அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பூமாது உரமேயணி
(சீகாழி)
முருகா!
உம்மைத் துதித்து வழிபடாத
வஞ்சகனாகிய
என்னைக் காத்து அருள்
புரிவாய்.
தானாதன
தானன தானன
தானாதன தானன தானன
தானாதன தானன தானன ...... தந்ததான
பூமாதுர
மேயணி மான்மறை
வாய்நாலுடை யோன்மலி வானவர்
கோமான்முநி வோர்முதல் யாருமி ......
யம்புவேதம்
பூராயம
தாய்மொழி நூல்களும்
ஆராய்வதி லாதட லாசுரர்
போரால்மறை வாயுறு பீதியின் ......
வந்துகூடி
நீமாறரு
ளாயென ஈசனை
பாமாலைக ளால்தொழு தேதிரு
நீறார்தரு மேனிய தேனியல் ...... கொன்றையோடு
நீரேர்தரு
சானவி மாமதி
காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளாமுத லார்சடை ...... யெம்பிரானே
போமாறினி
வேறெது வோதென
வேயாரரு ளாலவ ரீதரு
போர்வேலவ நீலக லாவியி ...... வர்ந்துநீடு
பூலோகமொ
டேயறு லோகமு
நேரோர் நொடி யேவரு வோய்சுர
சேனாபதி யாயவ னேயுனை ...... யன்பினோடுங்
காமாவறு சோம சமானன
தாமாமண மார்தரு நீபசு
தாமாவென வேதுதி யாதுழல் ...... வஞ்சனேனைக்
காவாயடி
நாளசு ரேசரை
யேசாடிய கூர்வடி வேலவ
காரார்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
பூமாது
உரமே அணி மால்,மறை
வாய் நால் உடையோன், மலி வானவர்
கோமான், முநிவோர், முதல் யாரும் ...... இயம்புவேதம்
பூராயம்
அதாய் மொழி நூல்களும்
ஆராய்வது இலாத அடல் ஆசுரர்
போரால் மறைவாய் உறு பீதியின் ......
வந்துகூடி,
நீ
மாறு அருளாய் என ஈசனை
பாமாலைகளால் தொழுதே, திரு
நீறு ஆர் தரு மேனிய! தேன்இயல் ....கொன்றையோடு
நீர்
ஏர் தரு சானவி மாமதி
காகோதரம் மாதுளை கூவிளை
நேரோடம் விளாமுதல் ஆர்சடை ...... எம்பிரானே!
போம்
ஆறு இனி வேறு எது ஓது என-
வே, ஆர் அருளால் அவர் ஈதரு
போர்வேலவ! நீல கலாவி ...... இவர்ந்து,நீடு
பூலோகமொடே
அறுலோகமும்
நேர்ஓர் நொடியே வருவோய்! சுர
சேனாபதி ஆயவனே! உனை ......அன்பினோடும்
காமா
அறு சோம சம ஆனன!
தாமா மணம் ஆர்தரு நீப! சு-
தாமா எனவே துதியாது உழல் ...... வஞ்சனேனைக்
காவாய்
அடி நாள் அசுரேசரை-
யே சாடிய கூர் வடிவேலவ!
கார்
ஆர்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே.
பதவுரை
பூமாது உரமே அணி மால்
---
தாமரைமலரில் வீற்றிருக்கும் திருமகளைத் தனது திருமார்பிலே தரித்துள்ள திருமாலும்,
மறை வாய் நால்
உடையோன்
--- வேதம் சொல்லும் வாய்கள் நான்கினை உடையவனான பிரமதேவனும்,
மலி வானவர் கோமான் --- கூட்டமான தேவர்களின்
தலைவனான இந்திரனும்,
முநிவோர் முதல்
யாரும்
--- முநிவர்கள் முதலிய யாவரும்,
இயம்பு வேதம் பூராயம்
அதாய் மொழி நூல்களும் ஆராய்வது இலாத அடல் ஆசுரர் போரால் --- சொல்லப்படும்
வேதப்பொருளை ஆராய்ந்து கூறும் நூல்களை ஆராய்ந்து அறிந்து ஒழுகுதல் இல்லாத, உடல் வலிமை மட்டுமே
உள்ள அரக்கர்கள் செய்யும் போரினால்
உறு பீதியின் மறைவாய்
வந்து கூடி
--- உண்டான பீதியினால் மறைவாக ஒன்று கூடி வந்து,
ஈசனை பாமாலைகளால் தொழுதே --- ஈசுவரனைப்
பாமாலைகளால் பாடித் தொழுது,
திருநீறு ஆர் தரு
மேனிய
--- திருநீறு நிறைந்து விளங்கும் திருமேனியரே!
தேன் இயல் கொன்றையோடு
--- தேன் பொதிந்த கொன்றை மலருடனே
நீர் ஏர் தரு சானவி --- நீர் ததும்பும்
கங்கை நதியும்,
மாமதி --- நிலவும்,
காகோதரம் --- பாம்பும்,
மாதுளை --- மாதுளம் பூவும்,
கூவிளை --- வில்வ இலைகளும்,
நேரோடம் --- நாவல் இலைகளும்,
விளாமுதல் ஆர் சடை எம்பிரானே --- விளா
இலைகளும் நிறைந்த திருச்சடையினை உடைய எங்கள் தனிப்பெரும்
தலைவரே!
நீ மாறு அருளாய் என --- (எங்கள்
கவலைக்கு ஒரு) மாற்றினை அருள்வாயாக என்றும்,
போமாறு இனி வேறு எது
ஓது எனவே
--- நாங்கள் உய்ந்து போகும் வழியினை அருள்வாயாக என்றும் முறையிடவும்,
ஆர் அருளால் --- நிறைந்த
பேரருளால்,
அவர் ஈதரு போர் வேலவ --- சிவபரம்பொருள்
தந்தருளிய, போருக்கு உரிய
வேலினைத் திருக்கரத்தில் தரித்தவரே!
நீல கலாவி இவர்ந்து --- நீலமயில் மீது
ஏறி,
நீடு பூலோகமொடே
அறுலோகமும்
--- நீண்ட இந்தப் பூவுலகத்துடன் மற்ற ஆறு உலகங்களையும்
நேர் ஓர் நொடியே
வருவோய்
--- நேராக ஒரே நொடிப் பொழுதிலே வலமாக வந்தவரே!
சுர சேனாபதி ஆயவனே --- தேவர்களின் சேனைக்கு
அதிபதி ஆனவரே!
அடிநாள் அசுர ஈசரையே
சாடிய கூர் வடிவேலவ ---அந்நாளில் அசுரர்களின் தலைவனான சூரபதுமன் முதலியவர்களை அழித்த
கூரிய வேலாயுதத்தை உடையவரே!
கார் ஆர் தரு
காழியின் மேவிய தம்பிரானே --- மேகங்கள் நிறைந்த சீகாழிப்பதியில்
வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவரே!
உனை அன்பினோடும் --- உம்மை அன்போடு,
காமா --- அழகரே!
சோம சம அறு ஆனன --- முழுநிலவினை ஒத்த
ஆறு திருமுகங்களை உடையவரே!
தாமா --- உயிர்களுக்குக்
கதிரவனைப் போன்றவரே!
மணம் ஆர்தரு நீப --- மணம் நிறைந்த
கடப்பமலர் மாலையை அணிந்தவரே!
சுதாமா --- ஒளி வடிவினரே!
எனவே துதியாது --- என்றெல்லாம்
துதித்து வழிபடாது,
உழல் வஞ்சனேனைக் காவாய் --- உழலுகின்ற
வஞ்சகனாகிய என்னைக் காத்து அருள்வாயாக.
பொழிப்புரை
தாமரைமலரில் வீற்றிருக்கும் திருமகளைத்
தனது திருமார்பிலே தரித்துள்ள திருமாலும், வேதம் சொல்லும் வாய்கள் நான்கினை உடையவனான
பிரமதேவனும், கூட்டமான தேவர்களின்
தலைவனான இந்திரனும், முநிவர்கள் முதலிய
யாவரும், சொல்லப்படும்
வேதப்பொருளை ஆராய்ந்து கூறும் நூல்களை ஆராய்ந்து அறிந்து ஒழுகுதல் இல்லாத, உடல் வலிமை மட்டுமே
உள்ள அரக்கர்கள் செய்யும் போரினால் உண்டான பீதியினால் மறைவாக ஒன்று கூடி வந்து, ஈசுவரனைப்
பாமாலைகளால் பாடித் தொழுது, திருநீறு பொலிந்து
இலங்கும் திருமேனியரே! தேன் பொதிந்த கொன்றை மலருடனே நீர்
ததும்பும் கங்கை நதியும், நிலவும், பாம்பும், மாதுளம் பூவும், வில்வ இலைகளும், நாவல் இலைகளும், விளா இலைகளும் நிறைந்த திருச்சடையினை உடைய எங்கள் தனிப்பெரும்
தலைவரே! எங்கள் கவலைக்கு ஒரு
மாற்றினை அருள் புரிந்து, நாங்கள் உய்ந்து போகும் வழியினை அருள்வாயாக என்று முறையிடவும், நிறைந்த பேரருளால், அந்தச் சிவபரம்பொருள்
தந்தருளிய, போருக்கு உரிய
வேலினைத் திருக்கரத்தில் தரித்தவரே!
நீலமயில் மீது ஏறி, நீண்ட இந்தப் பூவுலகத்துடன் மற்ற ஆறு உலகங்களையும் நேராக ஒரே நொடிப் பொழுதிலே வலமாக வந்தவரே!
தேவர்களின் சேனைக்கு அதிபதி ஆனவரே!
அந்நாளில் அசுரர்களின் தலைவனான சூரபதுமன்
முதலியவர்களை அழித்த கூரிய வேலாயுதத்தை உடையவரே!
மேகங்கள் நிறைந்த சீகாழிப்பதியில்
வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவரே!
உம்மை அன்போடு, அழகரே! முழுநிலவினை ஒத்த ஆறு திருமுகங்களை
உடையவரே! உயிர்களுக்குக்
கதிரவனைப் போன்றவரே! மணம் நிறைந்த கடப்பமலர்
மாலையை அணிந்தவரே! ஒளி வடிவினரே! என்றெல்லாம் துதித்து வழிபடாது உழலுகின்ற வஞ்சகனாகிய என்னைக் காத்து அருள்வாயாக.
விரிவுரை
இத்
திருப்புகழின் பெரும்பகுதி கந்தபுராணத்தினை விளக்குவதாக அமைந்துள்ளது.
பூமாது
உரமே அணி மால் ---
பூ
- "பூ எனப்படுவது பொறிவாழ் பூவே" எனச் சிவப்பிரகாச சுவாமிகள் அருளினர்.
எனவே, பூ என்பது தாமரை மலரையே
குறிக்கும். தாமரைக்குப் பங்கயம் என்றும் பெயர் உண்டு. சேற்றில் மலர்வது என்று
பொருள்.
பூமாது
- திருமகள்.
உரம்
- மார்பு.
"பங்கயத்து
இருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன்" வைத்தான் என்பது கம்பராமாயணம்.
"திருமருமார்பினன்"
என்பது திவ்விய பிரபந்தம்.
மறை
வாய் நால் உடையோன் ---
வாய்
நால் உடையவன் - நான்கு வாய்களை உடையவன், பிரமதேவன்.
நான்முகன்.
வேதங்களை
ஓதுவதால் அவருக்கு வேதா என்ற பெயர் அமைந்தது.
மலி
வானவர் கோமான் ---
தேவர்களின்
கூட்டத்திற்குத் தலைவனான இந்திரன்.
இயம்பு
வேதம் பூராயம் அதாய் மொழி நூல்களும் ஆராய்வது இலாத அடல் ஆசுரர் போரால் ---
"அசுரர்"
என்னும் சொலு முதல் நீண்டு, "ஆசுரர்" என
வந்தது.
இறைவனைப்
புகழ்ந்து பாடியும், புகழ்ந்து பாடி
வழிபடுவதற்கும் நெறியைக் காட்டும் வேதங்களின் உண்மைப் பொருளை முழுதுமாக ஆராய்ந்து
சொல்லப்பட்டுள்ள சிவாகம நூல்களில் ஆராய்ச்சி அறிவு இல்லாதவர்கள் அரக்கர்கள். உள்ள
வன்மை இல்லாதவர்கள். உடல் வன்மை மட்டுமே உள்ளவர்கள். அவர்கள் தேவர்களோடு போர்
புரிந்தனர்
உறு
பீதியின் மறைவாய் வந்து கூடி, ஈசனை
பாமாலைகளால் தொழுதே ---
அரக்கர்களின்
போரினால் உண்டான அச்சத்துடன், எல்லோரும்
ஒருங்கு மறாவாய் வந்து கூடினார்கள். ஈசுவரனைப் பாமாலைகளால் பாடித் தொழுது துதித்தார்கள்.
திருநீறு
ஆர் தரு மேனிய
---
சிவபெருமான்
திருநீறு பூசிய திருமேனியன் என்பதைப் பின்வரும் பிரமாணங்களால் அறிக....
"நீறுஆர்
திருமேனியர்" ஊனம்இலார்பால்
ஊறுஆர்
சுவை ஆகிய உம்பர் பெருமான்
வேறு
ஆர் அகிலும் மிகு சந்தனம் உந்தி
ஆறுஆர்
வயல் அன்பில் ஆலந்துறையாரே. --- திருஞானசம்பந்தர்.
"நீறுஆர்அகலம்
உடையார்" நிரை ஆர்
கொன்றை அரவோடும்
ஆறுஆர்சடையார், அயில் வெங்கணையால்
அவுணர் புரமூன்றும்
சீறா
எரிசெய் தேவர் பெருமான்,
செங்கண் அடல்வெள்ளை
ஏறுஆர்கொடியார், உமையாளோடும்
ஈங்கோய் மலையாரே. ---
திருஞானசம்பந்தர்.
"நீறுஆர்
தருமேனியன்" நெற்றியொர் கண்ணன்
ஏறுஆர்
கொடி எம் இறை, ஈண்டு எரியாடி
ஆறுஆர்
சடை அந்தணன், ஆயிழையாளோர்
கூறான்
நகர்போல் குரங்காடுதுறையே. --- திருஞானசம்பந்தர்.
ஏறுஏறி
ஏழ்உலகும் ஏத்த நின்றார்
இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்
"நீறுஏறு
மேனியார்" நீலம் உண்டார்
நெருப்புஉண்டார் அங்கை அனலும் உண்டார்
ஆறுஏறு
சென்னியார் ஆனஞ்சு ஆடி
அனல்உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்
பாறுஏறு
வெண்தலையார் பைங்கண் ஏற்றார்
பலிஏற்றார் பந்தணை நல்லூராரே. --- அப்பர்.
"நீறுஏறு
திருமேனி" உடையான் கண்டாய்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான்
கண்டாய்
கூறுஆக
உமைபாகம் கொண்டான் கண்டாய்
கொடியவிடம் உண்டுஇருண்ட கண்டன் கண்டாய்
ஏறுஏறி
எங்குந் திரிவான் கண்டாய்
ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய்
மாறுஆனார்
தம்அரணம் அட்டான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் தானே. --- அப்பர்.
"பவளமால் வரையைப் பனிபடர்ந்து
அனையது ஓர் படர் ஒளிதரு திருநீறும்",
குவளை
மாமலர்க் கண்ணியும், கொன்றையும்,
துன்றுபொற் குழல்திருச் சடையும்,
திவள
மாளிகை சூழ்தரு
தில்லையுள்திரு நடம்புரி கின்ற
தவள
வண்ணனை நினைதொறும்
என்மனம் தழல்மெழுகு ஒக்கின்றதே. ---
திருவிசைப்பா.
தேன்
இயல் கொன்றையோடு ---
தேன் பொதிந்த கொன்றை மலர் சிவபெருமானுக்கு உகந்த்து.
நீர்
ஏர் தரு சானவி
---
நீர்
ததும்பும் கங்கை நதி. பூவுலகிலே சன்னு
முனிவரின் காது வழியாக வெளிப்பட்டதால் ‘சானவி என்னும் பெயர் கங்கைக்கு உண்டானது.
‘சகரர் தம் பொருட்டு அருந்தவம்
பெரும் பகல் தள்ளி.
பகிரதன்
கொணர்ந்திடுதலால். “பகிரதி”ஆகி,
மகிதலத்திடைச்
சன்னுவின் செவி வழி வரலால்.
நிகர்
இல். “சானவி” எனப் பெயர் படைத்தது இந் நீத்தம். ---
கம்பராமாயணம்.
மாமதி ---
மதி
- சந்திரன். சிவபெருமானுடைய திருச்சடையைச் சார்ந்ததால், மதியானது மாமதி எனப் பெருமை பெற்றது.
காகோதரம் ---
பாம்பு.
பாம்புகளை தனது திருச்சடையிலும் உடலிலும் அணிந்தவர் சிவபெருமான். "பாம்பொடு திங்கள் பகை தீர்த்து
ஆண்டாய்" என்பார் அப்பர் பெருமான்.
கூவிளை
---
வில்வ
இலைகள். வில்வத்தால் சிவபெருமானை அரிச்சித்தல் சிறப்பு.
நேரோடம் ---
நாவல்
இலைகள்.
விளாமுதல்
ஆர் சடை எம்பிரானே ---
விளா
இலைகளும் நிறைந்த திருச்சடையினை உடைய தனிப்பெரும்
தலைவர் சிவபெருமான்.
நீ
மாறு அருளாய் என போமாறு இனி வேறு எது ஓது எனவே, ஆர் அருளால், அவர் ஈதரு போர் வேலவ ---
சூரபதுமன்
ஆதியர் புரியும் கொடுமைகளுக்கு அஞ்சி, திருமால், பிரமன், இந்திரன்
முதலியோர்,
திருக்கயிலைக்குப்
போந்து சிவபெருமானிடம், "நாங்கள் படும் துன்பத்திற்கு ஒரு மாற்றினை
அருள் புரிய வேண்டும். தங்களை விட்டால் எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை"
என்று குறையிரந்து நின்றனர். தனிப்பெருங்கருணையன் ஆன சிவபெருமான், அவர்களது குறை
தீரவும்,
சூரபதுமனாதியோர்
அழியவும்,
தன்னையே
நிகர்க்க,
ஒரு
புல்வனைத் தந்து, சூரபதுமனாதியோர் மீது போர் தொடுத்து வெல்வாயாக என்று
அருளினர்.
திருமுருகன் திரு
அவதாரத்தைக் கந்தபுராணம் புகலுமாறு காண்க.
அம்மை
ஓர் பாங்கு உற,
அரி
அணைக்கண் உறும்
எம்மை
ஆள் இறைவன் முன் எய்தியே, ஆங்கு அவன்
செம்மை
சேர் தாள்களைச் சென்னியால் தாழ்ந்து எழீஇப்
பொய்ம்மைதீர்
அன்பினால் இனையவா போற்றுவார்.
"நோக்கினும்
நுழைகிலை,
நுவலுகின்றது
ஓர்
வாக்கினும்
அமைகிலை,
மதிப்ப
ஒண்கிலை,
நீக்கரும்
நிலைமையின் நிற்றி எந்தை நீ,
ஆக்கிய
மாயம் ஈது அறிகிலோம் அரோ".
"இருமையும்
ஒருமையும் இரண்டும் ஒன்றிய
ஒருமையும்
அன்று என உலகம் யாவையும்
பெருமையின்
இயற்றிய பெரும! நின் செயல்
அருமறை
ஆனவும் அறிதற் பாலவோ".
"உருவொடு
தொழில் பெயர் ஒன்றும் இன்றியே
பரவிய
நீ அவை பரித்து நிற்பது
விரவிய
உயிர்க் கெலாம் வீடு தந்திடும்
கருணையதே
அலால் கருமம் ஆவதே".
"அவ்வுயிர்
யாவும் நின் அருள் இலா வழிச்
செய்வினை
புரிகில சிறிதும், ஆதலால்
வெவ்விய
நயப்பொடு வெறுப்பிலாத நீ
எவ்வகையோ
உலகு இயற்றும் தன்மையே".
"முன்னதின்
முன் என மொழிதுமே எனில்,
பின்னதின்
பின்னுமாப் பேச நிற்றியால்,
அன்னவையே
எனில் ஒழிந்தது அல்லையோ?
என்
என நினையாம் ஏத்துகின்றதே?".
"புல்லிய
புரம் பொடித்ததுவும், காமனை
ஒல்
என எரித்தும் உனக்குச் சீர்த்தியோ?
எல்லையில்
விதி முதல் எனைத்தும் ஈண்டு நின்
நல்லருள்
ஆணையே நடாத்தும் என்கையால்".
"எங்களை
முன்னரே இயல்பின் ஈந்தனை,
எங்களை
இவ் அரசு இயற்றுவித்தனை,
எங்களொடு
ஒருவன் என்று இருத்தி நின் செயல்
எங்களின்
அறிவரிது" என்று போற்றினார்.
அவ்வகை
அமரர் எல்லாம் அன்பு செய்து ஏத்தும் எல்லை,
மைவரு
மிடற்றுப் புத்தேள் மற்று அவர் வதனம் நோக்கி,
"நொவ்வுறல்
எய்திச் சிந்தை நுணங்கினீர், நுங்கட்கு இன்னே
எவ்வரம்
எனினும் ஈதும்,
வேண்டியது
இசைத்திர் என்றான்.
என்றலும்
அமரர் சொல்வார்,
"யாம்
எலாம் இந்நாள் காறும்
வன்திறல்
அவுணர் தம்மால் வருந்தினம், அதனை நீங்கி
நன்றி
கொள் தொல்லை ஆக்கம் நண்ணுவான் ஆக, நின்பால்
ஒன்றுஒரு
வரம் வேண்டு உற்றாம், அதன் இயல்பு உரைத்தும்
அன்றே".
"மும்மையின்
உயிர்கள் பெற்ற முகிழ்முலைக் கன்னிஆகும்
அம்மையை
மணந்த தன்மை,
ஆங்கு
அவள் இடமா ஈங்கு ஓர்
செம்மலை
அளித்தற்கு அன்றே, தீவினைக் கடல்பட்டு உள்ள
எம்மை
ஆளுவதற்கு ஏதுக் காட்டிய இயற்கை அல்லால்".
"ஆதியும்
நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும்
வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும்
கடந்து நின்ற விமல! ஓர் குமரன் தன்னை
நீ
தரல் வேண்டும்,
நின்பால்
நின்னையே நிகர்க்க" என்றார்.
வந்திக்கும்
மலரோன் ஆதி வானவர் உரைத்தல் கேளா,
"புந்திக்குள்
இடர் செய்யற்க,
புதல்வனைத்
தருதும்" என்னா
அந்திக்கு
நிகர்மெய் அண்ணல் அருள்புரிந்து அறிஞர் ஆயோர்
சிந்திக்கும்
தனது தொல்லைத் திருமுகம் ஆறும் கொண்டான்.
நிற்புறும்
அமரர் யாரும் நெஞ்சு துண் என்ன, நீடும்
அற்புத
நீரர் ஆகி,
அருள்
முறை உன்னிப் போற்ற,
சிற்பரன்
தான் கொண்டு உள்ள திருமுகம் ஆறு தன்னில்
பொற்புறு
நுதல்கண்தோறும் புலிங்கம் ஒன்று ஒன்று தந்தான்.
புலிங்கம்
- தீப்பொறி.
ஆவது
ஓர் காலை,
ஈசன்
அறுமுக நுதல்கண் மாட்டே
மூவிரு
பொறிகள் தோன்றி,
முளரியான்
முதலா உள்ளோர்
ஏவரும்
அணுகல் செல்லா எல்லை நீர் வெம்மைத்து ஆகி,
பூவுலக
அண்டம் முற்றும் பொள் எனப் பராய அன்றே.
மாதண்டம்
குலவு நேமி வால்வளை வயிர வொள்வாள்
கோதண்டம்
பரித்தோன் வேதாக் குறித்து உணர் அரிய சோதி,
வேதண்டம்
பரவிற்று என்ன,
மேதினி
சூழ்ந்து,
விண்
போய்,
மூதண்டம்
காறும் சென்ற முதல்வன் கண் நுதலில் செந்தீ.
மங்கையோர்
பாங்கு உடை வள்ளல் ஏந்திய
செங்
கனல் ஊழியில் செறிவது ஆம் என
அங்கு
அவன் விழி பொழி அனலம் யாவையும்
எங்கு
உள உலகமும் ஈண்டல் உற்றவே.
ஆங்கனம்
தழல் எழ அகிலம் முற்றும் ஆய்
ஓங்கிய
கால்களும் உலை உற்று ஓய்ந்தன,
வாங்கிய
திரைக்கடல் வறந்தது, ஆயிடைத்
தீங்கனல்
வடவையும் செருக்கு நீங்கிற்றால்.
பக்கன
பாரகம் பதலை முற்று உற
நெக்கன
பணிகள் மெய் நெளித்து நீங்கிய,
திக்கயம்
அரற்றியே தியக்கம் உற்றன,
தொக்கன
உயிர்த்தொகை துளக்கம் உற்றவே.
காரணம்
இல்லவன் கண்ணில் கான்றதீப்
பேர்
அருள் புரிந்திடப் பிறந்த பான்மையால்,
ஓர்
உயிர் தன்னையும் ஒழிவு செய்தில,
ஆரையும்
எவற்றையும் அச்சம் செய்தவே.
அன்னதன்
வெம்மை கண்டு அமலன் பாங்கு உறை
கன்னியும்
வியர்த்தனள்,
கலங்கியே
எழீஇப்
பொன்னடி
நூபுரம் புலம்பித் தாக்குறத்
தன்னது
ஓர் உறையுளைச் சார ஓடினாள்.
முன்டகன்
ஆதியா முன்னர் நின்று உள
அண்டர்கள்
யாரும் அவ் அழல் கண்டு அஞ்சியே
விண்டனர், தலைத் தலை வெருவி
ஓடினார்,
பண்டு
எழு விடத்தினால் பட்ட பான்மை போல்.
தீங்கனல்
அடர்தலும் செம் பொன் கோயிலின்
யாங்கணும்
ஆகியே இரிந்த பண்ணவர்
வீங்கிய
உயிர்ப்பொடு மீண்டும் எந்தை தன்
பாங்கரில்
வந்தனர் பரியும் நெஞ்சினார்.
வலைத்
தலை மான் என,
வன்னி
சூழ்ந்துழி,
தலைத்
தலை இரிந்து உளோர் தம்மின் மீள்குறா
நலத்தகு
கண்ணுதல் நாதற் சேர்ந்தனர்
கலத்தலை
அகன்றிடாக் காகம் போலவே.
தோற்றிய
நுதல்விழிச் சுடரின் சூழ்வினுக்கு
ஆற்றலர்
ஆகியே அடைந்த வானவர்,
நால்
தடம் புயம் உடை ஞான நாயகர்
போற்றி
செய்து இனையன புகல்வது ஆயினார்.
"வெம்
திறல் அவுணரை வீட்டுதற்கு ஒரு
மைந்தனை
அருள்க என வந்து வேண்டினேம்,
அந்தம்
இல் அழலை நீ அருடல் செய்தனை,
எந்தையே
எங்ஙனம் யாங்கள் உய்வதே".
"பங்கு
உறை உமையவள் பாணியின் வரு
கங்கை
எவ்வுலகமும் கலந்ததாம் என
இங்கு
நின்நுதல் விழி இருந்து நீங்கிய
பொங்கு
அழல் எங்கணும் பொள் என்று ஈண்டிய".
"கற்றை
அம் சுடர்பொழி கனல்களின் தொகை
சுற்றி
எவ்வுலகமும் துவன்றல் உற்றவால்,
மற்றொரு
கணத்து அவை மாற்றிடாய் எனின்
முற்று
உயிர்த் தொகையையும் முடிவு செய்யும் ஆல்:.
"விஞ்சிய
பேரழல் வெம்மை ஆற்றலா
தம்
சினம் இரிந்த யாம், ஐய! நின் இரு
செம்
சரண் அடைந்தனம்,
தெரியின்
நீ அலால்
தஞ்சம்
உளது கொல் எம்மைத் தாங்கவே".
"மலக்குறு
மனத்தினேம் வருத்தம் முற்றவும்,
உலக்குற
நீக்கு நீ ஒல்லை எம்மிடை
அலக்கண
இயற்றுதி ஆயின்,
அன்னதை
விலக்குறு
நீரினார் வேறு யாவரே".
நிறைமுடிப்
பணிமிசை நிலனும் வானமும்
இறை
முடிக்கின்ற இவ் எரியை நீக்கியே,
பிறை
முடிக் கொண்டிடு பெரும! எம்முடைக்
குறை
முடித்து அருள்" எனக் கூறி வேண்டினார்.
அஞ்சலின்
அவர் புகழ் அண்ணல் ஆதியோர்
அஞ்சலி
செய்து இவை அறைந்து வேண்டலும்,
அஞலில்
அம் சடை அணிந்த நாயகன்
"அஞ்சலிர்"
என்று கை அமைத்துக் கூறினான்.
பொன்
மலை வில்லினான் புதிதின் வந்திடு
தன்
முகம் ஐந்தையும் கரந்து தாவில் சீர்
நன்
முகம் ஒன்றொடு நண்ணி அத்துணைத்
தொன்மையின்
இயற்கையாய்த் தோன்றி வைகினான்.
தன்
அருள் நிலைமையால் சண்முகத்து இடை
நல்நுதல்
விழிகளின் நல்கு தீப்பொறி
இந்
நில வரைப்பு வான் ஈண்டல் உற்றவை
முன்
உற வரும் வகை முதல்வன் முன்னினான்.
அந்தி
அம் பெருநிறத்து அமலன் அவ்வகை
சிந்தை
கொண்டு இடுவழிச் செறிந்த பேர் அழகன்
முந்தையின்
வெம் பொறி மூ இரண்டவாய்
வந்து
முன் குறுகலும் மகிழ்ந்து நோக்கினான்.
ஆதகு
காலையில் அமரர் தங்களுள்
ஓதகு
செயல் இலா உலவைத் தேவையும்
மூதகு
தீயையும் முகத்தையும் நோக்கு உறா
மேதகு
கருணையால் விமலன் கூறுவான்.
"நீங்கள்
இச்சுடர்களை நெறியில் தாங்கியே
வீங்கு
நீர்க் கங்கையில் விடுத்திர், அன்னவை
ஆங்கு
அவள் சரவணம் அமர உய்க்குமால்
ஈங்கு
இது நும் பணி" என்று இயம்பினான்.
கூற்று
உயிர் உண்ட தான் குழகன் இவ்வகை
சாற்றியது
உணர்தலும்,
தாழ்ந்து, மும்முறை
போற்றினர், நடுங்கினர், புலம்பு நெஞ்சினர்,
காற்றொடு
கனல் இவை கழறல் மேயினார்.
"ஒரு
நொடி அளவையின் உலகம் யாவுமாய்ப்
பெருகிய
இத்தழல்,
பெரும!
நின்னுடைத்
திருவருள்
நிலைமையால் சிறுகிற்று ஆதலால்
அரிது
அரிது அடியரேம் ஆற்றல் ஆகுமோ".
"ஈற்றினை
உலகினுக்கு இழைக்கு நின்கணே
தோற்றிய
கனலினைச் சுமத்தற்கு ஓர் கணம்
ஆற்றலை
உடையரோ அவனி கேள்வனும்
நால்
திசை முகம் உடை நளினத் தேவுமே".
"பண்டு
எழு விடத்தினில் பரந்த தீச்சுடர்
கண்டலும்
நின்றில் அம் கவல் உற்று ஓடினம்
அண்டவும்
வெருவுதும் அவற்றை யாந்தலைக்
கொண்டனம்
ஏகுதல் கூடல் பாலதோ?".
"அப்பெரும்
கனலினை அடைதற்கு உன்னினும்
வெப்பு
உறும் எமது உளம், வியர்க்கும் யாக்கையும்,
எப்பரிசு
ஏந்துவம் யாங்கள்" என்றலும்
துப்பு
உறழ் படர் சடைப் பகவன் சொல்லுவான்.
"ஒன்று
ஒரு நொடியினின் உலகம் முற்றும் ஆய்த்
துன்றிய
இச்சுடர் சுமந்து கங்கையில்
சென்றிட
நுங்கள் பால் திண்மை எய்துக"
என்றலும், "நன்று என"
இசைந்து போற்றினார்.
மற்று
அது தெரிதலும் மால் அயன் முதல்
சொற்றிடும்
அமரர்கள் துளக்கம் நீங்கு உறா
இற்றது
கொல் எமது இன்னல் இன்றெனா
உற்றனர்
உவகையை உடலம் விம்மினார்.
ஆங்ஙனம்
அவர் தமை ஆதி நோக்கி "இத்
தீங்
கனல் சரவணம் செறிந்து ஒர் செம்மலாய்
ஓங்குபு
சூர் கிளைக்கு ஒழிவு செய்யும் ஆல்
ஈங்கு
இனி யாவரும் ஏகுவீர்" என்றான்.
இறையவன்
இனையன இயம்ப,
"உய்ந்தனம்,
குறையிலம்
இனி" எனக் கூறி, கஞ்சம் மேல்
உறைபவன்
ஆதி ஆம் உம்பர் அன்னவன்
அறை
கழல் அடி தொழுது அங்கண் நீங்கினார்.
இதனை, கந்தர்
கலிவெண்பாவில் குமரகுருபர அடிகள் காட்டுமாறு காண்க.
....... ....... ....... தேசுதிகழ்
பூங்கயிலை
வெற்பில் புனைமலர்ப் பூங்கோதைஇடப்
பாங்கு
உறையும் முக்கண் பரஞ்சோதி, – ஆங்குஒருநாள்
வெந்தகுவர்க்கு
ஆற்றாத விண்ணோர் முறைக்கு இரங்கி,
ஐந்து
முகத்தோடு அதோமுகமும் - தந்து,
திருமுகங்கள்
ஆறுஆகி, செந்தழல்கண் ஆறும்
ஒருமுகமாய்த்
தீப்பொறி ஆறு உய்ப்ப, - விரிபுவனம்
எங்கும்
பரக்க, இமையோர் கண்டு
அஞ்சுதலும்,
பொங்கு
தழல்பிழம்பை பொன்கரத்தால் - அங்கண்
எடுத்து
அமைத்து, வாயுவைக்
"கொண்டு ஏகுதி"என்று,
எம்மான்
கொடுத்து
அளிப்ப, மெல்லக் கொடுபோய், - அடுத்தது ஒரு
பூதத்
தலைவ! "கொடுபோதி”, எனத் தீக்கடவுள்
சீதப்
பகீரதிக்கே சென்று உய்ப்ப, - போதுஒருசற்று
அன்னவளும்
கொண்டு அமைதற்கு ஆற்றாள், சரவணத்தில்
சென்னியில்
கொண்டு உய்ப்ப, திருவுருவாய் - முன்னர்
அறுமீன்
முலைஉண்டு, அழுது, விளையாடி,
நறுநீர்
முடிக்கு அணிந்த நாதன் - குறுமுறுவல்
கன்னியொடும் சென்று அவட்குக் காதல்
உருக்காட்டுதலும்,
அன்னவள்
கண்டு, அவ்வுருவம் ஆறினையும்
- தன்இரண்டு
கையால்
எடுத்து அணைத்து, கந்தன் எனப்பேர்
புனைந்து,
மெய்ஆறும்
ஒன்றாக மேவுவித்து, - செய்ய
முகத்தில்
அணைத்து, உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துள்
மகிழ் பூத்து அளித்து, - சகத்துஅளந்த
வெள்ளை
விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம்
உவப்ப உயர்ந்தோனே!
நீல
கலாவி இவர்ந்து, நீடு பூலோகமொடே
அறுலோகமும், நேர் ஓர் நொடியே
வருவோய்
---
முருகப்
பெருமான்,
தனது
வாகனமான நீலமயில்
மீது ஏறி, நீண்ட இந்தப் பூவுலகத்துடன்
மற்ற ஆறு உலகங்களையும் நேராக
ஒரே நொடிப் பொழுதிலே வலமாக வந்தார்.
எதிர்
உற்ற அசுரர்கள் படைகொடு சண்டைக்கு
இடம் வைத்திட, அவர் குல முழுதும் பட்-
டிட, உக்கிரமொடு வெகுளிகள் பொங்க, ......கிரியாவும்
பொடிபட்டு
உதிரவும், விரிவு உறும் அண்டச்
சுவர் விட்டு அதிரவும், முகடு கிழிந்து,அப்
புறம் அப் பரவெளி கிடுகிடு எனும் சத்
......தமும்ஆகப்
பொருது, கையில் உள அயில்நிணம் உண்க,
குருதிப் புனல் எழு கடலினும் மிஞ்ச,
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் ......
குமரேசா!
படியில்
பெருமித தகவு உயர் செம்பொன்
கிரியைத் தனிவலம் வர, அரன் அந்தப்
பலனை, கரிமுகன் வசம் அருளும்பொற்பு ......அதனாலே
பரன்
வெட்கிட, உளம் மிகவும் வெகுண்டு, அக்
கனியைத் தரவிலை என, அருள் செந்திற்
பழநிச் சிவகிரி தனில் உறை கந்தப் ......
பெருமாளே. --- ( புடவிக்கு)
திருப்புகழ்.
நாரத
முனிவர் ஒரு சமயம் பெருந்தவம் புரிந்தனர். அத்தவத்துக்கு இரங்கிய பிரமதேவர் ஒரு
மாதுளங்கனியைத் தந்தனர். அக்கனியை நாரதமுனிவர் சிவபெருமானுடைய திருவடியில் வைத்து
வணங்கினார்.
விநாயகமூர்த்தியும், முருகமூர்த்தியும் தாய் தந்தையரை வணங்கி
அக்கனியைக் கேட்டார்கள். “அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தவர்க்கு
இக் கனி தரப்படும்” என்று கூறியருளினார் சிவபெருமான்.
முருகவேள்
மயில் வாகனத்தின் மீது ஊர்ந்து அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம்
வந்தார். விநாயகப் பெருமான், அகில உலகங்களும்
சிவத்துக்குள் அடங்கி நிற்றலால்,
சிவமூர்த்தியை
வலம் வந்தார். “தேவரீருக்கு அன்னியமாக உலகம் இல்லையே” என்று கூறி வணங்கினார்.
பரமசிவன் விநாயகருக்குப் பழத்தை தந்தருளினார்.
உலகங்களை
வலம் வந்த வடிவேற்பெருமான் தனக்குக் கனி தராமையால் வெகுள்வார் போல் வெகுண்டு, சிவகிரியின் மேல்திசை நோக்கித் தண்டாயுதபாணியாக
நின்றார். சிவமூர்த்தியும் உமாதேவியாரும் கணங்கள் புடை சூழச்சென்று முருகவேளை
எடுத்து அணைத்து, “கண்மணி!
அரும்பு-சரியை; மலர் கிரியை; காய்-யோகம்; பழம்-ஞானம். நீ ஞானபண்டிதன். ஞானமாகிய
பழம் நீதான். பழநி நீ” என்றார். அதனால் அப்பதிக்கும் பழநி என நாமம் ஏற்பட்டது.
இந்த
வரலாற்றின் உட்பொருள்
(1) கணேசமூர்த்தி கந்தமூர்த்தி என்ற இருவரும் கனி கேட்டபோது சிவபெருமான் அப்பழத்தைப் பிளந்து பாதி பாதியாகத் தரலாம்.
(2) மற்றொரு பழத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாம். காரைக்கால் அம்மையார் வேண்ட மாங்கனியைத் தந்தவர்
தானே சிவபெருமான்.
(3) எல்லா உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வரும் ஆற்றல் வல்லமை கணபதிக்கும் உண்டு.
(4) உலகங்கள் யாவும் சிவத்துக்குள்
ஒடுங்கியிருக்கின்றன என்ற உண்மையை
ஞானபண்டிதனான முருகவேளும் அறிவார்.
ஆகவே, இவ்வரலாற்றின் உள்ளுறை தான் யாது? சிவத்துக்கு இரு தன்மைகள் உண்டு. ஒன்று
எல்லாவற்றிலும் சிவம் தங்கியிருக்கிறது. மற்றொன்று எல்லாப்பொருள்களும்
சிவத்துக்குள் ஒடுங்கி நிற்கின்றன.
இந்த
இரு கடவுள் தன்மைகளையும் உலகவர் உணர்ந்து உய்யும் பொருட்டு, விநாயகர் சிவத்துக்குள் எல்லாவற்றையும்
பார்த்தார். முருகர் எல்லாப் பொருள்களிலும் சிவத்தைப் பார்த்தார்.
சூரசம்மாரம்
முடிந்த்தும், மயில்
வாகனத்தில் ஏறி முருகப்பெருமான் உலகை வலம் வந்தனர் என்பதற்குப் பிரமாணமாக அடிகளார்
கூறுவது காண்க.
திடுக்கிடக்
கடல், அசுரர்கள் முறிபட,
கொளுத்து இசைக் கிரி பொடிபட, சுடர் அயில்
திருத்தி விட்டு, ஒரு நொடியினில் வலம்வரும் ...மயில்வீரா!
--- (தொடத்)
திருப்புகழ்.
..... ..... ..... விளங்கிய ...... மயில்ஏறி
அடையலர்கள்
மாள, ஒரு நிமிடந்தனில்
உலகை வலமாக நொடியினில் வந்து, உயர்
அழகிய சுவாமி மலையில் அமர்ந்துஅருள் ......
பெருமாளே.
--- (விடமும்வடி)
திருப்புகழ்.
சுர
சேனாபதி ஆயவனே
---
சுரர்
- தேவர்கள்.
தேவர்களின்
சேனைக்கு அதிபதி ஆனவர் முருகப் பெருமான். எனவே, அவர் தேவசேனாபதி என்று போற்றப்படுகின்றார்.
கார்
ஆர் தரு காழியின் மேவிய தம்பிரானே ---
மேகங்கள்
நிறைந்த சீகாழிப்பதியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் தனிப்பெரும்
தலைவர் முருகப் பெருமான்.
சீகாழி
என்னும் திருத்தலம் இயற்கை அழகும் வளமும் நிறைந்துள்ளது என்பதைத் திருஞானசம்பந்தப்
பெருமான் பாடியருளிய தேவாரப் பாடல்களால் அறியலாம்.
நெதியானை, நெஞ்சு இடங்கொள்ள நினைவார்தம்
விதியானை, விண்ணவர் தாம்வியந்து ஏத்திய
கதியானை, "கார்உலவும் பொழில்
காழியாம்
பதியானை", பாடுமின் நும்வினை பாறவே.
நீர்கொண்ட
சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட
கொன்றையினோடு எழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட
மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்துஉரைப்பக்
"கார்கொண்ட
வேணுபுரம்" பதியாகக் கலந்தீரே.
உனை
அன்பினோடும்
---
இறைவனை
உள்ளன்போடு துதித்து வழிபாடு ஆற்றவேண்டும். "அன்பாக
வந்து உன் தாள் பணிந்து" எனப் பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார் காட்டியுள்ளது
காண்க.
காமா
---
காமர்
- அழகு. காமா - அழகு வாய்ந்தவர்.
சோம
சம அறு ஆனன
---
சோமன்
- முழுநிலவு.
ஆனனம்
- திருமுகம்.
முழுநிலவினை
ஒத்த ஆறு திருமுகங்களை உடையவர் முருகப் பெருமான்
தாமா ---
தாமன்
- சூரியன்.
உயிர்களின்
அஞ்ஞான இருளை அகற்றி, ஞான ஒளியைப் பரப்புபவன்
இறைவன் என்பதால் தாமன் எனப்பட்டார்.
மணம்
ஆர்தரு நீப
---
நீபம்
- கடப்ப மலர்.
கடப்ப
மலர் முருகப் பெருமானுக்கு உகந்தது. "கடம்பன்" என்றே முருகனுக்குப் பெயர்
வங்குவது காண்க.
சுதாமா ---
சு
- நல்ல. தாமன் - ஒளி வடிவினன்.
ஒளி
என்பது அறிவைக் குறிக்கும். நல்ல ஒளி என்பது ஞானத்தைக் குறிக்கும்.
கருத்துரை
முருகா!
உம்மைத் துதித்து வழிபடாத வஞ்சகனாகிய என்னைக் காத்து அருள் புரிவாய்.
No comments:
Post a Comment