அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விதி போலும் உந்து
(திருச்செந்தூர்)
முருகா!
மாதர் மயக்கில்
ஆழாமல்,
உனது திருவடியில் உய்ய அருள்.
தனதான
தந்த தனதான தந்த
தனதான தந்த ...... தனதான
விதிபோலு
முந்த விழியாலு மிந்து
நுதலாலு மொன்றி ...... யிளைஞோர்தம்
விரிவான
சிந்தை யுருவாகி நொந்து
விறல்வேறு சிந்தை ...... வினையாலே
இதமாகி
யின்ப மதுபோத வுண்டு
இனிதாளு மென்று ...... மொழிமாதர்
இருளாய
துன்ப மருள்மாயை வந்து
எனையீர்வ தென்றும் ...... ஒழியாதோ
மதிசூடி
யண்டர் பதிவாழ மண்டி
வருமால முண்டு ...... விடையேறி
மறவாத
சிந்தை யடியார்கள் பங்கில்
வருதேவ சம்பு ...... தருபாலா
அதிமாய
மொன்றி வருசூரர் பொன்ற
அயில்வேல்கொ டன்று ...... பொரும்வீரா
அழகான
செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவாயு கந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
விதிபோலும்
உந்து அ விழியாலும், இந்து
நுதலாலும் ஒன்றி, ...... இளைஞோர் தம்
விரிவான
சிந்தை உரு ஆகி நொந்து,
விறல் வேறு சிந்தை ...... வினையாலே,
இதம்ஆகி
இன்ப மதுபோத உண்டு,
இனிது ஆளும் என்று ...... மொழிமாதர்,
இருள்
ஆய துன்ப மருள் மாயை வந்து,
எனை ஈர்வது என்றும் ...... ஒழியாதோ?
மதிசூடி
அண்டர் பதிவாழ, மண்டி
வரும் ஆலம் உண்டு, ...... விடை ஏறி,
மறவாத
சிந்தை அடியார்கள் பங்கில்
வரு தேவ சம்பு ...... தருபாலா!
அதி
மாயம் ஒன்றி வருசூரர் பொன்ற
அயில் வேல் கொடு அன்று ...... பொரும்வீரா!
அழகான
செம்பொன் மயில் மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த ...... பெருமாளே.
பதவுரை
மதிசூடி --- பிறைச்சந்திரனைத் தரித்தவரும்,
அண்டர் பதி வாழ --- தேவர்களுடைய நகரம் வாழும் பொருட்டு,
மண்டி வரும் ஆலம் உண்டு --- நெருங்கிவந்த ஆலகால விடத்தை உண்டவரும்,
விடை ஏறி --- இடபத்தை வாகனமாகக் கொண்டவரும்
மறவாத சிந்தை அடியார்கள் பங்கில் வரும் --- திருவடியை
மறவாமல் நினைந்து உருகும் அடியார்களது பக்கத்தில் வருபவரும்,
தேவ --- ஒளிமயமானவரும்,
சம்பு --- சுக காரணரும் ஆகிய சிவபெருமான்,
தரு பாலா --- தந்த புதல்வரே!
அதி மாயம் ஒன்றி வரு சூரர் பொன்ற --- மிகுந்த
மாயங்களுடன் பொருந்தி வந்த சூராதியவுணர்கள் அழியுமாறு,
அயில் வேல் கொடு --- கூரிய வேலாயுதத்தைக் கொண்டு,
அன்று பொரும் வீரா --- அந்நாளில் போர் புரிந்த
வீரரே!
அழகான செம் பொன் மயில்மேல் அமர்ந்து --- அழகிய
சிவந்த பொன்னிறத்துடன் கூடிய மயில் வாகனத்தின் மீது எழுந்தருளி,
அலைவாய் உகந்த --- திருச்செந்தூரில் மகிழ்ந்து
வாழும்,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
விதி போலும் --- விதியைப் போலே,
உந்து அ விழியாலும் --- முற்பட்டுத் தொழில் புரியும்
அந்தக் கண்களாலும்,
இந்து நுதலாலும் --- சந்திரனைப் போன்ற நெற்றியினாலும்.
ஒன்றி --- ஒன்றுபட்டு,
இளைஞோர்தம் விரிவு ஆன சிந்தை உரு ஆகி ----இளைஞர்களுடைய
விரிந்த சிந்தையில் உருவமாகி நின்று,
நொந்து --- மனம் நொந்து,
விறல் வேறு சிந்தை வினையாலே --- தங்கள் சாகசத்
திறலால் மனம் வேறு செயல் வேறாகப் புரிந்து,
இதம் ஆகி இன்ப மதுபோத உண்டு --- இனிமையாக இன்பத்
தேனை நிரம்பவும் உண்டு,
இனிது ஆளும் என்று மொழி மாதர் --- இனிது என்னை
ஆட்கொள்ளும் என்று கூறுகின்ற பொது மகளிருடைய,
இருள் ஆய துன்பம் --- இருள் நிறைந்த துன்பமும்,
மருள் மாயை வந்து --- மயக்கத்தைத் தரும் மாயையும்
வந்து,
எனை ஈர்வது --- அடியேனை இழுக்கின்ற தன்மை,
என்றும் ஒழியாதோ --- எக் காலத்தும் நீங்காதோ?
பொழிப்புரை
பிறைச் சந்திரனை அணிந்தவரும், தேவர்களுடைய நகரம் வாழும் பொருட்டு
நெருங்கி வந்த ஆலால விடத்தை உண்டவரும், இடபவாகனத்தின்
மீது எழுந்தருளி வருபவரும், திருவடியை மறவாத
அடியார்களது அருகில் வருகின்றவரும்,
ஒளிமயம்
ஆனவரும், சுக காரணரும் ஆகிய
சிவமூர்த்தி தந்தருளிய புதல்வரே!
மிகுந்த மாயச் செயல்களுடன் கூடிவந்த சூராதி அவுணர்கள்
அழியுமாறு, கூரிய வேற்படையைக்
கொண்டு போர் புரிந்த வீரரே!
அழகிய சிவந்த பொன்னிறமாகிய மயிலின்மீது
அமர்ந்து, திருச்செந்தூரில்
மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்ற பெருமிதம் உடையவரே!
விதியைப்போல் முற்பட்டுத் தொழில்
புரிகின்ற அந்தக் கண்களாலும், சந்திரனைப் போன்ற
நெற்றியினாலும் ஒன்றுபட்டு, இளைஞர்களுடைய விரிந்த
சிந்தையில் உருவமாகித் தோன்றி நின்று, மனம்
நொந்து, தமது சாகசத் திறலால்
மனம்வேறு செயல் வேறாக இருந்து, இனிமையான இன்பத் தேனை
மிகவும் அருந்தி என்னை ஆளும் என்று கூறுகின்ற விலைமகளிருடைய இருள் மயமான துன்பமும், மதியை மயக்கும் மாயையும் வந்து எளியேனை
ஈர்க்கின்ற தன்மை எக்காலத்தும் நீங்க மாட்டாதோ?
விரிவுரை
விதி
போலும் உந்து அ விழியாலும் ---
விதிபோலும்
உந்து அ விழியாலும் எனப் பதப் பிரிவுசெய்து கொள்க.
முன்
செய்த ஊழ்வினை எவ்வாறு தவிராது தொழில் புரியுமோ அவ்வாறு விலைமகளிரது கண்களும்
முற்பட்டு மாய வினைகளைப் புரியும்.
இந்த
நுதலாலும்
---
இந்து
--- சந்திரன்.
நுதல்
--- நெற்றி.
எட்டாந்
திதியன்று தோன்றும் பாதி மதியைப் போல் நெற்றி வட்டமாகவும் வடிவாகவும் இருக்கும்.
அதனால் மகளிருடைய நெற்றியை மதிநுதல் என்று புலவர்கள் புகழ்ந்து புகலுவர்.
இளைஞோர்
தம் விரிவான சிந்தை உருவாகி ---
தம்மை
விரும்பி வருகின்ற இளைஞர்களுடைய உள்ளத்தில் மனோ சக்தியால் உருவமாகி நின்று விலைமகளிர்
காட்சித் தருவர். அவா மிகுதியினால் தாம் விரும்பிய உருவத்தை மிகுதியாக அழுந்திய
நினைவுடன் எண்ணுவதனால் அவ்வுருவம் அவர்களுடைய மனதில் தோன்றுவதுடன் சில சமயம்
புறக்கண்ணுக்கும் தோன்றும்.
இராவணன்
சீதையை மிகுதியாக நினைந்து நின்றனன். அதனால் அவன் கண்முன் சீதையின் உருவம் வந்து
நின்றது.
சூர்ப்பனகை
இராமர் மீது காதல்கொண்டு இராமரையே நினைந்து நின்றாள். அவள் முன் இராமர்
திருவுருவம் வந்து நின்றது.
இராவணன்
சூர்ப்பனகையை அழைத்து, “தங்காய்! இதோ பார்!
வாள்போன்ற கண்களும் மயில்போன்ற மேனியும் உடையவளாக வந்து நிற்கின்ற இவள்தானே சீதை?” என்று வினவினான்.
"பொய்ந்நின்ற
நெஞ்சில் கொடியாள் புகுந்தாளை நோக்கி,
நெய்ந்நின்ற
கூர்வாளவன் நேர்உற நோக்கு நங்காய்,
பைந்நின்ற
வாட்கண் மயில்நின்றுஎன வந்து,என்முன்னர்
இந்நின்றவள்
ஆம்கொல் இயம்பிய சீதை என்றான்".
சூர்ப்பனகை
கூறுவாள்: “அண்ணே! இது சீதையன்று,
அதோ
பார்; தாமரைக் கண்கள்; முழந்தாளைக் கடந்த திருக்கரங்கள்; அழகிய அகன்ற திருமார்பு; அஞ்சன மைக் குன்றம் போன்ற திருமேனி; ஆ! இதோ நிற்கின்றவன் அந்த இராமன்; வல் வில்லுடன் நிற்கின்றான். என்ன அழகு”
என்றாள்.
"செந்தாமரைக்
கண்ணொடும் செங்கனி வாயினோடும்
சந்தார்
தடந்தோளொடும் தாழ்தடக் கைகளோடும்
அந்தார்
அகலத்தொடும் அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான்
இவனாகும் அவ்வல்வில் இராமன் என்றான்".
அங்கே
இராமரும் இல்லை; சீதையுமில்லை; அவர்களுடைய அழுந்திய நினைவின்
முதிர்ச்சியால் இராவணனுக்குச் சீதையுருவமும், சூர்ப்பனகைக்கு இராமர் உருவமும்
தோன்றிக் காட்சியளித்தன. அதுபோல் காமுகர்க்குத் தாம் விரும்பிய பெண்ணுருவந்
தோன்றும்.
விறல்
வேறு சிந்தை வினையாலே ---
சிந்தை
வேறு வினை வேறு எனப் பொது மகளிர்பால் நிகழும். அதாவது மனம் வேறு செயல் வேறாக
நிற்பர். அதனால் அவர்கள் இருமனப் பெண்டிர் எனப்படுவர்.
“இருமனப் பெண்டிரும்
கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு” --- திருக்குறள்.
மனதைப்
பிறிதோரிடத்தில் வைத்துக்கொண்டு மிக்க அன்புள்ளார் போல் நடிக்கும் விறல்
படைத்தவர்கள்.
இதம்
ஆகி இன்ப மது போத உண்டு இனிது ஆளும் என்று மொழிமாதர் ---
அம்மகளிர்
தம்மை விரும்பிய ஆடவரின் புன்னகை புரிந்து, “இனிமையாக இன்பத் தேனைப் பருகி என்னை
இனிது ஆட்கொள்ளும்” என்று மிகவும் சுவைபடக் கூறிக் கொஞ்சுவர். அவர் உரை
கரும்புபோல் இருப்பினும் உள்ளம் இரும்புபோல் கடினமாக இருக்கும்.
மாரீசனாகிய
மான் இராமரை அலக்கழித்துச் சென்ற இடத்தில் கம்பநாடர் அம்மான் சென்றது பொதுமகளிர்
மனம்போல் என்று கூறுகின்றனர்.
“,,,,,,,,,நிதி வழி நேயம் நீட்டும்
மன்றலங் கோதைமாதர் மனம் எனப் போயிற்றம்மா”
இருளாய
துன்பம்
---
பொருளை
இன்னதென்று அறியவிடாது மயக்கி இடர்ப் படுத்துவது இருள். இருளில் கிடந்தார் ஒரு
செயலுஞ் செய்யமுடியாது பெரும் வேதனையுறுவர்.
அதுபோல
ஆசையால் வரும் மயக்க இருளும் நல்வினை தீவினை என்ற விளக்கத்தை மறைக்கும். புண்ணியச்
செயல் கசக்குமாறும், பாவச்செயல்
இனிக்குமாறுஞ் செய்யும். அதனால் பெருந் துன்பம் நேரும்.
மருள்
மாயை வந்து
---
மயக்கத்தைப்
புரியும் மாயையும் வந்து சூழும். மாயையில் நின்று மயங்குவோர் பரகதி காணார்.
எனை
ஈர்வது என்றும் ஒழியாதோ ---
ஈர்வது
--- ஈர்த்தல் --- இழுத்தல்.
“ஈர்த்து என்னை ஆட்கொண்ட
எந்தை பெருமானே” --- திருவாசகம்.
“மகளிரது மாய மயக்கம்
வந்து அடியேனை ஈர்த்துத் தன் வசமாக்கித் துன்பம் புரியும். இந்த இடர்ப்பாடு என்னை
விட்டு என்று நீங்குமோ? இறைவனே! இந்த இடரினின்றும் சிறியேன் விடுபட்டு உய்ய
அருள்புரிவீர்” என்று அடிகளார் மகமாயைகளைந்திட வல்ல பிரானாகிய முருகனை
வேண்டுகின்றனர்.
ஈர்வது
என்ற சொல்லுக்கு பிளத்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.
மதிசூடி ---
தட்சனுடைய
சாபத்தினால் தேய்ந்த சந்திரன் எங்கும் அடைக்கலம் இன்றி அரனார்பால் வந்து அடைக்கலம்
புகுந்தனன்; கருணை நிறைந்த
கண்ணுதற் கடவுள் தேய்ந்த மதியை எடுத்துத் தமது சென்னியிற் சூடியருள் பாலித்தனர்.
அண்டர்
பதி வாழ மண்டி வரும் ஆலம் உண்டு ---
பாற்கடலில்
பிறந்து அமரலோகத்தை யழிக்க வந்த ஆலாகலவிடத்தை இறைவன் உண்டு அமரர்கட்கு அமிர்தம்
வழங்கி அருள் பாலித்தனர். இல்லையேல் அமரர் அனைவர்களும் அன்றே பொன்றி அந்நாடு
அழிந்திருக்கும்,
மறவாத
சிந்தை அடியார்கள் ---
அடியவர்கள்
எப்போதும் இறைவன் திருவடியை மறவாதிருக்கும் பெற்றியுடையவர்கள். இந்த நிலையை
அவர்கள் ஆண்டவனிடமும் வேண்டிப் பெறுவார்கள். “மீண்டும் பிறப்புண்டேல் உன்னை
என்றும் மறவாமை வேண்டும்” என்று வேண்டுகின்றார் காரைக்காலம்மையார். “புழுவாய்ப்
பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாதிருக்க வரந்தரல் வேண்டும்” என்கிறார்
அப்பர்.
எழுவகைப்
பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
எய்துக, பிறப்பில் இனிநான்
எய்தாமை
எய்துகினும் எய்திடுக, இருமையினும்
இன்பம் எய்தினும் எய்துக,
வழுவகைத்
துன்பமே வந்திடினும் வருக,
மிகுவாழ்வு வந்திடினும் வருக,
வறுமை
வருகினும் வருக, மதிவரினும் வருக, அவ
மதிவரினும் வருக, உயர்வோடு
இழிவகைத்து
உலகின் மற்று எதுவரினும் வருக, அலது
எது போகினும் போக, நின்
இணைஅடிகள்
மறவாத மனம் ஒன்று மாத்திரம்
எனக்கு அடைதல் வேண்டும் அரசே,
கழிவகைப்
பவரோகம் நீக்கும் நல்அருள் என்னும்
கதிமருந்து உதவு நிதியே
கனகஅம்
பலநாத கருணைஅம் கணபோத
கமலகுஞ் சிதபாதனே.
பெருமானே!
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற இந்த ஏழுவகைப் பிறவிகளில்
எந்தப் பிறவியிலேனும் அடியேன் பிறக்கத் தயார். அது பற்றிச் சிறியேனுக்குக்
கவலையில்லை.
ஒருவேளை
பிறவாமை வந்தாலும் வரட்டும். இம்மையிலும் மறுமையில் இன்பமே வருவதேனும் வரட்டும்.
அல்லது துன்பமே வருவதாயினும் சரி;
அதுபற்றியும்
அடியேனுக்குக் கவலையில்லை.
சிறந்த
வாழ்வு வந்தாலும் வரட்டும்; பொல்லாத வறுமை
வருவதாயினும் நன்றே;
எல்லோரும்
என்னை நன்கு மதிப்பதாயினும் மதிக்கட்டும்; அல்லது சென்ற சென்ற இடமெல்லாம் கல்லை
விட்டு எறிந்து கருப்புக்கொடி காட்டி `வராதே!
திரும்பிப்போ’ என்று அவமதி புரிந்தாலும் புரியட்டும்.
உயர்வும்
தாழ்வும் கலந்துள்ள இந்த உலகிலே மற்று எது வந்தாலும் வரட்டும்; எது போனாலும் போகட்டும்.
இறைவனே!
எனக்கு இவைகளால் யாதும் கவலையில்லை.
ஒரே
ஒரு வரம் உன் பால் யாசிக்கின்றேன்.
உனது
இரண்டு சரணாரவிந்தங்களையும் சிறியேன் மறவாமல் இருக்கின்ற மனம் ஒன்றுமட்டும்
வேண்டும். அந்த வரத்தை வழங்கியருளும்” என்று வடலூர் வள்ளல் வேண்டுகின்றார். என்ன
அழகிய வரம்?
நாரதர் ஒரு சமயம் முருகனை வேண்டித் தவம்
புரிந்தனர். முருகவேள் தோன்றி,
“என்ன
வரம்வேண்டும்?” என்று
கேட்டருளினார். நாரதர், “ஐயனே! உன் திருவடியை
மறவாத மனம் வேண்டும்” என்றார். முருகன் அந்த வரத்தை நல்கி விட்டு, “இன்னும் ஏதாவது வரங்கேள்; தருகிறேன்” என்றார். நாரதர் “பெருமானே!
இன்னொரு வரத்தைக் கேட்கின்ற கெட்ட புத்தி வராமல் இருக்க வேண்டும்” என்று கேட்டார்.
அடியார்கள்
பங்கில் வரு தேவ சம்பு ---
அடியார்களுடைய
அருகில் இறைவன் வந்து அவர்கள் சிந்தையில் நினைந்த திறங்களை யெல்லாம் வழங்கி
ஆட்கொள்ளுவான்.
தேவன்
--- ஒளியுருவினன். சம்பு --- சுககாரணன்.
அதிமாயம்
ஒன்றி வருசூரர் ---
சூராதியவுணர்கள்
பலப்பல மாயவடிவங்களைக் கொண்டு போர் புரிந்தார்கள். மலையாகவும் கடலாகவும்
இருளாகவும் கனலாகவும் இன்னும் பல்வேறு வடிவங்களைத் தாங்கிப் போர் புரிந்த அவர்களை
கந்தவேள் வேற்படையால் அழித்தருளினார்.
அழகான
செம்பொன் மயில் மீது ---
பறவைகளில்
மயில் மிகுந்த அழகுடையது. பொன் வண்ணமான நிறத்துடன் விளங்குவது.
“செம்பொன்மயில் மீதிலே
எப்போது... வருவாயே”
--- (முந்துதமிழ்)
திருப்புகழ்.
அலைவாய்
:-
கடல்
அலைவீசும் இடத்தில் விளங்குவதனால் திருச்செந்தூருக்கு “அலைவாய்” என்ற பேர்
அமைந்தது. அது இரண்டாவது படை வீடு.
சுவாதிட்டானத் தலம்.
கருத்துரை
சிவகுமாரரே, சூர சங்காரரே, செந்தில் ஆண்டவரே, மாதர் மயக்கில் இருந்து விடுபட்டு
உய்யுமாறு அருள் புரிவீர்.
No comments:
Post a Comment