மதுரை --- 0965. ஆனைமுகவற்கு

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

ஆனைமுகவற்கு நேர் (மதுரை)

 

முருகா! 

திருவடிப் பேற்றினை அருள்வாய்.

 

 

தானதன தத்த தானதன தத்த

     தானதன தத்த ...... தனதான

 

ஆனைமுக வற்கு நேரிளைய பத்த

     ஆறுமுக வித்த ...... கமரேசா

 

ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்

     ஆரணமு ரைத்த ...... குருநாதா

 

தானவர் குலத்தை வாள்கொடு துணித்த

     சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா

 

தாளிணைக ளுற்று மேவியப தத்தில்

     வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே

 

வானெழு புவிக்கு மாலுமய னுக்கும்

     யாவரொரு வர்க்கு ...... மறியாத

 

மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க

     மாமயில் நடத்து ...... முருகோனே

 

தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி

     சேரமரு வுற்ற ...... திரள்தோளா

 

தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை

     வேல்கொடு தணித்த ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

ஆனை முகவற்கு நேர் இளைய பத்த!

     ஆறுமுக! வித்தக! ...... அமரஈசா!

 

ஆதி அரனுக்கும் வேத முதல்வற்கும்

     ஆரணம் உரைத்த ...... குருநாதா!

 

தானவர் குலத்தை வாள்கொடு துணித்த

     சால் சதுர் மிகுத்த ...... திறல்வீரா!

 

தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில்

     வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே!

 

வான் எழு புவிக்கும்,மாலும்,அயனுக்கும்,

     யாவர் ஒருவர்க்கும் ...... அறியாத

 

மாமதுரை சொக்கர்,மாது உமை களிக்க

     மாமயில் நடத்தும் ...... முருகோனே!

 

தேன் எழு புனத்தில்,மான்விழி குறத்தி,

     சேர மருவ உற்ற ...... திரள்தோளா!

 

தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை

     வேல்கொடு தணித்த ...... பெருமாளே.

 

பதவுரை

 

            வான் எழு புவிக்கு மாலும் அயனுக்கும்--- மேல் ஏழு உலகங்களுக்கும் திருமாலுக்கும்பிரமனுக்கும் 

 

            யாவர் ஒருவர்க்கும் அறியாத--- வேறு யாருக்குமே அறியமுடியாத  

 

            மாமதுரை சொக்கர் மாது உமை களிக்க--- சிறந்த மதுரைத் தலத்து சொக்கேசர்ஆகிய சிவனும்உமாதேவியும் மகிழ,

 

            மாமயில் நடத்து முருகோனே--- அழகிய மயிலின் மீதேறி அதனைச் செலுத்தும் முருகப் பெருமானே!

 

            தேன் எழு புனத்தில் மான்விழி குறத்தி--- அழகு மிகுந்த வள்ளிமலைத் தினைப்புனத்தில்,மானை ஒத்த விழியினை உடைய குறத்தியாகிய வள்ளிநாயகிதேவரீரைச்

 

             சேர மருவுற்ற திரள்தோளா--- சேரும்படியாக அவளை அணைத்த திரண்ட திருத்தோள்களை உடையவரே!

 

            தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை--- தேவர்களது உள்ளத்தில் சூரபதுமனைப் பற்றித் தோன்றிய அச்சத்தை

 

            வேல்கொடு தணித்த பெருமாளே--- வேலாயுதத்தால் நீக்கி அருளிய பெருமையில் மிக்கவரே!

 

            ஆனை முகவற்கு நேர் இளைய பத்த--- யானைமுகமுடைய விநாயகப் பெருமானுக்கு இணையாக விளங்கி,அவருக்குப் பின்தோன்றிய அன்பு உடையவரே!

 

            ஆறுமுக--- ஆறு திருமுகங்களை உடையவரே! 

 

            வித்தக--- ஞான வித்தகரே!

 

            அமர ஈசா--- தேவர்களின் கடவுளே!

 

            ஆதி அரனுக்கும் வேத முதல்வற்கும்--- ஆதிதேவன் ஆகிய சிவபிரானுக்கும்,வேத முதல்வன் ஆகிய பிரமனுக்கும் 

 

            ஆரணம் உரைத்த குருநாதா--- வேத மந்திரத்தை உபதேசித்த குருநாதரே!

 

            தானவர் குலத்தை வாள்கொடு துணித்த--- அசுரர் குலத்தையே வாளினால் வெட்டி வீழ்த்திய 

 

            சால் சதுர் மிகுத்த திறல்வீரா--- நிறைந்த திறமையும்,மிகுந்த வல்லமையும் பொருந்தியவரே!

 

            தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில்--- தேவரீருடைய இரு திருவடிகளிலும் வீழ்ந்து பொருந்தும் பதவியில் 

 

            வாழ்வொடு சிறக்க அருள்வாயே--- பேரானந்தப் பெருவாழ்வில் நான் சிறந்து விளங்க அருள் புரிவாயாக. 

 

பொழிப்புரை

 

 

     மேல் ஏழு உலகங்களில் உள்ளவர்க்கும்,திருமாலுக்கும்பிரமனுக்கும்வேறு யாருக்குமே அறியமுடியாத,சிறந்த மதுரைத் தலத்து சொக்கேசர்ஆகிய சிவனும்உமாதேவியும் மகிழ,

அழகிய மயிலின் மீதேறி அதனைச் செலுத்தும் முருகப் பெருமானே!

 

      அழகு மிகுந்த வள்ளிமலைத் தினைப்புனத்தில்,மானை ஒத்த விழியினை உடைய குறத்தியாகிய வள்ளிநாயகிதேவரீரைச்சேரும்படியாக அவளை அணைத்த திரண்ட திருத்தோள்களை உடையவரே!

 

     தேவர்களது உள்ளத்தில் சூரபதுமனைப் பற்றித் தோன்றிய அச்சத்தைவேலாயுதத்தால் நீக்கி அருளிய பெருமையில் மிக்கவரே!

 

     யானைமுகமுடைய விநாயகப் பெருமானுக்கு இணையாக விளங்கி,அவருக்குப் பின்தோன்றிய அன்பு உடையவரே!

 

     ஆறு திருமுகங்களை உடையவரே! 

 

     ஞான வித்தகரே!

 

     தேவர்களின் கடவுளே!

 

     ஆதிதேவன் ஆகிய சிவபிரானுக்கும்,வேத முதல்வன் ஆகிய பிரமனுக்கும் வேத மந்திரத்தை உபதேசித்த குருநாதரே!

 

     அசுரர் குலத்தை வாளினால் வெட்டி வீழ்த்திய நிறைந்த திறமையும்,மிகுந்த வல்லமையும் பொருந்தியவரே!

 

      தேவரீருடைய இரு திருவடிகளிலும் வீழ்ந்து பொருந்தும் பதவியில்பேரானந்தப் பெருவாழ்வில் நான் சிறந்து விளங்க அருள் புரிவாயாக. 

 

விரிவுரை

 

வான் எழு புவிக்கு மாலும் அயனுக்கும்--- 

 

பூவுலகம் அல்லாதுவானில் விளங்கும் ஏழு உலங்களில் உள்ளவர்களுக்கும் அறிய முடியாதஅறியக் கிடைக்காத பரம்பொருள் இறைவன்.

 

யாவர் ஒருவர்க்கும் அறியாத--- 

 

யாராக இருந்தாலும் அவனை அறிய முடியாது. எனவேஅன்பர்களால் அவனை அறிந்து கொள்ள முடியும் என்பது விளங்கும்.

 

தேவ தேவன்மெய்ச் சேவகன்

     தென்பெ ருந்துறை நாயகன்

மூவ ராலும் அறிய ஒணாமுதல்

     ஆய ஆனந்த மூர்த்தியான்

யாவர் ஆயினும் அன்பர் அன்றி

     அறிய ஒணாமலர்ச் சோதியான்

தூய மாமலர்ச் சேவ டிக்கண்நம்

     சென்னி மன்னிச் சுடருமே.        --- திருவாசகம்.

 

தேன் எழு புனத்தில் மான்விழி குறத்தி சேர மருவுற்ற திரள்தோளா--- 

 

தேன் --- அழகு. அழகு விளங்கும் தினைப்புனம்.

 

தினைப்புனம் என்பது பக்குவம் அடைந்த ஆன்மாக்களின் உள்ளத்தைக் குறிக்கும்.

 

பக்குவ ஆன்மா --- வள்ளிநாயகியார்.

 

தினைப்புனம் --- நல்ல உள்ளம்.

 

தினை --- ஞானமாகிய பயிர்.

 

சீவான்மா ஆகிய வள்ளிநாயகியார் புரிந்த நல் தவம் ஆகிய மெய்ம்மையான உழவுக்கு மெச்சி,ஞானபண்டிதன் ஆகிய முருகப் பெருமான்அவரைத் தேடி வந்து ஆட்கொண்டு அருள் புரிந்தார்.

 

ஆனை முகவற்கு நேர் இளைய பத்த--- 

 

ஆனைமுகம் உடைய விநாயகப் பெருமானுக்கு இணையானவர் முருகப் பெருமான். விநாயகப் பெருமானை மூத்த பிள்ளையார் என்றும்முருகப் பெருமானை இளைய பிள்ளையார் என்றும் வழங்குவதில் இருந்து இது தெளிவாகும்.

 

"ஆனைமுகவற்கு நேர் இளைய சுத்த" --- சைவசித்தாந்தப் பெருமன்றப் பதிப்பு.

 

ஆதி அரனுக்கும் வேத முதல்வற்கும் ஆரணம் உரைத்த குருநாதா--- 

 

திருமால்பிரமன்இந்திரன்சிவபெருமான் முதலியோருக்கு முருகப் பெருமான் அறம்பொருள் இன்பம் முத்திறத்து உறுதிப் பொருள்கை விளக்கும் மனுநூலை ஓதிய பெருமையை உடையவர் முருகப் பெருமான்.

 

பிரமனுக்கு முருகப் பெருமான் அருள் உபதேசம் புரிந்தமையைதிருவேரக மான்மியம் கூறும்.

 

சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.

 

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது,சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவிஅதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி,முத்தொழிலும் புரிந்து,தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.

 

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள்,தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?"என்று புகழ்ந்து,அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும்குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டுபுன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,

 

அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல்உரிமைக் குறித்தாதல்,நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும்அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய்எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையதுஅறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர். 

 

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறுஅங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்"என்றனர்.

 

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்னகுன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்துமுறையினால் கழறவல்லேம்” என்றனர். 

 

கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை;ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறதுநீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டுபிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகம் கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்றுதம் புரிசடைத் தூங்கவேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால்,அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

 

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,கதிர் வேலண்ணல் தோன்றலும்ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி,வடதிசை நோக்கி நின்று,பிரணவ உபதேசம் பெறும் பொருட்டுசீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து,பிரணவ உபதேசம் பெற்றனர்.

 

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு,தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.       --- தணிகைப் புராணம்.                                                                                     

 

நாத போற்றி எனமுது தாதை கேட்க,அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

                                                                                    

நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி 

 

தமிழ்விரக,உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே” --- (கொடியனைய) திருப்புகழ்.

                                                                                    

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....                 --- (விறல்மாரன்) திருப்புகழ்.

 

சிவனார் மனம் குளிஉபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா...         --- திருப்புகழ்.

 

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாததுஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால்அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

 

அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே. --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

                                                                      

பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க

     மவுனமறை ஓதுவித்த ...... குருநாதா!     --- (வடவை அனல்) திருப்புகழ்.

                          

உயிர்களை ஆட்கொண்டு அருள்புரிய,  மனித வடிவில் குருநாதனாகத் திருமேனி தாங்கிபரம்பொருளே எழுந்தருளுவான் என்பது நூல்களின் துணிபு. "அட்டாட்ட விக்கிரக லீலை" என்னும் அருட்பாடல் பாம்பன் சுவாமிகள் அருளியது. இறைவன் உயிர்களுக்குஅறிவு விளக்கத்தைத் தரும் பொருட்டு மேற்கொள்ளும் 64திருமேனிகளுள் "சுசி மாணவ பாவம்" என்பதும்,  "சற்குரு மூரத்தம்","தட்சிணாமூர்த்தம்" என்பதும் சொல்லப்படுகின்றன. 

திருவேரகம் என்னும் சுவாமிமலையில்முருகப் பெருமானிடம் பிரணவமந்திரப் பொருளைக் கேட்டுப் பெற மாணவ பாவத்திலே இருந்தது அந்தப் பரம்பொருள். "மாணவ பாவம்" என்றால் என்ன என்பதை உயிர்களாகிய நாம் அறிந்து விளக்கம் பெற வந்த மூர்த்தம் அது. எவ்வளவுதான் அறிவில் சிறந்தவராகக் கருதப்பட்டாலும்அவர்களுக்கும் அறிவு விளக்கம் தேவைப்படும். விளக்குக்குத் தூண்டுகோல் தேவைப்படுவது போல. அவ்வாறு தேவை உண்டாகும் போதுஅதை யாரிடமிருந்து பெறுகின்றோமோஅவரைக் குருவாக வணங்கிமாணவ பாவத்தோடு கேட்டால்தான் பொருள் விளங்கிஅறிவு சிறக்கும்.

 அது போலவே,  பரம்பொருளானவர்குருநாதனாகத் திருமேனி தாங்கிசனகாதி முனிவர்களுக்கு மெய்ப்பொருளை உபதேசித்தது தட்சிணாமூர்த்தம் என்னும் "தென்முகக் கடவுள்" திருமூர்த்தம். திருப்பெருந்துறையிலேகுருநாதனாக எழுந்தருளி இருந்துபக்குவ ஆன்மாவாகிய மணிவாசகப் பெருமானை ஆட்கொண்டு அருள் புரிந்தது "சற்குருமூர்த்தம்".

 "சொல் ஆர்ந்த சற்குரு சுத்தசிவம் ஆமே" என்றும், "குருவே சிவம் எனக் கூறினன் நந்தி" என்றும் திருமூல நாயனார் தமது திருமந்திர நூலிலே தெளிவுறக் காட்டினார்.

 அந்த சுத்தசிவமாகிய ஐம்முகப் பரம்பொருள் தான்ஆறுமுகப் பரம்பொருளாக வந்தது என்பது நாம் எல்லோரும் அறிந்த செய்திதான். "தேசுதிகழ் பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப் பூங்கோதை இடப்பாங்கு உறையும் முக்கண் பரஞ்சோதி,  ஆங்கு ஒரு நாள்வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கு இரங்கிஐந்து முகத்தோடுஅதோ முகமும் தந்துதிருமுகங்கள் ஆறு ஆகி" என வரும் "திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா"ப் பாடல் வரிகள் இதைனைத் தெளிவுபடுத்தும். முருகப் பெருமானுடைய திருக்கையில் விளங்கும் வேலாயுதமேதிருவைந்தெழுத்தாகிய நமசிவாயம் தான் என்பார் அருணகிரிநாதப் பெருமான். உண்மையிலேசிவபெருமான்உணரமுருகப்பெருமான்உபதேசித்தார்என்றுஎண்ணுதல்கூடாது.

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான்.      ---  தணிகைப் புராணம்.                                                                                                

  

மின் இடைசெம் துவர் வாய்கரும் கண்

     வெள் நகைபண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுதுஎங்கள் அப்பன்

     எம்பெருமான்இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன்மகன்தகப்பன்

     தமையன்எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

     பொன் திருச் சுண்ணம் இடித்தும்நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகிஉபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும்முறையே சிவம்சத்திசதாசிவம்மகேசுவரம்சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால்சத்திக்குச் சிவன் மகன் என்றும்சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும்சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

தவளத்த நீறு அணியும் தடம்தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம்மகனாம்தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார்கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

 

என வருவதும் அறிக.`சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்,சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.             --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....         --- குமரகுருபரர்.

 

பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்

காத்தவளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு

மூத்தவளேஎன்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.

                                        

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.

                                         

சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்துங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்.

                                    

 

தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில் வாழ்வொடு சிறக்க அருள்வாயே--- 

 

முருகப் பெருமானுடைய திருவடிபேற்றினைப் பெற்றுபேரானந்தப் பெருவாழ்வில் திளைத்திருக்க வேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார்.

 

மாமதுரை சொக்கர் மாது உமை களிக்க மாமயில் நடத்து முருகோனே--- 

 

மாமதுரையில் சிவபரம்பொருள் செக்கேசர் என்னும் திருநாமத்தோடுஅங்கயற்கண்ணி உடன் எழுந்தருளித் திருவருள் புரிகின்றார்.

 

மதுரையம்பதியின் அருமை பெருமைகள் அளவிட முடியாதவை.

 

கருத்துரை

 

முருகா! திருவடிப் பேற்றினை அருள்வாய்.

 

No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...