இனியது எது?

 


இனிய பொருள் எது?

---

 

     இனிய பொருள் எதுஎன்று கேட்டால்ஒரே விதமான விடையை யாரும் தர முடியாது. யாருக்கு எதில் விருப்பம் உள்ளதோ அதுவே இனியது என்று சொல்லுவார்கள். நேற்றைக்கு ஒன்றைச் சொன்னவர்இன்றைக்கு வேறு ஒன்றைச் சொல்லுதலும் கூடும்.

 

     இந்த இனிமை என்பதை நாம் எப்படி உணர்ந்தோம்பொறிகளால் உணர்ந்தோம். உடம்பால் உணர்ந்தது. வாயால் சுவைத்து உணர்ந்தது. கண்ணால் கண்டு உணர்ந்தது. மூக்கால் முகர்ந்து உணர்ந்தது. காதால் கேட்டு உணர்ந்தது. இப்படிஐம்பொறிகளின் வாயிலாக நாம் உணர்ந்ததை இன்பம் என்று கொள்ளுகின்றோம். உண்மையில் அந்த இன்பத்தைப் பொறிகளின் வாயிலாக உணர்ந்தது மனம் தான்.

 

     உண்மையில் மனம்தான் இன்பம் துன்பம் என்னும் அனுபவங்களைப் பொறிகளின் வாயிலாகப் பெறுகின்றது. பொறிகள் இருந்தாலும்மனத்தின் தொடர்பு அவற்றுக்கு இல்லையானால்இன்பத்தை நுகர முடியாது. மயக்க மருந்து கொடுத்த பிறகுஅறுவை மருத்துவம் நிகழ்கின்றது. அப்போது துன்பம் என்பது அறியப்படுவதில்லை. உயிர் இருக்கின்றது என்றாலும்அந்த உயிருக்குஉடம்போடு உள்ள தொடர்பு அற்றுப் போனது. அதனால்அறுவைச் சிகிச்சையின்போது உண்டாகும் துன்பத்தை மனிதன் உணர முடிவதில்லை.

 

     சில நேரங்களில்எப்போதோ நிகழ்ந்த ஒன்றை நினைத்து இன்புறுகின்றோம். அதற்குக் காரணமாக இருப்பது பழைய நினைவு. அந்த நினைவுக்குப் பொறிகளின் உதவி வேண்டியதில்லை. சிலவற்றைக் கற்பனை செய்து பார்க்கின்றோம். இப்படி இருந்தால் எப்படி இருக்கும்என்று எண்ணுகின்றோம். அந்தக் கற்பனையில் ஒரு இன்பம் உண்டாகின்றது. அதற்குப் பொறிகளின் துணை தேவையில்லை. கனவில் வரும் இன்பதுன்பங்கள்கற்பனையால் அமைந்த பொறிகளின் வாயிலாகத் தோன்றுகின்றன. உணவை ரசித்துச் சுவைத்து உண்பது போலவும்ஒன்றைக் கண்டு அஞ்சுவது போலவும்ஒருவரோடு பேசி இன்புறுவது போலவும் கனவுகள் காண்கின்றோம். அந்த இன்பத்தின்றகோதுன்பத்திற்கோநமது உறுப்புகள் அவசியமாவது இல்லை.

 

     பொறிகளின் வழியாக அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் கூட ஒரு நிலையாக இருப்பது இல்லை. இந்த உடல் ஒரே தன்மையாக இருப்பது இல்லை. "வேற்று விகார விடக்கு உடம்பு" என்றார் மணிவாசகர். இளமையில் பொறிகளின் வாயிலாக அனுபவித்த இன்பத்தைமுதுமையில் அனுபவிக்க முடிவதில்லை. நோய் வந்தபோதுநாக்குநல்ல சுவையை உணரமுடிவதில்லை.

 

     முன்பு இன்பமாகத் தோன்றியவைகள் எல்லாம்இப்போது துன்பமாகத் தோன்றும். ஆகஇன்பமும் துன்பமும் கலந்தே அனுபவிக்கப்படும். ஒளியும் நிழலும் மாறி மாறி வருவது போலஇன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். தனித்த இன்பமும்தனித்த துன்பமும் இல்லை.

 

     விளக்கை ஏற்றி வைத்தால் ஓளி தெரிகின்றது. கூடவேஅந்த விளக்கின் நிழலும் தெரிகின்றது. ஆனால்சூரியசந்திர ஒளியில் நிழல் என்பது இல்லை. நிழல் விழுகின்றதே என்றால்அது ஒளியைத் தடுக்கும் பொருள்களின் நிழல்கள். அதுபோலவேமனத்தால் அறியப்படும் இன்பத்துக்கு நிழல் போலத் துன்பம் இருந்தாலும்துன்பம் என்னும் நிழலே தோன்றாத இன்பமும் ஒன்று உண்டு. அது நாம் அனுபவிக்கின்ற இன்பதுன்பங்களுக்கு அப்பாற்பட்டது. அதற்குப் பெயர் இன்பம் அல்ல. ஆனந்தம் என்று பெயர். அது பரமானந்தம்சிவானந்தம்பேரானந்தம் என்று பெரியவர்களால் சொல்லப்பட்டது. அந்தப் பேரானந்தம் உயிரில் விளைவது. அங்கே புலன்கள் ஒடுங்கி இருக்கும். அது இதுவரை அனுபவித்த இன்பங்கள் எல்லாவற்றினும் சிறந்ததாக இருக்கும்.

 

கனியினும்கட்டிபட்ட கரும்பினும்,

பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்,

தனிமுடி கவித்து ஆளும் அரசினும்

இனியன்தன் அடைந்தார்க்கு இடைமருதனே.

 

என்றார் அப்பர் பெருமான்.

 

     கனியைச் சுவைப்பதால் இன்பம் உண்டானது. கரும்பைச் சுவைப்பதால் இன்பம். அதைவிடஅதன் சாற்றைக் கொண்டுகட்டிபடுத்தப்பட்ட வெல்லத்தைச் சுவைத்தால் இன்பம். "பனிமலர்க் குழல் பாவை" என்று சொல்லவேஅழகும் இளமையும் உடைய பெண்கள் என்பது தெளிவாகும். அப்படிப்பட்ட பெண்களைக் கூடி அடைந்த சுகம். தனிமுடி தரித்துஏகச் சக்கிராதிபதியாக இருந்து அரசாட்சி புரிவது இன்பம். இவைகள் அனைத்தும் பொறிகளின் வாயிலாக நுகரப்படும் இன்பங்கள். சொல்லையும்பொருளையும் கடந்த பரம்பொருளாகிய இடைமருது ஈசனோபொறிகளும்மனமும் கடந்த நிலையில் அனுபவிக்கப்படும் ஆனந்தமயமான பொருள். முன்னர் சொன்ன இன்பங்கள் எல்லாம் ஒருகால் இருப்பது போலத் தோன்றிபின்னர் இல்லாமல் போய்விடும். ஆனால்உயிரில் இனிக்கின்ற பரம்பொருளை நினைக்க நினைக்க இன்பம் துளிர்க்கும். "நினைத் தொறும்காண்தொறும்பேசுந்தொறும்எப்போதும் அனைத்து எலும்பு உள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்பு உடையவன்" இடைமருதன். ஆகவேஅனுபவப் பொருள்களாகிய இறைவனே எல்லாவற்றிலும் இனிமை உடையவன் ஆவான்.

 

     அப்படிப்பட்ட இறைவனை எப்போதும் மனத்தில் நினைப்பது இல்லை. எதை எதையோ நினைத்துக் கவலை கொள்ளுவது மனித இயல்பு. கண்ட கண்ட பொருள்களை எல்லாம்தனது கையில் உள்ள அழுக்குப் பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளுகின்ற பைத்தியக்காரனைப் போல நாம் இருக்கின்றோம். நமது மனம் குப்பைத் தொட்டியாகஅழுக்குக் கூடையாக இருக்கின்றது. குப்பையைக் கிளறினால்குப்பைதான் வரும்.

 

     நாம் குடியிருக்கும் அறையை அவ்வப்போது தூய்மை செய்து வைத்துக் கொள்வது போலமனத்தையும் அவ்வப்போது தூய்மைப் படுத்தி வைத்துக் கொள்ளப் பழகவேண்டும். அது நம்மால் மட்டுமே முடியாது. பழகிய பெரியவர்களோடு கூடி இருந்தால் போதும்.

 

     இறைவனிடம் அன்பு கொண்ட பெரியவர் உள்ளத்தில் அவன் நினைவு நிலையாக இருக்கும். எதை மறந்தாலும்இறைவனை மறக்கமாட்டார்கள். "எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை" என்றார் சுந்தரர் பெருமான்.

 

     காரைக்கால் அம்மையாரும் இந்த நிலையில் இருந்து மனநிறைவோடு பாடுகின்றார்.

 

எனக்கு இனிய எம்மானை,ஈசனையான் என்றும்

மனக்கு இனிய வைப்பாக வைத்தேன்;- எனக்கு அவனைக்

கொண்டேன் பிரானாக;கொள்வதுமே இன்புற்றேன்;

உண்டே எனக்கு அரியது ஒன்று.

 

            எப்போதும் எனது உயிருக்கு இனிமை தருபவனாகிய எம்பெருமானாகிய ஈசனைநான்என்றும் எனக்கு இனிய பெரும் செல்வமாக எனது மனத்தில் பொதிந்து வைத்துக் கொண்டேன். என் தலைவனாக அவனையே கொண்டேன். அப்படிக் கொண்ட நிலையிலேயேஎங்கும் இல்லாத இன்பத்தை நான் அடைந்தேன். இதை விடநான் பெறுதற்கு அரிய பேறு வேறு இல்லை.

 

(எம்மானை --- எனது இறைவனை. மனக்கு --- மனத்துக்கு. வைப்பு --- சேமித்து வைத்த செல்வம். பிரான் --- தலைவன்.)

 

     இறைவனை மறவாமல் மனத்தில் இருத்தி அன்பு செய்யும் அடியவர்க்குஎந்நாளும் இன்பமே. துன்பம் இல்லை.

 

     எல்லாவற்றிற்கும் மேலான அரிய பொருள் ஒன்று கிடைத்துவிட்டால்அதற்குமேல் ஒன்றையும் மனம் விரும்பாது. பத்து ரூபாய்க்கு ஏங்கியவன்பத்து நூறு கோடி பெற்றுவிட்டால். பத்துக்கும் நூறுக்கும் ஏங்கமாட்டான்.

 

     யார் யாரையோ வள்ளலாகவும்தலைவனாகவும் கொண்டு வாழ்வதால்நிரந்தரமான இன்பம் கிடைப்பது இல்லை. நிரந்தரமான இன்பத்தைத் தருவதோடுஇமைப்பொழுதும் நமது நெஞ்சை விட்டு நீங்காமல்,எப்போதும் நம்முடனே இருக்கும் ஒப்பற்ற பரம்பொருளைத் துணையாகப் பெற்றுவிட்டால்இதைவிடப் பெரிய பேறு என்ன உள்ளது?.

            தேன்முக்கனிகள் பசுவின்பால்தேங்காய்ப் பால்சருக்கரைகற்கண்டுபயத்தம்பருப்புப் பொடி ஆகியவற்றை நெய்யில் பதமாகக் காய்ச்சுதல் வேண்டும். இளஞ்சூட்டில் இறக்கிவிட வேண்டும். சூடு அதிகனாமால் சுவை குன்றிப் போகும். அப்படிப் பக்குவமாக உண்டாக்கப்பட்ட கட்டியின் சுவையானது மிக்க இனிப்பாக இருக்கும்.  உண்டபோது மட்டுமே இனிமை தரும். அந்த சுவையும் நாக்கோடு நின்று விடும். மேலும் உண்ண ஆவலைத் தூண்டும். அளவுக்கு மேல் உண்டால் தெவிட்டும். அளவுக்கு மீறினால் நஞ்சாகவும் மாறும். இறைவன் இத்தகைய சுவைப் பொருள்கள் எல்லாவற்றிலும் சுவை மிக்கவனாஉண்ண உண்ணத் தெவிட்டாத சுவை உடையவனாக உள்ளான் என்பதை,

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்துன்றாய்க் கூட்டி,

     சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,

தனித்த நறுந் தேன்பெய்து,பசும்பாலும்,தெங்கின்

     தனிப்பாலும் சேர்த்துரு தீம் பருப்பு இடியும் விரவி,

இனித்த நறுநெய் அளைந்தே,இளஞ்சுட்டின் இறக்கி

     எடுத்த,சுவைக்கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதே!

அனித்தம் அறத் திருப் பொதுவில் விளங்கும் நடத்து அரசே!

     அடிமலர்க்கு என்சொல் அணியாம் அலங்கல் அணிந்தருளே.  --- திருவருட்பா.

 

என்று அருளினார் வள்ளல்பெருமான்.

 

இதன் பொருள் ---

 

    மா பலா வாழை ஆகிய மூவகைக் கனிகளையும் தனித் தனியாகப் பிழிந்து வடிகட்டி ஒன்றாய்க் கூட்டி,அதிலே சர்க்கரையும்அதற்கு மேலாககற்கண்டின் தூளும் மிகுதிபடக் கலந்து,அக் கலவையில் தூய மணம் கமழும் தேனைச் சொரிந்து,பின்னர்ப் பசுவின் பாலையும்தேங்காயில் இருந்து எடுத்துப் பிழிந்துகொண்ட தனிப் பாலையும் ஒன்றாய்ச் சேர்த்து,ஒரு பிடி அளவான பாசிப் பருப்பின் பொடியையும் கலந்து,இனிய சுவையும் மணமும் உடைய நெய்யை ஊற்றி,அடுப்பில் ஏற்றி,இளஞ் சூட்டில் இறக்கி எடுத்த இனியசுவைக் கட்டியினும் இனிக்கின்ற தெளிந்த அமுது போன்றவனே! என்றும் நிலைபெறத் திருச்சிற்றம்பலத்தில் செய்கின்ற விளக்கம் மிக்க திருநடனத்தை உடைய அருளரசே! உன் திருவடிக்கு அணியாக எனது சொல்மாலையை அணிந்து அருளுவாயாக.

 

 

     கரும்பு இனிமையானது. கரும்பினால் உண்டாகும் சுவைப் பொருள்கள் அனைத்துமே இனிமையானவை. உலகியல் கரும்பை விசிவக் கரும்பானது,பார்த்தாலும்நினைத்தாலும்நாமாக வாயாரப் படித்தாலும்,ஒருவர் படிக்கஅவரது பக்கம் நின்று காதால் கேட்டாலும்கேட்டதை ஆர்வத்தால் உள்ளத்தில் உணர்ந்தாலும்இழுத்தாலும்பிடித்தாலும்கட்டி அணைத்தாலும்எப்படி அனுபவித்தாலும்தித்திக்கும் ஏற்றம் உடையது. வெயில் வெம்மையால் வெதும்பியும்மேல் தோல் சுருங்கியும் கனிகின்ற உலகியல் கனி போல அல்லாமல்தனக்கு உரிய நலம் சிறிதும் குறைதல் இல்லாமல்,இனிய சுவையைத் தருகின்ற கனிசிவக்கனி ஆகும். அது உண்மை வடிவானது. மேலான அறிவு வடிவானது. குறையாத இன்பம் ஒன்றையே தருவது. அதுவே சச்சிதானந்தக் கனி ஆகும்.

 

     சத்து --- உண்மைமெய்ம்மை. சித்து --- அறிவு. ஆனந்தம். மெய்ம்மை அறிவானந்தம். உண்மை அறிவானந்தம். சச்சிதானந்தம்.

 

 பார்த்தாலும்,நினைத்தாலும்,படித்தாலும்,படிக்கப்

     பக்கம்நின்று கேட்டாலும்,பரிந்து உள் உணர்ந்தாலும்,

ஈர்த்தாலும்,பிடித்தாலும்,கட்டி அணைத்தாலும்,

     இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே!

வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறுங் கனியே!

     மெய்ம்மைஅறிவு ஆனந்தம் விளக்கும்அருள் அமுதே!

தீர்த்தா என்று அன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்

     தெய்வநடத்து அரசே! என் சிறுமொழி ஏற்று அருளே.      --- திருவருட்பா.

 

இதன் பொருள் ---

 

     கண்களால் பார்த்தாலும்மனத்தால் நினைத்தாலும்வாயால் படித்தாலும்பிறர் படிக்கப் பக்கத்தே நின்று செவியால் கேட்டாலும்கேட்ட பொருளை ஆர்வத்தோடு உள்ளத்தில் உணர்ந்தாலும்கைகளால் இழுத்தாலும்பிடித்தாலும்கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கின்ற இனிய சுவை பொருந்திய கரும்பு போல்பவனே! வெம்மையுற்றுக் கயங்காமல் கனிந்து முதிர்ந்த மணமிக்க கனி போல்பவனே! சத்துசித்துஆனந்தமாகிய மூன்றையும் (சச்சிதானந்த்ம்) விளங்கச் செய்யும் திருவருள் ஞான அமுதமே! தீர்த்தனே என்று மெய்யன்பர்கள் எல்லாம் தொழுது வணங்க அம்பலத்தின் தெய்வ நடம் புரிகின்ற சிவபெருமானே! சிறியவனாகிய எனது சொல் மாலையை ஏற்று அருளுவாயாக.

 

     உலகியல் பொருள்களால் உண்டாகும் சுவை ஒன்றுக்கு ஒன்று மாறுபடும். சிறிதே உண்டால் இனிக்கும். நலம் தரும். மேலும் உண்டால் தெவிட்டும். கேடும் தரும். மாறாத சுவை தரும் பொருள் ஒன்று உண்டா என்று ஆராய்ந்தால்அது பரம்பொருள் ஒன்றுதான். அது எல்லாவற்றிலும் சுவை மிக்கது. எனவேஅவனையே மேலான தலைவனாகக் கொண்டுமாறாத இன்பநிலை அடைவோம். காரைக்கால் அம்மையார் பெற்ற பேற்றினைப் பெற முயல்வோம்.

 

     "குமரனை மெய்யன்பினால் மெல்ல மெல்ல உள்ளஅரும்பும் தனிப் பரமானந்தம் தித்தித்து அறிந்த அன்றேகரும்பும் துவர்த்துசெந்தேனும் புளித்துஅறக் கைத்ததுவே" என்று அருணகிரிநாதர் காட்டியபடிமுருகனை மெய்யன்பினால் மெல்ல மெல்ல நினைக்கஅந்த நினைப்பினால் ஒப்பற்ற பெரிய இன்பமானது தோன்றும். அதனைத் துய்த்து அனுபவித்த அப்பொழுதேஅதுவரை அனுபவித்து வந்த கரும்பு துவர்த்துப் போனது. தேனும் புளித்துப் போனது.

 

                       இனியவற்றுள் எல்லாம் இனிமையானது இறையின்பம்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...