திருச்செந்தூர் - 0101. விந்ததின் ஊறி


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

விந்ததில் ஊறி (திருச்செந்தூர்)

பிறவிக் களை ஆறி, திருவடி நிழலில் இளைப்பாற

தந்தன தான தந்தன தான
     தந்தன தான ...... தனதான


விந்ததி னூறி வந்தது காயம்
     வெந்தது கோடி ...... யினிமேலோ

விண்டுவி டாம லுன்பத மேவு
     விஞ்சையர் போல ...... அடியேனும்

வந்துவி நாச முன்கலி தீர
     வண்சிவ ஞான ...... வடிவாகி

வன்பத மேறி யென்களை யாற
     வந்தருள் பாத ...... மலர்தாராய்

எந்தனு ளேக செஞ்சுட ராகி
     யென்கணி லாடு ...... தழல்வேணி

எந்தையர் தேடு மன்பர்ச காய
     ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா

சுந்தர ஞான மென்குற மாது
     தன்றிரு மார்பி ...... லணைவோனே

சுந்தர மான செந்திலில் மேவு
     கந்தசு ரேசர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


விந்து அதின் ஊறி வந்தது காயம்,
     வெந்தது கோடி, ...... இனிமேலோ

விண்டு விடாமல் உன்பதம் மேவு
     விஞ்சையர் போல, ...... அடியேனும்

வந்து, விநாச முன் கலி தீர,
     வண் சிவஞான ...... வடிவாகி,

வன் பதம் ஏறி, என் களை ஆற
     வந்து அருள், பாத ...... மலர்தாராய்.

எந்தன் உள் ஏக செஞ் சுடர் ஆகி,
     என் கணில் ஆடு, ...... தழல்வேணி

எந்தையர், தேடும் அன்பர் சகாயர்,
     எங்கள் சுவாமி ...... அருள்பாலா!

சுந்தர ஞான மென் குற மாது
     தன் திருமார்பில் ...... அணைவோனே!

சுந்தரம் ஆன செந்திலில் மேவு
     கந்த! சுர ஈசர் ...... பெருமாளே.

பதவுரை

      எந்தன் உள் --- அடியேனுடைய உள்ளத்துள்,

     ஏக செம் சுடர் ஆகி --- ஒப்பற்ற செழும் சோதியாக விளங்கி,

     என் கணில் ஆடு --- அடியேனுடைய கண்களில் ஆடல் புரிகின்ற,

     தழல் வேணி --- நெருப்பு நிறமான சடைமுடியையுடைய,

     எந்தையர் --- எமது பிதாவும்,

     தேடும் அன்பர் சகாயர் --- அன்பினால் தேடுகின்ற அடியவர்க்கு உதவுபவரும்,

     எங்கள் சுவாமி --- எமக்கு உடையவருமாகிய சிவபெருமான்,

     அருள்பாலா --- அருளிய திருக்குமாரரே!

      சுந்தர ஞான மென்குற மாது தன் --- அழகும், அறிவும், மென்மையும் உடைய வள்ளிப் பிராட்டியாரது,

     திருமார்பில் அணைவோனே --- திருமார்பில் தழுவுபவரே!

         சுந்தரம் ஆன செந்திலில் மேவு கந்த --- அழகிய திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள கந்தப் பெருமானே!

         சுர ஈசர் பெருமாளே --- தேவர் தலைவர்களுக்குப் பெருமையின் மிகுந்தவரே!

         விந்து அதின் ஊறி வந்தது காயம் --- சுக்கிலத்தில் ஊறி வந்தது உடம்பு,

     வெந்தது கோடி --- நெருப்பில் வெந்தது கோடிக்கணக்கானவை,

     இனி மேலோ --- இனியாவது,

     விண்டு விடாமல் --- உம்மைவிட்டு நீங்காமல் இருக்கும் பொருட்டு,

     உன் பதம் மேவும் விஞ்சையர் போல --- தேவரீருடைய திருவடியை விரும்புகின்ற புலவரைப் போலே,

     வந்து --- அடியேனும் நன்னெறிக்கு வந்து,

     விநாச முன் கலி தீர --- பெரிய அழிவும், பழைய வினையென்ற கேடும் நீங்கும்படி,

     வண் சிவஞான வடிவு ஆகி --- வளமையான ஞானத்தின் வடிவை அடைந்து,

     வன் பதம் ஏறி --- வலிமையான பதவியை அடைந்து,

     என் களை ஆற வந்து --- எனது பிறப்பாலாகிய களைப்புத் தீருமாறு அடியேன் முன் எழுந்தருளி

     அருள்பாத மலர் தாராய் --- திருவருள் மயமான உமது திருவடியைத் தந்தருளுவீர்.


பொழிப்புரை

         அடியேனுடைய உள்ளத்துள் ஒப்பற்ற செழுஞ் சோதியாய் விளங்கி, எனது கண்களிலும் நடனம் புரிகின்றவரும், பொன்போன்ற சடையை உடையவரும், எமது பிதாவும், தேடுகின்ற அடியவர்க்கு உதவுபவரும், எங்கள் சுவாமியுமாகிய சிவபெருமான் பெற்றருளிய குமாரரே!

         அழகும் அறிவும் மென்மையும் படைத்த வள்ளியம்மையின் திரு மார்பில் பொருந்துபவரே!

         அழகான திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமானே!

         தேவர் தலைவர்கட்கும் பெருமிதமானவரே!

         சுக்கிலத்தில் ஊறி வந்த சரீரம் நெருப்பில் வெந்து அழிந்தது எத்தனையோ கோடி முறை; இனியாவது உமது பற்றை விடாது, உமது பாதமலரை விரும்புகின்ற புலவர்களைப் போல் அடியேனும் நன்னெறிக்கு வந்து, அழிவும் முன்வினையும் தீரும் பொருட்டு, வளமையான ஞானவடிவு பெற்று, நிலைத்த பதவியை அடைந்து, எனது பிறப்பிறப்பாலாகிய களைப்பு நீங்குமாறு, அடியேன் முன்வந்து அருள்மயமான பதமலரைத் தந்து அருளுவீராக.

விரிவுரை

விந்து அதின் ஊறி வந்தது காயம் வெந்தது கோடி ---

ஆடவனுடைய சுக்கிலத்திலே ஊறி வந்தது இந்த உடம்பு.  தீயினுள் எரிந்தது எத்தனையோ கோடி முறை. தகிக்கப்படுவதால் உடம்பு தேகம் எனப்பட்டது. வேளைத் தவறாமல் உயர்ந்த உணவை உண்டு, உண்டு வளர்ந்த அந்த அரிய உடம்பு, முடிவில் நெருப்புக்கு இரையாகின்றது. இவ்வாறு வெந்து அழியக்கூடிய இந்த வீணுடலை ஓம்பும் பொருட்டு, சூதும், வாதும், பொய்யும், களவும் புரிந்து தடுமாறுகின்றனர் மக்கள்.

விண்டுவிடாமல் ---

இறைவனுடைய நினைவிலிருந்து விலகாமல் இருக்கவேண்டும். இடையறாத தியானத்தை இது குறிக்கின்றது.

உன்பத மேவு விஞ்சையர் ---

விஞ்சையர்-புலவர்; விஞ்சை-வித்தை. வித்தையை யுடையவன் வித்துவான். புலவர்கள் இறைவன் திருவடியையே விரும்புவார்கள். அதுவே, அறிவு பெற்றதற்குப் பயன்.

வந்து ---

அருள் நெறிக்கு வந்து ஆன்மாக்கள் உய்யவேண்டும். அவாய் நிலையாக அருள் நெறியைக் குறிக்கின்றது.

விநாச முன்கலி தீர ---

விநாசம்-மிகுந்த அறிவு. வி என்ற உபசர்க்கம் மிகுதியைத் தெரிவிக்கின்றது. விஞ்ஞானம் என்பது போல். முன்கலி-முற்பிறப்பில் செய்த தீவினைக் காரணமாக வரும் கேடு. பெரிய அழிவையும், வினைக் கேட்டையும் தீர்க்கும்பொருட்டு, ஆன்மா அறிவு வடிவாக வேண்டும்.

வன்பதமேறி ---

வலிய நிலைத்த பதவியை அடைதல்.
   
என் களை ஆற ---

இறப்பதும் பிறப்பதுமாக ஓயாது மாறி மாறி வருகின்றதனால் ஆன்மா களைத்து விடுகின்றது. அந்தப் பிறவியின் களைப்புத் தீரும் பொருட்டு இறைவனுடைய திருவடி நிழலை அடைந்து ஆன்மா இன்புறுதல் வேண்டும்.

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்”     ---  திருவாசகம்.

மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடு உற்றேன்.”   ---  திருவாசகம்.

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
     அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ?
     பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
     மூடனாய் அடியேனும் அறிந்திலேன்,
இன்னும் எத்தனை எத்தனை சன்மமோ?
     என்செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே.      --- பட்டினத்தார்.

எத்தனை ஊர், எத்தனை வீடு, எத்தனை தாய், பெற்றவர்கள்
எத்தனை பேர்இட்டு அழைக்க, ஏன்என்றேன், --- நித்தம்
எனக்குக் களை ஆற்றாய், ஏகம்பா, கம்பா,
உனக்குத் திருவிளை யாட்டோ?.                 --- பட்டினத்தார்.

மண்ணும் தணல்ஆற, வானும் புகைஆற,
எண்ணரிய தாயும் இளைப்பாற, - பண்ணும்அயன்
கைஆறவும், அடியேன் கால்ஆறவும், கண்பார்,
ஐயா, திரு ஐயாறா.                                   --- பட்டினத்தார்.

எந்தன் உள் ஏக செஞ்சுடர் ஆகி ---

மாலயனாதி வானவர்க்கும் எட்டாத இறைவன் அருணகிரிநாதருடைய உள்ளத்துள் ஒப்பற்ற ஒளிவடிவாகி நின்று அருள்புரிகின்றார். இதனால் அவருடைய தவவலிமை வெளிப்படுகின்றது.

என் கணில் ஆடு ---

இறைவன் அருணகிரிநாதருடைய கண்களில் விளங்கி நடம்புரிகின்றாராம். உத்தம ஞானிகள் கண்ணைவிட்டு இறைவனுடைய அருட்காட்சி விலகாது.

கனத்தகத்தான் கயிலாயத் துச்சியுள்ளான்
 காளத்தியான் அவன் என் கண்ணுளானே”          ---  அப்பர்.

ஆறு திருஎழுத்தும் கூறு நிலைகண்டு
 நின்தாள் புகழுநர் கண்ணுட் பொலிந்தோய்”    ---  கல்லாடம்.

வரங்கொண்ட உமைமுலைப்பால் மணங்கொண்ட செவ்வாயும்த,
பரங்கொண்ட களிமயிலும், பன்னிரண்டு கண்மலரும்,
சிரங்கொண்ட மறைஇறைஞ்சும் சேவடியும், செந்தூரன்
கரங்கொண்ட வேலும் என்தன் கண்ணைவிட்டு நீங்காவே.
                                                                     ---  திருச்செந்திற்கலம்பகம்.

கற்புடைய மாதர்கட்கும் கணவனார் கண்ணிலே நின்று காட்சித் தருவர். ஒரு பெண்மணியைத் தோழி நோக்கி, “நீ ஏன் கண்ணுக்கு மை தீட்டுவதில்லை” என்று வினவினாள்.

என் கணவனார் கண்களில் இருக்கின்றார். மை தீட்டினால் அவர் மறைவார் என்று மை தீட்டேன்” என்றாள்.

கண்உள்ளார் காத லவர்ஆக, கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.             ---  திருக்குறள்.

அனுமான் சீதையை அசோக வனத்தில் பார்த்து விட்டு, ஸ்ரீராமரிடம்போய் “எம்பெருமானே! என் அன்னை ஜானகியின் கண்ணிலும் நீ இருக்கின்றாய்; அவருடைய கருத்திலும் நீ இருக்கின்றாய்; அவர் வாக்கிலும் நீ இருக்கின்றாய்” என்று கூறுகின்றார்.

கண்ணிலும் உளைநீ தையல் கருத்திலும் உளைநீ வாயின்
 எண்ணிலும் உளைநீ”

தேடும் அன்பர் சகாயர் ---

ஆண்டவனையே சதா தேடித் திரிகின்ற அடியார்க்கு உதவி புரிகின்றான் இறைவன்.

எங்கள் சுவாமி ---

சுவாமி-உடையவர். எமக்கே சொந்தமான தெய்வம் என்கின்றார்.

சுந்தரஞான மென் குறமாது ---

வள்ளியம்மையார் முற்பிறப்பில் திருமாலின்  கண்மலரில் தோன்றிய சுந்தர வல்லி என்பதை இது குறிக்கின்றது. மேலும் அவள் ஞானாம்பிகை. ’ஞானகுற மாதை’ என்கின்றார் இராமேசுரத் திருப்புகழில்.

கருத்துரை

         சிவகுமாரரே! வள்ளி மணவாளரே! செந்திலாண்டவரே! என் பிறவிக் களையாறத் திருவடிமலரைத் தருவீர்.


No comments:

Post a Comment

சத்தியம் வத, தர்மம் சர.

  வாய்மையே பேசு - அறத்தைச் செய் -----        சத்யம் வத ;  தர்மம் சர ;  என்பவை வேதவாக்கியங்கள். வாய்மையாக ஒழுகுவதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்...