அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விறல்மாரன் ஐந்து
(திருச்செந்தூர்)
ஆன்மாவின் துன்பம் தீர,
முருகன் திருமார்பில்
உள்ள மலர்மாலையை வேண்டல்.
தனதான
தந்த தனதான தந்த
தனதான தந்த ...... தனதான
விறல்மார
னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து ...... வெயில்காய
மிதவாடை
வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர்
குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலை
யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து ...... குறுகாயோ
மறிமானு
கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த ...... மதியாளா
மலைமாவு
சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த ...... அதிதீரா
அறிவால
றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
அழகான
செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
விறல்மாரன்
ஐந்து மலர்வாளி சிந்த,
மிகவானில் இந்து ...... வெயில்காய,
மிதவாடை
வந்து தழல் போல ஒன்ற,
வினைமாதர் தம்தம் ...... வசைகூற,
குறவாணர்
குன்றில் உறைபேதை கொண்ட
கொடிது ஆன துன்ப ...... மயல்தீர,
குளிர்மாலையின்
கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து ...... குறுகாயோ?
மறிமான்
உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த ...... மதியாளா!
மலைமாவு
சிந்த, அலைவேலை அஞ்ச,
வடிவேல் எறிந்த ...... அதிதீரா!
அறிவால்
அறிந்து உன் இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் ...... களைவோனே!
அழகான
செம்பொன் மயில்மேல் அமர்ந்து,
அலைவாய் உகந்த ...... பெருமாளே.
பதவுரை
மறிமான் உகந்த --- மான் குட்டியைக்
கருணையுடன் கரத்திலேந்தியுள்ள,
இறையோன் --- எப்பொருட்கும் இறைவராகிய
சிவபெருமான்,
மகிழ்ந்து --- பிரணவோபதேசம் பெறுவதற்காக
மனமகிழ்ச்சியுடன்,
வழிபாடு தந்த --- சிஷ்யபாவ மூர்த்தியாக
நின்று வழிபட்ட,
மதியாளா --- ஞானவடிவினரே!
மலை மாவு சிந்த --- கிரவுஞ்சமலையும், மா மரமாக நின்ற
சூரபன்மனும் அழியுமாறு,
அலை வேலை அஞ்ச --- அலைகளுடைய கடல் அஞ்சவும்,
வடிவேல் எறிந்த --- கூர்மை பொருந்திய
வேலாயுதத்தைப் பிரயோகம் புரிந்த,
அதி தீரா --- மிகவும் தைரியத்தை உடையவரே!
அறிவால் அறிந்து --- பாச அறிவும் பசு
அறிவும் நீங்கிய மெய்யறிவினால் உணர்ந்து,
உன் இருதாள் இறைஞ்சும் --- தேவரீரது திருவடித் தாமரைகள் இரண்டையும் வணங்குகின்ற,
அடியார் இடைஞ்சல் களைவோனே --- அடியார்களுக்கு
நேரும் இடையூறுகளை நீக்குபவரே!
அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து ---
அழகியதும் செம்பொற் சாயலையுடையதுமாகிய மயிலின்மிசை ஏறிக்கொண்டு,
அலைவாய் உகந்த பெருமாளே --- திருச்சீரலைவாய்
என்னும் புனிதத் திருத்தலத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற பெருமையிற் சிறந்தவரே!
விறல் மாரன் --- யாவரையும் மயக்குகின்ற
சக்தியுடைய மன்மதன்,
ஐந்து மலர் வாளி சிந்த --- ஐந்து
மலர்க்கணைகளை வீசவும்,
வானில் மிக இந்து வெயில் காய --- ஆகாயத்தில் சந்திரன்
மிகவும் குளிர்ந்த கிரணங்களைப் பொழியவும்,
மித வாடை வந்து --- மெல்லிய தென்றல் காற்று
வந்து,
தழல் போல ஒன்ற --- அக்கினிபோல் நெருங்கவும்,
வினை மாதர் தம் தம் --- வினைவசப்பட்ட
மாதர்கள் தங்கள் தங்கள் மனம் போன வண்ணம்,
வசை கூற --- வசைமொழிகளைக் கூறவும்,
குறவாணர் குன்றில் உறை --- ஐம்புலன்களாகிய
குறவர்களுடைய மலையில் வசிக்கின்ற,
பேதை கொண்ட --- அறியாமையையுடைய பெண்ணாகிய
ஜீவான்மா அடைந்த,
கொடிது ஆன துன்ப மயல் தீர --- கொடிய
துன்பத்தைப் புரியும் மயக்கம் நீங்க,
குளிர் மாலையின்கண் --- குளிர்ச்சி பொருந்திய
மாலை நேரத்தில்,
அணிமாலை தந்து --- தேவரீரது திருமார்பில் அணிந்துள்ள
மாலையைத் தந்து,
குறைதீர வந்து குறுகாயோ --- இந்த
ஜீவான்மாவினது குறை நீங்குமாறு வந்து அணுக மாட்டீரோ?
பொழிப்புரை
தாருகாவனத்து இருடிகளால் அனுப்பப்பட்ட
மான்குட்டியைக் கருணையினால் கரத்திலேந்தியுள்ள, எவ்வுயிர்க்கும் எப்பொருட்கும்
இறைவராகிய சிவபெருமான், குடிலை மந்திரோபதேசம்
பெறும் பொருட்டு மகிழ்ச்சியுடன் வழிபாடு செய்த ஞான சொரூபியே!
கிரவுஞ்ச மலையும், மாமரமாகி நின்ற சூரபன்மனும் அழியும்
படியும், அலைகளை யுடைத்தான
சமுத்திரம் அஞ்சவும், வடிவேலாயுதத்தை
எறிந்த மிகுந்த தைரியத்தை உடையவரே!
பதி ஞானத்தால் மெய்ப்பொருளை யறிந்து
தேவரீரது அருணசரணாரவிந்தங்கள் இரண்டையும் வணங்குகின்ற அடியார்களது இன்னல்களை அகற்றுகின்றவரே!
அழகிய செம்பொன் அனைய மயில் மேல்
அமர்ந்து திருச்சீரலைவாய் என்னுந் திருத்தலத்தில் மகிழ்ச்சியுடன் உறைகின்ற
பெருமையில் சிறந்தவரே!
(எத்திறப்பட்டாரையும் மயக்குகிற)
சக்தியையுடைய மன்மதன் ஐந்து மலர்க்கணைகளைச் சிந்தவும், ஆகாயத்தில், சந்திரன் மிகவும் குளிர்ந்த
கிரகணங்களைப் பொழியவும், மெல்லிய தென்றற்
காற்று அக்கினிபோல் வந்து வெப்பத்தைச் செய்யவும், வினைகளைப் புரியும் பெண்கள் தங்கள்
தங்களுக்குத் தோன்றிய வண்ணமெல்லாம் நிந்தை மொழிகளைச் சொல்லவும், ஐம்புலன்களாகிய வேடுவர்களது
கன்மங்களாகிய மலைமேலுறை கின்ற ஜீவான்மாவாகிய பெண்மங்கை கொண்ட கொடிய துன்பத்தை
விளைவிக்கின்ற மயக்கம் நீங்குமாறு, குளிர்ந்த மாலை நேரத்தில் தேவரீர்
அணிந்துகொண்டுள்ள மலர்மாலையைத் தந்து இந்த ஜீவான்மாவினது குறை தீருமாறு வந்து
அணுகமாட்டீரோ?
விரிவுரை
விறல்மாரன் ---
யயாதி, நகுஷன், புரூரவன், சர்யாதி, முதலிய ராஜரிஷிகளையும்,
காசிபர், சியவனர், கௌதமர், பராசரர், விசுவாமித்திரர் முதலிய பிரம்ம
ரிஷிகளையும்,
இந்திரன், அக்கினி, பிரமன், திருமால் முதலிய இமையவர்களையும்
தனது
மலர்க்கணைகளால் மயக்கி வாகை சூடியோன் ஆதலால் மதனனை "விறல்மாரன்"
என்றனர்.
ஐந்து
மலர்வாளி
---
மன்மதன்
கணைகள் ஐந்து. அவையாவன--- தாமரை,
மா, அசோகு, முல்லை, நீலம் என்பன.
இவற்றின்
பெயர் முறையே: உன்மத்தம், மதனம், சம்யோகம், சந்தாபம், வசீகரணம் என்பனவாம்.
இவை
செய்யும் அவத்தை :- சுப்ரயோகம்,
விப்ரயோகம், சோகம், மோகம், மரணம்.
இதன்
விவரம்: சுப்ரயோகம்:- சொல்லும் நினைவும்; விப்ரயோகம்:-
வெய்துயிர்த்திரங்கல்; சோகம்; வெதுப்புந் துய்யன தெவிட்டலும்; மோகம்:-அழுங்கலும்,
மொழி
பல பிதற்றலும்; மரணம்:- அயற்பும், மயக்கமும்.
பேதைகொண்ட
கொடிதான துன்ப மயல் ---
தலைவன்
மீது காதல் கொண்ட தலைவிக்கும் குளிர்ந்த சந்திரனது தண்ணொளி வெப்பத்தையும், தென்றல் காற்று அனல் போன்ற வெம்மையையும்
செய்யும். ஈண்டு ஜீவான்மாவை நாயகியாகவும், பரமான்மாவை நாயகனாகவும் வைத்து பரமான்மா
வாகிய நாயகன் மீது காதல் கொண்ட நாயகியாக ஜீவான்மா மிகுந்த தாபத்தை யடைந்து
வருந்துகின்றது. இங்ஙனம் நாயகி நாயக பாவத்தில் எழுந்த பாடல்கள் பல.
“துள்ளுமத வேள்
கைக் கணையாலே
தொல்லை நெடுநீலக் கடலாலே
மொள்ளவரு
சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே”
--- திருப்புகழ்.
தென்றலையம்பு
புனைவார் குமார திமிரமுந்நீர்த்
தென்றலையம்புய
மின்கோ மருக செழுமறைதேர்
தென்றலையம்பு
சகபூ தரவெரி சிந்திமன்றல்
தென்றலையம்பு
படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே. --- கந்தரந்தாதி.
இங்ஙனம்
பரமான்மாவின் மீது வேட்கை கொண்ட ஜீவான்மா அவ்வேட்கைத் தீர மலர் மாலையை
விரும்புகின்றது.
“நீலங்கொள்
மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தரைத்தந் தருள்வாயே” --- திருப்புகழ்.
மறிமான்..........வழிபாடு
தந்த மதியாளா
---
அறுமுகச்
சிவனாரை ஐம்முகச் சிவனார் வழிபட்ட வரலாறு
கயிலைமலையின்
கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த பொழுது சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த அமரர்கள்
அனைவரும் குகக் கடவுளை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை யழைத்து
பிரணவப் பொருளை வினாவி, அதனை யுரைக்காது
விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி முத்தொழிலும் புரிந்து தாமே
மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கென வெளிப்படுத்தினர்.
பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்
கணிருந்த கந்தக் கடவுள் தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர்.
பொன்னார்மேனிப் புரிசடை யண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி
மோந்து முதுகுதைவந்து “குமரா! நின் பெருமையை உலகமெவ்வாறு அறியும். மறைகளால்
மனத்தால் வாக்கால் அளக்கவொண்ணாத மாப் பெருந்தகைமை யுடைய நின்னை உள்ளபடி உணரவல்லார்
யாவர்?” என்று புகழ்ந்து அதனை
விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதனின்றி மெய்ப்பொருளை உணர
முடியாது என்பதையும், குரு அவசியம்
இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய்
வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,
“அமரர் வணங்குங் குமர
நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல்
நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு
பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும்
செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை யறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வைரங்கொள்ளார்.
ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக்கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக்
குட்டி பல நாட்களாகச் சிறையிலிருத்தி, எல்லார்க்குஞ்
செய்யும் வணக்கமும் நினக்கே யெய்துந் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று
எம்பிரானார் இனிது கூறினர். எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓ மெழுத்தின்
உட்பொருளை யுணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித்
தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.
சிவபெருமான்
“மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்றெறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே!
எந்தப் பொருளையும் உபதேச முறையினாலன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினாற் கழறவல்லேம்” என்றனர். அரனார்
கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத
உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்ததென்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது
விருப்பமுடனமருந் தணிகைவெற்பை யடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து
தணிகைமாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப்பொருள் முதலிய உண்மை
யுபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பாலவென்று உலகங்கண்டு
தெளிந்துய்யுமாறு தவம்புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி
மண்டபம் எனப்படூஉம் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பாற் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உளநிறுவி ஒரு கணப்
பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது
தவமுஞற்றலானன்றே அத்தணிகைமலை கணிக வெற்பு எனப் பெயர் பெற்றதென்பர்.
கண்ணுதற்
கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவமியற்றக் கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலமுண்ட அண்ணல் எழுந்து குமரனை வணங்கி
வடதிசை நோக்கி நின்று பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும்
பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து பிரணவோபதேசம் பெற்றனர்.
எதிருறுங்
குமரனை யிருந்தவி சேற்றியங்
கதிர்கழல்
வந்தனை யதனொடுந் தாழ்வயிற்
சதுர்பட
வைகுபு தாவரும் பிரணவ
முதுபொருட்
செறிவெலா மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.
“நாத போற்றி எனமுது
தாதை கேட்க அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக உயர்பரம
சங்கரன் கும்பிடுந் தம்பிரானே” --- (கொடியனைய) திருப்புகழ்.
மலைமாவு
சிந்த ...........வடிவேலெறிந்த ---
மலை -
கிரவுஞ்சமலை.
மா எறிந்த வரலாறு
மாயையின்
மகனாகிய சூரபன்மன் சிவ மூர்த்தியின் பால் பற்பல வரம் பெற்று உளந்தருக்கி அறநெறிப்
பிறழ்ந்து அமரர்க்கு அலக்கண் விளைத்த ஞான்று, குமாரக்கடவுள் தேவர் சிறை தீர்ப்பான்
அமர்த் தொடங்கி அசுரர் அனைவரையும் அட்டனர். முடிவில் சூரபன்மன் போர்க்கோலங்கொண்டு
ஆயிரத்தெட்டு
அண்டங்களிலுமுள்ள
சேனைகளைத் திரட்டிக்கொண்டு போர்க்களமுற்றனன். அப்பெருந்தானையைக் கண்ட
பூதவெள்ளங்களும் சேனாதிபதிகளும் வீரபாகு ஒழிந்த ஏனைய வீரர்களும் உள நடுங்கினர்.
தேவர்கள் அளக்கவொணா அலக்கணை யடைந்தனர். குகப்பெருமானார் அப்பெருஞ் சேனைகளையெல்லாம்
அழித்தனர். முருகவேளும் சூரபன்மனும் நெடுநேரம் போர் புரிந்தனர். சூரபன்மனுடையப்
பற்பல ஆயுதங்களும் மாயத் திறங்களும் ஒழிந்தன: அவுணர்கோன் முடிவில் “இக்குமரனைக்
கொணர்ந்து யுத்தத்தை விளைவித்த தேவர்களை முதலில் கொன்று சிறிது சினந் தணிந்தபின்
இக்குமரனோடு போர்புரிவேன்” என்று நினைத்து ஒரு மாயமந்திரத்தைச் செபித்து
உலகமுழுவதும் பெரியஇருள் சூழுமாறு செய்து, அவ்விருளில் வாளையேந்தித் தேவர்களைக்
கொல்லுதற் பொருட்டு விண்ணிடைப் பாய்ந்தனன். அதனைக் குறிப்பாலுணர்ந்த அரியயனாதி
யமரர்கள்,
தேவர்கள்
தேவே ஓலம் சிறந்தசிற் பரனே ஓலம்
மேவலர்க்கு
இடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்
பாவலர்க்கு
எளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவரும்
ஆகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்”
என்று
முறையிட்டனர். அம்முறையைக் கேட்டு மூவிரு முகங் கொண்டுள்ள முழுமுதற்கடவுள், சேயழுகை கேட்ட தாயைப்போல் தண்ணருள்
சுரந்து, தமது திருக்கரத்தில்
வைகுஞ் செங்கதிர் வேலாயுதத்தை நோக்கி, “நீ
விரைந்து சென்று சூரபன்மனுடைய மாயைகளையும் ஆற்றலையும் அழித்து அவனது உடலைப்
பிளந்து வருதி” என்று ஆணை தந்தனர். உடனே வேற்படையானது ஆயிரங்கோடி சூரியர்கள்
ஒருங்கு கூடினாற் போலத் திகழ்ந்து அக்கினி மழையைப் பொழிந்து கொண்டு சூரன் கொண்ட
இருளுருவத்தை இமைப்பொழுதிலழித்தது.
“அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள் மேல் விடுவோனே” --- (இருவர்)
திருப்புகழ்.
சூரபன்மன்
“முடிவில்லாத வரத்தையுடைய என்னை இவ்வேற்படை யாது செய்ய வல்லது? இதன் திறத்தைக் காண்கின்றனன்” என்று
அண்ட முகடுகள் நடுங்கச் சிரித்து,
மிகுந்த
சீற்றங்கொண்டு “சமுத்திரம், பூதலம், பிரமாதி தேவர்களது உலகங்கள், உயிர்கள் முதலிய அனைத்தையும் இப்பொழுதே
யழிப்பேன்” என்று விரைந்து சென்றுகடல் நடுவில், நெருப்புப் போலுந் தளிர்களும், புகைபோன்ற இலைகளும், மேகக்கூட்டங்கள் போன்ற கிளைகளும், மரகதக் கற்கள் போன்ற பிஞ்சுகளும், மாணிக்கத்தையொத்த பழங்களுங்கொண்டு பிரமாண்டச்
சுவர்வரையிலும் வேரோடி, இலக்க யோசனைத்
தூரமளவும் விசாலித்த தலைகீழான மாமர வடிவங்கொண்டு, சகல லோகங்களையும் நடுநடுங்க மோதினன்.
வன்னியி
னலங்கல் கான்று வான்றழை புகையினல்கிப்
பொன்னென
விணர்க ளீன்று மரகதம் புரையக் காய்த்துச்
செந்நிற
மணிக ளென்னத் தீப்பழங் கொண்டு கார்போற்
றுன்னுபல்
கவடு போக்கிச் சூதமா யவுண னின்றான்.
அஷ்ட
நாகங்களும் திக்கஜங்களும் சந்திர சூரியரும் எல்லாவுயிர்களும் அஞ்சி ஓலமிட்டன. அந்த
மாமரம் சிறிது அசைந்தபொழுது எல்லா வுலகங்களும் அசைந்தன; குலகிரிகள் பொடிபட்டன. உலகத்தைத்
தாங்கும் கூர்மமும் ஆதிசேடனும் புரண்டனர். நட்சத்திரங்கள் உதிர்ந்தன, அண்டங்களெல்லாந் தகர்ந்தன. நாரணனுலகும்
நான்முகனுலகும் அழிந்தன. தேவர்களெல்லாம் வெருவி கயிலையை நாடி இரிந்தனர். அக்கால்
அறுமுகப் பெருமான் விடுத்த அயிற்படை, ஆயிரங்கோடி
யண்டத்து அக்கினியும் ஒன்று சேர்ந்தாற்போல் பேரனல் வடிவு தாங்கிச் சென்று,
தேயுவி
னெடுத்த வண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்
தாயிரகோடி
யண்டத் தங்கியு மொன்றிற் றென்ன
மீயுயர்ந் தொழுகி யான்றோர் வெருவருந் தோற்றங் கொண்டு
நாயகன்
றனது தெய்வப் படைக்கல நடந்த தன்றே.
மூதண்ட
முகடுவரை வளர்ந்தோங்கி கிளைகளை யசைத்து உலகங்களை யெல்லாம் அசைத்தழிக்கின்ற
மாமரத்தை இரு கூறாகப் பிளந்தது.
விடம்பிடித்
தமலன் செங்கண் வெங்கன லுறுத்திப் பாணி
யிடம்பிடித் திட்ட தீயிற் றோய்த்துமுன் னியற்றி யன்ன
வுடம்பிடித் தெய்வ மிவ்வா றுருகெழு செலவி னேகி
மடம் பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே.
யிடம்பிடித் திட்ட தீயிற் றோய்த்துமுன் னியற்றி யன்ன
வுடம்பிடித் தெய்வ மிவ்வா றுருகெழு செலவி னேகி
மடம் பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே.
“கவடு கோத் தெழும்
உவரி மாத்திறல்
காய் வேல் பாடேன்” --- திருப்புகழ்.
காய் வேல் பாடேன்” --- திருப்புகழ்.
கருத்துரை
இறைவராகிய சிவபெருமான் வழிபாடு செய்த
ஞான சொரூபியே! கிரவுஞ்ச மலையும் மாமரமும் அழியும்படி வேலாயுதத்தை விடுத்த
அதிதீரரே! அடியார்களது இன்னல்களை அகற்றுபவரே! செந்திலாண்டவனே! ஜீவான்மாவின்
துன்பம் நீங்குமாறு பரமான்மாவாகிய தேவரீரது திருமார்பிலணிந்துள்ள மலர்மாலையைத்
தந்து காத்தருள வரமாட்டீரோ?