அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அபகார நிந்தை (பழநி)
உபதேச மந்திரப் பொருளால்
உனை நினைந்து உய்ய அருள்
தனதானதந்தனத்
...... தனதான
தனதானதந்தனத் ...... தனதான
அபகார
நிந்தைபட் ...... டுழலாதே
அறியாத வஞ்சரைக் ...... குறியாதே
உபதேச
மந்திரப் ...... பொருளாலே
உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ
இபமாமு
கன்தனக் ...... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா
ஜெபமாலை
தந்தசற் ...... குருநாதா
திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அபகார
நிந்தைபட்டு ...... உழலாதே,
அறியாத வஞ்சரைக் ...... குறியாதே,
உபதேச
மந்திரப் ...... பொருளாலே,
உனைநான் நினைந்து அருள் ...... பெறுவேனோ?
இப
மாமுகன் தனக்கு ...... இளையோனே!
இமவான் மடந்தை உத் ...... தமி பாலா!
ஜெபமாலை
தந்த சற் ...... குருநாதா!
திருவாவினன் குடிப் ...... பெருமாளே.
பதவுரை
இப மா முகன் தனக்கு --- யானையின் சிறந்த
முகமுடைய விநாயக மூர்த்திக்கு,
இளையோனே --- இளைய தம்பியே!
இமவான் மடந்தை --- இமயவேந்தன்
புதல்வியாகிய,
உத்தமி பாலா --- உத்தமியின் புதல்வரே!
ஜெபமாலை தந்த --- ஜெபமாலையை
அடியேனுக்குத் தந்தருளிய,
சற்குரு நாதா --- சற்குரு நாதரே!
திருவாவினன்குடி ---
திருவாவினன்குடியில் எழுந்தருளியிருக்கும்,
பெருமாளே --- பெருமை மிகுந்தவரே!
அபகார நிந்தை பட்டு உழலாதே --- தீமைகள்
செய்ததனால் நிந்தனைகட்கு ஆளாகி அலையாமலும்,
அறியாத வஞ்சரை குறியாதே --- நன்மையை அறியாத
வஞ்சகர்களுடன் சேர்வதைக் கருதாமலும்,
உபதேச மந்திரப் பொருளாலே --- நீர்
அடியேனுக்கு உபதேசித்த மந்திரப் பொருளைத் துணையாக் கொண்டு,
உனை நான் நினைந்து --- தேவரீரை தியானித்து,
அருள் பெறுவேனோ --- அடியேன் திருவருளைப்
பெறமாட்டேனோ?
பொழிப்புரை
யானை முகமுடைய கணேச மூர்த்தியின் இளைய
சகோதரரே!
இமவானாகிய மலையரையன் மகளாகிய உத்தமியின்
திருக்குமாரரே!
ஜெபமாலையை அடியேனுக்கு அருளிய சற்குரு
நாதரே!
திருவாவினன்குடியில் வாழ்கின்ற
பெருமிதம் உடையவரே!
தீமைகள் செய்து அதனால் பழிக்கு ஆளாகி
அலையாமலும், மூடர்களாகிய
வஞ்சகர்களுடன் இணங்காமலும் நீர் அடியேனுக்கு உபதேசித்த உபதேச மந்திரத்தையே
தியானித்து உம்மையே நினைந்து திருவருளை அடியேன் பெறக்கடவேனோ?
விரிவுரை
அபகார
நிந்தை பட்டு உழலாதே ---
பாவங்களைச்
செய்வோர் இம்மையில் பழியும் பாவமும் எய்துவார்கள். அங்ஙனம் பாவங்களைப் புரிந்தோர்
நரகிடைச் சென்றும், குறுக்கே வளர்கின்ற
பிறவிகளில் பிறந்தும் உழன்று துன்புறுவார்கள். இவ்வாறு எண்ணில்லாத காலமாக
ஆன்மாக்கள் உழலுகின்றன.
அறியாத
வஞ்சரைக் குறியாதே ---
நன்மை
தீமையறியாத வஞ்சகர்களுடன் இணங்கக் கூடாது. தீ நட்பு நம்மை அழித்துவிடும்.
கனவிலும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு --- திருக்குறள்
தீயாருடைய
நட்பு நனவிலே மட்டுமின்றி கனவிலும் கேடு பயக்கும்.
உபதேசம் ---
உப
- சமீபம்; தேசம் - இடம்.
இறைவனுடைய அருகில் நம்மை அழைத்துச் செல்லும் கிரியை உபதேசம் ஆகும்.
மந்திரம் ---
மந்-நினைப்பவரை; த்ரா-காப்பற்றுவது, நினைப்பவரைக் காப்பாற்றுவது மந்த்ரம்.
இது குருநாதன் மூலம்
செவியில்
கேட்டு சிந்தனையில் வைத்து, உதடும் நாவும்
அசையாமல் ஜெபிப்பது.
உனை
நான் நினைந்து அருள் பெறுவேனோ ---
இறைவனை
மந்திரப் பொருளால் தியானித்துத் திருவருள் பெறுதல் வேண்டும்.
சிவம்
ஒருவரே தியானப்பொருள், மற்ற
மும்மூர்த்திகளும் தியானப் பொருள் ஆகமாட்டார்கள்.
இபமாமுகன்
தனக்கு இளையோனே ---
யானை
முகம் பிரணவ வடிவைத் தெரிவிக்கின்றது. விநாயகர் பிரணவ சொரூபம்.
இமவான்
மடந்தை உத்தமி பாலா ---
சிவநிந்தை
செய்த தக்கனுடைய மகள் என்ற பெயர் இனி தாங்க மாட்டேன் என்று எம்பிராட்டி அவன்
வளர்த்த உடம்பையும் பெயரையும் விடுத்து, பர்வத
ராஜனுடைய குமாரியாக வந்ததனால் உத்தமியென்று பேர் பெற்றார்.
‘மத்தள வயிறனை உத்தமி புதல்வனை’ --- (கைத்தல) திருப்புகழ்
ஜெபமாலை
தந்த சற்குருநாதா ---
அருணகிரிநாதருக்குத்
திருவாவினன்குடியில் முருகப் பெருமான் ஜபமாலை தந்தருளினார். ஜபமாலை 108 மணிகள் கொண்டது. ஜபம்
புரிகின்றவர்களில், இம்மைப் பயன்
கருதுவோர் கீழ் நோக்கியும், முத்தி நலம்
கருதுவோர் மேல் நோக்கியும் நாயகமணி தாண்டாது ஜபிக்கவேண்டும். ஜபமாலை பிறர்
கண்ணுக்குத் தோன்றா வண்ணம் பட்டுத் துணியில் மறைத்து, ஓசை உண்டாகாமல், மெல்ல பயபக்தியுடன் ஜபமாலையைப்
பிடித்துக் கொண்டு ஜபிக்கவேண்டும்.
திருவாவினன்குடி ---
பழநியின்
அடிவாரத்தில் உள்ள திருத்தலம்.
கருத்துரை
திருவாவினன்குடி பெருமானே! மந்திரப்
பொருளால் உன்னை நினைந்து உய்ய அருள் புரிவாய்.
No comments:
Post a Comment