வைத்தீசுவரன் கோயில் - 0794. மூலாதாரமொடு ஏற்றி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மூல ஆதாரமொடு (வைத்தீசுரன் கோயில் - திருப்புள்ளிருக்குவேளூர் )

முருகா!
சிவயோகத்தில் அடியேன் நின்று
உய்வு பெற அருள் புரிவீர்.


தானா தானன தாத்த தந்தன
     தானா தானன தாத்த தந்தன
     தானா தானன தாத்த தந்தன ...... தனதானா


மூலா தாரமொ டேற்றி யங்கியை
     ஆறா தாரமொ டோட்டி யந்திர
     மூலா வாயுவை யேற்று நன்சுழி ...... முனையூடே

மூதா தாரம ரூப்பி லந்தர
     நாதா கீதம தார்த்தி டும்பர
     மூடே பாலொளி ஆத்து மந்தனை ...... விலகாமல்

மாலா டூனொடு சேர்த்தி தம்பெற
     நானா வேதம சாத்தி ரஞ்சொலும்
     வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திர ...... தவிசூடே

மாதா நாதனும் வீற்றி ருந்திடும்
     வீடே மூணொளி காட்டி சந்திர
     வாகார் தேனமு தூட்டி யென்றனை ...... யுடனாள்வாய்

சூலாள் மாதுமை தூர்த்த சம்பவி
     மாதா ராபகல் காத்த மைந்தனை
     சூடோ டீர்வினை வாட்டி மைந்தரெ ......னெமையாளுந்

தூயாள் மூவரை நாட்டு மெந்தையர்
     வேளூர் வாழ்வினை தீர்த்த சங்கரர்
     தோய்சா ரூபரொ டேற்றி ருந்தவ ...... ளருள்பாலா

வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக
     மூடார் சூரரை வாட்டி யந்தகன்
     வீடூ டேவிய காத்தி ரம்பரி ...... மயில்வாழ்வே

வேதா நால்தலை சீக்கொ ளும்படி
     கோலா காலம தாட்டு மந்திர
     வேலா மால்மக ளார்க்கி ரங்கிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மூலா தாரமொடு ஏற்றி, அங்கியை
     ஆறு ஆதாரமொடு ஓட்டி, யந்திர
     மூலா வாயுவை ஏற்று நன்சுழி ...... முனைஊடே,

மூது ஆதார மரூப்பில், அந்தர
     நாதா கீதம் அது ஆர்த்திடும் பரம்
     ஊடே, பால்ஒளி ஆத்துமம் தனை ...... விலகாமல்,

மால் ஆடு ஊனொடு சேர்த்து இதம்பெற,
     நானா வேதம சாத்திரம் சொலும்
     வாழ் ஞானா புரி ஏற்றி, மந்திர ...... தவிசுஊடே,

மாதா நாதனும் வீற்றிருந்திடும்
     வீடே மூண் ஒளி காட்டி, சந்திர
     வாகுஆர் தேன்அமுது ஊட்டி, என்தனை .....உடன்ஆள்வாய்.

சூலாள், மாது, உமை, தூர்த்த சம்பவி,
     மாதா, ராபகல் காத்து அமைந்த அனை,
     சூடோடு ஈர்வினை வாட்டி, மைந்தர் ......என எமை ஆளும்

தூயாள், மூவரை நாட்டும் எந்தையர்,
     வேளூர் வாழ்வினை தீர்த்த சங்கரர்,
     தோய் சாரூபரொடு ஏற்று இருந்தவள் ...... அருள்பாலா!

வேலா! ஏழ்கடல் வீட்டி வஞ்சக
     மூடார் சூரரை வாட்டி, அந்தகன்
     வீடு ஊடு ஏவிய காத்திரம் பரி ...... மயில்வாழ்வே!

வேதா நால்தலை சீக் கொளும்படி
     கோலா காலம் அது ஆட்டு மந்திர
     வேலா! மால் மகளார்க்கு இரங்கிய ...... பெருமாளே.


பதவுரை

      சூலாள் மாது --- சூலாயுதத்தை ஏந்திய அழகுடையவரும்,

     மை தூர்த்த சம்பவி --- மை நிரம்ப எழுதிய சம்புவின் மனைவியும்,

      மாதா --- உலக மாதாவும்,

     ரா பகல் காத்து அமைந்த அன்னை --- இரவும் பகலும் உயிர்களைக் காத்து அமைந்த அன்னையும்,

      சூடோடு ஈர் வினை வாட்டி --- சூட்டோடு சூடாய் வருத்துகின்ற வினைகளின் வலியைக் கெடுத்து

     மைந்தர் என எமை ஆளும் தூயாள் --- அடியேங்களைப் புத்திரர் போல் ஆட்கொண்டு அருள் புரியும் பரிசுத்தம் உடையவரும்,

      மூவரை நாட்டும் எந்தையர் --- பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மூவரையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் பதவியில் நிலைநாட்டிய எமது தந்தையும்,

     வேளூர் வாழ் வினை தீர்த்த சங்கரர் --- புள்ளிருக்கு வேளூரில் வாழ்பவரும், வினைகளை விலக்கி சுகத்தைச் செய்பவரும்,

      தோய் சாரூபரொடு --- பொருந்திய வடிவுடன் கூடியவரும் ஆகிய சிவபெருமானுடன்

     ஏற்று இருந்தவள் அருள் பாலா --- இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவரும் ஆகிய உமையம்மையார் பெற்றருளிய புதல்வரே!

     வேலா --- வேலாயுதத்தை உடையவரே!

      ஏழ் கடல் வீட்டி --- எழு கடல்களையும் கலக்கி வற்றச் செய்து,

     வஞ்சக மூடார் சூரரை வாட்டி --- வஞ்சனையைச் செய்யும் மூடர்களாகிய சூராதி அவுணர்களை மாய்த்து,

     அந்தகன் வீடு ஊடு ஏவிய --- இயமனுடைய வீட்டுக்குள் அனுப்பிய,

     காத்திரம் பரி மயில் வாழ்வே --- பாரத்தைத் தாங்குகின்ற மயில் வாகனத்தின் மீது வருபவரே!

      வேதா நால் தலை சீக் கொளும்படி --- பிரமதேவனுடைய நான்கு தலைகளும் சீழ் கொள்ளும்படி குட்டி,

      கோலாகாலம் அது ஆட்டு --- அவனது ஆடம்பரத்தை வருத்திய

     மந்திர வேலா --- பிரணவ வடிவாகிய வேற்படையினை உடையவரே!

      மால் மகளார்க்கு இரங்கிய பெருமாளே --- திருமாலின் திருமகளாகிய வள்ளியம்மையார்க்கு கருணை காட்டி அருள் புரிந்த பெருமிதம் உடையவரே!

      மூல ஆதாரமொடு ஏற்றி அங்கியை --- மூலாதார கமலத்தில் மங்கிக் கிடக்கின்ற மூல அக்கினியை பிராணாயாமத்தினால் ஒளிவிடச் செய்து,

     ஆறு ஆதாரமொடு ஓட்டி --- ஆறு ஆதாரங்களிலும் உள்ள சக்கரங்களைப் பொருந்தச் செய்து,

      யந்திர மூலா வாயுவை ஏற்று நல் சுழிமுனையூடே ---மூலாதாரத்தினின்றும் எழும் பிராணவாயுவை சுழிமுனை நாடி வழியாகச் செல்லும்படி செய்து,

      மூது ஆதார மருப்பில் அந்தர --- முதன்மையான  ஆறு ஆதார முடிவில் உள்ள,

      நாதா கீதம் அது ஆர்த்திடும் பரம் ஊடே --- நாத கீதம் ஒலிக்கும் இடத்தில் (பிரமரந்திர நிலையில்)

     பால் ஒளி ஆத்துமன் தனை விலகாமல் --- பால் போலும் ஒளி பொருந்திய ஆன்மாவை விலகாமல்

      மால் ஆடு ஊனோடு சேர்த்தி இதம் பெற --- பிராணவாயு இயங்குகின்ற உடம்புடன் சேர்த்து சுகம் பெறும்படி,

      நானா வேதம சாத்திரம் சொல்லும் --- பல்வகையான வேதாகமங்களும், சிறந்த ஞான சாத்திர நூல்களும் சொல்லும்

     வாழ் ஞானாபுரி ஏற்றி --- பேரானந்தப் பெருவாழ்வைத் தருகின்ற ஞானபூமியைச் சேரச் செய்து,

      மந்திர தவிசு ஊடே --- பிரணவ மந்திரப் பீடத்தின் மீது

     மாதா நாதனும் வீற்றிருந்திடும் வீடே --- பராசத்தியும் பரசிவமும் எழுந்தருளி இருக்கும் வீட்டையும்,

     மூண் ஒளி காட்டி --- சோம சூரிய அக்கினி என்ற மூன்று ஒளியையும் காட்டி அருளி,

      சந்திர வாகார் தேன் அமுது ஊட்டி --- அங்கே சந்திரகாந்தி நிறைந்த தேன் போலும் இனிய அமுதத்தைப் பருகச் செய்து

     என் தனை உடன் ஆள்வாய் --- அடியேனை இக்கணமே ஆண்டு அருளுவீராக.

பொழிப்புரை

         சூலாயுதத்தை ஏந்திய அழகுடையவரும், மை நிரம்ப எழுதிய சம்புவின் மனைவியும்,  உலக மாதாவும், இரவும் பகலும் உயிர்களைக் காத்து அமைந்த அன்னையும்,  சூட்டோடு சூடாய் வருத்துகின்ற வினைகளின் வலியைக் கெடுத்து அடியேங்களைப் புத்திரர் போல் ஆட்கொண்டு அருள் புரியும் பரிசுத்தம் உடையவரும், பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மூவரையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் பதவியில் நிலைநாட்டிய எமது பிதாவும், புள்ளிருக்கு வேளூரில் வாழ்பவரும், வினைகளை விலக்கி சுகத்தைச் செய்பவரும், பொருந்திய வடிவுடன் கூடியவரும் ஆகிய சிவபெருமானுடன் இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவரும் ஆகிய உமையம்மையார் பெற்றருளிய புதல்வரே!

         எழு கடல்களையும் கலக்கி வற்றச் செய்து, வஞ்சளையைச் செய்யும் மூடர்களாகிய சூராதி அவுணர்களை மாய்த்து, இயமனுடைய வீட்டுக்குள் அனுப்பிய, பாரத்தைத் தாங்குகின்ற மயில் வாகனத்தின் மீது வருபவரே!

         பிரமனுடைய நான்கு தலைகளும் சீழ் கொள்ளும்படி குட்டி, ஆடம்பரத்தை வருத்திய பிரணவ வடிவாகிய வேற்படையனை உடையவரே!

         திருமாலின் திருமகளாகிய வள்ளியம்மையார்க்கு கருணை காட்டி அருள் புரிந்த பெருமிதம் உடையவரே!

         மூலாதார கமலத்தில் மங்கிக் கிடக்கின்ற மூல அக்கினியை பிராணாயாமத்தினால் ஒளிவிடச் செய்து, ஆறு ஆதாரங்களிலும் உள்ள சக்கரங்களைப் பொருந்தச் செய்து, மூலாதாரத்தினின்றும் எழும் பிராணவாயுவை சுழிமுனை நாடி வழியாகச் செல்லும்படி செய்து, முதன்மையான ஆறு ஆதார முடிவில் உள்ள,  நாத கீதம் ஒலிக்கும் இடத்தில் (பிரமரந்திர நிலையில்) பால் போலும் ஒளி பொருந்திய ஆன்மாவை விலகாமல் பிராணவாயு இயங்குகின்ற உடம்புடன் சேர்த்து சுகம் பெறும்படி, பல்வகையான வேதாகமங்களும், சிறந்த ஞான சாத்திர நூல்களும் சொல்லும் பேரானந்தப் பெருவாழ்வைத் தருகின்ற ஞானபூமியைச் சேரச் செய்து, பிரணவ மந்திர பீடத்தின் மீது பராசத்தியும் பரசிவமும் எழுந்தருளி இருக்கும் வீட்டையும், சோம சூரிய அக்கினி என்ற மூன்று ஒளியையும் காட்டி அருளி, அங்கே சந்திரகாந்தி நிறைந்த தேன் போலும் இனிய அமுதத்தைப் பருகச் செய்து அடியேனை இக்கணமே ஆண்டு அருளுவீராக.

விரிவுரை


மூலாதாரமொடு ஏற்றி அங்கியை ---

மூலாதாரம் எரு இடு வாசலுக்கும் கரு இடு வாசலுக்கும் இடையில் உள்ளது. அங்கே உள்ள மூலாக்கினியை நன்கு யோகசாதனத்தினால் ஒளிவிடச் செய்தல் வேண்டும்.

மூலாதாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்து...         ---  ஔவையார்.


ஆறு ஆதாரமொடு ஓட்டி யந்திர ---

மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களிலும் , 4, 6, 1-, 12, 16, 2 இதழ்களோடு கூடிய சக்கரங்கள் உண்டு. அவைகளில் முறையே விநாயகர், அயன், அரி, உருத்திரன், மகேச்சுரன், சதாசிவன் என்ற ஆறு மூர்த்திகளும் எழுந்தருளி இருப்பார்கள்.  இந்த ஆறு ஆதாரமூர்த்திகளும் தாமே என்பதை முருகவேள் தமது ஆறு திருமுகங்களால் விளக்குகின்றனர்.

வாரணமுகவன் மலரோன் திருமால்
வருத்தமில் உருத்திரன் மகேச்சுரன் சதாசவன்
உருத் தெளிந்திட நம் உருவே ஆகும்
ஆறுமா முகத்து அமர்ந்ததும் இதுவே
வேறுஇலை என்று மெய்ம்மொழி செப்பி..---  சிற்றம்பல நாடிகள்.

1.   மூலாதாரம் -  இது குதத்திற்கும் குறிக்கும் நடுவில் இருப்பது,  முக்கோண வடிவுள் நான்கு இதழ்க் கமலம், மாணிக்க நிறமாய் உள்ளது. கணபதி, குண்டலினி சத்தி, 'ஓம்' என்ற   ஓரெழுத்து,  இவற்றைப் பெற்று விளங்குவது.

ஆதார மூலத்து அடியில் கணபதியைப்
பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்.

முக்கோண வடிவமாகிய மூலாதாரத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் கணபதியின் திருவடித் தாமரைகளைப் பணிவது எப்போது.
                                             ---  பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

மூலத்து உதித்து எழுந்தமுக்கோணச் சதுரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே.

எங்கும் நிறைந்த பொருளே, மூலாதாரத்தில் உதித்த திரிகோண வடிவமாய் உள்ள  யந்திரத்தின் கண்ணே எழுந்தருளி இருக்கும் வாலாம்பிகைத் தாயை வணங்காமல் அறிவிழந்தேன்.                   ---     பட்டினத்தார் பூரணம்.

2.    சுவாதிட்டானம் - இது குறிக்கும் நாபிக்கும் நடுவில் இருப்பது,  நால்சதுர வடிவுள் ஆறு இதழ்க் கமலம்,  செம்பொன் நிறமாய் உள்ளது,  பிரமன் - சரசுவதி,  '' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.

மண்வளைந்த நற்கீற்றில் வளைந்து இருந்த வேதாவைக்
கண்வளைந்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம்.

நாற்கோண வடிவத்தோடும் கூடிய சுவாதிட்டான மத்தியில் எழுந்தருளி இருக்கும் பிரமாவை, உள்ளே கண்டு தரிசித்தும் மனம் மகிழ்ந்து இருப்பது எப்போது.
                                             --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

உந்திக் கமலத்து உதித்து நின்ற பிரமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே

எங்கும் நிறைந்த பொருளே,  சுவாதிடாடானத்தில், அதாவது உந்தியாகிய கமத்தில் விளங்கும் நான்முகனை நெருங்கித் தரிசியாமல் நிலைகுலைந்தேன்.
                                                               -- பட்டினத்தார் பூரணம்

3.   மணிபூரகம் - இது நாபிக் கமலத்தில் இருப்பது,  மூன்றாம் பிறை வடிவுள் பத்து இதழ்க் கமலம், மரகத நிறமாய் உள்ளது.  விஷ்ணு - இலட்சுமி, '' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.

அப்புப் பிறைநடுவே அமர்ந்து இருந்த விட்டுணுவை
உப்புக் குடுக்கை உள்ளே உணரந்து அறிவது எக்காலம்.

மூன்றாம் பிறைபோன்ற மணிபூரகத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் விட்டுணுவை, உப்புக் குடுக்கை போன்ற தேகத்தின் உள்ளே தெரிந்து கொள்வது எப்போது.
                                                         ---     பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

நாவிக் கமலநடு நெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவுஅழிந்தேன் பூரணமே.

எங்கும் நிறைந்த பொருளே, மணிபூரகத்தில் விளங்குகின்ற விண்டுவைத் தரிசியாமல் உயிர் இழந்து புத்தி கெட்டேன்.                        --       பட்டினத்தார் பூரணம்

4.    அநாகதம் -  இது இருதய கமலத்தில் இருப்பது.  முக்கோண வடிவுள் பன்னிரண்டு இதழ்க் கமலம், படிக நிறமாய் உள்ளது.  உருத்திரன் - பார்வதி.  'சி' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.

மூன்று வளையம் இட்டு முளைத்து எழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்.

முக்கோண வடிவமாகிய அனாகதத்தின் நடுவில் எழுந்தருளி இருக்கும் உருத்திர மூர்த்தியைத் தொழுவது எப்போது.
                                                           ---     பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்து அழிந்து நானும் கலங்கினேன் பூரணமே.

எங்கும் நிறைந்த பொருளே, அநாகதத்தில், அதாவது இருதயத்தில் உருத்திர மூர்த்தியைத் தரிசியாமல் மனம் கெட்டுச் சஞ்சலம் உற்றேன்.
                                                                 --       பட்டினத்தார் பூரணம்

5.    விசுத்தி - இது கண்டத்தில் இருப்பது. ஆறு கோண வடிவுள் பதினாறு இதழ்க் கமலம். மேக நிறமாய் உள்ளது.  மகேசுவரன் - மகேசுவரி. '' கரம் என்ற எழுத்து,  இவற்றைப் பெற்று விளங்குவது.

வாயுஅறு கோணம்அதில் வாழும் மகேச்சுரனைத்
தோயும் வகை கோட்கத் தொடங்குவதும் எக்காலம்.

அறுகோண வடிவாய் உள்ள விசுத்தியின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் மகேச்சுரனைத் தரிசித்து அவனுடன் கலக்கும் வழியை ஆராய்ந்து தொடங்குவது எப்போது.                                      --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல்
பசித்து உருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே.

எங்கும் நிறைந்த பொருளே,  விசுத்தியில் அதாவது கண்டத்தில் விளங்கும் மகேசுரனை நோக்கி விழித்துக் கொண்டு இருந்து தரிசியாமல், பசியால் வருந்தி மனம் கலங்கினேன்.
                                                                    பட்டினத்தார் பூரணம்.

6.    ஆஞ்ஞை - இது புருவ மத்தியில் இருப்பது, வட்ட வடிவமான, மூன்ற இதழ்க் கமலம்.  படிக நிறமாய் உள்ளது.  சதாசிவன்- மனோன்மணி.  '' கரம் என்ற எழுத்து இவற்றைப் பெற்று விளங்குவது.

வட்ட வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்.

வட்ட வடிவமாகிய ஆஞ்ஞையின் நடுவில் எழுந்தருளி இருக்கும் சதாசிவத்தினைத் தேடிக் கிருபை அடைவது எப்போது.
                                                   --  பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

நெற்றி விழி உடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே

எங்கும் நிறைந்த பொருளே,  விசுத்தியில் விளங்குகின்ற முக்கண் வாய்ந்த சதாசிவத்தினை அதாவது, நெற்றியின்கண்ணே நேத்திரத்தினை உடைய மலரகிதமாய் உள்ள சதாசிவத்தினைத் அறிவுடன் தரிசியாமல், ஐம்பொறியில் சிக்கி ஞானத்தை இழந்தேன்.                                                 ---   பட்டினத்தார் பூரணம்.


மூலா வாயுவை ஏற்று நன் சுழிமுனையூடே ---

இடை பிங்கலை என்ற இரண்டு நாடி வழியாகச் சென்று மீளும் பிராணவாயுவை, அவைகளில் செல்லவிடாமல் மடைமாற்றி, முதுகுத் தண்டின் இடையே தாமரைத் தண்டின் நூல் போல, மென்மையாக உள்ள சுழிமுனை என்ற வெள்ளை நரம்பின் வழியாக ஏற்றவேண்டும்.

நாடி ஓர் பத்தும் நாடி, நாடிகள் புக்கு
ஓடிய வாயு ஒருபதும் தேர்ந்து,
சொன்ன நாடிகளில் சுழிமுனை நடுவாய்
இன்னதின் பக்கத்து இடைபிங் கலையாம்
அக்கினி திங்கள் ஆதவன் கலைகள்
புக்கசக் கரமும் போய்மீண்டு இயங்கும்
மூலகுண் டலியாம் உரகமூச்சு எறிந்து
வாலது மேல்கீழ் மண்டலம் இட்டுப்
படந்தனைச் சுருக்கிப் படுத்து உறங்குவது
நடந்துமேல் நோக்கி ஞானவீடு அளிக்கும்
மண்டலம் மூன்றும் மருவுதூண் புக,அக்
குண்டலி எழுப்பும் கொள்கை ஈதுஎன்றான்.

மூது ஆதார மரூப்பில் அந்தர ---

மூது - முதன்மை. அந்தரம் - முடிவு. மருப்பில் என்றது மரூப்பில் என்று நீட்டல் விகாரம் சந்தத்தை நோக்கிப் பெற்றது.

ஆறு ஆதாரங்களே உடம்பில் முதன்மை பெற்றனவாம்.  அவைகளில் முடிவில் உள்ள பிரமரந்திர வழியாகத் துவாதசாந்தப் பெருவெளி சென்றால் அங்கே தசவித நாதகீதம் கேட்கும்.

துவாதசாந்தம் - இது பிரமரந்திரத்திற்கு (உச்சிக்குழிக்கு) மேல் இருப்பது. ஆயிரத்து எட்டு இதழ்க் கமலம். சோதி வடிவாய் இருப்பது. பரசிவம் - பராசத்தி. சிவ சிவ இவற்றைப் பெற்று விளங்குவதாகத் தியானிப்பது.

உச்சிக் கிடைநடுவே ஓங்கு குருபதத்தை
நிச்சயித்துக் கொண்டு இருந்து நேர்வது இனி எக்காலம்.

ஆறு ஆதாரங்களுக்கும் மேற்பட்டு இருக்கின்ற உச்சியில் விளங்கும் குருவின் திருவடியை மனத்தில் தியானித்துக் கொண்டு இருந்து பொருந்துவது எப்போது.

ஆறுஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை
பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்

ஆறு ஆதாரங்களையும் கடந்த சிவானந்த சொரூபமாய் உள்ள  அருட்பெருஞ் சோதியை யான் அடையக் கூடிய பாக்கியமாகத் தரிசித்து, அதனை அடையப் பெறுவது எப்போது.                                                ---  பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.         


உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன்  நானும் அறிவுஅழிந்தேன் பூரணமே.

எங்கும் நிறைந்த பொருளே, உச்சியிலே இருக்கும் சிதாகாசத்தை நிலையாகத் தரிசிக்காமல், பயத்துடனே புத்தி கெட்டேன்.
                                                                  பட்டினத்தார் பூரணம்.

பால் ஒளி ஆத்துமம் தனை ---

பால் போன்றதும் பளிங்கு போன்றதும் ஆகிய ஆன்மா பரிசுத்தமானது. அது ஆணவத்துடன் சேர்ந்து அழுக்குப் பெற்றது.  அதனை, ஆணவ அழுக்கை நீக்கி, தன் இயல்பைப் பெறச் செய்தல் வேண்டும்.

நானா வேதம சாத்திரம் ---

வேதாகமம் என்றது வேதமம் என மருவியது.

சந்திர வாகார் தேன் அமுது ஊட்டி என்தனை உடன் ஆள்வாய் ---

மூலாதராத்தில் உள்ள மூலக்கனலை எழுப்பியவுடன், அது ஆறு ஆதாரங்களையும் கடந்து சென்று, மதிமண்டலத்தை வெதுப்ப, முழுமதி உருகி சோமரசம் பெருகும். அதனை உண்டு பசி தாகம் இன்றி இருப்பர் சிவயோகிகள்.

முலமே முதலா முதல் நடுஉச்சி
பால்அளவினும் நீள் படுதுணை நோக்கி,
மூலா தாரத்தின் முச்சுழிச் சுடரை
மேலாதாரத்தின் மெல்லெனத் தூண்டி
இருவழிக் காலும் ஒருவழி நடத்தித்
கருவழி அடைத்து கமலம் ஆறுஉருவி
பன்னிரண்டு அந்தம் பருதியும் மதியும்
மன்னிஒன்றான வண்ணமும் தெரிந்து
கமடம்ஐந்து அடக்கும் கருத்துஎனப் பொறியில்
மமதைகள் அடக்கி, மனோலயம் ஆக்கி
மூலக் கனலால் முழுமதி உருகிப்
பாலைப் பருகும் பண்புதந்து அருள்... ---  சிற்றம்பல நாடிகள்.

சூலாள் ---

அம்பிகையின் திருக்கரத்தில் விளங்குவது திரிசூலம். அது இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி என்ற முச்சத்தி வடிவானது.

மாது ---

மாது - அழகு. அழகின் இருப்பிடம் அம்பிகை.

சூடோடு ஈர் வினை வாட்டி ---

தன்னை வழிபடும் அடியவர்களை வந்து மிகுந்த வெப்பமாக வருத்தும் வினைகளை விலக்கி அருளன்னை அருள் புரிவர்.

வேளூர் ---

வேள் - உபகரிப்பவர். ஆன்மாக்களுக்கு மெய்ஞ்ஞானத்தைத் தந்து உபகரிப்பவர் முருகவேள். அவர் பூசித்த திருத்தலம் ஆதலின் வேளூர் எனப் பெற்று, மேலும் சம்பாதி சடாயு என்ற புட்களும், இருக்கு என்ற வேதமும் வழிபட்டதனால், புள்ளிருக்குவேளூர் எனப்படும். இப்போது வைத்தீசுவரன் கோயில் என்று வழங்குகின்றது.

ஏற்று இருந்தவள் ---

ஏறு - இடபம். சிவமூர்த்தியுடன் இடப வாகனத்தின் மீது இருக்கின்றவர்.

காத்திரம் பரி மயில் ---

காத்திரம் - சுமை. பரித்தல் - தாங்குதல். மிகுந்த சுமையைத் தாங்கும் வன்மை உடைய மயில்.

வேதா நால்தலை சீக் கொளும்படி, கோலா காலம் அது ஆட்டு மந்திர வேலா ---

செருக்குடன் சென்ற படைப்புத் தலைவனாகிய பிரமதேவனை அழைத்து, அவன் செருக்கு நீங்க, நிமிர்ந்த தலைகள் வணங்குமாறு குமரவேள் குட்டி சிறை செய்தனர். அக் குட்டினால் அவன் தலையில் சீழ் பிடித்தது.

அகங்காரத்தினால் அயன் அடைந்த நிலை இது எனில், ஆன்மாக்களாகிய நாம் அகங்காரம் அடைந்தால் அடையும் நிலை எது என்பதை ஊகித்து உணர்ந்து உய்வு பெறுக.

முருகப் பெருமான் பிரமனைத் தலையில் குட்டிய வரலாறு
        
குமாரக்கடவுள் திருவிளையாடல் பல புரிந்து வெள்ளிமலையின் கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடுஞ் சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கயிலாய மலையை நண்ணினர். பிரமனை ஒழிந்த எல்லாக் கணர்களும் யான் எனது என்னும் செருக்கின்றி சிவபெருமானை வணங்கி வழிபட்டுத் திரும்பினார்கள். ஆங்கு கோபுரவாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும் புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன எழுந்தருளி இருந்தனர். அனைவரும் வந்து அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.

பிரமதேவர் குமரக் கடவுளைக் கண்டு வணங்காது, “இவன் ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப் பெருமான் சிவன் வேறு தான் வேறன்று, மணியும் ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார்.

தருக்குடன் செல்லுஞ் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது கைகுவித்து வணங்கிடாத பாவனையாக வணங்கினன்.

கந்தப்பெருமான் “நீ யாவன்” என்றனர்.

பிரமதேவர் அச்சங்கொண்டு “படைத்தல் தொழிலுடைய பிரமன்” என்றனன்.

முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர்.

பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன்.

“நன்று! வேதவுணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய இருக் வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர்.

சதுர்முகன் இருக்கு வேதத்தை ஓம் என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன். உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து திருக்கரம் அமைத்து, “பிரமனே நிறுத்து! நிறுத்து! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்குதி என்றனர்.

தாமரைத்தலை இருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாமறைத்தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர்பெற்றுஉடைக் குமரவேள், "நிற்றி, முன் கழறும்
ஓம் எனப்படு மொழிப்பொருள் இயம்புக",ன்று உரைத்தான்.   ---கந்தபுராணம்.

ஆறு திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன் வினவுதலும், பிரமன் அக்குடிலை மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன. சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய ஆணவம் அகன்றது. வெட்கத்தால் தலைகுனிந்தனன். நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை உணராமல் போனோமே? என்று ஏங்கினன். சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை உணராது பிரமதேவன் மருண்டு நின்றனன்.

குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர்.

பிரமன் “ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன்.

அது கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம் முதலெழுத்திற்குப் பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும் புரிகின்றனையோ? பேதாய்!” என்று நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.

சிட்டி செய்வது இத் தன்மை யதோ?" னச் செவ்வேள்
குட்டினான் அயன் நான்குமா முடிகளுங் குலுங்க”       ---கந்தபுராணம்.

பிரமதேவனது அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.

வேதநான்முக மறையோ னொடும் விளை
  யாடியே குடுமியிலே கரமொடு
  வீரமோதின மறவா”               --- (காணொணா) திருப்புகழ்.

அயனைக் குட்டிய பெருமாளே”       -- (பரவை) திருப்புகழ்.

ஆரணன் தனை வாதாடி ஓர்உரை
 ஓதுகின்று என, வாராது எனா, அவன்
 ஆணவம் கெடவே காவலாம் அதில்....    இடும்வேலா       --- (வாரணந்) திருப்புகழ்.

      “.......................................படைப்போன்
அகந்தை உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
     உகந்த பிரணவத்தின்உண்மை -- புகன்றிலையால்
சிட்டித் தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
     குட்டிச் சிறைஇருத்தும் கோமானே”                      --- கந்தர் கலிவெண்பா.
  
நாலுமுகன் ஆதிஅரி ஓம் என, அதாரம் உரை-
     -யாத பிரமாவை விழ மோதி, பொருள் ஓதுக என,
     நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம்இடும் ...... இளையோனே!
                                                                    --- (வாலவயதாகி) திருப்புகழ்.


கருத்துரை

முருகா! சிவயோகத்தில் அடியேன் நின்று உய்வு பெற அருள் புரிவீர்.



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...