அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கொங்கு உலாவிய
(சீகாழி)
முருகா!
ஒன்றும் போதாத நாயேனை
ஆட்கொண்டு அருளிய பெருங்கருணையை
எக்காலத்தும் மறவாமல்
போற்றுவேன்.
தந்த
தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன ...... தனதான
கொங்கு
லாவிய குழலினு நிழலினு
நஞ்ச ளாவிய விழியினு மிரணிய
குன்று போல்வளர் முலையினு நிலையினு ..... மடமாதர்
கொம்பு
சேர்வன இடையினு நடையினு
மன்பு கூர்வன மொழியினு மெழில்குடி
கொண்ட சேயித ழமுதினு நகையினு ...... மனதாய
சங்கை
யாளியை அணுவிடை பிளவள
வின்சொல் வாசக மொழிவன இவையில
சம்ப்ர தாயனை அவலனை ஒளிதிக ......
ழிசைகூருந்
தண்டை
நூபுர மணுகிய இருகழல்
கண்டு நாளவ மிகையற விழியருள்
தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே
வங்க
வாரிதி முறையிட நிசிசரர்
துங்க மாமுடி பொடிபட வடவனல்
மங்கி நீறெழ அலகைகள் நடமிட ...... மயிலேறி
வஞ்ச
வேல்கொடு முனிபவ அழகிய
சண்பை மாநக ருறையுமொ ரறுமுக
வந்த
வானவர் மனதினி லிடர்கெட ...... நினைவோனே
பங்க
வீரியர் பறிதலை விரகினர்
மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர்
பந்த மேவிய பகடிகள் கபடிகள் ......
நிலைகேடர்
பண்பி
லாதவர் கொலைசெயு மனதின
ரிங்கெ ணாயிர ருயரிய கழுமிசை
பஞ்ச பாதகர் முனைகெட அருளிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
கொங்கு
உலாவிய குழலினும், நிழலினும்,
நஞ்சு அளாவிய விழியினும், இரணிய
குன்று போல்வளர் முலையினும், நிலையினும்,.....மடமாதர்
கொம்பு
சேர்வன இடையினும், நடையினும்,
அன்பு கூர்வன மொழியினும், எழில் குடி
கொண்ட சேய் இதழ் அமுதினும், நகையினும்..... மனது ஆய
சங்கை
ஆளியை, அணுஇடை பிளவுஅளவு
இன்சொல் வாசக மொழிவன இவை இல
சம்ப்ரதாயனை, அவலனை, ஒளிதிகழ் ...... இசைகூரும்
தண்டை
நூபுரம்அணுகிய இருகழல்
கண்டு, நாள் அவ மிகைஅற விழிஅருள்
தந்த பேரருள் கனவிலும் நனவிலும் ......
மறவேனே.
வங்க
வாரிதி முறையிட, நிசிசரர்
துங்க மாமுடி பொடிபட, வடஅனல்
மங்கி நீறு எழ, அலகைகள் நடம்இட, ...... மயில்ஏறி
வஞ்ச
வேல்கொடு முனிபவ! அழகிய
சண்பை மாநகர் உறையும் ஒர் அறுமுக!
வந்த வானவர் மனதினில் இடர்கெட ....நினைவோனே!
பங்க
வீரியர், பறிதலை விரகினர்,
மிஞ்சு பாதகர், அறநெறி பயன்இலர்,
பந்தம் மேவிய பகடிகள், கபடிகள், ...... நிலைகேடர்,
பண்பு
இலாதவர், கொலை செயும் மனதினர்,
இங்கு எணாயிரர் உயரிய கழுமிசை
பஞ்ச பாதகர் முனைகெட அருளிய ......
பெருமாளே.
பதவுரை
வங்க வாரிதி முறை இட --- கப்பல்கள்
உலவும் கடல் கோ என முறையிடவும்,
நிசிசரர் துங்க மாமுடி பொடிபட --- அசுரர்களின்
உயர்ந்த பெரிய முடிகள் பொடியாகவும்,
வட அனல் மங்கி நீறு எழ --- வடமுகாக்கினி
அடங்கிச் சாம்பலாகவும்,
அலகைகள் நடம் இட --- பேய்கள் நடனமாடவும்,
மயில் ஏறி --- மயில் வாகனத்தினை மீது
இவர்ந்து,
வஞ்சவேல் கொடு முனிபவ --- துட்டர்களை
வஞ்சித்து அழிக்கும் வேலாயுதத்தைக் கொண்டு கோபித்தவரே!
அழகிய சண்பை மாநகர்
உறையும் ஒர் அறுமுக --- அழகிய சண்பை மாநகரம் எனப்படும் சீகாழி என்னும்
திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் ஆறுமுகப் பரம்பொருளே!
வந்த வானவர் மனதினில் இடர்கெட நினைவோனே
--- உம்மிடத்தில் அடைக்கலம் புகுந்த தேவர்களின் மனதில் இருந்த துன்பம்
நீங்கும்படியாகத் திருவருள் பாலித்தவரே!
பங்க வீரியர் --- வலிமை
குன்றியவர்கள்,
பறி தலை விரகினர் --- தலைமயிரைப்
பறிப்பதில் வல்லவர்கள்,
மிஞ்சு பாதகர் --- மிகுதியாக பாவங்களைப்
புரிபவர்கள்,
அறநெறி பயன் இலர் --- அறநெறியின் பயன்
இல்லாதவர்கள்,
பந்தம் மேவிய பகடிகள் --- பற்றில்லாதவர்
போல் வேடம் காட்டுபவர்கள்,
கபடிகள் --- வஞ்சத் தன்மை உள்ளவர்கள்,
நிலை கேடர் --- தன்மையில் திரிந்தவர்கள்,
பண்பு இலாதவர் --- நற்பண்புகள்
இல்லாதவர்கள்,
கொலை செயும் மனதினர் --- கொலைப்
பாதகம் நினைப்பவர்கள்,
இங்கு எணாயிரர் --- இங்கு மதுரையில்
இருந்து எட்டாயிரம் சமணர்களும்,
உயரிய கழுமிசை --- உயர்ந்த கழுவில்
ஏறியதனால்,
பஞ்சபாதகர் முனைகெட அருளிய பெருமாளே ---
ஐம்பெரும் பாவங்களைப் புரிந்த அவர்களின் வலிமை அழிந்து போகும்படியாகத் திருவருள்
புரிந்த பெருமையில் மிக்கவரே!
கொங்கு உலாவிய
குழலினும் நிழலினும் --- நறுமணம் வீசும் கூந்தலிலும் அதன் பொலிவிலும்,
நஞ்சு அளாவிய விழியினும் --- விஷம்
கலந்த கண்களிலும்,
இரணிய குன்று போல் வளர் முலையினும் ---
பொன்குன்று போல வளர்ந்துள்ள முலைகளிலும்,
நிலையினும் --- அவர்கள் நிற்கின்ற
நிலையிலும்,
மடமாதர் கொம்பு சேர்வன இடையினும் ---
அழகிய இளமாதர்களின் கொடி போன்ற மெல்லிய வனப்பு மிக்க இடுப்பிலும்,
நடையினும் --- அவர்கள் நடக்கின்ற நடையிலும்,
அன்பு கூர்வன மொழியினும்
--- அன்பு கூர்ந்து பேசுகின்ற பேச்சிலும்,
எழில் குடி கொண்ட சேய் இதழினும்
நகையினும் --- அழகு குடிகொண்ட சிவந்த வாயிதழிலும், அவர்களுடைய சிரிப்பிலும்
மனது ஆய சங்கையாளியை --- மனமானது பொருந்திய
எண்ணம் உடைய எனக்கு,
அணு இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன
இவை இல சம்ப்ரதாயனை --- அணு அளவேனும், அல்லது அதன் பிளவு அளவேனும் இனிய சொற்களைப்
பேசுவதே இல்லாததை வழக்கமாகக் கொண்டவனும்,
அவலனை --- வீணனும் ஆகிய அடியேனுக்கு,
ஒளி திகழ் இசை கூரும்
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு --- ஒளி விளங்குவதும், புகழ் மிகுந்ததும் ஆகிய தண்டையும்
சிலம்பும் அணிந்துள்ள தேவரீரது இரண்டு திருவடிகளைக் கண்ணாரக் காணும்படியும்,
நாள் அவம் மிகை அற --- அடியேனது
வாழ்நாள் வீணாகப் பெருகுதல் இல்லாமற்படிக்கும்,
விழி அருள் தந்த பேர் அருள் ---
திருக்கண்ணோக்கம் வைத்துப் புரிந்த பேரருளை
கனவிலும் நனவிலும் மறவேனே ---
கனவிலும் நனவிலும் மறக்க மாட்டேன்.
பொழிப்புரை
கப்பல்கள் உலவும் கடல் கோ என முறையிடவும், அசுரர்களின்
உயர்ந்த பெரிய முடிகள் பொடியாகவும், வடவை
அனலானது அடங்கிச் சாம்பலாகவும்,
பேய்கள்
நடனமாடவும், மயில் வாகனத்தினை
மீது இவர்ந்து, துட்டர்களை வஞ்சித்து
அழிக்கும் வேலாயுதத்தைக் கொண்டு கோபித்தவரே!
அழகிய சண்பை மாநகரம் எனப்படும் சீகாழித்
திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் ஆறுமுகப் பரம்பொருளே!
உம்மிடத்தில் அடைக்கலம் புகுந்த தேவர்களின்
மனதில் இருந்த துன்பம் நீங்கும்படியாகத் திருவருள் பாலித்தவரே!
வலிமை குன்றியவர்களும், தலைமயிரைப் பறிப்பதில் வல்லவர்களும், மிகுதியாக பாவங்களைப் புரிபவர்களும், அறநெறியின்
பயன் இல்லாதவர்களும், பற்றில்லாதவர் போல்
வேடம் காட்டுபவர்களும், வஞ்சத் தன்மை
உள்ளவர்களும், மனிதத்
தன்மையில்
திரிந்தவர்களும், நற்பண்புகள்
இல்லாதவர்களும், கொலைப் பாதகத்தை
எண்ணும் மனத்தினை உடையவர்களுமாக, இங்கு மதுரையில் இருந்த எட்டாயிரம்
சமணர்களும், உயர்ந்த கழுவில்
ஏறியதனால், ஐம்பெரும் பாவங்களைப்
புரிந்த அவர்களின் வலிமை அழிந்து போகும்படியாகத் திருவருள் புரிந்த பெருமையில்
மிக்கவரே!
நறுமணம் வீசும் கூந்தலிலும் அதன் பொலிவிலும், விஷம் கலந்த கண்களிலும், பொன்குன்று போல வளர்ந்துள்ள முலைகளிலும், அவர்கள் நிற்கின்ற நிலையிலும், அழகிய இளமாதர்களின் கொடி போன்ற
மெல்லிய வனப்பு மிக்க இடுப்பிலும்,
அவர்களது நடையிலும், அன்பு கூர்ந்து அவர்கள் பேசுகின்ற
பேச்சிலும், அழகு குடிகொண்ட
சிவந்த வாயிதழிலும், அவர்களுடைய
சிரிப்பிலும் மனமானது பொருந்திய எண்ணம் உடைய எனக்கு, அணு அளவேனும், அல்லது அதன் பிளவு அளவேனும் இனிய சொற்களைப்
பேசுவதே இல்லாததை வழக்கமாகக் கொண்டவனும், வீணனும்
ஆகிய அடியேனுக்கு, ஒளி விளங்குவதும், புகழ் மிகுந்ததும் ஆகிய தண்டையும்
சிலம்பும் அணிந்துள்ள தேவரீரது இரண்டு திருவடிகளைக் கண்ணாரக் காணும்படியும், அடியேனது வாழ்நாள் வீணாகப் பெருகுதல்
இல்லாமற்படிக்கும், திருக்கண்ணோக்கம்
வைத்துப் புரிந்த பேரருளை கனவிலும் நனவிலும்
மறக்க மாட்டேன்.
விரிவுரை
கொங்கு
உலாவிய குழலினும் நிழலினும் ---
கொங்கு
- மணம்.
குழல்
- கூந்தல்,
நிழல்
- ஒளி.
நறுமணம்
பொருந்திய மலர்களைச் சூடிக்கொள்வதாலும், மணப்பொருள்களைப் பூசிக்
கொள்வதாலும் பெண்களின் கூந்தலானது மணம் பொருந்தியதாகவும், ஒளி பொருந்தியதாகவும்
உள்ளது. தமது கூந்தலை அழகாக முடித்துக் கொள்வதும், விரித்துக் கொள்வதும்
செய்வர். அதைக் கண்ணுறும் ஆடவர் கூந்தலின் அழகிலும் ஒளியிலும் தமது மனத்தைப்
பறிகொடுப்பர்.
கூந்தல் ஆழ விரிந்து
சரிந்திட,
காந்து மாலை குலைந்து
பளிங்கிட,
கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட, ......கொங்கை தானும்
கூண்கள் ஆம்என பொங்க, நலம்பெறு
காந்தள் மேனி மருங்கு
துவண்டிட,
கூர்ந்த ஆடை குலைந்து புரண்டு, இர ...... சங்கள்பாயச்
சாந்து வேர்வின்
அழிந்து மணம் தப,
ஓங்கு அவாவில் கலந்து, முகம் கொடு
தான் பலா சுளையின் சுவை கண்டு, இதழ் .....உண்டு,மோகம்
தாம் புறா மயிலின்
குரல் கொஞ்சிட,
வாஞ்சை மாதருடன்
புளகம் கொடு
சார்ந்து, நாயென்
அழிந்து விழுந்து, உடல் ...... மங்குவேனோ? --- திருப்புகழ்.
ஆல கால படப்பை
மடப்பியர்,
ஈர வாள்அற எற்றும் விழிச்சியர்,
யாவர் ஆயினும் நத்தி அழைப்பவர், ...... தெருவூடே
ஆடி ஆடி நடப்பதொர்
பிச்சியர்,
பேசி ஆசை கொடுத்து மருட்டிகள்,
ஆசை வீசி அணைக்கு முலைச்சியர், ...... பலர்ஊடே
மாலை ஓதி விரித்து
முடிப்பவர்,
சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள்,
வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள், ...... உறவாலே
மாயை ஊடு விழுத்தி
அழுத்திகள்,
காம போக வினைக்குள், உனைப் பணி
வாழ்வு இலாமல் மலச் சனனத்தினில் ...உழல்வேனோ. ---
திருப்புகழ்.
நஞ்சு
அளாவிய விழியினும் ---
அளாவுதல்
- கலத்தல், சென்று
பொருந்துதல்.
நஞ்சு
உண்டாரை மட்டுமே கொல்லும்.
பெண்களின்
விழியானது கண்டாரையும் கொல்லும் தன்மை வாய்ந்தது.
"ஆலம் வைத்த விழிச்சியர்" என்றும், "மறம் தரித்த கண் ஆலாலம் நேர்"
என்றும் அடிகளார் திருவானைக்காத் திருப்புகழில் காட்டினார்.
"கன ஆலம் கூர் விழி மாதர்கள்" என்றார் திருவாலங்காட்டுத் திருப்புகழில்.
ஆடவரின்
உள்ளத்தில் மிக்குள்ள அறியாமையைப் போக்கி,
அறிவை
நிறையச் செய்வது பெண்களின் கண்கள். பார்வையலேயே ஆடவரை நெறிப்படுத்துவதற்கு உரியவை
பெண்களின் கண்கள். இது இறைவன் படைப்பில் உள்ள அதிசயம்.
இருநோக்கு இவள் உண்கண் உள்ளது, ஒரு
நோக்கு
நோய் நோக்கு, வன்று
அந்நோய்க்கு மருந்து.
என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.
பெண்களின் கண் பார்வையால் இன்பமும்
துன்பமும் விளையும். துன்பமாகிய நோயை உண்டாக்குவதும், அந்த நோய்க்கு
மருந்தாக அமைவதும் கண்களே. இது இறைவன் படைப்பில் உள்ள அதிசயம்.
பொதுவாகப் பெண்களின் பார்வையானது
ஆடவருக்குக் காம மயக்கத்தை உண்டாக்கி, பின்னர் அந்தக்
காம மயக்கத்தைத் தீர்ப்பதாக அமையும்.
"தண்ணீர்
பீளை தவிராது ஒழுகும் கண்ணைப் பார்த்துக் கழுநீர்" என்று "திங்கள்
சடையோன் திருவருள் இல்லார்" கருதுவர் என்கின்றார் பட்டினத்து அடிகள்.
ஆனால், அருளாளர்களுக்கு, அந்தக்
கண்கள் தெய்வத் தன்மையோடு தோன்றும். திருமயிலையில்,
திருஞானசம்பந்தப்
பெருமான், இறையருளால் எலும்பைப் பெண்ணாக்கினார். அப்படி
வருவாகி வந்த பூம்பாவையாரின் கண்கள் எப்படி விளங்கின?
தெய்வச்
சேக்கிழார் பெருமான் பாடுவதைப் பாருங்கள்...
மண்ணிய
மணியின் செய்ய
வளர் ஒளி மேனியாள் தன்
கண்
இணை வனப்புக் காணில்,
காமரு வதனத் திங்கள்
தண்ணளி
விரிந்த சோதி
வெள்ளத்தில், தகைவின் நீள
ஒள்
நிறக் கரிய செய்ய
கயல் இரண்டு ஒத்து உலாவ.
கடைந்தெடுத்த
மாணிக்கத்தினை விடவும் செம்மையான ஒளிபொருந்திய மேனியைக் கொண்ட பூம்பாவையாரின்
இரண்டு கண்களின் அழகானது, அழகு மிக்க முகமான சந்திரனின் குளிர்ந்த கதிர்கள்
விரிந்த நிலவொளியான வெள்ளத்தில் தடுக்கப்படாத நீளமுடைய ஒள்ளிய நிறமும் கருமையும்
செம்மையும் கலந்த இரண்டு கயல் மீன்களைப் போன்று உலாவின என்கின்றார்.
மணிவாசகப்
பெருமான் தான் கண்ட சிவமாகிய தலைவியின் கண்களைக் குறித்துத் திருக்கோவையாரில் பாடி
இருப்பதைக் காண்போம்..
ஈசற்கு
யான் வைத்த அன்பின்
அகன்று, அவன் வாங்கிய என்
பாசத்தில்
கார் என்று, அவன்
தில்லை-
யின் ஒளி போன்று, அவன் தோள்
பூசு
அத் திருநீறு என வெளுத்து,
ஆங்கு அவன் பூங்கழல் யாம்
பேசு
அத் திருவார்த்தையில் பெரு-
நீளம் பெருங்கண்களே.
இதன்
பொருள் --- தலைவியின் கண்களானவை, ஈசனிடத்தில் தான் வைத்த அன்பினைப் போல அகன்று
இருந்தது. இறைவனால் என்னிடத்தில் இருந்து வாங்கப் பெற்ற ஆணவமலம் போல் கருமை நிறம்
கொண்டு இருந்தது. அவனுடைய தில்லையைப் போல ஒளி பொருந்தி இருந்தது. அவனுடைய
திருத்தோள்களில் பூசப்பெற்றுள்ள திருநீறு போல வெளுத்து இருந்தது. அவனுடைய
திருவடித் தாமரைகளைப் பற்றி நான் பேசுகின்ற திருவார்த்தைகளைப் போல நீண்டு
இருந்தது.
இரணிய
குன்று போல் வளர் முலையினும் ---
இரணியம்
- கனகம். பொன். அழகு.
பொன்குன்று போல, பருத்து வளர்ந்துள்ள அழகான முலைகள் ஆடவருக்கு காம மயக்கத்தை உண்டு பண்ணும்.
ஆடவர் மனத்தைக் குன்ற வைப்பதால்,
"குன்று
போல் முலை" என்றார் என்றும் கொள்ளலாம்.
சிலந்தி
போலக் கிளைத்து முன் எழுந்து
திரண்டு
விம்மி, சீ பாய்ந்து ஏறி,
உகிரால்
கீற உலர்ந்து, உள் உருகி,
நகுவார்க்கு
இடமாய் நான்று வற்றும்
முலையைப்
பார்த்து முளரி மொட்டு என்றும்
குலையும்
காமக் குருடர்க்கு ஒன்று உரைப்பேன். --- பட்டினத்தடிகள்.
கொப்புளம்
போல இரண்டாகி, முன் பக்கத்தில் தோன்றி,
திரட்சி
பெற்று, பூரித்து,
சீப்பெருகி
ஏறி, நகத்தால் கிழிக்க உலர்ந்து போய் மனம் உருகி, சில
காலத்திற்குப் பின் தாங்கி வற்றிப் போய்விடுகின்ற தனங்களைப் பார்த்து தாமரை மொட்டு
என்று குழறுகின்ற காமாந்தகாரத்தில் முழுகிக் கிடக்கும் குருடருக்குச் சொல்லுவேன்
என்கின்றார் பட்டினத்து அடிகள்.
சீறும்
வினை அது பெண் உரு ஆகி, திரண்டு உருண்டு
கூறும்
முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்
பீறும்
மலமும் உதிரமும் சாயும் பெரும் குழி விட்டு
ஏறும்
கரை கண்டிலேன் இறைவா, கச்சி ஏகம்பனே
என்றார்
பட்டினத்து அடிகள்.
இருவினையின்
சம்பந்தத்தால் தேகமும், தேக சம்பந்தத்தால்
ஊழ்வினையும், ஊழ்வினையால் பலவகைத் துன்பங்களும் தோன்றுவது போல, பெண்களைக்
காண்டல், சிந்தித்தல்,
அவர்
சொல் கேட்டல் முதலியன பலவகைத் துன்பத்திற்கும் ஆதாரமாக இருப்பதால், "சீறும்
வினை அது பெண் உரு ஆகி" என்றும், மானுட
உறுப்புக்கள் முப்பத்திரண்டுள், நீண்டும், பரந்தும், தடித்தும், மாமிசம்
பெற்றும், திரண்டும் உருண்டும் இருக்க வேண்டிய அந்த அந்த
அவயவங்களுக்கு உரிய அழகு நிரம்பப் பெற்று இருத்தலினால்,
திரண்டு, உருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகி என்றார் பட்டினத்து அடிகள்.
காமவேட்கையானது
அரும் தவம் புரிந்தவராலும் அகற்றுதற்கு முடியாத வேகம் உடையது. ஆகையால், மாயைக்குச் சூழ ஒண்ணா
வடிவேல் கடவுளது திருவருளை நாடுகிறார். முருகவேளது திருவருள் துணைகொண்டே
விலக்கற்கரிய அவ்வாசையை நீக்க வேண்டும். அவனது அருளாலேயே ஆசையாகிய கட்டு
தூள்படும். “நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின” என்ற
அருள் மொழியைக் காண்க.
இதனைச்
சிதம்பர சுவாமிகள் திருவாக்காலும் உணர்க.
மாதர்
யமனாம், அவர்தம்
மைவிழியே வன்பாசம்,
பீதிதரும்
அல்குல் பெருநகரம், ---
ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும்
ஏற விரகு இல்லை,
போரூரைத்
தாழ்ந்தோர்க்கும்
இல்லை தவறு. --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை.
விழியாலும், மொழியாலும்,
முலையாலும் ஆடவருக்குக் காம மயக்கத்தை உண்டு பண்ணுபவர் பெண்கள்
என்பதால்,
"கருங்குழல், செவ்வாய் வெண்ணகைக்
கார்மயில்
ஒருங்கிய
சாயல் நெருங்கிஉள் மதர்த்து,
கச்சு
அற நிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து
எய்த்து
இடை வருந்த எழுந்து,
புடைபரந்து,
ஈர்க்ககு
இடை போகா இளமுலை மாதர்தம்
கூர்த்த
நயனக் கொள்ளையிற் பிழைத்தும்"
என்று
அருளினார் மணிவாசகப் பெருமான்.
நிலையினும் ---
நிற்கின்ற
நிலையினைலேயே அடவர்னி உள்ளத்தைக் கவரக்கூடிய தன்மை பெண்களுக்கு உண்டு.
தெட்டிலே
வலிய மடமாதர் வாய் வெட்டிலே,
சிற்றிடையிலே, நடையிலே,
சேல்ஒத்த விழியிலே, பால்ஒத்த மொழியிலே,
சிறுபிறை நுதல் கீற்றிலே,
பொட்டிலே, அவர்கட்டு பட்டிலே, புனை கந்த
பொடியிலே, அடியிலே, மேல்
பூரித்த முலையிலே, "நிற்கின்ற
நிலையிலே",
புந்திதனை நுழைய விட்டு,
நெட்டிலே அலையாமல், அறிவிலே, பொறையிலே,
நின் அடியர் கூட்டத்திலே,
நிலைபெற்ற அன்பிலே, மலைவற்ற மெய்ஞ்ஞான
ஞேயத்திலே, உன் இருதாள்
மட்டிலே, மனதுசெல, நினது அருளும்
அருள்வையோ?
வளமருவு தேவை அரசே!
வரை ராசனுக்கு இருகண் மணியாய் உதித்த மலை
வளர்காத லிப்பெண்உமையே.
என்பார்
தாயுமானார்.
மடமாதர் கொம்பு சேர், வன இடையினும் ---
மடம்
- மடப்பம், இளமை.
மாதர்
- அழகு. "மாதர் மடப்பிடியும்" என்னும் திருஞானசம்பந்தப் பெருமான் அருள்
வாக்கை நோக்குக.
பெண்களின்
இடையானது கொம்பு போலச் சிறுத்து விளங்கும். அது தவ உணர்வு மிக்கு, ஞானம் விளங்குவதைக் காட்டும்.
வன , வனப்பு - அழகு.
நடையினும் ---
நடக்கின்ற
நடையிலேயே ஆடவர் மனத்தைக் கவர்வர் பெண்கள்.
அன்பு
கூர்வன மொழியினும் ---
அன்பு
கூர்ந்து பேசுவது போல இனிமை தவழப் பெண்கள் பேசுவது மனதிற்கு இனிமையைத் தரும்.
விலைமாதர்
பேசுவது மனதில் காம மயக்கத்தை உண்டு பண்ணும்.
எழில்
குடி கொண்ட சேய் இதழினும் நகையினும் ---
சேய், செய்ய, சிவந்த.
மனது
ஆய சங்கையாளியை ---
சங்கை
ஆளியை. சங்கை - எண்ணம், நினைப்பு.
அணு
இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல சம்ப்ரதாயனை ---
சம்ப்ரதாயம்
- தொன்று தொட்டு வந்த வழக்கம், திறமை.
அணுவை
இடையில் பிளந்த அளவுக்காவது இனிய சொல்லைப் பேசுதல் என்பது வழக்கத்தில் இல்லாதவன்.
இன்சொல்
இனிமையைத் தரும் என்பதால் வன்சொல் வழங்குதல் கூடாது.
"இன்சொல்
இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ
வன்சொல்
வழங்குவது"
என்றார்
திருவள்ளுவ நாயனார்.
"யாவர்க்கும்
ஆன் பிறர்க்கு இன் உரை தானே" என்றார் திருமூல நாயனார்.
அவலனை ---
அவலன்
- குற்றம் உள்ளவன், பயனற்றவன்.
ஒளி
திகழ் இசை கூரும் தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு ---
இசை
- புகழ்.
தண்டை
- பெண்கள் காலில் அணிந்து கொள்ளும் அணிவகைகளில் ஒன்று.
நூபுரம்
- பாத கிண்கிணி. சிலம்பு.
கழல்
- கழல் அணிந்த திருவடியைக் குறித்து நின்றது.
இறைவன்
ஒளி வடிவானவன். ஆதலால் அவனுடைய திருவடியும் ஒளி பொருந்தியது என்றார். உயிருக்கு
உள்ள இருள் மலம் அகல ஞான ஒளியை வீசுவது இறைவன் திருவடி ஆகும்.
எல்லோராலும்
புகழப்படுவது, ஆதலின், "இசை
கூரும்" என்றார்.
"பொருள்
சேர் புகழ்" என்றார் நாயனாரும்.
ஒளி
விளங்குவதும், புகழ் மிகுந்ததும்
ஆகிய தண்டையும் சிலம்பும் அணிந்துள்ள தேவரீரது இரண்டு திருவடிகளைக் கண்ணாரக் கண்டு
வழிபடத் திருவருள் வாய்க்கவேண்டும்.
"கண்காள்
காண்மின்களோ, கடல் நஞ்சு உண்ட
கண்டன் தன்னை,
எண்தோள்
விசி நினுற் ஆடும் பிரான் தன்னை, கண்காள் காண்மின்களோ" என்றும், அவன் அருளை
கண்ணாகக் காணின்
அல்லால்" என்றும் அப்பர் பெருமான் காட்டியதை உணர்க.
"அவன்
அருளாலே அவன் தாள் வணங்கி" என்னும் மணிவாசகத்தின் படிக்கு, இறைவனை வணங்குவதற்கும் அவன் அருள்
வாய்க்கவேண்டும்.
நாள்
அவம் மிகை அற
---
அவம்
- வீண், பயனின்மை, கேடு.
இறைவன்
திருப்புகழைப் பாடி வழிபடாத நாள்கள் பயனற்றவை.
"பெரும்பற்றப்
புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே" என்றார் அப்பர் பெருமான்.
கிடைத்தற்கரிய
வாழ்நாளை அவத் தொழில்களிலும் களியாடல்களிலும் வீண் சிந்தனைகளிலுமாக வீணை
கழிக்காமல், “இரைதேடுவதோடு இறையும்
தேடு” என்ற அமுத வசனப்படி உடம்பை வளர்ப்பதற்காக உழைப்பதோடு உயிரை வளர்ப்பதற்கும்
பாடுபடவேண்டும். சிவசிந்தனையும்,
சிவ
வழிபாடுமே உயிருக்கு உறுதி பயப்பனவாம்.
பிறந்த
ஒவ்வொருவரும் எவ்வளவு நாள் வாழ்ந்திருப்போம் என்பது தெரியாது. சாகின்ற நாளும்
தெரியாது. எப்போது வேண்டுமானாலும் சாவு நேரலாம்.
வாழ்நாளும், சாகின்ற நாளும்
யார் அறிவார். பெருமானுக்குச் சாத்தக் கூடிய மதுமலர்களை நாளும் தலையால் சுமந்து, அவனுடைய
திருப்புகழை நாளும் வாயாரச் சொல்லி, காதாரக் கேட்டு வந்தால், நல்வினை அதுவே ஆகும்.
நீநாளும்
நன்னெஞ்சே!
நினைகண்டாய், யார் அறிவார்
சாநாளும்
வாழ்நாளும்,
சாய்க்காட்டு
எம் பெருமாற்கே
பூநாளும்
தலைசுமப்ப,
புகழ்நாமம்
செவிகேட்ப,
நாநாளும்
நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே.
என்னும்
திருஞானசம்பந்தப் பெருமான் அருள் வாக்கைச் சிந்தித்து வாழ்தல் நலம்.
“வீணே நாள் போய்விடாமல் ஆறாறுமீதில்
ஞானோப தேசம் அருள்வாயே” --- (மாலாசை) திருப்புகழ்.
உம்பர்கள்
ஸ்வாமி! நமோ நம,
எம்பெரு மானே! நமோ நம,
ஒண்தொடி மோகா! நமோ நம, ...... என, நாளும்
உன்
புகழே பாடி நான் இனி
அன்புடன் ஆசார பூசை செய்து
உய்ந்திட, வீண்நாள் படாது, அருள் ...... புரிவாயே.
---
(கொம்பனையார்) திருப்புகழ்.
விழி
அருள் தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே ---
இறைவன்
தனது திருக்கண்ணோக்கம் வைத்துப் புரிந்த பேரருளைக் கனவிலும் நனவிலும் மறக்க மாட்டேன்
என்றார் அடிகளார். "ஆணவ அழுக்கு அடையும் ஆவியை விளக்கி, அநுபூதி அடைவித்ததொரு பார்வைக்காரன்"
என்றார் திருவகுப்பில்.
அபிராமி
அம்மையின் திருக்கடைக்கண்கள் தரும் நலத்தை, அபிராமி பட்டர் அருளிய அந்தாதியில் காண்க.
"மிக
அருமைப்பட்டு, உன்பாத தாமரை சரணம் எனப் பற்றும் பேதையேன் மிசை, விழி அருள் வைத்து, குன்றாத வாழ்வையும் அருள்வாயே" என்று அருணகிரிநாதப்
பெருமான் பிறிதொரு திருப்புகழில் வேண்டியபடியே, முருகப் பெருமான், "விழி அருள் தந்த
பேரருளை" வியந்து, எல்லாக் காலத்திலும் மறவேன் என்னும்படியாக, "கனவிலும் நனவிலும்
மறவேன்" என்றார்.
"கனவிலும்
நனவிலும் மறவேன்" என அருணை வள்ளலார் பல திருப்புகழ்ப் பாடல்களிலும் போற்றி
உள்ளார். அடியில் வரும் பிரமாணங்களைக் காண்க.
கொந்து
வார் குரவு அடியினும், அடியவர்
சிந்தை வாரிஜ நடுவினும், நெறிபல
கொண்ட வேத நல் முடியினும் மருவிய
....குருநாதா!
கொங்கில்
ஏர் தரு பழநியில் அறுமுக!
செந்தில் காவல! தணிகையில் இணைஇலி,
கொந்து கா என மொழி தர வரு சமய ......
விரோத
தந்த்ர
வாதிகள் பெற அரியது, பிறர்
சந்தியாதது, தனது என வரும் ஒரு
சம்ப்ரதாயமும் இது என உரைசெய்து, ...... விரைநீபச்
சஞ்ச
ரீகரி கரம் முரல் தமனிய
கிண்கி ணீ முக வித பதயுக மலர்
தந்த பேரருள் "கனவிலும் நனவிலும் ......
மறவேனே".
---
திருத்தணிகைத் திருப்புகழ்.
வெருட்டி
ஆட்கொளும் விடமிகள், புடைவையை
நெகிழ்த்து அணாப்பிகள், படிறிகள், சடுதியில்
விருப்பம் ஆக்கிகள், விரவிய திரவியம் ...... இலர்ஆனால்
வெறுத்து நோக்கிகள், கபடிகள், நடம்இடு
பதத்தர், தூர்த்திகள், ம்ருகமத பரிமள
விசித்ர மேற்படு முலையினும் நிலையினும், .....எவரோடும்
மருட்டி
வேட்கை சொல் மொழியினும், விழியினும்,
அவிழ்த்த பூக்கமழ் குழலினும், நிழலினும்,
மதிக்க ஒணாத் தளர் இடையினும் நடையினும், ......அவமேயான்
மயக்கமாய், பொருள் வரும்வகை க்ருஷிபணு,
தடத்து மோக்ஷம் அது அருளிய, பலமலர்
மணத்த வார்க்கழல் கனவிலும் நனவிலும் ......
மறவேனே.
--- திருச்சிராப்பள்ளித் திருப்புகழ்.
குமர!
குருபர! குணதர! நிசிசர
திமிர தினகர! சரவணபவ! கிரி
குமரி சுத! பகிரதி சுத! சுரபதி ......
குலமானும்
குறவர்
சிறுமியும் மருவிய திரள் புய!
முருக! சரண் என உருகுதல் சிறிதும் இல்,
கொடிய வினையனை, அவலனை, அசடனை .....அதிமோகக்
கமரில்
விழவிடும் அழகு உடை அரிவையர்,
களவினொடு பொருள் அளவு அளவு அருளிய
கலவி அளறு இடை துவள்உறும் வெளிறனை,......இனிது
ஆளக்
கருணை
அடியரொடு அருணையில் ஒருவிசை
சுருதி புடை தர வரும், இரு பரிபுர
கமல மலர்அடி கனவிலும் நனவிலும் ......
மறவேனே.
--- திருவருணைத் திருப்புகழ்.
குருவும்
அடியவர் அடியவர் அடிமையும்,
அருண மணிஅணி கணபண விதகர
குடில செடிலினும் நிகர்என வழிபடு...... குணசீலர்
குழுவில்
ஒழுகுதல், தொழுகுதல், விழுகுதல்,
அழுகுதலும் இலி, நலம்இலி, பொறைஇலி,
குசல
கலைஇலி, தலைஇலி, நிலைஇலி, ....விலைமாதர்
மருவு
முலை எனும் மலையினில் இடறியும்,
அளகம் என வளர் அடவியில் மறுகியும்,
மகரம் எறிஇரு கடலினில் முழுகியும், ......உழலாமே,
வயலி
நகரியில் அருள்பெற, மயில்மிசை
உதவு, பரிமள மதுகர வெகுவித
வனச மலர் அடி கனவிலும் நனவிலும்
......மறவேனே. --- நெரூர்த்
திருப்புகழ்.
வங்க
வாரிதி முறை இட, நிசிசரர் துங்க
மாமுடி பொடிபட, வட அனல் மங்கி நீறு
எழ, அலகைகள் நடம் இட, மயில் ஏறி, வஞ்சவேல் கடு
முனிபவ
---
வங்கம்
- மரக்கலங்கள்.
வாரிதி
- கடல்.
நிசிசரர்
- நிசி - இருள், இரவு. சரர் -
சஞ்சரிப்பவர்கள்.
இருள்
என்பது ஆணவத்தைக் குறிக்கும்.
ஆணவம்
மிகுந்து உள்ள அரக்கர்கள்.
துங்கம்
- உயர்வு.
அலகை
- பேய்.
"வஞ்சவேலா"
என்று திருமாணிகுழித் திருப்புகழிலும் அடிகளார் போற்றி உள்ளார்.
வஞ்சவேலைக்
குறித்து வேல் விருத்தத்தில் அடிகளார் பின்வருமாறு அருளியது காண்க.
"ஆலமாய்
அவுணருக்கு, அமரருக்கு அமுதமாய்,
ஆதவனின் வெம்மைஒளிமீது
அரியதவ முனிவருக்கு இந்துவில் தண்என்று
அமைந்து,அன் பருக்குமுற்றா
முலமாம் வினைஅறுத்து, அவர்கள்வெம் பகையினை
முடித்து, இந்திரர்க்கும் எட்டா
முடிவில்ஆ னந்தம்நல் கும்பதம் அளித்து,எந்த
மூதண்டமும் புகழும்வேல்".....
ஆதவனின் வெம்மைஒளிமீது
அரியதவ முனிவருக்கு இந்துவில் தண்என்று
அமைந்து,அன் பருக்குமுற்றா
முலமாம் வினைஅறுத்து, அவர்கள்வெம் பகையினை
முடித்து, இந்திரர்க்கும் எட்டா
முடிவில்ஆ னந்தம்நல் கும்பதம் அளித்து,எந்த
மூதண்டமும் புகழும்வேல்".....
அடியார்களுக்குத்
தண்ணருள் புரிந்து, திருவருள்
ஞானத்தை வழங்குவதும், அல்லாதார்க்கு மறக்கருணை புரிந்து, அவர்களின் அஞ்ஞான இருளை
அகற்றி,
அருள்
பொழிவதும் ஆகிய தன்மை உடையது வேலாயுதம் என்பதை "வஞ்சவேல்" என்றார்.
"வஞ்ச
நெஞ்சத்தவர்க்கு வழி கொடார்" என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளி இருப்பது
காண்க.
முருகப்
பெருமானுக்கு வாகனமாகிய மயிலின் பெருமையையும், அவரது திருக்கை வேலின் பெருமையையும் அடிகளார்
மயில் விருத்தத்திலும், வேல் விருத்தத்திலும் காட்டி உள்ளது காண்க.
சக்ரப்ர
சண்டகிரி முட்டக் கிழிந்து, வெளி
பட்டு, க்ரவுஞ்சசயிலம்
தகர, பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
தனிவெற்பும் அம்புவியும்எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே,
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்குமயிலாம்.... --- மயில் விருத்தம்.
பட்டு, க்ரவுஞ்சசயிலம்
தகர, பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
தனிவெற்பும் அம்புவியும்எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே,
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்குமயிலாம்.... --- மயில் விருத்தம்.
உககோடி
முடிவின் மண்டிய சண்ட மாருதம்
உதித்தது என்று அயன்அஞ்சவே,
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொற்குவடு உறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்து, இரு
விசும்பில் பறக்க, விரிநீர்
வேலை சுவற, சுரர் நடுக்கங் கொள, சிறகை
வீசிப் பறக்கும் மயிலாம்.... --- மயில் விருத்தம்.
உதித்தது என்று அயன்அஞ்சவே,
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொற்குவடு உறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்து, இரு
விசும்பில் பறக்க, விரிநீர்
வேலை சுவற, சுரர் நடுக்கங் கொள, சிறகை
வீசிப் பறக்கும் மயிலாம்.... --- மயில் விருத்தம்.
தீரப்
பயோததி திக்கும் ஆகாயமும்
ஜகதலமும் நின்றுசுழல,
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ, வெஞ்சிகைத்
தீக்கொப்புளிக்க,வெருளும்
பாரப் பணாமுடி அனந்தன்முதல் அரவெலாம்
பதைபதைத்தே நடுங்க,
படர்ச்சக்ர வாளகிரி துகள்பட, வையாளிவரு
பச்சை ப்ரவாளமயிலாம்..... --- மயில் விருத்தம்.
ஜகதலமும் நின்றுசுழல,
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ, வெஞ்சிகைத்
தீக்கொப்புளிக்க,வெருளும்
பாரப் பணாமுடி அனந்தன்முதல் அரவெலாம்
பதைபதைத்தே நடுங்க,
படர்ச்சக்ர வாளகிரி துகள்பட, வையாளிவரு
பச்சை ப்ரவாளமயிலாம்..... --- மயில் விருத்தம்.
மகரம்அளறு
இடைபுரள, உரககண பணமவுலி
மதியும் இரவியும் அலையவே,
வளர்எழிலி குடர் உழல, இமையவர்கள் துயர் அகல,
மகிழ்வு பெறும் அறுசிறையவாம்
சிகரவரை மனைமறுகு தொறும் நுளைய மகளிர்செழு
செநெல்களொடு தரளம் இடவே,
செகசிர பகிரதி முதல் நதிகள் கதி பெற,உததி
திடர் அடைய, நுகரும் வடிவேல்.... --- வேல் விருத்தம்.
மதியும் இரவியும் அலையவே,
வளர்எழிலி குடர் உழல, இமையவர்கள் துயர் அகல,
மகிழ்வு பெறும் அறுசிறையவாம்
சிகரவரை மனைமறுகு தொறும் நுளைய மகளிர்செழு
செநெல்களொடு தரளம் இடவே,
செகசிர பகிரதி முதல் நதிகள் கதி பெற,உததி
திடர் அடைய, நுகரும் வடிவேல்.... --- வேல் விருத்தம்.
அண்டர்
உலகும் சுழல, எண் திசைகளும் சுழல,
அங்கியும் உடன் சுழலவே,
அலைகடல்களும் சுழல, அவுணர் உயிரும் சுழல,
அகில தலமும் சுழலவே,
மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர
மாணப் பிறங்கி, அணியும்
மணி ஒலியினில் சகல தலமும் அருள, சிரம
வகை வகையினில் சுழலும் வேல், --- வேல் விருத்தம்.
அழகிய சண்பை மாநகர் உறையும் ஒர் அறுமுக ---
அங்கியும் உடன் சுழலவே,
அலைகடல்களும் சுழல, அவுணர் உயிரும் சுழல,
அகில தலமும் சுழலவே,
மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர
மாணப் பிறங்கி, அணியும்
மணி ஒலியினில் சகல தலமும் அருள, சிரம
வகை வகையினில் சுழலும் வேல், --- வேல் விருத்தம்.
அழகிய சண்பை மாநகர் உறையும் ஒர் அறுமுக ---
சண்பை
என்பது சீகாழிக்கு உரிய பன்னிரண்டு திருப்பெயர்களில் ஒன்று.
பிரமபுரம்
வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்
பொருஇல்
திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வருபுறவம்
சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக்
கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால். --- பெரியபுராணம்.
1. பிரமபுரம்
– பிரமதேவர் பூசித்துப் பெறு பெற்றதலம்.
தோடுஉடைய
செவியன் விடைஏறி ஓர்தூவெண் மதி சூடி
காடுஉடைய
சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய
மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு
உடைய பிராமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
சேவுயரும்
திண்கொடியான் திருவடியே
சரண் என்று சிறந்த அன்பால்
நா
இயலும் மங்கையொடு நான்முகன்தான்
வழிபட்ட நலம் கொள்
கோயில்
வாவிதொறும்
வண்கமலம் முகம்காட்டச்
செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவிஇரும்
கருங்குவளை கருநெய்தல்
கண்காட்டும் கழுமலமே
எனத்
திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்து இருத்தல் காண்க.
2. வேணுபுரம் – சூரபதுமனுக்கு அஞ்சிய தேவேந்திரன் இங்குப்
போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு
(மூங்கில்) வடிவில் முளைத்து அருள்புரிந்த தலம். தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க
வேணு வழியாய் இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.
3. புகலி – சூரபதுமனால்
இடுக்கண் எய்திய தேவர்கள் சிவபிரானைப் புகல் அடைந்து, அடைக்கலம் புகுந்து வணங்கிய தலம்.
4. வெங்குரு – அசுரர்களின்
குருவாகிய சுக்கிரன் வழிபட்டுத் தேவகுருவாகிய பிருகற்பதிக்குச் சமத்துவம் பெற்ற
தலம். எமதருமன் தன்னைக் கொடியவன் என்று
உலகம் இகழாதவாறு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.
5. தோணிபுரம் – ஊழிமுடிவில் சிவபெருமான்
உமாதேவியாரோடு பிரணவம் ஆகிய தோணியில் வீற்றிருப்பத் தான் அழியாமல், நிலைபேறு எய்தித் திகழும் தலம்.
6. பூந்தராய் – சங்கநிதி பதுமநிதி
என்னும் இருநிதிகளும் பூவும் தாருமாய்ப் பூசித்து அழியாவரம் பெற்ற தலம்.
7. சிரபுரம் – சயிங்கேயன்
என்னும் அசுரன் வேற்று வடிவம் கொண்டு மறைந்து வந்து தேவர்களுடன் இருந்து அமிர்தம்
உண்ணும் நிலையில் சூரியனால் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டுணுவால் சிரம் வெட்டுண்ட தலம்.
8. புறவம் – சிபிச்
சக்கரவர்த்தியைச் சோதித்தற்கு அக்கினிதேவன் புறாவடிவம் கொண்டு போந்து, புறாவின் எடை அளவிற்குத் தன் தசையை
அரிந்து கொடுத்தும், அது போதாமை கண்டு, அவனே துலை ஏறித் தன் வள்ளன்மையினைப்
புலப்படுத்திய நிலையில், புறா வடிவம் கொண்ட
அக்கினிதேவன், அப்பாவம் அழியுமாறு
வழிபட்டு உய்ந்த தலம்.
9. சண்பை – கபில முனிவர்
சாபத்தின்படி தம் குலத்தினன் வயிற்றில் பிறந்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக்
கொட்டிய துகள், சண்பைப் புல்லாக
முளைத்து இருந்ததை ஆயுதமாகக் கொண்டு போர் செய்து மடிந்த யாதவர்களின் கொலைப்பழி, தன்னை அணுகாவண்ணம் கண்ணன் பூசித்த தலம்.
10. சீர்காழி – காளிதன் என்னும்
நாகம் வணங்கிய தலம். நடனத்தில் தோற்ற காளி
வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.
11. கொச்சைவயம் – பராசரர் தாம்
மச்சகந்தியை ஆற்றிடையில் புணர்ந்து அடைந்த தீநாற்றமும், பழியும் போகும் வண்ணம் இறைஞ்சி உய்ந்த
தலம்.
12. கழுமலம் – உரோமச முனிவர்
இறைவனை வழுத்தி ஞானோபதேசம் பெற்றுத் தம்முடைய மலங்களைக் கழுவப்பெற்ற தலம்.
பங்க
வீரியர்
---
விரியம்
- வலிமை. பங்கம் - தோல்வி, கேடு.
உள்ளத்தில்
வலிமை குன்றியவர்கள் சமணர்கள். உள்ள உறுதி
இல்லாதவர்கள் பாதகச் செயலைப் புரியத் துணிவர்.
திருஞானசம்பந்தப்
பெருமான் பல்லாயிரம் அடியார்களுடன் தங்கி இருந்த மடத்திற்கு வஞ்சனையால் தீ வைத்தவர்கள்.
பறி
தலை விரகினர் ---
தலைமயிரைப் பறிப்பதில் வல்லவர்கள்,
சமணர்கள்
தலைமயிரைப் பறிப்பதைத் தமது சமய ஒழுக்கமாகக் கொண்டவர்கள்.
“முகடூர்
மயிர் கடிந்த செய்கையார்” --- திருஞானசம்பந்தர்
“கேசம்
பறி கோப்பாளிகள்” --- (தவர்வாள்) திருப்புகழ்
மிஞ்சு
பாதகர்
---
பாதகச்
செயல்களை மிகுதியாகப் புரிபவர்கள். தங்கள் சமயத்தினை விட்டு, திருநாவுக்கரசர் சைவத்திற்கு மீண்டார் என்பதாலேயே, அவருக்கு அளவில்லாத
துன்பத்தைப் புரிந்து எவ்வாறாவது அவரது உயிரைப் போக்க எண்ணிய பாதகர்கள் சமணர்கள்.
சமணர்கள்
திருநாவுக்கரசு பெருமானை ஏழு நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தனர். திருவருளால்
உடம்பு வெந்து அழியாது உயிர் பிழைத்தார். நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்ணக் கொடுத்தார்கள்.
அதிலும் பிழைத்தார். பல்லவ மன்னன் தனது பட்டத்து யானையை, சமணர்களின் சொல்லுக்கு இணங்கி ஏவினான். அது அப்பர்
பெருமானை விடுத்து மற்ற எல்லோரையும் அழித்தது. இறுதியாக, கல்லோடு பிணித்து, நடுக்கடலில் விட்டார்கள்.
இறையருளால் கல்லே தெப்பமாக மிதக்கக் கரை ஏறினார்.
இத்தனைக்கும், திருநாவுக்கரசு பெருமான் சமணர்களுக்கு யாதொரு
தீங்கும் நினைத்தாரில்லை. சமய வெறியால், சமணர்கள் கீழ்த்தரமான செயல்களைத் தமது சமய
நெறிக்குப் புறம்பாகப் புரிந்தனர்.
அறநெறி
பயன் இலர்
---
அறநெறியைப்
போதித்துக் கொண்டிருந்தே, அந்நெறியில் வாழாததால், அறநெறியின் பயனை
இழந்தவர்கள் சமணர்கள்.
பந்தம்
மேவிய பகடிகள்
---
பற்றற்ற
நெறியினை மேவியுள்ளதாக உலகத்தார்க்குக் காட்டி, புறத்தே அதற்கேற்ற வேடத்தைப் பூண்டு, அகத்தே வேடநெறியில்
நில்லலாத வேடதாரிகள்.
கபடிகள் ---
கபடம்
- வஞ்சகம்.
வஞ்சத்
தன்மை உள்ளவர்கள் அப்போது தமிழ் நாட்டில்
வாழ்ந்திருந்த சமணர்கள்.
இது
சமணர்கள் அனைவரையும் குறித்தது அல்ல என்பதை நினைவில் கொள்க.
நிலை
கேடர்
---
நிலையில்
திரியாது மனம் அடங்கப் பெற வேண்டியவர்கள், தமது நிலையில் திரிந்து, நிலைகெடப் பெற்றவர்கள்.
பண்பு
இலாதவர்
---
சமய
நெறியாளருக்கு உரிய நற்பண்புகள் இல்லாதவர்கள்.
கொலை
செயும் மனதினர் ---
கொலைப்
பாதகம் நினைப்பவர்கள்.
"கொல்லாமை மறைந்து
உறையும் அமண் சமயம்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.
இங்கு
எணாயிரர் உயரிய கழுமிசை பஞ்சபாதகர் முனைகெட அருளிய பெருமாளே ---
இங்கு
மதுரையில் இருந்து எட்டாயிரம் சமணர்களும், உயர்ந்த கழுவில் ஏறி, ஐம்பெரும் பாவங்களைப் புரிந்த அவர்களின்
வலிமை அழிந்து போகும்படியாகத் திருவருள் புரிந்த பெருமையில் மிக்கவரே என்று முருகப்
பெருமானைத் துதிக்கின்றார் அருணை வள்ளலார்.
முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபர்
சுப்ரமணிய மூர்த்திகளுக்குள் ஒன்று, முருகவேளது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு, திருஞானசம்பந்தராக வந்த
அவதாரம் புரிந்தது. முருகவேள் பிறப்பு இல்லாதவர் என்பதை நம் அருணகிரியார், "பெம்மான்
முருகன் பிறவான் இறவான்" என்று கூறியுள்ளதால் அறிக. இதை கூர்த்தமதி கொண்டு உணராதார்
மூவருக்கு முதல்வனும், மூவரும் பணிகேட்க, முத்தொழிலைத் தந்த முழுமுதற் கடவுளும், தாரகப் பொருளாய் நின்ற தனிப்பெருந் தலைவனுமாகிய பதிப்பொருட் பரஞ்சுடர் வடிவேல்
அண்ணலே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என எண்ணுகின்றனர்.
கருத்துரை
முருகா!
ஒன்றும் போதாத நாயேனை ஆட்கொண்டு அருளிய பெருங்கருணையை எக்காலத்தும் மறவாமல் போற்றுவேன்.
No comments:
Post a Comment