கேடில்லாத அறிவுச் செல்வத்தைப் பெற முயல்க

 


கேடில்லாத அறிவுச் செல்வத்தைப் பெற முயல்க.

----

 

"கல்வி ஞானக் கலைப்பொருள் ஆயவன்

செல்வம் மல்கு திருக் கானூர் ஈசனை,

எல்லியும் பகலும் இசைவு ஆனவா

சொல்லிடீர் நுங்கள் துயரங்கள் தீரவே

 

என்றார் அப்பர் பெருமான். 

 

கல்விஞானம்கலை ஆகியவற்றின் பொருளாய் இருப்பவன் இறைவன். 

 

கல்வி --- நூல்களால் அறியப் படுவது. 

ஞானம் --- நூல்களைக் கற்ற கல்வியால் விளையும் உண்மை அறிவு. 

கலைப்பொருள் --- கலைகளால் உணரப்படும் பொருள்.

 

     எனவேஇறைஞானத்தைப் பெறும்பொருட்டுக் கல்வியைப் பயிலவேண்டும்.

 

     மன உறுதியோடு கருதிப் பயிலும்போதுகல்வி அறிவு வளர்கின்றது. கருத்தை ஊன்றிப் படித்தால்விருத்தி கிடைக்கும். கூர்மையான கவனம்சீர்மையான அறிவைத் தருகின்றது.

 

     உள்ளம் குவிந்து வந்தால்எதையும் தெளியும் அறிவு உண்டாகும். நலங்கள் எல்லாம் வெள்ளமாய் விரைந்து வரும்.

 

"தொட்டனைத்து ஊறும் அறிவுமாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு"

 

என்றார் திருவள்ளுவ தேவநாயனார்.

 

     கல்வி அறிவு பெருகி வரும் நிலையைஓர் உவமையால் நமக்குக் காட்டி அருளினார்.

 

     ஆற்று மணலின் உள்ளே நீர் நிறைந்து இருந்தாலும்தோண்டுகின்ற அளவுக்கே அது சுரந்து வெளிப்படும். தோண்டாமல் தோன்றாது. மனிதன் அறிவு உள்ளத்தில் மருவி இருந்தாலும்கற்ற கல்வியின் அளவுக்கே அது தெளிவாய் வருகின்றது. தோண்டா விட்டால்நீர் மறைந்து இருப்பது போலகற்காவிட்டால்அறிவு வெளிப்படாது.

 

     மணலைப் பறிக்கப் பறிக்க நீர் ஊறி வருதவது போநூல்களைப் படிக்கப் படிக்க அறிவு தேறி வரும். அறிவுக்கு நீரை உவமை கூறியதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். "நீர் இன்றி அமையாது உலகு" என்ற நாயனார்,"அறிவு இன்றி அமையாது வாழ்க்கை" என்பதைச் சூசகமாக அறிவுறுத்தினார்.

 

     மணல் கேணி மனிதன் உள்ளத்திற்கும்நீர் அறிவுக்கும்தோண்டல் என்பது கற்றலுக்கும்ஊறல் என்பது அறிவின் தெளிவுக்கும் ஒப்பாகும். எல்லை இல்லாத அறிவு மனிதனின் உள்ளத்தில் பொதிந்து உள்ளது. இதனை அவன் அறிந்து கொள்ளவேண்டும். வெளியே இருந்து எதுவும் வருவது இல்லை. எல்லா அறிவு நலங்களும் உள்ளத்தில் இருந்தே வெளிப்படுகின்றன. இதயம் விரிந்தால்இருள் நீங்கிஉதயம் ஒளி வீசும்.

 

     வெளியே மணலைத் தோண்டினால்நீர் ஊறும். அதனால் தாகம் தீரும். உள்ளே மனதைத் தோண்டினால் நல்ல அறிவு வரும். எல்லா இன்ப நலங்களும் வந்து சேரும்.

 

     உண்ட உணவு செரிமானம் ஆனால்குருதி விருத்தி ஆகிஅது உடலுக்கு உறுதியைத் தரும். கல்வியால் பெற்ற கருத்துஉள்ளத்தோடு நன்கு தோய்ந்து இருக்குமானால்அது உணர்வுக்கு உறுதி தருகின்றது. எனவேசிந்தனை செய்து உணராமல்,கல்வி பயிலுவதுபசி இல்லாமல் உணவு கொள்வது போல அமையும்.

 

     முயன்று தேடாமல்சோம்பேறியாய் இருந்தாலும் ஒருவனுக்குதந்தை ஈட்டிய பொருள் முறைமையாக வந்து சேரும். ஆனால்கல்வி அறிவு அவ்வாறு வருவதில்லை. பொருளால் சிறப்பு உண்டாவதில்லை. அறிவால் மட்டுமே சிறப்பு வந்து சேரும். எனவேஒருவன் விரைந்து பெறவேண்டியது கல்வி அறிவே என்பது விளங்கும்.

 

செல்வம் வழிமுறையில் சேர்ந்து வரும்;கல்வியோ

புல்லிப் பியன்றார்க்கே போதுமால் --- ஒல்லையினில்

ஓதி உயர்கஒழிந்தாயேல் நீ என்றும்

பேதையாய் நிற்பாய் பிறழ்ந்து.             --- தருமதீபிகை.

 

     செல்வம் வமிச வழியாக வந்து சேரும். கல்வி அவ்வாறு வருவதில்லை. விரும்பிப் பயின்றவர்க்கே அது நெருங்கி வரும். ஆதலால்விரைந்து கற்று உயர்வடைய வேண்டும். சோர்ந்து விட்டாயானல்நீ மூடனாய் இழிந்த நிலையில் உழலுவாய்.

 

     "Learning by study must be won. It was never entailed from son to son" என்று ஒரு மேனாட்டு அறிஞர் கூறியுள்ளபடிகல்வியைப் பரம்பரை உரிமையாக யாராலும் பெற்றுக் கொள்ள முடியாது. அது ஒருவனது முயற்சி காரணமாகவே வந்து சேரும்.

 

     பொருட்செல்வம் அழிந்து போகும். உடம்பை விட்டுஉயிர் போகும்போது கூட வராது. கல்விச் செல்வம் என்றும் அழியாது. உயிரோடு கூடவே வந்துகொண்டு இருக்கும் என்பதால்,

 

"ஒருமைக்கண் தான்கற்ற கல்விஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து"

 

என்றார் திருவள்ளுவ தேவநாயனார். அதுவேஅழியாதமேன்மையான செல்வம் ஆகும். செல்வம் என்று கருதி இருக்கும் மற்றவை எல்லாம்உண்மையில் செல்வம் அல்ல என்பதால்,

 

கேடுஇல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு,

மாடு அல்ல மற்றை அவை.    

 

     ஒருவனுக்கு இழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி,  அது ஒழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வம் அல்ல.

 

 

     எனவே, "கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி"என்றார் ஔவைப் பிராட்டியார்."கையில் இருக்கிற (பொய்ப்)பொருளைப் பார்க்கிலும்மெய்ப்பொருளாவதுகல்வியே ஆகும். அந்த மெய்ப்பொருள் ஆகிய கல்வி அறிவே உயிருக்கு உற்ற துணையாஎல்லாப் பிறிவியிலும் உதவுவது என்கின்றார் குமரகுருபர அடிகள்.

 

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல்இசையும் நாட்டும் - உறுங்கவல்ஒன்று

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை.    --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் --- ஒழுக்கமும் செல்வமும் இன்பமும் என்னும் மூன்றையும் வீடுபேற்றையும் கொடுக்கும்புறங்கடை நல்இசையும் நாட்டும் --- உலகத்தில் குற்றமற்ற புகழையும் நிலைநிறுத்தும்உறும் கவல் ஒன்று உற்றுழியும் கை கொடுக்கும் --- நேரக் கூடிய வருத்தம் ஒன்று நேர்ந்த பொழுதும் கைகொடுத்து உதவி செய்யும்சிறு உயிர்க்கு உற்றதுணை கல்வியின் ஊங்கு இல்லை --- ஆதலால் சிறிய உயிர்களாகிய மக்கட்குத் தக்க துணை கல்வியை விடப் பிறிதில்லை.

 

     பொருட்செல்வமானது ஒருவனுடைய அறிவை மயக்கும். அறிவுச் செல்வமானது ஒருவனுடைய அறிவு விளங்கச் செய்யும். கல்வியே அறிவு மயக்கத்தைத் தீர்க்கின்ற மருந்து ஆகும் என்கின்றது நாலடியார்.

 

இம்மை பயக்குமால்,ஈயக் குறைவு இன்றால்,

தம்மை விளக்குமால்,தாம் உளராக் கேடு இன்றால்,

எம்மை உலகத்தும் யாம் காணேம்,கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.       --- நாலடியார்.

 

     நல்வாழ்க்கையாகிய இம்மைப் பயனை கல்வியே விளைவிக்கும்பிறர்க்குச் சொல்லிக் கொடுப்பதால் அது குறைவுபடுதல் இல்லைஅது கற்றவர் தம்மை அறிவாலும் புகழாலும் விளங்கச் செய்யும்.அது இருப்பதால் கெடுதல் இல்லை. ஆதலால்எந்த உலகத்தில் பிறந்தாலும்கல்வி போல் அறியாமை மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தைக் காணமுடியாது.

 

     எனவேமனத் தடுமாற்றத்தைத் தீர்க்க உதவும் நல்ல நூல்களைத் தேடிப் படித்து நலம் பெறுதல் வேண்டும். "கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்" என்று ஒரு வழக்குச் சொல் உள்ளது. அது வழுக்குச் சொல் அல்ல. நல்ல அறிவு நூல்கள் எவை என்று கண்டுஅவற்றைக் கற்றுத் தெளிந்தால்நல்லறிவு உடையவனாகலாம். "கண்டுஅத்தைப் படித்தால்பண்டிதன் ஆகலாம்". அட்டைப் பகட்டுடன் வெளிவந்துஅறிவை மயக்கும் நூல்களைப் படித்தால் அறிவு விளங்காது. நிறைய நூல்களைப் படித்தோம் என்னும் பகட்டு மட்டுமே உண்டாகும். அது பயன் தராது.

 

            Good friends, good books and a sleepy conscience: this is the ideal life.--- Mark Twain

     நல்ல நண்பர்கள்நல்ல நூல்கள், அமைதியான மனசாட்சி. இவையே சிறந்த வாழ்வுக்குத் துணை புரிவன.

 

     நல்ல நண்பர்களைத் தேர்வது அரிது. சில நேரங்களில் எண்ணியதற்கு மாறாக அமையலாம். ஆனால்நல்ல நூல்களைத் தேர்ந்து கொள்ளலாம். அவை என்றுமே நமக்கு நல்வழியைக் காட்டுவன. நல்ல நூல்களைத் தேர்ந்து பயின்றுகேடில்லாதசிறந்த அறிவுச் செல்வத்தைப் பெற்றுசிறக்க வாழ்ந்துபோகும்போது உடன்கொண்டு செல்வோம்.

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...