பழநி - 0105. அகல்வினையுள் சார்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அகல்வினை (பழநி)

திருவடியைப் பற்ற அருள் வேண்டல்


தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன
     தனதன தத்தா தத்தன ...... தனதான


அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு
     மறிவிலி வித்தா ரத்தன ......         மவிகார

அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள
     வருள்பவர் நட்பே கொட்புறு ......     மொருபோதன்

பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய
     பரமம யச்சோ திச்சிவ ......      மயமாநின்

பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு
     ரவுபயில் நற்றாள் பற்றுவ ...... தொருநாளே

புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ்
     பொடிகொடு புற்பாய் சுற்றிகள் ......   கழுவேறப்

பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை
     புலவரில் நக்கீ ரர்க்குத ......      வியவேளே

இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்
     எழுபுவி துய்த்தார் மைத்துனர் ......   மதலாய்வென்

றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை
     யெழுதிவ னத்தே யெற்றிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அகல்வினை உள்சார் சட்சமயிகளொடு வெட்காது அட்கிடும்
     அறிவிலி, வித்தாரத் தனம், ...... அவிகார

அகில் கமழ் கத்தூரி, தனி அணைமிசை கைக் காசுக்கு அளவு
     அருள்பவர் நட்பே கொட்பு உறும் ...... ஒரு போதன்

பகல் இரவில் போதில் பணி பணிஅற விட்டார் எட்டிய
     பரம மயச் சோதிச் சிவ ......          மயமாம், நின்

பழநி தனில் போய் உற்பவ வினைவிள, கள்சேர் வெட்சி,
     குரவு பயில் நல்தாள் பற்றுவது ...... ஒருநாளே?

புகலி வனப்பு ஏற, புகல் மதுரை மன் வெப்பு ஆற, திகழ்
     பொடி கொடு புல்பாய் சுற்றிகள் ......   கழு ஏறப்

பொருத சமர்த்தா! குத்திர துரக முகக் கோதைக்கு இடை,
     புலவரில் நக்கீரர்க்கு உத ......        வியவேளே!

இகல்படு நெட்டு ஊர் பொட்டு ஏழ, இளநகை இட்டே சுட்டுஅருள்
     எழுபுவி துய்த்தார் மைத்துனர் ......   மதலாய்! வென்று

இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை
     எழுதி வனத்தே எற்றிய ......     பெருமாளே.

 
பதவுரை


      புகலி வனப்பு ஏற --- சீகாழி என்ற திருத்தலம் அழகு பெறவும்,

     புகல் மதுரை மன் வெப்பு ஆற --- சரணம் அடைந்த மதுரைக்கு அரசனாகிய கூன் பாண்டியனுடைய வெப்பு நோய் தணியவும்,

     புல் பாய் சுற்றிகள் கழு ஏற --- புல்லினாலாகிய பாயை உடுத்த சமணர்கள் கழுவில் ஏறவும்,

     திகழ் பொடி கொடு பொருத --- சிறந்த திருநீற்றைக் கொண்டு போர் செய்த,

     சமர்த்தா --- ஆற்றல் படைத்தவரே!

      குத்திர --- வஞ்சனையுடைய,

     துரக முக கோதைக்கு இடை --- குதிரை முகமுடைய பெண் பூதத்தின் வசத்தே சிக்கிய,

     புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே --- புலவர்களில் ஒருவராகிய நக்கீரனார்க்கு அருள் புரிந்த உபகாரியே!

      இகல்படு நெட்டு ஊர் பொட்டு எழ --- மாறுபட்ட பெரிய ஊர்களாகிய திரிபுரங்கள் பொடியாகுமாறு,

     இள நகை இட்டே சுட்டு அருள் --- புன்னகை புரிந்து எரித்தருளியவரும்,

     எழு புவி துய்த்தார் மைத்துனர் --- ஏழு உலகங்களையும் உண்ட திருமாலின் மைத்துனரும் ஆகிய சிவபெருமானுடைய,

     மதலாய் --- திருக்குமாரரே!

      வென்று --- பகைவரை வென்று,

     இடர் அற --- இடர்கள் நீங்குமாறு,

     முப்பால் செப்பிய கவிதையின் மிக்க --- அறம் பொருள் இன்பம் என்ற மூன்று பாலைக் கூறும் திருக்குறளினும் மிகுந்த பெருமையுடைய,

     ஆரத்தினை எழுதி --- தேவாரமாகிய திருப்பாசுரத்தை எழுதி,

     வனத்தே எற்றிய --- தண்ணீரில் எதிரேற விட்ட,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      அகல் வினை உள் சார் --- பரந்த வினை வசத்துக்கு உட்பட்ட,

     சட் சமயிகளொடு --- ஆறு சமயத்தவரோடும்,

     வெட்காது அட்கிடும் --- கூச்சமின்றி தடுத்து வாதம் புரியும்,

     அறிவு இலி --- அறிவில்லாதவனும்,

     வித்தார தனம் --- பருத்துப் பரந்துள்ள தனங்களை,

     அவிகாரம் --- விகாரமற்ற,

     அகில் --- அகிலும்,

     கமழ் கத்தூரி --- மணமுள்ள கத்தூரியும் உள்ள,

     தனி அணை மிசை --- தனிமையான படுக்கையில்,

     கை காசுக்கு அளவு அருள்பவர் --- தாம் கையில் பெற்ற பொருள் அளவுக்குத் தக்கபடி அன்பு காட்டும் வேசையருடைய,

     நட்பே கொட்பு உறும் --- நட்பினாலே சுழற்சி அடைகின்ற,

     ஒரு போதன் --- தனிப்பட்ட அறிவுடையவனாகிய அடியேன்,

     பகல் இரவில் போதில் --- பகல் இரவு என்ற எப்பொழுதிலும்,

     பணி பணி --- வேலை செய்தும்,

     அற விட்டார் --- எல்லாவற்றையும் துறந்தவர்கள்,

     எட்டிய --- உணர்வினால் எட்டி அறிந்த,

     பரம மய சோதி --- பெரிய மயமான ஒளிப் பொருளாகவும்,

     சிவ மயமாம் நின் --- அன்பு மயமாகவும் உள்ள தேவரீரது,

     பழநி தனில் போய் --- பழநியம்பதிக்குச் சென்று,

     உற்பவ வினை விள --- பிறவிக்கு மூலமாகிய வினை நீங்கும்படி,

     கள் சேர் வெட்சி --- தேன் துளிக்கின்ற வெட்சி மலரும்,

     குரவு பயில் --- குராமலரும் சேர்ந்துள்ள,

     நல் தாள் பற்றுவது ஒருநாளே --- நல்ல திருவடியைப் பற்றும்படியான நாள் ஒன்று எனக்குக் கிடைக்குமோ?

பொழிப்புரை 

         சீகாழி நகர் பெருமை பெறவும், சரண் அடைந்த கூன்பாண்டியனுடைய வெப்பு நோய் நீங்கவும், புல்லினாலாய பாயை உடுத்த சமணர்கள் கழுவில் ஏறவும், சிறந்த திருநீற்றினைக் கொண்டு வாதிட்ட சமர்த்தரே!

         வஞ்சனையுடைய கற்கிமுகி என்ற பெண் பூதத்தினால் துன்புற்ற புலவர்களில் நக்கீரருக்கு உதவி செய்த உபகாரியே!

         பகைமை கொண்ட நெடிய திரிபுரங்கள் தூளாகுமாறு இளநகை புரிந்து எரித்தவரும், ஏழுலகங்களை உண்ட திருமாலின் மைத்துனரும் ஆகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

         மக்களின் துன்பமகல வெற்றி பெற்று, அறம் பொருள் இன்பம் என்ற மூன்று பால் அடங்கிய திருக்குறளிலும் மிகுந்த பெருமையுடைய தேவாரப் பாடலை எழுதி நதியில் எதிரேறுமாறு விட்ட பெருமிதம் உடையவரே!

         பரந்த வினைகளுக்கு உட்பட்ட ஆறு சமயங்களுடன் அஞ்சாது தடுத்து வாதஞ் செய்யும் புத்தியில்லாதவனும், பருத்த தனத்தினைத் தந்து, அழகிய அகில் கஸ்தூரி முதலிய மணம் நிறைந்த படுக்கையில், தாம் பெற்ற பொருளுக்குத் தக்கபடி அன்பு செய்யும் பொது மாதருடைய நட்பினால் சுழலுகின்ற ஒரு மதி படைத்த அடியேன், பகலிலும் இரவிலும் உமது திருப்பணியைச் செய்து, எல்லாப் பற்றுக்களையும் விடுத்தவர்களது மெய்யுணர்வினால் கண்ட, பரம சொரூபமாய்-சோதி சொரூபமாய்-சிவ சொரூபமாய் விளங்கும் தேவரீருடைய பழநியம்பதிக்குச் சென்று, பிறவி என்ற வினை அகலுமாறு, தேன் துளிக்கும் வெட்சி, குரா என்னும் மலர்கள் நிரம்பியுள்ள உமது நல்ல பாத மலரைப் பற்றுகின்ற நாள் ஒன்று சிறியேனுக்குக் கிடைக்குமோ?


விரிவுரை


அகல்வினை உட்சார் சட்சமயிகள்:-

வினை - ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம், என்ற மூன்று வகைப்படும். நல்வினை, தீவினை என்று இரு வகைப்பட்டும், பரந்திருப்பதனால் “அகல் வினை” என்றார். அந்த வினைக்கு உட்பட்டவர்கள் ஆதலின் “உட்சார்” என்றனர்.

சட்சமயிகள்: அறுவகைச் சமயத்தார்கள்

அகச்சமயம் 6: வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் என்பன.

புறச்சமயம் 6: உலகாயதம், புத்தம், சமணம், மீமாஞ்சம், பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம்.

இத்தகைய சமயத்தாரோடு நாணம் இன்றி சதா தர்க்கமிட்டு அல்லல்படுவர் பலர்.


பகலிரவிற் போதிற் பணி பணி:-

பணி பணி - தொண்டு பண்ணி என்று பொருள் கொள்க.     “பணி பண்ணி’ என்பது ‘பணி பணி’ என்று வந்தது. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற அப்பர் சுவாமிகள் திருவாக்கினைப் போல், சதா இறைபணி, ஆலயப்பணி, அடியார்பணி, மக்கள்பணி, உயிர்ப்பணி, இவற்றைச் செய்தல் வேண்டும்.

அற விட்டார் எட்டிய:-

அறவே அனைத்தையும் விட்டவர்கள். சர்வ சங்க பரித்தியாகம் என்பர் வடநூலார்.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.                 --- திருக்குறள்

இங்ஙனம் எல்லாம் துறந்த மெய்ஞ்ஞானிகள் உணர்வினால் எட்டிய பரம்பொருள் இறைவன்.

பரமமயச் சோதிச் சிவமயமா நின் பழநி:-

பழநி மலையைப் பற்றிச் சுவாமிகள் இந்தத் திருப்புகழில் எத்துணைச் சிறப்பாகக் கூறுகின்றார் என்பதை நினைக்க உள்ளம் உவகை கூறுகின்றது. பழநி பரமமயமானது, சோதி மயமானது, சிவமயமானது.

உற்பவ வினை விள:-

விள்ள என்பது விள என்று வந்தது. விள்ளுதல்-நீங்குதல். பழநித் திருத் தலத்திற் சென்று பக்தியுடன் பணிந்தோர்க்குப் பிறவிக்குக் காரணமான வினைகள் விலகும்.

நற்றாள்:-

இறைவனுடைய திருவடியை நற்றாள் என்றனர்.

வாலறிவன் நற்றாள் தொழா அர்எனின்” என்ற திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், "பிறவிப் பிணிக்கு மருந்தாகலின் நற்றாள் என்றனர்" எனக் கூறுகின்றார். ஆகவே இறைவனுடைய திருவடி பிறவி நோய்க்கு நல்ல மருந்தென உணர்க.

பற்றுவது ஒருநாளே:-

நம் மனத்தில் எத்தனை எத்தனையோ பற்றுக்கள் உளது. அவற்றை அகற்ற வேண்டுமாயின் பற்றற்ற பரமனுடைய நற்றாளைப் பற்றினால் ஏனைய பற்றுக்கள் தாமே விலகியொழியும். எனவே இறைவனை, உனது நற்றாள் பற்றுவது ஒருநாளே என்கிறார் அருணகிரிநாதர்.

புகலி வனப்பு ஏற:-

எல்லா உயிர்களுக்கும் புகலிடம் ஆதலின் சீகாழி புகலி எனப் பெற்றது. அங்கு திருஞானசம்பந்தப் பெருமான் திருவவதாரம் செய்தபடியால் அந்தத் தலம் மேலும் பெருமை பெற்றது.

தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமைபெற
நாள் உடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்,
வாள் உடைய மணிவீதி வளர் காழிப் பதிவாழ,
ஆள் உடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக,

அவம் பெருக்கும் புல்லறிவின் அமண் முதலாம் பரசமயப்
பவம் பெருக்கும் புரைநெறிகள் பாழ்பட நல் லூழிதொறும்
தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்களெல்லாம்
சிவம் பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தார்...      --- பெரியபுராணம்.

புகல் மதுரை மன் வெப்பாற:

புகல்-சரண்; சரண் என்ற மதுரை வேந்தனாம் பாண்டியனைப் பற்றி எரிந்த வெப்பு நோய் நீங்கவும்.

திகழ்பொடி கொடு பொருத:-

எண்ணாயிரம் சமணர்களுடன் ஒரு சிட்டிகைத் திருநீற்றைக் கொண்டு போர் புரிந்தார் திருஞான சம்பந்தர்.

பவமாய்த்து ஆண்அது ஆகும் பனை காய்த்தே, மண நாறும்
    பழமாய்ப் பார்மிசை வீழும்           படி,வேதம்
படியாப் பாவிகள், பாய்அன்றி உடாப் பேதைகள், கேசம்
    பறியாப் பாவிகள் யாரும்             கழுஏறச்
சிவமாய்த் தேன்அமுதுஊறும் திருவாக்கால் ஒளிசேர் வெண்
    திருநீற்றால் அமராடும்            சிறியோனே”    ---  (தவர்வாட்டோமா) திருப்புகழ்


குத்திர துரகமுகக் கோதைக்கிடை புலவரில்
நக்கீரர்க் குதவிய வேளே:

குத்திரம்-வஞ்சம்.

குத்திரங் கோள் கரவு கல்லாமல்”    --- பட்டினத்தார்

இந்த அடி நக்கீரருடைய வரலாற்றைத் தெரிவிக்கின்றது. கீரம்-சொல், நக்கீரர்-நல்ல இனிய சொற்களை யுடையவர். இவர் கடைச் சங்கத்து நாற்பத்தொன்பது புலவர்களில் தலைமை பெற்றவர். அஞ்சா நெஞ்சும் ஆழ்ந்த அறிவும் உறுதியும் உடைய நல்லிசைப் புலவர்.

         சிவ பூசையில் வழுவியவரை ஒன்று கூட்டி ஆயிரம் என்ற எண்ணிக்கை ஆனவுடன் உண்ணுகின்ற ஒரு பெண்பூதம் இருந்தது. அதன் பேர் கற்கிமுகி. அப்பூதம் ஆங்காங்கு பூசையில் மனந்திரிந்து வழுவியவர்களை எல்லாம் கொண்டு போய் ஒரு பெரிய மலைக்குகையில் அடைத்து வைத்து, அவர்கட்கு உணவு தந்து கொண்டிருந்தது. 999 பேர் சேர்ந்திருந்தனர். இன்னும் ஒருவர் குறைவு. அந்தப் பூதம் மற்றொருவரைத் தேடிக் கொண்டிருந்தது.

         நக்கீரர் ஒரு சமயம் தலயாத்திரை மேற்கொண்டு சென்றார். ஒரு குளக்கரையில் சிவபூசை செய்துகொண்டிருந்தார். அப்பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன; இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது. இப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கை முற்றியது. இனி அவர்களை உண்ணுவதற்குப் பூதம் எண்ணியது. ஆனால் பூதம் குளித்துவிட்டுத் தான் உண்ணும். குளிக்கச் சென்றது பூதம்.

         அங்கு முன்னமேயே அடைபட்டிருந்தோர் அனைவரும் “பாவி! நீ அல்லவா எங்கட்கு எமனாக வந்தனை; நீ வராமல் இருந்தால் பூதம் எம்மை இப்போது உண்ணமாட்டாதே; பால் பழம் முதலிய உணவுகளைத் தந்து எம்மைக் கொழுக்க வைத்தது பூதம். இனி அப்பூதம் வந்து எம்மை விழுங்குமே? என் செய்வோம்” என்று கூறி வருந்தி வாய்விட்டுப் புலம்பினார்கள். நக்கீரர் அவர்களுடைய அவல நிலையைக் கண்டு இரங்கினார். “நீவிர் அஞ்சற்க. முன் இலக்கத்தொன்பது பேர் அடைபட்ட கிரவுஞ்சம் என்ற பெருமலையை வேலால் பிளந்த எம்பெருமான் இருக்கிறான். அப் பரமனைப் பாடினால் அவன் வேல் நமக்குத் துணை புரியும்” என்று கூறி, முருகவேளை நினைத்து உருகினார். “மலையைப் பிளந்த கருணை மலையே! மன்னுயிர்களைக் காக்கும் மயிலேறிய மாணிக்கமே! இப்போது எம்மைக் காத்தருள்வாய்” என்று வேண்டினார் .

         'உலகம் உவப்ப' என்று தொடங்கித் திருமுருகாற்றுப்படை என்ற இனிய பாடலைப் பாடினார். தேனும் பாலும் கற்கண்டும் ஒவ்வாத இனிய சுவையுடைய அத்திருப்பாடலைச் செவிமடுத்த செந்தமிழ்க் கடவுளாகிய எந்தைக் கந்தவேள், தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை விடுத்தருளினார். அவ்வேல் மலையையும், கற்கிமுகி என்ற பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும், அவருடன் சேர்ந்த மற்றையோரையுங் காத்தருளியது.

அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி
 அபயமிட அஞ்சலென் றங்கீரனுக் குதவி”        --- பூதவேதாள வகுப்பு

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
    கவிப்புலவன் இசைக்குஉருகி வரைக்குகையை
          இடித்துவழி காணும்                           ---  வேல்வகுப்பு.

ஓராயிரம் பேரை வருடத்தில் ஒருநாளில்
     உண்கின்ற கற்கி முகிதான்
ஒன்று குறை யாகிவிடும் அன்று நக்கீரர்வர
    ஓடிப் பிடித்து அவரையும்   
காராய குன்றத்து அடைத்துஉரிய நியதிக்
    கடன் துறை முடிக்க அகலக்
கருதி முருகாறு அவர் உரைத்தருள நீலக்
    கலாப மயில் ஏறி அணுகிப்
பேரான குன்றந் திறந்துஇவுளி முகியைப்
    பிளந்து, நக்கீரர் தமையும்
பெரியவேல் கொண்டு, புனல் கண்டுசுனை மூழ்கி,
    பிரான் முகலி நதியின் மேவச்
சீராய திருவருள் புரிந்தகரன் ஊராளி
    சிறுதேர் உருட்டி அருளே
செய செயென அமரர்தொழ, அசுரர்மிடி சிதறுமுனி
    சிறுதேர் உருட்டி அருளே.              --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்.


முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை:-

முப்பால்-திருக்குறள். அத் திருக்குறள் உலகம் போற்றும் பொது மறை. அது அமுத மயமானது. அதனினும் மேம்பட்டது ஞானசம்பந்தருடைய திருவாக்கு என்று கூறுகின்றார். ஆரம்-தேவாரம்.
  
எழுதி வனத்தே யெற்றிய:-

சமணர்களுடன் ஞானசம்பந்தப் பெருமான் புனல் வாதம் புரிந்தபோது “வாழ்க அந்தணர்” என்ற திருப்பாசுரத்தைப் பாடி எழுதி, அத் திரு ஏட்டினை வைகை நதியில் இட்டருளினார். அது எதிர் ஏறிச் சென்றது. வனம்-நீர்.


கருத்துரை

சிவகுமாரா! உன் திருவடியைப் பற்ற அருள் செய்வீர்.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...