அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அரிசன வாடை (பழநி)
மாதர் ஆசை அற, முருகன் பாதமலர்
பெற
தனதன
தானத் தான தனத்தத்
தனதன தானத் தான தனத்தத்
தனதன தானத் தான தனத்தத் ...... தனதான
அரிசன
வாடைச் சேர்வை குளித்துப்
பலவித கோலச் சேலை யுடுத்திட்
டலர்குழ லோதிக் கோதி முடித்துச் ......
சுருளோடே
அமர்பொரு
காதுக் கோலை திருத்தித்
திருநுதல் நீவிப் பாளி தபொட்டிட்
டகில்புழு காரச் சேறு தனத்திட் ......
டலர்வேளின்
சுரதவி நோதப் பார்வை மையிட்டுத்
தருணக லாரத் தோடை தரித்துத்
தொழிலிடு தோளுக் கேற வரித்திட் ...... டிளைஞோர்மார்
துறவினர் சோரச் சோர நகைத்துப்
பொருள்கவர் மாதர்க் காசை யளித்தற்
றுயரற வேபொற் பாத மெனக்குத் ...... தருவாயே
கிரியலை
வாரிச் சூர ரிரத்தப்
புணரியின் மூழ்கிக் கூளி களிக்கக்
கிரணவை வேல்புத் தேளிர் பிழைக்கத் ...... தொடுவோனே
கெருவித கோலப் பார தனத்துக்
குறமகள் பாதச் சேக ரசொர்க்கக்
கிளிதெய்வ யானைக் கேபு யவெற்பைத் ......
தருவோனே
பரிமள
நீபத் தாரொ டுவெட்சித்
தொடைபுனை சேவற் கேத னதுத்திப்
பணியகல் பீடத் தோகை மயிற்பொற் ......
பரியோனே
பனிமல ரோடைச் சேலு களித்துக்
ககனம ளாவிப் போய்வ ருவெற்றிப்
பழநியில் வாழ்பொற் கோம ளசத்திப் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
அரிசன
வாடைச் சேர்வை குளித்து,
பலவித கோலச் சேலை உடுத்திட்டு,
அலர்குழல் ஓதிக் கோதி முடித்து, ......
சுருளோடே
அமர்பொரு
காதுக்கு ஓலை திருத்தி,
திருநுதல் நீவி, பாளித பொட்டு இட்டு,
அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு, ...... அலர்வேளின்
சுரத
விநோதப் பார்வை மை இட்டு,
தருண கலாரத் தோடை தரித்து,
தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு, .....இளைஞோர்மார்,
துறவினர் சோரச் சோர நகைத்து,
பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.
கிரி
அலை வாரிச் சூரர் இரத்தப்
புணரியின் மூழ்கிக் கூளி களிக்க,
கிரண வைவேல் புத்தேளிர் பிழைக்கத் ...... தொடுவோனே!
கெருவித கோலப் பார தனத்துக்
குறமகள் பாதச் சேகர! சொர்க்கக்
கிளிதெய்வ யானைக்கே புயவெற்பைத் ......
தருவோனே!
பரிமள
நீபத் தாரொடு வெட்சித்
தொடைபுனை சேவல் கேதன! துத்திப்
பணி அகல் பீடத் தோகை மயில்பொன் ......
பரியோனே!
பனிமலர்
ஓடைச் சேல் உகளித்துக்
ககனம் அளாவிப் போய் வரு, வெற்றிப்
பழநியில் வாழ்பொன் கோமள சத்திப் ......
பெருமாளே.
பதவுரை
கிரி --- மலைகளிலும்,
அலை வாரி --- அலைகளுடன் கூடிய கடலிலும்
இருந்த,
சூரர் --- சூரர்களுடைய,
ரத்த புணரியின் மூழ்கி --- உதிரக் கடலில்
குளித்து,
கூளி களிக்க --- பேய்கள் மகிழ்ச்சியடைவும்,
புத்தேளிர் பிழைக்க --- தேவர்கள் உய்யுமாறும்,
கிரண வை வேல் தொடுவானே --- ஒளியும்
கூர்மையும் பொருந்திய வேலாயுதத்தை விடுத்தவரே!
கெருவித --- செருக்கு உறத்தக்க,
கோல --- அழகுடைய,
பார தனத்து --- கனத்த தனங்களையுடைய,
குறமகள் பாத சேகர --- வள்ளிபிராட்டியின்
திருவடியைத் தரித்தவரே!
சொர்க்க --- சுவர்க்க உலகிலே வளர்ந்த,
கிளி --- கிளி போன்ற,
தெய்வயானைக்கே --- தெய்வயானை அம்மையாருக்கே,
புய வெற்பை தருவோனே --- மலைபோன்ற தோள்களைத்
தருக்கின்றவரே!
பரிமள நீப தாரொடு --- நறுமணம் நிறைந்த
கடப்ப மாலையுடன்,
வெட்சி தொடை புனை --- வெட்சி மாலையணிந்த,
சேவல் கேதன --- சேவலங் கொடியினரே!
துத்தி --- படத்தில் பொறிகளையுடைய,
பணி அகல் --- பாம்பு அஞ்சி அகல்கின்ற,
பீட --- ஆசனம்போல் விளங்கும்,
தோகை மயில் பொன் பரியோனே --- கலாபத்துடன்
கூடிய அழகிய மயிலை வாகனமாக உடையவரே!
பனிமலர் ஓடை --- குளிர்ந்த மலர்களுடன்
கூடிய நீரோடைகளில்,
சேல் களித்து --- சேல் மீன்கள்
மகிழ்ச்சியுற்று,
ககனம் அளாவு போய்வரு வெற்றி --- விண்வரை
துள்ளிக் குதித்துச் சென்று வரும் வெற்றியுடன் கூடிய,
பழநியில் வாழ் --- பழநியம்பதியில் வாழ்கின்ற,
பொன் கோமள சக்தி --- அழகும் இளமையும் உடைய
வேலை ஏந்திய,
பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!
அரிசன வாடை சேர்வை குளித்து --- மஞ்சள்
வாசனைக் கலவையுடன் கூடிய நீரில் குளித்து,
பலவித கோல சேலை உடுத்திட்டு --- பலவிதமான
அலங்காரத்தைச் செய்து புடவைகளை உடுத்து,
அலர் குழல் ஓதி கோதி முடித்து --- மலர்
தரித்த கூந்தல் மயிரைச் சிக்கெடுத்து முடித்து,
சுருளோடே அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி ---
சுருண்டுள்ள அக்குழலுடன் நெருங்கி போர் புரிகின்ற காதுகளில் பொன்னோலைகளைத் தரித்து,
திரு நுதல் நீவி --- அழகிய நெற்றியைச் சீர்
பெறத் துடைத்து,
பாளித பொட்டு இட்டு --- பச்சைக் கற்பூரங்
கலந்த திலகத்தை இட்டு,
அகல் புழுகு ஆர சேறு தனத்து இட்டு --- அகில், புனுகு, சந்தனம் முதலியவை கலந்த குழம்பை கொங்கையில்
பூசி,
அலர் வேளின் --- மலர்க்கணை ஏந்திய மன்மதனுடைய,
சுரத விநோத பார்வை மை இட்டு ---
காமசாத்திரத்திற் கூறிய படி இன்பத்தை விளைவிக்கும் கண்களில் மையை இட்டு,
தருண கலார தோடை தரித்து --- அப்பொழுது அலர்ந்த
செங்கழுநீர் மாலையைப் புனைந்து,
தொழிலிடு தோளுக்கு ஏற வரித்திட்டு --- கலவித்
தொழில் செய்யும் தோள்களுக்குப் பொருந்தும் வகையில் நிரம்ப அலங்கரித்து,
இளைஞோர்மார் --- இளைஞர்கள் முதல்,
துறவினர் --- துறவிகள் வரை,
சோர நகைத்து --- உள்ளந் தளரத் தளரப் புன்னகை
புரிந்து,
பொருள் கவர் மாதர்க்கு ஆசை அளித்தல் ---
பணத்தைப் பறிக்கின்ற பொது மாதர்களிடம் ஆசை வைக்கின்ற,
துயர் அறவே --- துன்பம் நீங்குமாறு,
பொன் பாதம் எனக்கு தருவாயே --- தேவரீருடைய
அழகிய திருவடிகளை அடியேனுக்குத் தந்தருளுவீர்.
பொழிப்புரை
மலைகளிலும், அலைகடலிலும் இருந்த சூரர்களின் உதிரக் கடலில்
முழுகிப் பேய்கள் மகிழவும், தேவர்கள் ஈடேறவும், ஒளியும் கூர்மையும் பொருந்திய
வேலாயுதத்தை விடுத்தருளியவரே!
செருக்குடன் கனத்து இருக்கும் அழகிய
தனங்களை உடைய வள்ளியம்மையின் பாதங்களைச் சூடிக்கொண்டவரே!
விண்ணுலக மடந்தையாகிய கிளி போன்ற இனிய
சொற்களையுடைய தெய்வயானை அம்மைக்கு மலை போன்ற தோள்களைத் தருகின்றவரே!
நல்ல வாசனை பொருந்திய கடப்ப மலர்
மாலையையும் வெட்சி மலர் மாலையையும் புனைகின்ற சேவல் கொடியினரே!
படத்தின் பொறிகளுடன் கூடிய அரவங்கள்
அஞ்சி அகல்கின்ற மயிலை ஆதனமாகவும் வாகனமாகயும் கொண்டவரே!
குளிர்ந்த மலர்களுடன் கூடிய ஓடைகளில்
சேல்மீன்கள் களிப்புடன் விண்ணளவும் துள்ளிக் குதித்து உலாவும் வெற்றி நிறைந்த
பழநியம்பதியில் வாழ்கின்ற அழகும் இளமையும் உடைய ஞானவேல் ஏந்திய பெருமிதம் உடையவரே!
மஞ்சள் வாசனை கலந்த நீரில் குளித்து, அநேகமான அலங்காரங்களைச் செய்து, நல்ல புடவைகளை உடுத்தி, மலர்க் கூந்தலைக் கோதி முடித்து, அக் கூந்தலுடன் நெருங்கிப் போர் புரிகின்ற
காதுக்குப் பொன்னோலையைத் திருத்தித் தரித்து, அழகிய நெற்றியைத் துடைத்து, பச்சைக் கற்பூரத் திலகத்தைத் தரித்து, அகில் புனுகு சந்தனம் முதலிய நறுமணப்
பொருள்களைக் கொங்கையில் அப்பி, மலர்க்கணை ஏந்திய
மன்மதனுடைய காமநூலில் கூறியபடி விருப்பத்தை விளைக்கும் பார்வையுடன் கூடிய கண்களில்
மையிட்டு, புதிய செங்கழுநீர்
மலர் மாலையைத் தரித்து, கலவித் தொழில்
செய்யும் தோள்களுக்குப் பொருந்தும் முறையில் அலங்கரித்து, இளைஞர்கள் முதல் துறவிகள் வரை, உள்ளம் தளரத் தளரப் புன்னகை புரிந்து, செல்வத்தைக் கவர்கின்ற, பொது மாதர் மீது ஆசை வைத்தலாகிய துன்பம்
தீர, உமது அழகிய திருவடியை
அடியேனுக்குத் தந்தருள்வீராக.
விரிவுரை
தருண
கலாரத் தோடை தரித்து ---
தருணம்-புதுமை.
கலாரம்-செங்கழுநீர். தொடை என்ற சொல் சந்தத்தை நோக்கி தோடை என நீண்டு வந்தது.
துறவினர்
சோர சோர நகைத்து ---
துறவிகளுடைய
உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால்
வளைத்துப் பிடிப்பர்.
கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி
ஊடுருவத்
தொளைத்துப்
புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை
வளைத்துப்
பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்து,
தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே? --- கந்தர் அலங்காரம்.
மாதர்க்கு
ஆசை அளித்தல் துயர் அற ---
பெண்கட்கு
ஆசை வைத்தலாகிய துன்பம் நீங்க, ஆசை-பொன், பொதுமாதர்க்குப் பொன்னைத் தரும் துயர்
நீங்க என்றும் பொருள்படும்.
கிரி
அலைவாரிச் சூர
---
சூராதி
யவுணர்கள் மலைகளிலும் கடல் நடுவிலும் நகரங்களை யமைத்து வாழ்ந்தார்கள்.
கூளி
களிக்க
---
கூளி-பேய்.
பேய்கள் அசுரர்களுடைய உதிரமாகிய வெள்ளத்தில் முழுகி மகிழ்ந்தன.
கிரண
வை வேல்
---
வேல்
என்பது ஞானம். ஞானம் ஒளியுடையது கூர்மையுடையது. அஞ்ஞானம் இருள்; ஞானம் ஒளி “கூர்த்த மெய்ஞ் ஞானத்தால்”
என்பது சிவபுராணம். அறிவு “கூர்மையால் விளங்கும்.” “அரம் போன்ற கூர்மையரேனும்”
என்கிறார் திருவள்ளுவர். அறிவில்லாதவனை கூர்கெட்டவனே! என்றும், ‘உலக்கைக் கொழுந்தே’ என்றும் வையும் உலக
வழக்கையும் உன்னுக. எனவே வேலை வழிபட்டோர்க்கு ஞான ஒளியும் கூர்த்த மதியும்
உண்டாகும்.
குறமகள்
பாத சேகர
---
பாத
சேகரன்-பாதத்தைச் சூடிக்கொண்டவன். வள்ளியம்மையை ஆட்கொள்ளும் பொருட்டு இறைவன்
புரிந்த கருணையின் எளிமையை இது தெரிவிக்கின்றது.
வேதாமுதல்
விண்ணவர் சூடுமலர்ப்
பாதா
குறமின் பத சேகரனே” --- கந்தர் அநுபூதி.
தெய்வயானைக்கே
வெற்பைத் தருவோனே ---
பெருமான்
வள்ளியை மணந்து கொண்டாலும், தெய்வயானை அம்மையாரைப்
புறக்கணிக்கவில்லை. அவரிடம் மிகுந்த பிரியமாக இருக்கின்றான் என்று சுவாமிகள் கூறுகின்றார்.
“நவமாமணி வடமும்பூத்த
தனமாதெனும் இபமின் சேர்க்கை
நழுவானகை பிரியங்காட்டு முருகோனே”
--- (முகிலாமெனுமளகங்)
திருப்புகழ்
பரிமள
நீபத்தாரொடு வெட்சித் தோடை புனை ---
முருகப்
பெருமானுக்கு உகந்த மலர்கள் கடப்பமும், வெட்சியுமாகும்.
இரண்டும் செந்நிறம் உடையவை. முருகவேளுக்கு சிவந்த ஆடை, சிவந்த மலர், சிவந்த சந்தனம் இவை உவகை தருவனவாகும்.
சேவற்
கேதன
---
முருகன்
அடியார்களை ஆதரிக்க எழுந்தருளும்போது முன் எச்சரிக்கையாக “முருகன் வருகிறான்”
என்று சேவல் கூவி இன்பத்தைத் தரும். சேவல் வணங்கத்தக்க பெருமையுடையது.
வந்திப்பேன், அநுதினமும் வாழ்த்திடுவேன், உனதுதிரு வடியை நாளும்
சிந்திப்பேன், முப்பொழுதும் சேவிப்பேன், செஞ்சூட்டுச் சேவலே! கேள்,
பந்திப்பேன்
எனது வலி பார்என்னும் ஆணவமாம் பகைவிண்டு ஓட,
கொந்தில்
தேன் பொழிற்சாரல் தணிகை வரையான் வர நீ கூவுவாயே.
தணிகை சந்நிதிமுறை
திருமாலின்
அடியார்கள், திருமாலின் வாகனமாகிய
கருடன் வம்சமாகிய கருடனைக் காணுந்தோறும் “அரிகரி” என்று கூறி மகிழ்கின்றார்கள்.
அதுபோல் முருகனுடைய அடியார்கள்,
முருகவேளின்
கொடியாகிய சேவலைக் காணுந்தோறும் “முருகா முருகா” என்று துதித்துக்
கும்பிடவேண்டும்.
கருத்துரை
பழநியாண்டவனே!
மாதராசை அற நின் பாதமலரைத் தருவாய்.
No comments:
Post a Comment