சீகாழி - 0781. சந்தனம் பரிமள





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சந்தனம் பரிமள (சீகாழி)

முருகா!
விலைமாதர் உறவு அகல அருள் புரிவாய்


தந்த தந்தன தனதன தனதன
தந்த தந்தன தனதன தனதன
தந்த தந்தன தனதன தனதன ...... தனதான


சந்த னம்பரி மளபுழு கொடுபுனை
கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை
தங்கு செங்கையர் அனமென வருநடை ...... மடமாதர்

சந்த தம்பொலி வழகுள வடிவினர்
வஞ்ச கம்பொதி மனதின ரணுகினர்
தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர ...... அவர்மீதே

சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்
தந்த்ர மந்த்ரிகள் தரணியி லணைபவர்
செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியு....முனிவாகித்

திங்க ளொன்றினில் நெனல்பொரு ளுதவில
னென்று சண்டைகள் புரிதரு மயலியர்
    சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி ...... னருள்கூர்வாய்

மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர்
சிந்த அன்றடர் மழைதனி லுதவிய
    மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ் ...... மருகோனே
  
மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ
துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல்
வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி ...... மணவாளா

தந்த னந்தன தனதன தனவென
வண்டு விண்டிசை முரல்தரு மணமலர்
தங்கு சண்பக முகிலள வுயர்தரு ...... பொழில்மீதே

சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு
துங்க வொண்பணி மணிகளும் வெயில்விடு
சண்பை யம்பதி மருவிய அமரர்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சந்தனம் பரிமள புழுகொடு புனை
கொங்கை வஞ்சியர், சரியொடு கொடுவளை
தங்கு செங்கையர், அனம்என வருநடை ...... மடமாதர்,

சந்ததம் பொலிவு அழகுஉள வடிவினர்,
வஞ்சகம் பொதி மனதினர், ணுகினர்
தங்கள் நெஞ்சகம் மகிழ்வுற நிதி தர, ...... அவர்மீதே

சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்
தந்த்ர மந்த்ரிகள், தரணியில் அணைபவர்
செம்பொன் இங்குஇனி இலைஎனில் மிகுதியும்....முனிவாகித்

திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன்
என்று சண்டைகள் புரி தரு மயலியர்,
    சிங்கியும் கொடு மிடிமையும் அகலநின் ...... அருள்கூர்வாய்

மந்தரம் குடை என நிரை உறுதுயர்
சிந்த, அன்று அடர் மழை தனில் உதவிய
    மஞ்சு எனும்படி வடிவுறும் அரி,புகழ் ...... மருகோனே!

மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ!
துங்க வெங்கய முகன்மகிழ் துணைவ! நல்
வஞ்சி தண் குறமகள் பதமலர் பணி ...... மணவாளா!

தந்த னந்தன தனதன தனவென
வண்டு விண்டு இசை முரல்தரு மணமலர்
தங்கு சண்பக முகில்அளவு உயர்தரு ...... பொழில்மீதே

சங்கு நன்குஉமிழ் தரளமும் எழில்பெறு
துங்க ஒண்பணி மணிகளும் வெயில்விடு
சண்பை அம்பதி மருவிய அமரர்கள் ...... பெருமாளே.


பதவுரை

      மந்தரம் குடை என --- (கோவர்த்தன) மலையைக் குடையாகப் பிடித்து,

     நிரை உறு துயர் சிந்த --- பசுக்கூட்டங்ளுக்கு நேர்ந்த துயரம் ஒழியுமாறு,

     அன்று --- அக்காலத்தில்,

     அடர்மழை தனில் உதவிய --- பெருமழை பொழிந்த போது உதவியவரும்,

      மஞ்சு எனும்படி வடிவுறும் அரி --- மேகம் என்னும்படியான நிறத்தைக் கொண்டவரும் உயிர்களின் பாவங்களைப் போக்குபவரும் ஆன திருமால்

     புகழ் மருகோனே --- மெச்சுகின்ற திருமருகரே!

      மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ --- பார்வதிதேவி மகிழும் சரவணபவரே!

     துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ --- மேன்மையும் விரும்பத்தக்க தன்மையும் கொண்ட யானைமுகத்தை உடைய மூத்த பிள்ளையார் மகிழும் தம்பியே!

      நல்வஞ்சி தண் குறமகள் பதமலர் பணி மணவாளா --- நல்ல வஞ்சிக்கொடி போலும் இடையினை உடையவளும், குளிர்ந்த உள்ளத்தினளுமான குறமகளாகிய வள்ளிநாயகியின் திருவடி மலரைப் பணியும் கணவரே!

      தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல்தரு --- தந்த னந்தன தனதன தன என்று வண்டு இசையோடு ரீங்காரம் செய்யும்

     மணமலர் தங்கு சண்பக முகில் அளவு உயர் தரு பொழில் மீதே --- நறுமண மலர்கள் உள்ள சண்பக மரங்கள் மேகத்தின் அளவுக்கு உயர்ந்து வளர்ந்துள்ள சோலையில்,

      சங்கு நன்கு உமிழ் தரளமும் --- சங்குகள் நன்கு வெளிப்படுத்துகின்ற முத்துக்களும்,

     எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு --- நாகங்கள் உமிழும் அழகும், தூய்மையும், ஒளியும் உள்ள இரத்தினங்களும் ஒளி வீசும்

      சண்பை அம்பதி மருவிய அமரர்கள் பெருமாளே --- சண்பை என்னும் அழகிய சீகாழியில் வீற்றிருக்கும் தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      சந்தனம் --- சந்தனக் குழம்போடு,

     பரிமள புழுகொடு புனை கொங்கை வஞ்சியர் --- நறுமணம் உள்ள புனுகைக் குழைத்துப் பூசியுள்ள முலைகளை உடைய வஞ்சிக் கொடி போன்ற பெண்கள்,

      சரியொடு கொடுவளை தங்கு செம்கையர் --- சிவந்த கைகளில் பலவிதமான வளையல்களை அணிந்துள்ளவர்கள்,

     அனம் என வரு நடை மடமாதர் --- அன்னம் போல் நடை பழகும் இளம்பெண்கள்,

      சந்ததம் பொலி அழகு உள வடிவினர் --- எப்போதும் அழகு பொலிகின்ற வடிவினை உடையவர்கள்,

     வஞ்சகம் பொதி மனதினர் --- வஞ்சகம் நிறைந்த மனத்தை உடையவர்கள்,  

      அணுகினர் --- தம்மிடத்தில் வந்தவர்கள்,

     தங்கள் நெஞ்சகம் மகிழ்வு உற நிதி தர --- தங்களுடைய மனம் மகிழும்படியாகப் பொருளைத் தர

     அவர் மீதே சிந்தை --- அவர் மீதே சிந்தையை வைத்து,

     வஞ்சக நயமொடு பொருள் கவர் தந்த்ர மந்த்ரிகள் ---நயவஞ்சகத்தோடு பொருளைக் கவர்கின்ற சூழ்ச்சி மிகுந்த அறிவினை உடையவர்கள்,

      தரணியில் அணைபவர் --- பூமியில் தம்மை அணைபவர்கள் (யாராக இருப்பினும்)

     செம்பொன் இங்கு இனி இலை எனில் --- கொடுப்பதற்கு மிகுதியான பொன் இல்லை என்னும்போது,

     மிகுதியும் முனிவாகி --- மிகவும் கோபித்து,

      திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன் என்று சண்டைகள் புரிதரு மயலியர் --- இந்த ஒரு மாத காலத்தில் நேற்றுக் கூட பொருள் உதவி செய்யவில்லை இவன் என்று சண்டைகள் விளைவிக்கும் ஆசைக்காரிகள் ஆகிய விலைமாதர்களின்,

      சிங்கியும் --- விடம் போன்றதான உறவும்,

     கொடு மிடிமையும் அகல --- அதனால் வருகின்ற பொல்லாத வறுமையும் என்னை விட்டு அகல,

     நின் அருள் கூர்வாய் --- தேவரீர் திருவருள் பாலிப்பீராக.


பொழிப்புரை


         கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, பசுக்கூட்டங்ளுக்கு நேர்ந்த துயரம் ஒழியுமாறு, அக்காலத்தில், பெருமழை பொழிந்த போது உதவியவரும், மேகம் என்னும்படியான நிறத்தைக் கொண்டவரும், உயிர்களின் பாவங்களைப் போக்குபவரும் ஆன திருமால்  மெச்சுகின்ற திருமருகரே!

      பார்வதிதேவி மகிழும் சரவணபவரே!

     மேன்மையும் விரும்பத்தக்க தன்மையும் கொண்ட யானைமுகத்தை உடைய மூத்த பிள்ளையார் மகிழும் தம்பியே!

     நல்ல வஞ்சிக்கொடி போலும் இடையினை உடையவளும், குளிர்ந்த உள்ளத்தினளுமான குறமகளாகிய வள்ளிநாயகியின் திருவடி மலரைப் பணியும் கணவரே!

         தந்த னந்தன தனதன தன என்று வண்டு இசையோடு ரீங்காரம் செய்யும் நறுமண மலர்கள் உள்ள சண்பக மரங்கள் மேகத்தின் அளவுக்கு உயர்ந்து வளர்ந்துள்ள சோலையில், சங்குகள் வெளிப்படுத்துகின்ற நல்ல முத்துக்களும், நாகங்கள் உமிழும் அழகும், தூய்மையும், ஒளியும் உள்ள இரத்தினங்களும் ஒளி வீசும்  அழகிய திருத்தலமாகிய சண்பை என்னும் சீகாழியில் வீற்றிருக்கும் தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

         சந்தனக் குழம்போடு, நறுமணம் உள்ள புனுகைக் குழைத்துப் பூசியுள்ள முலைகளை உடைய வஞ்சிக் கொடி போன்றவர்கள். சிவந்த கைகளில் பலவிதமான வளையல்களை அணிந்துள்ளவர்கள். அன்னம் போல் நடை பழகும் இளம்பெண்கள். எப்போதும் அழகு பொலிகின்ற வடிவினை உடையவர்கள். வஞ்சகம் நிறைந்த மனத்தை உடையவர்கள்.
தம்மிடத்தில் வந்தவர்கள், தங்களுடைய மனம் மகிழும்படியாகப் பொருளைத் தர, அவர் மீதே சிந்தையை வைத்து, நயவஞ்சகத்தோடு பொருளைக் கவர்கின்ற சூழ்ச்சி மிகுந்த அறிவினை உடையவர்கள். பூமியில் தம்மை அணைபவர்கள் யாராக இருப்பினும் கொடுப்பதற்கு மிகுதியான பொன் இல்லை என்னும்போது, மிகவும் கோபித்து, இந்த ஒரு மாத காலத்தில் நேற்றுக் கூட பொருள் உதவி செய்யவில்லை இவன் என்று சண்டைகள் விளைவிக்கும் ஆசைக்காரிகள் ஆகிய விலைமாதர்களிடத்தில் கொள்ளுகின்ற விடம் போன்றதான உறவும், அதனால் வரும் பொல்லாத வறுமையும் என்னை விட்டு அகல,  தேவரீர் திருவருள் பாலிப்பீராக. 

விரிவுரை

சந்தனம் பரிமள புழுகொடு புனை கொங்கை வஞ்சியர் ---

வஞ்சியர் - வஞ்சிக் கொடி போன்றுள்ள பெண்களைக் குறிக்கும்.

உடம்பில் நறுமணமும், குளிர்ச்சியும் பொருந்துவதற்காக, தங்களுடைய மார்பில், சந்தனக் குழம்போடு நறுமணம் உள்ள புனுகைக் குழைத்துப் பூசிக்கொள்வார்கள்.


சரியொடு கொடுவளை தங்கு செம்கையர் ---

சரி - கைவளையல்.

கொடுவளை - விதவிதமாக வளைந்துள்ள அணிகலன்கள்.
   
அனம் என வரு நடை மடமாதர் ---

பெண்கள் இயல்பாகவே மென்மையும் இனிமையும் உடையவர்கள். ஆதலால், இயல்பாகவே மென்மையான நடையினை உடையவர்கள். அவர் தம் அன்னம் நடப்பது போன்று இருக்கும்.

விலைமாதர்கள் உள்ளத்தில் கொடுமையும் வஞ்சகமும் மிக்கவர்கள். அப்படிப்பட்டவர்களிடத்தில் மென்மை இருக்காது. மென்மையான நடையும் இருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் தங்களை அழகுறப் புனைந்துகொண்டு, ஒயிலாக நடை பழகுவார்கள்.

சந்ததம் பொலி அழகு உள வடிவினர் ---

விலைமாதர்கள் எப்போதும் தம்மை அழகுடன் விளங்கவேண்டும் என்பதற்காகத் தம்மை அழகுபடுத்திக் கொண்டு தோற்றப் பொலிவு காட்டுவார்கள்.

வஞ்சகம் பொதி மனதினர் ---

வஞ்சகம் --- சூழ்ச்சி,  ஏமாற்றுதல், கயமை, நரித்தனம்.

பொதி --- மூட்டை, நிறைவு, தொகுதி,

அணுகினர், தங்கள் நெஞ்சகம் மகிழ்வு உற நிதி தர, அவர் மீதே சிந்தை வஞ்சக நயமொடு பொருள் கவர் தந்த்ர மந்த்ரிகள் ---

தம்மிடத்தில் வந்தவர்கள், தங்களுடைய மனம் மகிழும்படியாகப் பொருளைத் தருவார்கள். பொருள் நிறைந்தவர் எனக் கருதி,அவர் மீதே சிந்தையை வைத்து, நயவஞ்சகத்தோடு அவர்களுடைய பொருளைக் கவர்கின்ற சூழ்ச்சி மிகுந்த அறிவினை உடையவர்கள் விலைமாதர்கள்.

தரணியில் அணைபவர், செம்பொன் இங்கு இனி இலை எனில், மிகுதியும் முனிவாகி, திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன் என்று சண்டைகள் புரிதரு மயலியர் ---

தம்மை வந்து அணைபவர்கள்  யாராக இருப்பினும் "கொடுப்பதற்கு மிகுதியான பொன் இல்லை" என்னும்போது, அவர்களிடத்தில் மிகவும் கோபித்து, "இந்த ஒரு மாத காலத்தில் நேற்றுக் கூடப் பொருள் உதவி செய்யாதவன் இவன்" என்று சண்டைகள் விளைவிக்கும் பொருள் பற்று மட்டுமே மிகுந்த ஆசைக்காரிகள். இது விலைமாதர்ளின் தன்மை.

சிங்கியும் ---

சிங்கி - குளிர்ந்து கொல்லும் விடம்.

விலைமாதர் உறவு இதம் தருவதாக இருந்தாலும், அவர் உறவானது நாளடைவில் உடலில் பலவிதமான நோய்களை உருவாக்கும். எனவே, "சிங்கி" என்றார்.

கொடு மிடிமையும் அகல ---

பாடுபட்டுத் தேடிய பொருளைப் பரத்தையர்க்கு வாரி வழங்கியதால் பொல்லாத வறுமை வந்து சேரும். வறுமை மிகவும் கொடியது என்பதால் "மிடி என்று ஒரு பாவி வெளிப்படின், வடிவும், தனமும், மனமும், குணமும், குடியும் குலமும் குடிபோகியவா" என்றார் நம் அருணை வள்ளலார்.

மந்தரம் குடை என, நிரை உறு துயர் சிந்த அன்று அடர்மழை தனில் உதவிய மஞ்சு எனும்படி வடிவுறும் அரி, புகழ் மருகோனே ---

மந்தரம் - மலை.

நிரை - ஆநிரை, பசுக்கூட்டங்கள்.

மஞ்சு - மேகம்.

அரி - பாவங்களை அரிப்பவர்.

முன்னொரு காலத்தில் பெருமழை பெய்தபோது, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, பசுக்கூட்டங்ளுக்கு நேர்ந்த துயரம் ஒழியுமாறு காத்தருள் புரிந்தவர், மேகநிற மேனியராகிய திருமால்.

"ஆ மாய மழை சொரிதல் நிலைகுலைய, மலை குடையதாவே கொள் கரகமலன் மருகோனே" என்றார் அடிகளார் பழநித் திருப்புகழில்.

திருமால் மலையைக் குடையாகப் பிடித்து, ஆநிரை காத்த வரலாறு.

ஒரு நாள் நந்தகோபர் உபநந்தர் முதலிய ஆயர் குலத் தலைவர்கள் ஆண்டுகள் தோறும் நடத்திக்கொண்டு வந்த மகேந்திர யாகத்தைச் செய்ய ஆலோசித்துத் தொடங்கினார்கள். அதனை அறிந்த கண்ணபிரான், அந்த யாக வரலாற்றை அறிந்திருந்தும் நந்தகோபரைப் பார்த்து, “எந்தையே! இந்த யாகம் யாரைக் குறித்துச் செய்கிறீர்கள்! இதனால் அடையப் போகும் பயன் யாது?” என்று வினவினார்.

நந்தகோபர் “குழந்தாய்! தேவர்களுக்கு அதிபதியான இந்திரன் மேகரூபமாய் இருந்து உயிர்களுக்கு பிழைப்பையும் சுகத்தையும் தருகின்ற தண்ணீரைப் பொழிகின்றான். மூன்று உலகங்களுக்கும் தலைவனாகிய அந்த இந்திரனது ஆணையால் இந்த மேகங்கள் சகல ஜீவாதாரமாக உள்ள மழையை பெய்கின்றன. ஆதலால் மேகவாகனனாய் இருக்கும் இந்திரனைக் குறித்து ஆண்டுகள்தோறும் ஒரு நாளை ஏற்படுத்திக் கொண்டு, பரிசுத்தர்களாய் இருந்து, சிறந்த பால் தயிர் அன்னம் முதலிய பொருட்களைக் கொண்டு இந்த இந்திர யாகத்தைச் செய்து இந்திரபகவானை ஆராதிக்கின்றோம். கமலக் கண்ணா! இவ்வாறு இந்திரனைப் பூசித்தவர்கள் இந்திரனுடைய அருளால் எல்லா நலன்களையும் பெற்று இன்புறுகின்றார்கள். மேலும் அந்தப் பர்ஜன்யரூபியாகிய இந்திரன், அநேக நற்பலன்களை வழங்குகின்றான். இவ்வாறு ஆராதிக்காதவர்கள் நன்மை அடைய மாட்டார்கள்” என்றார்.

மூன்றுலகங்களுக்கும் முதல்வன் என்று செருக்குற்ற இந்திரனுடைய அகங்காரத்தை நீக்கத் திருவுளங் கொண்ட கண்ணபிரான், தமது தந்தையை நோக்கி “தந்தையே உயிர்கள் வினைகளுக்கீடாய்ப் பிறக்கின்றன. முற்பிறப்புக்களில் செய்த வினைகளின் வண்ணம் புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி சுகதுக்கங்களை அனுபவிக்கின்றன. வினைகளால்தான் சுகதுக்கங்கள் வருகின்றன. இதனை அன்றி இந்திராதி உலக பாலர்கள் பலன்களைக் கொடுக்க வல்லவராக மாட்டார்கள். இந்திரனால் ஒரு பலனும் கொடுக்க முடியாது. கர்மத்தை ஒழிக்கும் ஆற்றலும் இல்லை. உயிர்கள் தாங்கள் செய்த வினைக்குத் தக்கவாறு, பசு, பட்சி, புழு, விலங்கு, தேவர், மனிதர்களாகப் பிறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை. சுகத்துக்கத்திற்குக் கர்மமே முக்கிய காரணம். நம்முடைய புண்ணியமே மேகமாக இருந்து மழை பெய்கிறது.

எந்தையே! நமக்கு ஊர்கள், தேசங்கள், வீடுகள் ஒன்றுமில்லை. காடு மலைகளில் வசித்துக் கொண்டு காட்டுப் பிராணிகள் போல் பிழைத்து வருகின்றோம். ஆதலால் இந்த மலையையும் மலைக்கு அதி தேவதையையும், பசுக்களையும் பூசியுங்கள். இப்போது இந்திர பூசைக்காகச் சேகரித்த பொருள்களை கொண்டு இந்த மலையை ஆராதியுங்கள், பற்பல பணியாரங்கள், பாயசம், பால், நெய், பருப்பு, அப்பம் இவற்றை தயாரித்து, அந்தணர் முதல் சண்டாளர் நாய்வரை எல்லாப் பிராணிகளையும் திருப்தி செய்து வையுங்கள். பசுக்களுக்குப் புல்லைக் கொடுங்கள். பிறகு நீங்கள் அனைவரும் புசித்து சந்தனாதி வாசனைகளை யணிந்து ஆடையாபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு இந்த மலையை வலம் வந்து வணங்குங்கள்” என்றார்.

இதனைக் கேட்ட கோபாலர்கள் அனைவரும் நன்று என்று அதற்கு இசைந்து, கோவர்த்தன மலைக்கு அருகில் இருந்து அம் மலையை வழிபட முயன்றார்கள். அப்போது பகவானாகிய கண்ணபிரான் தமது யோக மகிமையால் தாமே ஒரு பெரிய மலையாக நின்றார். அவ் ஆயர்களிலும் தாமொருவராக இருந்து, “ஆயர்களே! இதோ இந்த மலைக்கு அதிதேவதையே நம்மைக் காக்கும் பொருட்டு இங்கு எழுந்தருளியிருக்கிறார், இவரை நீங்கள் அன்புடன் ஆராதியுங்கள்?” என்றார். ஆயர்கள் அதனைக் கண்டு மிகுந்த ஆச்சரியமடைந்து பயபக்தி சிரத்தையுடன் அருக்கிய பாத்திய ஆசமனீயம் தந்து, மனோபாவமாக அபிஷேகம் செய்து, சந்தன மலர் மாலைகளைச் சாத்தி தூபதீபங்களைக் காட்டி, அர்ச்சித்து, பங்காபேரி, வேணு முரசு முதலிய வாத்தியங்களை முழக்கி - பால், நெய், பருப்பு, அன்னம், பழம், தாம்பூலம் முதலியவற்றை நிவேதித்து வழிப்பட்டார்கள். மலை வடிவாயுள்ள பகவான் அவற்றை புசித்து அருள் புரிந்தார். கண்ணபிரானும் ஆயர்களுடன் அம்மலையை வணங்கி, “நம்மவர்களே! இதோ மலைவடிவாய் உள்ள தேவதை, நாம் நிவேதித்தவைகளை உண்டு நமது பூசையை ஏற்றுக்கொண்டார்; இம்மலை நம்மைக் காத்தருள்புரியும்” என்று கூறினார். கோபாலர்கள் மகிழ்ந்து மலையை வலம் வந்து வணங்கித் துதித்து நின்றார்கள். பிறகு அம்மலை வடிவாக நின்ற பகவான் மறைந்தார். ஆயர்கள் கோவர்த்தனம் முதலிய மலைகட்கு தூபதீபம் காட்டி ஆராதித்து வணங்கி, பசுக்களை அலங்கரித்து தாங்களும் உணவு கொண்டு, அலங்கரித்துக் கொண்டு மலையை வலம் வந்து மகிழ்ந்தார்கள்.

ஆயர்கள் வழக்கமாய்ச் செய்துவந்த பூசையை மாற்றியதைக் கண்ட இந்திரன் மிகவும் கோபித்து, ஊழிக்கால மேகங்களை அழைத்து “மேகங்களே! இளம் பிள்ளையும் தன்னையே பெரிதாக மதித்து இருக்கின்றவனுமாகிய இந்த கிருஷ்ணனுடைய வார்த்தையைக் கேட்டு மூவுலகங்கட்கும் முதல்வனாகிய என்னை இந்த ஆயர்கள் அவமதித்தார்கள். புத்தி கெட்டு கேவலம் இந்த மலையை ஆராதித்தார்கள்;.ஆதலால் நீங்கள் உடனே இந்த கிருஷ்ணனையும், ஆயர்களையும், பசுக்களையும் வெள்ளத்தில் அழித்து கடலிற் சேர்த்து அழியுமாறு பெருமழையை இடைவிடாது பொழியுங்கள்” என்று ஆணை தந்தான். இவ்வாறு கட்டளையிட்ட இந்திரன் தானும் ஐராவதத்தின் மேல் ஊர்ந்து தேவர்கள் சூழ ஆயுதங்களை ஏந்திக் கொண்டு சண்ட வாயுக்களை மேகங்களுக்குச் சகாயமாக ஏவினான். மேகங்கள் ஊழிக்காலமென உலகங்கள் வருந்த இடியுடன் ஆகாயத்தில் வியாபித்து, மின்னல் கல் மழையை ஆயர்பாடியின் மீது பெய்தன. அப்பெரு மழையால் எங்கும் தண்ணீர் மயமாகியது; பசுக்கூட்டங்கள் பதறி ஓடின. கன்றுகள் பயந்து தாய்ப் பசுக்களைச் சரண் புகுந்தன. எருதுகளும் இரிந்தன. இடையர்கள் இந்தப் பெரிய ஆபத்தைக் கண்டு பிரமாண்டம் கிழிந்து போயிற்றோ? ஊழிக்காலம் வந்துவிட்டதோ? என்று நடு நடுங்கி கண்ணபிரானிடம் ஓடிவந்து “கண்ணா மணிவண்ணா!” என்று முறையிட்டு சரணாகதி அடைந்தார்கள். கண்ணபிரான் “மக்களே! கல்மழைக்கு அஞ்ச வேண்டாம். குழந்தைகளுடனும் பசுக்களுடனும், பெண்மணிகளுடனும் வாருங்கள்.  பகவான் காப்பாற்றுவார்” என்று சொல்லி பெரிய மலையாகிய கோவர்த்தனத்தைத் தூக்கி, ஒரு சிறு பிள்ளை மழைக்காலத்தில் உண்டாகும் காளானைப் பிடுங்கிக் குடையாகப் பிடிப்பதுபோல் ஒரு கரத்தால் பிடித்தார். வராகமூர்த்தியாகிப் பூமண்டலத்தை ஒரு கோட்டால் தாங்கிய பெருமானுக்கு இது பெரிய காரியம் இல்லை.  ஒரு யானையின் தும்பிக்கையில் ஒரு தாமரை மொக்கு இருப்பதுபோல், பகவான் கரத்தில் அம்மலையானது விளங்கியது. கண்ணபிரான், “நம்மவர்களே! இம்மலையின் கீழ் யாதொரு குறைவுமின்றி நீங்கள் எல்லாரும் வந்து சுகித்திருங்கள். இந்த மலை விழுந்துவிடுமென்று நீங்கள் அஞ்ச வேண்டாம். பிரமாண்டங்கள் இடிந்து இம்மலைமேல் விழுந்தாலும் இது விழாது” என்று அருளிச் செய்தார். அதுகண்ட ஆயர்கள் அற்புதம் அடைந்து கோவினங்களுடனும் மனைவி மக்களுடனும் அம்மலையின் கீழ் சுகமாயிருந்து மழைத் துன்பமின்றி பாடி ஆடிக்கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு அந்த ஊழிமேகங்கள் ஏழு நாள் இரவும் பகலும் பெரு மழையைப் பெய்தும் கோபாலர்கள் துன்பமின்றி இருக்கக் கண்ட இந்திரன் கண்ணபிரானுடைய மகிமையை உணர்ந்து பயந்து, மேகங்களை அனுப்பிவிட்டு பெருமானைச் சரணடைந்தான். மழை நின்ற பிறகு ஆயர்களைத் தத்தம் இருக்கைக்குச் செல்லுமாறு செய்து அம்மலையைப் பழையபடியே வைத்தனர்.

    அம்மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்
         ஆனாயரும் ஆநிரையும் அலறி,
    எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப,
         இலங்கு ஆழிக்கை எந்தை எடுத்தமலை
    தம்மைச் சரண் என்ற தம்பாவையரைப் புனம்
         மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று
    கொம்மைப் புயக்குன்றர் சிலை குனிக்கும்
         கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.             ---பெரியாழ்வார்


துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ ---

துங்கம் - மேன்மை, உயர்வு.

வெம் - விரும்பத் தக்க.

யானை முகத்தோன் ஆகிய மூத்த பிள்ளையாருக்குத் துணைவராக அவர்பின் வந்தவர் இளையபிள்ளையார் ஆகிய முருகப் பெருமான்.

நல்வஞ்சி தண் குறமகள் பதமலர் பணி மணவாளா ---

நல்ல வஞ்சிக்கொடி போலும் இடையினை உடையவளும், குளிர்ந்த உள்ளத்தினளுமான குறமகளாகிய வள்ளிநாயகியின் திருவடி மலரைப் பணிந்து அவரைத் திருமணம் புணர்ந்தவர் முருகப் பெருமான்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணரத் திருவிளையாடல் பல புரிந்த அருமையை, அருணை வள்ளலார் தமது திருப்புகழ்ப் பாடல்களில் பலவாறாகப் புகழ்ந்து பாடி உள்ளார் என்பதனை அடியில் ஒரும் பிரமாணங்களால் காண்க.

முருகப் பெருமான் கிழவேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது...

குறவர் கூட்டத்தில் வந்து, கிழவனாய்ப் புக்கு நின்று,
     குருவி ஓட்டித் திரிந்த ...... தவமானை,
குணமதாக்கி, சிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த
     குமரகோட்டத்து அமர்ந்த ...... பெருமாளே.           --- கச்சித் திருப்புகழ்.

புன வேடர் தந்த பொன் குறமாது இன்புறப்
     புணர் காதல் கொண்ட அக் ...... கிழவோனே!         --- பழநித் திருப்புகழ்.

செட்டி வேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது....

செட்டி என்று வன மேவி, இன்ப ரச
     சத்தியின் செயலினாளை அன்பு உருக
     தெட்டி வந்து, புலியூரின் மன்றுள் வளர் ......பெருமாளே.  --- சிதம்பரத் திருப்புகழ்.

சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர,
செட்டி என்று எத்தி வந்து, டி நிர்த்தங்கள் புரி
    சிற்சிதம் பொன்புயம் சேர முற்றும் புணரும் ......
                                         எங்கள் கோவே.                 --- சிதம்பரத் திருப்புகழ்.

வள்ளிநாயகிக்ககாக மடல் ஏறியது ....

பொழுது அளவு நீடு குன்று சென்று,
     குறவர்மகள் காலினும் பணிந்து,
          புளிஞர் அறியாமலும் திரிந்து, ...... புனமீதே,
புதியமடல் ஏறவும் துணிந்த,
     அரிய பரிதாபமும் தணிந்து,
          புளகித பயோதரம் புணர்ந்த ...... பெருமாளே.         --- பொதுத் திருப்புகழ்.

முருகப் பெருமான் வள்ளிமலையில் திரிந்தது .....

மஞ்சு தவழ் சாரல் அம் சயில வேடர்
     மங்கை தனை நாடி, ...... வனமீது
வந்த, சரண அரவிந்தம் அது பாட
     வண்தமிழ் விநோதம் ...... அருள்வாயே.

குஞ்சர கலாப வஞ்சி, அபிராம
     குங்கும படீர ...... அதி ரேகக்
கும்பதனம் மீது சென்று அணையும் மார்ப!
     குன்று தடுமாற ...... இகல் கோப!                               --- நிம்பபுரத் திருப்புகழ்.

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
     கலகலன் கலின் கலின் என, இருசரண்
     மலர்கள் நொந்து நொந்து அடிஇட, வடிவமும்...மிகவேறாய்,

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்
     உறை செழும் புனம், தினை விளை இதண் மிசை
     மறவர் தங்கள் பெண்கொடி தனை, ஒருதிரு ....உளம் நாடி,

அருகு சென்று டைந்து, வள் சிறு பதயுக
     சத தளம் பணிந்து, தி வித கலவியுள்
     அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ......அணைவோனே
                                                                       --- திருவருணைத் திருப்புகழ்.

வள்ளிநாயகி தந்த தினைமாவை முருகப் பெருமான் உண்டது...

தவநெறி உள்ளு சிவமுனி, துள்ளு
     தனி உழை புள்ளி ...... உடன் ஆடித்
தரு புன வள்ளி,  மலை மற வள்ளி,
     தரு தினை மெள்ள ...... நுகர்வோனே!                ---  வெள்ளிகரத் திருப்புகழ்.

வள்ளிநாயகி முன்னர் அழகனாய் முருகப் பெருமான் தோன்றியது....

மால் உற நிறத்தைக் காட்டி, வேடுவர் புனத்தில் காட்டில்,
     வாலிபம் இளைத்துக் காட்டி, ...... அயர்வாகி,
மான்மகள் தனத்தைச் சூட்டி, ஏன் என அழைத்துக் கேட்டு,
     வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே.        --- பொதுத் திருப்புகழ்.

வள்ளிநாயகியின் திருக்கையையும், திருவடியையும் பிடித்தது...

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா!                          --- சுவாமிமலைத் திருப்புகழ்.

கனத்த மருப்பு இனக் கரி, நல்
     கலைத் திரள், கற்புடைக் கிளியுள்
     கருத்து உருகத் தினைக்குள் இசைத்து, ...... இசைபாடி
கனிக் குதலைச் சிறுக் குயிலைக்
     கதித்த மறக் குலப் பதியில்
     களிப்பொடு கைப் பிடித்த மணப் ...... பெருமாளே. --- பொதுத் திருப்புகழ்.

வள்ளிநாயகியின் எதிரில் துறவியாய்த் தோன்றியது...

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுனியும்
     வேங்கையும் ஆய் மறமின் ...... உடன்வாழ்வாய்.   --- திருவேங்கடத் திருப்புகழ்.

வள்ளிநாயகியைக் கன்னமிட்டுத் திருடியது....

கன்னல் மொழி, பின்அளகத்து, ன்னநடை, பன்ன உடைக்
     கண் அவிர் அச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்
கன்னம் இடப் பின் இரவில் துன்னு புரைக் கல்முழையில்
     கல் நிலையில் புகா வேர்த்து ...... நின்ற வாழ்வே!   --- கண்ணபுரத் திருப்புகழ்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் தோளில் ஏற்றி ஓடியது...

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
     உரைப்பார்கள் சித்தத்து ...... உறைவோனே!
உரத்தோள் இடத்தில் குறத்தேனை வைத்திட்டு,
     ஒளித்து ஓடும் வெற்றிக் ...... குமரஈசா!                --- திருவருணைத் திருப்புகழ்.

வள்ளிநாயகியை முருகப் பெருமான் வணங்கி, சரசம் புரிந்தது.....

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
     கலகலன் கலின் கலின் என, இருசரண்
     மலர்கள் நொந்து நொந்து அடிஇட, வடிவமும்...மிகவேறாய்,

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்
     உறை செழும் புனம், தினை விளை இதண் மிசை
     மறவர் தங்கள் பெண்கொடி தனை, ஒருதிரு ....உளம் நாடி,

அருகு சென்று டைந்து, வள் சிறு பதயுக
     சத தளம் பணிந்து, தி வித கலவியுள்
     அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ......அணைவோனே
                                                                     --- திருவருணைத் திருப்புகழ்.

தழை உடுத்த குறத்தி பதத் துணை
     வருடி, வட்ட முகத் திலதக் குறி
     தடவி, வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே
தரள பொன் பணி கச்சு விசித்து, ரு
     குழை திருத்தி, அருத்தி மிகுத்திடு
     தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ...... பெருமாளே.
                                                                       --- திருத்தணிகைத் திருப்புகழ்.


சண்பை அம்பதி மருவிய அமரர்கள் பெருமாளே ---

சண்பை என்பது சீகாழிக்கு உரிய பன்னிரண்டு திருப்பெயர்களில் ஒன்று.

சீகாழிக்கு உள்ள பன்னிரண்டு பெயர்கள் குறித்துப் பின்வருமாறு காண்க.

பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்
பொருஇல் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.     ---  பெரியபுராணம்.

1.    பிரமபுரம்  பிரமதேவர் பூசித்துப் பெறு பெற்றதலம்.

தோடுஉடைய செவியன் விடைஏறி ஓர்தூவெண் மதி சூடி
காடுஉடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிராமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

சேவுயரும் திண்கொடியான் திருவடியே
         சரண் என்று சிறந்த அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்தான்
         வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
         செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவிஇரும் கருங்குவளை கருநெய்தல்
         கண்காட்டும் கழுமலமே

எனத் திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்து இருத்தல் காண்க.

2.    வேணுபுரம்  சூரபதுமனுக்கு அஞ்சிய தேவேந்திரன் இங்குப் போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு (மூங்கில்) வடிவில் முளைத்து அருள்புரிந்த தலம். தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க வேணு வழியாய் இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.

3.    புகலி – சூரபதுமனால் இடுக்கண் எய்திய தேவர்கள் சிவபிரானைப் புகல் அடைந்து, அடைக்கலம் புகுந்து வணங்கிய தலம்.

4.    வெங்குரு – அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் வழிபட்டுத் தேவகுருவாகிய பிருகற்பதிக்குச் சமத்துவம் பெற்ற தலம்.  எமதருமன் தன்னைக் கொடியவன் என்று உலகம் இகழாதவாறு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.

5.    தோணிபுரம் – ஊழிமுடிவில் சிவபெருமான் உமாதேவியாரோடு பிரணவம் ஆகிய தோணியில் வீற்றிருப்பத் தான் அழியாமல், நிலைபேறு எய்தித் திகழும் தலம்.

6.    பூந்தராய் – சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளும் பூவும் தாருமாய்ப் பூசித்து அழியாவரம் பெற்ற தலம்.

7.    சிரபுரம் – சயிங்கேயன் என்னும் அசுரன் வேற்று வடிவம் கொண்டு மறைந்து வந்து தேவர்களுடன் இருந்து அமிர்தம் உண்ணும் நிலையில் சூரியனால் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டுணுவால் சிரம் வெட்டுண்ட தலம்.

8.    புறவம் – சிபிச் சக்கரவர்த்தியைச் சோதித்தற்கு அக்கினிதேவன் புறாவடிவம் கொண்டு போந்து, புறாவின் எடை அளவிற்குத் தன் தசையை அரிந்து கொடுத்தும், அது போதாமை கண்டு, அவனே துலை ஏறித் தன் வள்ளன்மையினைப் புலப்படுத்திய நிலையில், புறா வடிவம் கொண்ட அக்கினிதேவன், அப்பாவம் அழியுமாறு வழிபட்டு உய்ந்த தலம்.

9.    சண்பை – கபில முனிவர் சாபத்தின்படி தம் குலத்தினன் வயிற்றில் பிறந்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய துகள், சண்பைப் புல்லாக முளைத்து இருந்ததை ஆயுதமாகக் கொண்டு போர் செய்து மடிந்த யாதவர்களின் கொலைப்பழி, தன்னை அணுகாவண்ணம் கண்ணன் பூசித்த தலம்.

10.   சீகாழி – காளிதன் என்னும் நாகம் வணங்கிய தலம்.  நடனத்தில் தோற்ற காளி வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.

11.   கொச்சைவயம் – பராசரர் தாம் மச்சகந்தியை ஆற்றிடையில் புணர்ந்து அடைந்த தீநாற்றமும், பழியும் போகும் வண்ணம் இறைஞ்சி உய்ந்த தலம்.

12.   கழுமலம் – உரோமச முனிவர் இறைவனை வழுத்தி ஞானோபதேசம் பெற்றுத் தம்முடைய மலங்களைக் கழுவப்பெற்ற தலம்.

கருத்துரை


முருகா! விலைமாதர் உறவு அகல அருள் புரிவாய்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...