச்சை மாமயில் மெச்ச ஏறிய

     பாகா! சூரா! ஆகா போகாது ...... எனும் வீரா!

 

பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர்

     பார் ஊரா சூழ் பேரூர் ஆள்வார் ...... பெருமாளே.

 

பதவுரை

 

     மிச் சரோருக--- (சரவணப் பொய்கையில்) தாமரை மலரில் தவழ்ந்தவரே! 

 

     வச்ர பாணியன்--- வச்சிராயுதம் கொண்ட இந்திரனும்,

 

     வேதா வாழ்வே--- பிரமதேவனும் போற்றும் செல்வமானவரே!

 

     நாத அதீதா--- நாதம் கடந்த மொய்ப்பொருளே!

 

     வயலூரா--- வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளவரே!

 

     வெற்பை ஊடுருவப் படா வரு வேலா --- கிரெளஞ்ச மலையை ஊடுருவித் தொளைத்துச் சென்ற வேலாயுதத்தை உடையவரே!

 

     சீலா --- நற்குணம் நிறைந்தவரே!

 

     பாலா--- குழந்தைவேலரே! 

 

     கால் ஆயுதம் ஆளி--- காலை ஆயுதமாகக் கொண்ட சேவலைக் கொடியாக உடையவரே!

 

     பச்சை மாமயில் மெச்ச ஏறிய பாகா--- பச்சை நிறம் கொண்டஅழகான மயில் மீது தேவர் முதலானோர் மெச்சும்படி ஏறிய பாகரே!

 

     சூரா ஆகா போகாது எனும் வீரா--- சூரனேஆகாஅப்புறம் போகாதே (நில்) என்று சொன்ன வீரரே!

 

     பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர்--- (பிரமனாகிய) பட்டி முனிவனுக்கு அருள் செய்தவரும்கொடு கொட்டி என்னும் நடனத்தை ஆடினவரும்,

 

     பாரூர்--- பாரில் சிறந்து ஊராகத் திகழும்,

 

     ஆ சூழ் பேரூர் ஆள்வார் பெருமாளே--- காமதேனு வலம் செய்த பேரூரை ஆள்பவராகிய சிவபெருமானுக்குப் பெருமாளே! 

 

     மைச் சரோருகம் நச்சு வாள் விழி மானாரோடே--- மை பூசியுள்ளதும்தாமரைவிடம்வாள் ஆகியவற்றைப் போன்ற கண்களை உடைய பெண்களுடன் 

 

     நான் யார் நீ யார் எனுமாறு வைத்த போதக சித்த யோகியர்--- நான் யார்நீ யார் என்னும் வகையில் (மாதர்கள் மயக்கால் சிறிதேனும் தாக்கப்படாதவராய்) தங்கள் மன நிலையை வைத்துள்ள ஞான சித்தர்களும்யோகிகளும்

 

     வாழ் நாள் கோள் நாள் வீண் நாள் காணார்--- தமது வாழ் நாளாலும்கிரகங்களாலும் ஒரு நாள் கூட வீணாகப் போகும்படியான நாளாகக் காணமாட்டாதவர்கள்,

 

     அது போலே நிச்சமாகவும்--- அதுபோலவேஉறுதியாகவும்,

 

     இச்சையானவை நேரே தீரா--- உறுதியாக நான் கொண்டுள்ள (மண்பொன்பெண் என்னும்) மூவாசைகள் ஒரு வழியாக முடிவு பெறுவதில்லை.

 

     ஊரே --- (ஆதலால்) எனது சொந்த ஊரரைப் போல் இனியவரே

 

     பேரே --- எனது பேர் போல இனியவரே!

 

     பிறவே ---  எனக்கு இனிய எல்லாப் பொருள்களும் ஆனவரே!

 

     என் நிட்கராதிகள் முன் புகாது--- என்னை நிந்தைக்கு ஆளாக்குபவை ஆகிய ஆசை முதலான முக்குற்றங்கள் என்னைத் தாக்காமல்படிக்கு,

 

     இனி நீயே தாயாய் --- அனி நீயே எனக்குத் தாயாய் எழுந்தருளி,

 

     நாயேன் மாயாது அருள்வாயே--- நான் மடிந்து போகாமல் காத்து அருள் புரியவேண்டும்.

 

 

பொழிப்புரை

 

     சரவணப் பொய்கையில் தாமரை மலரில் தவழ்ந்தவரே! 

 

     வச்சிராயுதம் கொண்ட இந்திரனும்பிரமதேவனும் போற்றும் செல்வமானவரே!

 

     நாதம் கடந்த மொய்ப்பொருளே!

 

     வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளவரே!

 

     கிரெளஞ்ச மலையை ஊடுருவித் தொளைத்துச் சென்ற வேலாயுதத்தை உடையவரே!

 

     நற்குணம் நிறைந்தவரே!

 

     குழந்தைவேலரே! 

 

     காலை ஆயுதமாகக் கொண்ட சேவலைக் கொடியாக உடையவரே!

 

     பச்சை நிறம் கொண்டஅழகான மயில் மீது தேவர் முதலானோர் மெச்சும்படி ஏறிய பாகரே!

 

     சூரனேஆகாஅப்புறம் போகாதேநில் என்று சொன்ன வீரரே!

 

      பிரமனாகிய பட்டி முனிவனுக்கு அருள் செய்தவரும்கொடு கொட்டி என்னும் நடனத்தை ஆடினவரும்பாரில் சிறந்து ஊராகத் திகழும்காமதேனு வலம் செய்த பேரூரை ஆள்பவராகிய சிவபெருமானுக்குப் பெருமாளே! 

 

      மை பூசியுள்ளதும்தாமரைவிடம்வாள் ஆகியவற்றைப் போன்ற கண்களை உடைய பெண்களுடன்நான் யார்நீ யார் என்னும் வகையில்மாதர்கள் மயக்கால் சிறிதேனும் தாக்கப்படாதவராய்,தங்கள் மன நிலையை வைத்துள்ள ஞான சித்தர்களும்யோகிகளும்

தமது வாழ் நாளாலும்கிரகங்களாலும் ஒரு நாள் கூட வீணாகப் போகும்படியான நாளாகக் காணமாட்டாதவர்கள்அதுபோலவேஉறுதியாக நான் கொண்டுள்ள (மண்பொன்பெண் என்னும்) மூவாசைகள் ஒரு வழியாக முடிவு பெறுவதில்லை.ஆதலால்எனது சொந்த ஊரரைப் போல் இனியவரேஎனது பேர் போல இனியவரே!எனக்கு இனிய எல்லாப் பொருள்களும் ஆனவரே!என்னை நிந்தைக்கு ஆளாக்குபவை ஆகிய ஆசை முதலான முக்குற்றங்கள் என்னைத் தாக்காமல்படிக்குஇனி நீயே எனக்குத் தாயாய் எழுந்தருளிநான் மடிந்து போகாமல் காத்து அருள் புரியவேண்டும்.

 

விரிவுரை

 

மைச் சரோருகம் நச்சு வாள் விழி மானாரோடே--- 

 

மை --- கருநிற மையைத் தீட்டியுள்ள பெண்களின் கண்கள்.

 

சரோருகம் --- தாமரை போன்று அழகாக உள்ளவை.

 

நச்சு --- விடம். விடமானது உண்டவரைத் தான் கொல்லும். பெர்களின் கண்டளானவை கண்டாரையும் காமக் கடலில் விழுத்திக் கொல்லும் தன்மை வாய்ந்தவை.

 

வாள் --- ஒளி பொருந்திய கண்கள். வாளைப் போன்று மூர்மையான கண்கள் என்று கொண்டாலும் பொருந்தும்.

 

மானைப் போன்ற சாயலை உடையதால்மானார் எனப் பெண்களைக் கூறுவது கவிகளின் மரபு.

 

நான் யார் நீ யார் எனுமாறு வைத்த போதக சித்த யோகியர்வாழ் நாள் கோள் நாள் வீண் நாள் காணார்--- 

 

பெண்களிடத்தில் காம மயக்கம் கொள்ளாத மெய்யறிவினை உடைய சித்தர்களும்யோகிகளும்தமது வாழ்நாளை வீணாகப் போக்கா மாட்டார்கள்.

 

கொம்பு அனையார் காது மோது இரு

     கண்களில்ஆமோத சீதள

          குங்கும பாடீர பூஷண ......        நகமேவு

கொங்கையில்நீர் ஆவி மேல்வளர்

     செங்கழு நீர்மாலை சூடிய

          கொண்டையில்ஆதார சோபையில் ...மருளாதே,

 

உம்பர்கள் ஸ்வாமி! நமோநம,

     எம்பெரு மானே! நமோநம,

          ஒண்தொடி மோகா! நமோநம,...... எனநாளும்

உன் புகழே பாடி நான் இனி

     அன்புடன் ஆசார பூசை செய்து

          உய்ந்திட,வீண்நாள் படாதுஅருள் ...... புரிவாயே.  --- திருப்புகழ்.

                                                                                                            

 

என் நிட்கராதிகள் முன் புகாது இனி நீயே தாயாய் நாயேன் மாயாது அருள்வாயே--- 

 

நிட்காரம் --- நிந்தை.

 

மனிதனை நிந்தைக்கு ஆளாக்குபவை காமம்வெகுளிமயக்கம் ஆகிய முக்குற்றங்கள்.

 

இம் முக்குற்றங்களையும் எப்படிப் போக்குவது என்பது குறித்து,  சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்கின்றார்.

 

திருக்குஉறும் அழுக்காறு அவாவொடு வெகுளி

        செற்றம் ஆகியமன அழுக்கைத்

    தியானம்என் புனலால்;பொய்,புறங்கூறல்,

        தீச்சொல் என்கின்ற வாய் அழுக்கை

அருட்கிளர் நினது துதியெனும் புனலால்;

        அவத் தொழில் என்னும் மெய் அழுக்கை

    அருச்சனை என்னும் புனலினால் கழுவா

        அசுத்தனேன் உய்யும் நாளு உளதோ?

விருப்பொடு வெறுப்பு இங்கு இலாதவன் என்ன

        வெண்மதி யோடு வெண் தலையும்,

    விரைவழி புகுந்த வண்டினம் பசுந்தேன்

        விருந்துஉணும் கொன்றைமென் மலரோடு,

எருக்கையும் அணிந்து,மின்னொளி கடந்த

        ஈர்ஞ்சடை,பாந்தள் நாண்உடையாய்,

    இட்டநன்கு உதவி என்கரத்து இருக்கும்

        ஈசனே,மாசிலா மணியே.          --- சிவப்பிரகாசர்.

 

     மன அழுக்கு ஆகிய அழுக்காறுஅவாவெகுளிபகைமை உணர்வு ஆகியவற்றை,தியானம் என்னும் நீரால் கழுவி அகற்ற வேண்டும்.

 

     பொய் சொல்லுதல்புறம் கூறுதல்தீய சொற்களைக் கூறுதல் என்னும் வாயால் உண்டாகும் அழுக்கைஇறைவனை வாயாரப் பாடிப் புகழ்வதன் மூலம் கழுவ வேண்டும்.

 

     பாவச் செயல்களில் ஈடுபடுவதனால் உண்டாகும் எடல் அழுக்கை,அருச்சனை என்னும் நீரால் கழுவிப் போக்க வேண்டும்.

 

     இறைவழிபாட்டில் நின்றால்இறையருளால் உயிர்க் குள்ளங்கள் நீங்கும். இவ்வாறுமன அழுக்குவாய் அழுக்குஉடல் அழுக்கு என்று முக்கரண அழுக்கைச் சிவப்பிரகாச அடிகளார் தெளிவிப்பது ஓதிஉணர்ந்துஒழுக வேண்டியது.

 

     இதனைசு சுருக்கமாகத் திருவள்ளுவர்"மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன்ஆகுல நீர பிற" என்று அருளிச் செய்தார். மனமாசு நீங்குதலே எல்லா அறங்களுமாகும். மன அழுக்கு நீங்கினாலேவாய் அழுக்கும்மெய் அழுக்கும் இல்லாது ஆகும்.

 

ஒன்றோடு ஒன்று ஒவ்வாத பாசண்டத்துள் எல்லாம்

ஒன்றோடு ஒன்று ஒவ்வாப் பொருள் தெரிந்து--ஒன்றோடுஒன்று

ஒவ்வா உயிர் ஓம்பி,உள் தூய்மை பெற்றதே

அவ்வாயது அறம் ஆகும்.             --- அறநெறிச்சாரம்.

 

ஒன்றோடு ஒன்று பொருந்தாத புறச் சமய நூல்கள் பலவற்றுள்ளும்ஒன்றோடு ஒன்று வேறுபட்ட பொருள் இவை என நன்கு ஆராய்ந்து அறிந்துபல்வேறு வகைப்பட்ட உயிரினங்களைக் காப்பாற்றி,உள்ளத் தூய்மை பெற்றதே சிறந்த அறம் ஆகும்.

 

 

கால் ஆயுதம் ஆளி--- 

 

காலையே அயுததாக உடையது சேவல்.

 

"காலாயுதக் கொடியேன் அருளாய கவசம் உண்டு. என்பால் ஆயுதம் வருமோ இயமனோடு பகைக்கினுமே" என்று சுவாமிகள் அருளிய கந்தர் அலங்காரப் பாடலைக் காண்க.

 

"வாளகிரியைத் தனது தாளில் இடியப் பொருது

வாகை புனை குக்குட பதாகைக் காரனும்"      --- திருவேளைக் காரன் வகுப்பு.

 

பட்டி ஆள்பவர் ---

 

பட்டி முனியாக இருந்து தன்னை வழிபட்ட பிரமதேவனை ஆட்கொண்டு அருள் புரிந்தவர் சிவபெருமான் என்று பேரூர்ப் புராணம் கூறும்.

 

கொட்டி ஆடினர்--- 

 

கொடுகொட்டி என்னும் திருநடத்தைப் புரிந்தவர் சிவபெருமான்.

 

ஆ சூழ் பேரூர் ஆள்வார் பெருமாளே--- 

 

காமதேனு வலம் செய்து வணங்கிய பேரூர்.

 

பெரு ஊர் - பேரூர். பண்டைக் காலத்தில் இது பெரிய ஊராக இருந்தது. இப்போது பெரிய ஊர் கோயம்புத்தூர். அது முற்காலத்தில் கோயன் என்றவன் புதிதாக உண்டாக்கிய சிறிய ஊர். பெரியது சிறியதாகவும்சிறியது பெரியதாகவும் மாறுவது கால இயல்பு.

 

பேரூர் ஒரு சிறந்த திருத்தலம். கோயம்புத்தூருக்கு மேற்கே மூன்று கல் தொலையில் உள்ளது. மேலைச் சிதம்பரம் எனப்படும். அநேக அற்புதங்களை உடையது. பிறவாப்புளிஇறவாப்பனை முதலியன இன்னும் இருக்கின்றன. நடராஜர் சந்நிதியும் அதன் மண்டபத்துள்ள கல்சித்திரங்களும் காணத் தகுந்தவை. கச்சியப்ப முனிவர் பாடியருளிய அருமையான தலபுராணம் உண்டு.

 

கருத்துரை

 

முருகா!தாயாய் எழுந்தருளிஅடியேன் மாயாமல் காத்து அருளவேண்டும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...