பழநி - 0106. அதல விதல முதல்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அதல விதல (பழநி)

உன் பற்று ஒழிய வேறு பற்று இல்லை

தனன தனதனன தந்தத்த தந்ததன
     தனன தனதனன தந்தத்த தந்ததன
     தனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததான


அதல விதலமுத லந்தத்த லங்களென
     அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
     அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு

அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
     அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
     அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம்

உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
     ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
     லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன்

உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
     மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
     உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ......நம்புவேனோ

ததத ததததத தந்தத்த தந்ததத
     திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
          தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி

சகக சககெணக தந்தத்த குங்கெணக
     டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
          தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம்

பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
     அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
          பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ......துங்ககாளி

பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
     கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
          பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ..... தம்பிரானே.


பதம் பிரித்தல்


அதல விதல முதல் அந்தத் தலங்கள் என,
     அவனி என, அமரர் அண்டத்த கண்டம் என,
     அகில சலதி என, எண்த்க்குள் விண்டு என, ...... அங்கிபாநு

அமுத கதிர்கள் என, அந்தித்த மந்த்ரம் என,
     அறையும் மறை என, அரும் தத்துவங்கள் என,
     அணுவில் அணு என, நிறைந்திட்டு நின்றது ஒரு ...... சம்ப்ரதாயம்

உதயம் எழ, இருள் விடிந்த அக்கணம் தனில்,
     இருதய கமலம் முகிழ் அம் கட்டு அவிழ்ந்து, ணர்வில்
     உணரும் அநுபவ மனம் பெற்றிடும் படியை ......வந்து, நீமுன்

உதவ, இயலின் இயல் செஞ்சொல் ப்ரபந்தம் என
     மதுர கவிகளில் மனம் பற்றி இருந்து, புகழ்
     உரிய அடிமை உனை அன்றிப் ப்ரபஞ்சம் அதை ...... நம்புவேனோ?

ததத ததததத தந்தத்த தந்ததத
     திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
          தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி

சகக சககெணக தந்தத்த குங்கெணக
     டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
          தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம்

பதலை, திமிலை, துடி, தம்பட்டமும் பெருக,
     அகில நிசிசரர் நடுங்க, கொடும் கழுகு
          பரிய குடர் பழு எலும்பைப் பிடுங்க,ரண ......துங்ககாளி

பவுரி இட, நரி புலம்பப் பருந்து இறகு
     கவரி அட, இகலை வென்று, சிகண்டிதனில்
          பழநி மலையின்மிசை வந்துஉற்ற இந்திரர்கள் ..... தம்பிரானே.


பதவுரை

         ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுகு கதுகதுகு தந்தத்த தந்தகுகு திந்தி தோதி சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம் ---ததத...தந்தகக என்கின்ற ஒலியுடன் தாளங்களும்,

     பதலை --- ஒருகண் பெரிய வாய்ப்பறையும்,

     திமிலை --- திமிலை என்ற பறையும்,

     துடி --- உடுக்கையும்,

     தம்பட்டமும் --- தம்பட்டம் என்ற வாத்தியமும்,

     பெருக --- நன்கு ஒலிக்கவும்,

     அகில நிசிசரர் நடுங்க --- எல்லா அசுரர்களும் நடுக்கங் கொள்ளவும்,

     கொடும் கழுகு --- கொடிய கழுகுகள்,

     பரிய குடர் --- பெரிய குடல்களையும்,

     பழு எலும்பை பிடுங்க --- விலா எலும்புகளைப் பிடுங்கவும்,

     ரண துங்க காளி பவுரி இட --- போரில் வெற்றியுடைய காளி நடனம் புரியவும்,

     நரி புலம்ப --- நரிகள் ஊளையிடவும்,

     பருந்து இறகு கவரி இட --- பருந்துகள் தம் சிறகுகளினால் சாமரம் வீசவும்,

     இகலை வென்று --- போரை வென்று,

     சிகண்டி தனில் --- மயிலின் மீது ஆரோகணித்து,

     பழநி மலையின் மிசை வந்து உற்ற --- பழநி மலையின் மீது வந்து எழுந்தருளியுள்ள,

     இந்திரர்கள் தம்பிரானே ---- இந்திரர்கள் போற்றுந் தனிப்பெருந் தலைவரே!

         அதல விதல முதல் --- அதலம் விதலம் என்று சொல்லப்படுகின்ற உலகங்கள் முதலான,

     அந்த தலங்கள் என --- அந்தக் கீழேயுள்ள உலகங்கள் எனவும்,

     அவனி என --- இந்தப் பூமண்டலம் எனவும்,

     அமரர் அண்டத்து அகண்டம் என --- தேவர்களுடைய அண்டங்களான மேல் உலகங்கள் எனவும்,

     அகில சலதி என --- எல்லாக் கடல்கள் எனவும்,

     எண் திக்குகள் விண்டு என --- எண் திசைகளில் உள்ள மலைகள் எனவும்,

     அங்கி பாநு --- அக்கினி சூரியன்,

     அமுத கதிர்கள் என --- குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரன் என்ற மூன்று சுடர்கள் எனவும்,

     அந்தித்த மந்த்ரம் என --- முடிவில் ஒன்றுபடுகின்ற மந்திரங்கள் எனவும்,

     அறையும் மறை என --- சிறப்பாக ஓதுகின்ற வேதம் எனவும்,

     அரும் தத்துவங்கள் என --- அரிய உண்மைப் பொருள்கள் எனவும்,

     அணுவில் அணு என --- அணுவுக்குள் அணு எனவும்,

     நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம் --- இவ்வகையாய் எல்லாமாய் எங்கும் நிறைந்துள்ளதாகிய ஒப்பற்ற பேருண்மை,

     உதயம் எழ --- அடியேனுடைய உள்ளத்தில் தோன்றி விளங்கவும்,

     இருள் விடிந்த அ கணம் தனில் --- அறியாமையாகிய இருள் ஒழிந்து அந்தக் கணத்திலேயே,

     இருதய கமல முகிழ் அம் கட்டு அவிழ்ந்து --- இதய தாமரையாகிய மொட்டு அங்கே கட்டு நீங்கி மலர்ந்து,

     உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும் படியை --- உணர்விலே உணருகின்ற அநுபவ ஞானத்தை என் மனம் பெற்று உய்யும் வகையை,

     உதவ --- உதவியருள,

     இயலின் இயல் செம்சொல் ப்ரபந்தம் என --- உழுவல் அன்பால் அருமையும் இனிய சொற்களால் ஆய நூலாகிய,

     மதுர கவிகளில் --- தித்திக்கின்ற கவிகளில்,

     மனம் பற்று இருந்து --- அடியேனுடைய உள்ளம் அன்பு வைத்து,

     புகழ் உரிய அடிமை --- தேவரீரைத் திருப்புகழால் பாடும் உரிமையுடைய அடியேனாகிய தமியேன்,

     உனை அன்றி ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ --- தேவரீரை யன்றி இந்த உலக வாழ்வினை விரும்புவேனோ? (விரும்பேன்).


பொழிப்புரை


         ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி தகக தகதகக தந்தத்த தந்தகக என்ற தத்தகாரங்களுடன் தாளங்கள் ஒலிக்கவும், பதலை, திமிலை, உடுக்கை, தம்பட்டம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்கவும், அசுரர்கள் அனைவரும் நடுங்கவும், கொடிய கழுகுகள் பருத்த குடல்களையும் விலா எலும்புகளையும் பிடுங்கவும், போர்க்களத்தில் சிறந்த காளியானவள் நடனம் புரியவும், நரிகள் ஊளையிடவும், பருந்துகள் இறகுகளினால் சாமரம் போடவும், பகையை வென்று மயிலின் மீது ஆரோகணித்த பழநிமலை மீது வந்து அமர்ந்த, இந்திரர் போற்றும் தனிப்பெருந் தலைவரே!

         அதலம் விதலம் முதலிய கீழ் உலகங்கள் எனவும், இம்மண்ணுலகம் எனவும், தேவர்களுடைய அண்டங்களான மேல் உலகங்கள் எனவும், சகல கடல்கள் எனவும், எண் திசைகளிலுள்ள மலைகள் எனவும், அக்கினி சூரியன், சந்திரன் என்ற முச்சுடர்கள் எனவும், முடிவில் ஒன்றுபடுகின்ற மந்திரங்கள் எனவும், ஓதுகின்ற வேதங்கள் எனவும், அருமையான உண்மைப் பொருள்கள் எனவும்,  அணுவுக்கு அணு எனவும். எங்கும் நிறைந்த பொருளாய் நின்ற ஒரு பேருண்மை அடியேனுடைய உள்ளத்தில் தோன்றி விளங்கவும், அறியாமை இருள் ஒழியவும், அக்கணமே இதய தாமரை மொட்டு அவிழ்ந்து மலரவும், உணர்விலே உணர்கின்ற அநுபவ ஞானத்தை என் மனம் பெறுமாறு, என்முன் தோன்றி, தேவரீர் உபதேசித்து உதவி அருள்புரிய, இடையறாத அன்பினால் இனிய சொற்களுடன் கூடிய மதுரகவியாகிய திருப்புகழ் என்ற நூலைப் பாடிப் புகழ்கின்ற உரிமையுடைய அடியேன் தேவரீரையன்றி உலகில் உள்ள வேறு ஒன்றை விரும்புவேனோ? (விரும்பமாட்டேன்).
  
விரிவுரை

அதல விதல முதலந்தத் தலங்கள் என ---

அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இராசதலம், பாதலம், என்ற இவை கீழே உள்ள ஏழு உலகங்கள்.

அமரர் அண்டத்து அகண்டம் என ---

பூலோகம், புவலோகம், சுவலோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம், என்ற இவை மேலே உள்ள உலகங்கள்.

அகில சலதி என ---

உவர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், தேன்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், நன்னீர்க்கடல் எனக் கடல்கள் ஏழு என்பர்.

எண்டிக்குள் விண்டு என ---

எட்டுத் திசைகளிலுள்ள குலமலைகள்; கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதனம்.


அங்கி பாநு அமுத கதிர்கள் என ---

உலகிற்கு ஒளிதரும் சுடர்கள் மூன்று. சூரியன், சந்திரன், அக்கினி.

அந்தித்த மந்த்ரம் என ---

அந்தி-முடிவு. மந்திரங்கள் யாவும் முடிவில் ஒன்றுபடும்; மந்திரங்கள் ஏழுகோடி, நம, ஸ்வதா, ஸ்வாகா, பட், ஹும்பட், வஷட், வௌஷட் என்று ஏழு நுனிகளையுடையன.

அறையும் மறை என ---

விதிப்படி ஓதுகின்ற வேதங்கள். அநேக நுண் பொருள்கள் அவற்றில் மறைந்திருப்பதனால் மறையெனப்பட்டது.

அரும் தத்துவங்கள் என ---

தத்துவங்கள் 36. சிவதத்துவம் 5, வித்யா தத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24, ஆக, 36, இனி புறநிலைக்கருவிகள் 60. மண்ணின்கூறு 5, நீரின் கூறு 5, நெருப்பின் கூறு 5, காற்றின் கூறு 5, வெளியின் கூறு 5, வாயு 10, நாடி 10, வசனாதி 5, வாக்கு 4, குணம் 3, ஏடணை 3, ஆக 60.

அணுவில் அணு என ---

அணுவுக்குள் பரமாணுக்கள் பல இருந்து இடையறாது அசைந்து கொண்டிருக்கின்றன.

நிறைந்திட்டு நின்றதொரு சம்ப்ரதாயம் ---

இவ்வளவிலும் ஊடுருவிக் கலந்திருக்கின்ற பொருள் ஒன்றுதான். அதன் உண்மையை அருணகிரிநாதருக்கு முருகவேள் குருநாதனாகி வந்து உணர்த்தி யருளினார்.

உதய மொழி ---

உண்மைப்பொருள் இன்னதென்று அருணகிரிநாதர் உள்ளத்தில் தோன்றி விளங்க இறைவன்  உபதேசித்தருளினார்.


இருள் விடிந்த கணந்தனில் ---

உண்மைப் பொருள் இது என்ற ஞானவொளி தோன்றிய அக்கணத்திலேயே அஞ்ஞான இருள் நீங்கியொழியும்.

இருதய கமலமுகிழங் கட்டவிழ்ந்து ---

இதய கமலமானது ஞானவொளிப்பட்டு குவிந்திருந்த இதழ்கள் ஒவ்வொன்றாக விரிந்து மலர்ந்தது.

உணர்வில் உணரும் அநுபவ மனம்.........முன் உதவ ---

ஞான போதகம் இத்தன்மைத்தென்று வாய் விட்டுக்கூற இயலாதது. பக்குவ ஆன்மாக்கட்கு ஆசாரியன் உணர்த்த உணர்வது.

செவ்வான் உருவில் திகழ்வே லவன்அன்று
ஒவ்வாதது என உணர்வித்த அதுதான்,
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்,
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப் பதுவே  ---  கந்தர் அநுபூதி.

அளவற்ற தவம் புரிந்தவராதலின் அருணகிரிப் பெருமான், சிவகுருவாம் செவ்வேட்பரமனே குருமூர்த்தியாக வெளிப்பட்டு உபதேசமுகத்தால் அநுபவ ஞானத்தை உணர்த்தியருள உணர்ந்தனர். தனக்குக் கிடைத்த அநுபவத்தை இத் திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.

இயலினிய செஞ்சொற் ப்ரபந்தம் என மதுரகவிகளில் மனம் பற்றிருந்து புகழ் உரிய அடிமை :-

அருணகிரிநாதர் எப்போதும் முருகனுடைய புகழைப் பாடுவதிலேயே மனம் வைத்திருந்தனர். அது இனிய கனியமுதம் போன்ற சொற்களால் ஆனது; மிக்க அன்பினால் ஆனது.

உனை அன்றி ப்ரபஞ்சமதை நம்புவேனோ:-

நம்புதல்-விரும்புதல். இறைவனையன்றி உலக வாழ்வை விரும்பேன் என்று சுவாமிகள் தனது தூய மனநிலையைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

இத்திருப்புகழில் பிற்பகுதி யுத்தகள வர்ணனை.


கருத்துரை


பழநியப்பா! உன்னையன்றி உலகை விரும்பிடேன்.




                 

No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...