சீகாழி - 0787. மதனச்சொல் கார





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மதனச்சொல் கார (சீகாழி)

முருகா!
விலைமாதர் மயக்கில் அழியாமல்,
உமது திருவடிச் சேவையில் வாழ்வு பெற அருள்.


தனனத்தத் தானத் தானன
     தனனத்தத் தானத் தானன
     தனனத்தத் தானத் தானன ...... தனதான

மதனச்சொற் காரக் காரிகள்
     பவளக்கொப் பாடச் சீறிகள்
     மருளப்பட் டாடைக் காரிக ...... ளழகாக

மவுனச்சுட் டாடிச் சோலிகள்
     இசலிப்பித் தாசைக் காரிகள்
     வகைமுத்துச் சாரச் சூடிகள் ...... விலைமாதர்

குதலைச்சொற் சாரப் பேசிகள்
     நரகச்சிற் சாடிப் பீடிகள்
     குசலைக்கொட் சூலைக் காலிகள் ...... மயல்மேலாய்க்

கொளுவிக்கட் டாசைப் பாசனை
     பவதுக்கக் காரச் சூதனை
     குமுதப்பொற் பாதச் சேவையி ...... லருள்வாயே

கதறக்கற் சூரைக் கார்கட
     லெரியத்திக் கூறிற் பாழ்பட
     ககனக்கட் டாரிக் காயிரை ...... யிடும்வேலா

கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி
     யுறைபச்சைப் பாசக் கோகில
     கவுரிப்பொற் சேர்வைச் சேகர ...... முருகோனே

திதலைப்பொற் பாணிக் கார்குயி
     லழகிற்பொற் றோகைப் பாவையை
     தினமுற்றுச் சாரத் தோள்மிசை ...... யணைவோனே

திலதப்பொட் டாசைச் சேர்முக
     மயிலுற்றிட் டேறிக் காழியில்
     சிவன்மெச்சக் காதுக் கோதிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மதனச்சொல் காரக் காரிகள்,
     பவளக் கொப்பு ஆடச் சீறிகள்,
     மருளப் பட்டாடைக் காரிகள், ...... அழகாக

மவுனச் சுட்டு ஆடிச் சோலிகள்,
     இசலிப் பித்து ஆசைக் காரிகள்,
     வகைமுத்துச் சாரச் சூடிகள், ...... விலைமாதர்,

குதலைச் சொல் சாரப் பேசிகள்,
     நரக அச்சில் சாடிப் பீடிகள்,
     குசலைக் கொள் சூலைக் காலிகள், ...... மயல்மேலாய்க்

கொளுவிக்கட்டு ஆசைப் பாசனை,
     பவ துக்கக் காரச் சூதனை,
     குமுதப்பொன் பாதச் சேவையில் ...... அருள்வாயே.

கதறக் கல் சூரைக் கார்கடல்
     எரியத் திக்கு ஊறில் பாழ்பட,
     ககனக் கட்டாரிக்காய் இரை ...... இடும்வேலா!

கதிர் சுற்றிட்டு ஆசைப் பால்கிரி
     உறை பச்சைப் பாசக் கோகில
     கவுரிப் பொன் சேர்வைச் சேகர ...... முருகோனே!

திதலைப் பொன் பாணிக் கார்குயில்,
     அழகில் பொன் தோகைப் பாவையை
     தினம்உற்றுச் சாரத் தோள்மிசை ...... அணைவோனே!

திலதப் பொட்டு ஆசைச் சேர்முக
     மயில் உற்றிட்டு ஏறிக் காழியில்
     சிவன் மெச்சக் காதுக்கு ஓதிய ...... பெருமாளே.

பதவுரை

     கல் சூரைக் கதற --- கிரவுஞ்ச மலை அழிவுறும்படியும்,
    
     கார் கடல் எரிய --- கரிய கடல் வற்றி எரியவும்,

     திக்கு ஊறில் பாழ்பட --- எட்டுத் திசைகளும் ஊறு பட்டுப் பாழாகவும்,

     ககனக் கட்டாரிக்காய் இரை இடும் வேலா --- அரக்கர்களின் சேனைகளை வாளுக்கு இரையாகும்படிச் செய்த வேலவரே!

      கதிர் சுற்றிட்ட ஆசைப் பால் --- கதிரவன் விரும்பி வலம் வருகின்ற திசையில் உள்ள

     கிரி உறை --- திருக்கயிலாய மலையில் உறைகின்,

     பச்சைப் பாசக் கோகில கவுரி பொன் சேர்வைச் சேகர முருகோனே --- பச்சை நிறமுள்ள குயில் போன்ற பார்வதி தேவி (உம்மைத் தழுவிக் கொள்ளுதலால், அவரது) அழகிய மார்பகத்தில் பூசியுள்ள சந்தனக் கலவை உமது உடம்பில் பூசியது போல் உள்ள முருகப் பெருமானே!

      திதலை --- தேமலை உடையவளும்,

    போன் பாணிக் கார்குயில் --- அழகும் அன்பும் உடையவளும், கரிய குயில் போன்று இனிய சொல்லை உடையவளும்,

     அழகில் பொன் தோகைப் பாவையை --- அழகு மிக்க மயில் போன்ற சாயலை உடையவளும், பதுமையைப் போன்றவளும் ஆகிய வள்ளிநாயகியை,

     தினம் உற்றுச் சாரத் தோள்மிசை அணைவோனே ---  நாள்தோறும் தழுவும் பொருட்டு அவள் தோளை அணைந்தவரே!

      திலதப் பொட்டு ஆசைச் சேர் முக --- திலகப் பொட்டினைத் திருநெற்றியில் விரும்பி அணிந்த திருமுகத்தை உடையவரே!

     மயில் உற்றிட்டு ஏறி --- மயில் வாகனத்தின் மீது இவர்ந்து வருபவரே!

     காழியில் சிவன் மெச்சக் காதுக்கு ஓதிய பெருமாளே ---சீகாழி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமான் மெச்ச அவர் திருச்செவியைச் சிறப்பித்துத் தேவாரத் திருப்பதிகத்தை அருளிய பெருமையில் மிக்கவரே!

      மதனச் சொல் காரக் காரிகள் --- காம உணர்வைத் தூண்டும் சொற்களைப் பேசுபவர்கள்.

     பவள கொப்பு ஆடச் சீறிகள் --- காதில் உள்ள பவளத் தோடு ஆடும்படி பெருங்கோபம் கொள்பவர்கள்.

     மருளப் பட்டு ஆடைக்காரிகள் --- கண்டோர் மருளும்படி பட்டு ஆடைகளை உடுத்தியவர்கள்.

    அழகாக மவுனச்சுட்டு ஆடிச் சோலிகள் --- அழகாக, வாய் பேசாமலேயே (தங்களுக்கு வேண்டியதைச்) சுட்டிக் காட்டி (காரியத்தைச்) சாதிப்பவர்கள்.

      இசலிப் பித்து ஆசைக்காரிகள் --- பிணக்கத்தின் வழி தமது ஆசையை வெளியிடுபவர்கள்.

     வகை முத்துச்சாரச் சூடிகள் --- பல வகையான முத்து மலைகளைச் சூடுபவர்கள்.

     விலைமாதர் --- உடலை விலைக்கு விற்பவர்கள்.

     குதலைச் சொல் சாரப் பேசிகள் --- மழலைச் சொற்களைச் சரசமாகப் பேசுபவர்கள்.

     நரக அச்சில் சாடிப் பீடிகள் --- (தம்மை நாடி வந்த ஆடவரை) நரகத் துன்பத்தில் வீழ்த்துபவர்கள்.

      குசலைக் கொள் சூலைக் காலிகள் --- தமது தொழிலுக்குத் தடையாக, கரு உண்டாகாமல் செய்பவர்கள்.

     மயல் மேலாய்க் கொளுவிக்கட்டு --- இத்தகைய விலைமாதர்கள் மீது கொண்ட மோகத்தால் கட்டுண்டு கிடக்கும்,

     ஆசைப் பாசனை --- ஆசையும் பற்றும் உள்ளவனாகிய என்னை,
        
     பவம் துக்கக் கார சூதனை --- பிறவித் துன்பத்திற்குக் காரணமான வஞ்சகனாகிய என்னை,

     குமுதப் பொன் பாதச் சேவையில் அருள்வாயே --- ஆம்பல் மலர்கள் சேர்ந்துள்ள உமது அழகிய திருவடிச் சேவையில் இருக்குமாறு அருள் புரிவாயாக.


பொழிப்புரை


     கிரவுஞ்ச மலை அழிவுறும்படியும், கரிய கடல் வற்றி எரியவும், எட்டுத் திசைகளும் ஊறு பட்டுப் பாழாகவும், அரக்கர்களின் சேனைகளை வாளுக்கு இரையாகும்படிச் செய்த வேலவரே!

         கதிரவன் விரும்பி வலம் வருகின்ற, திருக்கயிலாய மலையில் உறைகின், பச்சை நிறமுள்ள குயில் போன்ற பார்வதி தேவி உம்மைத் தழுவிக் கொள்ளுதலால், அவரது அழகிய மார்பகத்தில் பூசியுள்ள சந்தனக் கலவை உமது உடம்பில் பூசியது போல் உள்ள முருகப் பெருமானே!

         தேமலை உடையவளும், அழகும் அன்பும் உடையவளும், கரிய குயில் போன்று இனிய சொல்லை உடையவளும், அழகு மிக்க மயில் போன்ற சாயலை உடையவளும், பதுமையைப் போன்றவளும் ஆகிய வள்ளிநாயகியை, நாள்தோறும் தழுவும் பொருட்டு அவளது திருத்தோள்களை அணைந்தவரே!

         திலகப் பொட்டினைத் திருநெற்றியில் விரும்பி அணிந்த திருமுகத்தை உடையவரே!

     மயில் வாகனத்தின் மீது இவர்ந்து வருபவரே!

     சீகாழி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமான் மெச்ச அவர் திருச்செவியைச் சிறப்பித்துத் தேவாரத் திருப்பதிகத்தை அருளிய பெருமையில் மிக்கவரே!

         காம உணர்வைத் தூண்டும் சொற்களைப் பேசுபவர்கள். காதில் உள்ள பவளத் தோடு ஆடும்படி பெருங்கோபம் கொள்பவர்கள். கண்டோர் மருளும்படி பட்டு ஆடைகளை உடுத்தியவர்கள். அழகாக, வாய் பேசாமலேயே தங்களுக்கு வேண்டியதைச் சுட்டிக் காட்டி காரியத்தைச் சாதிப்பவர்கள். பிணக்கத்தின் வழி தமது ஆசையை வெளியிடுபவர்கள். பல வகையான முத்து மலைகளைச் சூடுபவர்கள். உடலை விலைக்கு விற்பவர்கள். மழலைச் சொற்களைச் சரசமாகப் பேசுபவர்கள். தம்மை நாடி வந்த ஆடவரை நரகத் துன்பத்தில் வீழ்த்துபவர்கள். தமது தொழிலுக்குத் தடையாக, கரு உண்டாகாமல் செய்பவர்கள். இத்தகைய விலைமாதர்கள் மீது கொண்ட மோகத்தால் கட்டுண்டு கிடக்கும், ஆசையும் பற்றும் உள்ளவனாகிய என்னை, பிறவித் துன்பத்திற்குக் காரணமான வஞ்சகனாகிய என்னை, ஆம்பல் மலர்கள் சேர்ந்துள்ள உமது அழகிய திருவடிச் சேவையில் இருக்குமாறு அருள் புரிவாயாக.


விரிவுரை


மதனச்சொல் காரக் காரிகள் ---

மதனம் - காமம்.

காரி - பெண்பால் விகுதி.

காம உணர்வைத் தூண்டும் சொற்களைப் பேசுபவர்கள் விலைமாதர்கள்.

பவள கொப்பு ஆடச் சீறிகள் ---

சீறுதல் - சினத்தல், கோபித்தல்.

காதில் உள்ள பவளத் தோடு ஆடும்படியாகத் தலையை ஆட்டிப் பெருங்கோபம் கொண்டு பேசுபவர்கள் விலைமாதர்கள். தமக்குத் தருவதற்குப் பொருள் இல்லாதவரைச் சினந்து பேசி விரட்டுவது அவர் தொழில்.

மருளப் பட்டு ஆடைக்காரிகள் ---

மருளல், மருளுதல் - மயங்குதல், அச்சம் கொள்ளுதல், வியப்புக் கொள்ளுதல்.

தம்மைக் கண்டோர் மயங்கும்படியாகப் பட்டாடைகளை உடுத்திக் கொள்ளுபவர்கள் விலைமாதர்கள்.  

உச்சிட்டத் திரயம் என்பது மூன்று எச்சில்களைக் குறிக்கும். எச்சில் என்றாலே வெறுப்புக்கு உரியது ஆகும். மூன்று எச்சில்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளத்தக்கவை ஆகும்.

1. பசுவின் பால் - பசுவின் மடிக் காம்பில் கன்று வாய் வைத்துச் சுவைத்த பிறகே பால் சுரக்கும். (இக் காலத்தில், கன்றைப் போன்ற ஒன்றைக் காட்டிப் பாலைக் கரக்கும் வழக்கம் உள்ளது. அது பெரும்பாவம்) கன்று உண்ட எச்சிலின் மூலமாகச் சுரக்கும் பாலானது கன்ற எச்சில் ஆகும். அதை யாரும் வெறுப்பது இல்லை. அது இறைவனைப் பூசிப்பதற்கும் உகந்தது.

2. வண்டு எச்சில் எனப்படும் தேன். தேன் உணவாகவும், மருந்தாகவும் பயன்படும். இறைவனைப் பூசிப்பதற்கும் உகந்தது.

3. புழு எச்சில் எனப்படும் பட்டு. இது மிகவும் புனிதமானது. இறைவனுக்குச் சாத்தப் பயன்படுவது. மங்கலமான நிகழ்ச்சிகளின் போதும், இறைவழிபாட்டின் போதும் பயன்படுத்தப்படுவது பட்டு ஆடை. தோஷங்களைத் தவிர்ப்பது. நல்ல உணர்வுகளைத் தூண்டுவது.

இக் காலத்தில், பட்டு என்ற பலவகைகள் வந்து விட்டன. பளபளப்பாக இருப்பவை எல்லாம் பட்டு ஆகாது. பட்டுப் புடவை அறிவு மயக்கத்தைச் செய்யாது.

நன்மை தரும் பட்டுப் புடவைகளை அணிந்துகொண்டு, நன்மை அல்லாத செயல்களைச் செய்வது விலைமாதர்களின் தொழில்.

அழகாக மவுனச்சுட்டு ஆடிச் சோலிகள் ---

சோலி - செயல், தொந்தரவு, முலைக்கச்சு, இரவிக்கை வகை.

சோலி செய்தல் - வேலை செய்தல், நேரம் போக்குதல்.

அழகாக, வாய் பேசாமலேயே, கண்களாலும், செய்கைகளாலும் தங்களுக்கு வேண்டியதைச் சுட்டிக் காட்டிக் காரியத்தைச் சாதித்துக் கொள்பவர்கள் விலைதார்கள்.

இசலிப் பித்து ஆசைக்காரிகள் ---

இசலுதல் - பிணங்குதல்.

பிணக்கத்தைக் காட்டியே தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்பவர்கள்.

வகை முத்துச்சாரச் சூடிகள் ---

பல வகையான முத்து மலைகளைச் சூடுபவர்கள்.

விலைமாதர் ---

உடலை விலைக்கு விற்பவர்கள்.

குதலைச்சொல் சாரப் பேசிகள் ---

முதலை - பொருள் விளங்காத மழலைச் சொல்.

மழலைச் சொற்களை மூக்கினால் சரசமாகப் பேசுபவர்கள்.

நரக அச்சில் சாடிப் பீடிகள் ---

அச்சு - துன்பம்.

தம்மை நாடி வந்த ஆடவரை நரகத் துன்பத்தில் வீழ்த்துபவர்கள்.
   
குசலைக் கொள் சூலைக்காலிகள் ---

குசலை - தடை.

சூல் - கருப்பம் கொள்ளுதல்.

காலி - தீயவழி, வெறுமை, பயனற்றது.

தமது தொழிலுக்குத் தடையாக, கரு உண்டாகாமல் செய்பவர்கள்.

மயல் மேலாய்க் கொளுவிக்கட்டு ஆசைப் பாசனை, பவம் துக்கக் கார சூதனை ---

விலைமாதர்கள் புரியும் சாகசங்களால் மனம் மயங்கி, ஆசை மேலிட்டு, அவர்கள் மீதே பற்றுக் கொண்டு திரிந்து, பொன்னும் பொருளும் நற்பெயரும், குடிப் பெருமையும் மற்றுமுள்ள அனைத்துப் பெருமைகளும் குன்றி, தீவினைகளே மிகுந்து, அதன் பயனாக பிறவி என்னும் துன்பத்தில் விழுகின்ற நிலை வாய்க்கும்.

இதனை அருணகிரிநாதப் பெருமான் பல இடங்களிலும் காட்டி உள்ளார்.

வாதமொடு, சூலை, கண்டமாலை, குலை நோவு, சந்து
     மாவலி, வியாதி, குன்ம ...... மொடு, காசம்,
வாயு உடனே பரந்த தாமரைகள், பீனசம், பின்
     மாதர்தரு பூஷணங்கள்......    என ஆகும்

பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,
     பாயலை விடாது மங்க, ...... இவையால், நின்
பாதமலர் ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,
     பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,

ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று,
     ஈன மிகு சாதியின்கண் ...... அதிலே,யான்
ஈடு அழிதல் ஆனதின் பின், மூடன் என ஓதும் முன்பு, உன்
     ஈர அருள் கூர வந்து ...... எனை ஆள்வாய்.

கல் சூரைக் கதற, கார் கடல் எரிய, திக்கு ஊறில் பாழ்பட ககனக் கட்டாரிக்காய் இரை இடும் வேலா ---

கல் - மலையைக் குறிக்கும்.

மாயைகள் பலவற்றைப் புரிந்த கிரவுஞ்ச மலையானது அஞ்சும்படியாக முருகப் பெருமான் வேலாயுத்ததை ஏவி அருளினார். ஏழு கடல்களும் வற்றிப் போயின. அரக்கர் குலம் முழுதும் விண்ணுலகுக்குச் சென்றது.

கிரவுஞ்ச மலை - வினைத்தொகுதி.
தாரகன் - மாயை. 
சூரபதுமன் - ஆணவம்.
சிங்கமுகன் - கன்மம்.
கடல் - பிறவித் துன்பம்.

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
     இள க்ரவுஞ்சம் தனோடு
      துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
     அழித்தவன் பொன்றுமாறு,
     சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

வேல் - வெல்லும் தன்மை உடையது. பதிஞானம். பதிஅறிவு. "ஞானபூரண சத்தி தரித்து அருள் பெருமாளே" என்றார் பிறிதொரு திருப்புகழில். எல்லாவற்றையும் வெல்லுவது அறிவே. ஆன்மாக்களின் வினையை வெல்லும் தன்மை உடையது வேல்.

அறிவின் தன்மை அஞ்சாமை ஆகும். அஞ்சாமை வீரம் எனப்படும். அறிவின் தன்மை கூர்மை. "கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே" என்பது மணிவாசகம். "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்றார் மணிவாசகர். ஆழ்ந்து இருப்பதும், வெற்றியைத் தருவதும், ஆணவமலத்தையும், வினைகளையும் அறுப்பது அறிவே ஆகும். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் அறுவகைப் பகைகளை அறுப்பதும் அறிவே. ஆதலால், போர்வேல் எனப்பட்டது. அறிவு குறுகி இருத்தல் கூடாது. நீண்டு இருத்தல் வேண்டும். எனவே, வேல், "நெடுவேல்" எனப்பட்டது.

சிவபெருமான் தனது தழல் பார்வையால் மும்மலங்கள் ஆகிய முப்புரங்களையும் எரித்தார். அறுமுகப்பெருமான் தனது திருக்கரத்தில் அமைந்துள்ள ஞானசத்தியாகிய வேலாயுதத்தால் மும்மலங்களையும் அறுத்தார்.

அண்டர் உலகும் சுழல, எண் திசைகளும் சுழல,
அங்கியும் உடன் சுழலவே,
அலை கடல்களும் சுழல, அவுணர் உயிரும் சுழல,
அகில தலமும் சுழலவே,

மண்டல நிறைந்த ரவி, சதகோடி மதிஉதிர,
மாணப் பிறங்கி அணியும்
மணி ஒலியினில் சகல தலமும் அருளச் சிரம
வகை வகையினில் சுழலும் வேல்,.           ---  வேல் விருத்தம்.

தேர் அணிஇட்டுப் புரம் எரித்தான் மகன் செங்கையில்வேல்
கூர் அணிஇட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து, ரக்கர்
நேர் அணிஇட்டு வளைந்த கடகம் நெளிந்தது, சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.  ---  கந்தர் அலங்காரம்.

ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டு உனதாள்
சேர ஒட்டார் ஐவர், செய்வது என் யான்?சென்று தேவர்உய்யச்
சோர நிட்டூரனைச் சூரனைக் கார் உடல் சோரி கக்கக்
கூரகட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே.--- கந்தர் அலங்காரம்.


கதிர் சுற்றிட்ட ஆசைப் பால் கிரி உறை பச்சைப் பாசக் கோகில கவுரி பொன் சேர்வைச் சேகர முருகோனே ---

ஆசை - திசை.

கோகிலம் - குயில்.

கவுரி - பொன்.

பொன் - அழகு.

கதிரவன் விரும்பி வலம் வருகின்ற, பொன்மலையாகிய மேருமலையின் ஒரு புறத்தில் உள்ளது திருக்கயிலாயமலை. அது அறமே உருக்கொண்டது போல் உள்ளது. தூய வெண்ணிறம் உடையது. வெள்ளிமலை என்று புகழப்படுவது. அத் திருமலையில் சிவபெருமான் உமாதேவியோடும், மூத்தபிள்ளையார் இளையபிள்ளையார் ஆகியோரோடும் எழுந்தருளி உள்ளார்.

அண்மைக் காலத்தில் இம்மலையின் ஒரு பாகத்தில் சிந்து நதிச் சார்பிலே ஒரு பெரிய மண்மேட்டைத் தோண்டிப் புதைந்து கிடந்த ஒரு பெருநகரங் கண்டுள்ளார்கள். அதில் சைவப் பெருமைகளும், சரிதங்களும், பழமையும் புலப்படுமாறு பலபொருள்கள் கிடைத்தன. அதிலே ஒன்று - மூன்று சிரமும் நான்கு கைகளும் கொண்டு யோகாசனத்தில் உபதேச மூர்த்தியாய் ஒரு மரத்தடியில் வீற்றிருக்கும் உருவமாய் இதனைச் சுற்றிப் புலி யானை இருடிகள் முதலியன காணப்பெற்றது. இது மேற்குறித்த மும்மூர்த்திக்கு உபதேசித்த ஆசாரியமூர்த்திக் கோலம் போலும். காதுகளைப் பொத்திக்கொண்டு கேட்பதுபோல உள்ள உருவங்களும் பக்கத்திருப்பனவாம். சிவலிங்கம், நந்திதேவர், அம்பிகை முதலிய உருவங்களும் உள்ளன. இவற்றின் விரிவை சர். ஜான் - மார்ஷல் என்பவர் எழுதிய “சிந்து நதிக் கணவாய் நாகரிகம்” (Indus Valley Civilisation) என்னும் நூலுள் காண்க.

திருக்கயிலாய மலையின் சிறப்பைப் பெரியபுராணம் கூறுமாறு காண்க. 

அண்ணல் வீற்றிருக்கப் பெற்றது ஆதலின்
நண்ணும் மூன்று உலகும் நான் மறைகளும்
எண்ணில் மாதவம் செய்யவந்து எய்திய
புண்ணியம் திரண்டு உள்ளது போல்வது.      

நிலவும் எண்இல் தலங்களும் நீடுஒளி
இலகு தண் தளிராக எழுந்தது ஓர்
உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்
மலரும் வெண்மலர் போல்வது அம் மால்வரை.   

மேன்மை நான்மறை நாதமும், விஞ்சையர்
கான வீணையின் ஓசையும், கார்எதிர்
தான மாக்கள் முழக்கமும், தாவில்சீர்
வான துந்துபி ஆர்ப்பும் மருங்கு எலாம்.
        
பனி விசும்பில் அமரர் பணிந்துசூழ்
அனித கோடி அணிமுடி மாலையும்,
புனித கற்பகப் பொன் அரி மாலையும்,
முனிவர் அஞ்சலி மாலையும் முன் எலாம்.   
        
நீடு தேவர் நிலைகளும், வேண்டிடின்
நாடும் ஐம்பெரும் பூதமும் நாட்டுவ
கோடி கோடி குறட்சிறு பூதங்கள்
பாடி ஆடும் பரப்பு அது பாங்கு எலாம்.

நாயகன் கழல் சேவிக்க நான்முகன்
மேய காலம் அலாமையின், மீண்டு அவன்
தூய மால்வரைச் சோதியின் மூழ்கி, ன்று
ஆய அன்னமும் காணாது அயர்க்குமால்.

காதில்வெண் குழையோன் கழல்தொழ நெடியோன்
          காலம்பார்த்து இருந்ததும் அறியான்
சோதிவெண் கயிலைத் தாழ்வரை முழையில்
          துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு
மீது எழு பண்டைச் செஞ்சுடர் இன்று
          வெண்சுடர் ஆனது என்று அதன்கீழ்
ஆதி ஏனம் அதாய் இடக்கல் உற்றான்என்று
         அதனை வநது அணைதரும் கலுழன்.        

அரம்பையர் ஆடல் முழவுடன், மருங்கில்
          அருவிகள் எதிர் எதிர் முழங்க,
வரம்பெறு காதல் மனத்துடன் தெய்வ
          மதுமலர் இருகையும் ஏந்தி
நிரந்தரம் மிடைந்த விமான சோபான
     நீடு உயர் வழியினால் ஏறிப்
புரந்தரன் முதலாம் கடவுளர் போற்றப்
     பொலிவது அத் திருமலைப் புறம்பு.      

வேதநான் முகன்மால் புரந்தரன் முதலாம்
          விண்ணவர் எண்ணிலார், மற்றும்
காதலால் மிடைந்த முதற்பெரும் தடையாம்
          கதிர்மணிக் கோபுரத்து உள்ளான்
பூதவே தாளப் பெருங்கண நாதர்
          போற்றிடப் பொதுவில் நின்று ஆடும்
நாதனார் ஆதி தேவனார் கோயில்
       நாயகன் நந்தி எம் பெருமான்.      

நெற்றியில் கண்ணர், நாற்பெருந் தோளர்,
          நீறு அணி மேனியர் அனேகர்,
பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார்,
          பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார்,
மற்றவர்க்கு எல்லாம் தலைமையாம் பணியும்
          மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான்
         காப்பது அக் கயிலைமால் வரைதான்.    

கையில்மான் மழுவர், கங்கைசூழ் சடையில்
          கதிர்இளம் பிறைநறுங் கண்ணி
ஐயர்வீற் றிருக்கும் தன்மையி னாலும்,
          அளப்பரும் பெருமையி னாலும்,
மெய்யொளி தழைக்கும் தூய்மையி னாலும்,
          வென்றிவெண் குடை அநபாயன்
செய்யகோல் அபயன் திருமனத்து ஓங்கு
          திருக் கயிலாய நீள் சிலம்பு.             

பெருமைக்கு உரிய திருக்கயிலாய மலையில் எம்பெருமானோடு உறைகின், பச்சை நிறமுள்ள குயில் போன்ற பார்வதிதேவியார் தமது திருமார்பில் நறுமணமுள்ள சந்தனக் குழம்பைப் பூசியுள்ளார். இளையபிள்ளையார் ஆகிய முருகப் பெருமானைப் பிராட்டியார் தழுவிக் கொள்ளும்போது, அவரது திருமார்பில் உள்ள சந்தனக் கலவையானது முருகப் பெருமான் திருமார்பிலும் படர்கின்றது என்று அடிகளார் அழகுறக் காட்டி உள்ளார்.

அழகில் பொன் தோகைப் பாவையை தினம் உற்றுச் சாரத் தோள்மிசை அணைவோனே ---

வள்ளிநாயகியைத் தனமும் தழுவி இன்புற மனம் கொண்ட முருகப் பெருமான் அவரது திருக்கோள்களை ஆரத் தழுவிக் கொள்கின்றார்.

மயில் உற்றிட்டு ஏறி ---

மயில் வாகனத்தின் மீது இவர்ந்து வருபவர். ஆதலின் முருகப் பெருமானுக்கு "மயிலேறி" என்று ஒரு பெயர் வழங்குவது உண்டு.

காழியில் சிவன் மெச்சக் காதுக்கு ஓதிய பெருமாளே ---

காழி என்பது சீகாழியைக் குறிக்கும். 

சீகாழியில் சிவபாத இருதயர்க்கும் அவர் துணைவியார் ஆகிய பகவதி அம்மையாருக்கும் திருமகனாக அவதரித்தவர் திருஞானசம்பந்தர். அவருக்கு மூன்றாண்டு நிகழும்போது, பண்டை உணர்வு ஒவ்வொருபோது தோன்றுவது ஆயிற்று. தாம் சிவபெருமானை விட்டுப் பிரிந்த உணர்வு தம்முள் எழும்போது எல்லாம் அவர் வெருக்கொள்வது வழக்கம்.

சிவபாத இருதயர் ஒரு நாள் வழக்கம்போல் நீராடச் சென்றார். பிற்றையார் அழுதுகொண்டே அவரைத் தொடர்ந்து சென்றார். சிவபாத இருதயர் திரும்பிப் பார்த்து, முனிவார் போலப் பிள்ளையாரை விலக்கினார். பிள்ளையார் தனது கால் கொட்டித் தொடர்ந்தார். "உன்செய்கை இது ஆகில், போது" என்று சிவபாத இருதயர் அவரை அழைத்துக் கொண்டு திருக்கோயிலினுள் உள்ள பிரமதீர்த்தக் குளக்கரையை அடைந்தார். இறைவனையே பெருங்காவலாகப் பெற்றவராய், பிள்ளையாரை குளக்கரையில் இருத்தி,நீருள் மூழ்கி அகமருட மந்திரத்தை அனுட்டித்தார்.

குளக் கரையில் இருந்த பிள்ளையார், தந்தையாரைக் காணாது நொடிப் போதும் தரியாதவரானார். அப்போது அவர் உள்ளத்தில் சிவபெருமானை வழிபட்ட முன் உணர்ச்சி தோன்றல் ஆயிற்று. பிள்ளையார் அழத் தொடங்கினார். கண்மலர்களில் நீர் ததும்பியது. கைம் மலர்களைப் பிசைந்தார். மணிவாய் துடித்தது. முன்னைத் தொடர்பு உணர்ந்தோ, தனது பிள்ளைப் பருவத்தாலோ அவர் அழுகின்றார். திருத்தோணிச் சிகரம் பார்த்து, "அம்மே! அப்பா!" என்று அழுதார்.

அடியார் துயரம் தரியாதவராகிய தடங்கருணைப் பெருங்கடல் ஆகிய சிவபெருமான், அவருக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, உமாதேவியாருடன் மழவிடைமேல் எழுந்தருளினார். உமையம்மையாரைப் பார்த்து, "துணை முலைகள் பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு" என்றார். இறைவன் ஆணைப்படியே, உமையம்மையார் தமது திருமுலைகளில் ஊறிய பாலைப் பொன்கிண்ணத்தில் கறந்து, அதில் எண்ணரிய சிவஞானத்தைக் குழைத்து ஊட்டிப் பிள்ளையாரின் அழுகையைத் தீர்த்தார்.

அழுகின்ற பிள்ளையார்
         தமைநோக்கி அருட்கருணை
எழுகின்ற திருவுள்ளத்து
         இறையவர்தாம் எவ்வுலகும்
தொழுகின்ற மலைக்கொடியைப்
         பார்த்து அருளித் "துணைமுலைகள்
பொழிகின்ற பால் அடிசில்
         பொன்வள்ளத்து ஊட்டு" என்ன.

ஆரணமும் உலகு ஏழும்
         ஈன்று அருளி, அனைத்தினுக்கும்
காரணமாய், வளம்பெருகு
         கருணை திரு வடிவான
சீர் அணங்கு, சிவபெருமான்
         அருளுதலும் சென்று அணைந்து,
வார் இணங்கு திருமுலைப்பால்
         வள்ளத்துக் கறந்து அருளி.

எண்ணரிய சிவஞானத்து
         இன்னமுதம் குழைத்து அருளி
"உண் அடிசில்" என ஊட்ட,
         உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்து அருளிக்
         கையிற்பொன் கிண்ணம் அளித்து
அண்ணலை அங்கு அழுகை தீர்த்து
         அங்கணனார் அருள்புரிந்தார்.

பிள்ளையார் தனது தாய்தந்தையர்கள் ஆகிய பராசத்தியாலும், பரமசிவத்தாலும் ஆட்கொள்ளப்பட்டமையால், ஆளுடைய பிள்ளையார் ஆனார். சிவஞானப் பால் உண்டமையால், சிவஞானசம்பந்தர் ஆயினார்.

யாவருக்கும் தந்தைதாய்
         எனும் இவர் இப்படி அளித்தார்
ஆவதனால், ளுடைய
         பிள்ளையாராய், அகில
தேவருக்கும் முனிவருக்குந்
         தெரிவரிய பொருளாகும்
தாவில் தனிச் சிவஞான
         சம்பந்தர் ஆயினார்.

சிவன் அடியே சிந்திக்குந்
         திருப்பெருகு சிவஞானம்,
பவம் அதனை அறமாற்றும்
         பாங்கினில்ஓங் கியஞானம்,
உவமைஇலாக் கலைஞானம்,
         உணர்வரிய மெய்ஞ்ஞானம்,
தவமுதல்வர் சம்பந்தர்
         தாம்உணர்ந்தார் அந்நிலையில்.

சிவபாத இருதயர் சிறிது பொழுதில் தமது கடமைகளை முடித்துக் கரை ஏறினார். பேருணர்வில் பொலிகின்ற தமது பிள்ளையாரைப் பார்த்தார். அவரது கடைவாயில் பால் வழிந்து இருந்தது. வெகுண்டார். "எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டார் யார் காட்டு" என்று ஒரு சிறிய குச்சியை எடுத்து ஓங்கப் போனார். சிறிய பெருந்தகையாரான பிள்ளையார், ஒருகாலை எடுத்து நின்று கண்களில் இருந்து இன்பவெள்ளம் பொழிய உச்சிமேல் தூக்கிய திருக்கையில் ஒருவிரலால் சுட்டிக் காட்டி, விண்ணில் நிறைந்து பெருகும் ஞானஒளி கொண்டு, மழவிடையின்மீது, பண்சுமந்த அரிய மறைகள் வணங்கிப் போற்ற, உமையம்மையாருடன் எண்ணிறந்த கருணைப் பெருக்கால் எழுந்தருளி நிற்கும் திருத்தோணிபுரத்து இறைவரை எதிரே காட்டி, உள் நிறைந்து தேக்கி மேல் எழுந்து பொழிந்த சிவஞானத் திருவாக்கினால், எண்ணிறந்த மறைகளின் முதல் எழுத்தை மெய்யுடனே தொடங்கி எழுதும் வேதங்களை, வளம் வாய்ந்த நெடுந் தமிழால் இப்பேருலகில் உள்ளவர்க்கு உரை சிறந்து பயனளிக்க, பல உயிர்களும் இன்பம் அடைய, தம் திருப்பாடல் இறைவரிடம் செல்கின்ற வகையைப் பெறும் பொருட்டாய், இறைவரது திருச்செவியைச் சிறப்பித்து, செம்மை பொருந்தும்படி தொடங்கிய, `தோடுடைய செவியன்' என்ற மெய்ம் மொழியான திருப்பதிகத்தில், திருப் பிரமபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை அடையாளங்களுடன் சொல்லி `எம்மை இது செய்தவன் இப்பெருமான் அன்றே' என்று தந்தையாருக்குக் கூறியருளினார்.

"எச்சில் மயங்கிட உனக்கு ஈது
         இட்டாரைக் காட்டு" என்று
கைச் சிறியது ஒருமாறு
         கொண்டு ஓச்ச, கால்எடுத்தே
அச்சிறிய பெருந்தகையார்
         ஆனந்தக் கண் துளி பெய்து
உச்சியின் மேல் எடுத்தருளும்
         ஒரு திருக்கை விரல் சுட்டி.

விண் நிறைந்த பெருகு ஒளியால்
         விளங்கும் மழ விடைமேலே
பண் நிறைந்த அருமறைகள்
         பணிந்து ஏத்த, பாவையுடன்
எண்நிறைந்த கருணையினால்
         நின்றாரை எதிர்காட்டி,
உள்நிறைந்து பொழிந்து எழுந்த
         உயர்ஞானத் திருமொழியால்.

எல்லை இலா மறைமுதல்மெய்
         யுடன் எடுத்த எழுதுமறை
மல்லல் நெடுந் தமிழால் இம்
         மாநிலத்தோர்க்கு உரைசிறப்ப,
பல் உயிருங் களிகூர,
         தம்பாடல் பரமர்பால்
செல்லுமுறை பெறுவதற்கு,
         திருச்செவியைச் சிறப்பித்து.

செம்மைபெற எடுத்த திருத்
         "தோடுடைய செவியன்" எனும்
மெய்ம்மை மொழித் திருப்பதிகம்
         பிரமபுரம் மேவினார்
தம்மை அடையாளங்கள்
         உடன் சாற்றி, தாதையார்க்கு
"எம்மை இது செய்த பிரான்
         இவன் அன்றே" எனஇசைத்தார்.

இந்த அருள் வரலாற்றினை அடிகளார் இங்கு நமக்குக் காட்டி, இனிய உணர்வினை ஊட்டினார்.

திருஞானசம்பந்தராக முருக சொரூபம் பெற்ற அபர சுப்பிரமணியர் அவதரித்தார். அவரை அதிட்டித்து முருகப் பெருமான் வேதத்தை, அருந் தமிழால் விரித்துத் தேவாரத் திருப்பதிகங்களை அருளிச் செய்தார். ஆனதால், "ஆன திருப்பதிகம் அருள் இளையோனே" என்று பிறிதொரு திருப்பகழில் பாடினார் அருணை முனிவர்.

கருத்துரை

முருகா! விலைமாதர் மயக்கில் அழியாமல், உமது திருவடிச் சேவையில் வாழ்வு பெற அருள்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...