அவிநாசி --- 0953. மனத்து இரைந்து


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

மனத்து இரைந்து எழும் (அவிநாசி)

 

முருகா! 

இயம தூதர் வருமுன் அடியேனை ஆட்கொண்டு

தமிழால் உம்மைப் பாட அருளி

உயிர்த்துணையாக என்னுள் கலந்து இருந்து அருள் புரிவீர்.

 

 

தனத்த தந்தன தானன தானன

     தனத்த தந்தன தானன தானன

     தனத்த தந்தன தானன தானன ...... தனதான

 

 

மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட

     கறுத்த குஞ்சியு மேநரை யாயிட

     மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை ...... தடுமாறி

 

வருத்த முந்தர தாய்மனை யாள்மக

     வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்

     வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின ...... நகையாட

 

எனைக்க டந்திடு பாசமு மேகொடு

     சினத்து வந்தெதிர் சூலமு மேகையி

     லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய ...... முறவேதான்

 

இழுக்க வந்திடு தூதர்க ளானவர்

     பிடிக்கு முன்புன தாள்மல ராகிய

     இணைப்ப தந்தர வேமயில் மீதினில் ...... வரவேணும்

 

கனத்த செந்தமி ழால்நினை யேதின

     நினைக்க வுந்தரு வாயுன தாரருள்

     கருத்தி ருந்துறை வாயென தாருயிர் ...... துணையாகக்

 

கடற்ச லந்தனி லேயொளி சூரனை

     யுடற்ப குந்திரு கூறென வேயது

     கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் ...... விடும்வேலா

 

அனத்த னுங்கம லாலய மீதுறை

     திருக்க லந்திடு மாலடி நேடிய

     அரற்க ரும்பொருள் தானுரை கூறிய ...... குமரேசா

 

அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்

     நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி

     யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

மனத்து இரைந்து எழும் ஈளையும் மேலிட,

     கறுத்த குஞ்சியுமே நரை ஆயிட,

     மலர்க்கண் அண்டு இருள் ஆகியுமே,நடை ...... தடுமாறி,

 

வருத்தமும் தரதாய் மனையாள்மகவு

     வெறுத்திட,அம்கிளையோருடன் யாவரும்

     வசைக்கு உறும் சொலினால் மிகவே தினம் ...... நகையாட,

 

எனைக் கடந்திடு பாசமுமே கொடு,

     சினத்து வந்துஎதிர் சூலமுமே கையில்

     எடுத்துஎறிந்துஅழல் வாய்விடவேபயம் ...... உறவேதான்,

 

இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர்

     பிடிக்கு முன்பு,உன தாள்மலர் ஆகிய

     இணைப் பதம் தரவேமயில் மீதினில் ...... வரவேணும்.

 

கனத்த செந்தமிழால் நினையே தினம்

     நினைக்கவும் தருவாய்உனது ஆர்அருள்

     கருத்து இருந்து உறைவாய்எனது ஆர்உயிர்...... துணையாக,

 

கடல் சலம் தனிலே ஒளி சூரனை

     உடல் பகுந்துஇரு கூறு எனவேஅது

     கதித்து எழுந்துஒரு சேவலும் மாமயில் ...... விடும்வேலா!

 

அனத்தனும் கமல ஆலயம் மீதுஉறை

     திருக்கலந்திடு மால் அடி நேடிய

     அரற்குஅரும்பொருள் தான் உரை கூறிய ...... குமரேசா!

 

அறத்தையும் தருவோர் கன பூசுரர்

     நினைத்தினம் தொழுவார் அமர்ஆய் புரி

     அருள் செறிந்துஅவிநாசியுள் மேவிய ...... பெருமாளே!

 

பதவுரை

 

            கடல் சலம் தனிலே ஒளி சூரனை--- கடல் நீரிலே ஒளிந்து இருந்சூரபன்மனை

 

            உடல் பகுந்து இரு கூறு எனவே--- இரு கூறாகும்படி அவனது உடலைப் பிளந்து

 

     அது கதித்து எழுந்து--- அந்த இரு பிளவுகள் வேகமாக எழுந்து,

 

            ஒரு சேவலும் மாமயில் விடும் வேலா--- ஒப்பற்ற சேவலும்பெருமை தங்கிய மயிலும் ஆக வர வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

 

            அனத்தனும்--- அன்னத்தை வாகனமாக உள்ள பிரமதேவனும் 

 

            கமலாலயம் மீது உறை திருக் கலந்திடும் மால் அடி நேடிய--- தாமரை மலர் ஆகிய கோயிலில் வாழும் இலக்குமிதேவி மருவும் திருமாலும்(முடியையும்) திருவடியையும் தேடிய

 

            அரற்கு அரும் பொருள் தான் உரை கூறிய குமர ஈசா--- சிவபெருமானுக்கு ஓம் என்னும் தனிமொழியின் மெய்ப்பொருளை உபதேசித்து அருளிய குமாரக் கடவுளாகிய தலைவரே!

 

            அறத்தையும் தருவோர் கன பூசுரர்--- அருளைத் தருவதோடு அற நெறியையும் தருகின்றவர்களாகிய தருமசீலர்களும்பெருமை தங்கிய அந்தணாளர்களும்,

 

            நினைத் தினம் தொழுவார் அமர் புரி--- தேவரீரை நாள் தோறும் தொழுபவர்களாகிய அடியார்களும் விரும்பி வாழ்கின்ற அமர்ந்திருத்தலை விரும்பியுள்ள   

 

             ஆய் அருள் செறிந்து--- தாய் செய்கின்ற அருளினும் மிகுந்த அருளுடன் 

 

            அவிநாசியுள் மேவிய பெருமாளே--- அவிநாசி என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

 

            மனத்து இரைந்து எழும் ஈளையும் மேலிட--- நெஞ்சிலே இரைச்சலுடன் எழுகின்ற கோழையானது மிகுதி ஆகவும்,

 

            கறுத்த குஞ்சியுமே நரையாய் இட--- கருமை நிறம் பொருந்திய சிகைமயிரும் வெளுத்துப் போகவும்,

 

            மலர்க் கண் அண்டு இருளாகியுமே--- தாமரை போன்ற கண்கள் நெருங்கிய இருளை அடைந்து பார்வை ஒழிந்தும்

 

            நடை தடுமாறி--- அதனால் நடை தடுமாற்றத்தை அடைந்து,

 

            வருத்தமும் தர--- துன்பத்தைத் தரவும்,

 

            தாய் மனையாள் மகவு வெறுத்திட-- தாயார்மனைவிமக்கள் ஆகியோர்வெறுப்புக் கொள்ள 

 

           அம் கிளையோருடன் யாவரும்--- நல்ல சுற்றத்தார் அவருடன் மற்றெல்லாரும்

 

            வசைக்கு உறும் சொல்லினால்--- வசைக்கு உரிய ஏளனமான சொற்களினால் பரிகசித்து,

 

            மிகவே தினம் நகையாட--- நாள்தோறும் மிகவும் சிரிக்கவும்,

 

            எனைக் கடந்திடு பாசமுமே கொ(ண்)டு--- என்னை அழிக்கின்றதாகிய பாசத்தையும் ஏந்திக் கொண்டு,

 

            சினத்து வந்து எதிர்--- கோபத்துடன் வந்து எதிர்த்து,

 

            சூலமுமே கையில் எடுத்து எறிந்து--- திரிசூலத்தைக் கையில் எடுத்து அதை என் மேல் வீசி,

 

            அழல் வாய் விடவே ---நெருப்பை வாயில் கக்கிக் கொண்டு,

 

            பயம் உறவே தான்--- அடியேன் மிகவும் பயம் கொள்ளும்படி

 

            இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர்--- உயிரைப் பற்றி இழுக்க வருகின்ற இயம தூதுவர்கள்

 

            பிடிக்கு முன்பு--- என்னைப் பிடித்துக் கொண்டு போகும் முன்பாக,

 

            உன தாள் மலராகிய--- தேவரீருடைய திருவடித் தாமரையாகிய

 

            இணைப் பதம் தரவே--- இரு சரணங்களையும் அடியேனுக்குத் தந்து காப்பாற்றும் பொருட்டு 

 

            மயில் மீதினில் வரவேணும்--- மயில் வாகனத்தின் மீது வந்தருள வேண்டும். (அங்ஙனம் வந்து)

 

            கனத்த செம் தமிழால்--- சிறந்த செந்தமிழ் மொழியால் 

 

     நினையே தினம் நினைக்கவும் தருவாய் உனது ஆர் அருள்--- தேவரீரையே தினந்தோறும் பாடுவதோடு நினைக்குமாரும் அருள் புரிவீர்.

 

            எனது ஆருயிர் துணையாக--- என்னுடைய அருமையான உயிருக்கு உறுதுணையாக 

 

     கருத்து இருந்து உறைவாய்--- என் கருத்திலேயே பொருந்தி வீற்றிருந்து அருள் தருவீராக.

 

பொழிப்புரை

 

            கடல் நீரிலே பெருமரமாக ஒளிந்து கொண்ட சூரபன்மனை இரு கூறாகும்படி அவனது உடலைப் பிளந்து,அப் பிளவுகள் வேகமாக எழுந்துஒப்பற்ற சேவலும்பெருமை தங்கிய மயிலும் ஆக வர வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

 

            அன்னத்தை வாகனமாக உள்ள பிரமதேவனும் தாமரை மலராகிய கோயிலில் வாழும் இலக்குமி தேவி மருவும் திருமாலும்முடியையும் திருவடியையும் தேடிய சிவபெருமானுக்கு "ஓம்" என்னும் தனிமொழியின் மெய்ப்பொருளை உபதேசித்து அருளிய குமாரக் கடவுளாகிய தலைவரே!

 

            அருளைத் தருவதோடு அற நெறியையும் தருகின்றவர்களாகிய தருமசீலர்களும்பெருமை தங்கிய அந்தணாளர்களும்தேவரீரை நாள் தோறும் தொழுபவர்களாகிய அடியார்களும் விரும்பி வாழ்கின்ற அமர்ந்திருத்தலை விரும்பியுள்ளதாய் செய்கின்ற அருளினும் மிகுந்த அருளுடன் அவிநாசி என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

 

            நெஞ்சிலே இரைச்சலுடன் எழுகின்ற கோழையானது மிகுதி ஆகவும்,கருமை நிறம் பொருந்திய தலைமயிரும் வெளுத்துப் போகவும்தாமரை போன்ற கண்கள் நெருங்கிய இருளை அடைந்து பார்வை ஒழிந்தும்அதனால் நடை தடுமாற்றத்தை அடைந்துதுன்பத்தைத் தரவும்தாயார்மனைவிமக்கள் ஆகியோர்வெறுப்புக் கொள்ளும் நல்ல சுற்றத்தார் அவருடன் மற்றெல்லாரும் வசைக்கு உரிய ஏளனமான சொற்களினால் பரிகசித்துநாள்தோறும் மிகவும் சிரிக்கவும்என்னை அழிக்கின்றதாகிய பாசத்தையும் ஏந்திக் கொண்டுகோபத்துடன் வந்து எதிர்த்துதிரிசூலத்தைக் கையில் எடுத்து அதை என் மேல் வீசிநெருப்பை வாயில் கக்கிக் கொண்டுஅடியேன் மிகவும் பயம் கொள்ளும்படி உயிரைப் பற்றி இழுக்க வருகின்ற இயம தூதுவர்கள் என்னைப் பிடித்துக் கொண்டு போகும் முன்பாகதேவரீருடைய திருவடித் தாமரையாகிய இரு சரணங்களையும் அடியேனுக்குத் தந்து காப்பாற்றும் பொருட்டு மயில் வாகனத்தின் மீது வந்தருள வேண்டும். அங்ஙனம் வந்து, சிறந்த செந்தமிழ் மொழியால் தேவரீரையே தினந்தோறும் பாடுவதோடு, நினைக்குமாறும் அருள் புரிவீர். என்னுடைய அருமையான உயிருக்கு உறுதுணையாக என் கருத்திலேயே பொருந்தி வீற்றிருந்து அருள் தருவீராக.

 

விரிவுரை

 

இந்தத்திருப்புகழ் அவிநாசித் தலத்தில் உள்ள முருகவேள் மீது மிகமிக இனிய செஞ்சொற்களைத் தொடுத்துப் பாடப்பெற்றது. இது நாள்தோறும் பாராயணம் செய்தற்கு உரியது. அவிநாசி முதலைவாய்ப் பட்டு இறந்த மதலைக்கு, சுந்தரமூர்த்தி சுவாமிகள் உயிர் கொடுத்த திருத்தலம். அங்கு எழுந்தருளியுள்ள ஆண்டவனை சுவாமிகள் உயிருக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று வேண்டுகின்றனர்.

 

திருப்புகழ் ஓதுவோர்விநாயகர் திருப்புகழ் பாடிய பின்இத் திருப்புகழை ஓதுவது ஆன்றோர் வழக்கு. அதற்குரிய காரணம்கனத்த செந்தமிழால் நினையே தினம் நினைக்கவும் தருவாய் என்று இதில் அடிகளார் விண்ணப்பம் புரிவதே. இந்தப் பாடலில் இன்னும் பலப்பல உயர்ந்த கருத்துக்கள் அடங்கிக் கிடக்கின்றன. இறைவனை வரவேணும் என்று அழைக்கின்றனர். ஆதலினால்முறையே திருப்புகழைப் பாராயணம் செய்வோர், "கைத்தல நிறைகனி" என்ற விநாயகர் திருப்புகழை ஓதிய பின், "மனத்திரைந்தெழு" என்ற இத் திருப்புகழை ஓதுவது சிறப்பு.

 

மனத்திரைந்தெழும் ஈளையும் மேலிட---

 

மனம் --- நினைக்கும் கருவி. அது அந்தக் கரணங்களில் ஒன்று. அதுவே பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாக நின்று அநுகூலமும் இடரும் விளைப்பது. அது தங்குதற்கு உரிய இடம் நெஞ்சு.  ஆதலினால்இடவாகுபெயராகநெஞ்சை மனம் என்கின்றார். மனத்தை நெஞ்சு என்பதும் உண்டு.

 

நெஞ்சே நீ நினையாய்...                    ---  அப்பரடிகள்.

 

முதுமைப் பருவத்திலே நெஞ்சில் கோழை அதிகமாகி பெரும் சத்தத்துடன், ஈளை என்ற நோய் உண்டாகும்.

 

பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்

பீளை சாறிட ஈளை மேலிட...

 

என்பார் திருவிடைமருதூர் திருப்புகழில்.

 

கறுத்த குஞ்சியுமே நரை ஆயிட ---

 

இளமையில் கருத்து இருந்த தலைமயிர் முதுமையில் பஞ்சுபோல் நரைத்து வெண்மை ஆகிவிடும். இந்த நரையை உடையவன் மனிதன்.  ஆதலால்அவன் "நரன்" என்ற நாமத்தை உடையவன் ஆயினான். மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கைபன்றியானைகரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்குதல் வேண்டும்.

 

சிலர் நரைக்கத் தொடங்கியவுடன் வருந்தவும் செய்கின்றனர். சிலர் வெட்கப்படுகின்றனர். "வயது என்ன எனக்கு முப்பது தானே ஆகின்றது?  இதற்குள் நரைத்து விட்டதேதேன் பட்டுவிட்டது போலும்" "பித்த நரை" என்பார். எல்லாம் இறைவனுடைய திருவருள் ஆணையால் நிகழ்கின்றன.  

 

"அவனன்றி ஓரணுவும் அசையாது", "அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது",  "எண்ணரிய பிறவி தனில் மானுடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது" என்ற ஆன்றோர்களது திருவாக்குகளின்படிஉயர்ந்த பிறவியாகிய இம் மனிதப் பிறவிக்கு நரையை ஏன் ஆண்டவன் தந்தான்?  மற்ற உயிர்களுக்கு உள்ளதுபோல் மனிதனுக்கும் மரண பரியந்தம் மயிர் கருமையாக இருக்கும்படி ஏன் அமைக்கக் கூடாதுஅதனால் ஆண்டவனுக்கு அருமையும் நட்டமும் இராவேசிலர் வெளுத்த மயிரைக் கருக்க வைக்கப் பெரிதும் முயல்கின்றனர். அதற்காகவும் தமது அரிய நேரத்தைச் செலவழிக்கின்றனர். அன்பர்கட்கு இது நன்கு சிந்தித்து உய்வதற்குரிய சிந்தனையாகும்.

 

மனிதனைத் தவிர ஏனைய பிறப்புக்கள் எல்லாம் பகுத்தறிவு இன்றி உண்டு உறங்கி வினைகளைத் துய்த்துக் கழிப்பதற்கு மட்டும் உரியனவாம். மனிதப் பிறவி அதுபோன்றது அன்று. எத்தனையோ காலம் அரிதின் முயன்று ஈட்டிய பெரும் புண்ணியத்தால் இப் பிறவி கிடைத்தது.

 

பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும்

பெறுதற்கரிய பிரான்அடி பேணார்

 

என்பார் திருமூலர்.

 

இத்தகைய அருமையினும் அருமையாகிய பிறவியைப் பெற்றுபிறவியின் பயனாகிய பிறவாமையைப் பெறுதற்குரிய சாதனங்களை மறந்து,அவநெறி புக்கு அலைந்து உழலாவண்ணம்இவ் உடம்பு ஒரு படித்தாக இராது என்றும்முதுமையும் மரணமும் விரைந்து நெருங்கி வந்துகொண்டு இருக்கின்றன என்றும் நினைவு கூர்தல் பொருட்டு இறைவன் நமக்கு நரையைத் தந்து இருக்கின்றான். நரை ஒரு பெரிய பரோபகாரமான சின்னமாகும். நரைக்கத் தொடங்கியதில் இருந்தாவது மனிதன் தன்னை மாற்றி அமைக்கவேண்டும். மனிதனுடைய வாழ்க்கை மாறுதல் அடைந்துசன்மார்க்க நெறியில் நிற்கவேண்டும். அல்லது இளமையில் இருந்தே சன்மார்க்க நெறியில் நிற்போர் நரைக்கத் தொடங்கிய பின் அதில் உறைத்து திட்பமாக நிற்க வேண்டும். "ஐயனே நரை வந்து விட்டதேஇனி விரைந்து முதுமையும் மரணமும் வருமேகூற்றுவன் பாசக் கயிறும் வருமேஇதுகாறும் என் ஆவி ஈடேற்றத்திற்குரிய சிந்தனையை ஏழையேன் செய்தேனில்லை. இதுகாறும் உன்னை அடையும் நெறியை அறிந்தேனில்லை. இனியாவது அதில் தலைப்படுவேன். என்னைத் திருவருளால் ஆண்டு அருள்வாய்" என்று துதிக்க வேண்டும்.

 

நரை வந்தும் நல்லுணர்வு இன்றி அலையும் மனிதர் மிகவும் கீழ்மக்கள் ஆவர். இதுபற்றிசங்க காலத்துப் புலவராகிய நரிவெரூஉத்தலையார் கூறுகின்றார்.

 

பல்சான் றீரே! பல்சான் றீரே!

கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்

பயனில் மூப்பில் பல்சான் றீரே!

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ?

நல்லது செய்தலு ஆற்றீர் ஆயினும்,

அல்லது செய்தலு ஓம்புமின்,அதுதான்

எல்லாரும் உவப்பதுன்றியும்

நல்லாற்றுப் படூஉ நெறியும் ஆர்அதுவே.     ---  புறநானூறு.

 

இதன் கருத்து

 

மீனின் முள்ளைப் போல நரைத்து திரைத்த தாடையுடன் கூடி ஒரு பயனும் இல்லாமல் மூத்துக் கிடக்கும் பலராகிய மூத்தோர்களே. மழுவைத் தாங்கிய கூற்றுவன் இன் விரைவில் வருவான். அப்போது நீங்கள் வருந்துவீர்கள். நல்லது செய்தல் இனி உங்கள் தளர்ந்த வயதில் முடியாமல் இருக்கலாம்.ஆயினும் நல்லது அல்லாததாவது செய்யாமல் இருக்க முயலுங்கள். அதுதான் இனி எல்லோரும் மகிழக் கூடியது. அந்தப் பழக்கம் ஒருகால் உங்களை நல்லது செய்யும் நன்னெறியில் விட்டாலும் விடும்.

 

கருமை நிறம் தாமதகுணம். வெண்மை நிறம் சத்துவ குணம். வயது ஏற ஏற சத்துவகுணம் அடைய வேண்டும் என்ற குறிப்பை உணர்த்தவும் இறைவன் நமக்கு நரையைத் தந்து அருளினன். நன்கு சிந்தியுங்கள். ஒரே நாளில் திடீர் என்று எல்லா மயிர்களும் ஒன்றாக நரைத்து விடுவது இல்லை. ஒவ்வொன்றாக நரைக்கின்றது.  அங்ஙனம் நரைக்கும் தோறும் நல்லுணர்வு பெறவேண்டும். ஒவ்வொரு மயிர் நரைக்கும்தோறும் நம்மிடம் உள்ள ஒவ்வொரு தீக்குணத்தையும் விடவேண்டும்.

 

"நத்துப் புரை முடியீர் நல்லுணர்வு சற்றுமிலீர்" 

எத்துக்கு மூத்தீர்? இழி குலத்தேன் தன்னை வெஃகிப்

பித்துக் கொண்டார் போல் பிதற்றுவீர், இவ் வேடர்

கொத்துக் கொல் ஆம் ஓர் கொடும் பழியைச் செய்தீரே.     

 

என்று கிழவடிவில் வந்து தன்னை விரும்பிய முருகவேளைக் குறித்துவள்ளியம்மையார் கூறினார்.

 

இவற்றை எல்லாம் நுனித்துணர சுவாமிகள்"கருத்த குஞ்சியுமே நரை ஆயிட" என்று அருளிச் செய்தனர்.

 

மலர்க்கண் அண்டு இருளாகி---

 

இளமையில் கண் ஒளி கூர்மையாக விளங்கி நன்கு பார்க்கும் தொழிலைச் செய்யும். முதுமை எய்தியபின்ஒளி குறைந்து இருண்டுவிடும். அதற்குள் இறைவனது தண்ணருளைப் பெறுதல் வேண்டும்.

 

நடை தடுமாறி வருத்தமும் தர---

 

நன்றாக இளமையில் வீதிகளில் அழகிய நடை நடந்தது போய்,தடி ஊன்றி முதுகு வளைந்து பார்வை குன்றி தடுமாறி நடக்கும் நிலை முதுமையில் வரும்.

 

நடை - ஒழுக்கம். ஆசாரமாக இருந்த நடைகளும் நீங்கிவிடும். அதனால் வருத்தம் ஏற்படும். 

 

தாய் மனையாள் மகவு.............. நகையாட ---

 

இளமையில் விரும்பி அன்பு செய்த தாயும்மனைவியும்மக்களும்சுற்றமும்பிறரும் பல்வகையான வசைச் சொற்களைக் கூறி எள்ளி நகையாடுவார்கள்.

 

"கிழத்திற்கு வெந்நீர் வேணுமாம்கிழக் கட்டைக்கு இன்னும் சுகம் வேண்டுமோஇதன் ஓலை எங்கு கிழிந்து விட்டதோஏன் பூமிக்குப் பாரமாக இது இன்னும் இருக்கின்றதோகிழப் பிணம்" என்றெல்லாம் கூறி இகழ்வர்.

 

"மாதர் சீயெனா வாலர் சீயெனா" என்பார் திருவிடைமருதூர்த் திருப்பகழில்.

 

இந்த இடத்தை நன்றாகச் சிந்தித்துபட்டினத்தடிகள் தம் உடம்பை நோக்கி மிகமிக அழகாகக் கூறுகின்றனர்.

 

தாயாரும் சுற்றமும் பெண்டீரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள்

"நீயாரு?நான்ஆர்?"எனப் பகர்வார்அந்த நேரத்திலே

நோயாரும் வந்து குடிகொள்வரேகொண்ட நோயும்,ஒரு

பாயாரும்,நீயும் அல்லால் பின்னை ஏது நட்பாம் உடலே.

 

நட்புநார் அற்றனநல்லாரும் அஃகினார்,

அற்புத் தளையும் அவிழ்ந்தன, --- உட்காணாய்

வாழ்தலின் ஊதியம் என்உண்டாம்வந்ததே

ஆழ்கலத்து அன்ன கலுழ்.                      ---  நாலடியார்.

 

 

எனைக் கடந்திடு பாசம்---

 

இயமன் உயிர்களைக் கட்டிக்கொண்டு போககையில் பாசக்கயிற்றைத் தாங்கி வருவான். அப் பாசத்தால் பிராணவாயுவாக் கட்டி இழுப்பன். உயிர்களுக்கு அப் பாசத்தால் வரும் நாசம். மரணப் படுக்கையில் உயிர் துடித்துக் கொண்டு இருப்போருக்குக் காசம் ஒருபுறம். மனைவி மக்கள் மீது நேசம் ஒருபுறம். வேலாயுதப் பெருமான் மீது நேசம் வைப்போருக்குப் பாசம் இல்லை.

 

சினத்து வந்து ---

 

நல்ல காரியங்கள் ஒன்றும் செய்யாமையால் இயம தூதுவர்கள் மிகுந்த கோபத்துடன் வந்து துன்புறுத்திப் பற்றுவர்.

 

வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதர் என்று

     மடிபிடி அதாக நின்று ...... தொடர்போது

மயலதுபொ லாத வம்பன் விரகுடையன் ஆகும் என்று

     வசைகளுட னேதொ டர்ந்து ...... அடைவார்கள்...

 

செய்ய வேண்டிய கருமங்களைச் செவ்வையாகச் செய்யாத ஒருவனைத் தலைவனுடைய ஆட்கள் தண்டிப்பது உலக இயற்கை.

 

 

தூதர்கள் பிடிக்கு முன்பு................ மயில்மீதினில் வரவேணும்---

 

"முருகப் பெருமானே!  அடியேன் நல்லவை புரியாது அல்லவை புரிந்து, சிவநெறி விட்டு அவநெறிப் பட்டு உழன்றேன். ஆதலினால்கூற்றுவனுடைய தூதுவர்கள் மிகுந்த சினத்துடன் பற்ற வருவர்.  அங்ஙனம் வரு முன்தேவரீர்உமது திருவடித் தாமரைகளைத் தந்து ஆட்கொள்ளும் பொருட்டு மயில் மீது வருவீராக" என்று சுவாமிகள் வேண்டுகின்றனர். இங்ஙனம் ஒவ்வொரு மனிதனும் வேண்டுதல் அவசியம்.

 

 

கனத்த செந்தமிழ் ---

 

கனம் --- பெருமை.

 

மொழிகளுக்கு எல்லாம் முதன்மை பெற்றுஇனிமையும் இயற்கையும் உடையதாய்அநேக செம்பொருள்களைத் தன்னகத்தே கொண்டதாய்செம்மைப்பண்பு நிறைந்து விளங்குவதாய் உள்ளதால்,கனத்த செந்தமிழ் என்றனர்.

 

கண்ணுடைப் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து

பண்உறத் தெரிந்து ஆய்ந்தஇப் பசுந்தமிழ்,ஏனை

மண்ணிடைப் பிற இலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் இயம்பீர்.

 

இருந்தமிழே உன்னால் இருந்தேன்இமையோர்

விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்.  ---  தமிழ் விடுதூது.

 

அருணகிரிநாதப் பெருமான் அருமையாகத் தெரிவிக்கின்ற செய்தி ஒன்று உண்டு. அது, முருகப் பெருமான் தன்னை யாரும் தமிழ் மொழியால் திட்டினாலும், அவர்களை வாழவைப்போன். திட்டினாலே வாழ வைக்கின்ற பெருமான், தன்னை வாழ்த்தி வந்திப்பவர்களை நிச்சயம் பேரானந்தப் பெருவாழ்வில் வைப்பான் என்று அறிதல் வேண்டும்.

 

மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்

வைதாரையும் அங்கு வாழ வைப்போன், வெய்ய வாரணம்போல்

கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க

எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே.    --- கந்தர் அலங்காரம்.

                                     

"தமிழில் பாடல் கேட்டு அருள் பெருமாளே" என்று அருணகிரிநாதர் பிறிதொரு திருப்புகழில் போற்றி உள்ளார்.

 

முருகப் பெருமான் தமிழ்ப் பாடலில் காதல் புரிபவர். செந்தமிழ்ப் புலவர்கள் அன்பினால் பாடும் அரிய தமிழ்ப் பாடலுக்கு அருள் புரிவர்.

 

நக்கீரர்,  அருணகிரியார்பொய்யாமொழி முதலிய அடியார்களின் பாடல் கேட்டு அருள் புரிந்த அருள் திறத்தை அவர்களது வரலாறுகளால் அறிக.

 

சிவபெருமானும் தமிழ்ப் பாடலில் காதல் உடையவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடலை மிகவும் விரும்பியவர்.

 

மற்று,நீ வன்மை பேசிவன்தொண்டன் என்னும் நாமம்  

பெற்றனைநமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க

அர்ச்சனை பாட்டே ஆகும்;  ஆதலால் மண்மேல் நம்மைச்

சொல்தமிழ் பாடுகஎன்றார் தூமறை பாடும் வாயார். 

 

சொல்ஆர் தமிழ் இசைபாடிய தொண்டன் தனை  ‘இன்னும் 

பல்லாறு உலகினில் நம்புகழ் பாடுஎன்று உறு பரிவின்

நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்

எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான். 

 

என்ற பொழுதில் இறைவர்தாம்

     எதிர்நின்று அருளாது எழும் ஒலியால்

மன்றின் இடை நம் கூத்து ஆடல்

     வந்து வணங்கி வன்தொண்டன்

ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி

     உரைசேர் பதிகம் பாடுதலால்

நின்று கேட்டு வரத் தாழ்த்தோம்

     என்றார் அவரை நினைப்பிப்பார்.

 

என வரும் பெரியபுராணப் பாடல்களையும்அவை சார்ந்த அருள் வரலாறுகளையும் எண்ணி இன்பம் உறுக. 

 

பல இடங்களில் தமிழால் வழிபடும் பேற்றினை அருளுமாறு அடிகளார் முருகப் பெருமானே வேண்டி உள்ளார்.

 

துணைச் செம்பொன் பதத்து இன்புற்று,

     எனக்கு என்று அப் பொருள் தங்கத்

     தொடுக்கும் சொல் தமிழ்த் தந்து இப் ...... படி ஆள்வாய். --- (பருத்தந்த) திருப்புகழ்.

                                 

எனக்குத் தொண்டு உறப்பற்றும்

          புலத்துக் கண் செழிக்கச் செந் ...... தமிழ்பாடும்

புலப் பட்டம் கொடுத்தற்கும்

     கருத்தில் கண்படக் கிட்டும்

          புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம் ...... புரிவாயே.  --- (பெருக்கச்) திருப்புகழ்.

                                 

அம்புவி தனக்குள் வளர் 

     செந்தமிழ் வழுத்தி உனை

     அன்பொடு துதிக்க மனம் .... அருள்வாயே.             --- (ஐங்கரனை) திருப்புகழ்.

                                

இணக்கிப் பத்திமைச் செச்சைப் பதத்தைப் பற்றுகைக்குசொல்

     தமிழ்க் கொற்றப் புகழ் செப்பித் ...... திரிவேனோ?  --- (கடத்தைப்) திருப்புகழ்.

                                

கொக்குக்கு ஒக்க,தலையிற் பற்றுச் சிக்கத்துளகக்

     கொத்து உற்று,உக்கு,பிணிஉற் ...... றவன்ஆகி,

குக்கி,கக்கி,கடையில் பல் தத்து உற்றுக் கழல,

     கொத்தைச் சொல்கற்றுலகில் ...... பலபாஷை,

 

திக்கித் திக்கிக் குளறிச் செப்பி,தப்பி,கெடுபொய்ச்

     செற்றைச் சட்டைக் குடிலைச் ...... சுமைபேணும்

சிக்கு அற்றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழை,

     திட்டத்துக்குப் புகலப் ...... பெறுவேனோ?              --- (கொக்குக்கு) திருப்புகழ்.

                                 

முதிய மா தமிழ் இசைய தாகவே

     மொழி செய்தே நினைந் ...... திடுமாறு,

முறைமையாக நின் அடிகள் மேவவே

     முனிவு தீர வந்து,...... அருள்வாயே.                          --- (விதியதாகவே) திருப்புகழ்.

                                 

படிமிசை தாளும் காட்டி,உடல்உறு நோய்பண்டு ஏற்ற

     பழவினை பாவம் தீர்த்து,உன்......அடியேனைப்

பரிவொடு நாளும் காத்து,விரிதமிழால் அம் கூர்த்த

     பர புகழ் பாடு என்று ஆட்கொடு ...... அருள்வாயே.   --- (வடிவது) திருப்புகழ்.

                                

மஞ்சு தவழ் சாரல் அம் சயில வேடர்

     மங்கை தனை நாடி,...... வனமீது

வந்த,சரண அரவிந்தம் அது பாட

     வண்தமிழ் விநோதம் ...... அருள்வாயே.                     --- (அஞ்சுவித) திருப்புகழ்.

                                

செஞ்சொ ல்சேர் சித்ரத் ...... தமிழால்உன்

செம்பொன் ஆர்வத்தைப் ...... பெறுவேனோ?                --- (பஞ்சுசேர்) திருப்புகழ்.

                                

ஞானச் சித்திச் சித்திர நித்தத் ...... தமிழால், உன்

     நாமத்தைக் கற்றுப் புகழ்கைக்குப் ...... புரிவாயே.     --- (வான்அப்பு) திருப்புகழ்.

                                

எழில் கமலத்து இணைக்கழலைத்

     தமிழ்ச் சுவை இட்டு, இறப்பு அற, எய்த்-

     திடக் கருணைத் திறத்து, எனை வைத்து .....அருள்வாயே. --- (வினைத்திரளுக்கு) திருப்புகழ்.

                                

 

நினையே தினம் நினைக்கவும் தருவாய்---

 

நினையே --- உன்னைத் தவிர வேறு யாரையும் நினைக்காமல்.

 

"எம்பெருமானேஅடியேன் நாள்தோறும் பொன்னையே நினைந்தேன்.பொருளையே நினைந்தேன்.மனைவி மக்களையே நினைந்தேன்.  நிலம் வீடு மாடு முதலிய பிறவற்றையே நினைந்தேன. உன்னை மட்டும் நினைந்தேனில்லை. அதனால் பிறப்பு இறப்பு என்னும் பெருங்கடலுள் அழுந்தினேன். ஏனைய நினைவுகளை நீக்கி உன்னை நினைப்பற நினைக்க அருள் புரிவாய். நினைப்பித்தால் ஒழிய அடியேன் நினைக்க இயலாது அன்றோ சுதந்தரம் இல்லாத நாயினேன் நின்னை நினைக்க நீ என்னை நினைவாய்”.

"நினைக்கவும் தருவாய்" என்ற எச்ச உம்மையால்தமிழால் பாடவும் தருவாய் என்று குறிப்பிடுகின்றனர். இங்ஙனமே பல இடங்களில் வேண்டுகின்றனர்..

 

அம்புவி தனக்குள்வளர் செந்தமிழ் வழுத்திஉனை

அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே..     --- ஐங்கரனை திருப்புகழ்.

 

மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்

    மங்கைதனை நாடி ...... வனமீது

வந்தசர ணார விந்தமது பாட

    வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே....  --- அஞ்சுவித திருப்புகழ்.

 

 

உனது ஆர் அருள் கருத்து இருந்து உறைவாய் எனது ஆர் உயிர் துணையாக---

 

இறைவனை உயிர்க்கு உறுதுணையாக இருந்து உள்ளத்தில் உறையுமாறு வேண்டுகின்றனர். இறைவன் எல்லா உயிர்களிலும் உயிர்க்கு உயிராய் பாலில் நெய்போல இருக்கின்றனன். எனினும் சுட்டி அறிகின்ற அறிவு நீங்கி எல்லாம் பரமாகப் பார்க்கின்ற பதிஞானம் கைவரப் பெற்றவர் அறிவில் பிறிவற நின்று பேரருள் புரிவன்.

 

அறிவு ஒன்று அறநின்று அறிவார் அறிவில்

பிறிவுஒன்று அறநின்ற பிரான் அலையோ...  --- கந்தர் அநுபூதி.

 

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்..     --- அப்பரடிகள்.

 

கடல் சலம் தனிலே ஒளி சூரனை........ சேவலு மாமயில் விடும் வேலா---

 

கடல் நடுவில் சூரனை மாய்த்து மயிலும் சேவலும் ஆக்கி

ஆட்கொண்ட வரலாறு.

 

முருகப் பெருமானுடைய விசுவ ரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக் கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொல்லுவன்" என்று சீறினான்.  கதிரவனும் அஞ்சஉலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று ஆர்த்தனன். ஆலாலவிடம் போல் தோன்றிய அவ் இருளைக் கண்டு அமரர் அஞ்சினர். அவ் இருளில் சூரபன்மன் மலை போன்ற பேருருவம் கொண்டு வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான்.  அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும் ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப் போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.

 

நண்ணினர்க்கு இனியாய் ஓலம்,

            ஞான நாயகனே ஓலம்,

பண்ணவர்க்கு இறையே ஓலம்,

            பரஞ்சுடர் முதலே ஓலம்,

எண்ணுதற்கு அரியாய் ஓலம்,

            யாவையும் படைத்தாய் ஓலம்,

கண்ணுதல் பெருமான் நல்கும்

            கடவுளே ஓலம் ஓலம்.

 

தேவர்கள் தேவே ஓலம்,

            சிறந்த சிற்பரனே ஓலம்,

மேவலர்க்கு இடியே ஓலம்,

            வேற்படை விமலா ஓலம்,

பாவலர்க்கு எளியாய் ஓலம்,     

            பன்னிரு புயத்தாய் ஓலம்,

மூவரும் ஆகி நின்ற

            மூர்த்தியே ஓலம்ஓலம்.

 

"எம்பெருமானே! அடியேங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள். முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கிவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர். முருகப் பெருமான் விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய்நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால் சூரபன்மன் கொண்ட இருள் உருவம் அழிந்தது.

 

ஏய் என முருகன் தொட்ட

            இருதலை படைத்த ஞாங்கர்

ஆயிர கோடி என்னும்

            அருக்கரில் திகழ்ந்து தோன்றித்

தீ அழல் சிகழி கான்று

            சென்றிட, அவுணன் கொண்ட

மாஇருள் உருவம் முற்றும்

            வல்விரைந்து அகன்றது அன்றே.

 

அதுகண்ட சூரபன்மன்வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு நடுவிலே ஒளித்தான். வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.

 

திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்

உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்....  ---  வேல் வகுப்பு.

                                                                                                            

சூரபன்மன் அண்ட முகடு முட்டநூறாயிர யோசனை அளவுடைய பெரு மரமாகி நின்றுமண்ணும் விண்ணும் நிழல் பரப்பிகிளைகளை அசைத்துஉலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான். அப்போது உடுக்கள் உதிர்ந்தன. சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திக்கயங்கள் மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம் வெகுண்டு, ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு முழுவதும் ஒன்றுபட்டது போலாகிமடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும்மாளா வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகிபழைய அசுர வடிவம் கொண்டுவாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்துவேதங்கள் ஆர்ப்பதேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்றுஅங்கியின் வடிவம் நீங்கிஅருள் வடிவைத் தாங்கிவானகங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.

 

புங்கவர் வழுத்திச் சிந்தும்

            பூமழை இடையின் ஏகி

அங்கியின் வடிவம் நீங்கி,

            அருள்உருக் கொண்டுவான்தோய்

கங்கையில் படிந்து மீண்டு,

            கடவுளர் இடுக்கண் தீர்த்த

எங்கள்தம் பெருமான் செங்கை

            எய்திவீற்று இருந்ததுஅன்றே.

 

சிவபெருமான் தந்த வர பலத்தால்சூரபன்மன் அழிவிலன் ஆகிமீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும்மற்றொரு கூறு மயிலுமாகிமிக்க சினத்துடன் சிறகுகளை வீசிஅதனால் உலகங்களைத் துன்புறுத்திமுருகவேள் திருமுன் வந்தான்.

 

தாவடி நெடுவேல் மீளத்

            தற்பரன் வரத்தால் வீடா

மேவலன் எழுந்து மீட்டு

            மெய்பகிர் இரண்டு கூறும்

சேவலும் மயிலும் ஆகி

            சினங்கொடு தேவர் சேனை

காவலன் தன்னை நாடி

            அமர்த்தொழில் கருதி வந்தான்.

 

அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும் நீங்கிதெளிந்த உள்ளமும்சிவஞானமும்அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக் கொடியாகவும்மாமயிலை வாகனமாகவும் கொண்டருளினார்.  ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபன்மன் சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு பெற்றான். என்னே அவனது தவத்தின் பெருமை! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையை அளக்க வல்லார் யாவர்?  ஞானிகளது பார்வையால் இரும்பு பொன்னாவது போல்கந்தவேள் கருணை நோக்கால்சூரன் மறவடிவு நீங்கிஅறவடிவு பெற்றான்.

 

மருள்கெழு புள்ளே போல

            வந்திடு சூரன்எந்தை

அருள்கெழு நாட்டம் சேர்ந்த

            ஆங்குஅவன் இகலை நீங்கித்

தெருள்கெழு மனத்தன் ஆகி

            நின்றனன்சிறந்தார் நோக்கால்

இருள்கெழு கரும்பொன் செம்பொன்

            ஆகிய இயற்கை யேபோல்.

 

தீயவை புரிந்தா ரேனும்

            முருகவேள் திருமுன் உற்றால்

தூயவர் ஆகி மேலைத்

            தொல்கதி அடைவர் என்கை

ஆயவும் வேண்டும் கொல்லோ,

            அடுசமர் அந்நாள் செய்த

மாயையின் மகனும் அன்றோ

            வரம்புஇலா அருள்பெற்று உய்ந்தான்.

 

இடுக்கண் தீர்ந்த இமையவர்முருகப்பெருமான் மீது பூமழை பொழிந்தனர். பாமலர் மொழிந்தனர்.

 

வாரிதனில்புதிய மாவாய்க் கிடந்தநெடும்

சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்

அங்கம் இருகூறுஆய்அடல் மயிலும்சேவலுமாய

துங்கமுடன் ஆர்த்துஎழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்

சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா

ஏறி நடாத்தும் இளையோனே! -  மாறிவரு

சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என

மேவத் தனித்து உயர்த்த மேலோனே!  --- கந்தர் கலிவெண்பா.

                      

அறத்தையும் தருவோர்.............  பெருமாளே ---

 

"தருமத்தைச் செய்பவர்களாகிய பெருமை தங்கிய அந்தணாளர்கள் 'முருகாஎன்று நின்னைத் தொழுகின்றவர்கள் ஆகி வாழ்கின்ற அவிநாசியில் தாயினும் சிறந்த தண்ணருளுடன் எழுந்தருளி உள்ள பெருமாளே"

 

"அறத்தையும் தருவோர்" என்ற எச்ச உம்மைக்கு,அருளையும் தருவோர் எனப் பொருள் கொள்ளப்பட்டது. அருளின்ற அறம் நிகழாது ஆதலின். "ஆய்புரி அருள்" என்றமையால்தாய் அருளைச் சிறப்பாக எடுத்து ஓதுகின்றனர். கைம்மாறு கருதாது அன்புடன் உதவுபவள் தாய். இறைவனைக் கூறும் இடத்து எல்லாம் தாய் அருளையே உவமையாகக் கூறுவது ஆன்றோர் வழக்கு.

 

தாயில் சிறந்த தயாஆன தத்துவனே..       --- திருவாசகம்.

 

தாயான செல்வர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பீ --- திருவாசகம்.

 

பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து...---  திருவாசகம்.

 

தாயினும் இனிய நின்னைச் சரண்என அடைந்த நாயேன்

பேயினும் கடையன் ஆகிப் பிதற்றுதல் செய்தல் நன்றோ?

தீயிடை மெழுகாய் நொந்தேன் தெளிவிலேன் விணே காலம்

போயினது ஆற்ற கில்லேன பூரணா னந்த வாழ்வே.          ---தாயுமானார்.

                                                                                                                        

தாயினும் நல்ல தயாளுவே நின்னைஉன்னித்

தீயின்மெழு கொத்துருகுஞ் சிந்தைவரக் காண்பேனோ.  ---தாயுமானார்.

                                                                                                                      

அன்னை போல அருள் மிகுத்து

மன்னும் ஞான வரதனே

என்னையே எனக்கு அளித்த

நின்னை யானும் நினைவனே..                  ---  தாயுமானார்.

 

அவிநாசி - விநாசம் இல்லாதது. அழிவற்றது.

 

திருமுறைகளில் திருப்புக்கொளியூர் என்பது திருத்தலத்தின் பெயர். இறைவர் திருப்பெயர் அவிநாசியப்பர். மக்கள் வழக்கில் அவிநாசி என்று வழங்கப்படுகின்றது. திருப்பூரில் இருந்து 14 கி.மீ. கோவையில் இருந்து 40 கி.மீ.

 

இறைவர்     : அவிநாசிலிங்கேசுவரர்அவிநாசி ஈசுவரர்அவிநாசியப்பர்பெருங்கேடிலியப்பர்.

இறைவியார்  : கருணாம்பிகைபெருங்கருணை நாயகி.

தல மரம்     : பாதிரி (ஆதியில் மாமரம்)

 

தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்டதுதற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. 

            

அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இக்கோயிலில் பாலதண்டாயுதபாணி சந்நிதியும்சுப்பிரமணியர் சந்நிதியும்அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதியும் உள்ளன. உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும்நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் விளங்குகிறார். குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இவ்வாலயத்தில் உள்ளது.

 

மூன்று தீர்த்தங்கள் 1. காசிக் கங்கை (கிணறு), 2. நாககன்னிகை தீர்த்தம் (கிணறு) 3. ஐராவத தீர்த்தம் எனபனவாகும். தலமரமாக மாமரம் விளங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில் தேர்களில் அவிநாசிக் கோயில் தேரும் ஒன்றாகும்.

 

முதலை வாயினின்றும் பிள்ளையை அழைத்த வரலாறு:

 

வன்தொண்டப் பெருமான் திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு வந்தார். வரும் நாளில் அவருக்குச் சேரமான் பெருமாள் நினைவு தோன்றலாயிற்று. வன்தொண்டர் திருவாரூரை விடுத்துப் பல திருத்தலங்களை வழிபட்டுக் கொண்டே கொங்கு நாட்டைச் சேர்ந்தார்.  திருப்புக்கொளியூரை அடைந்தார். மாடவீதி வழியே நடந்தார்.

 

அப்பொழுது அங்கேஒரு வீட்டில் மங்கல ஒலியும்மற்றொரு வீட்டில் அழுகை ஒலியும் எழுந்தன. நாவலர் பெருமான்அது குறித்துப் பக்கத்தில் இருந்தவர்களைக் கேட்டார். அவர்கள், "அடிகளேஇரண்டு சிறுவர்கள் ஐந்து வயதுடையவர்கள் மடுவிலே குளிக்கப் போனார்கள். அவர்களில் ஒருவனை முதலை விழுங்கிற்று. பிழைத்தவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நடைபெறுகிறது. இம்மங்கல ஒலிஇறந்தவன் நினைப்பைப் பெற்றோருக்கு எழுப்பி இருக்கிறது" என்றார்கள். அவ்வுரை கேட்ட நம்பியாரூரருக்கு இரக்கம் மேலிட்டது. அவர் அங்கேயே நின்று விட்டார். மகனை இழந்த தாய் தந்தையர்நின்றவர் வன்தொண்டர் என்று உணர்ந்து ஓடி வந்தனர்.  வன்தொண்டரை வணங்கினர். வன்தொண்டர்அவர்களைப் பார்த்து, "மகனை இழந்தவர் நீங்களா" என்று கேட்டார். அவர்கள், "அடிகளைக் கண்டு வணங்கல் வேண்டும் என்னும் எண்ணம் எங்களுக்கு நீண்ட நாள்களாக உண்டு. அது திருவருளால் கூடிற்று" என்று கூறி மகிழ்வெய்தினார்கள். அம்மகிழ்ச்சி கண்ட ஆரூரர், 'இவர்கள் புத்திர சோகத்தை மறந்து எனது வரவு குறித்து மகிழ்கிறார்கள். இவர்கள் அன்பே அன்பு. இறைவனருளால் நான் இவர்கள் புதல்வனை முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தே அவநாசி அப்பனைத் தொழுவேன்என்று உள்ளம் கொண்டார். பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்து, "மடு எங்கே இருக்கிறது" என்று கேட்டார். அவர்கள் வாயிலாக மடு உள்ள இடத்தைத் தெரிந்துஅங்கே போனார்.  திருப்பதிகம் பாடினார். "எத்தால் மறக்கேன்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். திருப்பதிகத்தில் நான்காவது பாடலில்,

 

உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்,

அரைக்குஆடு அரவாஆதியும் அந்தமும் ஆயினாய்,

புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே,

கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே

 

என்று வேண்டினார். உடனேகாலன்பிள்ளை பூமியில் வாழ்ந்து இருந்தால்எந்த வயதை அடைந்திருப்பானோஅந்த வயதுடன் பிள்ளையை முதலை வாயில் சேர்த்தான். முதலைபிள்ளையைக் கரையிலே கொண்டு வந்து உமிழ்ந்தது. தாயார் விரைந்து ஓடிப் பிள்ளையை எடுத்தார். தாயாரும் தந்தையாரும் நம்பியாரூரரை வணங்கினர். செயற்கரும் செய்கை கண்ட வானும் மண்ணும் வியப்பு எய்தின. வன்தொண்டர்புதல்வனை அழைத்துக் கொண்டு  அவிநாசிக்குப் போய் ஆண்டவனைத் தொழுதார். பின்னர்அப் பிள்ளையின் வீட்டுக்குப் போனார். அவனுக்கு உபநயனம் செய்வித்தார். அங்கும் மங்கல ஒலி எழுந்தது. பின்னர்நம்பியாரூரர் அவிநாசி விடுத்து மலைநாடு நோக்கிச் சென்றார்.

 

அவிநாசியப்பர் கோயிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப் பிள்ளை சிற்பம் ஆகும். முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு உள்ளது. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகமும், 63மூவர் விழாவும் மற்ற சிறப்பான விழாக்களாகும்.

 

கருத்துரை

 

முருகா! இயம தூதர் வருமுன் அடியேனை ஆட்கொண்டுதமிழால் உம்மைப் பாட அருளிஉயிர்த்துணையாக என்னுள் கலந்து இருந்து அருள் புரிவீர்.

 

   

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...