அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கள்காம க்ரோதத்தே
(சீகாழி)
முருகா!
அடியேனுக்கு உள்ள ஊனத்தைக்
களைந்து
ஞானத்தை அருள்வாய்.
தத்தா
தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
கட்கா
மக்ரோ தத்தே கட்சீ
மிழ்த்தோர் கட்குக் ...... கவிபாடிக்
கச்சா
பிச்சா கத்தா வித்தா
ரத்தே யக்கொட் ...... களைநீளக்
கொட்கா
லக்கோ லக்ஆகா ணத்தே
யிட்டா சைப்பட் ...... டிடவேவை
கொட்டா
னக்கூ னுக்கா எய்த்தே
னித்தீ தத்தைக் ...... களைவாயே
வெட்கா
மற்பாய் சுற்றூ மர்ச்சேர்
விக்கா னத்தைத் ...... தரிமாறன்
வெப்பா
றப்பா டிக்கா ழிக்கே
புக்காய் வெற்பிற் ...... குறமானை
முட்கா
னிற்கால் வைத்தோ டிப்போய்
முற்சார் செச்சைப் ...... புயவீரா
முத்தா
முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கள்
காம க்ரோதத்தே கண், சீ-
மிழ்த்தோர்கட்குக் ...... கவிபாடி,
கச்சா
பிச்சாகத் தாவித்து,
ஆரத்தே அக் கொட் ...... களை நீளக்
கொள்
கால் அக்கோலக் கோணத்தே
இட்டு ஆசைப்பட் ...... டிடவே வை
கொள்
தானக்கு ஊனுக்கா எய்த்தேன்
இத் தீது அத்தைக் ...... களைவாயே.
வெட்காமல்
பாய் சுற்று ஊமர்ச் சேர்
விக்கானத்தைத் ...... தரிமாறன்
வெப்பு
ஆறப் பாடி, காழிக்கே
புக்காய், வெற்பில் ...... குறமானை
முள்கானில்
கால் வைத்து ஓடிப் போய்
முற்சார் செச்சைப் ...... புயவீரா!
முத்தா!
முத்தீ அத்தா! சுத்தா!
முத்தா! முத்திப் ...... பெருமாளே.
பதவுரை
வெட்காமல் பாய்
சுற்று ஊமர்ச் சேர் --- நாணமில்லாமல் இடுப்பில் ஆடையாகப் பாயைச் சுற்றிக் கொள்ளும் அறிவிலிகளாகிய சமணர்களைச் சார்ந்து இருந்த
விக்கானத்தைத் தரி மாறன் வெப்பு ஆறப் பாடி
--- விக்கினத்தைக் கொண்டு இருந்த பாண்டிய மன்னனின் வெப்பு நோயானது தீரும்படி,
"மந்திரமாவது நீறு: எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளி,
காழிக்கே புக்காய் --- சீகாழி என்னும் திருத்தலத்தில் வாழ்ந்து இருந்த
திருஞானசம்பந்தமூர்த்தியே!
வெற்பில் குறமானை --- வள்ளிமலையில்
வாழ்ந்து இருந்த வள்ளிநாயகியை,
முள் கானில் கால் வைத்து --- முள்
தைக்கும் காட்டில் உள்ள தினைப்புனத்திலே உமது திருப்பாதத்தை வைத்து,
ஓடிப் போய் முற்சார் --- ஓடிப்போய் முன்புறத் தழுவிய,
செச்சைப் புயவீரா --- வெட்சி மாலை
அணிந்த திருத்தோள்களை உடைய வீரரே!
முத்தா --- அழகரே!
முத்தீ அத்தா --- மூன்று வகையான வேள்விகளுக்குத்
தலைவரே!
சுத்தா --- தூயவரே!,
முத்தா --- பற்று அற்றவரே!
முத்திப் பெருமாளே --- முத்தியை
அளிக்கும் பெருமையில் மிக்கவரே!
கள் காம க்ரோதத்தே
கண் சீமிழ்த்தோர்கட்குக் கவி பாடி --- கள் குடியிலும், காம விகாரத்திலும், சினம் கொள்வதிலும் வசம்
ஆனவர்கள் மீது பாடல்களைப் பாடி,
கச்சா பிச்சாகத்
தாவித்து
--- தாறுமாறாகப் பாடல்களை நிறுவி,
ஆரத்தே --- ஆலத்தி பாடி,
அக் கோட்களை நீளக் கொள்கால் --- கொண்ட பொருள்களை நெடுநாளாகச் சேமித்து வைக்கும் காலத்தில்,
அக்கோலக் கோணத்தே
இட்டு
--- அழகிய முக்கோணம் போன்றுள்ள பெண்குறியின் மீது மனத்தை வைத்து,
ஆசைப் பட்டிடவே --- அதை அடைய ஆசைபட்டதால்,
வை கொள் தானக்கு --- அதற்குப் பொருள்
வைப்பதற்கும்,
ஊனுக்கா எய்த்தேன் --- இந்த
உடலுக்காகவும் மேலும் பொருளைத் தேடி இளைத்தேன்.
இத் தீது --- இது தீமையைத் தருவது,
அத்தைக் களைவாயே --- அதனைக் களைய
அருள் புரிவாயாக.
பொழிப்புரை
நாணமில்லாமல் இடுப்பில் ஆடையாகப் பாயைச்
சுற்றிக் கொள்ளும் அறிவிலிகளாகிய சமணர்களைச் சார்ந்து இருந்த விக்கினத்தைக்
கொண்டு இருந்த பாண்டிய மன்னனின் வெப்பு நோயானது தீரும்படி, "மந்திரமாவது
நீறு: எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளி, சீகாழி என்னும் திருத்தலத்தில்
வாழ்ந்து இருந்த திருஞானசம்பந்தமூர்த்தியே!
வள்ளிமலையில் வாழ்ந்து இருந்த வள்ளிநாயகியை
சாடி, அவள் இருக்கும் முள் தைக்கும் காட்டில் உள்ள தினைப்புனத்திலே உமது
திருப்பாதத்தை வைத்து, ஓடிப்போய் அவளை முன்புறத்
தழுவிய வெட்சி மாலை அணிந்த திருத்தோள்களை உடைய வீரரே!
அழகரே!
மூன்று வகையான வேள்விகளுக்குத் தலைவரே!
தூயவரே!,
பற்று அற்றவரே!
முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!
கள் குடியிலும், காம விகாரத்திலும், சினம் கொள்வதிலும் வசம்
ஆனவர்கள் மீது பாடல்களைத் தாறுமாறாகப் பாடல்களை நிறுவி, ஆலத்தி பாடி, கொண்ட பொருள்களை நெடுநாளாகச் சேமித்து வைக்கும் காலத்தில், அழகிய முக்கோணம் போன்றுள்ள
பெண்குறியின் மீது மனத்தை வைத்து, அதை அடைய ஆசைபட்டதால், அதற்குப் பொருள்
வைப்பதற்கும், இந்த
உடலுக்காகவும் மேலும் பொருளைத் தேடி இளைத்தேன்.
இது
தீமையைத் தருவது. அதனைக் களைய அருள் புரிவாயாக.
விரிவுரை
கள்
காம க்ரோதத்தே கண் சீமிழ்த்தோர்கட்குக் கவி பாடி ---
உயிர்கள்
இறையருளால் பெற்ற உடம்பைக் கொண்டு, அன்பைப் பெருக்கி, பிழைகளைச் சுருக்கி,
இறையருளைப் பெற்று, மீண்டும் பிறவாத பெருநிலையை அடைவதற்கே. ஆனால், புலன்கள்
செய்யும் வஞ்சனையால், அவற்றில் மயங்கி அறிவிழந்து, அல்லல் படுகின்றன.
விலைமளிர்
கூட்டம் பொருளிழப்புக்குத் துணை புரிந்து, அருளிழப்பையும் தருவிக்கும். அதுபோன்றே,
பொருள் ஈட்டுவதற்குத் தடையாகவும், முடிவில் தீமையையே தருவதாகவும் அமைந்துள்ளது கள்
குடி. இதற்கெல்லாம் காரணமாக அமைந்து நிற்பது காமம். இது, ஆசை, அன்பு, விருப்பம்,
இன்பம், புணர்ச்சியின்பம் என்றெல்லாம் பொருள்படும். என்றாலும், காணும் பொருள்களின்
மீது கொள்ளும் ஆசையே காமம் ஆகும். ஒரு பொருள் தேவையா, தகுதியா, நன்மையா, தீயமையா
என்றெல்லலாம் ஆராயாமல், அதன்மீது ஆசை கொள்ளுவது காமம். காமத்தை உட்பகை என்றனர்
முன்னோர்.
கள்
குடியால் ஒரும் கேடு ---
கள்
- கள்ளம் - களவு - மறைப்பு. கள்ளுதல் - மறைத்தல்.
கள்ளாமை
என்னும் ஒரு அதிகாரத்தை, பிறர் பொருளை வஞ்சித்துக் கவர்தல் கூடாமை என்பதற்காக
வைத்தார் நாயனார்.
கள்ளத்தனத்துடன்
மறைவாக அனுபவிப்பது என்பதால் கள் எனப்பட்டது. நீராகவோ கட்டியாகவோ புகையாகவோ
இருந்து வெறியினால் உணர்வை மறைக்கும் பொருட்களை நுகர்தல். கள்
என்னும் பெயர் மூவகைப் பொருட்கும் பொதுவாக அமைந்தாலும், பெருவழக்குப் பற்றி நீர் வடிவான
பொருளையே குறிக்கும். அது இயற்கையும் செயற்கையும் என இரு வகைகளை உடையது. இயற்கை என்பது, பனை
தென்னை முதலிய மரங்களில் இருந்து இறக்குவது. செயற்கை என்பது அரிசி காய்கனி
முதலியவற்றைப் புளிக்க வைத்தும் காய்ச்சியும் எடுப்பது.
கள்ளால்
ஒரும் தீமையைத் திருவள்ளுவ நாயனார் கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்தில் காட்டியவாறு
காண்க.
"உட்கப்
படாஅர், ஒளி இழப்பர், எஞ்ஞான்றும்,
கள்காதல்
கொண்டு ஒழுகுவார்".
கள்
உண்பதில் ஆசை கொண்டு வாழ்பவர், பகைவரால் அஞ்சப்படமாட்டார்கள். தாம் பெற்றுள்ள
புகழையும் இழப்பர்.
"உண்ணற்க
கள்ளை, உணில் உண்க, சான்றோரால்
எண்ணப்பட
வேண்டா தார்".
கள்ளை
உண்ணாது ஒழிதல் வேண்டும். தகுதி மிக்க சான்றோரால் மதிக்கப்பட விரும்பாதவர் ஆயின்,
அதனை உண்ணலாம்.
"ஈன்றாள்
முகத்தேயும் இன்னாதால், என் மற்றுச்
சான்றோர்
முகத்துக் களி".
ஈன்று
எடுத்த தாயின் எதிரிலும் கள் உண்டு களித்தல் விரும்பத் தகாதது ஆகும். அவ்வாறு
இருக்க, சான்றோர்கள் முன்னர்
கள் உண்டு களித்தல் எப்படி?
"நாண்
என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்,
கள்
என்னும்
பேணாப்
பெரும் குற்றத்தார்க்கு".
கள்
உண்ணுதல் என்னும் விரும்பத் தகாத பெரும் பாவத்தைப் புரிந்தவரை விட்டு நாணம் என்று
சொல்லப்படும் நல்ல பெண்ணானவள் நீங்குவாள்.
"இருமனப்
பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப்
பட்டார் தொடர்பு".
இரு
வேறுபட்ட மனத்தையுடைய விலைமகளிரும் கள்ளும் சூதும் திருமகளால் புறக்கணிக்கப்பட்டவரின்
தொடர்புகள் ஆகும்.
எனவே,
கள் குடியர் கீழ்க்கள் ஆவர் என்பது தெளியப்படும்.
காமத்தால்
வரும் கேடு ---
பொன்னாசையும்
மண்ணாசையும் மனிதப் பிறவிக்கே உள்ளன. பெண்ணாசை ஒன்றே எல்லாப் பிறவிகளுக்கும்
உண்டு. எனவே, பிறவிகள்
தோறும் தொடர்ந்து வருவதாகிய பெண்ணாசையை இறைவன் திருவருளால் அன்றி ஒழிக்க முடியாது.
இதுவேயும் அன்றி அவ்வாசை மிகவும் வலியுடையதாதலால் சிறிது அருகிலிருந்தாலும் உயிரை
வந்து பற்றி மயக்கத்தைச் செய்யும். ஆதலால் இம்மாதராசை மிகமிகத் தூரத்திலே அகல
வேண்டும்.
கள்ளானது குடித்தால்
அன்றி மயக்கத்தை உண்டு பண்ணாது. காமமோ கண்டாலும் நினைத்தாலும் மயக்கத்தை உண்டு
பண்ணும். ஆதலால் இப்பெண்ணாசையைப் போல் மயக்கத்தைத் தரும் வலியுடைய பொருள்
வேறொன்றும் இல்லை.
உள்ளக் களித்தலும் காண
மகிழ்தலும்
கள்ளுக்குஇல்
காமத்திற்கு உண்டு. --- திருக்குறள்.
கள்
உண்டல் காமம் எமன்ப
கருத்து அறை போக்குச் செய்வ,
எள்
உண்ட காமம் போல
எண்ணினில் காணில் கேட்கில்
தள்ளுண்ட
விடத்தின், நஞ்சம்
தலைக்கொண்டால் என்ன, ஆங்கே
உள்ளுண்ட
உணர்வு போக்காது,
உண்டபோது அழிக்குங் கள் ஊண். --- திருவிளையாடல்
புராணம்.
இதன்
பொருள் --- கள் உண்ணுதலும் காமமும் என்று சொல்லப்படும் இரண்டும் அறிவினை
நீங்குமாறு செய்வன. அவற்றுள் கள் உணவானது, இகழப்பட்ட காமத்தைப் போல, எண்ணினாலும்,
கண்டாலும், கேட்டாலும் தவறுதலுற்ற இடத்திலும், நஞ்சு தலைக்கு ஏறியது போல, அப்பொழுதே, உள்ளே பொருந்திய அறிவினைப் போக்காது. உண்ட
பொழுதில் மட்டுமே அதனை அழிக்கும்.
தீயைக் காட்டிலும் காமத்
தீ கொடியது. தீயில் விழுந்தாலும் உய்வு பெறலாம். காமத் தீயில் விழுந்தார்க்கு உய்வு இல்லை. தீயானது உடம்பை மட்டும் சுடும். காமத்தீ உடம்பையும் உயிரையும் உள்ளத்தையும்
சுடும். அன்றியும் அணுக முடியாத வெப்பமுடைய அக்கினி வந்து சூழ்ந்து கொண்டால்
நீருள் மூழ்கி அத்தீயினால் உண்டாகும் துன்பத்தை நீக்கிக் கொள்ளலாம். காமத் தீயானது
நீருள் மூழ்கினாலும் சுடும். மலைமேல் ஏறி ஒளிந்து கொண்டாலும் சுடும்.
ஊருள் எழுந்த உருகெழு
செந்தீக்கு
நீருள் குளித்தும் உயல்
ஆகும் - நீருள்
குளிப்பினும் காமம்
சுடுமே, குன்று
ஏறி
ஒளிப்பினும் காமம்
சுடும். --- நாலடியார்.
தொடில்சுடின் அல்லது
காமநோய் போல
விடில்சுடல் ஆற்றுமோ தீ, --- திருக்குறள்.
தீயானது தொட்டால் தான்
சுடும். காமத்
தீயானது நினைத்தாலும் சுடும். கேட்டாலும் சுடும். இது வேண்டாமென்று தள்ளினாலும் ஒடிவந்து சுடும். இதுவேயும் அன்றி நஞ்சு அதனை அருந்தினால் தான் கொல்லும். இக்காமமாகிய விஷம்
பார்த்தாலும் நினைத்தாலும் கொல்லும் தகையது. ஆதலால் காமமானது விஷத்தைக் காட்டிலும், கள்ளைக் காட்டிலும், தீயைக் காட்டிலும் ஏனைய கொல்லும் பொருள்களைக் காட்டிலும் மிகவும் கொடியது.
உள்ளினும் சுட்டிடும்
உணரும் கேள்வியில்
கொள்ளினும் சுட்டிடும், குறுகி மற்று அதைத்
தள்ளினும் சுட்டிடும்
தன்மை ஈதினால்
கள்ளினும் கொடியது காமத்
தீ அதே.
நெஞ்சினும் நினைப்பரோ, நினைந்து உளார் தமை
எஞ்சிய துயரிடை ஈண்டை
உய்த்துமேல்,
விஞ்சிய பவக்கடல்
வீழ்த்தும், ஆதலால்
நஞ்சினும் தீயது நலமில்
காமமே. --- கந்தபுராணம்.
அறம் கெடும்,
நிதியும் குன்றும்,
ஆவியும் மாயும், காலன்
நிறம் கெடும் மதியும் போகி
நீண்டதோர் நரகில் சேர்க்கும்,
மறம் கெடும்,
மறையோர் மன்னர்
வணிகர் நல் உழவோர் என்னும்
குலம் கெடும், வேசை
மாதர்
குணங்களை விரும்பினோர்க்கே. --- விவேகசிந்தாமணி.
காமமே குலத்தினையும் நலத்தினையும்
கெடுக்க வந்த களங்கம் ஆகும்,
காமமே தரித்திரங்கள் அனைத்தையும்
புகட்டி வைக்கும் கடாரம் ஆகும்,
காமமே பரகதிக்குச் செல்லாமல்
வழி அடைக்கும் கபாடம் ஆகும்,
காமமே அனைவரையும் பகையாக்கிக்
கழுத்து அரியும் கத்தி தானே. --- விவேகசிந்தாமணி.
ஒக்க நெஞ்சமே! ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்,
மிக்க காமத்தின் வெம்மையால் வரும்
துக்கம் யாவையும் தூர ஓடுமே. ---
திருவருட்பா.
"நெடுங்காமம் முற்பயக்கும் சின்னீர இன்பத்தின், முற்றிழாய்,
பிற்பயக்கும் பீழை பெரிது" என்றார் குமரகுருபர அடிகள். மிக்க காமம் என்பது,
தொடக்கத்தில் விளைக்கின்ற சிறிது பொழுதே இருக்கும் தன்மையை உடைய இன்பத்தைக்
காட்டிலும், பின்னர் விளைக்கின்ற நெடுங்காலம் வருத்துவதாகிய துன்பம் பெரியதாகும்.
புறப்பகை
கோடியின் மிக்குஉறினும் அஞ்சார்
அகப்பகை
ஒன்றுஅஞ்சிக் காப்ப அனைத்து உலகும்
சொல்ஒன்றின்
யாப்பார் பரிந்துஓம்பிக் காப்பவே
பல்காலும்
காமப் பகை. --- நீதிநெறி விளக்கம்.
உலகம்
முழுவதையும் தமது ஒரு வார்த்தையினாலே தமது வசமாக்க வல்ல ஆற்றல் படைத்த முனிவரும்,
காமமாகிய உட்பகை தம்மை அணுகாவண்ணம் எப்போதும் வருந்தியும் தம்மைக் காத்துக்
கொள்வர். ற்றதுபோல, அறிவு உடையார்
வெளிப்பகை தமக்குக் கோடிக்கு மேல் உண்டானாலும் அஞைசமாட்டார். ஆனால், அகப்பகை ஆகிய
காமப்பகைக்கு அஞ்சித் தம்மைக் காத்துக் கொள்வர்.
தீமை
உள்ளன யாவையும் தந்திடும், சிறப்பும்
தோம்இல்
செல்வமும் கெடுக்கும், நல்உணர்வினைத் தொலைக்கும்,
ஏம
நல் நெறி தடுத்து இருள் உய்த்திடும், இதனால்
காமம்
அன்றியே ஒரு பகை உண்டு கொல் கருதில். --- கந்தபுராணம்.
காமமே
கொலைகட்க்கு எல்லாம்
காரணம், கண் ஓடாத
காமமே
களவுக்கு எல்லாம்
காரணம், கூற்றம் அஞ்சுங்
காமமே
கள் உண்டற்கும்
காரணம், ஆதலாலே
காமமே
நரக பூமி
காணியாக் கொடுப்பது என்றான். ---
திருவிளையாடல் புராணம்.
இதன்
பொருள் --- காமமே கொலைகளுக்கு எல்லாம் காரணமாய் உள்ளது. கண்ணோட்டம் இல்லாத காமமே
களவு அனைத்திற்கும் காரணமாகும். கூற்றவனும்
அஞ்சுதற்கு உரிய காமமே கள்ளினை நுகர்வதற்கும் காரணமாகும். ஆதலாலே,
காமமொன்றே
அவை அனைத்தாலும் நேரும் நரக பூமியைக்
காணி
ஆட்சியாகக் கொடுக்க வல்லது என்று கூறியருளினான்.
கொலை
அஞ்சார், பொய்ந்நாணார், மானமும் ஓம்பார்,
களவு
ஒன்றோ, ஏனையவும் செய்வார், - பழியோடு
பாவம்
இஃது என்னார், பிறிது மற்று என்செய்யார்
காமம்
கதுவபட் டார். --- நீதிநெறி விளக்கம்.
இதன்
பொருள் --- காமத்திற்கு வசப்பட்டவர்கள் கொலை செய்வதற்கும் அஞ்சமாட்டார்கள். பொய்
சொல்ல வெட்கப்பட மாட்டார்கள். தம்முடைய பெருமையைக் காத்துக்கொள்ளவும்
செய்யமாட்டார்கள். திருட்டுத் தொழில் ஒன்று மட்டுமா? அதற்கு மேலும் பலவகையான தீய
செயல்களையும் புரிவார். இந்தக் காம உணர்வானது பொழியோடு பாவத்தையும் தருவது ஆகும்
என்றும் நினைக்கமாட்டார்கள். அவ்வாறு இருக்க, காமத்தால் பீடிக்கப்பட்டவர்கள் வேறு
என்ன தான் செய்ய மாட்டார்கள். எல்லாத் தீமைகளையும் புரிவர்.
நிலைத்த
இன்பமான பேரின்பத்தில் திளைத்து இருப்பவர்கள், உலக இன்பமாகிய
பாழும் சேறு போன்ற நரகத்தில் விழமாட்டார்கள். சிற்றின்பத்தை விழைபவர் மற்ற அனைத்து
இன்பங்களையும் கூவிட்டு விடுவார்கள் என்று நீதிநெறி விளக்கப் பாடல் கூறும்.
சிற்றின்பம்
சில்நீரது ஆயினும், அஃது உற்றார்
மற்று
இன்பம் யாவையும் கைவிடுப, - முற்றும் தாம்
பேரின்ப
மாக்கடல் ஆடுவார் வீழ்பவோ?
பார்இன்பப்
பாழ்ங்கும்பியில். --- நீதிநெறி
விளக்கம்.
செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் இப்படித்தான் சிதறும் என்று விவேக
சிந்தாமணி கூறுகின்றது.
அன்னையே அனைய தோழி!
அறந்தனை வளர்க்கும் மாதே!
உன்னையோர் உண்மை கேட்பேன்,
உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்,
என்னையே புணருவோர்கள்
எனக்கும் ஓர் இன்பம் நல்கி,
பொன்னையும் கொடுத்து, பாதப்
போதினில் வீழ்வது ஏனோ?
பொம்எனப் பணைத்து விம்மிப்
போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முலையினாளே!
கூறுவேன் ஒன்று, கேண்மோ,
செம்மையில் அறம் செய்யாதார்
திரவியம் சிதற வேண்டி,
நம்மையும் கள்ளும் சூதும்
நான்முகன் படைத்தவாறே!
இதனை, இரத்தினச்
சுருக்கமாக, இரண்டு வகையான மனத்தை உடைய விலைமாதரும், கள்ளும், சூதாட்டமும் ஆகியவை திருமகளால்
புறக்கணிக்கப்பட்டாருடைய தொடர்புகள் என்றார் திருவள்ளுவ நாயனார்.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. --- திருக்குறள்.
குரோதத்தால்
வரும் கேடு ---
குரோதம்
- பகைமை, கோபம், செற்றம்.
உட்பகை
என்று சொல்லப்படும் ஆறனுள் குரோதமும் ஒன்று. குரோதம் பற்றி அடிகள் இங்கு
சொன்னாரேனும், இனம் பற்றி
மற்றவற்றையும் கொள்ளுதல் வேண்டும்.
காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறுகுணங்களும், உயிர்க்கு உரிய ஆறு பகைகள் என்று சொல்லப்படும். "அறுபகை" என்றார்
திருஞானசம்பந்தர். உயிர்க்குத் துன்பத்தை விளைப்பவை இவை. ஆதலால், அரிட்டவர்க்கம் எனப்படும்.
காமஉள் பகைவனும், கோபவெம் கொடியனும்,
கனலோப முழுமூடனும்,
கடுமோக வீணனும், கொடுமதம் எனும் துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்,
ஏமம்அறு மாச்சரிய விழலனும், கொலை என்று
இயம்பு பாதகனும் ஆம், இவ்
எழுவரும், இவர்க்கு
உற்ற உறவுஆன பேர்களும்
எனைப் பற்றிடாமல் அருள்வாய்!
சேமமிகு மாமறையின் ஓம் எனும் அருள்பதத்
திறன்அருளி, மலயமுனிவன்
சிந்தனையில் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ
தேசிக சிகாரத்னமே!
தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வமணியே! ---
திருவருட்பா.
கோபமே பாவங்களுக்கு எல்லாம் தாய் தந்தை!
கோபமே குடி கெடுக்கும்!
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது!
கோபமே துயர் கொடுக்கும்!
கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!
கோபமே உறவு அறுக்கும்!
கோபமே பழி செயும்! கோபமே பகையாளி!
கோபமே கருணை போக்கும்!
கோபமே ஈனமாம் கோபமே எவரையும்
கூடாமல் ஒருவனாக்கும்!
கோபமே மறலி முன் கொண்டுபோய்த் தீய
நரகக்
குழியினில் தள்ளும் ஆல்!
ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு அருளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
சினத்தை அடக்காதவனுக்கு மன அமைதியுண்டாகாது, சினம் அதனைக் கொண்டவனை அழித்துவிடும்.
"தன்னைத்தான் காக்கில் சினம் காக்க, காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்". --- திருக்குறள்.
"ஆறுவது சினம்" என்றார் ஔவைப் பிராட்டியார்.
"மனத்த கறுப்பு எனின், நல்ல
செயினும்
இனைத்து எவையிம் தீயவ ஆகும்"
என்றார் குமரகுருபர அடிகள்.
ஒருவனுக்கு மற்றொருவன் மீது சினம் இருக்குமாயின், நன்மைகளையே அவன் செய்தாலும், அவனுக்கு
மற்ற யாவும் பொல்லாதன ஆகவே தோன்றும்.
துரியோதனன் பாண்டவர் மீது பகை உணர்வு கொண்டதால், சகுனி முதலான தீயவர்களை நட்பாகக் கொண்டான். அசுத்தாமன் முதலியோரை
ஐயப்பட்டான். கண்ணனும், பீஷ்மாச்சாரியார், விதுரர் ஆகியோர் கூறிய அறிவுரைகளைப் புறக்கணித்தான். பாஞ்சாலியை அரசவையில்
மானபங்கப் படுத்தினான். இறுதியில் அவனோடு, அவனைச்
சார்ந்தவர்களும் அழிந்தனர்.
எனவே, கள் உண்ணுதல், காம வயப்படுதல், பிறர் மீது கபை உணர்வு கொள்ளுதல்
ஆகியவற்றைத் தவிர்த்து, நல்லொழுக்கத்தில் நிற்றல் வேண்டும்
என்பதை அடிகளார் வலியுறுத்துகின்றார். நல்லொழுக்கத்தை, வடமோழியில்
சீலம் என்பர்.
சத்தியம் தவறாது இருப்பவர் இடத்தினில்
சார்ந்து திருமாதுஇருக்கும்;
சந்ததம் திருமாது இருக்கும் இடந்தனில்
தனது பாக்கியம் இருக்கும்;
மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்
விண்டுவின் களை இருக்கும்;
விண்டுவின் களைபூண்டு இருக்கும் இடந்தனில்
மிக்கான தயையிருக்கும்;
பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடந்தனில்
பகர்தருமம் மிகஇருக்கும்;
பகர்தருமம் உள்ளவர் இடந்தனில் சத்துரு
பலாயனத் திறல்இருக்கும்;
வைத்திசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு
மன்னுயிர் சிறக்கும் அன்றோ?
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
சீலமும் சத்தியமும் ஒன்றே. சீலம் உள்ள இடத்தில் சத்தியம் இருக்கும்.
சத்தியம் உள்ள இடத்தில் சீலம் இருக்கும். சீலம் உள்ள இடத்தில் தருமம் இருக்கும். தருமம் இருக்குமிடத்தில் சத்தியம் இருக்கும். சத்தியம் இருக்குமிடத்தில் ஒழுக்கம் இருக்கும். ஒழுக்கம் இருக்குமிடத்தில் பலம் இருக்கும். பலமுள்ள இடத்தில் லட்சுமி இருப்பாள். சீலம்
இல்லையானால் இத்தனையும் இருக்கமாட்டா. ஆகவே சீலத்தை யாவரும் கடைப்பிடிக்க
வேண்டும்.
இந்திரன் சீலத்தைப் பெற விரும்பினான். பிரமதேவரிடம் சென்று சீலத்தை அருள
வேண்டும் என்று கேட்டான். பிரமதேவர் “இந்திரனே! சீலம் மிகவும் உயர்ந்தது. அது பிரகலாதரிடம் தங்கி இருக்கின்றது.
அவரிடம் சென்று பெறக் கடவாய்” என்றார்.
இந்திரன் பிரகலாதரிடம் வந்து, பலகாலம் பணிவிடை புரிந்தான். அவன் பணிவிடையால் மனம் மகிழ்ந்த பிரகலாதர், ”இந்திரனே! உனக்கு என்ன வேண்டும் கேள்.
தருகிறேன்” என்றார். இந்திரன் அவரைப்
பணிந்து “ஞானசீலரே! தங்களிடம் சீலம் என்ற ஒன்றை யாசிக்கிறேன்”
என்றான்.
பிரகலாதர் உடனே “நல்லது, சீலத்தைத் தந்தேன்” என்றார். பிரகலாதரிடம் இருந்து ஓர் ஒளி உருவம் புறப்பட்டு
இந்திரன் மேனியில் அடங்கியது. அந்த ஒளியுருவத்தைப் பிரகலாதர் பார்த்து, “நீ யார்?” என்று கேட்டார், “நான் சீலம்” என்று கூறியது அது. பின்னர்
பிரகலாதர் உடம்பிலிருந்து மற்றொரு உருவம் புறப்பட்டது. “நீ
யார்?” என்றார்.
நான் தருமத்தின் அதி தேவதை; சீலமில்லாத இடத்தில் இருக்கமாட்டேன்” என்று கூறி, அவ்வொளியுருவம் இந்திரனிடத்தில் சென்று மறைந்தது.
அடுத்து ஒரு ஒளியுருவம் அவர் மேனியிலிருந்து புறப்பட்டது. “நீ யார்?” என்று வினவினார். “நான் சத்தியம் தருமம் இல்லாத
இடத்தில் என்னால் இருக்கமுடியாது’ என்று கூறி இந்திரன்
மேனியில் அடங்கியது. அதற்குப்பின் பிரகலாதரிடமிருந்து மற்றோர் ஒளியுருவம்
புறப்பட்டது. “நீ யார்?” என்று அவர் கேட்டார். “நான்
ஒழுக்கம்; சத்தியத்தை
விட்டு நான் பிரிந்திருக்க மாட்டேன்” என்று கூறி மறைந்தது.
அடுத்து ஒரு ஒளியுருவம் புறப்பட்டது. கண் கூசும் படியான அதனைப் பார்த்து
பிரகலாதர், “நீ
யார்?” என்றார்.
“நான் பலம்; ஒழுக்கமில்லாத இடத்தில் பலமாகிய நான் இருக்க மாட்டேன்” என்றது.
பின்னர், ஓர்
அழகிய பெண் உருவம் ஒளிமயமாகப் புறப்பட்டது. “அம்மா! நீயார்?” என்று கேட்டார் “நான் மகாலட்சுமி; பலமில்லாத இடத்தில் நான் இருப்பதில்லை” என்று கூறி மறைந்தது.
ஆகவே, லட்சுமியுள்ள
இடத்தில் வலிமையும், வலிமையுள்ள
இடத்தில் ஒழுக்கமும், ஒழுக்கமுள்ள
இடத்தில் சத்தியமும், சத்தியமுள்ள
இடத்தில் தருமமும், தருமமுள்ள
இடத்தில் சீலமும் இருக்கும். இத்தனைக்கும் சீலமே ஆணிவேர்.
மேலே கூறிய நலன்களில் அன்பு வைக்காமல், காமத்தின் மீதும், குரோதத்தின் மீதும், ஐம்பூத பரிணாமங்களின் மீதும், மிக்க ஆசை வைத்து வாழ்வது கூடாது.
உடம்பையே பெரிதாக நிலைத்திருக்கும் என்று எண்ணி, அதை வளர்க்கவும் அழகு படுத்தவும் பொருள்களைத் தேடி, உடல் வளத்தால் காமம் மீதூரப்பட்டு, உடல் அழகைக் காட்டி மயக்கும் விலைமாதர் பின் சென்று, நறுமலர் சூடி விளையாடி, மேல் கரம் மேவ விட்டு, முலை தொட்டு வாழ்ந்து, அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம், இதுவை கைகண்ட பலன் என்று வாழ்ந்து அருமையாக ஈட்டிய பொருளை எல்லாம் இழந்த
நிலையை ஆடவர் அடைவர்.
உலக மாயை சேறு போன்றது. அதில் காலை விட்டால் ஏறும் வழி இல்லை. "பிரஞ்சம்
என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்கின்றார் அருணை வள்ளல் கந்தர்
அலங்காரத்தில். ஐம்புலன்களின் வழியே சென்று இந்த ஆன்மா படும் பாடு சொல்ல முடியாது.
"கொடிய ஐவர் பராக்கு அறல் வேண்டும், மனமும் பதைப்பு அறல் வேண்டும்" என்றார் சுவாமிகள்.
"ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று
தான் அலது ஒன்றைத் தான் என நினையும்
இது எனது உள்ளம், ஆதலின் இதுகொடு
நின்னை நினைப்பது எங்ஙனம்? முன்னம்
கல் புணை ஆகக் கடல்நீர் நீந்தினர்
எற்பிறர் உளரோ? இறைவ!
கற்பம்
கடத்தல்யான் பெறவும் வேண்டும், கடத்தற்கு
நினைத்தல்யான் பெறவும் வேண்டும், நினைத்தற்கு
நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும், நஞ்சுபொதி
உரை எயிற்று உரகம் பூண்ட
கறைகெழு மிடற்று எம் கண்ணுத லோயே. ---
பட்டினத்தார்.
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?
கழப்பின் வாராக் கையுறவு உளவோ?
அதனால்,
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேர் அற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து,
அன்பு என் பாத்தி கோலி, முன்புற
மெய் எனும் எருவை விரித்து, ஆங்கு ஐயம் இல்
பத்தித் தனிவித்து இட்டு, நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி, நேர் நின்று
தடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக்கு அஞ்சி, உள் சென்று
சாந்த வேலி கோலி, வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து,
கருணை இளந்தளிர் காட்ட, அருகாக்
காமக் குரோதக் களை அறக் களைந்து,
சேமப் படுத்துழி, செம்மையின் ஓங்கி
மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு அம் எனக்
கண்ணீர் அரும்பி, கடிமலர் மலர்ந்து, புண்ணிய
அஞ்செழுத்து அருங் காய் தோன்றி, நஞ்சுபொதி
காள கண்டமும்,
கண்ஒரு மூன்றும்,
தோள் ஒரு நான்கும், சுடர்முகம் ஐந்தும்,
பவளநிறம் பெற்று, தவளநீறு பூசி,
அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்,
காணினும் கேட்பினும் கருதினும் களிதரும்
சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர,
எம்ம னோர்கள் இனிது இனிது அருந்திச்
செம்மாந்து இருப்ப, சிலர் இதின் வாராது,
மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கி,
காமக் காடு மூடி, தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறு அலைத்து ஒழுக,
இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட,
கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர,
இச்சைவித்து உகுத்துழி யான் எனப் பெயரிய
நச்சு மாமரம் நனிமிக முளைத்து,
பொய் என் கவடுகள் போக்கி, செய்யும்
பாவப் பல்தழை பரப்பி, பூவெனக்
கொடுமை அரும்பி, கடுமை மலர்ந்து,
துன்பப் பல்காய் தூக்கி, பின்பு
மரணம் பழுத்து,
நரகிடை வீழ்ந்து,
தமக்கும் பிறர்க்கும் உதவாது
இமைப்பில் கழியும் இயற்கையோர் உடைத்தே. --- பட்டினத்தார்.
கச்சா
பிச்சாகத் தாவித்து ---
கச்சு
பிச்சு என்பது தாறுமாறகப் பேசுதலைக் குறிக்கும். இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை மறைத்தும் பேசுவது தகாது.
தாபித்து
என்னும் சொல் தாவித்து என வந்தது.
ஆரத்தே
---
ஆரத்தி
- ஆலத்தி. துதி செய்வது.
அக்கோலக் கோணத்தே இட்டு ஆசைப் பட்டிடவே ---
அழகிய முக்கோண
வடிவில் உள்ள பெண்குறியின் மீது ஆசைப்படுதல் கூடாது.
ஆத
இத பாரமுலை, மாதர் இடை நூல், வயிறு அது
ஆல் இலை எனா, மதன ...... கலைலீலை
யாவும்
விளைவான குழியான திரிகோணம் அதில்
ஆசை மிகவாய் அடியன் ...... அலையாமல்... --- திருப்புகழ்.
மன்மதனின்
காமசாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விளையாடல்கள் எல்லாம் உண்டாகும், முக்கோணமான வடிவுள்ள பெண்குறி என்னும்
குழியில் ஆசை மிகும். ஆனால் அந்தக் குழியானது பெருந்துன்பத்திற்கு இடமாகும்
என்கின்றார் பட்டினத்து அடிகள்..
நச்சிச்
செல்லும் நரக வாயில்,
தோலும்
இறைச்சியும் துதைந்து சீப்பாயும்
காமப்
பாழி; கருவிளை கழனி;
தூமைக்
கடவழி; தொளைபெறு வாயில்;
எண்சாண்
உடம்பும் இழியும் பெருவழி!
மண்பால்
காமம் கழிக்கும் மறைவிடம்;
நச்சிக்
காமுக நாய்தான் என்றும்
இச்சித்து
இருக்கும் இடைகழி வாயில்;
திங்கள்
சடையோன் திருவருள் இல்லார்
தங்கித்
திரியும் சவலைப் பெருவழி;
புண்
இது என்று புடவையை மூடி
உள்
நீர் பாயும் ஓசைச் செழும்புண்;
மால்கொண்டு
அறியா மாந்தர் புகும்வழி;
நோய்
கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;
தருக்கிய
காமுகர் சாரும் படுகுழி;
செருக்கிய
காமுகர் சேரும் சிறுகுழி;
பெண்ணும்
ஆணும் பிறக்கும் பெருவழி;
மலம்
சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து
இழியும் தண்ணீர் வாயில்;
இத்தை
நீங்கள் இனிது என வேண்டா;
பச்சிலை
இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச்
சிவபத வீடு அருள்பவனை,
முத்தி
நாதனை, மூவா முதல்வனை,
அண்டர்
அண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட
அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக
நாதனை இணையடி இறைஞ்சுமின்!
போக
மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!
வை கொள் தானக்கு
---
தானத்துக்கு
என்னும் சொல் தானக்கு என வந்தது.
தானம்
- இடம்.
ஈட்டிய
பொருளை வைப்பதற்குத் தக்க இடம் தேடுதலைக் குறித்தது. தக்க இடத்தில் வைக்காமல்
போனால், பொருள் குட்டுப்
போய்விடும். எனவே, தக்க இடத்தைத் தேடி இளைத்ததாக அடிகளார் அறிவுறுத்துகின்றார்.
"...... ...... ...... பொன்னிருந்தால்
ஆற்றல்மிகு
தாயும் அறியா வகையால் வைத்திட ஓர்
ஏற்ற
இடம் வேண்டும், அதற்கு என்செய்வாய், - ஏற்றஇடம்
வாய்த்தாலும், அங்கு அதனை வைத்தஇடம் காட்டாமல்
ஏய்த்தால்
சிவசிவ மற்று என்செய்வாய், - ஏய்க்காது
நின்றாலும், பின் அதுதான் நீடும் கரியானது
என்றால்
அரகர மற்று என்செய்வாய்"....
என
வள்ளல்பெருமானும் அறிவுறுத்துதல் காண்க.
"இன்னல்
தரும் பொருளை ஈட்டுதலும் துன்பமே,
பின்அதனைப்
பேணுதலும் துன்பமே, - அன்னது
அழித்தலும்
துன்பமே,
அந்தோ
பிறர்பால்
இழத்தலும்
துன்பமே ஆம்!"
என்கிறது
நீதிவெண்பா.
துன்பத்தைத்
தரக்கூடிய செல்வத்தைச் சம்பாதிப்பதும் துன்பம். சம்பாதித்த செல்வத்தைக் காத்தலும்
துன்பத்தை தருவது ஆகும். காத்த பொருளைச் செலவழித்தலும் துன்பத்தைத் தருவது. அதனைப்
பிறர் இடத்தில் கொடுத்து வைத்து, பின்னர் இழந்து போவதும் துன்பமே ஆகும்.
"ஈட்டலும்
துன்பம்,
மற்று
ஈட்டிய ஒண் பொருளைக்
காத்தலும்
ஆங்கே கடுந் துன்பம், காத்த
குறைபடின்
துன்பம்,
கெடின்
துன்பம்,
துன்பக்கு
உறைபதி
மற்றைப் பொருள்".
என
நாலடியாரும் இதனையே வலியுறுத்துகின்றது.
பணத்தைச்
சம்பாதப்பதும் துன்பம். சம்பாதித்த பணத்தைச் சேர்த்து வைத்துப் பாதுகாப்பதும்
துன்பம். காத்த பொருள் குறைந்தால் துன்பம். காணாமல் போய்விட்டாலும் துன்பம்.
இப்படிப் பலவகையான துன்பங்களுக்கும் உறைவிடமாகப் பொருள் உள்ளது
ஊனுக்கா
எய்த்தேன் ---
ஊன்
- தசை, இறைச்சி, கொழுப்பு. இங்கு
உடலைக் குறித்து நின்றது.
இந்த உடம்பு வாயு. நரம்பு, இரத்தம், தோல், கொழுப்பு இவைகளால் ஆகியது.
பொய் என்ற சொல்லுக்கு இருபொருள் உண்டு. இல்லாத ஒன்று பொய்யெனப்படும். தோன்றி மறைவதும், நிலை இல்லாததும் பொய் எனப்படும்.
பொய்யுலகம், பொய்வாழ்வு, பொய்யுடம்பு என வரும் இடங்களில் பொய் என்ற
சொல்லுக்கு இல்லாதது என்று பொருளன்று. நிலைப்பேறு இல்லாதது என்று
பொருள். மாதவச் சிவஞான சுவாமிகள் மாபாடியத்தில் இங்ஙனம் பொருள் கண்டார்.
பொய்யுடலை மெய்யென்று நம்பி நால்வர் சுமக்கும் சிறிது நேரம் மட்டும்
பொருள் பெற்றுச் சுமக்கும் இந்தக் கனமான உடம்பை, நெடுங்காலமாகச் சுமந்து அயர்ந்துவிட்டேன் என்கின்றார் அடிகளார்.
“தூலபங்க காயம் வம்பி லேசுமந்து நான் மெலிந்து
சோருமிந்த நோயகன்று துயராற” --- (தோலெலும்பு) திருப்புகழ்.
"நீரில் குமிழி இளமை, நிறைசெல்வம்
நீரில்
சுருட்டும் நெடுந்திரைகள், --- நீரில்
எழுத்தாகும்
யாக்கை, நமரங்காள்!
என்னே
வழுத்தாதது
எம்பிரான் மன்று".
என்று
அருளினார் குமரகுருபர அடிகளார்.
இந்த
உடம்பு வந்ததன் அருமையையும், அதன்
நிலையாமையையும்
எண்ணி, அதனால் பெறவேண்டிய
பயனைப் பெறாமல்,
இந்த
உடல் பலகாலம் நீடித்து இருக்கும் என்று, அதனை ஓம்புவதற்கே பலகாலம் உழல்வது மனித
இயல்பு. எப்படிப் பார்த்தாலும், யாராக இருந்தாலும், இந்த உடம்பு நாளாக நாளாக
முதுமை அடைந்து இற்றுப்போவது கண்கூடு.
நமது
உடம்பிலோ, அல்லது நாம்
உடுத்திருக்கும் ஆடையிலோ கறை படிந்து விடுகின்றது. ஏன் கறை படிந்தது? உடம்பிலோ, ஆடையிலோ ஈரப்பசை
இருந்திருக்க வேண்டும். அல்லது பொருளில் ஈரப்பசை இருக்கவேண்டும். அந்த ஈரம் எதனால்
உண்டாகின்றது?
நீரால்
உண்டாகின்றது. அந்த கறையை எப்படிப் போக்குகின்றோம்? நீரைக் கொண்டே கழுவிப்
போக்குகின்றோம்.
அது
போலவே, இந்த உடம்பைக் கொண்டு பல பிறவிகளிலும் ஈட்டிய
வினைகளின் பயனை அனுபவித்துக் கழித்து, மேலும் வினைகள் விளையாமல், உயிரானது
ஈடேற்றத்தைப் பெறும்பொருட்டு, இறைவனது திருவருள் ஆணையால், வினைகளுக்கு
ஏற்ப இந்த உடம்பு நமக்கு வந்தது. இந்த உடம்பு எவ்வளவு காலம் இருக்கும் என்றால், வினைப்போகம்
தீரும் வரையில் இருக்கும். வினைப் போகம் தீர்ந்து போனால் தினைப் போது அளவும்
நில்லாது. சரி,
இருக்கின்ற
வரையில் நிலு குலையாமல் இருக்குமா என்றால், அதுவும் இல்லை. இந்த
உடம்பு விகாரப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே தான், "வேற்று விகார
விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன்" என்றார் மணிவாசகப் பெருமான்.
இத்
தீது, அத்தைக் களைவாயே ---
நிலையில்லாத
இந்த உடம்பை நிலைத்திருக்கும் என்று எண்ணி, அதனை வளர்ப்பபதற்கும், அதனை அழகு படுத்திக்
கொள்வதற்கும்,
இளமை
இன்பத்தை அனுபவிப்பதற்கும், பொருள் தேட முயன்று, பொருள் உள்ளவர்பால்
சென்று,
அவர்களைப்
பாரி காரி என்று பொய்யாகப் புகழ்ந்து பாடி, பொய்யுடலை ஒம்புதற்குப்
பொய்யையே பலகாலும் பேசிப்பேசி, நற்கணங்களை எல்லாம் போக்கிலே போகவிட்டு வாழ்ந்து
மடிவது தீமையாகிய பிறவிப்பிணியைத் தேடுதற்கும், துன்பத்தை
அனுபவிப்பதற்குமே ஆகும்.
இதில்
இருந்து மீள்வதற்கு உயிரால் மட்டுமே இயலாது. இறையருள் வாய்க்கவேண்டும். எனவே, இத் தீமையைக் களைவாயாக என்று அடிகளார்
வேண்டுகின்றார்.
மின்னனைய பொய்உடலை நிலைஎன்றும், மைஇலகு
விழிகொண்டு மையல்பூட்டும்
மின்னார்கள் இன்பமே மெய் என்றும், வளர்மாட
மேல்வீடு சொர்க்கம் என்றும்,
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி, இப்
பொய்வேடம் மிகுதிகாட்டி,
பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நற்குணம்
எலாம்
போக்கிலே போகவிட்டு,
தன்னிகரில் லோபாதி பாழ்ம்பேய் பிடித்திட,
தரணிமிசை லோகாயதன்
சமயநடை சாராமல், வேதாந்த சித்தாந்த
சமரச சிவாநுபூதி
மன்ன, ஒரு சொற்கொண்டு எனைத் தடுத்து ஆண்டன்பின்
வாழ்வித்த ஞானகுருவே!
மந்த்ர குருவே! யோக தந்த்ர குருவே!
மூலன்
மரபில்வரு மௌனகுருவே.
என்றார் தாயுமான அடிகளார்..
வெட்காமல்
பாய் சுற்று ஊமர்ச் சேர், விக்கானத்தைத் தரி மாறன் வெப்பு ஆறப் பாடி ---
ஊமர்
- பேசத் தெரியாதவர். மூடர்.
"இன்று உளார் நாளை இல்லை எனும்பொருள்
ஒன்றும் ஓராது, உழிதரும்
ஊமர்காள்,
அன்று வானவர்க் காக விடம்உண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண்டு உய்ம்மினே". --- அப்பர்.
விக்கானம்
- விக்கினம்.
நாணமில்லாமல்
இடுப்பில் ஆடையாகப் பாயைச் சுற்றிக் கொள்ளும் அறிவிலிகளாகிய சமணர்களைச் சார்ந்து
இருந்த விக்கினத்தைக்
கொண்டு இருந்த பாண்டிய மன்னனின் வெப்பு நோயானது தீரும்படி, "மந்திரமாவது
நீறு: எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளியவர் திருஞானசம்பந்தப் பெருமான்.
திகுதிகு
என மண்ட விட்ட தீ ஒரு
செழியன் உடல் சென்று பற்றி, ஆருகர்
திகையின் அமண் வந்து விட்ட போதினும் ......அமையாது,
சிறிய
கர பங்கயத்து நீறு, ஒரு
தினை அளவு சென்று பட்ட போதினில்
தெளிய, இனி வென்றி விட்ட
மோழைகள் ......கழு ஏற,
மகிதலம்
அணைந்த அத்த! --- (நிகமம் எனில்)
திருப்புகழ்.
"வேதம்
படியாப் பாதகர், பாய்அன்றி உடாப்
பேதைகள், கேசம்
பறி கோப்பாளிகள் யாரும் கழு ஏற"
என்றார் திருவோத்தூர்த் திருப்புகழில்.
காழிக்கே
புக்காய்
---
சீகாழி
என்னும் திருத்தலத்தில் அவதரித்து வாழ்ந்து இருந்தவர் திருஞானசம்பந்தமூர்த்தி
நாயனார்.
முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபர் சுப்ரமணிய மூர்த்திகளுக்குள் ஒன்று
முருகவேளது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு, திருஞானசம்பந்தராகத் தோன்றியது. இதனை உணராதார் முருகப் பெருமானே
திருஞானசம்பந்தராகத் தோன்றினார் எனக் கூறுதல் பொருந்தாது. முருகவேள்
பிறப்பில்லாதவர் என்பதை நம் அருணகிரியார், "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று கூறியுள்ளதால் அறிக.
சுப்ரமண்ய சாரூபம் பெற்றோர் பலர் என்பதை அடியில் கண்ட பிரமாணத்தால் காண்க.
ஒர்ஏழு கோடி பைங்கரர், கோடி
வயிரவர் ஒன்பது கோடி,
சீர்கெழும்எண்தோள் நீலிகண்மயின் மேற்செல்லும்
வேல் உழவர் எண்கோடி,
ஏர்பெறும் இயக்கர் ஒன்றரைகோடி,
இசைநவில் கின்னரர் கோடி,
கூர்நுதிப் பிறைப்பல் புயங்கம்ஓர்
மூன்றுகோடி, தானவர்இரு கோடி. --- காசிகண்டம்.
வெற்பில்
குறமானை முள் கானில் கால் வைத்து ஓடிப் போய் முற்சார் செச்சைப் புயவீரா ---
வள்ளிமலையில்
வாழ்ந்து இருந்த வள்ளிநாயகியை, முள் தைக்கும்
காட்டில் உள்ள தினைப்புனத்திலே தமது திருப்பாதத்தை வைத்து, ஓடிப்போய் அவளை முன்புறத்
தழுவியவர்
வெட்சி
மாலை அணிந்த திருத்தோள்களை உடைய வீரர் ஆகிய முருகப் பெருமான்.
இதனைப்
பின் வரும் திருப்புகழ்ப் பிரமாணங்களால் அறிக.
நாரதன்
அன்று சகாயம் மொழிந்திட,
நாயகி பைம்புனம் ...... அதுதேடி,
நாணம்
அழிந்து. உரு மாறிய வஞ்சக,
நாடியெ பங்கய ...... பதம் நோவ,
மார
சரம்பட, மோகமுடன் குற
வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்
மாமுநிவன்
புணர் மான் உதவும் தனி
மானை மணஞ்செய்த ...... பெருமாளே. --- (பாரநறும்)
திருப்புகழ்.
நாவலர்
பாடிய நூல்இசையால் வரு
நாரதனார் புகல் ...... குறமாதை
நாடியெ, கானிடை கூடிய சேவக!
நாயக! மாமயில் ...... உடையோனே! --- (ஏவினைநேர்)
திருப்புகழ்.
மஞ்சு
தவழ் சாரல் அம் சயில வேடர்
மங்கை தனை நாடி, ...... வனமீது
வந்த, சரண அரவிந்தம் அது
பாட
வண்தமிழ் விநோதம் ...... அருள்வாயே.
குஞ்சர
கலாப வஞ்சி, அபிராம
குங்கும படீர ...... அதி ரேகக்
கும்பதனம்
மீது சென்று அணையும் மார்ப!
குன்று தடுமாற ...... இகல் கோப! ---
நிம்பபுரத் திருப்புகழ்.
மருவு
தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
கலகலன் கலின் கலின் என, இருசரண்
மலர்கள் நொந்து நொந்து அடிஇட, வடிவமும்...மிகவேறாய்,
வலிய
சிங்கமும் கரடியும் உழுவையும்
உறை செழும் புனம், தினை விளை இதண் மிசை
மறவர் தங்கள் பெண்கொடி தனை, ஒருதிரு ....உளம் நாடி,
அருகு
சென்று அடைந்து, அவள் சிறு பதயுக
சத தளம் பணிந்து, அதி வித கலவியுள்
அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ......அணைவோனே
--- திருவருணைத் திருப்புகழ்.
தழை
உடுத்த குறத்தி பதத் துணை
வருடி, வட்ட முகத் திலதக் குறி
தடவி, வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே
தரள பொன் பணி கச்சு விசித்து, இரு
குழை திருத்தி, அருத்தி மிகுத்திடு
தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ......
பெருமாளே.
---
திருத்தணிகைத் திருப்புகழ்
முத்தா ---
முத்தா
என்னும் சொல் இப் பாடலில் இருமுறை வந்துள்ளது.
முத்து
இயல்பாகவே அழகுடன் மிளிர்வது. நவமணிகளில் மற்றையவே எல்லாம் பட்டை தீட்டப்பட்டால்
ஒளவிடுபவை. இயல்பாகவே
அழகு பொருந்தியவர் முருகப் பெருமான்.
முருகு
என்னும் சொல்லுக்கு, அழகு, இளமை, மணம், தெய்த்தன்மை என்றெல்லாம்
பொருள் உண்டு.
முத்தா
என்னும் இன்னொரு சொல், பற்று அற்றவர் என்றும் முத்தியை அருள்பவர் என்றும்
பொருள்படும்.
முத்தீ
அத்தா
---
முத்தீ
- மூன்று வகையான தீ. தீ என்பது தீயால் ஓம்பப்படும் வேள்விகளைக் குறித்தது. ஆகவனீயம், தக்கிணாக்கினம், காருகபத்தியம் என்பன மூன்று
வேள்விகள். இவை நாளும் அந்தணர்கள் ஓம்புவன.
ஆகவனீயம்
என்பது தேவர்களுக்காக யாகசாலையின் வடகிழக்கில் நாற்கோணக் குண்டத்தில்
வளர்க்கப்படுவது.
தெற்கில்
அரைச்சந்திர வடிவமான குண்டமிட்டு அதில் வளர்க்கப் பெறுவதால் தட்சிணாக்கினி எனப்
பேர் பெற்றது. இது பிதிரர்களுக்கு உரியது என்பர்.
காருகபத்தியம்
ஆகவனீயத்தை அடுத்து வட்ட வடிவமைந்த குண்டமிட்டு வளர்க்கப் பெற்று, இல்வாழ்வோரால் ஓம்பப் பெறுவதால் அப்பெயர் பெற்றது.
எரி
மூன்று - வைதிகாக்கினி, சைவாக்கினி, வைந்தவாக்கினி என்றும் சொல்லப்படும்.
அத்தன்
- தலைவன்.
வேள்விகளுக்குத்
தலைவன் முருகப் பெருமான் என்றார்.
சுத்தா ---
சுத்தம்
- தூய்மை. இயல்பாகவே மாசுகள் அற்றவன் இறைவன்.
முத்திப்
பெருமாளே ---
முத்து
என்னும் சொல்லுக்கு விடுபடுவது என்ற பொருள் உண்டு. சிப்பியில் இருந்து விடுபடுவது
முத்து.
முத்தி
என்பது பாச நீக்கம் ஆகும். பாசங்களில் இருந்து உயிர்களை விடுபட அருள்வதால், முருகப் பெருமானை "முத்தா" என்றும்
"முத்திப் பெருமாளே" என்றும் போற்றினார் அடிகளார்.
"முத்தா!
முத்தீ அத்தா! சுத்தா!
முத்தா! முத்திப் ...... பெருமாளே"
என்னும் இந்த
முடிவு கொண்டுள்ள திருப்புகழ்ப் பாடல்கள், "கொத்தார் பற்கால்", "மெய்ச் சார்வு அற்றே", "உற்பாதப் பூ", "எற்றா வற்றா", "செட்டாகத் தேனை", "பட்டு ஆடைக்கே", "பத்து ஏழுஎட்டு", "பொற்கோ வைக்கே", "பொற் பூவை" "மெய்க்கு
ஊணைத் தேடி" என்னும் தொடக்கத்தினை உடையவை ஆகும்.
கருத்துரை
முருகா!
அடியேனுக்கு உள்ள ஊனத்தைக் களைந்து ஞானத்தை அருள்வாய்.
No comments:
Post a Comment