அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வரியார் கருங்கண்
(திருச்செந்தூர்)
பாசபந்தத்தினால் மெலியாமல், சரணாரவிந்தத்தில் மகிழ
தனனா
தனந்த ...... தனதான
வரியார்
கருங்கண் ...... மடமாதர்
மகவா
சைதொந்த ...... மதுவாகி
இருபோ
துநைந்து ...... மெலியாதே
இருதா
ளினன்பு ...... தருவாயே
பரிபா
லனஞ்செய் ...... தருள்வோனே
பரமே
சுரன்ற ...... னருள்பாலா
அரிகே
சவன்றன் ...... மருகோனே
அலைவா
யமர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வரி
ஆர் கருங்கண் ...... மடமாதர்
மகவு
ஆசை தொந்தம் ...... அது ஆகி,
இருபோது
நைந்து ...... மெலியாதே,
இரு
தாளின் அன்பு ...... தருவாயே.
பரிபாலனம்
செய்து ...... அருள்வோனே!
பரம
ஈசுரன் தன் ...... அருள்பாலா!
அரி
கேசவன் தன் ...... மருகோனே!
அலைவாய்
அமர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
பரிபாலனம் செய்து அருள்வோனே ---
உலகங்களை எல்லாம் காத்தருள் புரிகின்றவரே!
பரம ஈசுவரன் தன் அருள் பாலா --- மேலான
தலைவராகிய பெருமானுடைய திருக்குமாரரே!
அரி கேசவன் தன் மருகோனே --- பாவத்தை
நீக்குபவரும் கேசி என்ற அரக்கனைக் கொன்றவருமாகிய நாராயணமூாத்தியின் திருமருகரே!
அலைவாய் அமர்ந்த பெருமாளே ---
திருச்செந்தூரில் விரும்பி எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!
வரி ஆர் கருங்கண் மடமாதர் ---
வரிகளையுடைய கரிய கண்களும் மடமையும் உடைய பெண்களின் மீதும்,
மகவு --- குழந்தைகளின் மீதும்,
ஆசை தொந்தம் அது ஆகி --- ஆசை வைத்து
அவர்களுடன் உறவுடையவனாகி,
இரு போதும் நைந்து --- இரவும் பகலும் உள்ளம்
வருந்தி,
மெலியாதே --- மெலிந்து போகாவண்ணம்,
இரு தாளில் அன்பு தருவாயே --- தேவரீருடைய
இரண்டு திருவடிகளின் மீது உண்டாகும் அன்பைத் தந்தருள்வீர்.
பொழிப்புரை
எல்லா உலகங்களையும் காத்தருள்பவரே!
பெருந்தலைவராகிய சிவமூர்த்தியின்
திருக்குமாரரே!
பாவநாசகரும், கேசியைக் கொன்றவருமாகிய திருமால்
மருகரே!
திருச்செந்தூரில் விரும்பி எழுந்தருளியுள்ள
பெருமிதம் உடையவரே!
வரிகளையுடைய கரிய கண்களும் மடமையும்
உடைய மனைவியர்மீதும், குழந்தைகள்மீதும் ஆசை
வைத்து, அவர்களுடன் உறவு
கொண்டு, இரவும் பகலும் உள்ளம்
நலிந்து, உடல் மெலிந்து, அடியேன் துன்புறாவண்ணம், தேவரீர் திருவடிகளில் வைக்கும் அன்பை
அருள்புரிவீர்.
விரிவுரை
வரியார்
கருங்கண்.................தொந்தமதுவாகி ---
மனைவி
மக்கள் மீது ஆசைகொண்டு அவர்களுடன் நேசம் வைத்து பாசபந்தமுடன் உழல்வர்.
“உலகபசுபாச தொந்த
மதுவான
உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர்
மலசல சுவாச சஞ்ச லமதாலென்
மதிநிலை கெடாம லுன்ற னருள்தாராய்” ---
திருப்புகழ்.
மனைவியிடத்தும்
மக்களிடத்தும் ஆசை வைக்கக் கூடாது. ஆனால் வெறுக்கவும் கூடாது. மனைவியிடம் அன்பும், மக்களிடம் கருணையும் இருக்க வேண்டும்.
ஆசை
வேறு; அன்பு வேறு.
பயன்
கருதி வைக்கும் பற்று ஆசை யெனப்படும்.
கடமைப்
பற்றி வைக்கும் பற்று அன்பு எனப்படும்.
தோன்றி
மறையும் உடம்புக்குச் சிறிது காலம் துணையாக நிற்பவர் மனைவி முதலியோர். உயிருக்கு
என்றென்றும் துணையாக நிற்பவர் இறைவர். ஆதலின் அவரைப் பற்றி நின்றாரே உய்வு
பெறுவர்.
“மனைமக்கள் சுற்றம் எனுமாயா
வலையைக் கடக்க அறியாதே,
வினையில் செருக்கி அடிநாயேன்
விழலுக்கு இறைத்து விடலாமோ” ---
திருப்புகழ்.
இருபோது
நைந்து மெலியாதே ---
இருபோது-இரவுபகல்; அன்றி இம்மை மறுமை எனினும் அமையும்.
மனைவி மக்களைக் குறித்து எண்ணி எண்ணி உள்ளம் நொந்து, உடல் மெலிவர். அப்படி மெலியாமல்
உயிரினும் இனியனாய், உயிர்க்குயிராய்
நின்று உறுதுணைபுரியும் உத்தமனாம் வித்தக வேலாயுதனைக் கருதி உய்வு பெறுவோமாக.
இருதாளினன்பு
தருவாயே
---
நான்
என்ற அகப்பற்று அற்ற இடம் ஒரு திருவடி. எனது என்ற புறப்பற்று அற்ற இடம் ஒரு
திருவடி. ஆன்மாக்கள் அத்திருவடிகள் இரண்டினையும் பற்றினால் மற்றப் பற்றுக்கள் தாமே
விலகும்-தூங்கினவன் கைப்பொருள் தானே நழுவுவது போல் என்க.
பரிபாலனஞ்
செய்தருள்வோனே
---
உலகங்களையெல்லாம்
பரம கருணையால் காக்கும் கடவுள் கந்தவேள். பரிபாலனம்-அரசாட்சி. தேவச் சொர்க்கச்
சக்கரவர்த்தியாதலின் அகிலாண்டங்களை யெல்லாம் ஆறுமுகத்தரசு ஆட்சி புரிகின்றனர்.
“காக்கக் கடவிய நீ
காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா.
பரமேசுரன் ---
ஈசுரன்-தலைவன்; பரம-பெரிய; மாபெருந்தலைவன்.
கருத்துரை
காக்கும் கடவுளே! அரனார் புதல்வரே!
மால்மருகரே! செந்தூர் மேவிய தேவ தேவரே! மனைமக்கள் என்ற பாசபந்தத்தினால் சிறியேன்
மெலியாமல் உமது சரணாவிந்தத்தின் மீது இடையறாது வளரும் அன்பைத் தருவீர்.
No comments:
Post a Comment