அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சருவி இகழ்ந்து
(சீகாழி)
முருகா!
உன்னைப் பாடி வழிபடுதலை
ஒருக்காலும் மறவேன்.
தனதன
தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன ...... தனதான
சருவி
யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி
தலையரு நின்று கலங்க விரும்பிய ......
தமிழ்கூறுஞ்
சலிகையு
நன்றியும் வென்றியு மங்கள
பெருமைக ளுங்கன முங்குண மும்பயில்
சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் ......
தனிவேலும்
விருது
துலங்க சிகண்டியி லண்டரு
முருகி வணங்க வரும்பத மும்பல
விதரண முந்திற முந்தர முந்தினை ...... புனமானின்
ம்ருகமத
குங்கும கொங்கையில் நொந்தடி
வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல
விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல்
...... மறவேனே
கருதியி
லங்கை யழிந்துவி டும்படி
அவுணர டங்கம டிந்துவி ழும்படி
கதிரவ னிந்து விளங்கி வரும்படி ......
விடுமாயன்
கடகரி
யஞ்சி நடுங்கி வருந்திடு
மடுவினில் வந்துத வும்புய லிந்திரை
கணவன ரங்க முகுந்தன் வருஞ்சக ...... டறமோதி
மருது
குலுங்கி நலங்க முனிந்திடு
வரதன லங்கல் புனைந்தரு ளுங்குறள்
வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை ...... தொடுமீளி
மருகபு
ரந்தர னுந்தவ மொன்றிய
பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர்
மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
சருவி
இகழ்ந்து மருண்டு வெகுண்டு உறு
சமயமும் ஒன்று இலை என்றவரும், பறி
தலையரும் நின்று கலங்க, விரும்பிய ...... தமிழ்கூறும்
சலிகையும், நன்றியும், வென்றியும், மங்கள
பெருமைகளும் கனமும் குணமும் பயில்
சரவணமும் பொறையும் புகழும் திகழ் ......
தனிவேலும்
விருது
துலங்க சிகண்டியில் அண்டரும்
அருகி வணங்க வரும் பதமும், பல
விதரணமும், திறமும், தரமும், தினை ...... புனமானின்
ம்ருகமத
குங்கும கொங்கையில் நொந்து, அடி
வருடி மணந்து புணர்ந்ததுவும் பல
விஜயமும் அன்பின் மொழிந்து மொழிந்து இயல்
...... மறவேனே
கருதி
இலங்கை அழிந்து விடும்படி
அவுணர் அடங்க மடிந்து விழும்படி
கதிரவன் இந்து விளங்கி வரும்படி ...... விடுமாயன்
கடகரி
அஞ்சி நடுங்கி வருந்திடு
மடுவினில் வந்து உதவும் புயல், இந்திரை
கணவன் அரங்க முகுந்தன் வருஞ்சகடு ......அறமோதி
மருது
குலுங்கி நலங்க முனிந்திடு
வரதன் அலங்கல் புனைந்து அருளும் குறள்
வடிவன் நெடுங்கடல் மங்க ஒர் அம்பு கை ...... தொடுமீளி
மருக!
புரந்தரனும் தவம் ஒன்றிய
பிரமபுரந்தனிலும் குகன் என்பவர்
மனதினிலும் பரிவு ஒன்றி அமர்ந்தருள் ......
பெருமாளே.
பதவுரை
கருதி இலங்கை அழிந்துவிடும்படி --- இராவணனின் பிழையையும், சீதாதேவியைச் சிறைவிடுப்பதையும் கருத்தில் கொண்டு, இலங்கை அழிந்து போகும்படியும்,
அவுணர் அடங்க மடிந்து
விழும்படி
--- அரக்கர் யாவரும் இறந்து விழும்படியும்,
கதிரவன் இந்து
விளங்கி வரும்படி விடுமாயன் --- சூரியனும், சந்திரனும் பழைய தமது முறைப்படி
ஒளியுடன் வரும்படியும் மாயம் புரிந்தவராகிய இரகுராமர்,
கடகரி அஞ்சி நடுங்கி
வருந்திடு மடுவினில் --- மதயானையாகிய கஜேந்திரன் பயந்து நடுக்கமுற்று வருந்தி
நின்ற மடுவினில்
வந்து உதவும் புயல் --- வந்து உதவிய
மேகவண்ணப் பெருமாள்,
இந்திரை கணவன் --- இலக்குமிதேவியின்
கணவர்,
அரங்க முகுந்தன் --- திருவரங்கத்தில்
பள்ளி கொண்ட முகுந்தர்,
வரும் சகடு அற மோதி --- தன்னைக் கொல்ல வந்த
சகடாசுரனை திருவடியால் மோதிக் கொன்று,
மருது குலுங்கி நலங்க
முனிந்திடு வரதன் --- மருதமரம் குலுங்கி நொறுங்கிப் போகக் கோபித்த வரதர்,
அலங்கல் புனைந்து அருளும்
குறள் வடிவன்
---மாலையைச் சூடியருளும் வாமனமூர்த்தி,
நெடுங்கடல் மங்க ஒர்
அம்பு கை தொடுமீளி --- பெரிய கடல் வற்றிப் போகுமாறு ஒப்பற்ற அம்பைத் தொடுத்தவராகிய
திருமாலின்
மருக --- திருமருகரே!
புரந்தரனும் தவம் ஒன்றிய
பிரமபுரம் தனிலும் --- இந்திரன் தவம் புரிந்த பிரமபுரம் என்ற சீகாழிப் பதியிலும்,
குகன் என்பவர்
மனதினிலும்
--- குகனே என்று உளம் உருகக் கூறுகின்ற அடியவர் மனத்திலும்,
பரிவு ஒன்றி அமர்ந்து
அருள் பெருமாளே --- அன்பு பொருந்த வீற்றிருந்து அருளும் பெருமையில்
மிக்கவரே!
சருவி --- வாதம் புரிந்தும்,
இகழ்ந்து --- வாதத்தில் அவமதித்தும்,
மருண்டு --- வாதத்திற்கு அஞ்சியும்,
வெகுண்டு --- சினந்தும்,
உறு சமயமும் ஒன்று இ(ல்)லை என்றவரும் ---
பிற சமயங்கள் கூறும் தெய்வங்கள் இல்லை
என்பவர்களும் ஆகிய புத்தர்களும்,
பறி தலையரும் --- தலை மயிரைப்
பறிப்பவர்களான சமணர்களும்,
நின்று கலங்க
விரும்பிய தமிழ்கூறும் --- நின்று கலங்கும்படியாக விரும்பத்தக்க தமிழ்ப்பாடல்களைக் கூறுகின்ற,
சலிகையும் --- தேவரீரது
செல்வாக்கையும்,
நன்றியும் --- அதனால் விளைந்த
நலங்களையும்,
வென்றியும் --- தேவரீர் பெற்ற
வெற்றியையும்,
மங்கள பெருமைகளும் --- உமது மங்கலம் பொருந்திய
பெருமைகளையும்,
கனமும் ---
சிறப்புக்களையும்,
குணமும் --- நற்குணங்களையும்,
பயில் சரவணமும் --- தேவரீர்
குழந்தையாய் விளையாடிய சரவணப் பொய்கையையும்,
பொறையும் --- பொறுமையையும்,
புகழும் --- பொருள் சேர் புகழையும்,
திகழ் தனிவேலும் --- விளங்குகின்ற ஒப்பற்ற வேலாயுதத்தினையும்,,
விருது துலங்க --- வெற்றிச்
சின்னங்கள் முழங்க,
சிகண்டியில் --- மயில் வாகனத்தினை
மீது ஏறி,
அண்டரும் உருகி வணங்க வரும் பதமும் ---
தேவர்களும் மனமுருகி வணங்க வருகின்ற திருவடிகளையும்,
பல விதரணமும் --- பலவிதமான அருளையும்,
திறமும் --- வலிமையையும்,
தரமும் --- மேன்மையையும்,
தினை புனமானின் --- தினைப்புனத்தில்
காவல் கொண்டு இருந்த மான்மகளாகிய வள்ளிநாயகியின்
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து --- மான்மதமும், குங்குமம் அணிந்த கொங்கைகளின் அழகில்
மயங்கி மனம் நொந்து,
அடிவருடி மணந்து
புணர்ந்ததுவும் --- அம்மையாரது திருவடியை வருடி, அவரைத் திருணம் புணர்ந்து, கூடி
மகிழ்ந்ததையும்,
பல விஜயமும் அன்பில் மொழிந்து மொழிந்து இயல் மறவேனே --- இன்னும் பல வெற்றிகளைக் கொண்ட அருள்
திருவிளையாடல்களையும் உள்ளன்போடு பலமுறை சொல்லித் துதிப்பதை அடியேன் மறக்கமாட்டேன்.
பொழிப்புரை
இராவணனின் பிழையையும், சீதாதேவியைச் சிறைவிடுப்பதையும் கருத்தில் கொண்டு, இலங்கை அழிந்து போகும்படியும், அரக்கர் யாவரும் இறந்து விழும்படியும்,
சூரியனும், சந்திரனும் பழைய தமது முறைப்படி
ஒளியுடன் வரும்படியும் மாயம் புரிந்தவராகிய இராம்பிரான். மதயானையாகிய கஜேந்திரன் பயந்து
நடுக்கமுற்று வருந்தி நின்ற மடுவினில்
வந்து
உதவிய மேகவண்ணப் பெருமாள். இலக்குமிதேவியின்
கணவர். திருவரங்கத்தில்
பள்ளி கொண்ட முகுந்தர். தன்னைக் கொல்ல வந்த
சகடாசுரனை திருவடியால் மோதிக் கொன்று, மருதமரம்
குலுங்கி நொறுங்கிப் போகக் கோபித்த வரதர் ஆகிய கண்ணபிரான். மாலையைச் சூடியருளும் வாமனமூர்த்தி. பெரிய கடல் வற்றிப் போகுமாறு ஒப்பற்ற
அம்பைத் நொடுத்தவராகிய திருமாலின் திருமருகரே!
இந்திரன் தவம் புரிந்த பிரமபுரம் என்ற
சீகாழிப் பதியிலும், குகனே
என்று உளம் உருகக் கூறுகின்ற அடியவர் மனத்திலும், அன்பு பொருந்த வீற்றிருந்து அருளும் பெருமையில் மிக்கவரே!
சமயங்களுக்கு இடையே வாதம் புரிந்தும், வாதத்தில் அவமதித்தும், வாதத்திற்கு அஞ்சியும், சினந்தும், பிற சமயங்கள் கூறும் தெய்வங்கள் இல்லை
என்பவர்களும் ஆகிய புத்தர்களும்,
தலைமயிரைப்
பறிப்பவர்களான சமணர்களும், நின்று கலங்கும்படியாக விரும்பத்தக்க தமிழ்ப்பாடல்களைக் கூறுகின்ற, தேவரீரது செல்வாக்கையும், அதனால் விளைந்த நலங்களையும், தேவரீர் பெற்ற வெற்றியையும், உமது மங்கலம் பொருந்திய பெருமைகளையும், சிறப்புக்களையும், நற்குணங்களையும், தேவரீர் குழந்தையாய் விளையாடிய சரவணப் பொய்கையையும், பொறுமையையும், பொருள் சேர் புகழையும், தேவரீரது திருக்கையில் விளங்குகின்ற ஒப்பற்ற
வேலாயுதத்தினையும், வெற்றிச்
சின்னங்கள் முழங்க, மயில் வாகனத்தினை
மீது ஏறி,தேவர்களும்
மனமுருகி வணங்க வருகின்ற திருவடிகளையும், பலவிதமான
அருளையும், வலிமையையும், மேன்மையையும்,
தினைப்புனத்தில்
காவல் கொண்டு இருந்த மான்மகளாகிய வள்ளிநாயகியின் மான்மதமும், குங்குமம் அணிந்த கொங்கைகளின் அழகில்
மயங்கி மனம் நொந்து, அம்மையாரது திருவடியை
வருடி, அவரைத் திருணம்
புணர்ந்து,
கூடி
மகிழ்ந்ததையும், இன்னும் பல வெற்றிகளைக் கொண்ட அருள்
திருவிளையாடல்களையும் உள்ளன்போடு பலமுறை சொல்லித் துதிப்பதை அடியேன் மறக்கமாட்டேன்.
விரிவுரை
கருதி
இலங்கை அழிந்துவிடும்படி,
அவுணர்
அடங்க மடிந்து விழும்படி,
கதிரவன்
இந்து விளங்கி வரும்படி விடுமாயன் ---
இராவணன்
சீதையைச் சிறை பிடித்தது பிழை அன்று என்றும், தன் தங்கை சூர்ப்பணகையை இலட்சுமணன் மூக்கு
அறுத்தபடியால் பழிக்குப் பழி வாங்கும் பொருட்டுச் சீதையைச் சிறை பிடித்தான். ஆகவே
அது வீரச் செயல் என்றும், இராவணன் சீதையைச்
சிறைப் பிடித்தானே அன்றி பத்து மாதகாலமாக அவளைத் தீண்டாமல் இருந்ததுவே அவன்
பெருந்தன்மைக்கு அறிகுறி என்றும் வாதிக்கின்றவர்களும் உண்டு.
இராவணன்
தன் தங்கை சூர்ப்பணகையின் மூக்கரிந்த இராம லட்சுமணரைப் பழிக்குப் பழி வாங்க
நினைத்திருப்பான் ஆயின், ’இன்ன நேரத்தில் நான்
வருவேன்’ என்று ஓர் அறிக்கை மூலம் எச்சரிக்கைத் தந்து, அதுபடி சென்று போர் புரிந்து, இராம லட்சுமணரை வென்று, சீதையைச் சிறை எடுப்பது அல்லவா வீரச்
செயல்? அதுதானே, வீரர்கட்கு முறை? அப்படிக்கு இன்றி, மான் அனுப்பி, மான் பின்னே இராம லட்சுமணர்கள் சென்ற
பின், சன்னியாச வடிவில்
வந்து, அன்னங்கேட்டு, அன்னமிட வந்த சீதையைக் கன்னமிட்டனன்.
இராமர் இல்லாதபோது ஒரு பெண்மணியைச் சிறை செய்வது என்ன முறை? ஆகவே, இராவணன் செய்தது வீரச்செயல் அன்று, காம மயக்கத்தால் செய்த வஞ்சனைச் செயல்.
இராவணன்
புரிந்த அடாத செயலாகிய சானகியைக் கவர்ந்து சென்றதையும், அவன் தனது பராக்கிரமத்தால் தேவர்களைக்
கொடுமைப்படுத்தி வந்ததும் ஆகிய செயல்களைக் கருதி, இராம்பிரான் அவனையும்
அவனது குலத்தையும் வேரோடு அறுத்து அழித்து, சீதாதேவியை மீட்டார்.
திருமால்
இராமபிரானாக அவதரித்து, இராவணாதி அவுணரை
வென்றனர். வெற்றி என்பது ஸ்ரீராமருக்கு மிகவும் உரியது. அவருடைய கணை வெற்றி பெறாது
மீளாது. அதனால் "ஸ்ரீராம ஜெயம்" என்று குறிக்கின்ற வழக்கம் ஏற்பட்டது.
இராவணனுடைய
ஆணைக்கு அஞ்சி இலங்கையில் சூரியன் தேர் செல்ல மாட்டாது வருந்தினான். இராவண வதம்
நிகழ்ந்ததால், சூரியன்
பழையபடிக்கு தனது தேரை உங்கமெங்கும் செலுத்தி வந்தான்.
"நாள்
முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்,
கோள்
பிடித்து ஆர்த்த கையான், கொடியன், மா வலியன் என்று
நீள்
முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கல் உற்றான்
தோள்முடி
நெரிய வைத்தார் தொல் மறைக்காடனாரே". ---
திருஞானசம்பந்தர்.
“பகலவன் மீது இயங்காமை
காத்த பதியோன்” --- திருஞானசம்பந்தர்
“பகலவன் மீதியங்காத
இலங்கை” --- பெரியதிருமொழி
புணரியில்
விரவி எழுந்த ஞாயிறு
விலகிய புரிசை இலங்கை வாழ்பதி
பொலமணி மகுட சிரங்கள் தாம்ஒரு ...... பதும்
மாறிப்
புவிஇடை
உருள முனிந்து, கூர்கணை
உறுசிலை வளைய வலிந்து நாடிய,
புயல், அதி விறல் அர், விண்டு, மால், திரு ......மருகோனே!
--- (நிணமொடு)
திருப்புகழ்.
உததி
புதை பட அடைத்து, ஆதவன்
நிகர் இல் இரதமும் விடுக்கா, நகர்
ஒரு நொடியில் வெயில் எழ, சாநகி ...... துயர்தீர,
உபய
ஒருபது வரைத் தோள்களும்
நிசிசரர்கள் பதி தச க்ரீவமும்,
உருள ஒருகணை தெரித்தானும்... --- (மதனதனு) திருப்புகழ்.
தேர்
இரவி உட்கிப் புகா முது புரத்தில்,
தெசா
சிரனை மர்த்தித்த ...... அரிமாயன் சீர்மருக! --- திருப்புகழ்.
கடகரி
அஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்து உதவும் புயல் ---
மதயானையாகிய
கஜேந்திரன் பயந்து நடுக்கமுற்று வருந்தி நின்ற மடுவினில் வந்து அதற்கு உதவ புரிந்து அருளியவர்
மேகவண்ணப் பெருமாள் ஆகிய திருமால்.
கயேந்திரனுக்குத்
திருமால் அருள் புரிந்த வரலாறு
திருப்பாற்
கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம்
உடையதாயும், பெரிய ஒளியோடு
கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு
பெரிய மலை இருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த்தருக்கள் நிறைந்து
எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர்
நிலைகளும் நவரத்தின மயமான மணல் குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு
செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய
இமையவரும், அப்சர மாதர்களும்
வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். நல்ல
தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத் தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது.
அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம்.
அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற
ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே
சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித்
தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண்
யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக்
கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக்
கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி
பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த
யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும்
ஆயிரம் ஆண்டுகள் போர் நிகழ்ந்தது.
கஜேந்திரம்
உணவு இன்மையாலும் முதலையால் பல ஆண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது.
யாதும் செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது.
திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில்
செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு,
உடனே
கருடாழ்வான்மீது தோன்றி, சக்கரத்தை விட்டு
முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம்
தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தல் தொழிலை மேற்கொண்ட
நாராயணர், காத்தல் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை
நீக்கி இன்பத்தை நல்கினர்.
“மதசிகரி கதறிமுது
முதலை கவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
வருகருணை வரதன்” --- சீர்பாதவகுப்பு.
யானை
பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான்
கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன்
நீ இந்த வேலையைச் செய் என்று ஒருவனுக்குக் கொடுத்துள்ள போது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன்
கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமை அல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டும் என்று
அப்பணியாளன் வாளா இருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை
நிறைவேற்ற நாராயணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.
மலர்த்தேன்
ஓடையில் ஓர் மா ஆனதை
பிடித்தே நீள் கர வாதாடு ஆழியை
மனத்தால் ஏவிய மா மால் ஆனவர் ......மருகோனே! --- (அனுத்தேன்)
திருப்புகழ்.
வாரணம்
மூலம் என்ற போதினில், ஆழி கொண்டு,
வாவியின் மாடு இடங்கர் பாழ்படவே, எறிந்த
மாமுகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன்
...... மருகோனே!
--- (பூரணவார)
திருப்புகழ்.
நுதி
வைத்த கரா மலைந்திடு
களிறுக்கு அருளே புரிந்திட,
நொடியில் பரிவாக வந்தவன் ...... மருகோனே! --- (பகர்தற்கு)
திருப்புகழ்.
இந்திரை
கணவன்
---
இந்திரை
- திருமகள்.
இலக்குமிதேவியின்
கணவர் திருமால்.
அரங்க
முகுந்தன்
---
முகுந்தம்
என்பது குபேரனிடத்தில் உள்ள நவநிதிகளில் ஒன்று.
ஆன்மாக்களுக்கு
நவநிதி போன்றவர் திருமால். அவர் திருவரங்கத்தில் பள்ளிகொண்ட திருக்கோலத்தில்
உள்ளார்.
திருப்பாற்கடலைத்
தனது அரங்கமாகக் கொண்டு அறிதுயில் புரிகின்றார்.
வரும்
சகடு அற மோதி, மருது குலுங்கி நலங்க
முனிந்திடு வரதன் ---
தன்னைக் கொல்ல வந்த சகடாசுரனை திருவடியால் மோதிக் கொன்றவர். மருதமரம் குலுங்கி நொறுங்கிப் போகக் கோபித்த வரதர்.
சகடாசூரனைக் கொன்ற
வரலாறு
யசோதை
தன் குலக்கொழுந்தாகிய கோபாலகிருஷ்ணனை வாயில் முற்றத்தில் கண்வளரச் செய்து, அந்தப்புரத்தில் குடும்ப அலுவலில்
ஈடுபட்டிருந்தாள். கமசனால் அனுப்பப்பட்ட
ஒரு அரக்கன், அருகில் இருந்த ஒரு
வண்டியில் மறைந்து, அச் சகடத்தைக்
கண்ணபிரான் மீது உருட்டினான். கண்துயின்று
கொண்டு இருந்த கமலக்கண்ணர், சட்டென்று கண்
விழித்து, சகடத்தைச் சிறிது
திருவடியால் உதைத்தருளினார். அரக்கன்
அழிந்தனன்.
மருதமரத்தை முனிந்தது
குபேரனுடைய
புதல்வர்களாகிய நளகூபரன் மணிக்ரீவன் என்று இருவர்களும், அரம்பையர்களுடன் களிப்பு மிகுதியால்
காதலுடன் ஆடை நீத்து, நீரில் விளையாடினார்கள்.
அவ்வழி வந்த நாரதமுனிவர்,
"இது
அறிவுடையோர்க்கு அடாது. நீங்கள் மரங்கள் ஆகக் கடவீர்கள்" என்று சபித்தார்.
அவர்கள் அஞ்சி அஞ்சலி செய்து பொறுத்தருளுமாறு வேண்டினார்கள்.
"ஆயர்பாடியிலே
நந்தகோபன் மாளிகையில் மருதமரங்களாகத் தோன்றி வளர்ந்து, தேவயாண்டு நூறுவரை நிற்பீர்கள். பூபாரம்
தீர்க்க கோபாலகிருஷ்ணராகத் திருமால் அவதரிப்பார்.
அவருடைய பாதகமலம் தீண்ட உமது சாபம் தீரும்" என்று வரம் தந்து
நீங்கினார். அவர்கள் அவ்வாறே நந்தகோபன் வீட்டிலே மருதமரங்களாக முளைத்துக் கிளைத்து
நின்றார்கள்.
கண்ணபிரானுக்கு
யசோதை, பாலும் தயிரும்
வெண்ணெயும் ஊட்டினாள். அவர் அதனை உண்டு அமையாது, ஒளிந்து போய் பானையில் உள்ள பால் தயிர்
வெண்ணெயை வாரி வாரி உண்டும், அடுத்த மனைகளில்
உள்ளதனைக் களவு செய்து உண்டும்,
உரியில்
உள்ளதனை உரல்மீது ஏறிப் பானைகளை உடைத்து உண்டும் உவந்தார். அதுகண்ட யசோதை
சீற்றமுற்று, தாம்புக்கயிறு
ஒன்றெடுத்து உரலிலே கட்டும் பொருட்டு, ஓடித்
தேடிப் பிடித்து வாசுதேவர் இடையில் சுற்றினாள். இரண்டு விரற்கிடை குறைந்தது. பெரிய
அக் கயிற்றுக்கு அடங்காத மகனுடைய இடையைக் கண்டு அவள் தியங்கினாள். வேறு பல
கயிறுகளை எடுத்து, ஒன்றுடன் ஒன்றை
முடிந்து சுற்றினாள். எத்துணைக் கயிறுகளை
முடிந்தும் இரண்டு விரற்கிடை குறைவாகவே இருந்தது. அந்தோ இது என்ன அதிசயம்!
இத்தனைக் கயிறுகளாலும் இவனைக் கட்ட முடியவில்லையே என்று வருந்தினாள். தாயாருடைய
வருத்தத்தை அகற்றி மகிழ்விக்கவும் மருதமரங்களாக நின்ற கந்தருவர்களின் சாபத்தை
மாற்றவும் திருவுள்ளங்கொண்டு, இடையைச்
சுருக்கினார். பந்தபாசக் கட்டை அவிழ்க்கின்ற அவரை யசோதை உரலுடன் கட்டிவிட்டுச்
சென்றாள். அவர் உரலுடன் சிறிது நேரம் அழுது, மெல்லத் தவழ்ந்து, வாயிலில் நின்ற மருதமரங்களுக்கு இடையே
சென்றார்.
உரல்
அச் சிறிய சந்தில் வரத் தடைபட்டதனால், தமது
செம்பவளத் திருவடித் தாமரையால் அம்மருத மரங்களை உதைத்தருளினார். இடி இடித்ததுபோல்
அம்மரங்கள் இரண்டும் வேருடன் வீழ்ந்தன. நளகூபரன், மணிக்ரீவன் என்ற குபேர புதல்வர்கள்
தொல்லுருவமாகிய நல்லுருவம் பெற்று,
தாமோதரனைப்
போற்றி செய்து, தங்கள் பதவியை
அடைந்தார்கள்.
வருமத
யானைக் கோடு அவை திருகி, விளாவில் காய்கனி
மதுகையில் வீழச் சாடி, ...... அச் சத மா புள்
பொருது
இரு கோரப் பாரிய மருதிடை போய்,
அப்போது ஒரு
சகடு உதையா, மல் போர்செய்து ...... விளையாடி,
பொதுவியர்
சேரிக்கே வளர் புயல் மருகா! வஜ்ராயுத
புரம் அதில் மா புத்தேளிர்கள் ......
பெருமாளே. ---
திருப்புகழ்.
அலங்கல்
புனைந்து அருளும் குறள் வடிவன் ---
மாபலிக்கு
அருள் புரிந்த வாமனமூர்த்தியைக் குறிக்கும்.
வாமன
அவதாரம். திருமாலின் ஐந்தாவது அவதாரம்.
பிரகலாதருடைய
பேரனான மாவலியின் செருக்கை அடக்கும் பொருட்டு, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில்
வாமனராக அவதரித்தார்.
திருமால்
வாமனாவதாரம் செய்து, மாவலிபால் மூவடி மண்
கேட்டு வாங்கி, ஓரடியாக இம்
மண்ணுலகத்தையும், மற்றோர் அடியாக
விண்ணுலகத்தையும் அளந்து, மூன்றாவது அடியாக
மாவலியின் சென்னியிலும் வைத்து அளந்தனர்.
திருமாலுக்கு
நெடியோன் என்று ஒரு பேர். நெடியோனாகிய திருமால், மாவலிபால் குறியவனாகச் சென்றனர்.
அதற்குக் காரணம் யாது? ஒருவரிடம் சென்று
ஒரு பொருளை யாசிக்கின்ற போது, எண் சாண் உடம்பு ஒரு
சாணாகக் குறுகி விடும் என்ற இரவச்சத்தை இது உணர்த்துகின்றது.
ஒருவனுக்கு
இரவினும் இழிவும், ஈதலினும் உயர்வும்
இல்லை.
மாவலிபால்
மூவடு கேட்டு திருமால் சேவடி நீட்டி உலகளந்த திறத்தினை அடிகள் கந்தரலங்காரத்தில்
கூறும் அழகினையும் ஈண்டு சிந்தித்தற்குரியது.
தாவடி
ஓட்டு மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாவடி
ஏட்டிலும் பட்டதுஅன்றோ, படி மாவலிபால்
மூவடி
கேட்டு அன்று மூதண்டகூட முகடு முட்டச்
சேவடி
நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே.
வாமனாவதார வரலாறு
பிரகலாதருடைய
புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன் மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன்
சுக்கிரன். மாவலி தனக்கு ஒப்பாரும்
மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும்
தன்வசப் படுத்தி ஆண்டனன். அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண்
புரிந்து, அவர்களது குன்றாத
வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான். தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு
இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர். காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம்
சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர். தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில்
கருவாகி, சிறிய வடிவுடன்
(குறளாகி) அவதரித்தனர்.
காலம்
நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு
அதிதிக்கு ஒரு மகவாய்,
நீல
நிறத்து நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர்
வித்தின் அரும்குறள் ஆனான்.
மாவலி
ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும்
வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல
இரவலர் வந்து, பொன்னையும்
பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர். மாவலி
வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.
அத்
தருணத்தில், வாமனர் முச்சிப்புல்
முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும்
ஆக, சிறிய வடிவுடன்
சென்றனர். வந்தவரை மாவலி எதிர்கொண்டு
அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்"
என்று வினவினான்.
வாமனர், "மாவலியே! உனது கொடைத்
திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும்
சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க
மகிழ்ச்சி உறுகின்றேன். நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை. என்
கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.
அருகிலிருந்த
வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன்
மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ்
மாமனன். ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது
நன்றன்று" என்று தடுத்தனன்.
மாவலி, "சுக்கிர பகவானே!
உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது
ஒன்று உண்டோ கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று.
இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கல் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே
இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.
மாய்ந்தவர்
மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது
ஏந்திய
கைகொடு இரந்தவர் எந்தாய்,
வீய்ந்தவர்
என்பவர் வீய்ந்தவரேனும்
ஈய்ந்தவர்
அல்லது இருந்தவர் யாரே.
‘எடுத்து, ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே,
தடுப்பது, நினக்கு அழகிதோ? தகவு இல் வெள்ளி!
கொடுப்பது
விலக்கு கொடியோர் தமது சுற்றம்,
உடுப்பதுவும்
உண்பதுவும் இன்றி ஒழியும் காண்.
"கொடுப்பதைத்
தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின், யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி
வாமனரது கரத்தில் நீர் வார்த்து,
"மூவடி
மண் தந்தேன்" என்றான்.
கயம்
தரு நறும் புனல் கையில் தீண்டலும்,
பயந்தவர்களும்
இகழ் குறளன், பார்த்து எதிர்
வியந்தவர்
வெருக் கொள, விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு
உதவிய உதவி ஒப்பவே.
குளத்தின்
நறுமணமுள்ள அந்தத் தான நீர் தனது
கைகளில் தீண்டபப்பட்டவுடனே, பெற்றவரும் இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமன மூர்த்தியானவர், எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும் அஞ்சும்படியாக, உயர்ந்தவர்க்கு அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த
உதவி சிறந்து விளங்குவதுபோல வானத்தின் அளவுக்கு
வளர்ந்து
நின்றான்.
மண்ணுலகையெல்லாம்
ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம்
ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று
பணிந்தனன் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின்
சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது. அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும்
பதமும் மாவலி பெற்றனன்.
வடிவு
குறளாகி மாபலியை வலிய சிறை
இட
வெளியின் முகடு கிழிபட முடிய
வளரும்
முகில்.... --- சீர்பாத வகுப்பு.
நெடுங்கடல்
மங்க ஒர் அம்பு கை தொடுமீளி ---
பெரிய
கடல் வற்றிப் போகுமாறு ஒப்பற்ற அம்பைத் தொடுத்தவராகிய திருமால்.
ஸ்ரீராமர்
திருப்புல்லணையில் சாய்ந்து ஏழு நாட்கள் வருணனை வழிபடவேண்டி மனம் ஒருமைப்பட்டுக்
கிடந்தார். வருணன் வெளிப்படாமை கண்டு வெகுண்டு கடல்மீது பாணத்தை விடுத்தார். கடல்
வெந்தது. வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து, ஸ்ரீராமரைத்
தஞ்சம் புகுந்து, “பெருமானே! புறக்
கடலில் இரு பெரிய திமிங்கலங்கள் புரிந்த போரை மாற்றிச் சமாதானஞ் செய்யும்
கருமத்தில் ஈடுபட்டிருந்தேன் அதனால் நீங்கள் நினைத்ததை உணர்ந்தேனில்லை.
மன்னித்தருள்க. கடலில் அணைகட்ட அடியேன் உதவுகின்றேன்” என்று கூறி வேண்டிக் கொண்டான்.
செறித்த
வளை கடலில் வரம்பு
புதுக்கி, இளையவனோடு, அறிந்து
செயிர்த்த அநுமனையும் உகந்து, ...... படை ஓடி,
மறப்புரிசை
வளையும் இலங்கை
அரக்கன் ஒரு பது முடி சிந்த,
வளைத்த சிலை விஜய முகுந்தன் ......மருகோனே! --- (கறுத்த தலை)
திருப்புகழ்.
புரந்தரனும்
தவம் ஒன்றிய பிரமபுரம் தனிலும், குகன்
என்பவர் மனதினிலும் பரிவு ஒன்றி அமர்ந்து அருள் பெருமாளே ---
புரந்தரன்
- இந்திரன்.
சூரபதுமனுக்கு
அஞ்சிய தேவேந்திரன் இத்திருத்தலத்திற்குப் போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு (மூங்கில்) வடிவில்
முளைத்து அருள்புரிந்த திருத்தலம். தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க வேணு வழியாய்
இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.
சீகாழிப்
பதியில் முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றார்.
அடியார்களின்
இதயமாகிய குகையில் வீற்றிருப்பவர் முருகப் பெருமான். எனவே, அவர், குகன் எனப்பட்டார். "அடியவர் சிந்தை
வாரிச நடுவிலும்" முருகப் பெருமான் வீற்றிருக்கின்றார் என்பதைப் பிறிதொரு
திருப்புகழில் அடிகளார் காட்டியுள்ளது காண்க.
சீகாழிப்
பதியிலும், அடியவர்
சிந்தையிலும் முருகப் பெருமான் உறைகின்றார் என்பதைப் பின்வரும் கந்தர் அந்தாதிப்
பாடலில் அடிகளார் காட்டியுள்ளது காண்க.
திகழு
மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ
திகழு
மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ
திகழு
மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா
திகழு
மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே.
இதன்
பதவுரை -----
திகழும்
- விளங்கா நின்ற, அலங்கல் - மாலையை
அணிந்த, கழல் - தனது
திருவடியை, பணிவார் - வணங்குவோர், சொற்படி செய்ய - திருவாக்கின்படி நடக்க, ஓதி - தமிழ் வேதம் என்னும் தேவாரத்தை
மொழிந்து அருளினவரும், கழுமலம் - தான்
அவதாரம் செய்த சீகாழியையும், கற்பகவூர் - தான்
காத்து அருளிய அமராபதியையும், செருத்தணி - தான்
உறையும் திருத்தணியையும், செப்பி - துதி செய்து, வெண்பூதி - திருவெண் நீறானது, கழும் - போக்கடிக்கும், மலம் - மும்மலத்தையும், கற்பு - பரம்பொருள் ஈதே என்று நம்பும்
கற்புடைமையை, அருளும் - கொடுத்து
அருளும், என்னை - என்று
நினையாத, அமண் - சமணர், சேனை - கூட்டங்களை, உபாதி - வருத்தமான, கழு - கழுவில் ஏற்றி, மலங்கற்கு - கலக்கம் உற்ரு
அழியும்படிக்கு, உரைத்தோன் அலது -
வாது மொழிந்த சம்பந்தப் பிள்ளையாராகிய குமாரக் கடவுளை அன்றி, இல்லை தெய்வங்களே - பிரத்தியட்சமான
தெய்வங்கள் வேறு இல்லை.
சருவி
இகழ்ந்து மருண்டு வெகுண்டு உறு
சமயமும்
ஒன்று இலை என்றவரும், பறிதலையரும் நின்று
கலங்க, விரும்பிய தமிழ்கூறும் சலிகையும் ---
முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபர
சுப்ரமணிய மூர்த்திகளுக்குள் ஒன்று, முருகவேளது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு, திருஞானசம்பந்தராக வந்த
அவதாரம் புரிந்தது. முருகவேள் பிறப்பு இல்லாதவர் என்பதை நம் அருணகிரியார்,
"பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று கூறியுள்ளதால் அறிக.
இதை கூர்த்தமதி கொண்டு உணராதார் மூவருக்கு முதல்வனும், மூவரும் பணிகேட்க, முத்தொழிலைத் தந்த
முழுமுதற் கடவுளும்,
தாரகப் பொருளாய் நின்ற தனிப்பெருந் தலைவனுமாகிய பதிப்பொருட் பரஞ்சுடர் வடிவேல் அண்ணலே திருஞானசம்பந்தராகவும் உக்கிரகுமாரராகவும் பிறந்தார் என எண்ணுகின்றனர். தெய்வ இலக்கணங்கள் யாதுயாது உண்டோ அவை
அனைத்தும் ஒருங்கே உடைய முருகப்பெருமான் பிறப்பிலி என்பதை வேதாகமங்களால் நுணுகி ஆராய்ந்து அறிக.
சோழநாட்டில்
உள்ள வளம் மிக்க சீகாழி நகரில், கவுணியர் குலத்தில் சிவபாத இருதயர் என்னும்
அந்தணர் இருந்தார். அவருக்கு அருந்துணைவியாக வாய்த்தவர் பகவதி அம்மையார். இருவரும்
சிவபெருமானிடத்திலும், சிவனடியார்களிடத்திலும் பேரன்பு பூண்டவர்கள். அந்நாளில்
தமிழ்நாட்டில் பௌத்தம், சமணம் என்னும் இரு சமயங்களும் ஆதிக்கம் பெற்றும்,
வேதநெறியும், எல்லை இல்லாத் திருநீற்று நெறியும் அருகியும் இருந்தன. செந்நெறியாகிய
சைவத்தை ஒம்பவல்ல ஒரு புத்திரனை வேண்டி, சிவபாத இருதயரும் அவர்தம் துணைவியாரும்
தவம் கிடந்தனர். திருவருளால் பகவதி அம்மையார் கருவுற்றார். கோள்கள் நல்ல நிலையில்
நின்ற வேளையில், திருவாதிரைத் திருநாளில், செந்நெறி தழைத்து ஓங்கவும், தென்னாடு
சிறக்கவும், தமிழ் ஆக்கம் பெறவும், எதிர்காலம் நலம் பெறவும், சராசரங்கள் எல்லாம்
சிவத்தைப் பெருக்கவல்ல பிள்ளையார் அவதரித்தார். சீகாழியில் உள்ளோர் அனைவரும்
அதிசயித்து மகிழ்ந்தனர். பின்வரும் பெரியபுராணப் பாடல்களைக் காண்க.
"அருக்கன்முதல்
கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
பெருக்க
வலியுடன் நிற்க, பேணியநல் ஓரை எழத்
திருக்கிளரும்
ஆதிரைநாள் திசைவிளங்க, பரசமயத்
தருக்கு
ஒழிய, சைவமுதல் வைதிகமும் தழைத்து ஓங்க".
இதன்
பொழிப்புரை :
கதிரவன்
முதலான கோள்கள் எல்லாம் தத்தமக்கு உரிய வலிமை மிகும் இராசிகளில் நிற்கவும், சோதிட நூலார் விரும்பும் நல்ல வேளை வரவும், செம்மை மிக்க திருவாதிரை நாள் எண்திசையும்
விளக்கம் அடையவும், மற்ற சமயங்களின் தருக்கிய
நிலை ஒழியவும், முதன்மையான சைவத் துறையும்
வைதிகத் துறையும் தழைத்து ஓங்கவும்,
"தொண்டர்மனம்
களிசிறப்ப, தூயதிரு நீற்றுநெறி
எண்திசையும்
தனிநடப்ப, ஏழ் உலகும் களிதூங்க,
அண்டர்குலம்
அதிசயிப்ப, அந்தணர் ஆகுதி பெருக,
வண்தமிழ்செய்
தவம்நிரம்ப, மாதவத்தோர் செயல்வாய்ப்ப,"
இதன்
பொழிப்புரை :
அடியவர்களின்
உள்ளம் களிப்பு அடையவும், தூய திருநீற்றின் நெறியானது
எண்திசைகளிலும் இணையின்றி நடக்கவும், ஏழ்
உலகங்களில் உள்ள உயிர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக்கவும், தேவரினத்தவர் மிகுவியப்புடன் நோக்கவும், அந்தணர்களின் வேள்விகள் பெருகவும், வண்மையுடைய தமிழ் செய்த தவம் முற்றுப் பெறவும், பெரிய தவத்தைச் செய்பவர்களின் செயல் முற்றுப்
பெறவும்,
"திசையனைத்தின்
பெருமை எலாம் தென்திசையே வென்றுஏற,
மிசை
உலகும் பிற உலகும் மேதினியே தனிவெல்ல,
அசைவு
இல்செழுந் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல,
இசைமுழுதும்
மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலைபெருக",
இதன்
பொழிப்புரை :
எண்திசைகளின்
பெருமைகள் எல்லாவற்றிலும், தென்திசையின் பெருமையே
வெற்றி பெற்று மேன்மை அடையவும்,
மேல்
உலகம், கீழ் உலகம் என்பனவற்றில், இம்மண்ணுலகமே சிறப்படைந்து வெல்லவும், அசைதல் இல்லாத செழுந்தமிழே மற்ற மொழித் துறைகளின்
வழக்குகளை வெல்லவும், இசையறிவும் மெய்யறிவும்
பொருந்தும் நிலை பெருகவும்,
"தாள்
உடைய படைப்பு என்னும் தொழில்தன்மை தலைமைபெற
நாள்
உடைய நிகழ்காலம் எதிர்கால நவைநீங்க,
வாள்
உடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழ,
ஆள்
உடைய திருத்தோணி அமர்ந்தபிரான் அருள்பெருக",
இதன்
பொழிப்புரை :
உயிர்கள்
உய்தி பெறுதற்கென இறைவன் செய்யும் ஐந்தொழில்களில் அடிநிலையான படைப்புத் தொழில் தலைமையும்
தகவும் பெறவும், காலக் கூறுபாட்டில் நிகழ்விலும்
எதிர்விலும் வருகின்ற குற்றங்கள் நீங்கவும், ஒளிபொருந்திய மணிகளையுடைய வீதிகள் சிறந்தோங்கும்
சீகாழிப் பதி வாழவும், உயிர்களை அடிமையாகக் கொண்டு
திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் அருளானது மேன்மேலும் தழையவும்,
"அவம்பெருக்கும்
புல்லறிவின் அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும்
புரைநெறிகள் பாழ்பட, நல் ஊழிதொறும்
தவம்பெருக்கும்
சண்பையிலே தாவில் சராசரங்கள் எலாம்
சிவம்பெருக்கும்
பிள்ளையார் திருஅவதாரம் செய்தார்".
இதன்
பொழிப்புரை :
பயனில்லா
செயல்களையே செய்து வரும் புல்ல றிவை உடைய சமண் சமயம் முதலிய பிற சமயங்களானவை எல்லாம்
பிறப்பதற்கே தொழிலாக்கும் தீயநெறிகள் பலவும் பாழ்படவும், நல்ல ஊழிக்காலந் தோறும் தான் அழியாமல் மிதந்து
நின்று தவநெறியைப் பெருகச் செய்கின்ற சண்பைத் திருநகரில், குற்றம் அற்ற இயங்கும் பொருள், இயங்காப் பொருள் என்ற வகையில் நிலவுகின்ற
உயிர்கள் எல்லாம் சிவத்தன்மை பெருகச் செய்யும் ஆளுடைய பிள்ளையாரான திருஞானசம்பந்தர்
தோன்றி அருளினார்.
"அப்பொழுது
பொற்பு உறு திருக் கழுமலத்தோர்
எப்
பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி
மெய்ப்படு
மயிர்ப்புளகம் மேவி, அறியாமே
ஒப்பில்களி
கூர்வதொர் உவப்பு உற உரைப்பார்".
இதன்
பொழிப்புரை :
அதுபொழுது
அழகிய அக்கழுமலத்தில் எந்நெறியில் இருப்பவர்களும் பக்கங்களில் பொருந்தும் வேறு இடம்
இன்றி உடல் முழுதும் மயிர்க் கூச்செறியத் தம்மை அறியாமல் ஒப்பற்ற மகிழ்ச்சி மிகுவதாகிய
ஓர் உவகை தோன்றக் கூறுவாராய்,
"சிவன்
அருள் எனப்பெருகு சித்தம் மகிழ் தன்மை
இவண்
இது நமக்கு வர எய்தியது என்?" என்பார்,
"கவுணியர்
குலத்தில் ஒரு காதலன் உதித்தான்
அவன்
வரு நிமித்தம் இது என்று அதிசயித்தார்".
இதன்
பொழிப்புரை :
சிவபெருமானின்
திருவருள் எனப் பெருகும் மனம் மகிழ்கின்ற தன்மை இங்கு இவ்வாறு நமக்கு வருவதற்குக் காரணம்
யாது? என வினவுவார். கவுணியர்
கோத்திரத்தில் ஒரு மகன் தோன்றினான்,
அங்ஙனம்
அவன் அவதரித்ததன் நல் நிமித்தம் இது ஆகும் என்று மனம் தெளிந்து அதிசயித்தார்.
திருஞானசம்பந்தர் சமணர்களை வாதில் வென்றது
"வேதம்
படியாப் பாதகர், பாய்அன்றி உடாப்
பேதைகள், கேசம் பறி
கோப்பாளிகள் யாரும் கழு ஏற" என்றார் திருவோத்தூர்த் திருப்புகழில். பாயை
இடுப்பில் அணிந்தவர்களும், தலைமயிரை மழித்தல்
கூடாது என்று பறிப்பவர்களும் ஆகிய
சமணர்கள்
மிகுதியாக, கூடல் நகரம்
என்னும் மதுரையம்பதியில்
வாழ்ந்திருந்தனர். அந்நாளில் பாண்டி நாட்டில் சமணம் பெருகி, சைவம் அருகியது. மன்னனும் சமணன் ஆனான். குடிகளும் மன்னன் வழி நின்றனர். பாண்டி நாடு செய்த பெருந்தவத்தால், பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் ஆகிய குலச்சிறை நாயனாரும் சைவநெறிநில் ஒழுகி வந்தனர். பாண்டி நாட்டிற்கு சமணர்களால் விளையும் கேட்டினை நினைந்து வருந்தி வந்தனர். சமணர்களின் வஞ்சனை மிகுந்தது. அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருந்ததை அறிந்து ஒற்றர்களை அனுப்பி, பாண்டி நாட்டிற்கு எழுந்தருள வேண்டினர். பிள்ளையாரும், இறையருளைப் பெற்று, பாண்டி நாட்டிற்கு எழுந்தருள உடன்பட்டார்.
மதுரையம்பதிக்குத் திருஞானசம்பந்தர் வருகையும், அடியார்கள் முழக்கமும் சமணர்களுக்குப் பொறாமையை ஊட்டியது. அவர்களுக்குப் பல துர் நிமித்தங்களும், தீய கனவுகளும் தோன்றின. எல்லோரும் ஓரிடத்தல் கூடி பாண்டிய மன்னனைக் காணச் சென்றார்கள். மன்னனிடம், "உமது மதுராபுரியில் இன்று சைவ வேதியர்கள் மேவினார்கள். நாங்கள் கண்டு முட்டு" என்றார்கள். மதி இல்லாத மன்னவனும், "கேட்டு முட்டு" என்றான். "இதற்கு என்ன செய்வது என்று அவர்களையே கேட்டான். மதிகெட்ட மன்னனின் கீழ் வாழும் மதிகெட்ட சமணர்களும், "மந்திரத்தால்
தீயிட்டால், அவன் தானே ஓடிவிடுவான்" என்றார்கள். மன்னனும் உடன்பட்டான்.
சமணர்கள், பிள்ளையார் எழுந்தருளி இருந்த மடத்தில் தீயை மூட்ட மந்திரத்தை செபித்தார்கள். பலிக்கவில்லை. திரும்பிப் போனால் மன்னன் மதிக்கமாட்டான் என்று எண்ணி, கையிலே தீக்கோலைக் கொண்டு மடத்திற்குத் தீயை மூட்டினார்கள். மன்னன் அரசாட்சி வழுவியதால் வந்த தீது இது என்று உணர்ந்த திருஞானசம்பந்தப் பெருமானார், தம்மை மதுரையம்பதிக்கு வரவழைத்த மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணைப் பாதுகாக்கவும், குலச்சிறை நாயனாரின் அன்பை நினைந்தும், மன்னவன் தனது தவறை உணர்ந்து மீண்டும் சிவநெறியை அடையவேண்டும் என்பதை உணர்ந்தும், "அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று திருப்பதிகம் பாடி வேண்டினார்.
சமணர்கள் மடத்தில் இட்ட தீயானது, மெதுவாகச் சென்று, பாண்டியன் உடம்பில் வெப்பு நோயாகப் பற்றியது. இதைக் கேட்ட சமணர்கள் மன்னனை அடைந்து, தமது கையில் உள்ள மயிற்பீலியால் மன்னனின் உடலைத் தடவி, குண்டிகை நீரை மந்திரித்துத் தெளித்தார்கள். அந்த நீர் நெருப்பில் சொரிந்த நெய்யைப் போல, வெப்பு நோய் பின்னும் மிகுவதற்கே ஏதுவானது.
பாண்டி மாதேவியாரும், குலச்சிறையாரும் மன்னனை வணங்கி, "சமணர்கள் இட்ட தீயே வெப்பு நோயாகி உம்மை வருத்துகின்றது. உடல் மாசும், உள்ளத்தில் மாசும் உடைய இவர்களால் இதைத் தீர்க்க முடியாது. இறைவன் திருவருளைப் பெற்ற திருஞானசம்பந்தப் பெருமான் வந்து பார்த்து அருளினாலே, மன்னனைப் பற்றியுள்ள இந்த நோய் மட்டும் அல்லாது அவனது பிறவி நோயும் அகன்று விடும்" என்றார்கள்.
திருஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரம் செவியில் நுழைந்த உடனே, சிறிது அயர்வு நீங்கப் பெற்ற மன்னன், "சமணர்களின்
தீச் செயலே இந்த நோய்க்கு மூலம் போலும்" என்று எண்ணி, "திருஞானசம்பந்தரை
அழைத்து வாருங்கள். எனது நோயைத் தீர்ப்பவர் பக்கம் நான் சேர்வேன்" என்றான்.
மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் வேண்ட, திருஞானசம்பந்தர் மன்னனின் திருமாளிகைக்கு எழுந்தருளினார். மன்னன் தனது முடியின் பக்கத்தில் பொன்னால் ஆன ஆசனத்தை இடுமாறு பணிக்க, அந்த ஆசனத்தில் எழுந்தருளினார் சுவாமிகள். சமணர்கள் வெகுண்டனர். "நீங்கள் இருவரும் உங்கள் தெய்வ வலிமையால் எனது நோயைத் தீருங்கள். தீர்த்தவர் வென்றவர் ஆவர்" என்றான். சமணர்கள் "எங்கள் தெய்வ வல்லமையால் இடப்பக்கத்து நோயைத் தீர்ப்போம்" என்று அருக நாமத்தை முழக்கி, மயில் பீலியால் உடம்பைத் தடவினார்கள். பீலி வெந்தது. மன்னனைப் பற்றிய வெப்பு நோய் மேலும் முறுகியது. ஆற்ற முடியாதவனாய் மன்னன் திருஞானசம்பந்தரைப் பார்த்தான்.
ஆலவாய்ச் சொக்கனை நினைந்து, "மந்திரமாவது
நீறு" என்னும் திருப்பதிகத்தைப் பாடி, திருஞானசம்பந்தப் பெருமான் பாண்டியனின் வலப்பக்கத்தில் தடவினார். வலப்பக்கம் நோய் நீங்கிக் குளிர்ந்தது. தனது உடம்பிலேயே, ஒரு பக்கம் நரகத் துன்பத்தையும், ஒரு பக்கம் வீட்டின்பத்தையும் அனுபவித்தான் மன்னன். "அடிகளே! எனது இடப்பக்க நோயையும் தீர்த்து அருள் செய்யும்" என வேண்டினான். பெருமான் அப் பக்கத்தையும் தமது திருக்கைகளால் திருநீறு கொண்டு தடவ, வெப்பு நோய் முழுதும் நீங்கியது.
மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும், பிள்ளையார் திருவடிகளில் விழுந்து வணங்கி, "நாங்கள் பெருமை உற்றோம். பெறுதற்கு அரிய பேற்றைப் பெற்றோம். மன்னனும் பிறவா மேன்மை உற்றார்" என்றனர். "ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்" என்று மன்னனும் பெருமானாருடைய திருப்பாதங்களில் பணிந்தான்.
"பெற்றியால்
அருளிச் செய்த
பிள்ளையார் தமக்கும், முன்னம்
சுற்று நின்று அழைத்தல் ஓவா
அருகர்க்கும், தென்னர் கோமான்,
"இற்றை
நாள் என்னை உற்ற
பிணியை நீர் இகலித் தீரும்,
தெற்று எனத் தீர்த்தார் வாதில்
வென்றனர்" என்று செப்ப".
"மன்னவன்
மாற்றம் கேட்டு,
வடிவுபோல் மனத்து மாசு
துன்னிய அமணர், தென்னர்
தோன்றலை நோக்கி, "நாங்கள்
உன் உடம்பு அதனில் வெப்பை
ஒருபுடை வாம பாகம்
முன்னம் மந்திரித்துத் தெய்வ
முயற்சியால் தீர்த்தும்" என்றார்".
"யாதும்
ஒன்று அறிவு இலாதார்
இருள் என
அணையச் சென்று
வாதினில் மன்னவன் தன்
வாம பாகத்தைத் தீர்ப்பார்
மீது தம் பீலி கொண்டு
தடவிட, மேன்மேல் வெப்புத்
தீது உறப் பொறாது, மன்னன்
சிரபுரத்தவரைப் பார்த்தான்".
"தென்னவன்
நோக்கம் கண்டு
திருக் கழுமலத்தார் செல்வர்
"அன்னவன்
வலப்பால் வெப்பை
ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும் மந்திரமும் ஆகி
மருந்துமாய்த் தீர்ப்பது" என்று
பன்னிய மறைகள் ஏத்தி,
பகர் திருப்பதிகம் பாடி".
"திருவளர்
நீறு கொண்டு
திருக்கையால் தடவ, தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப்
பொய்கையில் குளிர்ந்தது அப்பால்,
மருவிய இடப்பால் மிக்க
அழல் எழ
மண்டு தீப்போல்
இருபுடை வெப்பும் கூடி
இடங்கொளாது என்னப் பொங்க".
"உறியுடைக்
கையர், பாயின்
உடுக்கையர் நடுக்கம் எய்திச்
செறிமயில் பீலி தீயத்
தென்னன் வெப்பு உறு தீத் தம்மை
எறியுமா சுடலும், கன்றி
அருகு விட்டு ஏற நிற்பார்,
அறிவு உடையாரை ஒத்தார்
அறிவு இலா நெறியில் நின்றார்".
"பலர்
தொழும் புகலி மன்னர்
ஒருபுடை வெப்பைப் பாற்ற,
மலர்தலை உலகின் மிக்கார்
வந்து அதிசயித்துச் சூழ,
இலகுவேல் தென்னன் மேனி
வலம் இடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை
ஒதுங்கினால் ஒத்தது அன்றே".
"மன்னவன்
மொழிவான், "என்னே
மதித்த இக் காலம் ஒன்றில்
வெந்நரகு ஒருபால் ஆகும்,
வீட்டு இன்பம் ஒருபால் ஆகும்;
துன்னு நஞ்சு ஒருபால் ஆகும்,
சுவை அமுது ஒருபால் ஆகும்;
என்வடிவு ஒன்றில் உற்றேன்,
இருதிறத்து இயல்பும்" என்பான்".
"வெந்தொழில்
அருகர்! தோற்றீர்,
என்னை விட்டு அகல நீங்கும்,
வந்து எனை உய்யக் கொண்ட
மறைக் குல வள்ளலாரே!
இந்தவெப்பு அடைய நீங்க
எனக்கு அருள் புரிவீர்" என்று
சிந்தையால் தொழுது சொன்னான்
செல்கதிக்கு அணியன் ஆனான்.
"திருமுகம்
கருணை காட்ட,
திருக்கையால் நீறு காட்டி,
பெருமறை துதிக்கும் ஆற்றால்
பிள்ளையார் போற்றி, பின்னும்
ஒருமுறை தடவ, அங்கண்
ஒழிந்து வெப்பு அகன்று, பாகம்
மருவு தீப் பிணியும் நீங்கி, வழுதியும்
முழுதும் உய்ந்தான்".
"கொற்றவன்
தேவியாரும்
குலச்சிறையாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாதத்
தாமரை சென்னி சேர்த்து,
"பெற்றனம்
பெருமை, இன்று
பிறந்தனம், பிறவா மேன்மை
உற்றனன் மன்னன்" என்றே
உளம் களித்து உவகை மிக்கார்".
"மீனவன்
தன்மேல் உள்ள
வெப்பு எலாம் உடனே மாற,
ஆன பேரின்பம் எய்தி,
உச்சிமேல் அங்கை கூப்பி,
மானம் ஒன்று இல்லார் முன்பு
வன்பிணி நீக்க வந்த
ஞானசம்பந்தர் பாதம்
நண்ணி நான் உய்ந்தேன்" என்றான். --- பெரியபுராணம்.
புத்தர்களை வாதில் வென்றது
திருஞானசம்பந்தப்
பெருமான் திருநள்ளாற்று இறைவரை வணங்கி, அத்திருத்தலத்தில்
சில நாள் தங்கி இருந்து, பின்னர்
திருதெளிச்சேரி சேர்ந்து, போதிமங்கையை
நெருங்கினார். போதிமங்கை புத்தர்கள்
நிறைந்த ஊர். அடியவர்களின் ஆரவாரமும், திருச்சின்ன
ஓசையும், திருவைந்தெழுத்து
முழக்கமும் புத்தர்களுக்கு நாராசம் போல் இருந்தன. அவர்கள் எல்லாரும் ஒருங்கு
திரண்டு, புத்தநந்தியைத்
தலைவனாகக் கொண்டு, அடியவர்களின்
திருக்கூட்டத்தை மறித்தனர். அவர்கள், "உங்கள் வெற்றிச்
சின்னங்கள் எதற்கு? எங்களை வாதில்
வென்றீர்களா? வாதில் வென்று அல்லவா
அவைகளை முழக்கவேண்டும்?" என்று வெகுண்டு
விலக்கினார்கள். அவர்கள் செயலைக் கண்ட
சிவனடியார்கள் "இத் தலைவனை மாய்த்தல் வேண்டும். இல்லையேன் இவன் தீங்கு விளைவிப்பான்"
என்று கருதி, நிலைமையைப்
பிள்ளையாருக்குத் தெரிவித்தார்கள்.
பிள்ளையார், "இதென்ன நன்றாய்
இருக்கின்றது. புத்தநந்தியின் திறத்தை வாதத்தில் பார்ப்போம்" என்று திருவாய்
மலர்ந்தருளினார். அதற்குள் நெருக்கு அதிகமாக, தேவாரத் திருமுறைகளை எழுதிவரும் அன்பர், "புத்தர் சமண்
கழுக்கையர்" என்னும் திருப்பாட்டை ஓதி, "அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே" என்று
முடித்தார். முடித்ததும், புத்த நந்தி மீது இடி விழுந்தது. புத்தர்கள் நிலை கலங்கி ஓடினார்கள். அந்
நிகழ்ச்சியை அடியார்கள் பிள்ளையாருக்கு அறிவித்தார்கள். பிள்ளையார் அவர்களை நோக்கி, "இது விதியால்
நேர்ந்தது. அரன் நாமத்தை ஓதுங்கள்" என்றார். அடியார்கள் அப்படியே
செய்தார்கள்.
மருண்டு
ஓடிய புத்தர்கள், சாரிபுத்தனைத்
தலைவனாகக் கொண்டு, மீண்டும் வந்தார்கள்.
வந்து, "மந்திர வாதம்
வேண்டாம், தருக்க வாதம்
செய்யுங்கள், பார்ப்போம்"
என்று அடர்த்தார்கள். பிள்ளையார்
சிவிகையில் இருந்து இறங்கி, ஒரு மண்டபத்தில்
எழுந்தருளினார். புத்தர்களை அழைத்து
வருமாறு பிள்ளையார் அடியார்களுக்குக் கட்டளை இட்டார். புத்தர்களை அழைத்து
வந்தார்கள். சாரிபுத்தன் பிள்ளையார் அருகே நின்றான். புத்த நந்தியை இரு கூறு
படுத்திய அன்பர், பிள்ளையார்
முன்னிலையில் வாதத்தைத் தொடங்கினார். சாரிபுத்தனும் வாதத்தில் ஈடுபட்டான்.
முடிவில் சாரிபுத்தன் தோல்வி
அடைந்தான்.
அவன் பிள்ளையாரை வணங்கினான். மற்ற
புத்தர்களும் பிள்ளையாரை வணங்கினார்கள். பிள்ளையார் எல்லாருக்கும் திருநீறு
அளித்து அருள் செய்தார்.
திருஞானசம்பந்தராக
வந்து, புறச்சமயிகளாகிய புத்தர்களையும், சமணர்களையும்
வாதில் வென்றதையும், சைவசமயத்தைத் தழைக்கத் திருவருள்
புரிந்த முருகப் பெருமானது செல்வாக்கையும், மறவேன்
என்கின்றார் அடிகளார்.
மங்கள
பெருமைகளும், கனமும், குணமும் ---
முருகப்
பெருமானது மங்கலம்
பொருந்திய பெருமைகளையும், சிறப்புக்களையும், அவரது அருட்குணங்களையும் மறவேன் என்கின்றார் அடிகளார்.
பயில்
சரவணமும் ---
வெண்மையான
ஒளி விளங்குகின்ற, அழகிய திருக்கயிலை
மலையில், தொடுக்கப் பெற்ற
அழகிய பூமாலையினை அணிந்த உமாதேவியாரை தமது இடப்பாகத்திலே வீற்றிருக்கப் பெற்ற
மூன்று திருக்கண்களை உடைய மேலான சோதி வடிவாகிய சிவபரம்பொருள், அவ்விடத்து ஒருநாள் கொடிய அசுரர்கள்
செய்யும் துன்பத்தைத் தாங்க இயலாத தேவர்கள் வந்து செய்த முறையீட்டிற்குத்
திருவுளம் இரங்கி, தமது ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து
திருமுகங்களுடன் கீழ் நோக்கிய திருமுகம் ஆகிய அதோமுகம் ஒன்றினையும் கொண்டு, ஆறு திருமுகங்களை உடையவராய், செந்தழல் வடிவாகிய ஆறு நெற்றிக் கண்களின்
நின்றும், ஒரே சமயத்தில் ஆறு
தீப்பொறிகளை வெளிப்படுத்த, அத்தீப் பொறிகள்
விரிந்து நின்ற உலகங்கள் எங்கும் பரவ, அவற்றைத் தேவர்கள்
கண்டு பயப்படவும், அதனை அறிந்து பொங்கிய
அத் தீப்பொறிகளின் திரட்சியினைத் தம் அழகிய திருக் கரத்தால் உடனே
அவ்விடத்தினின்றும் எடுத்து, அவற்றின் வேகத்தை
அடக்கி, வாயுதேவனை நோக்கி, 'நீ இவற்றை எடுத்துச்
செல்வாயாக' என்று சிவபெருமான்
அவனிடம் கொடுத்து அருள, வாயுதேவனும் அவற்றைப்
பெற்று மெல்லக் கொண்டு சென்று, தன்னால் இயலாமல், தன்னை அடுத்து நிற்பவனாகிய அக்கினி
தேவனை நோக்கி, 'ஒப்பற்ற ஐம்பூதங்களுக்குத் தலைவனாய்
உள்ள அக்கினித் தேவனே, நீ இப்பொறிகளை
எடுத்துச் செல்வாயாக' என்று கூறி அவனிடம்
கொடுக்க, அக்கினி தேவனும்
அவற்றைப் பெற்றுத் தாங்க இயலாமல் சென்று, குளிர்ந்த
கங்கை ஆற்றில் கொண்டுபோய் விடுக்க,
அந்த
கங்கா தேவியும் அவற்றைச் சிறிது நேரமும் தாங்கிக் கொண்டு இருப்பதற்கு வலிமை
அற்றவளாய், தனது தலைமீது
தாங்கிச் சென்று சரவணப் பொய்கையில் விடுக்க, அவ்விடத்து அத்தீப்பொறிகள் ஆறும் ஆறு
குழந்தைகளின் திருவுருவங்களாய் மாற,
முதற்கண்
கார்த்திகைப் பெண்கள் அறுவர் முலைப்பாலை அக்குழந்தைகள் பருகி, அழுது விளையாடி இருக்க, மணமிக்க கங்கை நீரைச் சடைமுடியில்
தரித்த சிவபெருமான், புன்சிரிப்பை உடைய உமாதேவியாரொடு சரவணப்
பொய்கையினை அடைந்து, தனது திருமகனுடைய
திருவுருவங்களை அத்தேவிக்குக் காண்பித்தலும், உமாதேவியார் கண்டு, அந்த ஆறு திருவுருவங்களையும், தன்னுடைய இரண்டு திருக்கரங்களாலும் ஒருசேர
எடுத்து, ஆறு
திருவுருவங்களையும் ஒரு திருவுரு ஆக்கிச் சேர்த்துத் தழுவி, "கந்தன்" என்று
திருநாமம் சூட்டி, தனது செவ்விய
திருமுகத்தில் சேர்த்து அணைத்து,
உச்சியை
முகந்து, திருவுளத்தில்
மகிழ்ச்சி உற்று, தனது திருமுலைப் பாலை
அளித்து, உலகத்தைத் தனது
ஈரடியால் அளந்த திருமாலாகிய வெள்ளை இடபத்தின் மீது எழுந்தருளி இருக்கும்
சிவபெருமானது திருக்கரத்தில் கொடுத்து இருக்க, அவ் அம்மையப்பர் திருவுளம் மகிழ்ச்சி
கூர உயர்வு உற்று இருந்த பெருமான் முருகப் பெருமான்.
சரவணப்
பொய்கையில் எம்பெருமான் அருள்விளையாடல் புரிந்த்தை மறவேன் என்கிறார் அடிகளார்.
ஞாலம்
ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கு மகவு என
நாணல் பூத்த படுகையில் ...... வருவோனே!
"நாத
போற்றி" என, முது தாதை கேட்க, அநுபவ
ஞான வார்த்தை அருளிய ...... பெருமாளே. --- (ஆலமேற்ற)
திருப்புகழ்.
முதுநல்
சரவணம் அதனில் சததள
முளரிப்
பதிதனில் ...... உறைவோனே
முதுமைக்
கடல்,
அடர்
அசுரப் படைகெட
முடுகிப் பொரவல ...... பெருமாளே. --- (மதனிக்கு)
திருப்புகழ்.
திருந்த
அப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்தி, சரவணப் பூந்தொட்டில்
ஏறி,
அறுவர்
கொங்கை
விரும்பி, கடல் அழ, குன்று அழ, சூர் அழ விம்மி அழுங்
குருந்தை,
குறிஞ்சிக்
கிழவன் என்று ஓதும் குவலயமே. --- கந்தர் அலங்காரம்.
பூங்கயிலை
வெற்பில் புனைமலர்ப் பூங்கோதைஇடப்
பாங்கு உறையும் முக்கண் பரஞ்சோதி, – ஆங்குஒருநாள்
வெந்தகுவர்க்கு
ஆற்றாத விண்ணோர் முறைக்கு இரங்கி,
ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து,
திருமுகங்கள்
ஆறுஆகி, செந்தழல்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறி ஆறு உய்ப்ப,
- விரிபுவனம்
எங்கும்
பரக்க, இமையோர் கண்டு
அஞ்சுதலும்,
பொங்கு தழல்பிழம்பை பொன்கரத்தால் - அங்கண்
எடுத்து
அமைத்து, வாயுவைக்
"கொண்டு ஏகுதி"என்று,எம்மான்
கொடுத்து அளிப்ப, மெல்லக் கொடுபோய், - அடுத்தது ஒரு
பூதத்
தலைவ! "கொடுபோதி”, எனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்று உய்ப்ப, - போதுஒருசற்று
அன்னவளும்
கொண்டு அமைதற்கு ஆற்றாள், சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்ப, திருவுருவாய் -
முன்னர்
அறுமீன்
முலைஉண்டு, அழுது, விளையாடி,
நறுநீர் முடிக்கு அணிந்த நாதன் -
குறுமுறுவல்
கன்னியொடும்
சென்று அவட்குக் காதல் உருக்காட்டுதலும்,
அன்னவள் கண்டு, அவ்வுருவம் ஆறினையும் - தன்இரண்டு
கையால்
எடுத்து அணைத்து, கந்தன் எனப்பேர்
புனைந்து,
மெய்ஆறும் ஒன்றாக மேவுவித்து, - செய்ய
முகத்தில்
அணைத்து, உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துள் மகிழ் பூத்து அளித்து, - சகத்துஅளந்த
வெள்ளை
விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே! --- கந்தர் அலங்காரம்.
பொறையும் ---
பொறை
- பொறுமை.
"பொறை
எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்" என்கிறது கலித்தொகை.
"எத்திடார்க்கு
அரிய முத்த! பாத் தமிழ்கொடு எத்தினார்க்கு எளிய
பெருமாளே" என இரு திருத்தணிகைத் திருப்புகழ்ப் பாடல்களில் அடிகாளர் போற்றி
உள்ளார்.
முருகன்
தன்னை ஏத்தி வழிபடாதார்க்கு, தன்னை அடுக்காதார்க்கு அரியவன்.
அதற்காக ஒருபோதும் முனிய மாட்டான். அப்படிப்படவர் செய்யும் அநுசிதங்களையும்
பொறுத்து அருள் புரிவான்.
அடியவர்கள்
செய்த சிறுபிழைகளை எல்லாம் பொறுத்துக் கொள்வான். "பொறுப்பர் அன்றே பெரியோர்
சிறுநாய்கள் தம் பொய்யினையே" என்றார் மணிவாசகப் பெருமான்.
அத்தா!
உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்,
அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்
கொண்டாய்,
எத்தனையும்
அரியை நீ எளியை ஆனாய்,
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்,
பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன்,
பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தாய் அன்றே,
இத்தனையும்
எம் பரமோ? ஐய! ஐயோ!
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே. --- அப்பர்.
புகழும் ---
இறைவன்
புகழ் ஒன்றே பொருள் சேர் புகழ் ஆகும். அதனை மறவாமல் எப்போதும் போற்றி வருதல்
வேண்டும். அது இருள்சேர் பிணியில் கொண்டு உய்க்காமல் காக்கும்.
இருள்சேர்
இருவினையும் சேரா, இறைவன்
பொருள்சேர்
புகழ் புரிந்தார் மாட்டு. --- திருக்குறள்.
திகழ்
தனிவேலும்
---
திகழ்கின்ற
தனிவேல் என்ற அருமையை எண்ணுதல் நலம். தனிவேல் என்பது ஒப்பற்ற வேல். வேல் ஞானசத்தி
ஆகும்.
சிகண்டியில் ---
சிகண்டி
- மயில்.
நீலச்
சிகண்டியில் ஏறும் பிரான் எந்தநேரத்திலும்
கோலக்
குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன
சீலத்தை
மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே
காலத்தை
வென்று இருப்பார்; மரிப்பார் வெறும் கர்மிகளே. --- கந்தர்
அலங்காரம்.
அண்டரும்
உருகி வணங்க வரும் பதமும் ---
அண்டர்
- தேவர்கள்.
அண்டரும்
என்றமையால், தேவர்களே
பெருமானை வழிபட்டு அருள் பெற்று உய்ய வழி தேடும்போது, அவர்களை விட, நிலையில்
மிகவும் தாழ்ந்த சிற்றுயிர்களாகிய மனிதர்காகிய நாமும் வழிபட்டு உய்ய வேண்டும்
என்பது பெறப்படும்.
தினை
புனமானின் ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து, அடிவருடி மணந்து புணர்ந்ததுவும், பல விஜயமும் அன்பில் மொழிந்து மொழிந்து இயல் மறவேனே ---
தினைப்பனத்தில்
காவல் கொண்டு இருந்த வள்ளிநாயகியின் மான்மதமும், குங்குமம் அணிந்த கொங்கைகளின் அழகில்
மயங்கி மனம் நொந்து, அம்மையாரது திருவடியை
வருடி, அவரைத் திருணம்
புணர்ந்து,
கூடி
மகிழ்ந்ததையும், இன்னும் பல வெற்றிகளைக் கொண்ட அருள்
திருவிளையாடல்களையும் உள்ளன்போடு பலமுறை சொல்லித் துதிப்பதை அடியேன் மறக்கமாட்டேன்
என்கின்றார் அடிகளார்.
முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.
இந்த அற்புதமான அருள் வரலாற்றை, வள்ளிநாயகியிடம் முருகப் பெருமான் சக்கு ஆகி நின்றதை, அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் ஆங்காங்கே வைத்து அழகாகப் பாடி அருளி உள்ளார். பின்வரும் மேற்கோள்களைக் காண்க.
முருகப் பெருமான் கிழவேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது...
குறவர்
கூட்டத்தில் வந்து, கிழவனாய்ப் புக்கு
நின்று,
குருவி ஓட்டித் திரிந்த ...... தவமானை,
குணமதாக்கி, சிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த
குமரகோட்டத்து அமர்ந்த ...... பெருமாளே. ---
கச்சித் திருப்புகழ்.
புன
வேடர் தந்த பொன் குறமாது இன்புறப்
புணர் காதல் கொண்ட அக் ...... கிழவோனே! --- பழநித்
திருப்புகழ்.
செட்டி
வேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது....
செட்டி
என்று வன மேவி, இன்ப ரச
சத்தியின் செயலினாளை அன்பு உருக
தெட்டி வந்து, புலியூரின் மன்றுள் வளர்
......பெருமாளே. ---
சிதம்பரத் திருப்புகழ்.
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர,
செட்டி
என்று எத்தி வந்து, ஆடி நிர்த்தங்கள் புரி
சிற்சிதம் பொற்புயம் சேர முற்றும் புணரும்
...... எங்கள் கோவே!
---
சிதம்பரத் திருப்புகழ்.
வள்ளிநாயகிக்ககாக
மடல் ஏறியது ....
பொழுது
அளவு நீடு குன்று சென்று,
குறவர்மகள் காலினும் பணிந்து,
புளிஞர் அறியாமலும் திரிந்து, ...... புனமீதே,
புதியமடல்
ஏறவும் துணிந்த,
அரிய பரிதாபமும் தணிந்து,
புளகித பயோதரம் புணர்ந்த ......
பெருமாளே. --- பொதுத்
திருப்புகழ்.
முருகப்
பெருமான் வள்ளிமலையில் திரிந்தது .....
மஞ்சு
தவழ் சாரல் அம் சயில வேடர்
மங்கை தனை நாடி, ...... வனமீது
வந்த, சரண அரவிந்தம் அது
பாட
வண்தமிழ் விநோதம் ...... அருள்வாயே.
குஞ்சர
கலாப வஞ்சி, அபிராம
குங்கும படீர ...... அதி ரேகக்
கும்பதனம்
மீது சென்று அணையும் மார்ப!
குன்று தடுமாற ...... இகல் கோப! ---
நிம்பபுரத் திருப்புகழ்.
மருவு
தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
கலகலன் கலின் கலின் என, இருசரண்
மலர்கள் நொந்து நொந்து அடிஇட, வடிவமும்...மிகவேறாய்,
வலிய
சிங்கமும் கரடியும் உழுவையும்
உறை செழும் புனம், தினை விளை இதண் மிசை
மறவர் தங்கள் பெண்கொடி தனை, ஒருதிரு ....உளம் நாடி,
அருகு
சென்று அடைந்து, அவள் சிறு பதயுக
சத தளம் பணிந்து, அதி வித கலவியுள்
அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ......அணைவோனே
--- திருவருணைத் திருப்புகழ்.
வள்ளிநாயகி
தந்த தினைமாவை முருகப் பெருமான் உண்டது...
தவநெறி
உள்ளு சிவமுனி, துள்ளு
தனி உழை புள்ளி ...... உடன் ஆடித்
தரு
புன வள்ளி, மலை மற வள்ளி,
தரு தினை மெள்ள ...... நுகர்வோனே! --- வெள்ளிகரத் திருப்புகழ்.
வள்ளிநாயகி
முன்னர் அழகனாய் முருகப் பெருமான் தோன்றியது....
மால்
உற நிறத்தைக் காட்டி, வேடுவர் புனத்தில்
காட்டில்,
வாலிபம் இளைத்துக் காட்டி, ...... அயர்வாகி,
மான்மகள்
தனத்தைச் சூட்டி, ஏன் என அழைத்துக்
கேட்டு,
வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே. --- பொதுத்
திருப்புகழ்.
வள்ளிநாயகியின்
திருக்கையையும், திருவடியையும்
பிடித்தது...
பாகு
கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா! --- சுவாமிமலைத்
திருப்புகழ்.
கனத்த
மருப்பு இனக் கரி, நல்
கலைத் திரள், கற்புடைக் கிளியுள்
கருத்து உருகத் தினைக்குள் இசைத்து, ...... இசைபாடி
கனிக்
குதலைச் சிறுக் குயிலைக்
கதித்த மறக் குலப் பதியில்
களிப்பொடு கைப் பிடித்த மணப் ......
பெருமாளே.
---
பொதுத் திருப்புகழ்.
வள்ளிநாயகியின்
எதிரில் துறவியாய்த் தோன்றியது...
பாங்கியும்
வேடுவரும் ஏங்கிட மாமுனியும்
வேங்கையும் ஆய் மறமின் ...... உடன்வாழ்வாய். --- திருவேங்கடத்
திருப்புகழ்.
வள்ளிநாயகியைக்
கன்னமிட்டுத் திருடியது....
கன்னல் மொழி, பின்அளகத்து, அன்னநடை, பன்ன உடைக்
கண் அவிர் அச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்
கன்னம்
இடப் பின் இரவில் துன்னு புரைக் கல்முழையில்
கல் நிலையில் புகா வேர்த்து ...... நின்ற வாழ்வே! --- கண்ணபுரத்
திருப்புகழ்.
முருகப்
பெருமான் வள்ளிநாயகியைத் தோளில் ஏற்றி ஓடியது...
ஒருக்கால்
நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
உரைப்பார்கள் சித்தத்து ...... உறைவோனே!
உரத்தோள்
இடத்தில் குறத்தேனை வைத்திட்டு,
ஒளித்து ஓடும் வெற்றிக் ...... குமரஈசா! --- திருவருணைத்
திருப்புகழ்.
வள்ளிநாயகியை
முருகப் பெருமான் வணங்கி,
சரசம்
புரிந்தது.....
மருவு
தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
கலகலன் கலின் கலின் என, இருசரண்
மலர்கள் நொந்து நொந்து அடிஇட, வடிவமும்...மிகவேறாய்,
வலிய
சிங்கமும் கரடியும் உழுவையும்
உறை செழும் புனம், தினை விளை இதண் மிசை
மறவர் தங்கள் பெண்கொடி தனை, ஒருதிரு ....உளம் நாடி,
அருகு
சென்று அடைந்து, அவள் சிறு பதயுக
சத தளம் பணிந்து, அதி வித கலவியுள்
அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ......அணைவோனே
--- திருவருணைத் திருப்புகழ்.
தழை
உடுத்த குறத்தி பதத் துணை
வருடி,
வட்ட முகத் திலதக் குறி
தடவி, வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே
தரள பொன் பணி கச்சு விசித்து, இரு
குழை திருத்தி, அருத்தி மிகுத்திடு
தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ......
பெருமாளே.
---
திருத்தணிகைத் திருப்புகழ்.
கருத்துரை
முருகா!
உன்னைப் பாடி வழிபடுதலை ஒருக்காலும் மறவேன்.
No comments:
Post a Comment