சீகாழி - 0783. சிந்து உற்று எழு






அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சிந்து உற்று எழு (சீகாழி)

அகத்துறைப் பாடல்
முருகன் அருள் வேண்டல்

தந்தத்தன தானன தந்தத் ...... தனதான


சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே

தென்றற்றரு வாசமி குந்துற் ...... றெழலாலே

அந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே

அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள்

நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே

நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே

சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே

சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சிந்து உற்று எழு மாமதி அங்கித் ...... திரளாலே,

தென்றல் தரு வாசம் மிகுந்து உற்று ...... எழலாலே,

அந்திப் பொழுது ஆகிய கங்குல் ...... திரளாலே

அன்பு உற்று எழு பேதை மயங்கித் ...... தனி ஆனாள்,

நந்து உற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே,

நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்திப் ...... பொருவேளே!

சந்தக் கவி நூலினர் தம்சொற்கு ...... இனியோனே

சண்பைப் பதி மேவிய கந்த! ...... பெருமாளே.


பதவுரை

      நந்து உற்றிடு வாரியை மங்கத் திகழாயே --- சங்குகள் பிறக்கின்ற கடலின் வளம் மங்கி வற்றிப் போகும்படியா,

     நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்திப் பொருவேளே --- உண்டார் உயிரைக் கொல்லும் நஞ்சு போன்ற வேலாயுதத்தைச் விடுத்துப் போர் புரிந்த முருகவேளே!

     சந்தக் கவி நூலினர் தம் சொற்கு இனியோனே --- சந்தக் கவிகளைச் சாத்தும் புலவர்களுடைய சொல்லில் மகிழ்ச்சி கொள்பவரே!

      சண்பைப் பதி மேவிய கந்த --- சண்பை என்னும் சீகாழித் திருப்பதியில் பொருந்தி வீற்றிருக்கும் கந்தச் சுவாமியே!

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

      சிந்து உற்று எழு மாமதி அங்கித் திரளாலே --- கடலில் உதிக்கின்ற அழகிய சந்திரன் வீசும் நெருப்புப் பிழம்பு போன்ற ஒளியாலும்,

      தென்றல் தரு வாசம் மிகுந்து உற்று எழலாலே --- தென்றல் காற்றானது சந்தன மரங்கள் மிகுந்துள்ள சோலையின் ஊடு தவழ்ந்து பரப்பும் நறுமணத்தாலும்,

      அந்திப் பொழுது ஆகிய கங்குல் திரளாலே --- மாலைப் பொழுதாகி இருள் நெருங்குவதாலும்,

      அன்பு உற்று எழு பேதை மயங்கித் தனி ஆனாள் --- உம் மீது அன்பு மிக்க இந்தப் பேதைப் பெண்ணானவள் தனிமையில் தவித்திருக்கின்றாள்.


பொழிப்புரை

         சங்குகள் பிறக்கின்ற கடலின் வளம் மங்கி வற்றிப் போகும்படியா, உண்டார் உயிரைக் கொல்லும் நஞ்சு போன்ற வேலாயுதத்தைச் விடுத்துப் போர் புரிந்த முருகவேளே!

     சந்தக் கவிகளைச் சாத்தும் புலவர்களுடைய சொல்லில் மகிழ்ச்சி கொள்பவரே!

      சண்பை என்னும் சீகாழித் திருப்பதியில் பொருந்தி வீற்றிருக்கும் கந்தச் சுவாமியே!

     பெருமையில் மிக்கவரே!

       கடலில் உதிக்கின்ற அழகிய சந்திரன் வீசும் நெருப்புப் பிழம்பு போன்ற ஒளியாலும், தென்றல் காற்றானது சந்தன மரங்கள் மிகுந்துள்ள சோலையின் ஊடு தவழ்ந்து பரப்பும் நறுமணத்தாலும், மாலைப் பொழுதாகி இருள் நெருங்குவதாலும், உம் மீது அன்பு மிக்க இந்தப் பேதைப் பெண்ணானவள் தனிமையில் தவித்திருக்கின்றாள்.

 
விரிவுரை

இத் திருப்புகழ்ப் பாடல் அகப்பொருள் துறையில் அமைந்தது. தலைவனைப் பிரிந்து வாடுகின்ற தலைவியின் நிலையை விளக்குவதாக அமைந்துள்ளது. பக்குவப்பட்ட ஆன்மாக்கள் இறைவனை நினைந்து, அவனை அடைய எண்ணி உள்ளத்தில் வாடுகின்ற நிலையை இதனால் விளக்குவதாக அமைந்துள்ளது.

தலைவன் மீது காதல் கொண்ட தலைவிக்கும் குளிர்ந்த சந்திரனது தண்ணொளி வெப்பத்தையும், தென்றல் காற்று அனல் போன்ற வெம்மையையும் செய்யும். ஜீவான்மாவை நாயகியாகவும், பரமான்மாவை நாயகனாகவும் வைத்து பரமான்மாவாகிய நாயகன் மீது காதல் கொண்ட நாயகியாக ஜீவான்மா மிகுந்த தாபத்தை அடைந்து வருந்துகின்றது. இங்ஙனம் நாயகி நாயக பாவத்தில் எழுந்த பாடல்கள் பல.

துள்ளுமத வேள் கைக்  கணையாலே
  தொல்லை நெடுநீலக்     கடலாலே
மொள்ளவரு சோலைக்     குயிலாலே
  மெய்யுருகு மானைத்    தழுவாயே”     --- திருப்புகழ்.

இரவி என, வடவை என, ஆலால விடம் அது என,
     உருவுகொடு, ககனமிசை மீது ஏகி, மதியும்வர,
     இரதிபதி கணைகள் ஒரு நால் ஏவ, விருதுகுயில் ......அதுகூவ,
எழுகடலின், முரசின் இசை, வேய் ஓசை, விடையின்மணி,
     இசை குறுகி, இருசெவியில் நாராசம் உறுவது என,
     இகல் புரிய, மதனகுரு ஓராத அனையர்கொடு .....வசைபேச,

அரஅர என வநிதைபடு பாடு ஓத அரிது அரிது,
     அமுதமயில் அதுகருதி யாரோடும் இகல்புரிவள்,
     அவசம்உற அவசம்உற ஆர்ஓமல் தரவும் மிக ......மெலிவு ஆனாள்,
அகுதி இவள் தலையில்விதி, ஆனாலும் விலக அரிது,
     அடிமைகொள உனதுபரம், ஆறாத ஒரு தனிமை
     அவளை அணை தர இனிதின் ஓகார பரியின்மிசை ...... வருவாயே.
                                                                  --- திருப்புகழ்.
  
தென்றலையம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்
தென்றலையம்புய மின்கோ மருக செழுமறைதேர்
தென்றலையம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்
தென்றலையம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே.   --- கந்தரந்தாதி.

இந்தக் கந்தர் அந்தாதிப் பாடலின் பதவுரை -----

தென் - வண்டுகள் இசை பாடுகின்ற, தலை - தலையிலே, அம்பு - கங்கையை, புனைவார் - அணியும் பரமசிவனது, குமார - மைந்தனே, திமிர - இருள் நிறமுடைய, முந்நீர் - கடல் சூழ்ந்த, தென் - அழகிய, தலை - பூதேவிக்கும், அம்புயம் - செந்தாமரைப் பூவில் வாசம் செய்கின்ற, மின் - சீதேவிக்கும், கோ - நாயகனாகிய திருமாலினது, மருக - மருகோனே, செழு - செழுமை தங்கிய, மறை தேர் - நான்கு வேதங்களும் துதிக்கின்ற, தென்றலை - தெற்கு திசையில் உள்ளதாகிய, அம் - அழகிய, புசக - பாம்பு போன்ற, பூதர - திருச்செங்கோட்டு மலை அதிபனே, எரி - நெருப்பை, சிந்தி - கொட்டிக் கொண்டு, மன்றல் - வாசனை தோய்ந்த, தென்றல் - தென்றல் காற்றானது, ஐ அம்பு - (என் தேகத்தில் மன்மதனது) ஐந்து அம்புகளும், படு - தைத்த, நெறி - புண் வழியே, போய் - நுழைந்து, உயிர் - என் உயிரை, தீர்க்கின்றது - (வருத்தி) நீக்குகின்றது.

இதன் பொழிப்புரை ---

வண்டுகள் இசை பாடுகின்ற, சென்னியின் கண் கங்கை நீரைத் தரித்திருக்கும் பரமசிவனின் மைந்தனே, இருளின் நிறம் கொண்ட, கடலால் சூழப்பட்ட, அழகிய பூதேவிக்கும், தாமரையில் வசிக்கும் சீதேவிக்கும், தலைவனாகிய திருமாலின், மருகரே,!வளமையான வேதங்கள் எல்லாம், பூசிக்கும், தெற்குத் திசைக் கண் இருக்கும், சிறந்த, சர்ப்பம் போல் காட்சி அளிக்கும் செங்கோட்டு அதிபரே! அக்கினியைக் கொட்டிக் கொண்டு, மணம் நிரம்பிய, தென்றல் காற்று, காமனின் ஐந்து பாணங்களும், என் உடலில் தைத்த புண்வழியே போய், என் உயிரை வருத்திப் போக்குகிறது.

செழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல்
  திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்தின்று என்மேல் பகையாட வாடும்
  எனைநீ நலிவதென் னேஎன்னும்
அழுந்தா மகேந்திரத்(து) அந்த ரப்புட்(கு)
  அரசுக் கரசே ! அமரர்தனிக்
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும்
  குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.    ---  திருவிசைப்பா.
  
இதன் பொழிப்புரை ---

என் மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனை உருவெளித் தோற்றத்தில் கண்டு அவனை நோக்கி, `செழிப்பான தென்றல் காற்று, அன்றிலின் தழுதழுத்த ஒலி, ஒளிவீசும் இந்த மதியம், இருள், அலைகளை உடைய கடல், இனிய இசையை இசைக்கும் வேய்ங்குழலின் ஓசை, காளையின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஒலி இவைகள் தமது முழு ஆற்றலோடும் புறப்பட்டு என்மீது பகை கொண்டு துன்புறுத்தவும், அதனால் வாடிக் கொண்டிருக்கும் அடியேனை நீயும் வருத்துவது ஏன்? அழிவில்லாத மகேந்திர மலையில் தங்கி வானத்தில் உலவும் பறவைகளுக்கு அரசனான கருடனுக்கு அருள் செய்த தலைவனே! தேவர்களின் ஒப்பற்ற கொழுந்து போன்ற இனியவனே! குணக்குன்றே!` என்று பலவாறாக அழைத்து அரற்றுகின்றாள்.


சிந்து உற்று எழு மாமதி அங்கித் திரளாலே ---

கடலில் உதிக்கின்ற அழகிய முழுநிலவின் குளிர்ந்த ஒளியானது காதல் வயப்பட்டோர்க்கு நெருப்புப் போலத் தகிக்கும்.

பரவையார் மீது கால் கொண்ட நம்பியாரூரர் நிலையைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுமாறு காண்க.

ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல்கதிர்
தூர்ப்பதே! எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர்
நீர்த் தரங்க நெடுங் கங்கை நீள் முடிச்
சாத்தும் வெண்மதி போன்று இலை தண்மதி! 

ஏ! குளிர்ந்த இயல்பினையுடைய சந்திரனே! எனது துன்பத்தைக் கண்ட பின்னும் மேலும் மேலும், எப்போதும் போல் உனது போக்கின்படியே போகாமல் நின்று, உனது இயல்பான குளிர்ந்த கிரணம் அல்லாது இயல்புக்கு மாறான வெப்பக் கதிர்களைத் தூவுவதா!? எனைத் தடுத்து ஆளாகக் கொண்ட இறைவன் தனது நீர்மை பொருந்திய அலைகளையுடைய நெடிய கங்கை சூடிய நீண்ட முடியிலே அருளினால் எடுத்து அணிந்து கொண்ட வெள்ளிய சந்திரனைப்போல் நீ அமைந்தாய் இல்லையே.

நம்பியாரூரரை நினைந்து வருந்தும் பரவையாரின் நிலையைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் விளக்குமாறு காண்க.

"ஆரநறும் சேறு ஆட்டி, அரும் பனிநீர்
     நறும் திவலை அருகு வீசி,
ஈர இளந் தளிர்க்குளிரி படுத்து, மடவார்
     செய்த இவையும் எல்லாம்
பேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன; மற்று
     அதன்மீது சமிதை என்ன
மாரனும் தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி
     மலர்வாளி சொரிந்தான் வந்து".

மணமுடைய கலவைச் சந்தனச் சேற்றைப் பூசியும், அரிய மணமுடைய பனிநீரை மழைபோலச் சிறு துளிகளாகப் பக்கங்களில் எல்லாம் வீசித் தெளித்தும், குளிரியினது ஈரமுள்ள இளந்தளிர்களை இட்டும், இவ்வாறாகத் தோழிப் பெண்கள் செய்த இவைகளும் இவை போன்றன பிறவும் ஆகிய எல்லா உபசாரங்களும் முன்னரே பெருநெருப்பாய் மூண்ட அதன்மேல் அதனை வளர்க்குமாறு நெய்யையும் சொரிந்தது போல் ஆயின. அதன்மேலும்,  அந்த அழலைப் பின்னும் வளர்க்க உணவு தருவது போல, மன்மதனும் வந்து தனது ஒப்பற்ற வில்லின் வலிமையைக் காட்டிப் பூவாகிய அம்புகளை மேன்மேலும் எய்தான்.

"மலர் அமளித் துயில் ஆற்றாள்; வரும் தென்றல்
     மருங்கு ஆற்றாள்: மங்குல் வானில்
நிலவு உமிழும் தழல் ஆற்றாள், நிறை ஆற்றும்
     பொறை ஆற்றாள்; நீர்மையோடும்
கலவமயில் என எழுந்து கருங்குழலின்
     பரம் ஆற்றாக் கையள் ஆகி,
இலவ இதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்து, ஆற்றா
     மையின் வறிதே இன்ன சொன்னாள்".

பூம்படுக்கையிலே வீழ்ந்த பரவையார் அந்த மலர் அமளியிலே படுத்துத் துயிலைச் செய்யாதவராய், நிலாமுற்றத்திலே துயிலை விளைக்கக் கூடியதாய்த் தமது பக்கத்திலே வந்து மெல்லென வீசும் தென்றல் காற்றுத் தமது மேலே பட, அதனையும் பொறாதவர் ஆயினர். மேகங்கள் தவழும் வானில் இருந்து ஒளி வீசும் நிலாவினுடைய கதிர்கள் நெருப்பை உமிழ்தலால் அவ் வெப்பத்தையும் பொறுக்க முடியாதவர் ஆயினர். தமக்கு உரிய தன்மையோடு காக்கின்ற பெண்மைக் குணமாகிய நிறையைக் கொண்டு செலுத்த வல்ல பொறை எனும் சத்தியைத் தாங்க இயலாதவர் ஆயினர். மலரணையில் வீழ்ந்து கிடந்தவர் இக்குணத்துடன் சிறிய தோகைமயிலைப் போல எழுந்து தமது கரிய கூந்தலின் பாரத்தையும் தாங்கமுடியாத நிலை உடையவராய், இலவம் பூப்போன்று இயல்பிலேயே சிவந்த வாய் நெகிழ்ந்து தரிக்கலாகாத வருத்தத்தாலே தமக்குத் தாமே
பின்வருமாறு சொல்வார் ஆயினார்.

கந்தம் கமழ்மென் குழலீர்! இது என்?
     கலைவாள் மதியம் கனல்வான் எனை இச்
சந்தின் தழலைப் பனிநீர் அளவித்
     தடவும் கொடியீர்! தவிரீர்! தவிரீர்!
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார்
     மலய அனிலமும் எரியாய் வருமால்;
அந்தண் புனலும் மரவும் விரவும்
     சடையான் அருள் பெற்று உடையார் அருளார்.      

வாசனை வீசும் மெல்லிய கூந்தலையுடைய சேடியர்களே! இது என்ன ஆச்சரியம்! அமிர்த கலைகளுடைய ஒளிவீசும் சந்திரனோ என்னைச் சுடுவாயின் ஆயினான். இந்தச் சந்தனக் குழம்பைப் பனிநீருடன் கலந்து என்மேல் பூசுகின்ற கொடியீர்களே!
நீவிரோ இச்செயலைத் தவரீர்! தவிரீர். இங்கு வந்து உலாவி நிற்கும் தென்றலோ தீ உருவமாய் வருகின்றது. அழகிய குளிர்ந்த கங்கைப் புனலையும் பாம்பையும் ஒருங்கே தம்மிடத்து வைத்த சடையவராம் சிவபெருமானது அருள்பெற்று என்னை உடையாராகிய நம்பிகளோ என்பால் அருள் செய்கின்றாரில்லை.

ஊரைச் சுடுமோ உலகம் தனைச் சுடுமோ
ஆரைச் சுடுமோ அறியேனே - நேரே
பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே யஇந்த
நெருப்புவட்ட மான நிலா.                                ---  பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.                                              
 
தென்றல் தரு வாசம் மிகுந்து உற்று எழலாலே ---

தென்றல் காற்றானது சந்தன மரங்கள் மிகுந்துள்ள சோலையின் ஊடு தவழ்ந்து பரப்பும் நறுமணமானது தலைவியின் துன்பத்தை மிகுக்கின்றது.

இளம் தென்றல் காற்று காமுகர்க்கு வேதனையைத் தரும்.

", தென்றல் மாருதமே! நீ பிறந்தது எங்கள் சிவபெருமானுடாய சந்தனக் காடுகளை உடைய பொதியமலை. நீ சதா பழகுவது தெய்வ நீராகிய காவிரி பாயும் தமிழ்நாடு.  உயர்ந்த இடத்தில் பிறந்தும், குளிர்ந்த நாட்டில் பழகியும், எவ்வாறு இந்தக் கொடுமையை நீ பெற்றிருக்கின்றாய்?” என்று காதல் நோய் கொண்ட சுந்தரர் கூறுகின்றார்.  அந்த இனிய பாடல் பெரியபுராணத்திலிருந்து இது.

பிறந்தது எங்கள் பிரான் மலயத்திடை,
சிறந்து அணைந்தது தெய்வநீர் நாட்டினில்,
புறம்பணைத் தடம் பொங்கு அழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ? தமிழ்மாருதம். ---  பெரியபுராணம்.


அந்திப் பொழுது ஆகிய கங்குல் திரளாலே ---

மாலைப் பொழுது மயங்கி இருள் நெருங்குவதும் காமுகர்க்குத் துன்பத்தைத் தரும்.

அன்பு உற்று எழு பேதை மயங்கித் தனி ஆனாள் ---

தலைவன் மீது தணியாத காதல் கொண்ட தலைவியானவள், தனிமையில் வாடுகின்றாள். அவளது தனிமை தீரும்படியாகத் தலைவன் விரைந்து வந்து அவளைத் தழுவி மகிழவேண்டும்.

நந்து உற்றிடு வாரியை மங்கத் திகழாயே, நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்திப் பொருவேளே ---

சங்குகள் பிறக்கின்ற கடலின் வளம் மங்கி வற்றிப் போகும்படியாஉண்டார் உயிரைக் கொல்லும் நஞ்சு போன்ற வேலாயுதத்தைச் விடுத்துப் போர் புரிந்தவர் முருகவேள்.

இதனைப் பின்வரும் வேல் விருத்தப் பாடலால் அறியலாம்.

மகரம்அளறு இடைபுரள, உரககண பணமவுலி
மதியும்இர வியும்அலையவே,
வளர்எழிலி குடர்உழல, இமையவர்கள் துயர்அகல,
மகிழ்வுபெறும் அறுசிறையவாம்

சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு
செநெல்களொடு தரளம்இடவே,
செகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற,உததி
திடர்அடைய,  நுகரும்வடிவேல்..

பட்டு உருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்து, கடல்
     முற்றும் மலை வற்றிக் குழம்பும் குழம்ப, முனை
     பட்டஅயில் தொட்டுத் திடங்கொண்டு எதிர்ந்த அவுணர் ...... முடிசாய,
தட்டு அழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
     நிர்த்தமிட, ரத்தக் குளங்கண்டு உமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண்டு, செந்தில்உறை ....பெருமாளே.
                                                            ---  (கட்டழகு) திருப்புகழ்.

சந்தக் கவி நூலினர் தம் சொற்கு இனியோனே ---

சந்தக்கவி - இறைவனுக்கு உகந்தது. அதனால்தான் சந்தக் கவியாக "முத்தைத்தரு" என்னும் முதலெடுத்து முருகவேள் அருணகிரியார்க்குத் தந்தனர். இயமன் வந்தபோது மார்க்கண்டேயர் வடநூல் சந்தக் கவியால் துதிசெய்திருந்தனர் என்றும் கந்தபுராணம் கூறுகின்றது:

"அந்தக் காலத்து, "எம்உயிர் காப்பான் அரன் உண்டால்,
வந்து அக் கூற்றன் என் செய்வன்" என்னா, வட தொன்னூல்
சந்தப் பாவில் போற்றுதல் செய்தே, தனிநின்ற
மைந்தற் காணூஉ எம்பெருமானும் மகிழ்வுற்றான்.

என்கின்றது கந்தபுராணம்.

அருணகிரிநாதர் முருகன் அருளில் மூழ்கித் திளைத்தவர். அதுமாத்திரம் அன்று. சிறந்த புலமை உடையவர். அவருடைய திருவாக்கைக் கூர்ந்து ஆராய்ந்தால் தென்மொழியிலும் வட மொழியிலும் ஒருங்கே புலமை பெற்றவர் என்பதை உணரலாம். பழங்காலத்தில் அராகம், வண்ணம், வகுப்பு, முடுகு என்ற பெயரோடு அங்கங்கே சந்த அமைப்பையுடைய கவிகள் இருந்தாலும், முழுவதும் சந்தம் அமைந்த திருப்புகழைப் போலச் சந்தக் கவி பாடியவர்கள் மிக அரியர். அருணகிரிநாதப் பெருமான் முருகவேள் மீது தான் கொண்ட பத்தியினை வெளிப்படுத்தி, பதினாயிரம் திருப்புகழ்களை நீருண்ட மேகம் போலப் பொழிந்து அருளினார். நமது இழவூழால் அவற்றில் பெரும்பாலன மறைந்தன.  புதிய வகையில் சந்தக் கவி பாடியது மாத்திரம் அல்ல. முருகனைப் பற்றியே அவ்வளவு பாடல்களையும் பாடினார். அதற்கு முன் முருகனைத் துதித்த பாடல்கள் தமிழில் இருந்தாலும் ஒரே அடியவர் இத்துணைப் பாடல்களைப் பாடவில்லை. அதற்கு முன் முருகனைப் பற்றிப் பாடிய கவிகளைத் தொகுத்துப் பார்த்தால் அத்தனைக் கவிகளுக்கும் அதிகமாகவே அருணகிரியார் பாடினார் என்பது தெரியவரும்.


பத்தர் கண ப்ரிய! நிர்த்தம் நடித்திடு
     பட்சி நடத்திய ...... குக! பூர்வ
பச்சிம தட்சிண உத்தர திக்கு உள
     பத்தர்கள் அற்புதம் ...... எனஓதும்

சித்ர கவித்துவ சத்த மிகுத்த, தி-
     ருப்புகழைச் சிறிது ...... அடியேனும்
செப்ப என வைத்து, லகிற் பரவ, தெரி-
     சித்த அநுக்ரகம் ...... மறவேனே.     --- திருப்புகழ்.


சண்பைப் பதி மேவிய கந்த ---

சண்பை என்பது என்னும் சீகாழித் திருத்தலத்திற்கு விளங்கிய பன்னிரண்டு திருப்பெயர்களுள் ஒன்று.

பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்
பொருஇல் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.    ---  பெரியபுராணம்.

1.    பிரமபுரம்  பிரமதேவர் பூசித்துப் பெறு பெற்றதலம்.

தோடுஉடைய செவியன் விடைஏறி ஓர்தூவெண் மதி சூடி
காடுஉடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிராமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

சேவுயரும் திண்கொடியான் திருவடியே
         சரண் என்று சிறந்த அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்தான்
         வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
         செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவிஇரும் கருங்குவளை கருநெய்தல்
         கண்காட்டும் கழுமலமே

எனத் திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்து இருத்தல் காண்க.

2.    வேணுபுரம்  சூரபதுமனுக்கு அஞ்சிய தேவேந்திரன் இங்குப் போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு (மூங்கில்) வடிவில் முளைத்து அருள்புரிந்த தலம். தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க வேணு வழியாய் இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.

3.    புகலி – சூரபதுமனால் இடுக்கண் எய்திய தேவர்கள் சிவபிரானைப் புகல் அடைந்து, அடைக்கலம் புகுந்து வணங்கிய தலம்.

4.    வெங்குரு – அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் வழிபட்டுத் தேவகுருவாகிய பிருகற்பதிக்குச் சமத்துவம் பெற்ற தலம்.  எமதருமன் தன்னைக் கொடியவன் என்று உலகம் இகழாதவாறு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.

5.    தோணிபுரம் – ஊழிமுடிவில் சிவபெருமான் உமாதேவியாரோடு பிரணவம் ஆகிய தோணியில் வீற்றிருப்பத் தான் அழியாமல், நிலைபேறு எய்தித் திகழும் தலம்.

6.    பூந்தராய் – சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளும் பூவும் தாருமாய்ப் பூசித்து அழியாவரம் பெற்ற தலம்.

7.    சிரபுரம் – சயிங்கேயன் என்னும் அசுரன் வேற்று வடிவம் கொண்டு மறைந்து வந்து தேவர்களுடன் இருந்து அமிர்தம் உண்ணும் நிலையில் சூரியனால் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டுணுவால் சிரம் வெட்டுண்ட தலம்.

8.    புறவம் – சிபிச் சக்கரவர்த்தியைச் சோதித்தற்கு அக்கினிதேவன் புறாவடிவம் கொண்டு போந்து, புறாவின் எடை அளவிற்குத் தன் தசையை அரிந்து கொடுத்தும், அது போதாமை கண்டு, அவனே துலை ஏறித் தன் வள்ளன்மையினைப் புலப்படுத்திய நிலையில், புறா வடிவம் கொண்ட அக்கினிதேவன், அப்பாவம் அழியுமாறு வழிபட்டு உய்ந்த தலம்.

9.    சண்பை – கபில முனிவர் சாபத்தின்படி தம் குலத்தினன் வயிற்றில் பிறந்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய துகள், சண்பைப் புல்லாக முளைத்து இருந்ததை ஆயுதமாகக் கொண்டு போர் செய்து மடிந்த யாதவர்களின் கொலைப்பழி, தன்னை அணுகாவண்ணம் கண்ணன் பூசித்த தலம்.

10.   சீர்காழி – காளிதன் என்னும் நாகம் வணங்கிய தலம்.  நடனத்தில் தோற்ற காளி வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.

11.   கொச்சைவயம் – பராசரர் தாம் மச்சகந்தியை ஆற்றிடையில் புணர்ந்து அடைந்த தீநாற்றமும், பழியும் போகும் வண்ணம் இறைஞ்சி உய்ந்த தலம்.

12.   கழுமலம் – உரோமச முனிவர் இறைவனை வழுத்தி ஞானோபதேசம் பெற்றுத் தம்முடைய மலங்களைக் கழுவப்பெற்ற தலம்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...