மதுரை --- 0969. புருவச் செஞ்சிலை

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

புருவச் செஞ்சிலை (மதுரை)

 

முருகா! 

விலைமாதர் வசமாகி அழியாமல்

தேவரீரது திருவடியைப் பணிய அருள்.

 

 

தனனத் தந்தன தந்தன தனதன

     தனனத் தந்தன தந்தன தனதன

          தனனத் தந்தன தந்தன தனதன ...... தனதான

 

 

புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி

     யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி

          பொரமுத் தந்தரு மிங்கித நயவித ...... மதனாலே

 

புகலச் சங்கிசை கண்டம தனிலெழ

     உருவச் செந்துவர் தந்தத ரமுமருள்

          புதுமைத் தம்பல முஞ்சில தரவரு ...... மனதாலே

 

பருகித் தின்றிட லஞ்சுக மெனமன

     துருகிக் குங்கும சந்தன மதிவியர்

          படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல ...... வியினாலே

 

பலருக் குங்கடை யென்றெனை யிகழவு

     மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு

          பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி ......பணிவேனோ

 

திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை

     வரவச் சங்கொடு வந்திடு முழையுடல்

          சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி ...... சிரனோடு

 

திரமிற் றங்கிய கும்பக னொருபது

     தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு

          சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ் ......மருகோனே

 

மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள்

     சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகை

          மலையத் தன்தரு சங்கரி கருணைசெய் ......முருகோனே

 

வடவெற் பங்கய லன்றணி குசசர

     வணையிற் றங்கிய பங்கய முகதமிழ்

          மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

புருவச் செஞ்சிலை கொண்டுரு கணைவிழி

     எறிய,கொங்கை இரண்டு எனும் மதகரி

          பொரமுத்தம் தரும் இங்கித நயவிதம் ...... அதனாலே,

 

புகலச் சங்கு இசை கண்டம் அதனில் எழ,

     உருவச் செம் துவர் தந்த அதரமும்,அருள்

          புதுமைத் தம்பலமும்சில தர வரும் ...... மனதாலே

 

பருகித் தின்றிடல்ம் சுகம் என மனது

     உருகி,குங்கும சந்தன மதி வியர்

          படிய,சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கல ...... வியினாலே,

 

பலருக்கும் கடை என்று எனை இகழவும்,

     மயலைத் தந்டு அரு மங்கையர் தமை,வெகு

          பலமில் கொண்டிடு வண்டனும் உனது அடி ...பணிவேனோ?

 

திருவைக் கொண்டு ஒரு தண்டக வனமிசை

     வரஅச்சம் கொடு வந்திடும் உழைஉடல்

          சிதறக் கண்டக வெம் கரனொடுதிரி ...... சிரனோடு,

 

திரமில் தங்கிய கும்பகன்ருபது

     தலைபெற்று உம்பரை வென்றிடும் அவனொடு

          சிலையில் கொன்ற முகுந்தன் நல்அகம் மகிழ்...மருகோனே!

 

மருவைத் துன்றிய பைங்குழல் உமையவள்,

     சிவனுக்கு அன்பு அருள் உம்பிகை,கவுரிகை,

          மலைஅத்தன் தரு சங்கரி,கருணைசெய் ......முருகோனே!

 

வடவெற்பு அங்கு அயல் அன்று அணி குச சர

     வணையில் தங்கிய பங்கய முக! தமிழ்

          மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே.

 

பதவுரை

  

            திருவைக் கொண்டு ஒரு தண்டகவன(ம்) மிசை வர--- திருமகள் ஆகிய சீதாதேவியைக் கொண்டு ஒப்பற்ற தண்டகாரணியத்திற்குஇராமபிரான்இலக்குவனுடன் வர,

 

            அச்சம் கொடு வந்திடும் உழை உடல் சிதற--- (அந்த இடத்திற்கு) அச்சத்தோடு,வந்து உலாவிய மாரீசன் ஆகிய பொன்மான் உடல் சிதறிப் போக,

 

            கண்டக வெம்கரனொடு --- கொடியவன் ஆன கரனும்,

 

            திரிசிரனொடு--- திரிசிரனும்,

 

            திரமில் தங்கிய கும்பகன்--- வலிமை பொருந்திய கும்பகருணன் ஆகியவர்களோடு,

 

            ஒரு ப(த்)து தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு--- பத்துத் தலைகளைப் பெற்று இருந்து தேவர்களை வென்றவன் ஆன இராவணனோடுயாவரையும்,

 

           சிலையில் கொன்ற முகுந்தன் நலம் மகிழ் மருகோனே --- வில்லினால் கொன்று அழித்த முகுந்தன் ஆகிய இராமச்சந்திரன் உள்ளம் மகிழ்கின்ற திருமருகரே!

 

            மருவைத் துன்றிய பைம்குழல் உமையவள்--- நறுமணம் பொருந்திய பசுமையான கூந்தலை உடைய உமாதேவியும்,

 

           சிவனுக்கு அன்பு அருள் அம்பிகை--- சிபெருமானுக்கு அன்பைத் தருகின்ற அம்பிகையும்,

 

           கவுரிகை--- பொன்ற நிறம் உடையவளும்,

 

           மலை அத்தன் தரு சங்கரி--- மலையரசன் தந்தவளும் ஆன சங்கரி,

 

          கருணைசெய் முருகோனே--- கருணை புரிகின்ற முருகப் பெருமானே!

 

           வடவெற்பு அங்கு அயல்--- வடக்கே உள்ள இமயமலைக்கு அருகில்,

 

           அன்று--- அக்காலத்தில்,

 

          அணி குசம் சரவணையில் தங்கிய--- அழகிய தருப்பை வளர்ந்து உள்ள சரவணப் பொய்கையில் த்தங்கி வளர்ந்த,

 

          பங்கய முக--- தாமரை போன்ற திருமுகத்தை உடையவரே!

 

            தமிழ் மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் பெருமாளே--- தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் சங்கிலி மண்டபத்தில் வீற்றிருக்கின்றதேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

 

            புருவச் செம்சிலை கொண்டு--- புருவம் ஆகிய அழகிய வில்லைக் கொண்டு,

 

           இருகணை விழி எறிய--- இரண்டு கண்கள் ஆகிய அம்புகளைத் தொடுத்து,

 

          கொங்கை இரண்டு எனும் மதகரி பொர--- கொங்கைகள் ஆகிய இரண்டு யானைகள் போர் புரிய.

 

         முத்தம் தரும் இங்கித நயவிதம் அதனாலே--- முத்தங்களைப் பொழிகின்ற இனிமையான உபசார விதங்களினாலே

 

          புகலச் சங்கு இசை கண்டம் அதனில் எழ--- பேசுகையில் சங்கின் ஒலியானது கண்டத்தில் எழ,

 

          உருவச் செம்துவர் தந்த அதரமும் அருள்--- பவள நிற்ம பொருந்திய வாயிதழால் இருகின்ற எச்சிலோடு,

 

         புதுமைத் தம்பலமும் சில தர வரு(ம்) மனதாலே--- புதுமையானதாம்பூலத்தையும் கொடுக்க, (அதனால்மனதில் உணர்ச்சி கிளர்ந்து எழ.

 

         பருகித் தின்றிடல் அம்சுகம் என--- தருகின்ற எச்சிலையும்தாம்பூலத்தையும் உண்ணுதல் நல்ல சுகம் என்று,

 

         மனது உருகி--- மனமானது உருகி,

 

         குங்கும சந்தன அதி வியர் படிய--- உடம்பில் பூசியுள்ள குங்குமமும்சந்தனமும்அதிக வேர்வையோடு படிய,

 

         சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கலவியினாலே--- மகிழ்ச்சியும்இன்பமும் தருகின்ற புணர்ச்சியிலே ஈடுபட்டு,

 

         பலருக்கும் கடை என்று எனை இகழவும்--- பலரிலும் கடையவன் என்று என்னை இகழும்படியா,

 

            மயலைத் தந்து--- காம மயக்கத்தைத் தருகின்,

 

           அருமங்கையர் தமை --- அரிய விலைமாதர்களை,

 

           வெகு பலமில் கொண்டிடு வண்டனும்--- உறுதியாகப் பற்றிக் கொண்டுள்ள தீயவன் ஆகிய நான்,

 

          உனது அடி பணிவேனோ --- தேவரீரது திருவடியைப் பணிய மாட்டேனா?

 

பொழிப்புரை

 

     திருமகள் ஆகிய சீதாதேவியைக் கொண்டு ஒப்பற்ற தண்டகாரணியத்திற்குஇராமபிரான்இலக்குவனுடன் வர,அந்த இடத்திற்கு அச்சத்தோடுவந்து உலாவிய மாரீசன் ஆகிய பொன்மான் உடல் சிதறிப் போக,கொடியவன் ஆன கரனும்திரிசிரனும்வலிமை பொருந்திய கும்பகருணன் ஆகியவர்களோடுபத்துத் தலைகளைப் பெற்று இருந்து தேவர்களை வென்றவன் ஆன இராவணனோடுயாவரையும்,வில்லினால் கொன்று அழித்த முகுந்தன் ஆகிய இராமச்சந்திரன் உள்ளம் மகிழ்கின்ற திருமருகரே!

 

            நறுமணம் பொருந்திய பசுமையான கூந்தலை உடைய உமாதேவியும்,சிபெருமானுக்கு அன்பைத் தருகின்ற அம்பிகையும்பொன்ற நிறம் உடையவளும்மலையரசன் தந்தவளும் ஆன சங்கரி கருணை புரிகின்ற முருகப் பெருமானே!

 

            வடக்கே உள்ள இமயமலைக்கு அருகில்அக்காலத்தில்அழகிய தருப்பை வளர்ந்து உள்ள சரவணப் பொய்கையில் தங்கி வளர்ந்ததாமரை போன்ற திருமுகத்தை உடையவரே!

 

     தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் சங்கிலி மண்டபத்தில் வீற்றிருக்கின்றதேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

 

            புருவம் ஆகிய அழகிய வில்லைக் கொண்டுஇரண்டு கண்கள் ஆகிய அம்புகளைத் தொடுத்துகொங்கைகள் ஆகிய இரண்டு யானைகள் போர் புரிய.முத்தங்களைப் பொழிகின்ற இனிமையான உபசார விதங்களினாலேபேசுகையில் சங்கின் ஒலியானது கண்டத்தில் எழபவள நிறம் பொருந்திய வாயிதழால் தருகின்ற எச்சிலோடுபுதுமையானதாம்பூலத்தையும் கொடுக்கஅதனால்மனதில் உணர்ச்சி கிளர்ந்து எழதருகின்ற எச்சிலையும்தாம்பூலத்தையும் உண்ணுதல் நல்ல சுகம் என்று மனமானது உருகிஉடம்பில் பூசியுள்ள குங்குமமும்சந்தனமும்அதிக வேர்வையோடு படிய மகிழ்ச்சியும்இன்பமும் தருகின்ற புணர்ச்சியிலே ஈடுபட்டு,

பலரிலும் கடையவன் என்று என்னை இகழும்படியா,காம மயக்கத்தைத் தருகின்அரிய விலைமாதர்களைஉறுதியாகப் பற்றிக் கொண்டுள்ள தீயவன் ஆகிய நான்தேவரீரது திருவடியைப் பணிய மாட்டேனா?

 

விரிவுரை

 

புருவச் செம்சிலை கொண்டு--- 

 

பெண்களின் புருவத்தை வில்லுக்கு உவமையாக்குவது கவி மரபு.

 

இருகணை விழி எறிய--- 

 

பெண்களின் கண்களை அம்புக்கு உவமை கூறுவர். 

 

புருவமாகிய வில்லில்இரண்டு கண்கள் ஆகிய அம்புகளைத் தொடுத்துப் போர் புரிவர் விலைமாதர்கள்.

 

கொங்கை இரண்டு எனும் மதகரி பொர--- 

 

பெண்களின் பருத்த கொங்கைகளை யானையின் மத்தகத்துக்கு உவமை கூறுவர்.

 

முத்தம் தரும் இங்கித நயவிதம் அதனாலே புகலச் சங்கு இசை கண்டம் அதனில் எழஉருவச் செம்துவர் தந்த அதரமும் அருள்புதுமைத் தம்பலமும் சில தர வரு(ம்) மனதாலே பருகித் தின்றிடல் அம்சுகம் என மனது உருகி--- 

 

இதயோடு இதழ் பதித்து முத்தங்களைப் பொழிந்துவந்தவர் மனம் மகிழ்ந்து பொருளைத் தருவதற்கு இசைவாக உபசாரமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டேதொண்டையில் விதவிதமான குரல்களை எழுப்பிசரசம் புரிந்துவாய் உள்ள எச்சிலையும் உண்ணத் தருவர். வாயில் தரித்துள்ள தாம்பைலத்தையும் மென்று வாயில் தருவர். காமுகர்கள் அதை இனிமையானது எனக் கருதி உண்டு உள்ளம் மகிழ்வர்.

 

     அந்த எச்சிலானதுபாலும் தேனும் கலந்தது போல இனிக்கும்.

 

"பாலொடு தேன் கலந்து அற்றேபணிமொழி

வால்எயிறு ஊறிய நீர்".                    --- திருக்குறள்.

 

 

குங்கும சந்தன அதி வியர் படிய--- 

 

கலவியில் ஈடுபட்டு இருக்கும்போதுவிலைமாதர் தமது மேனியில் பூசியுள்ளசந்தனக் குழம்புகுங்குமம் ஆகியவற்றோடுவியர்வை கலந்து படியும்.

 

சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கலவியினாலே--- 

 

சம்பிரமம் --- மகிழ்ச்சிபரபரப்புமனக்களிப்புசிறப்புசிறைவு.

 

ரஞ்சிதம் --- இன்பம்.

 

திருவைக் கொண்டு ஒரு தண்டகவன(ம்) மிசை வரஅச்சம் கொடு வந்திடும் உழை உடல் சிதறகண்டக வெம்கரனொடுதிரிசிரனொடு திரமில் தங்கிய கும்பகன்ஒரு ப(த்)து தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு சிலையில் கொன்ற முகுந்தன்--- 

 

அயோத்தியை விட்டு வனவாசம் புகுந்த இரகுராமர்,சீதாதேவியோடும்இலக்குவனோடும் தண்டகாரணியத்தில் தங்கி இருந்து காலத்தில்இராவணனின் தங்கையான சூர்ப்பணகையின் தூண்டுதலால்சீதாதேவியைக் கவர்ந்து செல்ல ஏதுவாகமாரீசன் என்பவனை மாயமாளா உருக்கொள்ளும்படி அனுப்பினான் இராவணன். அவன் விரும்பி வரவில்லை. அச்சத்தோடுதான் வந்தான். அவன் இராம்பிரானது கணையினால் மடிந்தான். கரனும்திரிசிரனும் மடிந்தார்கள்.

 

திரம் --- உறுதி. திரம் என்னும் சொல் வடமொழியில் "ஸ்திரம்" என வழங்கப்படுகின்றது.

 

இராவணனை விட்டுவிபீடணர் நீங்கியபோதுகும்பகருணன் மட்டும் உறுதியாக இலங்கையில் இருந்தார். போரில்கும்பகருணனையும்இராவணனையும் இராமபிரான் ஒப்பற்ற அம்பினால் வென்றார்.

 

வடவெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில் தங்கியபங்கய முக---

 

வடவெற்பு --- இமயமலை.

 

குசம் --- தருப்பை.

 

சரவணை --- சவரணப் பொய்கை. 

 

வெண்மையான ஒளி விளங்குகின்றஅழகிய திருக்கயிலை மலையில்தொடுக்கப் பெற்ற அழகிய பூமாலையினை அணிந்த உமாதேவியாரை தமது இடப்பாகத்திலே வீற்றிருக்கப் பெற்ற மூன்று திருக் கண்களை உடைய மேலான சோதி வடிவாகிய சிவபெருமான்ஒருநாள் கொடிய அசுரர்கள் செய்யும் துன்பத்தைத் தாங்க இயலாத தேவர்களின் முறையீட்டிற்குத் திருவுள்ளம் இரங்கி,  தமது ஈசானம்தற்புருடம்அகோரம்வாமதேவம்சத்தியோசாதம் என்னும் ஐந்து திருமுகங்களுடன்,கீழ் நோக்கிய திருமுகம் ஒன்றினையும் கொண்டுஆறு திருமுகங்களை உடையவராய்செந்தழல் வடிவாகிய ஆறு நெற்றிக் கண்களின் நின்றும்ஒரே சமயத்தில் ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தஅத்தீப் பொறிகள் விரிந்து நின்ற உலகங்கள் எங்கும் பரவ,  அவற்றைத் தேவர்கள் கண்டு பயப்படவும்அதனை அறிந்து பொங்கிய அத் தீப்பொறிகளின் திரட்சியினைத் தம் அழகிய திருக் கரத்தால் உடனே அவ்விடத்தினின்றும் எடுத்துஅவற்றின் வேகத்தை அடக்கிவாயுதேவனை நோக்கி,  'நீ இவற்றை எடுத்துச் செல்வாயாகஎன்று சிவபெருமான் அவனிடம் கொடுத்து அருளவாயுதேவனும் அவற்றைப் பெற்று மெல்லக் கொண்டு சென்றுதன்னால் இயலாமல்தன்னை அடுத்து நிற்பவனாகிய அக்கினி தேவனை நோக்கி,  'ஒப்பற்ற ஐம்பூதங்களுக்குத் தலைவனாய் உள்ள அக்கினித் தேவனேநீ இப்பொறிகளை எடுத்துச் செல்வாயாகஎன்று கூறி அவனிடம் கொடுக்கஅக்கினி தேவனும் அவற்றைப் பெற்றுத் தாங்க இயலாமல் சென்றுகுளிர்ந்த கங்கை ஆற்றில் கொண்டுபோய் விடுக்க,அந்த கங்காதேவியும் அவற்றைச் சிறிது நேரமும் தாங்கிக் கொண்டு இருப்பதற்கு வலிமை அற்றவளாய்தனது தலைமீது தாங்கிச் சென்று சரவணப் பொய்கையில் விடுக்கஅவ்விடத்து அத்தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளின் திருவுருவங்களாய்,தாமரை ஒத்த திருமுகங்களுடன் முருகப் பெருமான் திருவவதாரம் புரிந்தார்.

 

ஆரணன் விண்ணகம் அச்சுதன் புவி

வாரணன் முதலிய மாதிரத்து உ(ள்)ளோர்

ஏரண அமரர்கள் எண்டதிக்கு ஆகியே

சீரணி சரவணஞ் சேர்ந்து போற்றினார். 

 

கங்கையும் ஒல்கப் புக்க கடுங்கனல் கடவுட் சோதி

அங்கு இரு மூன்று முன்னர் அம்மைவாழ் இமையச் சாரல்

தங்கிய கமலம் பூத்த சரவணம் புகலும்,முக்கண்

புங்கவன் அருளால் தொன்மை போன்றது வறத்தல் இன்றி.

 

விண்ணிடை இழிந்த காலின் மேவரு கனலில் தோன்றும்

வண்ண ஒண் கமலம் செய்ய முளரியை மாறதாகத்

தண்ணளி யோடு நல்கித் தரித்தெனச் சரவணப் பேர்க்

கண்ணகன் பொய்கை ஈசன் கண்தழல் மிசைக்கொண்டு அன்றே.   

 

அருவமும் உருவும் ஆகி,அநாதியாய்,பலவாய்ன்றாய்,

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு அது ஓர் மேனியாகக்

கருணைகூர் முகங்கள் ஆறும்,கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய.

 

எனவரும் கந்தபுராணப் பாடல்களை நோக்குக.

 

தமிழ் மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் பெருமாளே--- 

 

தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் சங்கிலி மண்டபம் என்பதுஇக்காலத்தில்,"கிளி மண்டபம்" என வழங்கப்படுகின்றது.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் வசமாகி அழியாமல்தேவரீரது திருவடியைப் பணிய அருள்.

 

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...