சீகாழி - 0784. செக்கர் வானப்பிறை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

செக்கர்வானப் பிறை (சீகாழி)

முருகா!
செத்தை யோகத்தினரைப் பாடி அழியாமல்,
முத்திக்கு வித்து ஆன உம்மைப் பாடி வழிபட அருள்.


தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத்
     தத்தனா தத்தனத் ...... தனதான

செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்
     தெற்கிலூ தைக்கனற் ...... றணியாத

சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச்
     சித்தம்வா டிக்கனக் ...... கவிபாடிக்

கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக்
     கற்பதா ருச்செகத் ...... த்ரயபாநு

கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க்
     கைக்குணான் வெட்கிநிற் ...... பதுபாராய்

சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித்
     தப்ரதா பர்க்குமெட் ...... டரிதாய

தத்வவே தத்தினுற் பத்திபோ தித்தஅத்
     தத்வரூ பக்கிரிப் ...... புரைசாடிக்

கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக்
     குத்துரா வுத்தபொற் ...... குமரோனே

கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக்
     கொச்சைவாழ் முத்தமிழ்ப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


செக்கர் வானப் பிறைக்கு, க்கு மாரற்கு அலத்
     தெற்கில் ஊதைக்கு, னல் ...... தணியாத

சித்ர வீணைக்கு, அலர்ப் பெற்ற தாயர்க்கு, அவச்
     சித்தம் வாடி, கனக் ...... கவிபாடி,

கைக் கபோலக் கிரி, பொன் கொள் ராசி, கொடைக்
     கற்ப தாரு, செகத் ...... த்ரயபாநு,

கற்றபேர் வைப்பு என, செத்தை யோகத்தினர்க்
     கைக்குள் நான் வெட்கி நிற்- ...... பது பாராய்.

சக்ர பாணிக்கும் அப் பத்ம யோனிக்கும், நித்த
     ப்ரதாபர்க்கும் எட்ட ...... அரிது ஆய

தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த, அத்
     தத்வ ரூபக் கிரிப் ...... புரை சாடி,

கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ,
     குத்து ராவுத்த! பொன் ...... குமரோனே!

கொற்றவா! உற்பலச் செச்சை மாலைப் புய!
     கொச்சைவாழ் முத்தமிழ்ப் ...... பெருமாளே.


பதவுரை

      சக்ர பாணிக்கும் --- சக்கர ஆயுதத்தைத் திருக்கையில் கொண்ட திருமாலுக்கும்,

     அப் பத்ம யோனிக்கும் --- அந்தத் திருமாலின் உந்திக் கமலத்தில் உதித்த பிரமதேவனுக்கும்,

     நித்த ப்ரதாபர்க்கும் --- என்றும் அழியாதவரும், புகழ் விளங்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கும்,

     எட்ட அரிது ஆய --- எட்டுதற்கு அரியதா,

      தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த --- உண்மை வேதத்தின் தோற்றத்தை உபதேசித்து அருளியவரே!

     அத் தத்வ ரூப --- அந்த உண்மை வடிவானவரே!

      கிரிப் புரை சாடி --- கிரவுஞ்ச மலையின் குற்றத்தை (பெருமையைத்) தொலைவித்து,  
     கொக்கிலே புக்கு ஒளித்திட்ட --- மாமர வடிவில் ஒளிந்திருந்த

     சூர் பொட்டு எழக் குத்து ராவுத்த --- சூரபதுமன் விரைந்து அழிந்து போக வேலாயுதத்தினால் குத்திய மயில் வீரரே!

      பொன் குமரோனே --- அழகிய குமாரக் கடவுளே!

      கொற்றவா --- அரசரே!

     உற்பலச் செச்சை மாலைப் புய --- நீலோற்பலம், வெட்சி மலர்களால் ஆன மாலையை அணிந்த திருத்தோள்களை உடையவரே!

     கொச்சை வாழ் முத்தமிழ்ப் பெருமாளே --- கொச்சைவயம் என்னும் சீகாழிப் பதியில் வீற்றிருக்கும் முத்தமிழ் வல்ல பெருமையில் மிக்கவரே!

      செக்கர் வானப் பிறைக்கு --- செவ்வானத்தில் தோன்றும் நிலவுக்கும்,

     இக்கு மாரற்கு  --- கரும்பு வில்லை உடைய மதவேளுக்கும்

      அலத் தெற்கில் ஊதைக்கு --- தென் திசையில் இருந்து வீசும் துன்பத்தைத் தரும் ஊதைக் காற்றுக்கும்,

     அனல் தணியாத சித்ர வீணைக்கு --- தணியாத நெருப்பைப் போன்ற சித்திர வீணையின் இன்னிசைக்கும்,

      அலர் பெற்ற தாயர்க்கு --- வசை மொழிகளைப் பேசும் தாய்மார்க்கும்,

     அவச் சித்தம் வாடி --- வீணாக மனவாட்டத்தினை அடைந்து,

      கனக் கவி பாடி --- (விலைமாதர்க்குக் கொடுப்பதற்காக, பொருள் உள்ளவர்களைத் தேடி, அவர்கள் மீது) பெருமை மிக்கப் பாடல்களைப் பாடி,

      கைக் கபோலக் கிரி --- (அப் பெருமை மிக்க பாடல்களில் அவர்களைத்) துதிக்கையையும் தாடையையும் உடைய மலை போன்ற ஐராவதம் என்றும்,

     பொன் கொள் ராசி --- பொன் பொருந்தும் நல்வினைப் பயன் உள்ளவர் என்றும்,

     கொடைக் கற்பதாரு --- கற்பக மரம் போன்று கேட்டதைத் தரும் கொடையில் மிக்கவர் என்றும்,  

     செகத்ரய பானு --- மூவுலகங்களிலும் விளங்கும் கதிரவன் என்றும்,

      கற்ற பேர் வைப்பு என --- கற்ற புலவர்களுக்கு சேமநிதியாக விளங்குபவர் என்றும்,

     (பொருள் உள்ளோரைப் பொய்யாகப் புகழ்ந்து பாடித் துதித்து)

     செத்தை யோகத்தினர்க் கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய் --- குப்பையாகிய செல்வம் பொருந்தி உள்ளவர்களின் கைக்குள் பட்டு நான் வெட்கித்து நிற்கின்ற நிலையைப் பார்த்து அருளுவீராக.


பொழிப்புரை


         சக்கர ஆயுதத்தைத் திருக்கையில் கொண்டதிருமாலுக்கும், அந்தத் திருமாலின் உந்திக் கமலத்தில் உதித்த பிரமதேவனுக்கும், என்றும் அழியாதவரும், புகழ் விளங்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கும், எட்டுதற்கு அரியதா, வேதத்தின் உண்மைப் பொருள் தோற்றத்தை உபதேசித்து அருளியவரே!

     அந்த உண்மை வடிவானவரே!

      கிரவுஞ்ச மலையின் குற்றத்தை (பெருமையைத்) தொலைவித்து, மாமர வடிவில் ஒளிந்திருந்த சூரபதுமன் விரைந்து அழிந்து போக வேலாயுதத்தினால் குத்திய மயில் வீரரே!

      அழகிய குமாரக் கடவுளே!

      அரசரே!

     நீலோற்பலம், வெட்சி மலர்களால் ஆன மாலையை அணிந்த திருத்தோள்களை உடையவரே!

     கொச்சைவயம் என்னும் சீகாழிப் பதியில் வீற்றிருக்கும் முத்தமிழ் வல்ல பெருமையில் மிக்கவரே!

      செவ்வானத்தில் தோன்றும் நிலவுக்கும், கரும்பு வில்லை உடைய மதவேளுக்கும், தென் திசையில் இருந்து வீசும் துன்பத்தைத் தரும் ஊதைக் காற்றுக்கும், தணியாத நெருப்பைப் போன்ற சித்திர வீணையின் இன்னிசைக்கும், வசை மொழிகளைப் பேசும் தாய்மார்க்கும் வீணாக மனவாட்டத்தினை அடைந்து, விலைமாதர்க்குக் கொடுப்பதற்காக, பொருள் உள்ளவர்களைத் தேடி, அவர்கள் மீது பெருமை மிக்கப் பாடல்களைப் பாடி, அப் பெருமை மிக்க பாடல்களில் அவர்களைத) துதிக்கையையும் தாடையையும் உடைய மலை போன்ற ஐராவதம் என்றும், பொன் பொருந்தும் நல்வினைப் பயன் உள்ளவர் என்றும், கற்பக மரம் போன்று கேட்டதைத் தரும் கொடையில் மிக்கவர் என்றும்,  மூவுலகங்களிலும் விளங்கும் கதிரவன் என்றும், கற்ற புலவர்களுக்கு சேமநிதியாக விளங்குபவர் என்றும், பொருள் உள்ளோரைப் பொய்யாகப் புகழ்ந்து பாடித் துதித்து, குப்பையாகிய செல்வம் பொருந்தி உள்ளவர்களின் கைக்குள் பட்டு நான் வெட்கித்து நிற்கின்ற நிலையைப் பார்த்து அருளுவீராக.


விரிவுரை

பிறந்து வளர்ந்து, பதினாறு வயதை அடைந்து, அதுவரையில் கற்ற கல்வியைக் கொண்டு தெளிந்து, ஆவி ஈடேறும் வழி தேடாமல், மன்மத பாணத்தால் மயங்கி, பரத்தையர் நட்புகொண்டு, அவர்க்கு வேண்டிய பொருளை ஈந்து, மகளிர் போகமே சுவர்க்க வாழ்வு என்று எண்ணி, தாம் கற்ற கல்வி அறிவை இறைவன் திருவருள் நெறியில் உய்க்காமல், இன்று இருந்து நாளை அழியும் மனிதர்களிடம் போய், கொடாதவனைப் “பாரியே காரியே” என்றும், வலி இல்லாதவனை, “விஜயனே விறல் வீமனே” யென்றும் பலவகையாகப் பாடல்களைப் பாடி அவரிடத்திலையே உழன்று கொண்டு இருக்கும் நிலையை அடிகளார் இந்தப் பாடலில் காட்டுகின்றார்.

பயனில்லாத பதடிகள் இருக்கைதொறும் போய், தூய செந்தமிழை - இறைவனைப் பாடுதற்கு உரிய தீந்தமிழை - வறிதாக அப் பதர்களைப் புனைந்துரையும் பொய்யுரையுமாகப் புகழ்ந்து பாடி, அவர்கள் தரும் பொருளைப் பெற்று மகிழ்வர். சிறிது காலமே நின்று மின்னலைப்போல் விரைவில் அழியும் பொருளையே பெற்று வீணுற்றனர். என்றும் அழியாத திருவருட் செல்வத்தை வாரி வாரி வழங்கும் எம்பெருமானைப் பாடி உய்யும் திறன் அறியாது கெடுவர். அந்தோ! பரிதாபம். 

நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல, நாளையும்
உச்சி வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்,
பிச்சர் நச்சரவு அரைப் பெரிய சோதி, பேணுவார்
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே.     --- திருஞானசம்பந்தர்.

வறிய புலவன் வருவன் தனது இருப்பிடத்தைத் தேடி வந்து, உயர்ந்த பொருள்களோடு கூடிய பாடல்களைப் பாடினாலும் அவ் உலோப சிகாமணிகளாகிய செல்வந்தர், தாராளமாகப் பொருளைத் தராமல், இன்று வா, நாளை வா என்று அலைய வைத்து, மிகச் சிறிய அளவில் பொருள் தருவர். அங்ஙனம் கிடைக்கின்ற பொருளைச் சிறிது சிறிதாகச் சேர்த்துத் திரட்டிக் கொணர்ந்து, அதனை அறவழியில் செலவிடாமலும், தானும் அநுபவிக்காமலும், பொதுமகளிர்க்கு வழங்கிப் புன்கண் உறுவர்.

குன்றும் வனமும் குறுகி வழிநடந்து
சென்று திரிவது என்றும் தீராதோ - என்றும்
கொடாதவரைச் சங்குஎன்றும், கோஎன்றும் சொன்னால்
இடாதோ அதுவே இது.                       --- இரட்டையர்.

வஞ்சக லோபமூடர் தம்பொருள் ஊர்கள்தேடி
மஞ்சரி கோவை தூது           பலபாவின்
வண்புகழ் பாரிகாரி என்றுஇசை வாதுகூறி
வந்தியர் போல வீணில்      அழியாதே.... --- திருப்புகழ்.

இத்தா ரணிக்குள் மநு வித்தாய் முளைத்து, ழுது
         கேவிக் கிடந்து, மடி மீதில் தவழ்ந்து, அடிகள்
    தத்தா தனத்ததன இட்டே, தெருத்தலையில்
         ஓடித் திரிந்து, நவ கோடிப் ப்ரபந்தகலை
    இச்சீர் பயிற்ற, வயது எட்டோடும் எட்டு வர,
         வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்கள் ......உடன் உறவாகி,

இக்கு ஆர் சரத்து மதனுக்கே இளைத்து, வெகு
         வாகக் கலம்ப வகை பாடிப் புகழ்ந்து, பல
    திக்கோடு திக்குவரை மட்டு ஓடி, மிக்கபொருள்
         தேடி, சுகந்த அணை மீதில் துயின்று, சுகம்
     இட்டு ஆதரத்து உருகி, வட்டார் முலைக்குள் இடை
         மூழ்கிக் கிடந்து, மயல் ஆகித் துளைந்து, சில ......பிணிஅதுமூடி...
--- திருப்புகழ்.

அறிவுஇலாப் பித்தர், ன்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
     அசடர், பேய்க் கத்தர், நன்றி ...... அறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு, கவிகளாக்கிப் புகழ்ந்து,
     அவரை வாழ்த்தித் திரிந்து ...... பொருள்தேடி,
சிறிது கூட்டிக் கொணர்ந்து, தெருவு உலாத்தித் திரிந்து,
     தெரிவைமார்க்குச் சொரிந்து, ...... அவமே, யான்
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி, ரிந்து,
     தெளிய மோட்சத்தை என்று ...... அருள்வாயே.    --- திருப்புகழ்.

உடையவர்கள் ஏவர்? எவர்கள் என நாடி,
     உளமகிழ ஆசு ...... கவிபாடி,
உமதுபுகழ் மேரு கிரி அளவும் ஆனது
     என உரமுமான ...... மொழிபேசி,

நடைபழகி மீள, வறியவர்கள் நாளை
     நடவும் என வாடி, ...... முகம்வேறாய்,
நலியும் முனமே உன் அருண ஒளி வீசு
     நளின இரு பாதம் ...... அருள்வாயே.      ---  திருப்புகழ்.


செக்கர் வானப் பிறைக்கு ---

செவ்வானத்தில் தோன்றும் நிலவு காமுகர்க்குத் துன்பத்தை தரும்.

இக்கு மாரற்கு  ---

இக்கு - கரும்பு.   மாரன் - காமவேள்.

கரும்பு வில்லை உடையவன் மதவேள் ஆகிய மன்மதன்.  அவன் கருவேள் ஆவான். குரவேள் துன்பத்தையே தருவான்.

முருகப் பெருமான் செவ்வேள். செவ்வேள் என்றும் அழியாத இன்பத்தையே தருவான்.

அலத் தெற்கில் ஊதைக்கு ---

அலம் - துன்பம்.

தென் திசையில் இருந்து வீசும் ஊதைக் காற்று காமுகர்க்குத் துன்பத்தையே மிகுக்கும்.
  
அனல் தணியாத சித்ர வீணைக்கு ---

துன்பம் என்னும் வெப்பத்தால் உயிர்கள் வருந்தும்போது, அந்த வெப்பத்தைத் தணிக்க, வீணையின் இன்னிசை உதவும்.

"துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா" என்றார் பாரதியார்.

நீற்றறையில் இட்டபோது, திருநாவுக்கரசு பெருமானுக்கு அந்த வெப்பம் துன்பத்தைத் தரவில்லை. எம்பெருமான் திருவடியில் இருப்பதாகவே அவர் உணர்ந்தார். மாசில்லாத வாணையைப் போன்று பெருமான் திருவடி நிழல் இருந்ததை அனுபவித்து,

மாசுஇல் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்குஇள வேனிலும்,
மூசு வண்டுஅறை பொய்கையும் போன்றதே,
ஈசன் எந்தை இணையடி நீழலே

என்று பாடி அருளினார்.

அலர் பெற்ற தாயர்க்கு ---

தாய்மார்கள் பேச்கின்ற வசைமொழிகள் காமுகர்க்குத் துன்பத்தைத் தரும்.

அவச் சித்தம் வாடி ---

அவம் - விண். வீணாக மனவாட்டத்தினை அடைந்து.

கனக் கவி பாடி ---

கனம் - பெருமை.

விலைமாதர்க்குக் கொடுப்பதற்காக, பொருள் உள்ளவர்களைத் தேடி, அவர்கள் மீது பெருமை மிக்கப் பாடல்களைப் பாடுவார்கள். அப்படிப் பாடும்போது, பெருமை சிறிதும் அற்று, பொருள் ஒன்றையே படைத்துள்ளதைக் கருதி, பெருமைகள் அனைத்தும் பொருந்தியவராகப் புனைந்து பாடுவர்.
  
கைக் கபோலக் கிரி ---

கையையும், கபோலத்தையும் உடைய கிரி.

கை - துதிக்கையைக் குறிக்கும்.

கபோலம் - கன்னம், தாடை.

கிரி - மலை. இங்கு யானையைக் குறித்து நின்றது.

துதிக்கையையும், தாடைகளையும் கொண்டு மலை போன்று உள்ள அயிராவதம் என்னும் யானையைப் போன்றவர் நீர் என்று உதவாத உலோபிகளைப் புகழ்ந்து பாடுவர்.


பொன் கொள் ராசி ---

இராசி - இணக்கம், பொருத்தம்,

பொன் பொருந்தும் நல்வினைப் பயன் உள்ளவர்.

கொடைக் கற்பதாரு ---

தேவலோகத்தில் உள்ள கற்பக மரமானது ஆர் எதை நினைத்தாலும் தரக்கூடியது. அந்தக் கற்பக மரம் போன்று கேட்டதைத் தரும் கொடையில் மிக்கவர் என்று, கொடாதவரைப் புகழ்ந்து பாடுவர்.

செகத்ரய பானு ---

செகம் - உலகம்.

த்ரயம் - மூன்று.

மூவுலகங்களிலும் விளங்கும் கதிரவன் என்று புகழ்ந்து பாடுவர்.

கற்ற பேர் வைப்பு என ---

வைப்பு - சேமநிதி.

கற்ற புலவர்களுக்குச் சேமநிதியாக விளங்குபவர் என்று, கல்வி அறிவு இல்லாதவரைப் புகழ்ந்து பாடுவர்.

ஓலம் இட்டு இரைத்து எழுந்த வேலை வட்டம் இட்ட இந்த
     ஊர் முகில் தருக்கள் ஒன்றும் ...... அவர் ஆர்என்றும்,
ஊமரை ப்ரசித்தர் என்றும், மூடரைச் சமர்த்தர் என்றும்,
     ஊனரை ப்ரபுக்கள் என்றும், ...... அறியாமல்

கோல முத்தமிழ் ப்ரபந்தம் மாலருக்கு உரைத்து, அநந்த
     கோடி இச்சை செப்பி, வம்பில் ...... உழல்நாயேன்,
கோபம் அற்று, மற்றும் அந்த மோகம் அற்று, உனைப் பணிந்து
     கூடுதற்கு முத்தி என்று ...... தருவாயே?                     --- திருப்புகழ்.

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்,
     காடு எறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்,
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்,
     போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்,
மல்ஆரும் புயம்என்றேன் சூம்பல் தோளை,
     வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்,
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
     யானும்என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.            ---  இராமச்சந்திர கவிராயர்.

செத்தை யோகத்தினர்க் கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய் ---

செத்தை - உதவாத குப்பை.

"செத்தையேன் சிதம்ப நாயேன்" என்றார் அப்பர் பெருமான்.

யோகம் - ஒன்றுதல், பொருந்துதல், கூடுதல்.

அழிகின்ற செல்வம் பொருட்செல்வம். அழியாத செல்வம் அருட்செல்வம்.

அழிகின்ற பொருட்செல்வத்தை அரிதில் முயன்று தேடி, கெடாத நல்லறம் புரிந்து, அழியாத பேரின்பத்தைத் தருவதான அருட்செல்வத்தைப் பெற முயலுதல் வேண்டும்.  பொருட்செல்வத்தையும் குறைவின்றித் தருபவன் இறைவனே ஆவான் என்பதை உணராது, பொருட்செல்வம் பொருந்தியவர்களை நாடி, அவரைப் புகழ்ந்து பாடி, ஒன்றும் பெறாமல், அவலப்பட்டு நிற்கும் நிலையைபார்த்துத் திருவருள் புரியவேண்டும் என்கின்றாரு அடிகளார்.

சக்ர பாணிக்கும் ---

பாணி - கை.

சலந்தரனைக் கொன்ற சக்கர ஆயுதத்தை, சிவபெருமானை வழிபட்டுப் பெற்றவர் திருமால்.

ஒருசமயம் வலிமை மிகுந்த அசுரர்கள் திருமாலுடன் போர் புரிய, அவர்களை வெல்லும் ஆற்றல் இன்றி அவர் வாட்டம் உற்றனர். அப்போது சிவபெருமானிடம் சலந்தரனைக் கொன்ற சக்கரம் இருந்தது. அதனைப் பெற்று அசரர்களை அழிக்கவேண்டும் என்று திருமால் விரும்பினார்.

சலந்தரன் கங்கையின் வயிற்றில் கடலரசனுக்குப் பிறந்தவன். அளவிட முடியாத ஆற்றல் படைத்தவன். இவன் மனைவி பிருந்தை. இவன் மிக்க இளைமையிலேயே தன் கைக்கு அகப்பட்ட பிரமதேவரைக் கழுத்தில் பிடித்து வருத்தி விட்டவன். இந்திரன் முதலிய இமையவர் இவனிடம் போர் புரிந்து தோற்றுப் புறங்கொடுத்து ஓடி ஒளிந்தார்கள். திருமால் இவனிடம் அமர் புரிந்து ஆற்றல் தேய்ந்து அல்லல்பட்டுத் தோற்று ஓடினார்.

இறுதியில் சலந்தரன் திருக்கயிலாயமலைக்குச் சென்றான். அங்கே சிவபெருமான், ஒரு முதுமறையவர் உருவில் கோபுர வாசலில் இருந்தார். “அப்பா எங்கே போகின்றாய்? என்று வினவினார். “சிவனுடன் போர் புரியப்போகிறேன்” என்றான். “அப்படியா! நல்லது” என்று அக்கிழவர் கூறித் தன் இடக்காலால் நிலத்தில் வட்டமாகக் கீறி, “இதை உன்னால் எடுக்க முடியுமா? என்றார்.

ஓய்! இந்த உலகத்தையே எடுக்கும் ஆற்றல் படைத்த என்னால் இதனை எடுக்க முடியாதா?” என்று சலந்தரன் கூறி, வட்டமான அதனைப் பேர்த்துத் தலையில் வைத்தான். அது கூரிய சக்ராயுதமாகி அவன் உடம்பைப் பிளந்துவிட்டது.

இந்தச் சக்கராயுதம் சிவபெருமானிடம் இருந்தது. இதனைப் பெறுதல் வேண்டும் என்று கருதிய திருமால், திருவீழிமிழலை என்ற திருத்தலம் சென்றார். தாமரைக் குளம் அமைத்து, நாள் தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் சிவமூர்த்தியை மிகுந்த அன்புடன் உள்ளம் குழைந்து உருகி வழிபட்டு வந்தார்.

சிவபெருமான் ஒருநாள் அவருடைய அன்பை மற்றவர்கட்குக் காட்டும்பொருட்டு ஒருமலரைக் காணாமல் செய்துவிட்டார். அர்ச்சனைப் புரிந்துகொண்டு வந்த திருமால் ஒரு மலர் குறைவதைக் கண்டார். ஆயிரம் மந்திரங்களால் ஆயிரம் மலர்கள் அருச்சிப்பது அவருடைய நியதி. உடனே தமது அழகிய கண்ணைப் பிடுங்கி அரனார் அடி மலர் மீது அருச்சித்தார். உடனே சிவபெருமான் வெளிப்பட்டுத் தோன்றி, அவருடைய அளவற்ற அன்புக்கு மகிழ்ந்து சக்ராயுதத்தையும், கண்ணையும், கண்ணன் என்ற பெயரையும் வழங்கி அருள்புரிந்தனர்.

ஒரே ஒரு மலரைப் பிய்த்துப் பிய்த்து அர்ச்சிப்போரும், நான்கு, ஐந்து மந்திரங்கட்கு ஒரு மலரையிட்டு அர்ச்சிப்போரும், இந்த வரலாற்றை ஊன்றி நோக்கி உய்வு பெறுக.

நீற்றினை நிறையப் பூசி, நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி, ஒருநாள் ஒன்று குறைய, கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி, அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே. --- அப்பர்.

குறிக்கொண்டு இருந்து, செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான்,
கறைக்கண்ட! நீ ஒரு பூக் குறைவித்துக் கண் சூல்விப்பதே?
பிறைத்துண்ட வார்சடையாய் பெருங்காஞ்சி எம் பிஞ்ஞகனே.   --- அப்பர்.

அரு மலரோன் சிரம் ஒன்று அறுத்தீர்,
         செறுத்தீர்அழல் சூலத்தில் அந்தகனை,
திருமகள் கோன் நெடுமால் பலநாள்
         சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத்தில் குறைவா,
         நிறைவுஆக ஓர் கண்மலர் சூட்டலுமே,
பொருவிறல் ஆழி புரிந்து அளித்தீர்,
         பொழில்ஆர்திருப் புத்தூர்ப் புனிதனீரே.                         --- சுந்தரர்.

பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூக்குறைய,
தம்கண் இடந்து, அரன் சேவடிமேல் சாத்தலுமே,
சங்கரன் எம்பிரான் சக்கரமாற்கு அருளியவாறு
எங்கும் பரவிநாம் தோள்நோக்கம் ஆடாமோ.

சலம் உடைய சலந்தரன் தன் உடல்தடிந்த நல்ஆழி
நலம் உடைய நாரணற்கு அன்று அருளியவாறு என்? டீ,
நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடிக்கீழ்
அலராக இட, ஆழி அருளினன்காண் சாழலோ.                     ---  திருவாசகம்.
  
அடல் பொருது பூசலே விளைந்திட,
     எதிர் பொர ஒணாமல் ஏக, சங்கர
     அரஹர சிவாமஹாதெவ என்றுஉனி, ......அன்று சேவித்து
அவனி வெகு காலமாய் வணங்கி,உள்
     உருகி, வெகு பாச கோச சம்ப்ரம
     அதிபெல கடோர மா சலந்தரன் ...... நொந்துவீழ

உடல்தடியும் ஆழி தாஎன, அம்புய
     மலர்கள் தசநூறு தாள் இடும்பகல்,
     ஒருமலர் இலாது கோ அணிந்திடு ....செங்கண்மாலுக்கு
உதவிய மகேசர் பால! இந்திரன்
     மகளை மணம் மேவி, வீறு செந்திலில்
     உரிய அடியேனை ஆள வந்துஅருள் ...... தம்பிரானே.     ---  திருப்புகழ்.

தொலையாத பத்தி உள திருமால் களிக்க, ஒரு
     சுடர்வீசு சக்ரம் அதை ......       அருள், ஞான
துவர்வேணி அப்பன், மிகு சிவகாமி கர்த்தன், மிகு
     சுகவாரி சித்தன் அருள் ......     முருகோனே!          --- (வலிவாத) திருப்புகழ்.

அப் பத்ம யோனிக்கும் ---

பத்மம் - தாமரை.

யோனி - கரு உயிர்க்கின்ற இடம்.  இங்கு திருமாலின் உந்திச் சுழி, நாபிக் கமலமத்தைக் குறித்து வந்தது. 

திருமாலுக்கு கமலநாபன், பதுமநாபன் என்று திருப்பெயர்கள் உண்டு. திருமாலின் உந்திக் கமலத்தில் உதித்தவர் பிரமதேவர்.  

நித்த ப்ரதாபர்க்கும் ---

பிரதாபம் - வீரம், பெருமை, புகழ், ஒளி.

என்றும் அழியாதவரும், புகழ் விளங்குபவரும் ஆகிய சிவபெருமான்.

எட்ட அரிது ஆய ---

மும்மூர்த்திகளுக்கும் எட்டி உணர முடியாத திலையில் உள்ளது வேதப் பொருள்.
        
தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த ---

தத்துவம் - உண்மை. பொருள்களின் உண்மை, குணம்.

உண்மைப் பொருள் என்றும் அழியாதது.  

அந்த உண்மைப் பொருளைக் காண உதவுவது வேதம். அவ் வேதங்களின் சிகரமாக நிறைந்திருப்பவர் இறைவர். வேதத்தின் முடிவு உபநிடதம்.அது ஞானகாண்டம் ஆகும். "ஞானந்தான் உருவாகிய நாயகனாகிய முருகன்" அவ் வேத சிகரப் பொருளாக விளங்குகின்றனன். வேதத்தில் விளங்குகின்ற உண்மைப் பொருளை மும்மூர்த்திளுக்கும் போதித்தவர் முருகப் பெருமான்.

திருமால், பிரமன், இந்திரன், சிவபெருமான் முதலியோருக்கு முருகப் பெருமான் அறம், பொருள் இன்பம் முத்திறத்து உறுதிப் பொருள்கை விளக்கும் மனுநூலை ஓதிய பெருமையை உடையவர் முருகப் பெருமான்.

சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,

அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர்.

கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.   --- தணிகைப் புராணம்.

நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”                        --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

நாதா குமரா நம என்று அரனார்
 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”                    --- கந்தர்அநுபூதி

தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”  --- (கொடியனைய) திருப்புகழ்.

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா....                                                --- (விறல்மாரன்) திருப்புகழ்.

சிவனார் மனம் குளி, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா...                       --- திருப்புகழ்.

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.--- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.        ---  தணிகைப் புராணம்.

மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
     வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
     எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
     தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.           --- திருமந்திரம்.

கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்....           --- குமரகுருபரர்.

பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.  --- அபிராமி அந்தாதி.
 
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை, மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டுசெய்தே.--- அபிராமி அந்தாதி.

சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, ங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்.

திருமால் சிவஞானம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணத்தில் இராமன் அருள் பெற்ற வரலாற்றினில் காண்க.

இந்திரன் திருத்தணிகை மலையிலும், திருவேரகத்திலும் முருகப் பெருமானைப் பூசித்து, உபதேசம் பெற்றான்.

செழு வாரிசத்தில் ஒன்று முதுவேதன் வெட்க, அன்று
     திருவாய்மை செப்பி நின்ற ...... முருகோனே!        --- (விழியால்) திருப்புகழ்.

இந்திரை கேள்வர், பிதாமகன் கதிர்
     இந்து சடாதரன், வாசவன் தொழுது
     இன்புறவே மனு நூல் விளம்பிய ...... கந்த வேளே!   --- (சந்திர ஓலை) திருப்புகழ்.

அரகர சிவன் அரி அயன் இவர் பரவி,முன்
     அறுமுக சரவண ...... பவனே என்று,
அநுதினம் மொழிதர, அசுரர்கள் கெட,அயில்
     அனல் என எழ விடும் ...... அதிவீரா!
பரிபுர கமலம் அது அடிஇணை அடியவர்
     உளம்அதில் உற அருள் ...... முருகேசா!                  --- திருப்புகழ்.

மாரோன் இறக்க நகை தாதா திருச்செவியில்
     மாபோதகத்தை அருள் ...... குருநாதா!                   --- (கூர்வேல்) திருப்புகழ்.

படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே”--- (கனைத்த) திருப்புகழ்

மூவர் தேவாதிகள் தம்பிரானே”  --- (வாரிமீதேயெழு) திருப்புகழ்

உலகுஒரு தாள்ஆன மாமனும்,
   உமைஒரு கூறுஆன தாதையும்,
      உரைதரு தேவா! சுராதிபர் பெருமாளே”    --- (இருகுழைமீதோடி) திருப்புகழ்

நாலந்த வேதத்தின்    பொருளோனே
நான்என்று மார்தட்டும் பெருமாளே...             --- (நீலங்கொள்) திருப்புகழ்.

காண ஒணாதது, உருவோடு அரு அது,
     பேச ஒணாதது, உரையே தருவது,
     காணும் நான்மறை முடிவாய் நிறைவது, .....பஞ்சபூதக்
காய பாசம் அதனிலே உறைவது,
     மாயமாய் உடல் அறியா வகையது,
     காயம் ஆனவர் எதிரே அவர் என ...... வந்துபேசிப்

பேண ஒணாதது, வெளியே ஒளியது,
     மாயனார் அயன் அறியா வகையது,
     பேத அபேதமொடு உலகாய் வளர்வது, ...... விந்துநாதப்
பேருமாய் கலை அறிவாய் துரிய
     அதீதம் ஆனது, வினையேன் முடி தவ
     பேறுமாய் அருள் நிறைவாய் விளைவது, ...ஒன்றுநீயே.    ---  திருப்புகழ்.

அத் தத்வ ரூப ---

அந்த உண்மை வடிவானவர் முருகப் பெருமான்.

கிரிப் புரை சாடி, கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழக் குத்து ராவுத்த ---

புரை - பெருமை, குற்றம்.

கிரி - கிரவுஞ்ச மலை.

ராவுத்தன் - குதிரை வீரன்.

குதிரையினும் வேகமாகச் செல்லக்கூடிய மயிலை வாகனமாகக் கொண்டவர் முருகப் பெருமான். எனவே, ராவுத்தன் என்றார்.

கண்டுஉண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுஉண்டு அயர்கினும் வேல்மறவேன், முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண்டு எனக்கொட்டி ஆட,வெஞ் சூர்க்கொன்ற இராவுத்தனே.

படிக்கும் திருப்புகழ் போற்றுவன், கூற்றுவன் பாசத்தினால்
பிடிக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்,பெரும் பாம்பில் நின்று
நடிக்கும் பிரான் மருகா, கொடும்சூரன் நடுங்க, வெற்பை
இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே.

எனக் கந்தர் அலங்காலத்தில் இரு பாடல்களிலும் முருகப் பெருமானை இராவுத்தன் எனப் போற்றி உள்ளமை காண்க.

"எதிரில்புல வர்க்குஉதவு வெளிமுகடு முட்டவளர்
இவுளிமுகி யைப்பொருத ராவுத்தன் ஆனவனும்..."

என வேடிச்சி காவலன் வகுப்பில் அருணை வள்ளலார் போற்றி உள்ளதும் அறிக.

கிரவுஞ்ச மலையின் குற்றத்தைத் தடிந்து, அதன் பெருமையைக் குலைத்தது முருகப் பெருமான் திருக்கை வேல்.

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
     இள க்ரவுஞ்சம் தனோடு
          துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
     அழித்தவன் பொன்றுமாறு,
          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

சூரபன்மன் இறுதியில் உறுதியிழந்து, கடல் நடுவில் இரும்பு மயமான மாமரமாகித் தலை கீழாக நின்றான். முருகனுடைய வேற்படை அம் மாமரத்தைப் பிளந்து அழித்தது.

                                ..... கவிழ் இணர்    
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
எய்யா நல்இசைச் செவ்வேல் சேஎய்...         ---  திருமுருகாற்றுப்படை

கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
     குளமாய்ச் சுவற ...... முதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
     கொதிவேற் படையை ...... விடுவோனே.      --- (நிலையா) திருப்புகழ்.

கொடியநெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக்
     குரைகடல் செம்ப, சக்- ...... கரவாளச்
சிலை பக, எண் திக்குத் திகிரிகளும் பத்துத்
     திசைகளினும் தத்த, ...... செகம் ஏழும்
திருகு சிகண்டிப் பொன் குதிரை விடும் செட்டி!
     திறல! கொடும்பைக்கு உள் ...... பெருமாளே.          --- (கலைஞர்) திருப்புகழ்.

கொச்சை வாழ் முத்தமிழ்ப் பெருமாளே ---

கொச்சைவயம் என்பது கொச்சை என்று ஆனது.

தமிழ் மிகவும் இனிய மொழி.

இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகள் உடைய மொழித் தமிழ் ஒன்றேயாகும்.

இயல் தமிழ் - சத்து.

இசைத் தமிழ் - சித்து. 

நாடகத் தமிழ் - ஆனந்தம்.

சத்து சித்து ஆனந்தம்.

சச்சிதானந்தம், முத்தமிழ் ஆகும்.

அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க
     அரிய தமிழ் தான் அளித்த ...... மயில்வீரா...

எனச் சுவாமிமலைத் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி உலகுக்கு தமிழை அளித்தவர் முருகப் பெருமான்.

உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியேயாம். இறைவனருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழேயாம். இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும், பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே ஆதலாலும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ். கல் புணையை நல் புணை ஆக்கியது தமிழ். எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ். கற்றூணில் காட்சிதரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ். இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ்.

வடமொழிக்கும் தென்மொழிக்கும் ஆசிரியர் சிவபெருமானே ஆவர். வடமொழியை பாணினிக்கும், தென்மொழியை அகத்தியர்க்கும் சிவபெருமான் உபதேசித்தனர். சிவபெருமான்  இந்த இரு மொழிகளின் வடிவமாகவே விளங்குகின்றார்.

வானவன் காண் வானவர்க்கும் மேலானான் காண்
     வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் ஆனைந்தும் ஆடினான் காண்
     ஐயன் காண் கையில் அனல்  ஏந்தியாடும்
கானவன் காண் கானவனுக்கு அருள் செய்தான்காண்
     கருதுவார் இதயத்துக்  கமலத்து ஊறும்
தேனவன் காண் சென்று அடையாச் செல்வன் தான்காண்   
    சிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.     --- அப்பர்.

தென்தமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும் வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் உணர்வோடும் உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புள்காணாப் பரமனையே பாடுவார்.    --- பெரியபுராணம்.

செந்தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டுகளாக இளமையாகவே செழித்து ஓங்கி உள்ளது. முச்சங்கத்திலும் நின்று நிலவியது. சிவபெருமான் மதுரையில் புலவர் குழாங்களில் தாமும் ஒருவராக இருந்து ஆராய்ந்த தனிச் சிறப்புடையது. நேற்று தோன்றி இன்று மறையும் ஏனைய மொழிகள் போல் அல்லாது எக்காலத்தும் எழில் குன்றாமல் இனிமை பயப்பது இத்தமிழ் மொழியே ஆகும். சிவபெருமானே இதற்கு ஆசிரியராதலால் தொன்மை உடையது. எல்லா மொழிகளுக்கும் முதன்மை உடையது எனினும் அமையும்.

காலக் கோட்பாட்டினால் தமிழில் இருந்த பொருள் இலக்கணம் சிதைந்து மறைந்தது. அது கண்டு பாண்டியன் வருந்தினான். சோமசுந்தரக் கடவுள் அவனுடைய அலக்கண் தீர்ப்பான் வேண்டி பொருள் இலக்கணமாக இறையனார் அகப்பொருள் என்ற அறுபது சூத்திரங்கள் அடங்கிய அரிய நூலை அருளிச்செய்து வழங்கினார்.

அந்நூலுக்குச் சங்கப் புலவர்கள் வேறு வேறு உரைகள் செய்தார்கள். தாம் தாம் செய்த உரையே உயர்ந்தது என அவர்கட்குள்ளேயே கலகம் பிறந்தது. எல்லோரும் சோமசுந்தரப் பெருமான் திருமுன் சென்று “ஐயனே! எங்கள் கலகந் தீர்த்து உலகமுய்ய அருள் செய்வாய்” என்று வேண்டி நின்றார்கள்.

சொக்கலிங்கத்தினின்று இறைவன் ஒரு புலவர் வடிவில் தோன்றி, ” புலவர்களே! நீவிர் வருந்தற்க. இம்மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் தனபதி என்பானுக்கும், குணசாலினிக்கும் தவத்தால் தோன்றிய ஒரு தெய்வப் புதல்வன் இருக்கின்றான். அவன் ஊமை. அத் திருமகன்பால் உமது உரைகளை எடுத்துக் கூறுங்கள். அவன் எது உயர்ந்தது என உறுதியாக அறுதியிட்டு அறிவிப்பான்” என்று அருளிச் செய்தனர்.

புலவர்கள், “பெருமானே! ஊமை மகன் எங்ஙனம் உரைப்பான்?” என்று ஐயுற்று வினவினார்கள். இறைவன், “புலவீர்காள்! நீவிர் சென்று கேண்மின். அவன் சொல்லாழமும் பொருளாழமும் நன்கு உணர்ந்து, நிறுத்து, நுனித்து உணர்த்துவான்” என்றருளிச் செய்தனர். சங்கப் புலவர்கள் மேளம் தாளம் குடை விருது சாமரை பல்லக்கு முதலிய வரிசைப் பொருள்களுடன் சென்று உருத்திரசன்மர் என்ற அந்த செட்டிக் குமரனைப் பணிந்து, செஞ்சந்தனம் பூசி, செம்பட்டு ஆடையும், செம்மலர் மாலையும் புனைவித்து, பல்லக்கில் ஏற்றிக் கொணர்ந்து சங்கப் பலகைமீது எழுந்தருளச் செய்து, சுற்றிலும் அமர்ந்து, தத்தம் உரைகளை உரைப்பாராயினார்கள்.

சிலர் கூறும் உரைகளைக் கேட்டு அந்த ஊமைச் சிறுவன் முகத்தைச் சுளித்தனன். சிலர் கூறும் உரைகளைக் கேட்டு உதட்டை அசைத்தனன். சிலர் கூறும் உரைகளைச் சில இடத்தில் ஆமோதிப்பான் போல் சிறிது தலையை அசைத்தான். சிலர் கூறும் உரைகளைக் கேட்டு கண் மலர்ந்து பார்த்தனன்.

நக்கீரன், கபிலன், பரணன் என்ற முப்பெரும் புலவர்களது உரைகளைக் கேட்டு அடிமுதல் முடிவரை உடல் புளகிதமுற்று, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, சிரம் அசைத்து கரந்தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்து ஆமோதித்தானன்.

நுழைந்தான்பொருள் தொறும் சொலுதொறும் நுண் தீஞ்சுவை உண்டே
தழைந்தான் உடல், புலன் ஐந்தினும் தனித்தான்,சிரம் பணித்தான்,
குழைந்தான்விழி, வழிவேலையுள் குளித்தான்,தனை அளித்தான்,
விழைந்தான் தவபேற்றினை, விளைத்தான்,களி திளைத்தான்.

இவ்வாறு அப் புலவர்கள்பால் விளைந்த கலகந் தீர்த்து உலகம் உய்ய அருள் புரிந்தான். முருகவேள் பிறப்பும் இறப்பும் இல்லாத பெருந்தகை, "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்கின்றார் அருணகிரிநாதர்.

சுப்பிரமணிய சாரூபம் பெற்றவர்கள் பலர். அவர்கள் அபர சுப்ரமண்யர் எனப்படுவர். அவருள் ஒருவர் உருத்திரசன்மராக வந்தனர். முருகவேளது அருள் தாங்கி வந்தபடியால் முருகனே வந்ததாக அருணகிரியார் கூறுகின்றார் எனத்தெளிக.

    ஏழேழு பேர்கள் கூற வருபொருள் அதிகாரம்
    ஈடி ஆய ஊமர்போல வணிகரில்
    ஊடு ஆடி, ஆலவாயில் விதிசெய்த
    லீலா விசார தீர வரதர              குருநாதா”     ---  (சீரான) திருப்புகழ்

இறைவனுக்கு முன்னே வருவது தமிழ். பின்னே வருவது வடமொழி.

திருமால் கோயிலில் இன்றும் இங்ஙனம் நிகழ்வது கண்கூடு.

பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
   பச்சைப் பசுங் கொண்டலே”              --- குமரகுருபரர்.

பழமையான வேதங்கள் முறையிடவும், பைந்தமிழின் பின்னால் சென்றவனே என்று மீனாட்சி அம்மைப் பிள்ளைத்தமிழில் குமரகுருபர அடிகள் திருமாலைப் பாடி இருப்பதை எண்ணுக,
  
பழய அடியவர் உடன் இமையவர் கணம்
     இருபுடையும் மிகு தமிழ்கொடு, மறைகொடு,
     பரவ வரு மதில் அருணையில் ஒருவிசை ...... வரவேணும்.
                                                        --- திருச்செங்கோட்டுத் திருப்புகழ்.

அதிமதுர சித்ரகவி நிருபனும் அகத்தியனும்
அடிதொழு தமிழ்த்ரயவி நோதக் கலாதரனும்...  --- வேடிச்சி காவலன் வகுப்பு.

அத்தகைய அருந்தமிழானது கொச்சைவயம் என்னும் சீகாழிப் பதியில் அருமை பெற விளங்கியது. சீகாழிப் பதியில் திருஞானசம்பந்தர் அவதரித்தார். அவருடைய அவதார நோக்கங்களில் ஒன்று, "அசைவு இல் செழ்ந்தமிழ் வழக்கு, அயல் வழக்கின் துறையை வெல்லவேண்டும்" என்பதே. பற்பல அற்புதமான தேவாரத் திருப்பதிகங்களை அழகிய தமிழில் இறைவனுக்குச் சாத்தியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.

மதுரை நகரத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளியிருக்கிறார். அயல் சமயத்தோடு போர் நிகழப் போகிறது. தம்முடைய சமயத்தையும், தம்நாட்டுப் பண்பையும் நிலை நாட்ட வேண்டிய பொறுப்பு திருஞானசம்பந்தருக்கு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் சேக்கிழார் விவரிக்கிற பொழுது, "செழுந்தமிழ் வழக்கு, அயல் வழக்கின் துறைவெல்ல" என்று சொன்னார். ஆக, சைவம் என்று சொல்லாமல், சித்தாந்தச் சமயம் என்று சொல்லாமல், இந்து சமயம் என்று சொல்லாமல், "செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கின் துறை வெல்ல" என்று சேக்கிழார் வருணிக்கின்றார். ஆக, சைவம் என்று சொன்னாலும், சமயம் என்று சொன்னாலும் அது ஒரு செழுந்தமிழ் வழக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அது செழுந்தமிழ் வழக்காக ஒரு காலத்தில் இருந்தது.

கொச்சைவயம் என்பது சீகாழிக்கு உரிய பன்னிரு திருப்பெயர்களில் ஒன்று.

பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்
பொருஇல் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.   ---  பெரியபுராணம்.

1.    பிரமபுரம்  பிரமதேவர் பூசித்துப் பெறு பெற்றதலம்.

தோடுஉடைய செவியன் விடைஏறி ஓர்தூவெண் மதி சூடி
காடுஉடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிராமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

சேவுயரும் திண்கொடியான் திருவடியே
         சரண் என்று சிறந்த அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்தான்
         வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
         செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவிஇரும் கருங்குவளை கருநெய்தல்
         கண்காட்டும் கழுமலமே

எனத் திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்து இருத்தல் காண்க.

2.    வேணுபுரம்  சூரபதுமனுக்கு அஞ்சிய தேவேந்திரன் இங்குப் போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு (மூங்கில்) வடிவில் முளைத்து அருள்புரிந்த தலம். தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க வேணு வழியாய் இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.

3.    புகலி – சூரபதுமனால் இடுக்கண் எய்திய தேவர்கள் சிவபிரானைப் புகல் அடைந்து, அடைக்கலம் புகுந்து வணங்கிய தலம்.

4.    வெங்குரு – அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் வழிபட்டுத் தேவகுருவாகிய பிருகற்பதிக்குச் சமத்துவம் பெற்ற தலம்.  எமதருமன் தன்னைக் கொடியவன் என்று உலகம் இகழாதவாறு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.

5.    தோணிபுரம் – ஊழிமுடிவில் சிவபெருமான் உமாதேவியாரோடு பிரணவம் ஆகிய தோணியில் வீற்றிருப்பத் தான் அழியாமல், நிலைபேறு எய்தித் திகழும் தலம்.

6.    பூந்தராய் – சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளும் பூவும் தாருமாய்ப் பூசித்து அழியாவரம் பெற்ற தலம்.

7.    சிரபுரம் – சயிங்கேயன் என்னும் அசுரன் வேற்று வடிவம் கொண்டு மறைந்து வந்து தேவர்களுடன் இருந்து அமிர்தம் உண்ணும் நிலையில் சூரியனால் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டுணுவால் சிரம் வெட்டுண்ட தலம்.

8.    புறவம் – சிபிச் சக்கரவர்த்தியைச் சோதித்தற்கு அக்கினிதேவன் புறாவடிவம் கொண்டு போந்து, புறாவின் எடை அளவிற்குத் தன் தசையை அரிந்து கொடுத்தும், அது போதாமை கண்டு, அவனே துலை ஏறித் தன் வள்ளன்மையினைப் புலப்படுத்திய நிலையில், புறா வடிவம் கொண்ட அக்கினிதேவன், அப்பாவம் அழியுமாறு வழிபட்டு உய்ந்த தலம்.

9.    சண்பை – கபில முனிவர் சாபத்தின்படி தம் குலத்தினன் வயிற்றில் பிறந்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய துகள், சண்பைப் புல்லாக முளைத்து இருந்ததை ஆயுதமாகக் கொண்டு போர் செய்து மடிந்த யாதவர்களின் கொலைப்பழி, தன்னை அணுகாவண்ணம் கண்ணன் பூசித்த தலம்.

10.   சீர்காழி – காளிதன் என்னும் நாகம் வணங்கிய தலம்.  நடனத்தில் தோற்ற காளி வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.

11.   கொச்சைவயம் – பராசரர் தாம் மச்சகந்தியை ஆற்றிடையில் புணர்ந்து அடைந்த தீநாற்றமும், பழியும் போகும் வண்ணம் இறைஞ்சி உய்ந்த தலம்.

12.   கழுமலம் – உரோமச முனிவர் இறைவனை வழுத்தி ஞானோபதேசம் பெற்றுத் தம்முடைய மலங்களைக் கழுவப்பெற்ற தலம்.

கருத்துரை

முருகா! செத்தை யோகத்தினரைப் பாடி அழியாமல், முத்திக்கு வித்து ஆன உம்மைப் பாடி வழிபட அருள்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...