அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வெங்காளம் பாணம்
(திருச்செந்தூர்)
மாதர் மயலாகிய துன்பம்
தீர வந்து ஆட்கொள்ள வேண்டல்
தந்தா
தந்தா தந்தா தந்தா
தந்தா தந்தத் ...... தனதான
வெங்கா
ளம்பா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை
மென்கே
சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி
வங்கா
ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் ...... படலாமோ
மைந்தா
ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய்
கொங்கார்
பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் ...... கினியோனே
குன்றோ
டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் ...... பொருகோபா
கங்கா
ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் ...... கொருநாதா
கம்பூர்
சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்திற் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வெங்காளம்
பாணம் சேல் கண், பால்
மென்பாகு அம்சொல், ...... குயில்மாலை
மென்கேசம்
தான், என்றே கொண்டார்,
மென் தோள் ஒன்றப் ...... பொருள்தேடி,
வங்காளம் சோனம் சீனம் போய்
வன்பே துன்பப் ...... படல் ஆமோ?
மைந்து
ஆரும் தோள் மைந்தா! அந்தா!
வந்தே இந்தப் ...... பொழுது ஆள்வாய்.
கொங்கு
ஆர் பைந்தேன் உண்டே, வண்டுஆர்
குன்றாள் கொங்கைக்கு ...... இனியோனே!
குன்றோடும்
சூழ் அம்பு ஏழும்
சூரும் போய் மங்கப் ...... பொரு கோபா!
கங்காளம்
சேர் மொய்ம்பார் அன்புஆர்
கன்றே! உம்பர்க்கு ...... ஒரு நாதா!
கம்பு
ஊர் சிந்து ஆர் தென்பால் வந்தாய்!
கந்தா! செந்தில் ...... பெருமாளே.
பதவுரை
கொங்கு ஆர் --- பூந்தாதுகளில் உள்ள,
பை தேன் உண்டே --- பசுமையான தேனை உண்டு,
வண்டு ஆர் --- வண்டுகள் நிறைந்துள்ள,
குன்றாள் கொங்கைக்கு இனியோனே --- வள்ளிமலையில்
வாழுகின்ற வள்ளியம்மையாருடைய தனங்களுக்கு இனிமையானவரே!
குன்றோடும் --- ஏழு மலைகளும்,
சூழ் அம்பு ஏழும் --- சூழ்ந்துள்ள ஏழு கடல்களும்,
சூரும் போய் மங்க --- சூரபன்மனும் வலிமை குன்றி
அழிமாறு,
பொரு கோபா --- போர் செய்து சினந்தவரே!
கங்காளம் சேர் மொய்ம்பார் --- எலும்புக் கூட்டை
அணிந்த தோளையுடையவராகிய சிவபெருமானுடைய,
அன்பு ஆர் கன்றே --- அன்பு நிறைந்த பாலகரே!
உம்பர்க்கு ஒரு நாதா --- தேவர்கட்கு ஒப்பற்ற தலைவரே!
கம்பு ஊர் சிந்து ஆர் தென்பால் வந்தாய் --- சங்குகள்
தவழும் கடலுடன் கூடிய தென் திசையில் வந்து அமர்ந்தவரே!
கந்தா --- கந்தக் கடவுளே!
செந்தில் பெருமாளே --- திருச்செந்தூரில் எழுந்தருளி
உள்ளவரே! பெருமையிற் சிறந்தவரே!
வெங்காளம் --- வெப்பமான நஞ்சு.
பாணம் --- அம்பு,
சேல் --- மீன் என்ற இவைகளைப் போன்ற,
கண் --- விழிகளையும்,
பால் --- பால்,
மெல் பாகு --- மென்மையான சர்க்கரைப் பாகு என்ற
இவை போன்ற,
அம் சொல் --- அழகிய சொற்களையும்,
குயில் --- குயில் போலவும்,
மாலை --- மாலையிருள் போலவும் கருமையுடைய,
மென் கேசம் --- மென்மையான கூந்தலையும்,
என்றே கொண்டார் --- ஆகிய இவைகளைக் கொண்டவர்களாகிய
பொது மாதர்களது,
மென் தோள் ஒன்ற --- மெல்லிய தோள்களில் பொருந்தும்
பொருட்டு,
பொருள் தேடி --- பொருளைத் தேடிக்கொண்டு.
வங்காளம் --- வங்காள தேசத்திற்கும்,
சோனம் --- சோனக தேசத்திற்கும்,
சீன --- சீன தேசத்திற்கும்,
போய் --- சென்று,
வன்பே துன்பப் படலாமோ --- கொடிய துன்பங்களை அநுபவிக்கலாமோ?
மைந்து ஆரும் தோள் --- வலிமை நிறைந்த தோள்களையுடைய,
மைந்தா --- குமாரக் கடவுளே!
அந்தா --- அழகனே!
வந்தே இந்தப் பொழுது ஆள்வாய் --- அடியேன் முன்
வந்து இப்போதே ஆட்கொண்டருளுவீர்.
பொழிப்புரை
மணம் பொருந்திய மலர்களிலே உள்ள
பசுந்தேனை உண்டு வண்டுகள் நிறைந்த மலையில் வசிக்கின்ற வள்ளியம்மை தனங்கட்கு
இனியவரே!
ஏழு மலைகளும், ஏழு கடல்களும், சூரபன்மனும் வலி குன்றிக் கதறுமாறு
சினந்து போர் புரிந்தவரே!
எலும்புக் கூட்டை அணிந்த தோள்களையுடைய
சிவபெருமானுக்கு அன்புடைய புதல்வரே!
தேவர்கட்கு ஒப்பற்ற தலைவரே!
சங்குகள் உலாவுகின்ற கடலுடன் கூடிய தென்
திசைக்கு வந்தவரே!
கந்தப் பெருமானே!
செந்தில் மேவிய பெருமிதம் உடையவரே!
வெப்பமான நஞ்சையும் அம்பையும் மீனையும்
ஒத்த கண்களையும், பாலையும், இனிய கற்கண்டின் பாகையும் ஒத்த அழகிய
சொற்களையும், குயில் போலவும் இருள்
போலவும் கருமை நிறமுடைய மெல்லிய கூந்தலையும் கொண்ட பொது மாதர்களுடைய மென்மையான
தோள்களைச் சேரும் பொருட்டு, பொருளை நாடி, வங்க நாடு, சோனகம், சீனம் முதலிய தேசங்களுக்குச் சென்று
மிகுந்த துன்பத்தை அடியேன் அடையலாமோ? ஆற்றல்
அமைந்த திருப்புயங்களையுடைய குமாரமூர்த்தியே! அழகரே! அடியேன் முன் இப்போதே வந்து
ஆட்கொண்டருளுவீர்.
விரிவுரை
வெங்காளம்
பாணஞ் சேல் கண் ---
மகளிருடைய
கண்களுக்குப் பல உவமைகள் உண்டு. அவற்றுள் இங்கு நஞ்சு, கணை, மீன் என்ற மூன்றையும் எடுத்து அடிகள் உரைக்கின்றனர்.
வெப்பமான நஞ்சு போல் தமது மயலில் வீழ்ந்தாரைக் கொல்லுந் தன்மையுடையது
விலைமகளிருடைய கண்கள்.
பாணம்
போல பாயுந் தன்மையுடையது. மீன் போல் பிறழுந் தன்மையுடையது.
பால்
மென்பாகு அம் சொல் ---
அவ்விலைமகளிருடைய
மொழி பாலையும், மென்மையான சர்க்கரைப்
பாகையும் ஒத்து காமுகர்க்கு இனிக்கும். அம்மொழியில் உருகி மயல் பெருகி மதிமயங்கி
கதி விலகிக் கலங்குவர்.
பால்என்பது
மொழி, பஞ்சுஎன்பது பதம், பாவையர்கண்
சேல்என்பதாகத்
திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை
வேல்என்கிலை,
கொற்றமயூரம் என்கிலை, வெட்சித் தண்டைக்
கால்என்கிலை,
நெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே? --- கந்தரலங்காரம்.
குயில்
மாலை மென்கேசம் ---
மெல்லிய
கேசம் (கூந்தல்) மிகுந்த கருமையுடன் இருக்கும். அதற்கு உவமை குயிலும் இருளும்.
குயில் போன்ற கருமை; இருள் பூசியது போன்ற
கருமை.
இருள்
போன்ற கூந்தல் மேலும் மையல் இருளைத் தந்து ஆணவ இருளுக்கு அனுகூலம் புரியும்.
நிறைந்த
இடத்தில் பொருள் இன்னது என்று விளங்காததுபோல் கூந்தலின் இருளில் மதிமயங்கியோர்க்கு
செய்வன எவை, தவிர்வன எவை என்று
விளங்காது. நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எதற்காக வந்தேன்? இந்த உடம்பு எவ்வாறு வந்தது? உடம்பு தானே வராதன்றோ? ஒருவன் தந்து வந்ததாயிற்றே? தந்தவன் எதன் பொருட்டுத் தந்தான்? தன் பொருட்டுத் தந்தானா? என் பொருட்டுத் தந்தானா? உடம்பு பெற்றதன் பயன் எது?
உடம்பைத்
தந்தவன் யாவன்? அவன் தன்மைகள் எவை? அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? அவனை யறிந்தவர் யார்? அறியும் நெறிகள் எவை? என்பனவாதி நற்சிந்தனைகள் தோன்ற, அங்கே ஒரு ஞான ஒளி தோன்றும், அந்த ஞான வொளியில் உண்மைப் பொருள்
தோன்றும்.
அந்த
ஒளியைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் முயலுதல் வேண்டும். அந்த ஒளி ஒரு மலைபோல் தோன்றி, அவ்வொளி மலைமேல் அன்புக் கூட்டிலிருந்து
வெளிப்பட்டு ஆனந்த ஆறு பாய்ந்தது. அங்கு எல்லாம் அற்ற இனிய தனி நிலையைத் தெளிய
அருணகிரிநாதருக்கு ஐயன்-பன்னிருகையன்
உபதேசித்து விட்டான். ஆ! ஆ! அந்த ஆனந்தம் எத்தன்மையதோ?
ஒளியில்
விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல்
அளியில்
விளைந்தது ஓர்ஆனந்தத் தேனை, அநாதியிலே
வெளியில்
விளைந்த பெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய
விளம்பியவா! முகம்ஆறுஉடைத் தேசிகனே. --- கந்தரலங்காரம்
அந்த
ஒளியைப் பெறாதார் பொது மகளிருடைய கூந்தலாகிய இருளில் மருளுற்று அல்லற்படுவர்.
மென்தோள்
ஒன்றப் பொருள்தேடி ---
மென்
தோள் ஒன்ற-ஒன்றுதல்-பொருந்துதல்;
பொது
மகளிருடைய மெல்லிய தோளைப் பொருந்தும் பொருட்டு அவர்களுக்கு அள்ளிக்கொடுக்கப்
பொருள் வெண்டுமன்றோ? ஆகவே அருளை மறந்து
பொருளை நினைந்து அப்பொருளைத் தேடும் பொருட்டு மாந்தர் பலர் அலைகின்றனர்.
தூய வழியில் பொருள் தேடினாலுங் குற்றமில்லை.
தீய வழியில் பொருளை ஈட்டுகின்றார்கள். பலரை இம்சித்தும், பொய்யும் புனை சுருட்டும் புகன்றும், களவு செய்தும், பிறருடைய வயிற்றிலடித்தும் அழிகின்ற
பொருளைத் தேடுகின்றனர். அதனால் இம்மையில் பழியும் மறுமையில் பாவமும் எய்துகின்றன.
இங்ஙனம் பாவ வழியில் தேடிய பொருள் மிகுதியைக் காட்டிலும் வறுமையே நல்லது என்கிறார்
வள்ளுவர்.
“பழிமலைந்து எய்திய
ஆக்கத்தில், சான்றோர்
கழிநல் குரவே தலை.” ---
திருக்குறள்.
தீய
வழியில் ஈட்டிய பொருளை மாதர்க்கும் மனைவி மக்கட்கும் ஈந்து இவன் பாவ மூட்டையைச்
சுமந்து கொண்டு நரக உலகிற் சென்று பன்னெடுங்காலம் பரிதவிக்கின்றான். என்னே
மதியீனம்? தேடிய பொருளைத்
தான்கொண்டு போகின்றானுமில்லை. பிறர் பொருட்டுப் பொருள்தேடி, தான் பாவத்தை சுமந்து செல்கின்றான்.
இவனைக் காட்டிலும் பேதையுளனோ? மிக்க
பொருளுடையவர்களும் மேலும் பழி பாவங்கட்கு அஞ்சாது, வறியவர்கட்கு ஈயாது தீயவழிகளில் பெரும்
பொருள் ஈட்டவே முயன்று கொண்டிருக்கிறார்கள். அதனால் பிறவிப் பயனைப் பெறாது அவமே
மாண்டு ஒழிகின்றனர்; பாவம்!
வங்காளம்
சோனம் சீனம் போய் ---
அதிக
பொருளை ஈட்ட வேண்டுமென்ற பேராசையால் தன் தேசத்தை விடுத்து அயல் தேசத்தையடுத்துப்
போகின்றான். வங்கம் சோனகம் சீனம் முதலிய தேசங்கட்கெல்லாம் போகின்றான். அயல் தேசஞ்
சென்று பஞ்சு படாத பாடு படுகின்றான்.
“பல திக்கோடு
திக்குவரை மட்டோடி மிக்கபொருள்
தேடிச் சுகந்த அணை மீதில்துயின்று சுகம்
இட்டாத ரத்துருகி வட்டார் முலைக்குள்இடை
மூழ்கிக் கிடந்து மய லாகித்துளைந்து சில
பிணியதுமூடி”
--- (இத்தாரணிக்குள்)
திருப்புகழ்.
வன்பே
துன்பப்பட லாமோ ---
நிதி
நாட்டம் உடையானுக்குக் கதி நாட்டம் ஏற்படாது. “நிதியை நினைந்து உனைமறந்த மதியை
நினைந்து அழுவேனோ? நிமலானந்த கதியை
மறந்து இருள் விழைந்த விதியை நினைந்து அழுவேனோ?” என்கின்றார் இராமலிங்க அடிகளார்.
பொருளாசையால்
பெருந்துன்பம் எய்தும். இரவு பகலாக அலையச் செய்யும் பொருளாசை; செய்யாத ஈனச் செயல்களைச் செய்யச் செய்யும்.
அருணகிரிநாத
சுவாமிகள் ஆண்டவனை நோக்கி, “பெருமானே!
இப்பொருளாசையால் அடியேன் பெருந் துன்பத்தை யடையலாமோ! அவ்வாறு அடைதல் கூடாது.
ஆசையினின்றும் விலகி உய்யுமாறு தேவரீர் அருள் செய்யும்” என்று வேண்டுகின்றார்.
ஆனால்
அருணகிரிநாதர் உள்ளபடியே பொருளாசையுடையவர் என்று அன்பர்கள் கருதிவிடக் கூடாது.
அவர் ஆசா நிகளந்துகளாகப் பெற்றவர்;
ஆசாபயோதியைக்
கடந்து நின்ற அரும்பெருந் தவஞானி;
உலகவர்க்குள்ள
ஆசைப்பாட்டைக் குறித்து வருந்தி இப்பாடலைப் பாடுகின்றார். மாணவர் குற்றத்தை
ஆசிரியனும், மக்கள் குற்றத்தை
மாதா பிதாவும் ஏற்றுக் கொள்வதுபோல் உலகவர் குற்றத்தைத் தாம் ஏற்று இப்பாடலைப்
பாடுகின்றார் என அறிக.
மைந்து
ஆரும் தோள் மைந்தா ---
உலகைப்
புரக்கும் வீர அரசனுக்கு வலிமை நிறைந்திருக்க வேண்டும். வலிமைத் தங்குமிடம் தோள்.
அதனால் தான் இராமரை முதல் முதலாகக் கண்ட மிதிலை மாதர்கள் இது வீரம் உள்ள தோள் தானா? என்று எடுத்த உடனே முதலில் தோளை உற்று
நோக்கினார்களாம்,
“தோள்கண்டார்
தோளேகண்டார்.”
அதனாலேயே
“அவருடைய தோள்வலி கூறுவோர்க்கே” என்கின்றார் கம்பநாடர்.
ஒரு
நாட்டைக் காக்கின்ற மன்னவனுக்கு இத்தகைய தோள் வலி வேண்டும் என்றால் அகில உலகங்களை
யாளும் எந்தை கந்தவேளுக்கு எத்தகைய தோள்வலி யமைய வேண்டும்? அளவிலாற்றல் அத்தோளில் அமைந்துள்ளது.
அது அலகில் அவுணரைக் கொன்ற பேராற்றல் படைத்தது.
“அலகில்அவுணரைக் கொன்ற
தோளென” --- திருப்புகழ்.
“முற்றிய பனிரு
தோளும்” --- (பக்கரை)திருப்புகழ்.
அதனாலேயே
வாழ்த்த வந்த கச்சியப்பர் முதலில் அத்திருத் தோள்களை வாழ்த்துகின்றார், `ஆறிரு தடந்தோள் வாழ்க’ என்று.
அத்தோள்
அனைவரும் துதி செய்யும் அருமையுடையது என்கின்றார், “ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்
போற்றி.”
மைந்து-வலமை.
ஆர்- நிறைதல்.
வலிமை
முழுவதும் நிறைந்த மைந்தன் முருகன். இனிய அடியவர்களின் வினைப் பகைகளையும் ஆணவாதி
பகைகளையும் அழிக்கும் ஆற்றல் படைத்தவன்.
அவனை
வழிபடுவோர்க்குப் பகையினால் வரும் அச்சம் இராது. கோள் நாள் கூற்று முதலிய இடர்கள்
எய்தமாட்டா.
வந்தே
இந்தப் பொழுது ஆள்வாய் ---
“பெருமானே! நாளை, மறுநாள் என்று தவணை போடாமல் இப்பொழுதே
என் முன் வந்து ஆட்கொள்வீர்” என்று சுவாமிகள் வேண்டுகின்றனர்.
ஆண்டவனைக்
காணவேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில்
துடிதுடித்துக் கொண்டிருக்க வேண்டும். தண்ணீரிலே அழுந்திய ஒருவன் மூச்சுவிட
முடியாமல் திணறுவதுபோல் எவன் ஒருவன் இறைவனைக்
காணவேண்டும் என்று துடிப்பானோ அவனுக்கு அத்துடிப்புள் இறைவன் தோன்றியருள்
புரிவான்,
இன்றிருப்பார்
நாளையில்லை; வருகணத்து
வாழ்ந்திடுமோ? விழுமோ இந்த மலக்கூடு, “சாநாளும் யாரறிவார்" "நெருநல்
உளனொருவன் இன்றில்லை". ஆனபடியால் எத்தனைக்கு எத்தனை விரைவில் முருகனுடைய
காட்சியைக் காணலாம் என்ற ஆவலும் அளவுக்கு மேற்பட்ட காதலும் அமைதல் வேண்டும்.
அங்ஙனம் அமைந்த பாம்பன் அடிகளார்க்கு ஆண்டவன் கனவிலும் நனவிலும் காட்சி தந்தனர்.
அளவிறந்த
காதல் பூண்ட ராமகிருஷ்ணர் தேவியை நேருக்கு நேராக தெரிசித்தனர்.
கொங்கு
ஆர் பைந்தேன் உண்டே வண்டு ஆர் குன்றாள் ---
குன்றாள்-குன்றில்
பிறந்து குன்றில் வாழ்கின்ற வள்ளியம்மையார். மலைமகள் மகனாகிய மலைக்கு நாயகன்
மலைமங்கையாகிய வள்ளியை மணந்து மலையில் எழுந்தருளியிருக்கின்றான்.
குன்றோடும் ---
சூரபன்மனுக்குத்
துணையாக நின்ற ஏழு மலைகளையும் பெருமான் அழித்தனர்.
சூழ்
அம்பு ஏழும்
---
உலகைச்
சூழ்ந்துள்ள ஏழு கடல்களையும் வேலால் கவற வைத்தனர்.
அம்பு-கடல்.
“எழுகடலும் எண்
சிலம்பும் நிசிரரும் அஞ்ச அஞ்சும்
இமையவரை அஞ்சலென்ற பெருமாளே” --- (அனைவரு) திருப்புகழ்.
சூரும்
போய் மங்கப் பொரு கோபா ---
சூர்-சூரபன்மன்.
போய் மங்க-வலிமையழிந்து
குன்றுமாறு முருகன் மறக்கருணையால் கோபிப்பார் போல் கோபித்துப் போர் புரிந்தார்.
குற்றம்
புரியும் குழந்தைகளை அன்னை சினமுகங் காட்டித் தண்டித்துத் திருத்துவதுபோல்
முருகவேள் சூராதியவுணரைத் தண்டித்து ஆண்டருளினார்.
கங்காளஞ்சேர்
மொய்ம்பார்
---
கங்காளம்-எலும்புக்
கூடு. மொய்ம்பு-தோள். சர்வசம்மார காலத்தில் மாண்ட மாலயனாதி வானவர்கள் தமது
அடியார்கள் ஆதலின் அவர்களுடைய எலும்புக் கூடுகளைச் சிவபெருமான் தோளில் தரித்துக் கொண்டு
அருளினார்.
அன்பார்
கன்றே
---
சிவமூர்த்திக்கு
அன்புடைய இளங்குமாரர். கன்று என்ற சொல் அழகாக அமைந்துள்ளது.
கம்பூர்
சிந்தார் ---
கம்பு-சங்கு.
சிந்து-கடல். சங்குகள் ஊர்ந்து தவழ்கின்ற கடல்.
கந்தா
---
கந்தன்-பகைவர்களுடைய
பராக்கிரமங்களை வற்றச் செய்பவன்;
அகப்பகை
புறப்பகை என்ற இரு பகைகளையும் போக்கி அருள் புரிபவன்.
கருத்துரை
வள்ளிமணவாளா!
சிவகுமாரா! செந்தில் மேவிய கந்தவேளே! மாதர் பொருட்டுப் பொருள் தேடி அலைந்து
அடியேன் துன்புற மாட்டேன். இப்பொழுதே வந்து அருள் புரிவீர்.
No comments:
Post a Comment