அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வெம் சரோருகமோ
(திருச்செந்தூர்)
மாதர் மயக்கில் இருந்து
மீள, திருவடித் தாமரையை
வேண்டல்
தந்த
தானன தானன தந்த தானன தானன
தந்த தானன தானன ...... தனதான
வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு
வின்ப சாகர மோவடு ...... வகிரோமுன்
வெந்து போனபு ராதன சம்ப ராரிபு ராரியை
வென்ற சாயக மோகரு ...... விளையோகண்
தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத
சங்க மாதர்ப யோதர ...... மதில்மூழ்கு
சங்கை யோவிரு கூதள கந்த மாலிகை தோய்தரு
தண்டை சேர்கழ லீவது ...... மொருநாளே
பஞ்ச
பாதக தாருக தண்ட னீறெழ வானவர்
பண்டு போலம ராவதி ...... குடியேறப்
பங்க
யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை
பங்க நீறெழ வேல்விடு ...... மிளையோனே
செஞ்ச
டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி
திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே
செண்ப
காடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தரு
செந்தில் மாநகர் மேவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வெம்
சரோருகமோ? கடு நஞ்சமோ? கயலோ? நெடு
இன்ப சாகரமோ? வடு ...... வகிரோ? முன்
வெந்து போன புராதன சம்பராரி புராரியை
வென்ற சாயகமோ? கரு ...... விளையோ? கண்
தஞ்சமோ? யம தூதுவர் நெஞ்சமோ? எனும் மாமத
சங்க மாதர் பயோதரம் ...... அதில்மூழ்கு
சங்கை
ஓவ, இரு கூதள கந்த மாலிகை தோய்தரு
தண்டை சேர்கழல் ஈவதும் ...... ஒருநாளே.
பஞ்ச
பாதக தாருக தண்டன் நீறுஎழ, வானவர்
பண்டு போல் அமராவதி ...... குடியேற,
பங்கய
ஆசனர் கேசவர் அஞ்சலே என, மால்வரை
பங்க, நீறு எழ வேல்விடும் ...... இளையோனே!
செஞ்சடை
அடவி மீமிசை கங்கை மாதவி தாதகி
திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே!
செண்பக
அடவி நீடிய, துங்க மாமதிள்
சுழ்தரு,
செந்தில் மாநகர் மேவிய ...... பெருமாளே.
பதவுரை
பஞ்ச பாதக தாருக தண்டன் --- ஐம்பெரும் பாதகங்களையும்
புரியும் தாரகாசூரனாகிய எமன்,
நீறு எழ --- பொடியாகப் போகவும்,
வானவர் பண்டுபோல் அமராவதி குடி ஏற ---
தேவர்கள் முன்னிருந்தபடியே அமராவதியென்னும் தங்கள் நகரில் குடியேறவும்,
பங்கய ஆசனர் --- தாமரைப் பீடத்தில் வாழும்
பிரமதேவனும்,
கேசவர் --- திருமாலும்,
அஞ்சலே என --- அஞ்சாதீர்கள் என்று
(தேவர்கட்குத் துணிவு) கூறவும்,
மால் வரை பங்க நீறு எழ --- மாயையில் வல்ல
கிரவுஞ்சமலை பங்கப்பட்டு பொடியாகப் போகவும்,
வேல்விடும் இளையோனே --- வேலாயுதத்தை
விடுத்தருளிய இளங் குமாரரே!
செம் சடை அடவி மீமிசை --- சிவந்த
சடையாகிய காட்டின்மீது,
கங்கை --- கங்கா நதியையும்,
மாதவி --- குருக்கத்தியையும்,
தாதகி --- ஆத்தி மலரையும்,
திங்கள் --- சந்திரனையும்,
சூடிய நாயகர் பெருவாழ்வே --- தரித்துள்ள
தலைவராகிய சிவபெருமானுக்குப் பெரிய வாழ்வாகிய குழந்தையே!
செண்பக அடவி நீடிய --- செண்பக வனங்கள்
நிறைந்துள்ள,
துங்க மாமதில் சூழ்தரு --- உயர்ந்த சிறந்த
திருமதில்கள் சூழ்ந்துள்ள,
செந்தில் மாநகர் மேவிய பெருமாளே ---
திருச்செந்தூர் என்னுந் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிகுந்தவரே!
கண் வெம்சரோருகமோ --- பொது மகளிருடைய
கண்கள் விரும்பத்தக்க தாமரை மலரோ?
கடு நஞ்சமோ --- கொடிய விடமோ?
கயலோ --- கயல் மீனோ?
நெடு இன்ப சாகரமோ --- நீண்ட இன்பக் கடலோ?
வடுவகிரோ --- மாம்பிஞ்சின் பிளவோ?
முன் வெந்து போன --- முன் வெந்து
சாம்பரானவனும்,
புராதன --- பழமையானவனும்,
சம்பர அரி --- சம்பரன் என்ற அசுரனை அழித்தவனும்
ஆகிய மன்மதன்,
புராரியை வென்ற சாயகமோ --- புரத்தை எரித்த
சிவமூர்த்தியை வெல்லும் பொருட்டு விடுத்த அம்போ?
கருவிளையோ --- காக்கண மலரோ?
தஞ்சமோ --- யாவரும் அடைக்கலம் புகும் இடமோ?
யம தூதுவர் நெஞ்சமோ --- இயமனுடைய தூதர்களின்
நெஞ்சமோ?
என்னும் மாமத சங்க மாதர் --- எனும்படியான
அழகும் கர்வமும் உடைய கூட்டமாகவுள்ள பொது மகளிரது,
பயோதரம் அதில் மூழ்கு --- தனங்களில்
முழுகுகின்ற,
சங்கை ஓவ --- எண்ணங்கள் ஒழிய,
கூதள கந்த மாளிகை நோய்தரு --- கூதளமென்கின்ற
வாசனைப் பொருந்திய மாலை சூடியுள்ள,
இரு தண்டை சேர்கழல் ஈவதும் --- இரண்டு
தண்டைகள் சேர்ந்துள்ள உமது திருவடிமலரைத் தந்து காப்பதும்,
ஒருநாளே --- ஒருநாள் உளதாகுமோ?
பொழிப்புரை
ஐம்பெரும் பாவங்களைப் புரிகின்றவனும், இயமனைப் போன்றவனுமாகிய தாரகன் என்னும்
கொடிய அசுரன் சாம்பராகி அழியுமாறும், தேவர்கள் முன்போல் தங்களுடைய அமராவதி
நகரில் குடியேறுமாறும், தாமரைப் பீடத்தில்
வாழும் பிரம்மதேவரும், நாராயணனும், அஞ்சுகின்ற அமரரைப் பார்த்து
அஞ்சாதீர்கள் என்று கூறும்படியும்,
மயக்கத்தைச்
செய்கின்ற கிரவுஞ்சமலை கெட்டு சாம்பராகுமாறும் வேலாயுதத்தை விடுத்தருளிய
இளம்பூரணரே!
சிவந்த சடை முடியின் மீது, கங்கா நதியையும் குருக்கத்தி மலரையும்
ஆத்தி மலரையும் பிறைச் சந்திரனையும் முடித்துள்ள தலைவராகிய சிவபெருமான் தந்த
திருப்புதல்வரே!
செண்பக வனங்கள் நிறைந்துள்ளதும், உயர்ந்த சிறந்த திருமதில்கள்
சூழ்ந்துள்ளதுமாகிய திருச்செந்தூர் என்னுந் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள
பெருமிதம் உடையவரே!
பொது மாதருடைய கண்கள் விரும்பத் தகுந்த
தாமரைமலரோ? கொடிய நஞ்சமோ? பெரிய இன்பக் கடலோ? மாம் பிஞ்சின் பிளப்போ? முன்னாளில் வெந்துபோனவனும் பழமை ஆனவனும்
சம்பரன் என்ற அசுரனை அழித்தவனும் ஆகிய மன்மதன் முப்புரம் எரித்த சிவபெருமானை
வெல்லுமாறு ஏவிய அம்போ? கருநிறமுள்ள காக்கண
மலரோ? யாவரும் அடைக்கலம்
புகும் இடமோ? இயம தூதருடைய
நெஞ்சந்தானோ? என்று கூறுகின்ற
அழகும் கர்வமும் உடைய கூட்டமாக இருக்கும் பொது மகளிருடைய தனங்களில் முழுகுகின்ற
எண்ணங்கள் ஓயுமாறு, கூதாள மலரின் வாசனைப்
பொருந்திய மாலையுடன் கூடிய தண்டையணிந்துள்ள உமது இரு திருவடிகளையும் அடியேனுக்குத்
தந்தருளுகின்ற நாள் ஒன்று உளதோ?
விரிவுரை
வெஞ்சரோருகமோ? ---
காமுகர்கள், தாம் காதலித்த ஒருத்தியின் கண்களை இன்ன
இன்ன பொருளோ? என்று உவமை கூறி
இன்புறுவர்.
இங்கே
பொதுப் பெண்களுடைய கண்களை அவர்களை விரும்புவோர் கூறும் வகைகளை அடுக்கடுக்காக
அடிகளார் கூறுகின்றனர்.
இவற்றுள் முதலாவதாக எல்லோராலும் விரும்பப்படுகின்ற தாமரை மலரோ? என்றனர். இது குளிர்ச்சியைக்
குறிக்கின்றது.
கடு
நஞ்சமோ? ---
மேலும்
அவர்கள் கண் கொல்லும் கொடுமையும் உடையது. ஆதலின், கொடிய நஞ்சமோ? என்றனர்.
கயலோ? ---
கயல்
மீன் நீரில் புரள்வதுபோல் அம்மகளிர் விழியும் இரு புறத்தும் புரண்டு மயக்கத்தைப்
புரியும்.
வடு
வகிரோ? ---
வடு-மாம்பிஞ்சு.
இதனைப் பிளந்தால் உள்ளே அதன் விதை கருமணியையும், அதைச் சூழ்ந்துள்ள பகுதி கண்ணின்
வெண்மைப் பகுதியையும் ஒத்து, கண் போல் காட்சி
தரும். அதனால் பெண்களின் கண்களை,
மா
வடு என்று புலவர்கள் உவமை கூறுவர்.
முன்
வெந்து போன புராதன சம்பராரி ---
சம்பரன்
என்ற அசுரனைக் கொன்றதனால் மன்மதனுக்குச் சம்பராரி என்ற பேர் அமைந்தது. அவன்
சிவபிரான் மீது கணைபொழிந்து வெந்து அநங்கன் ஆயினான். அவனுடைய மலர்க் கணையோ? என்றனர்.
தஞ்சமோ? ---
இத்தகைய
கண்களயுடைய அம்மகளிர், ஆடவர்கள் அடைக்கலம்
புகும் இடமோ? என்று அத்துணை
மிகுந்த அன்பு கொள்வர்.
இயம
தூதுவர் நெஞ்சமோ ---
இயமனுடைய
தூதுவர்கள் தயவு தாட்சண்யம் இன்றி உயிரைப் பறிப்பர்; அதுபோல் பொது மகளிரும் ஆடவருடைய பொருளை
ஈவு இறக்கமின்றிப் பறிப்பர். அதனால் இயமதூதருடைய நெஞ்சம் போன்றவர் என்றனர்.
மாமதச்
சங்க மாதர்
---
மா-அழகு; மதம்-கர்வம்; சங்கம்-கூட்டம். அழகும் கர்வமும் உடைய
கூட்டமான அம்மகளிருடைய உறவில் ஈடுபட்டு ஆடவர் இடர்ப்படுவர்.
சங்கையோவிரு
---
சங்கை
ஓவ இரு என்று பதப்பிரிவு செய்க. சங்கியை என்ற சொல் சங்கை எனமருவியது.
சங்கியை-கணக்கு.
கூதள
கந்த மாலிகை தோய்தரு ---
முருகப்பெருமான்
அணிகின்ற மலர்களில் கூதாள மலரும் ஒன்று. “கூதாள” என்று கந்தரநுபூதியிலும்
குறிப்பிடுகின்றார்.
“அடியென முடியில்
கொண்ட கூதளம்
என வனசரியைக் கொண்ட மார்புஎன
அறுமுகம் எனநெக்கு என்பெலாம்உருக அன்புறாதோ”
--- (அலகிலவுணரை)
திருப்புகழ்.
பஞ்சபாதக
தாருக தண்டன்
---
தாரகாசுரன்
ஐம்பெரும் பாவங்களையும் புரிந்து,
அமரர்களை
மிகவும் அல்லற்படுத்தினான். கள்,
கொலை, சூது, காமம், களவு என்பன ஐம்பெரும் பாதகங்கள்.
“நீதி நெறி யேயழித்த
தாருகனை” --- (கேதகைய) திருப்புகழ்.
“பாவ நிறத்தின் தாருக
வர்க்கம்” --- (காவியுடுத்தும்) திருப்புகழ்.
தண்டன்-இயமன்.
தாரகாசுரன் இயமனைப் போன்றவன். வேலினால் எம்பெருமான் அவனைப் பொடியாகச்
செய்தருளினார்.
வானவர்
பண்டுபோல் அமராவதி குடியேற ---
தேவர்கள்
தங்கள் நகரமாகிய அமராவதியில் முன்னிருந்த படி சுகமாகக் குடிபுகுந்து உய்வு பெறச்
செய்தருளினார்.
பங்கயாசனர்
கேசவர் அஞ்சலே யென ---
சூராதியவுணர்களைக்
கண்டு அமரர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்கினார்கள். அப்போது, பிரம்மதேவரும் நாராயணரும் தேவர்களை
நோக்கி, “நீங்கள்
அஞ்சவேண்டாம். கந்தப்பெருமான் இவர்களை அழித்து நமக்கு அருள்புரிவார். அவர்
வேலுண்டு. எனவே அஞ்சற்க” என்று தேறுதல் கூறினார்கள்.
திருமால்
கூறிய பாடல்
---
சூரனே
முதலோர் தம்மை
இமைப்பினில் தொலைக்க உன்னின்
மூரலால்
அடுவன் கொண்ட
முனிவினால் அடுவன் வாய்மைச்
சீரினால்
அடுவன் நாட்டச்
செய்கையால் அடுவன் என்றால்
நேரிலா
முதல்வன் வன்மை
யாவரே நிகழ்த்தற் பாலார். --- கந்தபுராணம்.
மால்வரை
பங்க நீறெழ வேல்விடும் ---
வரை-மூங்கில்.
இங்கே மூங்கில் இருக்கின்ற மலையைக் குறிக்கின்றது. இடவாகு பெயர். மால்-மயக்கம்.
நெடுங்காலமாக முனிவர்கட்கும் தேவர்கட்கும் கிரவுஞ்சன் என்ற அசுரன் மலை வடிவாக
நின்று குகைபோல் வழிகாட்டி அதில் நுழைந்தாரை மயக்கிக் கொல்வான். இவ்வசுரன்
தாரகாசுரனுக்கு நண்பன். இந்த அசுரன் கிரவுஞ்சப் பறவை போன்ற வடிவுடைய மலையாக நின்று
இலக்கத் தொன்பான் வீரர்களையும் பூத வீரர்களையும் மயக்கினான். கந்தவேள் வேலை
விடுத்து தாருகனையும் கிரவுஞ்சமலையையும் பொடிப்படுத்தியருளினார். பங்கம்-கேடு.
செஞ்சடாடவி ---
சிவபெருமானுடைய
சடை முடி அவருடைய பற்றற்ற நிலையையும் தனிப்பெருந் தலைமையையுந் தெரிவிக்கின்றது.
கங்கை
---
கங்கைமாநதியை
முடித்தது அவருடைய ஆற்றலை அறிவிக்கின்றது.
திங்கள் ---
சந்திரனை
முடித்தது கருணையின் மிகுதியைக் குறிக்கின்றது
கருத்துரை
வேலையுடைய இளங்குமாரமூர்த்தியே!
சிவபுத்திரரே! செந்திற் கடவுளே! மாதர் மயக்கத்தினின்று மீளுமாறு உமது திருவடியைத்
தந்தருள்வீர்.
No comments:
Post a Comment