சீகாழி - 0778. ஒய்யாரச் சிலை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஒய்யாரச் சிலை (சீகாழி)

முருகா!
அடியேன் முத்தி பெற்று உய்ய,
உண்மைப் பொருளை உபதேசித்து அருள்க.


தய்யா தத்தன தானன தானன
     தய்யா தத்தன தானன தானன
     தய்யா தத்தன தானன தானன ...... தனதான

ஒய்யா ரச்சிலை யாமென வாசனை
     மெய்யா ரப்பணி பூஷண மாலைக
     ளுய்யா நற்கலை யேகொடு மாமத ...... விதமாகி

ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு
     கையா ரக்கணை மோதிர மேய்பல
     வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு ...... முடல்பேணிச்

செய்வா ரிப்படி யேபல வாணிப
     மிய்யா ரிற்பண மேயோரு காசிடை
     செய்யார் சற்பனை காரர்பி சாசரு ...... னடிபேணாச்

செய்வா ரிற்படு நானொரு பாதகன்
     மெய்யா எப்படி யோர்கரை சேர்வது
     செய்யா யற்புத மேபெற வோர்பொரு ...... ளருள்வாயே

மையா ரக்கிரி யேபொடி யாய்விட
     பொய்சூ ரப்பதி யேகெட வானவர்
     வையாய் பொற்சர ணாஎன வேதொழ ......விடும்வேலா

வையா ளிப்பரி வாகன மாகொளு
     துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய்
     மைபோ லக்கதி ரேய்நிற மாகிய ...... மயில்வாழ்வே

தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ்
     செய்யா முத்தமி ழாகர னேபுகழ்
     தெய்வீ கப்பர மாகுரு வேயென ...... விருதூதத்

திய்யா ரக்கழு வேறிட நீறிடு
     கையா அற்புத னேபிர மாபுர
     செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்
  
ஒய்யாரச் சிலை ஆம்என, வாசனை
     மெய் ஆரப் பணி பூஷண மாலைகள்
     உய்யா நற்கலையே கொடு மாமத ...... விதமாகி,

ஒவ்வார் இப்படியோர் எனவே, இரு
     கை ஆரக் கணை மோதிரம் ஏய்பல
     உள்ளார், செப்பிட ஏம்உற நாளிலும் ...... உடல்பேணிச்

செய்வார் இப்படியே பல வாணிபம்,
     இய்யார் இல் பணமே ஒரு காசிடை
     செய்யார், சற்பனைகாரர், பிசாசர், உன் ......அடிபேணாச்

செய்வார் இல் படு நான்ஒரு பாதகன்
     மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது?
     செய்யாய்! அற்புதமே பெற ஓர்பொருள் .....அருள்வாயே

மைஆர் அக் கிரியே பொடியாய் விட,
     பொய் சூர்அப் பதியே கெட, வானவர்
     வையாய் பொற் சரணா எனவே தொழ ...விடும்வேலா!

வையாளிப் பரி வாகனமா கொளு
     துவ் ஆழிக்கடல் ஏழ்மலை தூளிசெய்,
     மை போலக் கதிர் ஏய்நிறம் ஆகிய ...... மயில்வாழ்வே!

தெய்வானைக்கு அரசே! குறமான் மகிழ்
     செய்யா! முத்தமிழ் ஆகரனே! புகழ்
     தெய்வீகப் பரமாகுருவே! என ...... விருதுஊதத்

திய்யார் அக் கழு ஏறிட, நீறு இடு
     கையா! அற்புதனே! பிரமாபுர
     செய் காழிப்பதி வாழ்முருகா! சுரர் ...... பெருமாளே.


பதவுரை

      மை ஆர் அக் கிரியே பொடியாய் விட --- இருள் சூழ்ந்த கிரவுஞ்ச மலை பொடிபட்டு அழியவும்,

     பொய் சூர் அப்பதியே கெட --- வஞ்சகம் நிறைந்த அரக்கர்களின் தலைவனான சூரபதுமன் அழியவும்,

     வானவர் --- தேவர்கள்

     வையாய் --- எங்களை நல்ல நிலையில் வைத்தருள்வாய்,

     பொன் சரணா --- அழகிய திருவடிகளை உடையவரே!

     எனவே தொழ --- என்று வணங்கி வேண்,

     விடும் வேலா --- விடுத்தருளிய  வேலாயுதத்தை உடையவரே!

      வையாளிப் பரி வாகன மா கொளு துவ்வு --- ஏறிச் செல்லும் வேகமான வாகனமான குதிரை போன்ற மயிலைக் கொண்ட, உயிர்களுக்குப் பற்றுக்கோடு ஆனவரே!

     ஆழிக் கடல் ஏழ் --- ஆழமான கடல்கள் ஏழும் வற்றித் தூளாக,

     மலை தூளி செய் --- மலைகள் பொடியாகச் செய்த,

     மை போலக் கதிர் ஏய் நிறம் ஆகிய மயில் வாழ்வே ---  கருநிறம் கொண்ட ஒளி பொருந்திய மயில் மேல் வரும் செல்வமே!

     தெய்வானைக்கு அரசே --- தேவயானை அம்மைக்கு நாயகரே!

     மான் மகிழ் செய்யா --- குறகளாகிய வள்ளிநாயகி மகிழ்கின்ற செய்யவரே!

     முத்தமிழ் ஆகரனே, --- முத்தமிழுக்கு இருப்பிடமானவரே!

     புகழ் தெய்வீகப் பரமா --- புகழப்படும் தெய்வீகத் தன்மை பொருந்திய மேலானவரே!

     குருவே என விருது ஊத --- குருநாதரே என்று வெற்றிச் சின்னங்கள் ஊத,

     திய்யார் அக் கழு ஏறிட   --- தீயவராகிய சமணர்கள் அந்தக் கழுவில் ஏறும்படி

     நீறு இடு கையா --- திருநீற்றைப் பூசுவித்த திருக்கரத்தினை உடையவரே!

     அற்புதனே --- அற்புதமானவரே!

     பிரமாபுர செய் காழிப் பதி வாழ் முருகா --- பிரமாபுரம் என்னும் பெயர் பெற்றதும், வயல்கள் சூழ்ந்ததுமான சீகாழியில் வீற்றிருக்கும் முருகப் பெருமானே!

     சுரர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      ஒய்யாரச் சிலையாம் என --- அலங்காரமான கற்சிலை போன்ற தோற்றத்தோடு,

     வாசனை மெய் ஆர --- உடலில் நறுமணம் நிரம்ப,

     பணி பூஷண மாலைகள் உய்யா --- அணிகலன்களையும் ஆபரண மாலைகளையும் அணிந்து,

     நற்கலையே கொடு --- நல்ல ஆடைகளையும் தரித்து,

     மாமத இதமாகி --- மிக்க காமவிகாரத்துடன் இன்பத்தைத் தருபவர் ஆகி,

     இப் படியோர் --- இந்த உலகில் உள்ளோர்,

      ஒவ்வார் எனவே --- தமக்கு ஒப்பாகமாட்டார் என்று சொல்லும்படியாக

     இரு கை ஆரக் கணை மோதிரம் ஏய் பல உள்ளார் --- இரு கைகளிலும் முத்திரை மோதிரம் பல அணிந்தவர்களாய்,

      செப்பிட --- சொல்லப்போனால்,

     ஏம் உற நாளிலும் உடல்பேணி ---  வருந்துகின்ற விலக்கு நாட்களிலும் தமது உடலைப் பாதுகாத்து

     இப்படியே ---  இந்தப் படிக்கே,

     பல வாணிபம் செய்வார் --- பொருளுக்காகத் தமது உடலைப் பலவிதமாக வியாபாரம் செய்வார்கள்.

      இய்யார் இல் பணமே --- வந்த பணத்தை யாருக்கும் கொடுத்து உதவாதவர்கள்.

     ஒரு காசு இடை செய்யார் --- ஒரு காசு அளவு கூட வெளிவிடார்கள்.

     சற்பனைகாரர் --- வஞ்சனை மிக்கவர்கள்,

     பிசாசர் --- பேய்த்தன்மை கொண்டவர்கள்,

     உன் அடி பேணாச் செய்வாரில் படு --- தேவரீரது திருவடியைப் போற்றி வணங்காது, தமது பரத்தைத் தொழிலைச் செய்பவர்கள் கூட்டத்தில் அகப்பட்ட

     நான் ஒரு பாதகன் --- ஒப்பற்ற பாதகன் ஆகிய நான்,

      மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது --- உண்மையாக எப்படி ஒப்பற்ற முத்திக் கரையைச் சேர்வது?

     செய்யா --- செவ்வேளே!

     அற்புதமே பெற --- மேலான ஞானத்தைப் பெற

     ஓர் பொருள் அருள்வாயே --- ஒப்பற்ற பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருள்வாயாக.


பொழிப்புரை
  
         இருள் சூழ்ந்த கிரவுஞ்ச மலை பொடிபட்டு அழியவும், வஞ்சகம் நிறைந்த அரக்கர்களின் தலைவனான சூரபதுமன் அழியவும்; தேவர்கள்,  "எங்களை நல்ல நிலையில் வைத்தருள்வாய், அழகிய திருவடிகளை உடையவரே!" என்று வணங்கி வேண், விடுத்தருளிய  வேலாயுதத்தை உடையவரே!

         ஏறிச் செல்லும் வேகமான வாகனமான குதிரை போன்ற மயிலைக் கொண்ட, உயிர்களுக்குப் பற்றுக்கோடு ஆனவரே!

     ஆழமான கடல்கள் ஏழும் வற்றித் தூளாக, மலைகள் பொடியாகச் செய்த, கருநிறம் கொண்ட ஒளி பொருந்திய மயில் மேல் வரும் செல்வமே!

      தேவயானை அம்மைக்கு நாயகரே!

     குறமகளாகிய வள்ளிநாயகி மகிழ்கின்ற செய்யவரே!

     முத்தமிழுக்கு இருப்பிடமானவரே!   

     புகழப்படும் தெய்வீகத் தன்மை பொருந்திய மேலானவரே!!

     குருநாதரே என்று வெற்றிச் சின்னங்கள் ஊத, தீயவராகிய சமணர்கள் கழுவில் ஏறும்படி  திருநீற்றைப் பூசுவித்த திருக்கரத்தினை உடையவரே!

     அற்புதமானவரே!

     பிரமாபுரம் என்னும் பெயர் பெற்றதும், வயல்கள் சூழ்ந்ததுமான சீகாழியில் வீற்றிருக்கும் முருகப் பெருமானே!

     தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      அலங்காரமான கற்சிலை போன்ற தோற்றத்தோடு, உடலில் நறுமணம் நிரம்ப, அணிகலன்களையும் ஆபரண மாலைகளையும் அணிந்து, நல்ல ஆடைகளையும் தமது உடலில் ஏற்றி, மிக்க காமவிகாரத்துடன் இன்பத்தைத் தருபவர் ஆகி, இந்த உலகில் உள்ளோர், தமக்கு ஒப்பாகமாட்டார் என்று சொல்லும்படியாக இரு கைகளிலும் முத்திரை மோதிரம் பல அணிந்தவர்களாய், சொல்லப்போனால், வருந்துகின்ற விலக்கு நாட்களிலும் தமது உடலைப் பாதுகாத்து,  இந்தப் படிக்கே பொருளுக்காகத் தமது உடலைப் பலவிதமாக வியாபாரம் செய்யும் விலைமாதர்கள். வந்த பணத்தை யாருக்கும் மொடுத்து உதவாதவர்கள். ஒரு காசு அளவு கூட வெளிவிடார்கள். வஞ்சனை மிக்கவர்கள். பேய்த்தன்மை கொண்டவர்கள். தேவரீரது திருவடியைப் போற்றி வணங்காது, தமது பரத்தைத் தொழிலைச் செய்பவர்கள் கூட்டத்தில் அகப்பட்ட ஒப்பற்ற பாதகன் ஆகிய நான், உண்மையாக எப்படி ஒப்பற்ற முத்திக் கரையைச் சேர்வது?
செவ்வேளே! மேலான ஞானத்தைப் பெற ஒப்பற்ற பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருள்வாயாக.

விரிவுரை


ஒய்யாரச் சிலையாம் என வாசனை மெய் ஆர ---

ஒய்யாரம் - சளுக்கு, செருக்கு, பகட்டு, அலங்காரம்.

சிலை - கல். கல்லால் ஆன சிலையைக் குறித்து நின்றது.

மெய் - உடம்பு.

கல்லால் வடிக்கப்பட்ட சிலையானது கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாகத் தான் இருக்கும். ஆனால், உரிய அங்க அசைவுகள் செயல்பாடுகள் ஏதும் இருக்காது. விலைமாதர்கள் தங்களைச் சிலை போன்று அழகு செய்து பகட்டுடனும், செருக்குடனும் உலாவுவது பொருள் உடையோரைத் தமது வசமாக்குவதற்கே. தம்மைப் போன்ற அழகு உள்ளோர் பிறர் யாரும் இல்லை என்னும்படியாகத் தருக்கித் திரிதல் அவர்களது இயல்பு. தாம் மிக அழகு உடையாதக எண்ணி, பிறரை மிகவும் ஏளனமாகப் பார்ப்பர். நன்கு அலங்கரித்துக் கொள்வதோடு நில்லாமல், தமது உடம்பு முழுவதும் மணப் பொருள்களைத் தரித்துக் கொள்வர்.

பணி பூஷண மாலைகள் உய்யா ---

உய்யா, உய்யல் - ஏறுதல். செல்லல், கேட்டல்.

நல்ல அணிகலன்களையும் ஆபரணங்களையும் மாலைகளையும் தமது உடலில் ஏற்றிக் கொள்வர்.

நற்கலையே கொடு ---

கலை - ஆடை. நல்ல ஆடைகளையும் தரித்துக் கொள்வர்.

மாமத இதமாகி ---

மதம் என்னும் சொல் இங்கு காமவிகாரம் என்னும் பொருளில் வந்தது. 

காமவிகாரப்பட்டோர் காமவிகாரப்பட்டோரை விரும்புவர். "கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்" என்றார் ஔவைப் பிராட்டியார். "கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்" என்றார் திருமூல நாயனார்.

இப் படியோர் ---

படி - உலகம். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே. எனினும் இங்கு உலகில் உள்ள மக்களைப் பொதுவாகக் குறித்தது. உயர்ந்தவரையும் மயக்கும் ஆற்றல் விலைமாதர்க்கு உண்டு.

ஒவ்வார் எனவே ---

ஓவ்வு - ஒப்பு

ஏம் உற நாளிலும் உடல்பேணி --- 

ஏமுறுதல் - வருந்துதல், மனம் தடுமாறுதல், மயக்கம் உறுதல்.

ஏமுறு நாள் என்றது விலக்கு நாள்களை. அந்த நாள்களில் பெண்கள் தம்மை அழகு செய்து கொள்ளமாட்டார்கள். ஆனால், விலைமாதர்கள் அந்த நாள்களிலும் தம்மை அழகுபடுத்திக் கொள்வார்கள்.


பல வாணிபம் செய்வார் ---

வாடிபம், வாணிகம், வியாபாரம், ஊதியம்.

ஒரு பொருளை வேண்டி, தம்மிடம் உள்ள ஒரு பொருளைத் தருதல். அது நடுவுநிலையோடு நடைபெறுதல் வேண்டும் என்பதால், திருவள்ளுவ நாயனார், நடுவு நிலைமை என்னும் அதிகாரத்தில் பின்வருமாறு காட்டினார்.

"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்".      
  
பிறர் பொருளையும் தமது பொருள் போலப் பேணிச் செய்தால், வாணிகம் செய்வார்க்கு நடுநிலையான நல்ல வாணிகம் ஆகும்.

வாணிகத்தைத் தொழிலாக உடையவர், தமது தொழில் நன்றாக வாய்க்கப்பெற, உலகில் உள்ள பொருள்களைக் கொண்டு நீண்ட நாள் நன்றாக வாழவேண்டுமானால், தாம் பிறர் இடத்துக் கொள்ளும் பொருளுக்குச் சரியாக, குறைவு இல்லாமலும், தீய பொருள் அல்லாமலும், உள்ள பொருளையே கொடுத்தல் வேண்டும். அப்படிக்கு அல்லமால்,  நிரம்பப் பொருளைப் பெற்றுக்கொண்டு, குறைவாகப் பொருளை நிறுத்துத் தருதல் அடாது. நல்ல பொருளைக் காட்டி, தீய பொருளைக் கொடுப்பதும் கூடாது. அவ்வாறு செய்தால், அவரது வாணிகம் மட்டும் அல்லாது, அவருக்கு முன்னிருந்த பொருளும் அழிந்து போகும்.

"நட்பிடை வஞ்சம் செய்து,
         நம்பினார்க்கு ஊன்மா றாட்டத்து
உட்படக் கவர்ந்தும், ஏற்றோர்க்கு
         இம்மியும் உதவார் ஆயும்,
வட்டியின் மிதப்பக் கூறி
         வாங்கியும், சிலர்போல் ஈட்டப்
பட்டதோ, ஆறத்தறு ஈட்டு
         நம்பொருள் படுமோ என்னா".

எனத் திருவிளையாடல் புராணத்தில், மாமனாக வந்து வழக்கு உரைத்த படலத்தில் காட்டியுள்ளது உணர்க.
   
நண்பர் ஆயினார் மாட்டும் வஞ்சனை புரிந்து, அவரது பொருளைக் கவர்தல் கூடாது. நம்பி ஒரு பொருளை வைத்தவர்க்கு, அவரது உயிர் மயங்குமாறு அப்பொருளைக் கவர்தல் கூடாது. தம்மிடத்தில் வந்து இரந்தவர்க்கு இம்மி அளவும் கொடாதவராயும் இருத்தல் கூடாது. வட்டியில் வரம்பின்றிச் சொல்லி வாங்குதல் கூடாது. இவ்வாறு கூடாதவற்றைத் தள்ளி அறவழியில் ஈட்டிய பொருளானது அழியாது.

"கொடுமேழி நசை உழவர்
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடு அஞ்சி, வாய்மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்ப நாடி,
கொள்வதூஉம் மிகைகொளாது,
கொடுப்பதூஉம் குறைகொடாது,
பல்பண்டம் பகர்ந்து வீசும்"      --- (பட்டினப். 205-211)

வாணிகம் கொள்வினையையும் விற்பனையையும் ஒப்பக் கருதுவதனாலும், பொய்க்கும் கொள்ளைக்கும் இடந்தராமையாலும், மொத்த வணிகர் சில்லறை வணிகர் கொள்வோர் ஆகிய முத்திறத்தார்க்கும் தீதும் கேடும் இல்லா நல்வாணிகம் ஆகும்.

அவ்வாறு இல்லாமல், பொருள் மீது கொண்ட பற்றுக் காரணமாக, அதைக் கவர்தல் வேண்டித் தமது உடம்பை வாணிகம் செய்பவர்கள் விலைமாதர்கள். தம்மை நாடி வருபவர்களின் பொருளைப் பறிப்பதையே தொழிலாக உடையவர்கள். நாடி வந்தவரும் அழிந்து, தாமும் பின்னாளில் அழிந்து போவர்.

இய்யார் இல் பணமே, ஒரு காசு இடை செய்யார் ---

தாம் கவர்ந்த பணத்தை யாருக்கும் கொடுத்து உதவ மாட்டார்கள் விலைமாதர்கள். விலைமாதர் மட்டுமல்ல, பொருள் ஒன்றையே கருதினோர் யாரும் தம்மிடம் உள்ள பொருளை யாருக்கும் தந்து உதவ மனம் வராது.

உண்ணான், ஒளிநிறான், ஓங்கு புகழ்செய்யான்,
துன்அரும் கேளிர் துயர்களையான், - கொன்னே
வழங்கான், பொருள்காத்து இருப்பானேல், அ ஆ
இழந்தான என்று எண்ணப் படும்.     ---  நாலடியார்.

சற்பனைகாரர் ---

சற்பனை - வஞ்சனை, சதி.

நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபம் மந்த்ர யோகநிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே. ---  பட்டினத்தார்.

துற்சனன் தனக்கு மேலாம்
     துரைத்தனம் கொடுத்தால், என்றும்
சற்பனை துரோகம் கேடு
     தரணியில் மிகவே செய்வான்;
மற்கடம் தனக்கு நீண்ட
     வாலிலே தேளும் கொட்ட,
உற்றிடம் கொள்ளி ஈந்தால்,
     ஊர் எலாம் கொளுத்தும் அன்றே.   --- விவேகசிந்தாமணி

உன் அடி பேணாச் செய்வாரில் படு நான் ஒரு பாதகன் மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது ---

இறையருளைப் பெறவேண்டுமானால், அது பெற்றவரை நாடிப் பெறுதல் வேண்டும். ஆன்மா சார்ந்ததன் வண்ணம் ஆவது. யாரோடு கூட்டுறவு வைத்துக் கொள்ளுகின்றதோ அவர் போலவே ஆகும். நல்லவரோடு சேர்ந்தால் நல்லவர் ஆகும். தீயவரோடு கூடினால் தீக்குணமே மிகுந்து இருக்கும்.

இந்த அடிகளில் அடிகளார், "நான் ஒரு பாதகன்" என்றார். இறையருளை நாடாமையால் பாதகன் இல்லை. சேராத இடம் சேர்ந்ததே பாதகச் செயல் ஆகும். விலைமாதர் கூட்டுறவு எல்லாப் பாவங்களயும் தரும். அவர் கூட்டுறவால் தெய்வத்தை மறந்த நிலை உண்டானது. பாதகச் செயல் மிகுந்தது. புண்ணியச் செயல் அற்றது. இதனால் பிறவி அறுதல் இல்லாமல் போனது. மீண்டும் மீண்டும் பிறவிக் கடலிலேயே ஆழ்ந்து இருக்கும் நிலை உண்டானது. பிறவிக் கடலை நீந்தி, முத்தியாகிய கரையைச் சேரவேண்டும். அதற்கு இறையருள் தெப்பமாக வந்து உதவும்.

"தனியனேன் பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு, பற்று ஒன்று இன்றி,
கனியை நேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு, காமவான் சுறவின் வாய்ப்பட்டு,
இனி என்னே உய்யுமாறு என்று என்று எண்ணி,
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை,
முனைவனே! முதல் அந்தம் இல்லா மல்லல்
கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே"

என்றார் மணிவாசகப் பெருமான்.

கடலில் வீழ்ந்தோர் கரை ஏறுதல் அரிது. பிறவியில் வீழ்ந்தோறும் முத்திக் கரையில் ஏறுதல் அரிது. அதனால் பிறவியைக் கடல் என்றார். 'பிறவிப் பெருங்கடல்' என்றார் திருவள்ளுவ நாயனாரும். கடலில் அலை ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், ஓயாது. அது போல, வாழ்வில் துன்பம் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், ஓயாது. அதனால் துன்பத்தை அலை என்றார். புயல் காற்று, கலக்கத்தைச் செய்யும், மகளிரின் தோற்றமும் கண்டாரைக் கலங்கச் செய்யும், அதனால் மகளிரைப் புயல் காற்று என்றார். சுறாமீன், தன் வாயில்பட்டாரை உள்ளே விழுங்கும். ஆசை வயப்பட்டோரும் அல்லலில் அழுந்துவர். அதனால் காமத்தைச் சுறாமீன் என்றார்.

தெப்பத்தைக் கொண்டு கடலைக் கடக்கலாம். திருவைந் தெழுத்தாகிய மந்திரத்தைக் கொண்டு பிறவியைக் கடக்கலாம். அதனால், ஐந்தெழுத்தைப் 'புணை' என்றார். 'வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத்து' என்றார் சேக்கிழார் சுவாமிகள். மீகாமன் தெப்பத்தால் மக்களைக் கரையில் சேர்க்கிறான். இங்கு முதல்வன் அஞ்செழுத்தால் மணிவாசகப் பெருமானை முத்தியில் சேர்த்தான் என்பதால், 'முனைவனே! முதல் அந்தம் இல்லா மல்லல் கரைகாட்டி ஆட்கொண்டாய்' என்றார்.

 இப்பிறவி என்னும் ஓர் இருட்கடலில் மூழ்கி, நான்
                 என்னும் ஒரு மகரவாய்ப்பட்டு,
      இருவினை எனும் திரையின் எற்றுண்டு, புற்புதம்
                 எனக்கொங்கை வரிசைகாட்டும்
 துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்ட மாருதச்
                 சுழல்வந்து வந்து அடிப்ப,
      சோராத ஆசையாம் கான் ஆறு வான்நதி
                 சுரந்தது என மேலும் ஆர்ப்ப,
    கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்
                 கைவிட்டு, மதிமயங்கி,
      கள்ள வங்கக் காலர் வருவர் என்று அஞ்சியே
                 கண் அருவி காட்டும் எளியேன்,
    செப்பரிய முத்தியாம் கரை சேரவும் கருணை
                 செய்வையோ? சத்து ஆகி, என்
      சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
                 தேசோ மயானந்தமே!

என்றார் தாயுமான அடிகளார்.

துன்பக் கடல்இடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந்து ஏற்றும் திறத்தன, மாற்று அயலே
பொன்பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும், ப்பொய்பொருந்தா
அன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே.

என்றருளினார் அப்பர் பெருமான்.
                                                                                                            
அறிவு இல் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்,
கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும்,
இனையன பலசரக்கு ஏற்றி, வினை எனும்
தொல்மீ காமன் உய்ப்ப, அந்நிலைக்
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்
புலன் எனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்பு எனும் பெருங்கடல் உறப்புகுந்து அலைக்கும்
துயர்த் திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்து,
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து,
நிறை எனும் கூம்பு முரிந்து, குறையா
உணர்வு எனும் நெடும்பாய் கீறி,புணரும்
மாயப் பெயர்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம், அலங்கல்
மதியுடன் அணிந்த பொதி அவிழ் சடிலத்துப்
பை அரவு அணிந்த தெய்வ நாயக!
தொல் எயில் உடுத்த தில்லை காவல!
வமபு அலர் தும்பை அம்பலவாண! நின்
அருள் எனும் நலத்தார் பூட்டி,
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.

என்று கோயில் நான்மணிமாலையில் அருளினார் பட்டினத்து அடிகள்.


இகல வரு திரை பெருகிய சலநிதி
     நிலவும் உலகினில் இகம் உறு பிறவியின்
     இனிமை பெற, வரும் இடர் உறும் இருவினை ...... அது தீர,

இசையும் உனது இரு பதமலர் தனை, மனம்
     இசைய நினைகிலி, இதம்உற உனது அருள்
     இவர உருகிலி, அயர்கிலி, தொழுகிலி, ...... உமைபாகர்

மகிழும் மகவு என அறைகிலி, நிறைகிலி,
     மடமை குறைகிலி, மதி உணர்வு அறிகிலி,
     வசனம் அற, உறு மவுனமொடு உறைகிலி, .....மடமாதர்

மயம் அது அடரிட இடர் உறும் அடியனும்
     இனிமை தரும் உனது அடியவர் உடன் உற,
     மருவ, அருள் தரு கிருபையின் மலிகுவது .....ஒருநாளே?

அடியார் உறவால் அற்புதங்கள் நிகழும். அதனை "அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே" என்றார் மணிவாசகப் பெருமான். அடியார் திருக்கூட்டத்தினைச் சார்ந்து இருந்தால் பெறுவதற்கு அரியது என ஒன்றும் இல்லை என்றார் குமரகுருமர அடிகள்.

அடியவர் திருக்கூட்டத்தில் சேர்ந்து நாளும் ஒருவன் இருப்பானாயின், அவன் தானாகவே மெய்யடியவனாக மாறி விடுவான். அடியவர் திருக்கூட்டத்தில் இருத்தல் என்ன பயனை இயல்பாகவே தரும் என்பதை, "சிதம்பர மும்மணிக் கோவை"யில், குமரகுருபர அடிகள் கூறுமாறு காண்க.

"செய்தவ வேடம் மெய்யில் தாங்கி,
கைதவ ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும்,
வடதிசைக் குன்றம் வாய்பிளந்து அன்ன
கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு
உய்வது கிடைத்தனன் யானே. உய்தற்கு
ஒருபெருந் தவமும் உஞற்றிலன், உஞற்றாது
எளிதினில் பெற்றது என் எனக் கிளப்பில்,
கூடா ஒழுக்கம் பூண்டும், வேடம்
கொண்டதற்கு ஏற்ப, நின் தொண்டரொடு பயிறலில்
பூண்ட அவ் வேடம் காண்தொறுங் காண்தொறும்
நின் நிலை என் இடத்து உன்னி உன்னி,
பல்நாள் நோக்கினர், ஆகலின், அன்னவர்
பாவனை முற்றி, அப் பாவகப் பயனின் யான்
மேவரப் பெற்றனன் போலும், ஆகலின்
எவ்விடத்து அவர் உனை எண்ணினர், நீயும் மற்று
அவ்விடத்து உளை எனற்கு ஐயம் வேறு இன்றே, அதனால்
இருபெரும் சுடரும் ஒருபெரும் புருடனும்
ஐவகைப் பூதமோடு எண்வகை உறுப்பின்
மாபெரும் காயம் தாங்கி, ஓய்வு இன்று
அருள் முந்து உறுத்த, ஐந்தொழில் நடிக்கும்
பரமானந்தக் கூத்த! கருணையொடு
நிலைஇல் பொருளும், நிலைஇயல் பொருளும்
உலையா மரபின் உளம் கொளப் படுத்தி,
புல்லறிவு அகற்றி, நல்லறிவு கொணீஇ,
எம்மனோரையும் இடித்து வரை நிறுத்திச்
செம்மை செய்து அருளத் திருவுருக் கொண்ட
நல் தவத் தொண்டர் கூட்டம்
பெற்றவர்க்கு உண்டோ பெறத் தகாதனவே".       

அடியேன் புறத்தே தொண்டர் வேடம் தாங்கி, அகத்தே தீய ஒழுக்கம் உடையவனாக இருந்தும், நின் தொண்டர்களோடு பழகி வந்த்தால், அவர்கள் என் புற வேடத்தை மெய் என நம்பி, என்னைத் தக்கவனாகப் பாவித்தனர். என்பால் தேவரீர் எழுந்தருளி இருப்பதாக அவர் பாவித்த பாவனை உண்மையிலேயே நான் உய்யும் நெறியைப் பெறச் செய்தது என்கின்றார் இந்த அகவல் பாடலில்.

வெள்ள வேணிப் பெருந்தகைக்கு யாம் செய் அடிமை மெய்யாகக், கள்ள வேடம் புனைந்து இருந்த கள்வர் எல்லாம் களங்கம் அறும் உள்ளமோடு மெய்யடியாராக உள்ளத்து உள்ளும் அருள் வள்ளலாகும் வசவேசன் மலர்த்தள் தலையால் வணங்குவாம்என்று பிரபுலிங்கலீலை என்னும் நூலில் வரும் அருமைச் செய்யுள் இதனையே வலியுறுத்தியது.

இதன் உண்மையாவது, சிவபெருமானை மெய்யடியார்கள் எவ்விடத்தில் பாவனை செய்கின்றார்களோ, அவ்விடத்திலே அவன் வீற்றிருந்து அருள்வான். அதனால், பொய்த் தொண்டர்களும் மெய்த்தொண்டர் இணக்கம் பெற்றால், பெற முடியாத பேறு என்பது ஒன்று இல்லை. இது திண்ணம்.

குருட்டு மாட்டை, மந்தையாகப் போகும் மாட்டு மந்தையில் சேர்த்து விட்டால், அக் குருட்டு மாடு அருகில் வரும் மாடுகளை உராய்ந்து கொண்டே ஊரைச் சேர்ந்து விடும்.

முத்தி வீட்டுக்குச் சிறியேன் தகுதி அற்றவனாயினும், அடியார் திருக்கூட்டம் எனக்குத் தகுதியை உண்டாக்கி முத்தி வீட்டைச் சேர்க்கும். அடியவருடன் கூடுவதே முத்தி அடைய எளியவழி. திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் தன்னை அடியவர்கள் திருக்கூட்டத்தில் சேர்த்தது அதிசயம் என்று வியந்து பாடுகின்றார்.

திரைவார் கடல்சூழ், புவி தனிலே, உலகோரொடு
     திரிவேன், உனை ஓதுதல் ...... திகழாமே,
தின நாளும் உனே துதி மனது ஆர பினே சிவ
     சுதனே! திரி தேவர்கள் ...... தலைவா! மால்

வரை மாது உமையாள் தரு மணியே! குகனே! என
     அறையா, அடியேனும் ...... உன் அடியாராய்
வழிபாடு உறுவாரொடு, அருள் ஆதரம் ஆயிடும்
     மக நாள் உளதோ? சொல ...... அருள்வாயே. --- திருப்புகழ்.


செய்யா ---

"செய்யன், சிவந்த ஆடையன்" எனத் திருமுருகாற்றுப்படையில் வருமாறு காண்க.

அற்புதமே பெற, ஓர் பொருள் அருள்வாயே ---

அற்புதம் - அழகு, ஞானம்.

மேலான ஞானத்தைப் பெற்று உய்ய குருவின் உபதேசத்தைப் பெற்று, மெய்ப்பொருளை உணர்தல் கூடும். எனவே, மெய்ப்பொருளை உணர்த்தி அருளுமாறு அடிகளார் முருகப் பெருமானை வேண்டுகின்றார்.

மை ஆர் அக் கிரியே பொடியாய் விட, பொய் சூர் அப்பதியே கெட ---

கிரி - மலை.

பதி - தலைவன், ஊர்.

கிரி என்பது கிரவுஞ்ச மலையைக் குறிக்கும். கிரவுஞ்சம் உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும்.

வஞ்சகமே நிறைந்த சூரர்களுக்குத் தலைவனாகிய சூரபதுமன் ஆணவ மலத்தைக் குறிக்கும்.

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

முருகப் பெருமான் உயிர்களின் வினைத் தொகுதியாகிய கிரவுஞ்ச மலையைப் பொடியாக்கி, ஆணவம் என்னும் சூரபதுமனை வதைத்து அருள் புரிந்தார்.

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
     இள க்ரவுஞ்சம் தனோடு
          துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
     அழித்தவன் பொன்றுமாறு,
          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநுபூதியில்.


வையாளிப் பரி வாகன மா கொளு துவ்வு, ஆழிக் கடல் ஏழ் மலை தூளி செய், மை போலக் கதிர் ஏய் நிறம் ஆகிய மயில் வாழ்வே ---

வையாளி - குதிரை ஏற்றம்.

பரி - குதிரை.

துவ்வு, துப்பு - உணவு, அநுபவம். வலிமை.

"துப்பு உடையாரை அடைவது எல்லாம் எய்ப்பிடத்துத் துணை ஆவம் என்றே" என்றார் ஆழ்வார். அநுபவப் பெருளாக உள்ளவன் இறைவன்.

முருகப் பெருமான் மயிலை வாகனத்தைச் செலுத்திய போது, கடல்கள் வறண்டன. மலைகள் பொடிபட்டன.

"குசைநெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது, மேரு அடியிட, எண்
திசைவரை தூள்பட்ட, அத் தூளின் வாரி திடர்பட்டதே"  

என்கின்றது கந்தர் அலங்காரம்.
             
இதன் பொருள் --- கடிவாளமானது தளராது பிடித்தவாறு வெற்றியை உடைய வேலினை ஏந்திய திருமுருகப்பெருமான், அசுரர்களின் குடல்கள் கலங்குமாறு, சவுக்கினால் அடித்து விரட்டபட்ட குதிரையின் வேகத்திலும் மிக்க வேகத்தைக் கொண்ட மயில்வாகனத்தின் தோகையின் தொகுதி அசைதலினால் உண்டாகின்ற காற்று பட்டு மகாமேரு மலை அசைவுபட்டது. அந்த மயில் அடி எடுத்து வைக்க எட்டுத்திசைகளிலும் உள்ள மலைகள் துகள்பட்டு அழிந்தன. அந்தத் துகளினால் கடலானது மேடாகிவிட்டது.


தீரப் பயோததி, திக்கும், ஆகாயமும்,
ஜகதலமும் நின்றுசுழல,
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ, வெஞ்சிகைத்
தீக்கொப் புளிக்க,வெருளும்

பாரப் பணாமுடி அனந்தன்முதல் அரவு எலாம்
பதை பதைத்தே நடுங்க,
படர்ச் சக்ர வாளகிரி துகள்பட, வையாளி வரு
பச்சை ப்ரவாள மயிலாம்,

ஆர ப்ரதாப புளகித மதன பாடீர
அமிர்த கலசக் கொங்கையாள்,
ஆடுமயில் நிகர்வல்லி, அபிராம வல்லி,பர
மானந்த வல்லி சிறுவன்,

கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார
குரு தரு திருத்தணிகைவேள்
கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர் பதி
குடி புகுத நடவும் மயிலே.           --- மயில் விருத்தம்.

முத்தமிழ் ஆகரனே, புகழ் தெய்வீகப் பரமா, குருவே என விருது ஊத, திய்யார் அக் கழு ஏறிட, நீறு இடு கையா ---

ஆகரன் - உறைவிடம் ஆனவன்.

திய்யார் - தீயார் என்னும் சொல் முதல்நிலை திரிந்து, ஒற்று மிகுந்து வந்தது. தீயார் என்பது இங்கே மதுரையில் மிகுந்து இருந்த சமணர்களைக் குறிக்கும்.

ஞானத் தமிழுக்கு உறைவிடமாகத் திகழ்ந்தவர் திருஞானசம்பந்தப் பெருமான் அவரைத் "தமிழாகரர்" என்றனர் அருளாளர்கள். பின் வரும் பிரமாணங்களால் இதனை அறியலாம்.

அருந் "தமிழாகரர்" சரிதை அடியேனுக்கு அவர்பாதம்
தரும்பரிசால் அறிந்தபடி துதிசெய்தேன்; தாரணிமேல்
பெருங்கொடையும் திண்ணனவும் பேருணர்வும்திருத்தொண்டால்
வருந்தகைமைக் கலிக்காமனார் செய்கை வழுத்துவேன். ---  பெரியபுராணம்.

அருந் "தமிழாகரன்" வாதில் அமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித்தோன், எழில் சங்கம்வைத்த
பெருந்தமிழ் மீனவன் தன் அதிகாரி, பிரசம் மல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற்குடி மன் குலச்சிறையே"  --- திருத்தொண்டர் திருவந்தாதி.

அருளும் "தமிழாகர"! நின் அலங்கல் தந்து என்பெயரச்
சுருளும் குழலியற்கு ஈந்திலையே, முன்பு தூங்குகரத்து
உருளும் களிற்றினொடு ஒட்டரு ஆனை அருளியன்றே
மருளின் மொழிமடவாள் பெயர் என்கண் வருவிப்பதே.

பொருந்திய ஞானத் "தமிழாகரன்" பதி, பொற்புரிசை
திருந்திய தோணிபுரத்துக்கு இறைவன் திருவருளால்
கருந்தடம் நீர்எழு காலையில் காகூ கழுமலம் என்று
இருந்திட ஆம் என்று வானவர் ஆகி இயங்கியதே.
                                                             --- ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி.

திருஞானசம்பந்தப் பெருமான் எல்லாருக்கும் குருவாகத் திகழ்ந்தவர். சைவத்துக்கு முதல் குரு அவர் தான். "சைவமுதல் குருவாயே சமணர்களைத் தெறுவோனே" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

திருஞானசம்பந்தப் பெருமான் சமணர்களை வாதுகொண்டு, சைவத்தைத் தழைக்கச் செய்ய, மதுரையம்பதிக்கு எழுந்தருளிய போது, வெற்றிச் சின்னங்கள் ஊதின. அத் திருக்காட்சியினைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் நமது கண் முன்னர் நிறுத்துவதைப் பெரியபுராணத்தின் வாயிலாக அறிவோம்.

"திருநிலவு மணிமுத்தின்
     சிவிகையின்மேல் சேவித்து
வரு நிலவு தருமதி போல்
     வளர் ஒளிவெண் குடைநிழற்ற,
பெருகு ஒளிய திருநீற்றுத்
     தொண்டர்குழாம் பெருகிவர,
அருள்பெருக வருஞானத்து
     அமுது உண்டார் அணைகின்றார்".

இதன் பொழிப்புரை ---
சிவபெருமானின் அருட்செல்வம் பொருந்திய அழகிய முத்துச் சிவிகையின் மேலே வணங்கியவாறு வருகின்ற நிலவு பொழியும் மதிபோல் வளரும் ஒளி பொருந்திய முத்து வெண்குடை நிழலைச் செய்யவும், பெருகும் ஒளியுடைய திருநீற்றினை அணிந்த திருத் தொண்டர்களின் கூட்டம் சூழ்ந்து வரவும், திருவருள் பெருக வந்து தோன்றிய சிவஞான அமுது உண்ட சம்பந்தர் மதுரையை வந்து அடைவார் ஆயினர்.

"துந்துபிகள் முதல் ஆய
     தூரியங்கள் கிளராமே,
அந்தணராம் மாதவர்கள்
     ஆயிர மாமறை எடுப்ப,
வந்து எழும் மங்கலநாதம்
     மாதிரம் உட்பட முழங்க,
செந்தமிழ் மாருதம் எதிர்கொண்டு
     எம் மருங்கும் சேவிப்ப".

இதன் பொழிப்புரை ---
துந்துபி முதலான இயங்களின் ஓசை மேல் எழாமல், அந்தணர்களான மறைமுனிவர்கள் பலமறைகளை எடுத்துச் சொல்லவும், வந்து எழுகின்ற மங்கல ஒலிகள் எல்லாத் திசைகளிலும் ஒலிக்கவும், செந்தமிழுடன் வரும் தென்றல் காற்று எதிர்கொண்டு வரவேற்று எம்மருங்கும் வழிபடவும்,

"பண்ணிய வஞ்சனைத் தவத்தால்
     பஞ்சவன் நாட்டிடைப் பரந்த
எண்ணில் அமண் எனும் பாவ
     இருஞ்சேனை இரிந்து ஓட,
மண்ணுலகமே அன்றி
     வானுலகம் செய்தபெரும்
புண்ணியத்தின் படையெழுச்சி
     போல் எய்தும் பொலிவு எய்த".

இதன் பொழிப்புரை ---
செய்த வஞ்சனை பொருந்திய தவத்தை நிலைக்களனாகக் கொண்டு, பாண்டி நாட்டில் பரவிய எண்ணற்ற சமணம் என்ற பாவமான பெரிய படை உடைந்து ஓடும்படியாக, இவ்வுலகம் அல்லாமல் வான் உலகமும் கூடிச் செய்ததான பெரும் புண்ணியமான படைஎழுச்சியைப் போலப் பொருந்திய பொலிவு உண்டாகவும்,

"துன்னும் முழு உடல் துகளால்,
     சூழும் உணர்வினில் துகளால்,
அன்னெறியில் செறிந்து அடைந்த
     அமண்மாசு கழுவுதற்கு,
மன்னி ஒளிர் வெண்மையினால்
     தூய்மையினால் வழுதியர் தம்
கன்னி நாட்டிடைக் கங்கை
         அணைந்தது எனும் கவின்காட்ட".

இதன் பொழிப்புரை ---
நெருங்கிப் பொருந்தியுள்ள உடல் அழுக்கினாலும், தீய சூழ்ச்சியையுடைய உணர்வின் மாசினாலும், நெறியல்லாத நெறியில் முழுதும் சேர்ந்த சமணம் என்ற அழுக்கைக் கழுவித் தூய்மை ஆக்குவதற்காக, நிலைபெற்று விளங்கும் வெண்மையாலும், தூய தன்மையாலும், கங்கை நதியே பாண்டியரின் கன்னிநாட்டில் வந்து சேர்ந்ததைப் போன்ற அழகை எடுத்துக் காட்டவும்,

"பானல்வயல் தமிழ்நாடு
     பழி நாடும்படி பரந்த
மானம் இலா அமண்என்னும்
     வல் இருள்போய் மாய்வதனுக்கு,
ஆன பெருகு ஒளிப்பரப்பால்
     அண்டம் எலாம் கொண்டது ஒரு
ஞானமணி விளக்கு எழுந்து
     வருவது என நலம் படைப்ப".

இதன் பொழிப்புரை ---
குவளை மலர்களையுடைய வயல்கள் சூழ்ந்த தமிழ்நாடானது பழியை அடையுமாறு, அங்குப் பரந்து சூழ்ந்த மானம் இல்லாத சமணம் என்னும் வன்மையான இருளானது கெட்டு மாய்வதற்காக, பெருகிய ஒளியின் ஆய பரப்பினால், எல்லா அண்டங்களையும் தன் நிறைவுள் அடக்கிக் கொண்டதான ஒப்பில்லாத ஞான விளக்கு ஒன்று, எழுந்து வருவதைப் போன்ற நன்மையைச் செய்யவும்,

"புரசை வயக் கடகளிற்றுப்
     பூழியர் வண் தமிழ்நாட்டுத்
தரை செய் தவப்பயன் விளங்கத,
     சைவநெறி தழைத்து ஓங்க,
உரைசெய் திருப் பேர் பலவும்
     ஊதும் மணிச் சின்னம் எலாம்
"பரசமய கோளரி வந்
     தான்" என்று பணிமாற".

இதன் பொழிப்புரை ---
கழுத்தில் கயிற்றையும், வெற்றியையும், மதத்தையும் கொண்ட யானையையும் உடைய பாண்டியரின் தமிழ் நிலம் செய்த தவத்தின் பயன் விளங்கவும், சைவநெறி தழைத்தோங்கவும், போற்றிக் கூறத் தகும் எல்லாப் பெயர்களையும் எடுத்து ஒலிக்கும் முத்துச் சின்னங்கள் யாவும் `பரசமய கோளரி வந்தான்' என இயம்பவும்.

தீயவர்களாகிய சமணர்கள் கழுவில் ஏறவும், றதெய்வத் திருநீற்று ஒளி பரவுமாறு பாண்டிய மன்னனை மட்டுமல்லாது பாண்டி நாட்டில் உள்ளோர் அனைவரும் திருநீற்றைப் பூசி உய்யுமாறு திருஞானசம்பந்தப் பெருமான் திருவருள் புரிந்த வரலாற்றை அடிகளார் இங்குக் காட்டுகின்றார்.

முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபர் சுப்ரமணிய மூர்த்திகளுக்குள் ஒன்று, முருகவேளது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு, திருஞானசம்பந்தராக வந்த அவதாரம் புரிந்தது. முருகவேள் பிறப்பு இல்லாதவர் என்பதை நம் அருணகிரியார், "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று கூறியுள்ளதால் அறிக. இதை கூர்த்தமதி கொண்டு உணராதார் மூவருக்கு முதல்வனும், மூவரும் பணிகேட்க, முத்தொழிலைத் தந்த முழுமுதற் கடவுளும், தாரகப் பொருளாய் நின்ற தனிப்பெருந் தலைவனுமாகிய பதிப்பொருட் பரஞ்சுடர் வடிவேல் அண்ணலே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என எண்ணுகின்றனர். தெய்வ இலக்கணங்கள் யாதுயாது உண்டோ, அவை அனைத்தும் ஒருங்கே உடைய முருகப்பெருமான் பிறப்பு இல்லாதவர் என்பதை வேதாகமங்களால் நுணுகி ஆராய்ந்து அறிக.

சிவஞான மயமானது திருநீறு. "சத்திதான் யாதோ என்னில் தடையிலா ஞானமாகும்" என்ற சித்தியாரது திருவாக்கின்படி, ஞானமே சத்தியாகும். ஆதலின், திருவருள் சத்தி சொரூபமானது.  "பராவணம் ஆவது நீறு" என்றார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். திருநீற்றினை அணிந்துகொள்வார்க்கு நோயும் பேயும் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும். சர்வமங்கலங்களும் பெருகும். தீவினை கருகும்.

எல்லாவற்றையும் தூய்மை செய்வது பசுவின் சாணமே ஆகும்.  அதனால் ஆகிய திருநீறு, உள்ளத்தையும் உடம்பையும் தூய்மை செய்ய வல்லது. நிறைந்த தவம் புரிந்தோர்க்கே திருநீற்றில் மிகுந்த அன்பு உண்டாகும். தவம் செய்யாத பாவிகட்குத் திருநீற்றில் அன்பு உண்டாகாது.

எத்தகைய பாவங்களைப் புரிந்தவராயினும், பெரியோர்கள் இகழ்கின்ற ஐம்பெரும் பாவங்களைச் செய்தவராயினும், விபூதியை அன்புடன் தரித்து நல்வழிப்படுவாராயின், முன் செய்த பாவங்களினின்றும் விடுபட்டு, செல்வம் பெற்று, உலகமெல்லாம் போற்றும் பெருமை அடைவார்கள்.

யாது பாதகம் புரிந்தவ ராயினும் இகழும்
பாதகங்களில் பஞ்சமா பாதக ரெனினும்
பூதி போற்றிடில், செல்வராய் உலகெலாம் போற்றத்
தீது தீர்ந்தனர், பவுத்திரர் ஆகியே திகழ்வார்.      ---  உபதேச காண்டம்.

சிவதீட்சை பெற்று ஒவ்வொருவரும் முறைப்படி திருநீறு பூசி, இறைவன் திருவருளைப் பெறவேண்டும்.

திரிபுண்டரமாகத் திருநீறு பூசும்போது, இடையில் துண்டுபடுதல், ஒன்றுடன் ஒன்று சேர்தல், அதிகமாக விலகுதல்,  வளைதல், முதலிய குற்றங்கள் இன்றி அணிதல் வேண்டும். நெற்றி, மார்பு, தோள் ஆகிய மூன்று இடங்களில் ஆறு அங்குல நீளமும், ஏனைய அங்கங்களில் ஓவ்வோரங்குல நீளமுமாகத் தரித்தல் வேண்டும். மூன்று கீற்றாக அழகாக அணிதல் சிறப்பு.

மூன்று வேளையும் இவ்வாறு திருநீறு திரிபுண்டரமாகப் புனைதல் வேண்டும். முடியாத போது, ஒருவேளையேனும் முறைப்படி திருநீற்றினைத் திரிபுண்டரமாகத் தரித்தவர் உருத்திர மூர்த்தியே ஆவார். இவ்வண்ணம் உயர்ந்த திரிபுண்டரமாகத் திருநீற்றினை அணிந்து, பதி தருமம் புரிவோர் நிகரில்லாத மும்மூர்த்தி மயமாவார் என்று வேதங்கள் கூறுகின்றன.

திருநீறு வாங்குதல், அணிதல் முறையை, "குமரேச சதகம்" என்னும் நூலில் விளக்கியிருப்பது காண்க.
  
திருநீறு வாங்கும் முறை

பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
     பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்
     பருத்ததிண் ணையிலிருந்தும்

தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
     திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல் மூன்றாலும் வாங்கினும்
     திகழ்தம் பலத்தினோடும்

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
     அசுத்தநில மான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
     அவர்க்குநர கென்பர்கண்டாய்

வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
     மணந்துமகிழ் சகநாதனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

திருநீறு அணியும் முறை

பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
     பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
     பருத்தபுய மீதுஒழுக

நித்தம்மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
     நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை அணுகாது தேகபரி சுத்தமாம்
     நீங்காமல் நிமலன் அங்கே

சத்தியொடு நித்தம்விளை யாடுவன் முகத்திலே
     தாண்டவம் செய்யுந்திரு
சஞ்சலம் வராதுபர கதியுதவும் இவரையே
     சத்தியும் சிவனுமென்னலாம்

மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்
     மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.            ---  குமரேச சதகம்.

அரக ராஎ னாமூடர் திருவெ ணீறி டாமூடர்
     அடிகள் பூசி யாமூடர் ...... கரையேற
அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர்
     அறம்வி சாரி யாமூடர் ...... நரகேழிற்
புரள வீழ்வ ரீராறு கரவி நோத சேய்சோதி
     புரண பூர ணாகார ...... முருகோனே..  ---  (இரதமான) திருப்புகழ்.

திருநீறு இடும் சமயத்தை நிந்தித்த காரணத்தால், சமண் சமயத்தை மாற்றி, சைவ சமயத்தைத் திருஞானசம்பந்தர் வாழ்வித்தனர். திருநீறு இடாத பாண்டியனையும் அவனது நாட்டு மக்களையும் திருநீறு அணியும்படி புரிந்து உய்தி பெறச் செய்தார்.

தென்னவன் தனக்கு நீறு
     சிரபுரச் செல்வர் ஈந்தார்,
முன்னவன் பணிந்து கொண்டு,
     முழுவதும் அணிந்து நின்றான்,
மன்னன் நீறு அணிந்தான் என்று,
     மற்று அவன் மதுரை வாழ்வார்,
துன்னி நின்றார்கள் எல்லாம்
     தூயநீறு அணிந்து கொண்டார்.         --- பெரியபுராணம்.


பவமாய்த்து ஆண்அது ஆகும் பனைகாய்த்தே, மண நாறும்
     பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படி,வேதம்
படியாப் பாதகர், பாய் அன்றி உடாப் பேதைகள், கேசம்
     பறிகோப் பாளிகள் யாரும் ...... கழுவேற,
சிவமாய்த் தேன் அமுது ஊறும் திருவாக்கால், ஒளிசேர் வெண்
     திருநீற்றால் அமர் ஆடும் ...... சிறியோனே...          --- (தவர்வாள்) திருப்புகழ்.
  
அற்புதனே ---

அற்புதம் - ஞானம், அழகு.

ஞானமே வடிவானவர் முருகப் பெருமான். அழகன் முருகன். ஞானமே உயிருக்கு அழகைத் தருவது.

பிரமாபுர செய் காழிப் பதி வாழ் முருகா ---

பிரமாபுரம் என்னும் பெயர் பெற்றதும், வயல்கள் சூழ்ந்ததுமான சீகாழி, சோழ நாட்டில் உள்ள திருத்தலம். திருஞானசம்பந்தப் பெருமான் திரு அவதாரம் புரிந்தது.

குரு, இலிங்க, சங்கம வழிபாட்டு முறையில் பிரமன் பூசித்த பிரமபுரீசுவரர் இலிங்கமாகவும்,திரு ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும், சட்டைநாதர் சங்கம வடிவினராகவும் உள்ளது. ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு இலிங்கமாகவும், பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து, சிவஞானச்செல்வத்தை அளிப்பதற்குக் குருவடிவமாயும், பேரின்ப சித்திகளை அருளுவதற்கு சங்கம வடிவாயும், இறைவன் உள்ளார்.

இத் திருத்தலத்திற்கு வழங்கப்படும் பன்னிரண்டு பெயர்கள் குறித்துப் பின்வருமாறு காண்க.

பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்
பொருஇல் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.      ---  பெரியபுராணம்.

1.    பிரமபுரம்  பிரமதேவர் பூசித்துப் பெறு பெற்றதலம்.

தோடுஉடைய செவியன் விடைஏறி ஓர்தூவெண் மதி சூடி
காடுஉடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிராமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

சேவுயரும் திண்கொடியான் திருவடியே
         சரண் என்று சிறந்த அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்தான்
         வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
         செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவிஇரும் கருங்குவளை கருநெய்தல்
         கண்காட்டும் கழுமலமே

எனத் திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்து இருத்தல் காண்க.

2.    வேணுபுரம்  சூரபதுமனுக்கு அஞ்சிய தேவேந்திரன் இங்குப் போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு (மூங்கில்) வடிவில் முளைத்து அருள்புரிந்த தலம். தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க வேணு வழியாய் இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.

3.    புகலி – சூரபதுமனால் இடுக்கண் எய்திய தேவர்கள் சிவபிரானைப் புகல் அடைந்து, அடைக்கலம் புகுந்து வணங்கிய தலம்.

4.    வெங்குரு – அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் வழிபட்டுத் தேவகுருவாகிய பிருகற்பதிக்குச் சமத்துவம் பெற்ற தலம்.  எமதருமன் தன்னைக் கொடியவன் என்று உலகம் இகழாதவாறு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.

5.    தோணிபுரம் – ஊழிமுடிவில் சிவபெருமான் உமாதேவியாரோடு பிரணவம் ஆகிய தோணியில் வீற்றிருப்பத் தான் அழியாமல், நிலைபேறு எய்தித் திகழும் தலம்.

6.    பூந்தராய் – சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளும் பூவும் தாருமாய்ப் பூசித்து அழியாவரம் பெற்ற தலம்.

7.    சிரபுரம் – சயிங்கேயன் என்னும் அசுரன் வேற்று வடிவம் கொண்டு மறைந்து வந்து தேவர்களுடன் இருந்து அமிர்தம் உண்ணும் நிலையில் சூரியனால் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டுணுவால் சிரம் வெட்டுண்ட தலம்.

8.    புறவம் – சிபிச் சக்கரவர்த்தியைச் சோதித்தற்கு அக்கினிதேவன் புறாவடிவம் கொண்டு போந்து, புறாவின் எடை அளவிற்குத் தன் தசையை அரிந்து கொடுத்தும், அது போதாமை கண்டு, அவனே துலை ஏறித் தன் வள்ளன்மையினைப் புலப்படுத்திய நிலையில், புறா வடிவம் கொண்ட அக்கினிதேவன், அப்பாவம் அழியுமாறு வழிபட்டு உய்ந்த தலம்.

9.    சண்பை – கபில முனிவர் சாபத்தின்படி தம் குலத்தினன் வயிற்றில் பிறந்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய துகள், சண்பைப் புல்லாக முளைத்து இருந்ததை ஆயுதமாகக் கொண்டு போர் செய்து மடிந்த யாதவர்களின் கொலைப்பழி, தன்னை அணுகாவண்ணம் கண்ணன் பூசித்த தலம்.

10.   சீர்காழி – காளிதன் என்னும் நாகம் வணங்கிய தலம்.  நடனத்தில் தோற்ற காளி வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.

11.   கொச்சைவயம் – பராசரர் தாம் மச்சகந்தியை ஆற்றிடையில் புணர்ந்து அடைந்த தீநாற்றமும், பழியும் போகும் வண்ணம் இறைஞ்சி உய்ந்த தலம்.

12.   கழுமலம் – உரோமச முனிவர் இறைவனை வழுத்தி ஞானோபதேசம் பெற்றுத் தம்முடைய மலங்களைக் கழுவப்பெற்ற தலம்.

கருத்துரை

முருகா! அடியேன் முத்தி பெற்று உய்ய, உண்மைப் பொருளை உபதேசம் புரிந்து அருள்க.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...