கல்வியின் சிறப்பு

                                                                   கல்வியின் சிறப்பு

-----

 

     உடலுக்குக் கண் போல், உயிருக்குக் கல்வி அமைந்து உள்ளது.  கண்ணில்லாதவன் வாழமுடியாது. கல்வி அறிவு இல்லாதவன் வாழ்வில் உயர்வு பெறமுடியாது.

 

     இறந்த காலம் என்னும் பெரிய திரையால் மறைந்து போய் உள்ள எத்தனையோ புலவர்களையும் அருளாளர்களையும், அவர்களது படைப்புகளையும், அவர்களது அருளாற்றல்களையும், இருந்த இடத்தில் இருந்துகொண்டே, கல்வி என்னும் கண்ணால் நாம் கண்டு களித்து வருகின்றோம். கால தேச நிலைகளைக் கடந்துள்ள பரம்பொருளையும் அனுமான அளவைகளால் வரம்பு செய்து அருளாளர்கள் அருளிய நூல்களின் வழி,உள்ளத்தால் கண்டு களித்து வருகின்றோம். எனவே, கல்வியானது "ஞானக்கண்" எனப்படுகின்றது.

 

     மனித வடிவில் இருந்தாலும், சிறந்த கல்வி அறிவு உடையவன், சிறந்த தெய்வீக நிலையில் உயர்கின்றான். கற்பதன் மூலம் அகம் (உள்ளம்) கற்பகக் கனியாகின்றது. கல்வியின் சிறப்பால் உண்மை அறிவைப் பெற்றோர்க்கு இறைவன் கனி போன்று விளங்குவதால், "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி" என்று பாடினார் சேந்தனார் என்னும் அருளாளர். "கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி" என்றார் அப்பர் பெருமான். இறைவன் வாலறிவன் என்பதால், அவன் நூலறிவு விளங்குபவரோடு தொடர்பு உள்ளவன் ஆகின்றான். "கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்" என்றார் திருஞானசம்பந்தர். "கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     கற்ற அறிவாளருக்கு, முகத்தில் உள்ள ஊனக்கண் அல்லாமல், உள்ளத்திலும் ஒரு ஞானக்கண் உண்டு. அந்தக் கண்ணே சிறப்புடையது என்பதால், "கண் உடையவர் என்போர் கற்றோர், முகத்து இரண்டு புண் உடையவர் கல்லாதவர்" என்றார் திருவள்ளுவ நாயனார். இதையே, வேறு விதமாக,"கற்றறிவாளர் கருத்தில் ஓர் கண் உண்டு" என்றார் திருமூல நாயனார். கருத்தில் விளங்குகின்ற கண்ணே "ஞானக்கண்" எனப்பட்டது.

 

     உண்மை அறிவு விளக்கம் பெறுகின்ற தூய கல்வி அறிவை, ஒருவன் வாழ்நாள் முழுவதும் பெறாமலேயே கழித்து விடுதல் கூடாது. கற்றது போதும் என்று நிற்கவும் கூடாது. சாகும் வரை கல்வி கற்காமல் இருப்பதும் கூடாது. சாகும் வரையிலும் தொடர்ந்து கற்று வராமல், இடையில் நிறுத்துவதும் கூடாது. 

 

      "கற்றவனுக்குத் தனது நாடும்,தனது ஊருமே அல்லாமல்,எந்த நாடும்,எந்த ஊரும், தனது நாடும்ஊரும் போன்றவையே ஆகும். அப்படி இருக்கஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாமல் வாழ்நாளைக் கழிக்கின்றது என்ன நினைந்து?" என்று வினவுகின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     சாகும் வரையிலும் கூகல்வியை ஒருவன் பயிலாது இருப்பது பெருமைக்கு உரியது அல்ல. கல்வி கரை இல்லாதது என்றதால்கல்வி கற்கத் தொடங்கிய ஒருவன், இது போதும் என்று அமையாதுதனது வாழ்நாள் இறுதி வரையிலும் கற்றலை விடாது மேற்கொள்ளவேண்டும்.

 

"யாதானும் நாடு ஆமால், ஊர் ஆமால்என் ஒருவன்

சாம்துணையும் கல்லாத வாறு".

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     அதியமான் நெடுமான் அஞ்சி, கொங்கு நாட்டில் தருமபுரி எனப்படும் தகடூரிலிருந்து ஆட்சிபுரிந்து வருகையில்அவனது கொடைப் புகழ் தமிழகம் எங்கும் பரவி இருந்தது. கடலை நோக்கிச் செல்லும் ஆறுகள் போலப் புலவரும் பாணரும் பொருநரும் கூத்தருமாகிய பரிசிலர் பலரும் அவனை நாடி வந்து பரிசில் பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர். அக்காலத்தே புகழ் மிக்கவராக விளங்கிய ஔவைப் பிராட்டியார், இவனது புகழைக் கேள்வியுற்று, தகடூருக்குச் செல்கின்றார். அவரது பெருமையைக் கேள்வியுற்ற,அதியமான், ஒளவையார் தன்னோடு சிலநாள்கள் இருக்கவேண்டும் என்னும் அவா உற்றான். அவரைத் தவிர வந்தவர் யாவர்க்கும் பரிசுகளைக் கொடுத்து அனுப்பிவிட்டான்.  அதியமான் கருத்தினை அறியாத ஒளவையார், அவன் பரிசில் கொடாமல் நீட்டிப்பது குறித்து கவலை உற்றார். ஒரு நாள் அவனைக் கண்டு, தமது கருத்தை அறிவித்துவிட்டு விடைபெற நினைத்தார். ஆனால் அவனைக் காண்பது அரிதாக இருந்தது.  அவனைக் காண முயலும்போது எல்லாம், வாயில் காவலர்களின் அன்பான சொற்களால், ஔவையாரின் கருத்து முற்றுப் பெறாதவண்ணம் ஆனது. மனம் உடைந்த ஒளவையார்,வாயில் காவலரை நோக்கி சில சொற்களைச் சொன்னார். அது ஒரு பாடலாக ஆனது.

                                                                                    

"கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

தன் அறியலன் கொல்,என் அறியலன் கொல்,

அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,

வறுந்தலை உலகமும் அன்றே,அதனால்

காவினெம் கலனே,சுருக்கினெம் கலப்பை,

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே,

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே".   --- புறநானூறு.

 

இதன் பொருள் ---

 

     விரைந்து செல்லும் குதிரைகளை உடைய குரிசில் ஆகிய நெடுமான் அஞ்சிதனது தகுதியை அறியாதவனா?இல்லைஎனது தரத்தை உணராதவனா?அறிவும் புகழும் உடையவர்கள் இறந்து போனதால்இவ்வுலகம் வறுமையுற்றுப் போகவில்லை. எனவேநாங்கள் இசைக் கருவிகளை எடுத்துக் கொண்டுமூட்டை முடிச்சுகளோடு வெளியேறுகின்றோம். மரங்களை அழித்துப் பல பொருட்களைச் செய்யும் தச்சு வேலை செய்பவன், தான் பெற்ற பிள்ளைகளுக்குகாட்டுக்குள் சென்றால் வெட்டிவேலை செய்வதற்கு மரங்கள் கிடைக்காமல் போகாது. அது போலஎங்களுக்கும் எந்தத் திசையில்எந்த ஊருக்குஎந்த நாட்டுக்குச் சென்றாலும் சோறு கிடைக்காமல் போகாது.

 

     இதற்குப் பின்புதான், அதியமான்ஒளவைக்கு நெல்லிக்கனி தந்தது முதலானவை நிகழ்ந்தன.

 

      "அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்" என்பது வெற்றிவேற்கைஆதலால் அறிவு உடைய ஒருவன், தான் செல்லுகின்ற இடந்தோறும் ஆங்காங்கே உள்ளோர்களால் வரவேற்கப்பட்டு வேண்டிய நலனை அடைவான். ஆதலால்,  அவனுக்கு வழி நடைக்குக் கட்டுச்சோறு வேண்டுவது இல்லை. 

 

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்,அஃது உடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை --- அந்நாடு

வேற்று நாடு ஆகா,தமவே ஆம்,ஆயினால்

ஆற்று உணா வேண்டுவது இல்.   --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் ஆவார்கள். அத்தகைய அறிவினை உடையவர்களது புகழானது சென்று பரவாதே நாடே இல்லை ஆகும். கற்றவர்களுக்கு அந்த நாடுகள் வேற்று நாடு ஆவதும் இல்லை. எல்லா நாடுகளும் அவர்க்குச் சொந்த நாடே ஆகும். எனவே, அவரகள் செல்லும் வழிக்குக் கட்டுச் சோறு வேண்டியது இல்லை.

         

     செல்வ வளத்தாலும், அதிகார பலத்தாலும், படை பலத்தாலும் மிகுந்து உள்ள அரசனைக் காட்டிலும், மனமாசு அறும்படியாகக் கற்றோரே சிறப்பு உடையவர்கள். காரணம், மன்னன் ஒருவனுக்குத் தனது நாட்டை விட்டுச் சென்றால் சிறப்பு இல்லை. அந்த நாட்டில் போய், "நான் யார் தெரியுமா?" என்று மார்தட்ட முடியாது. ஆனால், கற்றறிந்த புலவருக்கோ, அவர் செல்லுகின்ற நாடுகளில் எல்லாம் சிறப்பு உண்டாகும் என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.

 

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர்தூக்கின்,

மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் --- மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை,கற்றோற்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு.    ---  மூதுரை.

 

     இத்தகு சிறப்பு வாய்ந்த கல்வியே உயிருக்கு உற்ற துணையாக அமையும். வேறு துணை ஏதும் இல்லை என்கின்றார் குமரகுருபர அடிகள்.

 

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல்இசையும் நாட்டும் - உறுங்கவல்ஒன்று

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை.       --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     அறமும் செல்வமும் இன்பமும் என்னும் மூன்று உறுதிப் பொருள்களையும், அவற்றுடன் வீடுபேற்றையும் கல்வியே கொடுக்கும். அது, உலகத்தில் குற்றமற்ற புகழையும் நிலைநிறுத்தும். கவலை ஒன்று நேர்ந்த பொழுதும் கைகொடுத்து உதவி செய்யும். ஆதலால் சிறிய உயிர்களாகிய மக்களுகுத் தக்க துணை கல்வியை விட வேறு ஒன்று இல்லை.

 

     எனவே, "கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்" என்று திருஞானசம்பந்தரும், "கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள், கற்றார்கள் உற்று ஓரும் காதலான்" என்று அப்பர் பெருமானும் அருளியதை உணர்ந்து, இறைகல்வியைக் கற்று, இறைவனடியை அடைய முயல்வதே உயிருக்குச் சிறப்பைத் தரும். "கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     "கடவுள் நாமமே கற்றல் நல் தவமே" என்றார் திருஞானசம்பந்தர். "நாமம்" என்பது புகழைக் குறிக்கும். அது இறைவன் பொருள்சேர் புகழ் ஆகும். இறைவன் புகழைக் கற்பதே தவம் ஆகும். கல்வியின் பயன் அதுவே என்பாதல்,

 

"கற்றதனால் ஆய பயன் என்கொல்? வால்அறிவன்

நல்தாள் தொழாஅர் எனின்."

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...