பழநி - 0109. அருத்தி வாழ்வொடு


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அருத்தி வாழ்வொடு (பழநி)

உலக வாழ்வு பொய், உனது திருவடியில் வழிபடும் தொழிலை அருள்.


தனத்த தானன தனதன தனதன ...... தனதான
     தனத்த தானன தனதன தனதன ...... தனதான


அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு ...... முறவோரும்
     அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு ...... வளநாடும்

தரித்த வூருமெ யெனமன நினைவது ...... நினையாதுன்
     தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது ...... தருவாயே

எருத்தி லேறிய இறையவர் செவிபுக ...... வுபதேசம்
     இசைத்த நாவின இதணுறு குறமக ...... ளிருபாதம்

பரித்த சேகர மகபதி தரவரு ...... தெய்வயானை
     பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும், ...... உறவோரும்,
     அடுத்த பேர்களும், தம்உறு மகவோடு, ...... வளநாடும்,

தரித்த ஊருமெ என மனம் நினைவது ...... நினையாது, உன்
     தனைப் பராவியும் வழிபடு தொழில்அது ...... தருவாயே.

எருத்தில் ஏறிய இறையவர் செவிபுக, ...... உபதேசம்
     இசைத்த நாவின! இதண்உறு குறமகள் ...... இருபாதம்

பரித்த சேகர! மகபதி தரவரு ...... தெய்வயானை
     பதிக்கொள் று இரு புய! பழநியில் உறை ...... பெருமாளே.


பதவுரை


      எருத்தில் எறிய --- இடப வாகனத்தின் மீது ஆரோகணித்து அருளுகின்ற,

     இறையவர் --- எப்பொருட்குந் தலைவராகிய சிவபெருமானுடைய,

     செவி புக --- திருச் செவியில் புகுமாறு

     உபதேசம் இசைத்த நாவின --- பிரணவ மந்திரோபதேசம்  மொழிந்தருளிய திருநாவை உடையவரே!

      இதண் உறு குறமகள் இருபாதம் பரித்த சேகர --- பரண் மிசை இருந்த வள்ளி நாயகியாரது இரண்டு திருவடிகளையும் தாங்கி திருமுடியில் அணிந்து கொண்டவரே!

      மகபதி தர வரு தெய்வயானை பதிக்கொள் ஆறிரு புய --- தேவேந்திரன் செய்த தவத்தினால் மகவாக வந்தருளிய தெய்வயானையம்மையார் பதியாகக் கொண்ட பன்னிரு புயாசலத்தை உடையவரே!

      பழநியில் உறை பெருமாளே --- பழநியம்பதியில் வாழ்கின்ற, பெருமையின் மிக்கவரே!

      அருத்தி வாழ்வொடு --- ஆசையை விருத்தி பண்ணுகின்ற உலக வாழ்வையும்,

     தனகிய மனைவியும் --- சரசஞ்செய்கின்ற மனைவியையும்,

     உறவோரும் --- சுற்றத்தாரையும்,

     அடுத்த பேர்களும் --- சிநேகிதர்களையும்,

     இதம் உறு மகவொடு --- இன்பத்தைத் தருகின்ற குழந்தைகளையும்,

     வள நாடும் --- வளம்பெற்ற நாட்டையும்,

     தரித்த ஊரும் --- பொருந்தி வாழ்கின்ற ஊரையும்,

     மெய்யென மனம் நினைவது --- இவையே எப்பொழுதும் நிலைத்தவை என்று எண்ணுகின்ற பொய் எண்ணத்தை,

     நினையாது --- எண்ணாமற்படிக்கு,

     உன் தனைப் பரவியும் --- தேவரீருடைய திருவடியை நினைந்தும் துதித்தும்,

     வழிபடு தொழில் அது தருவாயே --- காயத்தால் வழிபடுகின்ற தொண்டைத் தந்து அருள்புரிவீர்.
   
பொழிப்புரை


         இடபத்தின் மீது எழுந்தருளி வருகின்ற தனிப் பெருந்தலைவராகிய சிவபெருமானுடைய திருச்செவியில் புகுமாறு பிரணவ மந்திரத்தின் உட் பொருளை உபதேசித்தருளிய திருநாவை உடையவரே!

         தினைப்புனத்தில் பரண் மிசை நின்ற வள்ளிநாயகியாரது திருவடிகள் இரண்டையும் தாங்கிச் சென்னிமேல் சூடியவரே!

         நூறு பரிமேதங்களைச் செய்த இந்திரனது தவப்பயனால் திருக்குழந்தையாக வந்தருளிய தெய்வயானையார் பதியாகக் கொண்ட பன்னிரு புயத்தை உடையவரே!

         பழநியம்பதியில் வாழ்கின்ற பெருமிதம் உடையவரே!

         ஆசையை விருத்தி பண்ணுகின்ற சரசம் பேசி விளையாடுகின்ற மனைவியையும், சுற்றத்தாரையும், என்னை அடுத்துள்ள நண்பர்களையும், இன்பத்தை விளைவிக்கின்ற மக்களையும், வளம் பொருந்திய நாட்டையும் பொருந்தி வாழ்கின்ற ஊரையும் நிலைத்தவை என்று எண்ணியிருக்கின்ற எண்ணத்தை யொழித்து (நிலை பேறாயுள்ள) தேவரீரது திருவடித் தாமரைகளை எண்ணித் துதித்து வாழ்த்தி வழிபடுகின்ற திருத்தொழிலைத் தந்து அருள்புரிவீர்.
       
விரிவுரை
  
அருத்தி வாழ்வு ---

உலக வாழ்வு மேலும் மேலும் அவாவை வளரச் செய்வது, விடாய் கொண்டான் கடல் நீரை யருந்தினாப் போல், அவாவுற்றோன் அப்பொருளை யனுபவிப்பதால் அவாவடங்குதலிலது, மேலும் வளரவே செய்யும்.


தனகிய மனைவியும் தரித்தவூரும் ---

மனைவி மக்கள் சுற்றம் ஊர் பேர் செல்வம் இவையே உயிர்க்கு உறுதி செய்வன என்று எண்ணி எண்ணி வீணே அழியாமல் உயிர்க்கு உயிராகிய குகப்பெருமான் ஒருவரே மெய்ப்பொருள் என்று எண்ணி வழிபடவேண்டும்.

  உலக பசுபாச தொந்தம் அதுவான
    உறவுகிளை தாயார்தந்தை மனைபாலர்
  மலசல சுவாச சஞ்சலம் அதால் என்
    மதிநிலை கெடாமல் உன்தன் அருள்தாராய்”
                                                                                               --- திருப்புகழ்

எருத்தில் ஏறிய இறையவர் ---

சிவபெருமான் விடையின் மீது எழுந்தருளியுள்ளார். உலக முழுவதும் அழிந்த பின் தருமம் ஒன்றே அழியாது நின்றது. தருமம் ஒன்றே அழிவற்றது. மற்றதெல்லாம் அழிவனவாம். எல்லாம் அழிந்தும் தான்மட்டும் அழியாமல் நின்ற தருமம், சிவமூர்த்தியினிடம் இடப வடிவாகிச் சென்று அடைக்கலம் புக்கது; அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு கால்களுடன் நின்ற தரும தேவதையைப் பெருமான் தமக்கு வாகனமாகக் கொண்டு அருள் புரிந்தனர். தருமம் ஒன்றே இறைவனைத் தாங்குந் தகுதி உடையது. தருமத்தின் மீது எழுந்தருளும் அப்பரமபதி ஒருவரே யாவர்க்கும் தலைவர். எப்பொருட்கும் இறைவர்.

குறமகள் இருபாதம் பரித்த சேகர ---

முருகர் வள்ளிநாயகியாரது திருவடியை வணங்கினார் என்பது எம்பிரானுடைய கருணையை காட்டுகிறது. குருமூர்த்தி தன்னை விரும்பி நோற்ற ஆன்மாவை ஆட்கொள்ளத் தானே எளிதில் வெளி வந்து வணங்கியும் ஆட்கொள்வர்.

    பணியா என வள்ளிபதம் பணியும்
     தணியா அதிமோக தயாபரனே”      --- கந்தர்அநுபூதி.

    குறமின் பதசேகரனே”                 --- கந்தர்அநுபூதி.


கருத்துரை

சிவகுருவே! வள்ளி கணவ! தெய்வகுஞ்சரி நாயக! பழநி ஆண்டவா! உலக வாழ்வை மெய்யென நினையாமல் தேவரீரது திருவடியில் வழிபடும் தொழிலைத் தந்தருளுவீர்.


        



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 16

  "நாயாய்ப் பிறந்திடின் நல்வேட்டை ஆடி நயம்புரியும், தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய், காயா மரமும், வறளாம் குளமும், கல...