அவிநாசி --- 0951. இறவாமல் பிறவாமல்

 அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

இறவாமல் பிறவாமல் (அவிநாசி)

 

முருகா! 

குருவாக எழுந்தருளி ஆட்கொண்டு

அடியேன் பிறவாத பெருநிலையை அடைய அருள்வாய்.

 

 

தனதானத் தனதான தனதானத் ...... தனதான

 

 

இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்

 

பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே

 

குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா

 

அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

இறவாமல் பிறவாமல் எனை ஆள் சற் ...... குருஆகி,

 

பிறஆகி, திரம்ஆன பெருவாழ்வைத் ...... தருவாயே,

 

குறமாதைப் புணர்வோனே! குகனே!சொல் ...... குமரேசா!

 

அறம்நாலைப் புகல்வோனே! அவிநாசிப் ...... பெருமாளே!

 

பதவுரை

 

குறமாதைப் புணர்வோனே--- குறவர் குலக்கொடியாகிய வள்ளியம்மையாரை மணந்தவரே!

 

            குகனே--- அடியார்களின் இதயமாகிய கோயிலில் இருப்பவரே! 

 

சொல் குமரேசா--- எல்லோராலும் புகழப்படும் குமாரக் கடவுளே!

 

            அறம் நாலைப் புகல்வோனே--- உயிர்க்கு உறுதி பயக்கும் புருஷார்த்தங்களாகிய அறம்பொருள்இன்பம்வீடு ஆகியவற்றை உபதேசித்து அருளியவரே!

 

            அவிநாசிப் பெருமாளே--- அவிநாசி என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் பெருமையின் மிக்கவரே!

 

            இறவாமல் பிறவாமல்--- இறந்தும்பிறந்தும் உழலாமல் பேரின்ப நிலையை அடியேன் பெறுமாறு, 

 

           எனை ஆள் சற்குரு ஆகி--- சற்குருநாதனாக எழுந்தருளி வந்து என்னை ஆட்கொண்டு அருளியும், 

 

            பிற ஆகி--- உலகில் அடியேன் வாழ்வாங்கு வாழ எனக்கு வேண்டிய எல்லாத் துணைகளும் ஆகி,

 

            திரமான பெருவாழ்வைத் தருவாயே --- நிலையான பேரின்பப் பெருவாழ்வை அடியேன் பெறுமாறு அருள் புரிவாயாக. 

 

பொழிப்புரை

 

குறவர் குலக்கொடியாகிய வள்ளியம்மையாரை மணந்தவரே!

 

            அடியார்களின் இதயமாகிய கோயிலில் இருப்பவரே! 

 

எல்லோராலும் புகழப்படும் குமாரக் கடவுளே!      

 

உயிர்க்கு உறுதி பயக்கும் புருஷார்த்தங்களாகிய அறம்பொருள்இன்பம்வீடு ஆகியவற்றை உபதேசித்து அருளியவரே!

 

            அவிநாசி என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் பெருமையின் மிக்கவரே!

 

            இறந்தும் பிறந்தும் உழலாமல் பேரின்ப நிலையை அடியேன் பெறுமாறு, சற்குருநாதனாக எழுந்தருளி வந்து என்னை ஆட்கொண்டு அருளியும், உலகில் அடியேன் வாழ்வாங்கு வாழ எனக்கு வேண்டிய எல்லாத் துணைகளும் ஆகியும்,நிலையான பேரின்பப் பெருவாழ்வை அடியேன் பெறுமாறு அருள் புரிவாயாக. 

 

விரிவுரை

 

இறவாமல் பிறவாமல் எனை ஆள் சற்குரு ஆகி ---

 

உயிர்கள் அனைத்தும் எண்ணில்லாத நெடுங்காலமாக எண்ணில்லாத பல பிறவிகளை எடுத்து உழல்கின்றன. யான் எனது என்னும் அகப்புறப் பற்றுக்கள் அறாத நிலையில்,பிறப்பும் இறப்பும் மாறிமாறி வந்துக்கொண்டே இருக்கும். அஞ்ஞானம் நீங்கினால் ஞானம் பிறக்கும். அதற்குக் குருவருள் வேண்டும். “அற்றது பற்று எனில் உற்றது வீடு”. உயிர்களின் பக்குவ நிலையினை அறிந்து இறைவனே குருநாதனாகத் திருமேனி தாங்கி வந்து ஆட்கொண்டு அருள் புரிவான்.

 

“கோகழி ஆண்ட குருமணி” என்றார் மணிவாசகப் பெருமான். மணிவாசகப் பெருமானை இறைவனே குருநாதனாக வந்து ஆட்கொண்டான்.

 

பக்குவம் வாய்க்கப் பெற்றவருக்கே இது விளங்கும். குருநாதரை 

மானிடருள் ஒருவராக எண்ணுவது அறியாமை.

 

“முருகன் தனிவேல் முனி நம் குரு என்று அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ?” என்னும் அநுபூதி அருள்வாக்கை உணர்ந்து தெளியவேண்டும்.

 

திரமான பெருவாழ்வு---

 

திரம் --- நிலையாஉறுதியான. தரம் என்னும் தமிழ்ச்சொல், "ஸ்திரம்" என்று வடமொழியில் வழங்கப் பெறும். 

 

உலக வாழ்வு நிலையில்லாதது. நிலையான வாழ்வு இறையருளால் வாய்க்கும் பேரின்பப் பெருவாழ்வு ஆகும்.  

 

குகனே----

 

அடியார்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன். 

 

உள்ளம் பெரும் கோயில் ஊன்உடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே         --- திருமூலர்.

  

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்

உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யான்இருந்து ஓம்புகின்றேனே.   --- திருமூலர்.

 

துறவாதே யாக்கை துறந்தான் தன்னைச்

    சோதி முழுமுதலாய் நின்றான் தன்னைப்

பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப்

    பெண்ணினோ டாணுருவாய் நின்றான் தன்னை

மறவாதே தன்திறமே வாழ்த்துந் தொண்டர்

    மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற

திறலானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்

    தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.    --- அப்பர்.

 

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்

அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்

தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.      ---  அப்பர். 

 

நெஞ்சகமே கோயில்,நினைவே சுகந்தம்அன்பே

மஞ்சனநீர்,பூசைகொள்ள வாராய் பராபரமே.--- தாயுமானார்.

     

மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள்இருத்தி

உறஆதி தனை உணரும் ஒளிவிளக்குச் சுடர்ஏற்றி

இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி

அறவாணர்க்கு அன்புஎன்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்.   ---  பெரியபுராணம்.

 

ஊன் ஆகிஉயிர் ஆகிஅதனுள் நின்ற 

உணர்வுஆகிபிற அனைத்தும் நீயாய்நின்றாய்

நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து

நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்

தேன் ஆரும் கொன்றையனே! நின்றியூராய்! 

திருஆனைக்காவில் உறை சிவனே! ஞானம்- 

ஆனாய்! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,

    அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?. --- அப்பர்.

 

அறம்நாலைப் புகல்வோனே---

 

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கும் உயிருக்கு உறுதி பயப்பவை. இவை புருஷார்த்தங்கள் எனப்படுபவை. இந்நான்குமே வேதங்கள் எனப்படுபவை. இவைகள் இறைவனால் திருவாய் மலர்ந்து அருளப்பட்டவை.

 

பின்வரும் அருட்பாடல்களால் இந்த உண்மை தெற்றென விளங்கும்..

 

அருந்தவருக்கு ஆலின்கீழ் அறமுதலா நான்கினையும்

இருந்து அவருக்கு அருளும் அது எனக்கு அறிய இயம்புடீ

அருந்தவருக்கு அறம்முதல்நான்கு அன்று அருளிச் செய்திலனேல்

திருந்த அவருக்கு உலகியற்கை தெரியாகாண் சாழலோ. ---  மணிவாசகம்

 

சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல் அரா நல் இதழிச்

சழிந்த சென்னிச் சைவவேடந் தான் நினைந்து,ஐம்புலனும்

அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு,அறம் பொருள் இன்பம் வீடு

மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.      ---  அப்பர்.

 

நூல்அடைந்த கொள்கையாலே நுன்அடி கூடுதற்கு

மால்அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை

ஆல்அடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதுஎன்னே

சேல்அடந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே!  ---  திருஞானசம்பந்தர்.

 

உரித்தானை மதவேழம் தன்னைமின்ஆர்

            ஒளிமுடிஎம் பெருமானைஉமைஓர் பாகம்

தரித்தானைதரியலர்தம் புரம்எய் தானை,

            தன்அடைந்தார் தம்வினைநோய் பாவம் எல்லாம்

அரித்தானைஆல்அதன்கீழ் இருந்து நால்வர்க்கு

            அறம்,பொருள்வீடுஇன்பம்ஆறுஅங்கம்வேதம்

தெரித்தானைதிருநாகேச் சரத்து உளானைச்

            சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.       ---  அப்பர்.

 

 

அவிநாசி---

 

     திருமுறைகளில் திருப்புக்கொளியூர் என்பது திருத்தலத்தின் பெயர். இறைவர் திருப்பெயர் அவிநாசியப்பர். மக்கள் வழக்கில் அவிநாசி என்று வழங்கப்படுகின்றது. திருப்பூரில் இருந்து 14 கி.மீ. கோவையில் இருந்து 40 கி.மீ.

 

இறைவர்        : அவிநாசிலிங்கேசுவரர்அவிநாசி ஈசுவரர்,

                                         அவிநாசியப்பர்பெருங்கேடிலியப்பர்.

இறைவியார்  : கருணாம்பிகைபெருங்கருணை நாயகி.

தல மரம்        : பாதிரி (ஆதியில் மாமரம்)

 

     தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்டதுதற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. 

            

     அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இக்கோயிலில் பாலதண்டாயுதபாணி சந்நிதியும்சுப்பிரமணியர் சந்நிதியும்அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதியும் உள்ளன. உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும்நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் விளங்குகிறார். குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இவ்வாலயத்தில் உள்ளது.

 

             மூன்று தீர்த்தங்கள் 1. காசிக் கங்கை (கிணறு), 2. நாககன்னிகை தீர்த்தம் (கிணறு) 3. ஐராவத தீர்த்தம் எனபனவாகும். தலமரமாக மாமரம் விளங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில் தேர்களில் அவிநாசிக் கோயில் தேரும் ஒன்றாகும்.

 

முதலை வாயினின்றும் பிள்ளையை அழைத்த வரலாறு:

 

            வன்தொண்டப் பெருமான் திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு வந்தார். வரும் நாளில் அவருக்குச் சேரமான் பெருமாள் நினைவு தோன்றலாயிற்று. வன்தொண்டர் திருவாரூரை விடுத்துப் பல திருத்தலங்களை வழிபட்டுக் கொண்டே கொங்கு நாட்டைச் சேர்ந்தார்.  திருப்புக்கொளியூரை அடைந்தார். மாடவீதி வழியே நடந்தார்.

 

            அப்பொழுது அங்கேஒரு வீட்டில் மங்கல ஒலியும்மற்றொரு வீட்டில் அழுகை ஒலியும் எழுந்தன. நாவலர் பெருமான்அது குறித்துப் பக்கத்தில் இருந்தவர்களைக் கேட்டார். அவர்கள், "அடிகளேஇரண்டு சிறுவர்கள் ஐந்து வயதுடையவர்கள் மடுவிலே குளிக்கப் போனார்கள். அவர்களில் ஒருவனை முதலை விழுங்கிற்று. பிழைத்தவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நடைபெறுகிறது. இம்மங்கல ஒலிஇறந்தவன் நினைப்பைப் பெற்றோருக்கு எழுப்பி இருக்கிறது" என்றார்கள். அவ்வுரை கேட்ட நம்பியாரூரருக்கு இரக்கம் மேலிட்டது. அவர் அங்கேயே நின்று விட்டார். மகனை இழந்த தாய் தந்தையர்நின்றவர் வன்தொண்டர் என்று உணர்ந்து ஓடி வந்தனர்.  வன்தொண்டரை வணங்கினர். வன்தொண்டர்அவர்களைப் பார்த்து, "மகனை இழந்தவர் நீங்களா" என்று கேட்டார். அவர்கள், "அடிகளைக் கண்டு வணங்கல் வேண்டும் என்னும் எண்ணம் எங்களுக்கு நீண்ட நாள்களாக உண்டு. அது திருவருளால் கூடிற்று" என்று கூறி மகிழ்வெய்தினார்கள். அம்மகிழ்ச்சி கண்ட ஆரூரர், 'இவர்கள் புத்திர சோகத்தை மறந்து எனது வரவு குறித்து மகிழ்கிறார்கள். இவர்கள் அன்பே அன்பு. இறைவனருளால் நான் இவர்கள் புதல்வனை முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தே அவநாசி அப்பனைத் தொழுவேன்என்று உள்ளம் கொண்டார். பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்து, "மடு எங்கே இருக்கிறது" என்று கேட்டார். அவர்கள் வாயிலாக மடு உள்ள இடத்தைத் தெரிந்துஅங்கே போனார்.  திருப்பதிகம் பாடினார். "எத்தால் மறக்கேன்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். திருப்பதிகத்தில் நான்காவது பாடலில்,

 

உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்,

அரைக்குஆடு அரவாஆதியும் அந்தமும் ஆயினாய்,

புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே,

கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே

 

என்று வேண்டினார். உடனேகாலன்பிள்ளை பூமியில் வாழ்ந்து இருந்தால்எந்த வயதை அடைந்திருப்பானோஅந்த வயதுடன் பிள்ளையை முதலை வாயில் சேர்த்தான். முதலைபிள்ளையைக் கரையிலே கொண்டு வந்து உமிழ்ந்தது. தாயார் விரைந்து ஓடிப் பிள்ளையை எடுத்தார். தாயாரும் தந்தையாரும் நம்பியாரூரரை வணங்கினர். செயற்கரும் செய்கை கண்ட வானும் மண்ணும் வியப்பு எய்தின. வன்தொண்டர்புதல்வனை அழைத்துக் கொண்டு  அவிநாசிக்குப் போய் ஆண்டவனைத் தொழுதார். பின்னர்அப் பிள்ளையின் வீட்டுக்குப் போனார். அவனுக்கு உபநயனம் செய்வித்தார். அங்கும் மங்கல ஒலி எழுந்தது. பின்னர்நம்பியாரூரர் அவிநாசி விடுத்து மலைநாடு நோக்கிச் சென்றார்.

 

            அவிநாசியப்பர் கோயிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப் பிள்ளை சிற்பம் ஆகும். முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு உள்ளது. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகமும், 63மூவர் விழாவும் மற்ற சிறப்பான விழாக்களாகும்.

 

கருத்துரை

 

முருகா! குருவாக எழுந்தருளி ஆட்கொண்டுஅடியேன் பிறவாத பெருநிலையை அடைய அருள்வாய்.

No comments:

Post a Comment

கேளுங்கள், அருமையான ஓர் வரம்.

  கேளுங்கள் ,  அருமையான ஓர் வரம் -----      வள்ளல்பெருமான் என வழங்கப்படும் ,  இராமலிங்க சுவாமிகள் ,  சென்னையில் ஏழுகிணறுப் பகுதியில் ,  விரா...