சீகாழி - 0785. தினமணி சார்ங்க

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தினமணி சார்ங்க (சீகாழி)

முருகா!
இந்த உடல் வீணில் அழியாமல்,
முத்திப் பயன் உற வாழ அருள் புரிவாய்.


தனதன தாந்த தான தனதன தாந்த தான
     தனதன தாந்த தான ...... தனதான
  
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
     தினகர னேய்ந்த மாளி ...... கையிலாரஞ்

செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்
     வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும்

இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை
     புழுககில் சாந்து பூசி ...... யரசாகி

இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
     மொருபிடி சாம்ப லாகி ...... விடலாமோ

வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை
     மயிலொடு பாங்கி மார்க ...... ளருகாக

மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
     மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே

கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
     கருணைகொள் பாண்டி நாடு ...... பெறவேதக்

கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய
     கவுணியர் வேந்த தேவர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தினமணி சார்ங்கபாணி என, மதிள் நீண்டு, சால
     தினகரன் எய்ந்த மாளி ...... கையில், ரம்

செழுமணி சேர்ந்த பீடிகையில், சை வாய்ந்த பாடல்
     வயிரியர் சேர்ந்து பாட, ...... இருபாலும்

இனவளை பூண் கையார் கவரிஇட, வேய்ந்து மாலை
     புழுகு அகில் சாந்து பூசி ...... அரசாகி,

இனிது இறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம்
     ஒருபிடி சாம்பல் ஆகி ...... விடலாமோ?

வனசரர் ஏங்க, வான முகடுஉற ஓங்கி, ஆசை
     மயிலொடு பாங்கிமார்கள் ...... அருகாக

மயிலொடு மான்கள் சூழ, வளவரி வேங்கை ஆகி,
     மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே!

கன சமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க, நீறு
     கருணைகொள் பாண்டி நாடு ...... பெற, வேதக்

கவிதரு காந்த! பால! கழுமல! பூந்த ராய!
     கவுணியர் வேந்த! தேவர் ...... பெருமாளே.


பதவுரை

      வனசரர் ஏங்க --- காட்டில் திரியும் வேடர்கள் திகைக்கும்படியாக,

     வான முகடு உற ஓங்கி --- வானத்தின் முகடு அளவும் ஓங்கி வளர்ந்து,

      ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக --- ஆசையாக அவ்வேடர்கள் வளர்த்த மயிலாகிய வள்ளிநாயகியும் அவரது தோழிமார்களும் அருகே இருக்க

      மயிலொடு மான்கள் சூழ --- மயில்களும் மான்களும் சூழ்ந்து இருக்க,

     வளவரி வேங்கை ஆகி --- செழித்து, வரிகளோடு வளர்ந்த வேங்கை மரமாகி  

       மலைமிசை தோன்று மாய வடிவோனே --- வள்ளிமலை மீது தோன்றிய மாய வடிவத்தினரே!

       கன சமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க --- கூட்டமாக இருந்த ஊமையர்கள் ஆகிய சமணர்கள் பலரும் (வாதில் தோற்று) கழுமுனையில் தொங்கவும்,

      நீறு கருணைகொள் பாண்டி நாடு பெற --- திருநீற்றை திருஞானசம்பந்தராக வந்த உமது கருணைக்குப் பாத்திரமான பாண்டியநாட்டினர் பெற்று உய்யவும்,

       வேதக் கவிதரு காந்த --- வேதப்பொருள் அமைந்த தேவாரத் திருப்பதிகங்களை ஓதியருளிய ஒளிமேனியரே!

      பால --- குழந்தையாக வந்து

     கழுமல பூந்தராய ---  கழுமலம் என்றும் பூந்தராய் என்றும் வழங்கப்படும் சீகாழியில் அவதரித்தவரே!

      கவுணியர் வேந்த --- கவுணியர் குலத்து அரசே!

     தேவர் பெருமாளே --- தேவர் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      தினமணி, சார்ங்க பாணி என --- சூரியன் என்றும், சாரங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்திய திருமால் என்றும் சொல்லும்படியாக,

      மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில் --- நீண்ட மதில்களோடு, மிகுந்த சூரிய ஒளி பொருந்தியிருக்கும் மாளிகையில்

      ஆரம் செழுமணி சேர்ந்த பீடிகையில் --- முத்தாலும் அழகிய இரத்தினத்தாலும் அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் இருந்து,

      இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட --- இன்னிசைப் பாடல்களால் புகழ்ந்து பாடும் பாணர்கள் ஒன்றுகூடிப் பாடவும்,

      இருபாலும் இனவளை பூண்கையார் கவரி இட --- இரண்டு புறங்ங்களிலும் நின்று அழகிய வளையல்களை அணிந்த கைகளை உடைய மாதர்கள் கவரி வீசவும்,

      மாலை வேய்ந்து --- மாலைகளைச் சூடி,

     புழுகு அகில் சாந்து பூசி --- புழுகு, அகில், சந்தனம் ஆகிய மணப் பொருள்களை உடலெங்கும் பூசி

     அரசு ஆகி --- அரசு புரிந்து,

      இனிது இறுமாந்து வாழும் --- இனிதாகவும், இறுமாப்புடனும் வாழுகின்ற,

      இருவினை நீண்ட காயம் --- நல்வினை, தீவினை என்னும் இருவினைகளால் தொடர்ந்து வருகின்ற இந்த உடலானது,

      ஒரு பிடி சாம்பல் ஆகி விடலாமோ --- இறுதியில் ஒரு பிடி சாம்பலாகி அழிந்து போகலாமா?

பொழிப்புரை


         காட்டில் திரியும் வேடர்கள் திகைக்கும்படியாக, வானத்தின் முகடு அளவும் ஓங்கி வளர்ந்து, ஆசையாக அவ்வேடர்கள் வளர்த்த மயிலாகிய வள்ளிநாயகியும் அவரது தோழிமார்களும் அருகே இருக்க, மயில்களும் மான்களும் சூழ்ந்து இருக்க, செழித்து, வரிகளோடு வளர்ந்த வேங்கை மரமாகி வள்ளிமலை மீது தோன்றிய மாய வடிவத்தினரே!

         கூட்டமாக இருந்த ஊமையர்கள் ஆகிய சமணர்கள் பலரும் வாதில் தோற்று கழுமுனையில் தொங்கவும், திருநீற்றை திருஞானசம்பந்தராக வந்த உமது கருணைக்குப் பாத்திரமான பாண்டியநாட்டினர் பெற்று உய்யவும், வேதப்பொருள் அமைந்த தேவாரத் திருப்பதிகங்களை ஓதியருளிய ஒளிமேனியரே!

         குழந்தையாக வந்து, கழுமலம் என்றும் பூந்தராய் என்றும் வழங்கப்படும் சீகாழியில் அவதரித்தவரே!

         கவுணியர் குலத்து அரசே!

       தேவர் போற்றும் பெருமையில் மிக்கவரே!

         சூரியன் என்றும், சாரங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்திய திருமால் என்றும் சொல்லும்படியாக, நீண்ட மதில்களோடு, மிகுந்த சூரிய ஒளி பொருந்தியிருக்கும் மாளிகையில், முத்தாலும் அழகிய இரத்தினத்தாலும் அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் இருந்து, இன்னிசைப் பாடல்களால் புகழ்ந்து பாடும் பாணர்கள் ஒன்றுகூடிப் பாடவும், இரண்டு புறங்ங்களிலும் நின்று அழகிய வளையல்களை அணிந்த கைகளை உடைய மாதர்கள் கவரி வீசவும், மாலைகளைச் சூடி,புழுகு, அகில், சந்தனம் ஆகிய மணப் பொருள்களை உடலெங்கும் பூசி, அரசு புரிந்து, இனிதாகவும், இறுமாப்புடனும் வாழுகின்ற, நல்வினை, தீவினை என்னும் இருவினைகளால் தொடர்ந்து வருகின்ற இந்த உடலானது, இறுதியில் ஒரு பிடி சாம்பலாகி அழிந்து போகலாமா?


விரிவுரை

இத் திருப்புகழில் வெற்றுக் கல்வியும், பொன்னும் பொருளும், மண்ணும் பெற்றவர்களின் பொய்யான வாழ்வைக் கண்டித்து அடிகளார் பாடி அருளுகின்றார்.

படர் புவியின் மீது மீறி வஞ்சர்கள்
     வியனின் உரை பானுவாய் வியந்து உரை
     பழுதில் பெரு சீலநூல்களும், தெரி ...... சங்கபாடல்
பனுவல், கதை, காவ்யம் ஆம் எணஎ எண்கலை
     திருவளுவ தேவர் வாய்மை என்கிற
     பழமொழியை ஓதியே உணர்ந்து,பல் ......சந்தமாலை,
மடல்,பரணி, கோவையார், கலம்பகம்
     முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்,
     வகை வகையில் ஆசு சேர் பெருங்கவி ..... சண்டவாயு
மதுரகவி ராஜன் நான் என், வெண்குடை,
     விருதுகொடி, தாள மேள தண்டிகை,
     வரிசையொடு உலாவும் மால் அகந்தை ......தவிர்ந்திடாதோ?
                                                              --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.

இத் திருப்புகழ்ப் பாடலுக்கு ஒப்பாக விளங்கும் மேலே குறித்த திருப்புகழ்ப் பாடலின் விளக்கத்தை ஆங்கு அறிந்து கொள்ளவும்.

நிகமம் எனில் ஒன்றும் அற்று, நாடொறு
     நெருடு கவி கொண்டு வித்தை பேசிய
     நிழலர், சிறு புன்சொல் கற்று, வீறு உள ......பெயர்கூறா,
நெளிய முது தண்டு சத்ர சாமர
     நிபிடம்இட வந்து, கைக்கு மோதிரம்,
     நெடுகி அதி குண்டல ப்ரதாபமும் ...... உடையோராய்,
முகமும் ஒரு சம்பு மிக்க நூல்களும்,
     முதுமொழியும் வந்து இருக்குமோ எனில்,
     முடிவில் அவை ஒன்றும் அற்று, வேறு ஒரு ...... நிறமாகி
முறியும் அவர் தங்கள் வித்தை தான், இது
     முடிய உனை நின்று பத்தியால் மிக
     மொழியும், வளர் செஞ்சொல் வர்க்கமே வர ......அருள்வாயே.
                                                                             --- பழநித் திருப்புகழ்.

இந்தத் திருப்புகழ் பாடலும் ஒப்பானது. அதன் விளக்கத்தையும் ஆங்கு அறிந்து கொள்க.
  
சக சம்பக் குடைசூழ் சிவிகைமெல்
     மத இன்பத்துடனே, பல பணி
     தனிதம், பட்டு உடையோடு, கல்முரசு ...... ஒலிவீணை
தவளம் தப்புடனே கிடுகிடு
     நடை தம்பட்டம் இடோல் பலஒலி
     சதளம் பொன் தடிகாரரும் இவை ...... புடைசூழ,
வெகு கும்பத்துடனே, பலபடை
     கரகம் சுற்றிடவே வர, இசை
     வெகு சம்பத்துடனே, அழகுடன் ...... இதமேவும்
விருமம் சித்திரமாம் இது, நொடி
     மறையும் பொய்ப் பவுஷோடு உழல்வது
     விட, உம்பர்க்கு அரிதாம் இணையடி ...... தருவாயே.
                                                                      ---  சிதம்பரத் திருப்புகழ்.

பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை என்னும் இந்த மூவாசையும் தவிர்க்கப்பட வேண்டியது என்பதை நெஞ்சறிவுறுத்தலாக வள்ளல் பெருமான் பாடி அருளி இருப்பதையும் காண்க.

நின்ஆசை என்என்பேன், நெய்வீழ் நெருப்பு எனவே
பொன்ஆசை மேன்மேலும் பொங்கினையே, - பொன்ஆசை

வைத்து, ழந்து, வீணே வயிறு எரிந்து மண்ணுலகில்
எத்தனைபேர் நின்கண் எதிர்நின்றார், - தத்துகின்ற

பொன்உடையார் துன்பப் புணரி ஒன்றே அல்லது, மற்று
என்உடையார் கண்டு இங்கு இருந்தனையே - பொன்இருந்தால்

ஆற்றல் மிகு தாயும் அறியா வகையால் வைத்திட, ஓர்
ஏற்றஇடம் வேண்டும், தற்கு என்செய்வாய், - ஏற்றஇடம்

வாய்த்தாலும், அங்கு அதனை வைத்த இடம் காட்டாமல்
ஏய்த்தால், சிவசிவ மற்று என்செய்வாய், - ஏய்க்காது

நின்றாலும், பின் அதுதான் நீடும் கரி ஆனது
என்றால், அரகர, மற்று என்செய்வாய், - நன்றாக

ஒன்று ஒருசார் நில் என்றால் ஓடுகின்ற நீ, அதனை
என்றும் புரப்பதனுக்கு என் செய்வாய், - வென்றியொடு

பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்
ஈர்த்துப் பறிக்கில் அதற்கு என்செய்வாய், - பேர்த்தெடுக்கக்

கை புகுத்தும் கால் உள் கருங்குளவி செங்குளவி
எய் புகுத்தக் கொட்டிடில் மற்று என்செய்வாய், - பொய்புகுத்தும்

பொன்காவல் பூதம் அது போய் எடுக்கும் போது, மறித்து
என்காவல் என்றால், மற்று என்செய்வாய், - பொன்காவல்

வீறுங்கால், ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்
ஏறுங்கால் மற்று அதனுக்கு என்செய்வாய், - மாறும்சீர்

உன்நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன்
இன்னே வருவன் அதற்கு என்செய்வாய், - முன் ஏதும்

இல்லா நமக்கு, ண்டோ இல்லையோ என்னும் நலம்
எல்லாம் அழியும் அதற்கு என்செய்வாய், - நில்லாமல்

ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கல் அது
பாய்ந்து ஓடிப் போவது நீ பார்த்திலையே, - ஆய்ந்தோர்சொல்

கூத்து ஆட்டு அவைசேர் குழாம்விளிந்தால் போலும் என்ற
சீர்த்தாள் குறள்மொழியும் தேர்ந்திலையே.........

.....       .....       .....       .....       இந்நிலத்தில்

நீள்மயக்கம் பொன்முன் நிலையாய் உலகியலாம்
வீண்மயக்கம் என்று அதனை விட்டிலையே - நீள்வலயத்து

இச்செல்வம் இன்றி இயலாதேல், சிற்றுயிர்கள்
எச்செல்வம் கொண்டு இங்கு இருந்தனவே - வெச்சென்ற

மண்ணாசை கொண்டனை நீ, மண்ணாளும் மன்னர் எலாம்
மண்ணால் அழிதல் மதித்திலையே - எண்ணாது

மண்கொண்டார் மாண்டார்தம் மாய்ந்தஉடல் வைக்க, அயல்
மண்கொண்டார் தம்இருப்பில் வைத்திலரே, - திண்கொண்ட

விண்ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டுபிடி
மண்ணேனும் கொண்டு ஏக வல்லாரோ - மண்நேயம்

என்னது என்றான் முன்ஒருவன், என்னது என்றான் பின்ஒருவன்
இன்னது நீ கேட்டு இங்கு இருந்திலையோ - மன் உலகில்

கண்காணி யாய்நீயே காணி அல்லாய், நீ இருந்த
மண்காணி என்று மதித்தனையே, - கண்காண

மண்காணி வேண்டி வருந்துகின்றாய் நீ, மேலை
விண்காணி வேண்டல் வியப்பு அன்றே, - எண்காண

அந்தரத்தில் நின்றாய் நீ, அந்தோ? நினை விட மண்
அந்தரத்தில் நின்றது அறிந்திலையே - தந்திரத்தில்

மண்கொடுப்பேன் என்று உரைக்கில் வைவார் சிறுவர்களும்,
மண்கொடுக்கில் நீதான் மகிழ்ந்தனையே, - வண்கொடுக்கும்

வீடு என்றேன், மற்று அதை மண் வீடு என்றே நீ நினைந்தாய்,
வீடு என்ற சொல்பொருளை விண்டிலையே, - நாடொன்றும்

மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடு அனைத்தும்
கண்ணாரக் கட்டு அழிதல் கண்டிலையோ, - மண்ணான

மேல்வீடும், அங்குடைய வேந்தர்களும், மேல்வீட்டு அப்
பால்வீடும் பாழாதல் பார்த்திலையோ, - மேல்வீட்டில்

ஏறுவனே என்பாய், இயமன் கடா மிசை வந்து
ஏறுவனேல், உன் ஆசை என் ஆமோ, - கூறிடும்இம்

மண்அளித்த வேதியனும் மண்விருப்பம் கொள்ளானேல்,
எண்ணம் உனக்கு எவ்வாறு இருந்ததுவே, - மண்ணிடத்தில்

ஆகாத் துரும்பு இடத்தும் ஆசைவைத்தாய் என்னில் உன்தன்
ஏகாப் பெருங்காமம் என்சொல்கேன்....         ---  திருவருட்பா.


முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு
பிடிசாம்பராய் வெந்து மண் ஆவதும் கண்டு, பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால், பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இல்லையே.    --- பட்டினத்தார்.

தண்டிகை பல்லக்கு உடனே சகல சம்பத்துகளும்
உண்டு என்று நம்பி உணர்வு அழிந்தேன் பூரணமே.                      --- பட்டினத்தார்.

பட்டு உடையும், பொன்பணியும், பாவனையும், தீவினையும்
விட்டு விட்டு உன் பாதம் விரும்புவது எக்காலம்.
தண்டிகையும், சாவடியும், சாளிகையும், மாளிகையும்
கண்டு களிக்கும் கருத்து ஒழிவது எக்காலம்.                             --- பத்ரகிரியார்.

செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்,
கல்வியில் சிறந்தோர், கடுந்திறல் மிகுந்தோர்,
கொடையில் பொலிந்தோர், படையில் பயின்றோர்,
குலத்தின் உயர்ந்தோர், நலத்தினின் வந்தோர்,
எனையர் எம் குலத்தினர் இறந்தோர், அனையவர்
பேரும் நின்றில போலும், தேரின்
நீயும் அஃது அறிதி அன்றே, மாயப்
பேய்த் தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக்
கனவே போன்றும் நனவுப் பெயர் பெற்ற
மாய வாழ்க்கையை மதித்து, காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதி, பொல்லாத்
தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும்...                    --- பதினோராம் திருமுறை.

எந்தை நின் திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்,
யாவையும் எனக்குப் பொய் எனத் தோன்றி,
மேவரும் நீயே மெய் எனத் தோன்றினை,
ஓவியப் புலவன் சாயல் பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர் தமக்குச்
சுவராய்த் தோன்றும் துணிவு போன்று எனவே.        --- பதினோராம் திருமுறை.

தினமணி ---

தினம் - நாள்.

மணி - விளக்குவது. நன்மை தருவது.

மண்ணுதல் - விளக்குதல்.

நாள்தோறும் தனது ஒளியால் உயிர்கள் விளக்கமும், வளர்ச்சியும் பெறத் துணை புரிவதால், சூரியனுக்கு "தினமணி" எனப் பெயர் உண்டாயிற்று.

சார்ங்க பாணி ---

பாணி - கை.

சார்ங்கம் என்னும் வில்லைத் தனது திருக்கையில் தரித்துள்ள திருமால்.

திருமால் காத்தல் தொழில் புரிபவர்.

இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட ---

வயிரயர் - பாணர், புகழ்ந்து பாடுவோர்.

அரசர்களையும் பொருள் மிகப் படைத்தவர்களையும் பாணர்கள் புகழ்ந்து இன்னிசைப் பாடல்களால் பாடுவர். "சேர்ந்து பாட" என்பதால், பாணர்கள் பலரும் கூடிப் பாடுவதை உணர்த்தி நின்றது.


இருபாலும் இனவளை பூண்கையார் கவரி இட ---

இன வளை - வளையல் வகைகள்.

கவரி - சாமரை.

செல்வ போகத்திலும், அசர போகத்திலும் உள்ளவர்களுக்கு,  இரு பக்கங்களிலும் இருந்து இளமாதர்கள் சாமரம் வீசுவார்கள்.

மாலை வேய்ந்து ---

அழகிய நறுமணம் மிக்க மலர்களால் ஆன மாலைகளைத் தமது தோள்களில் அணிந்து கொள்வார்கள்.

புழுகு அகில் சாந்து பூசி ---

புழுகு, அகில், சந்தனம் ஆகிய மணப் பொருள்களை உடலெங்கும் பூசிக் கொள்வார்கள். இது செல்வச் செழிப்பைக் குறிக்கும்.

அரசு ஆகி, இனிது இறுமாந்து வாழும், இருவினை நீண்ட காயம் ஒரு பிடி சாம்பல் ஆகி விடலாமோ  ---

பிறவிகள் தோறும் ஈட்டிய நல்வினை என்னும் புண்ணியம், தீவினை என்னும் பாவம் ஆகிய இருவினைகளின் பயனாக இந்த உடம்பானது இறைவனால் படைத்தளிக்கப்படுகின்றது. இருவினைகளை அனுபவித்துக் கழித்து, மேலும் வினைகள் சாராமல் வாழ்ந்து, இறைவன் திருவடியைச் சார்வதற்காக வந்த இந்த அருமையான உடம்பு நிலையில்லாதது. மாற்றத்திற்கு உரியது. "வேற்று விகார விடக்கு உடம்பு" என்றார் மணிவாசகப் பெருமான். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது.

"ஐந்து வகை ஆகின்ற பூதபேதத்தினால் ஆகின்ற யாக்கை நீர்மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம், புந்தி மகிழ்வுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன்" என்றார் தாயுமானார்.

இந்த உடம்பே நன்மை தீமைகளை அறியத் துணை நிற்பது. உய்யும் நெறியில் நின்று, வினைகள் சாவியாகிப் போகுமாறு வாழ்ந்து ஈடேற வேண்டும். ஆவி சாவியாகிப் போக விடுதல் திருவருட்கு உடம்பாடானது அல்ல. உடம்பை உண்மை என்று கருதுகின்ற அறியாமை நீங்கவேண்டும். குரங்கின் கையில் அகப்பட்ட மாலை போல இந்த உடலின் அருமை அறியாது, இதனை வீணாக்கக் கூடாது.

எல்லாப் படியாலும் எண்ணினால், இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை, - நல்லார்
அறிந்திருப்பார், ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு.                 --- நல்வழி.

"பஞ்சுஇட்ட அணைமிசை
கொஞ்சி, பலபல விஞ்சைச் சரசமொடு
          அணைத்து, மலர் இதழ் கடித்து, இருகரம்
          அடர்த்த குவிமுலை அழுத்தி, உரம் மிடர்
     சங்குத் தொனியொடு பொங்க, குழல்மலர்
     சிந்த, கொடிஇடை தங்கிச் சுழல்இட,
          சரத் தொடிகள் வெயில் ஏறிப்ப, மதிநுதல்
          வியர்ப்ப, பரிபுரம் ஒலிப்ப, எழுமத
     சம்பத்து இது செயல் இன்பத்து இருள்கொடு,
     வம்பில் பொருள்கள் வழங்கிற்று, து பினை
          சலித்து, வெகு துயர் இளைப்பொடு உடல்பிணி
          பிடித்தி, னைவரும் நகைப்ப, கருமயிர் ......நரைமேவி,

தன் கைத் தடிகொடு, குந்தி கவி என,
உந்திக்கு அசனமும் மறந்திட்டு, ளமிக
          சலித்து, உடல் சலம் மிகுத்து, மதிசெவி
          விழிப்பு மறைபட, கிடத்தி, மனையவள்
     சம்பத்து உறைமுறை அண்டைக் கொளுகையில்,
     சண்டக் கரு நமன் அண்டி, கொளு கயிறு
          எடுத்து, விசைகொடு பிடித்து, உயிர்தனை
          பதைப்ப, தனிவழி அடித்து கொடு செல,
சந்தித்து அவர் அவர் பங்குக்கு அழுது,
இரங்க, பிணம் எடும் என்றிட்டு, றை பறை
          தடிப்ப, சுடலையில் இறக்கி, விறகொடு
          கொளுத்தி, ஒருபிடி பொடிக்கும் இலை எனும்...... உடல் ஆமோ?"

என்கின்றார் திருவண்ணாமலைத் திருப்புகழில் அடிகளார்.

தாயுமான அடிகளார் புலம்புவது காண்க.

ஐம்பூதத்தாலே அலக்கு அழிந்த தோடம் அற
    எம்பூத நாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ?

சத்த முதலாம் புலனில் சஞ்சரித்த கள்வர் எனும்
    பித்தர் பயம் தீர்ந்து பிழைக்கும் நாள் எந்நாளோ?

 நாளும் பொறிவழியை நாடாத வண்ணம் எமை
    ஆளும் பொறியால் அருள் வருவது எந்நாளோ?

வாக்கு ஆதி ஆன கன்ம மாயை தம்பால் வீண்காலம்
    போக்காமல் உண்மை பொருந்தும் நாள் எந்நாளோ?

மனம் ஆன வானரக் கைம் மாலை ஆக்காமல்
    எனை ஆள் அடிகள் அடி எய்துநாள் எந்நாளோ?

வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணம், மனக்
    காட்டைத் திருத்திக் கரை காண்பமது எந்நாளோ?

உந்து பிறப்பு இறப்பை உற்றுவிடாது, எந்தை அருள்
    வந்து பிறக்க மனம் இறப்பது எந்நாளோ?

புத்தி எனும் துத்திப் பொறி அரவின் வாய்த்தேரை
    ஒத்துவிடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ?

ஆங்காரம் என்னும் மத யானை வாயிமல் கரும்பாய்
    ஏங்காமல், எந்தை அருள் எய்தும்நாள் எந்நாளோ?

சித்தம் எனும் பௌவத் திரைக்கடலில் வாழ் துரும்பாய்
    நித்தம் அலையாது அருளில் நிற்கும்நாள் எந்நாளோ?

வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டு ஓடச்
    சுத்தபர போகத்தைத் துய்க்கும் நாள் எந்நாளோ?

 சுத்தவித்தையே முதலாத் தோன்றும் ஓர் ஐந்துவகைத்
    தத்துவத்தை நீங்கி, அருள் சாரும் நாள் எந்நாளோ?

பொல்லாத காமப் புலைத்தொழிலில் என் அறிவு
    செல்லாமல், நன்னெறியில் சேரும் நாள் எந்நாளோ?

அடிகள் அடிக் கீழ்க்குடியாய் யாம்வாழா வண்ணம்
    குடிகெடுக்கும் பாழ் மடிமைக் கூறு ஒழிவது எந்நாளோ?

ஆன புறவிக்கருவி ஆறுபத்தும் மற்று உளவும்
    போன வழியும் கூடப் புல் முளைப்பது எந்நாளோ?

அந்தகனுக்கு எங்கும் இருள் ஆனவாறு, அறிவில்
    வந்தஇருள் வேலை வடியும் நாள் எந்நாளோ?

புன்மலத்தைச் சேர்ந்து, மலபோதம் பொருந்துதல் போய்,
    நின்மலத்தைச் சேர்ந்து, மலம் நீங்கும் நாள் எந்நாளோ?

கண்டுகண்டும் தேறாக் கலக்கம் எல்லாந் தீர்வண்ணம்
    பண்டைவினை வேரைப் பறிக்கும் நாள் எந்நாளோ?

பைங்கூழ் வினைதான் படுசாவியாக, எமக்கு
    எம் கோன் கிரண வெயில் எய்தும்நாள் எந்நாளோ?

குறித்தவிதம் ஆதியால் கூடும்வினை எல்லாம்
    வறுத்த வித்து ஆம் வண்ணம்அருள் வந்திடும்நாள் எந்நாளோ?

சஞ்சிதமே ஆதி சரக்கு ஆன முச்சேறும்
    வெந்த பொரியாக அருள் மேவும் நாள் எந்நாளோ?

தேகம் முதல் நான்காத் திரண்டு ஒன்றாய் நின்று இலகும்
    மோகம் மிகு மாயை முடியும் நாள் எந்நாளோ?

சத்த முதலாத் தழைத்து இங்கு எமக்கு உணர்த்தும்
    சுத்தமா மாயை தொடக்கு அறுவது எந்நாளோ?

எம்மை வினையை இறையை எம்பால் காட்டாத
    அம்மை திரோதை அகலும் நாள் எந்நாளோ?

நித்திரையாய் வந்து நினைவு அழிக்கும் கேவலமாம்
    சத்துருவை வெல்லும் சமர்த்து அறிவது எந்நாளோ?

சன்னல் பின்னல் ஆன சகலம் எனும் குப்பை இடை
    முன்னவன் ஞானக்கனலை மூட்டும் நாள் எந்நாளோ?

மாயா விகார மலம் ஒழி சுத்த அவத்தை
    தோயா அருளைத் தொடரும் நாள் எந்நாளோ?

உடம்பு அறியும் என்னும் அந்த ஊழல் எல்லாம் தீரத்
    திடம்பெறவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

செம்மை அறிவால் அறிந்து தேக ஆதிக்கு உள் இசைந்த
    எம்மைப் புலப்படவே யாம் அறிவது எந்நாளோ?

தத்துவமாம் பாழ்த்த சட உருவைத் தான் சுமந்த
    சித்து உருவாம் எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

பஞ்சப் பொறியை, உயிர் என்னும் அந்தப் பஞ்சம் அறச்
    செஞ்செவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

அந்தக் கரணம் உயிராம் என்ற அந்தரங்க
    சிந்தைக் கணத்தில் எம்மைத் தேர்ந்து அறிவது எந்நாளோ?

முக்குணத்தைச் சீவன்ரென்னும் மூடத்தை விட்டு, அருளால்
    அக்கணமே எம்மை அறிந்து கொள்வது எந்நாளோ?

காலைஉயிர் என்னும் கலாதிகள் சொற் கேளாமல்
    சீலமுடன் எம்மைத் தெளிந்துகொள்வது எந்நாளோ?

  வான்கெடுத்துத் தேடும் மதிகேடர் போல, எமை
    நான்கெடுத்துத் தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ?


வனசரர் ஏங்க, வான முகடு உற ஓங்கி, ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக, மயிலொடு மான்கள் சூழ, வளவரி வேங்கை ஆகி மலைமிசை தோன்று மாய வடிவோனே  ---

வனம் - காடு.

சரர் - சஞ்சரிப்போர்.

காட்டிலே சஞ்சரிப்பவர்களாகிய வேடர்கள் திகைப்பு அடையும்படி, ஆசையாக அவ்வேடர்கள் வளர்த்த மயிலாகிய வள்ளிநாயகியும் அவரது தோழிமார்களும் அருகே இருக்க மயில்களும் மான்களும் சூழ்ந்து இருக்க, வான் ஆளாவ ஓங்கி வளர்ந்து, செழித்து, வரிகளோடு வளர்ந்த வேங்கை மரமாகி  வள்ளிமலை மீது தோன்றிய மாய வடிவத்தினர் முருகப் பெருமான்.

தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை
     வேங்கை மரத்து எழிலைக் கொடு நிற்பவ!          --- (கூந்தல்) திருப்புகழ்.

எல்லாம் ல்ல பரம்பொருளாகிய எம்பெருமான் வேங்கை மரமாய் நின்றதன் உண்மையைக் கந்தபுராணம் விளக்குமாறு காண்க.

ஆங்கு அது காலை தன்னில், அடி முதல் மறைகள் ஆக,
ஓங்கிய நடுவண் எல்லாம் உயர் சிவநூல் அது ஆக,
பாங்கு அமர் கவடு முற்றும் பல் கலை ஆக, தான் ஓர்
வேங்கையின் உருவம் ஆகி வேல்படை வீரன் நின்றான்.         --- கந்தபுராணம்.

வேங்கை மரத்தின் அடியும் முடியும் வேதவடிவமானது. அதன் நடுப்பகுதி சிவநூல்களால் ஆனது. அதன் கிளைகள் பலவகையான கலைகளைத் தெரிவிப்பது.


கன சமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க, நீறு கருணைகொள் பாண்டி நாடு பெற, வேதக் கவிதரு காந்த ---

கனம் - கூட்டம். இங்கு இச்சொல் பெருமையைக் குறித்து வந்ததல்ல.

மூங்கர் - உமையர்கள்.

உண்ணும்போது உரையாடாதவர்கள் சமணர்கள் என்பது ஒன்று. அருள்நூல்களை ஓதித் தெளிவு பெற்று, பிறருக்கு உரையாதவர்கள் என்பது ஒன்று.

நின்றுஉண்சமணர் இருந்துஉண் தேரர் நீண்ட போர்வையார்
ஒன்றும் உணரா ஊமர்வாயில் உரைகேட்டு உழல்வீர்காள்
கன்றுஉண் பயப்பால் உண்ணமுலையில் கபாலம்அயல்பொழியச்
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  --- திருஞானசம்பந்தர்.

"எத்தைக்கொண்டு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து, எனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்து என்னக் கோகுசெய்தாய்.
முத்தில் திரளும் பளிங்கினில் சோதியும் மொய்பவளத்
தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில்கச்சி ஏகம்பனே".       ---  அப்பர்.

காந்தன் - இறைவன், அரசன், தலைவன்.

திருஞானசம்பந்தப் பெருமான்
சமணர்களை வாதில் வெற்றி கொண்டு,
பாண்டி நாட்டில் தெய்வத் திருநீற்று ஒளி பரவச் செய்தது.

"வேதம் படியாப் பாதகர், பாய்அன்றி உடாப் பேதைகள், கேசம் பறி கோப்பாளிகள் யாரும் கழு ஏற" என்றார் திருவோத்தூர்த் திருப்புகழில். பாயை இடுப்பில் அணிந்தவர்களும், தலைமயிரை மழித்தல் கூடாது என்று பறிப்பவர்களும் ஆகிய
சமணர்கள் மிகுதியா, கூடல் நகரம் என்னும் மதுரையம்பதியில் வாழ்ந்திருந்தனர். அந்நாளில் பாண்டி நாட்டில் சமணம் பெருகி, சைவம் அருகியது. மன்னனும் சமணன் ஆனான். குடிகளும் மன்னன் வழி நின்றனர். பாண்டி நாடு செய்த பெருந்தவத்தால், பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் ஆகிய குலச்சிறை நாயனாரும் சைவநெறிநில் ஒழுகி வந்தனர். பாண்டி நாட்டிற்கு சமணர்களால் விளையும் கேட்டினை நினைந்து வருந்தி வந்தனர். சமணர்களின் வஞ்சனை மிகுந்தது. அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருந்ததை அறிந்து ஒற்றர்களை அனுப்பி, பாண்டி நாட்டிற்கு எழுந்தருள வேண்டினர். பிள்ளையாரும், இறையருளைப் பெற்று, பாண்டி நாட்டிற்கு எழுந்தருள உடன்பட்டார்.

மதுரையம்பதிக்குத் திருஞானசம்பந்தர் வருகையும், அடியார்கள் முழக்கமும் சமணர்களுக்குப் பொறாமையை ஊட்டியது. அவர்களுக்குப் பல துர் நிமித்தங்களும், தீய கனவுகளும் தோன்றின. எல்லோரும் ஓரிடத்தல் கூடி பாண்டிய மன்னனைக் காணச் சென்றார்கள். மன்னனிடம், "உமது மதுராபுரியில் இன்று சைவ வேதியர்கள் மேவினார்கள். நாங்கள் கண்டு முட்டு" என்றார்கள். மதி இல்லாத மன்னவனும், "கேட்டு முட்டு" என்றான். "இதற்கு என்ன செய்வது என்று அவர்களையே கேட்டான். மதிகெட்ட மன்னனின் கீழ் வாழும் மதிகெட்ட சமணர்களும், "மந்திரத்தால் தீயிட்டால், அவன் தானே ஓடிவிடுவான்" என்றார்கள். மன்னனும் உடன்பட்டான்.

சமணர்கள், பிள்ளையார் எழுந்தருளி இருந்த மடத்தில் தீயை மூட்ட மந்திரத்தை செபித்தார்கள். பலிக்கவில்லை. திரும்பிப் போனால் மன்னன் மதிக்கமாட்டான் என்று எண்ணி, கையிலே தீக்கோலைக் கொண்டு மடத்திற்குத் தீயை மூட்டினார்கள். மன்னன் அரசாட்சி வழுவியதால் வந்த தீது இது என்று உணர்ந்த திருஞானசம்பந்தப் பெருமானார், தம்மை மதுரையம்பதிக்கு வரவழைத்த மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணைப் பாதுகாக்கவும், குலச்சிறை நாயனாரின் அன்பை நினைந்தும், மன்னவன் தனது தவறை உணர்ந்து மீண்டும் சிவநெறியை அடையவேண்டும் என்பதை உணர்ந்தும், "அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று திருப்பதிகம் பாடி வேண்டினார்.

சமணர்கள் மடத்தில் இட்ட தீயானது, மெதுவாகச் சென்று, பாண்டியன் உடம்பில் வெப்பு நோயாகப் பற்றியது. இதைக் கேட்ட சமணர்கள் மன்னனை அடைந்து, தமது கையில் உள்ள மயிற்பீலியால் மன்னனின் உடலைத் தடவி, குண்டிகை நீரை மந்திரித்துத் தெளித்தார்கள். அந்த நீர் நெருப்பில் சொரிந்த நெய்யைப் போல, வெப்பு நோய் பின்னும் மிகுவதற்கே ஏதுவானது.

பாண்டி மாதேவியாரும், குலச்சிறையாரும் மன்னனை வணங்கி, "சமணர்கள் இட்ட தீயே வெப்பு நோயாகி உம்மை வருத்துகின்றது. உடல் மாசும், உள்ளத்தில் மாசும் உடைய இவர்களால் இதைத் தீர்க்க முடியாது. இறைவன் திருவருளைப் பெற்ற திருஞானசம்பந்தப் பெருமான் வந்து பார்த்து அருளினாலே, மன்னனைப் பற்றியுள்ள இந்த நோய் மட்டும் அல்லாது அவனது பிறவி நோயும் அகன்று விடும்" என்றார்கள்.

திருஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரம் செவியில் நுழைந்த உடனே, சிறிது அயர்வு நீங்கப் பெற்ற மன்னன், "சமணர்களின் தீச் செயலே இந்த நோய்க்கு மூலம் போலும்" என்று எண்ணி, "திருஞானசம்பந்தரை அழைத்து வாருங்கள். எனது நோயைத் தீர்ப்பவர் பக்கம் நான் சேர்வேன்" என்றான்.

மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் வேண்ட, திருஞானசம்பந்தர் மன்னனின் திருமாளிகைக்கு எழுந்தருளினார். மன்னன் தனது முடியின் பக்கத்தில் பொன்னால் ஆன ஆசனத்தை இடுமாறு பணிக்க, அந்த ஆசனத்தில் எழுந்தருளினார் சுவாமிகள். சமணர்கள் வெகுண்டனர். "நீங்கள் இருவரும் உங்கள் தெய்வ வலிமையால் எனது நோயைத் தீருங்கள். தீர்த்தவர் வென்றவர் ஆவர்" என்றான். சமணர்கள் "எங்கள் தெய்வ வல்லமையால் இடப்பக்கத்து நோயைத் தீர்ப்போம்" என்று அருக நாமத்தை முழக்கி, மயில் பீலியால் உடம்பைத் தடவினார்கள். பீலி வெந்தது. மன்னனைப்    பற்றிய வெப்பு நோய் மேலும் முறுகியது. ஆற்ற முடியாதவனாய் மன்னன் திருஞானசம்பந்தரைப் பார்த்தான்.

ஆலவாய்ச் சொக்கனை நினைந்து, "மந்திரமாவது நீறு" என்னும் திருப்பதிகத்தைப் பாடி, திருஞானசம்பந்தப் பெருமான் பாண்டியனின் வலப்பக்கத்தில் தடவினார். வலப்பக்கம் நோய் நீங்கிக் குளிர்ந்தது. தனது உடம்பிலேயே, ஒரு பக்கம் நரகத் துன்பத்தையும், ஒரு பக்கம் வீட்டின்பத்தையும் அனுபவித்தான் மன்னன். "அடிகளே! எனது இடப்பக்க நோயையும் தீர்த்து அருள் செய்யும்" என வேண்டினான். பெருமான் அப் பக்கத்தையும் தமது திருக்கைகளால் திருநீறு கொண்டு தடவ, வெப்பு நோய் முழுதும் நீங்கியது.

மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும், பிள்ளையார் திருவடிகளில் விழுந்து வணங்கி, "நாங்கள் பெருமை உற்றோம். பெறுதற்கு அரிய பேற்றைப் பெற்றோம். மன்னனும் பிறவா மேன்மை உற்றார்" என்றனர். "ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்" என்று மன்னனும் பெருமானாருடைய திருப்பாதங்களில் பணிந்தான்.

"பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும், முன்னம்
சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும், தென்னர் கோமான்,
"இற்றை நாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும்,
தெற்று எனத் தீர்த்தார் வாதில் வென்றனர்" என்று செப்ப".

"மன்னவன் மாற்றம் கேட்டு, வடிவுபோல் மனத்து மாசு
துன்னிய அமணர், தென்னர் தோன்றலை நோக்கி, "நாங்கள்
உன் உடம்பு அதனில் வெப்பை ஒருபுடை வாம பாகம்
முன்னம் மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும்" என்றார்".

"யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணையச் சென்று
வாதினில் மன்னவன் தன் வாம பாகத்தைத் தீர்ப்பார்
மீது தம் பீலி கொண்டு தடவிட, மேன்மேல் வெப்புத்
தீது உறப் பொறாது, மன்னன் சிரபுரத்தவரைப் பார்த்தான்".

"தென்னவன் நோக்கம் கண்டு திருக் கழுமலத்தார் செல்வர்
"அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய்த் தீர்ப்பது" என்று
பன்னிய மறைகள் ஏத்தி, பகர் திருப்பதிகம் பாடி".

"திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவ, தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையில் குளிர்ந்தது அப்பால்,
மருவிய இடப்பால் மிக்க அழல் எழ மண்டு தீப்போல்
இருபுடை வெப்பும் கூடி இடங்கொளாது என்னப் பொங்க".

"உறியுடைக் கையர், பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்திச்
செறிமயில் பீலி தீயத் தென்னன் வெப்பு உறு தீத் தம்மை
எறியுமா சுடலும்,  கன்றி அருகு விட்டு ஏற நிற்பார்,
அறிவு உடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார்".

"பலர் தொழும் புகலி மன்னர் ஒருபுடை வெப்பைப் பாற்ற,
மலர்தலை உலகின் மிக்கார் வந்து அதிசயித்துச் சூழ,
இலகுவேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே".

"மன்னவன் மொழிவான், "என்னே மதித்த இக் காலம் ஒன்றில்
வெந்நரகு ஒருபால் ஆகும், வீட்டு இன்பம் ஒருபால் ஆகும்;
துன்னு நஞ்சு ஒருபால் ஆகும், சுவை அமுது ஒருபால் ஆகும்;
என் வடிவு ஒன்றில் உற்றேன் இருதிறத்து இயல்பும்" என்பான்".

"வெந்தொழில் அருகர்! தோற்றீர், என்னை விட்டு அகல நீங்கும்,
வந்து எனை உய்யக் கொண்ட மறைக் குல வள்ளலாரே!
இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர்" என்று
சிந்தையால் தொழுது சொன்னான் செல்கதிக்கு அணியன் ஆனான்.

"திருமுகம் கருணை காட்ட, திருக்கையால் நீறு காட்டி,
பெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றி, பின்னும்
ஒருமுறை தடவ, அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று, பாகம்
மருவு தீப் பிணியும் நீங்கி, வழுதியும் முழுதும் உய்ந்தான்".
        
"கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும், தீங்கு
செற்றவர் செய்ய பாதத் தாமரை சென்னி சேர்த்து,
"பெற்றனம் பெருமை, இன்று பிறந்தனம், பிறவா மேன்மை
உற்றனன் மன்னன்" என்றே உளம் களித்து உவகை மிக்கார்".

"மீனவன் தன்மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற,
ஆன பேரின்பம் எய்தி, உச்சிமேல் அங்கை கூப்பி,
மானம் ஒன்று இல்லார் முன்பு வன்பிணி நீக்க வந்த
ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்" என்றான்.           --- பெரியபுராணம்.

மதுரையின் மீதுஆல வாயினில்
எதிர் அமணார் ஓர் எணாயிரர்
     மறிகழு மீது , நீறு  ...... பரந்து உலாவச்
செழியனும் ஆள்ஆக வாதுசெய்
கவிமத சீகாழி மாமுனி!
     சிவசிவ மாதேவ கா என ...... வந்துபாடும்
திருவுடையாய்! தீது இலாதவர்,
உமையொரு பால்ஆன மேனியர்,
     சிரகிரி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.          --- (அழுதழுது) திருப்புகழ்.

பால் அறாத் திரு வாயால் ஓதிய
     ஏடு நீர்க்கு எதிர் போயே, வாதுசெய்,
          பாடல் தொற்று, ரு நாலாம் ஆயிர ...... சமண்மூடர்
பாரின் மேல் கழு மீதே ஏறிட,
     நீறறு இடாத் தமிழ் நாடு ஈடேறிட,
          பாது காத்து அருளாலே கூன்நிமிர் ......இறையோனும்
ஞாலம் ஏத்தியது ஓர் மா தேவியும்,
     ஆலவாய்ப் பதி வாழ்வு ஆமாறு எணும்
          ஞான பாக்கிய பாலா! வேலவ! ...... மயில்வீரா!         --- (காலன்) திருப்புகழ்.

பவம் மாய்த்து ஆணது ஆகும் பனை காய்த்தே, மணம் நாறும்
     பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படி, வேதம்
படியாப் பாதகர், பாய்அன்றி உடாப் பேதைகள், கேசம்
     பறி கோப்பாளிகள் யாரும் ...... கழு ஏற,
சிவமாய்த் தேன் அமுது ஊறும் திருவாக்கால், ஒளி சேர்வெண்
     திருநீற்றால் அமர் ஆடும் ...... சிறியோனே!             ---  (தவர்வாள்) திருப்புகழ்.

சிறிய கர பங்கயத்து நீறு, ஒரு
     தினை அளவு சென்று பட்ட போதினில்
     தெளிய, இனி வென்றி விட்ட மோழைகள் ......கழு ஏற,
மகிதலம் அணைந்த அத்த!.........................                --- (நிகமம்) திருப்புகழ்.

பொறி உடைச் செழியன் வெப்பு ஒழிதர, பறிதலைப்
     பொறிஇல் அச் சமணர் அத் ...... தனைபேரும்
பொடிபட, சிவமணப் பொடி பரப்பிய, திருப்
     புகலியில் கவுணியப் ...... புலவோனே!                 --- (கிறிமொழி) திருப்புகழ்.

கருது சட்சமயிகட்கு அமைவுற, கிறி உடைப்
     பறிதலைச் சமணரை, குலமுதல் பொடிபடக்
     கலகம் இட்டு,  உடல் உயிர்க் கழுவின் உச்சியினில் வைத் ...... திடுவோனே!
                                                                                                --- (ஒருவரை) திருப்புகழ்.
  
பால கழுமல பூந்தராய, கவுணியர் வேந்த ---

குழந்தையாக வந்து கழுமலம் என்றும் பூந்தராய் என்றும் வழங்கப்படும் சீகாழியில் கவுணியர் குலத்திலே அவதரித்தவர் திருஞானசம்பந்தப் பெருமான்.

அழிந்து புவனம் ஒழிந்திடினும்
         அழியாத் தோணி புரத்தின்மறை
யவர்கள் குலத்தின் உதித்து, அரனோடு
         அம்மை தோன்றி அளித்த வள்ளச்

செழுந்தண் முலைப்பால் குடித்து, முத்தின்
         சிவிகை ஏறி மதுரையில் போய்,
செழியன் பிணியும், சமண் பகையும்,
         தேவி துயரும் தீர்த்து அருளி,

வழிந்து நறுந்தேன் உகுவனபோல்
         மதுரம் கனிந்து கடைதுடிக்க
வடித்துத் தெளிந்த செந்தமிழ்த் தே-
         வாரப் பாடல் சிவன் கேட்க

மொழிந்து சிவந்த கனிவாய்ச்சண்
         முகனே! முத்தம் தருகவே.
முத்துக் குமரா! திருமலையின்
         முருகா! முத்தம் தருகவே.       --- திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்.

தம்மைக் "கவுணியன்" என்றும், "கவுணியர் குலபதி" என்றும் திருஞானசம்பந்தப் பெருமான் நிறுவியுள்ளதைப் பின்வரும் அகச்சான்றுகளால் அறிக.

தேன்நயம் பாடும் சிராப்பள்ளி யானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்
ஞானசம் பந்தன் நலமிகுபாடல் இவைவல்லார்
வானசம் பந்தத்து அவரொடு மன்னி வாழ்வாரே.   ---  திருஞானசம்பந்தர்.

சிவன்உறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழ்இவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.                     ---  திருஞானசம்பந்தர்.

பெரியபுராணம் கூறும் பின்வரும் சான்றுகளையும் அறிக.

ஆன நாள்செல அருமறைக் கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும், நானிலம் உய்ய
ஏனை வெஞ்சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும்,
ஊனம் இல்புகழ் அடியர்பால் கேட்டு உவந்து உளராய். --- பெரியபுராணம்.

"சிவன் அருள் எனப்பெருகு சித்தம் மகிழ் தன்மை
இவண் இது நமக்கு வர எய்தியது என்?" என்பார்,
"கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான்
அவன் வரு நிமித்தம் இது என்று அதிசயித்தார்".
                                                                                                ---  பெரியபுராணம்.

கருத்துரை

முருகா! இந்த உடல் வீணில் அழியாமல்,
முத்திப் பயன் உற வாழ அருள் புரிவாய்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...