திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 176
"செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா
எறிக்கும்"எனும் சிறந்த வாய்மை
அஞ்சொல்வளத்
தமிழ்மாலை அதிசயமாம்
படிபாடி, அன்பு சூழ்ந்த
நெஞ்சுஉருக, பொழிபுனல்வார்
கண்இணையும்,
பரவியசொல் நிறைந்த வாயும்,
தஞ்செயல்இயல்
ஒழியாத திருப்பணியும்,
மாறாது சாரும் நாளில்.
பொழிப்புரை : `செஞ்சடைக்கற்றை
முற்றத்திள நிலாஎறிக்கும்` எனத் தொடங்கும் சிறப்புடைய வாய்மைச்
சொற்களால் ஆய தமிழ்ப்பதிகத்தை வியப்புறுமாறு பாடி, அன்பு கெழுமிய மனம் கரைந்து
உருகப்பெய்யும் மழை போன்ற நீர் பொழிகின்ற இரண்டு திருக்கண்களும், சிவபெருமானை
வணங்கும் பதிகச்சொல் நிறைந்த திருவாயும், தம் செயலில் நீங்காத திரு உழவாரத்
திருப்பணியும் கொண்டு மாறாமல் செய்துவரும் நாள்களில்.
குறிப்புரை : `செஞ்சடைக்
கற்றை` எனத்
தொடங்கும் திருநேரிசைத் திருப்பதிகத்தில், பாடல் தொறும் பெருமானின் ஆடற் சிறப்பை
வியந்து பாடிய அப்பர் பெருமான் திருக்கடைக்காப்பில்,
``மதியந்தோய் தில்லை தன்னுள் மல்குசிற் றம்பலத்தே
அதிசயம்
போல நின்று வனலெரி யாடு மாறே.`` (தி.4 ப.22 பா.11)
எனக்
கூறி நிறைவு செய்கின்றார். இதனையுளங் கொண்டே ஆசிரியர் சேக்கிழார், `அஞ்சொல்
வளத் தமிழ்மாலை அதிசயமாம்படி பாடி` என்றருளிச் செய்கின்றார்.
இப்பதியில்
இருந்தருளிய பொழுது பாடிய பதிகங்கள் மேலும் இரண்டுள்ளன.
1)
`பாளையுடை` (தி.4
ப.80
பா.1) எனத்
தொடங்கும் திருவிருத்தம்,
2) `மங்குல் மதிதவழும்` (தி.6
ப.2
பா.1) எனத்
தொடங்கும் புக்க திருத்தாண்டகம்.
பெ.
பு. பாடல் எண் : 177
கடையுகத்தில்
ஆழியின்மேல் மிதந்த,திருக்
கழுமலத்தின் இருந்த செங்கண்
விடைஉகைத்தார்
திருவருளால் வெற்புஅரையன்
பாவைதிரு முலைப்பா லோடும்
அடையநிறை
சிவம்பெருக வளர்ஞானம்
குழைத்து ஊட்ட அமுது செய்த
உடையமறைப்
பிள்ளையார் திருவார்த்தை,
அடியார்கள் உரைப்பக் கேட்டார்.
பொழிப்புரை : ஊழி முடிவில் பொங்கி எழும் கடல்
வெள்ளத்தில் மிதந்த திருக்கழுமலத்தில் (சீகாழியில்) வீற்றிருக்கின்ற ஆனேற்றை
ஊர்தியாய்க் கொண்ட தோணியப்பரின் திருவருளால், மலையரசனின் மகளாரான உமையம்மையார், திருமுலைப்பாலுடனே
நிறைகின்ற சிவம் பெருகுமாறு வளர்கின்ற ஞானத்தையும் குழைத்து ஊட்ட, அதை
உண்டருளிய ஆளுடைய பிள்ளையாரின் வரலாற்றை அடியவர் உரைப்பக் கேட்டார்.
பெ.
பு. பாடல் எண் : 178
ஆழிவிடம்
உண்டவரை, அம்மைதிரு
முலைஅமுதம் உண்ட போதே,
ஏழிசைவண்
தமிழ்மாலை இவன்எம்மான்
எனக்காட்டி இயம்ப வல்ல
காழிவரும்
பெருந்தகைசீர் கேட்டலுமே,
அதிசயமாம் காதல் கூர,
வாழிஅவர்
மலர்க்கழல்கள் வணங்குதற்கு,
மனத்துஎழுந்த விருப்பு வாய்ப்ப.
பொழிப்புரை : திருநிலைநாயகி அம்மையாரின் திருமுலைப்
பாலமுதத்தை ஞானத்துடன் உண்ட அப்பொழுதே, ஏழிசை பொருந்தும் வளமான தமிழ் மாலையால்
கடலில் தோன்றிய நஞ்சை உண்டருளிய சிவபெருமானை `எமது பெம்மான் இவன்` எனச்
சுட்டிக்காட்டிப் பாடியருள வல்ல, சீகாழியில் தோன்றியருளிய
பெருந்தகையாளரான ஞானசம்பந்தப் பெருமானின் சிறப்புகளைக் கேட்டவுடனே, வியத்தகு
உணர்வுடன் கூடிய காதலால், வாழ்வு அளிக்கும் அவருடைய மலர் போன்ற
திருவடிகளை வணங்குதற்குத் தம் உள்ளத்தில் எழுந்த விருப்பம் பொருந்த,
பெ.
பு. பாடல் எண் : 179
அப்பொழுதே
அம்பலத்துள் ஆடுகின்ற
கழல்வணங்கி, அருள்முன் பெற்றுப்
பொய்ப்பிறவிப்
பிணிஓட்டுந் திருவீதி
புரண்டு,வலம் கொண்டு போந்தே,
எப்புவனங்
களும்நிறைந்த திருப்பதியின்
எல்லையினை இறைஞ்சி ஏத்தி,
செப்பரிய
பெருமையினார் திருநாரை
யூர்பணிந்து பாடிச் செல்வார்.
பொழிப்புரை : அதுபொழுதே பொன்னம்பலத்தில் கூத்தாடும்
இறைவரின் திருவடியை வணங்கி அருளைப் பெற்றுக் கொண்டு, பொய்யான இப்பிறவி நோயைப் போக்கும்
இயல்பு கொண்ட தில்லையின் வீதியை நிலம் பொருந்தப் புரண்டு வலமாக வந்து, பின்
எவ்வுலகங்களிலும் நிறைவுடைய அப்பதியினது எல்லையை வணங்கிப் போற்றிச், சொல்வதற்கரிய
பெருமையுடைய சிவபெருமானின் திருநாரையூரைப் போய்ப் பணிந்து பாடி மேலே செல்வராய்.
பெ.
பு. பாடல் எண் : 180
தொண்டர்குழாம்
புடைசூழத் தொழுதகரத்
தொடுநீறு துதைந்த கோலம்,
கண்டவர்தம்
மனங்கசிந்து கரைந்துஉருகும்
கருணைபுறம் பொழிந்து காட்ட,
தெண்திரைவாய்க்
கல்மிதப்பில் உகைத்து ஏறும்
திருநாவுக் கரசர் தாமும்
வண்தமிழால்
எழுதுமறை மொழிந்தபிரான்
திருப்புகலி மருங்கு சார்ந்தார்.
பொழிப்புரை : அடியவர் கூட்டம் தம்மைச் சூழ்ந்துவர, வணங்கும்
கைகளுடன், திருநீற்றால்
நிறைவுற்ற திருக்கோலமானது கண்டவரின் உள்ளங்களையெல்லாம் கரைந்து உருகுமாறு அருள்
பொழிந்திட, தெளிவான அலைகளையுடைய கடலில் கல்லையே மிதவையாகக் கொண்டு ஊர்ந்து
கரை ஏறிய நாவுக்கரசர் பெருமானும், வளம் பொருந்திய தமிழால் எழுதப் பெறும்
தமிழ் மறையைக் கூறியருளிய திருஞானசம்பந்தப் பெருமானின் சீகாழிப் பதியின் அருகில்
வந்து சேர்ந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 181
நீண்டவரை
வில்லியார் வெஞ்சூலை
மடுத்துஅருளி, நேரே முன்னாள்
ஆண்டஅரசு, எழுந்தருளக்
கேட்டுஅருளி,
ஆளுடைய பிள்ளை யாரும்,
காண்தகைய
பெருவிருப்புக் கைம்மிக்க
திருவுள்ளக் கருத்தி னோடு
மூண்டஅருள்
மனத்துஅன்பர் புடைசூழ,
எழுந்துஅருளி முன்னே வந்தார்.
பொழிப்புரை : நீண்ட மேருமலையை வில்லாகக் கொண்ட
சிவபெருமான் கொடிய சூலைநோயைத் தந்தருளி நேரே ஆண்டருளிய நாவுக்கரசர் வருகின்றார்
என்ற செய்தியைக் கேட்டருளிய ஞானசம்பந்தரும், அவரைக் காண்டற்குப் பெருவிருப்பு மீதூர, அருள்
கொண்ட மனமுடைய அடியார்கள் பலரும் சூழ்ந்து வர, எழுந்தருளி அவர் முன்னர் வந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 182
தொழுதுஅணைவு
உற்று, ஆண்டஅரசு அன்புஉருகத்
தொண்டர் குழாத்து இடையே சென்று,
பழுதில்பெரும்
காதலுடன் அடிபணிய,
பணிந்தவர்தம் கரங்கள் பற்றி,
எழுதஅரிய
மலர்க்கையால் எடுத்து, இறைஞ்சி,
விடையின்மேல் வருவார் தம்மை
அழுதுஅழைத்துக்
கொண்டவர்தாம், "அப்பரே"
என, அவரும் "அடியேன்" என்றார்.
பொழிப்புரை : நாவரசரும் தொழுதவாறே அவரையடைந்து, சூழ்ந்து
நிற்கும் தொண்டர் கூட்டத்தின் இடையே சென்று, அன்பின் மிகுதியால் உள்ளம் உருக, குற்றம்
இல்லாத மீதூர்ந்த காதலுடன் காழிப்பிள்ளையாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்க, அங்ஙனம்
விழுந்து வணங்கிய அவர்தம் கைகளைப் பிடித்துக் கொண்டு, எழுதற்கு அரிய மலர் போன்ற தம்
திருக்கைகளால் எடுத்து, அவரைத் தாமும் வணங்கியவராய், ஆனேற்றை
ஊர்தியாகவுடைய சிவபெருமானை அழுது அழைத்துத் தம்முன் வெளிப்பட்டு வரக்கண்ட
ஞானசம்பந்தரும், `அப்பரே!` என்று கூறிட அவரும் `அடியேன்!` என்றார்.
பெ.
பு. பாடல் எண் : 183
அம்பிகைசெம்
பொற்கிண்ணத்து அமுதஞா
னம் கொடுப்ப, அழுகை தீர்ந்த
செம்பவள
வாய்ப்பிள்ளை, திருநாவுக்
கரசர், எனச் சிறந்த சீர்த்தி
எம்பெருமக்
களும்இயைந்த கூட்டத்தில்,
அரன்அடியார் இன்பம் எய்தி,
உம்பர்களும்
போற்றுஇசைப்பச் சிவம்பெருகும்
ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம்.
பொழிப்புரை : உமையம்மையார் செம்பொன் கிண்ணத்தில் ஞான
அமுதத்தை ஊட்ட, அதனால் அழுகை நீங்கிய பவளம் போலும் திருவாயினையுடைய
ஞானசம்பந்தரும், திருநாவுக்கரசு நாயனாரும் ஆகிய பெருஞ்சிறப்புடைய எம்
இருபெருமக்களும் சேர்ந்த இத்திருக் கூட்டத்தைக் காணும் பேற்றைப் பெற்றதால், சிவனடியார்கள்
இன்பம் அடைந்து, தேவர்களும் போற்றி வழிபடுமாறு உலகம் எல்லாம் சிவத்தைப்
பெருகுவிக்கும் `அரகர` என்ற ஒலியை நிறைத்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 184
"பிள்ளையார் கழல்வணங்கப்
பெற்றேன்"என்று
அரசு உவப்ப, பெருகு ஞான
வள்ளலார்
வாகீசர் தமைவணங்கப்
பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க,
உள்ளநிறை
காதலினால் ஒருவர்ஒரு-
வரில் கலந்த உண்மை யோடும்,
வெள்ளநீர்த்
திருத்தோணி வீற்றிருந்தார்
கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.
பொழிப்புரை : `ஆளுடைய
பிள்ளையாரின் திருவடிகளை வணங்கும் பேற்றைப் பெற்றேன்` என்று திருநாவுக்கரசு நாயனார்
மகிழ்ச்சியடைய, திருநாவுக்கரசு நாயனாரை வணங்கப் பெற்றதால் பெருகும்
பெருமகிழ்ச்சியை ஞானவள்ளலார் ஆகிய பிள்ளையார் அடைய, உள்ளத்தில் நிறைந்த ஆசையுடன் ஒருவர்
மற்றொருவர் உள்ளத்திற் கலந்த உண்மை நிலையோடும், வெள்ளப் பெருக்கில் மிதந்த
திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவரின் கழல் அணிந்த திருவடிகளை வணங்கும்
விருப்பம் மிக்கவராகி,
பெ.
பு. பாடல் எண் : 185
அருட்பெருகு
தனிக்கடலும், உலகுக்கு எல்லாம்
அன்புசெறி கடலும்ஆம், எனவும்
ஓங்கும்
பொருட்சமய
முதல்சைவ நெறிதான் பெற்ற
புண்ணியக்கண் இரண்டுஎனவும், புவனம்
உய்ய
இருட்கடு
உண் டவர்அருளும், உலகம் எல்லாம்
ஈன்றாள்தன் திருவருளும், எனவும்
கூடித்
தெருட்கலைஞா
னக்கன்றும், அரசும், சென்று
செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தார் அன்றே.
பொழிப்புரை : `அருளால்
பெருகி நிற்கும் ஒப்பில்லாத கடலும், உலகனைத்தும் அன்பினால் நிறைவதொரு கடலும், சேர்ந்தன
போலவும், உயர்ந்து
விளங்கும் பொருண்மையமைந்த சமயங்களில் முதன்மை பெற்று நிற்கும் சைவ நன்னெறியானது
பெற்ற புண்ணியக் கண்கள் இரண்டு எனவும், உலகம் உய்தற்காகக் கரிய நஞ்சினையுண்ட
சிவபெருமானது திருவருளும், உலகனைத்தையும் ஈன்ற அன்னையாரது
திருவருளும் ஒருங்கிருந்தாற் போலவும், விளங்கிய உயிர்கள் தெளிவடைதற்கேதுவாய
கலைஞானத்தையும் அதன் பயனாய சிவஞானத்தையும் ஒருங்கு பெற்ற பிள்ளையாரும், அரசும், பிள்ளையார்
இருந்தருளிய திருமாளிகையினின்றும் புறப்பட்டுச் சிவந்த சடையினையுடைய தேவர் தலைவராய
சிவபெருமானின் திருக்கோயிலை அடைந்தார்கள்.
குறிப்புரை : அருட்கடல் - பிள்ளையார், அன்புக்கடல்
- நாவரசர், அருள் என்னும் அன்பு ஈன் குழவி என்பதால் அன்பு தாயாகும்; அருள்
அதன் குழந்தையாகும். பிள்ளையார் அரசரை ஈண்டு அப்பரே என்றழைத்தற்கேற்ப அரசர்
பிள்ளையாரைப் பிள்ளாய் எனப் (தி.12 பு.28 பா.616) பின்னர் அழைக்க இருப்பதும் நினைவு
கூர்தல் தக்கதாம். ஆதலின் ஈண்டு அவ்விருவரையும் அருட்கடல் என்றும் அன்புக்கடல்
என்றும் அழைத்தார். அடுத்துப் புண்ணியக் கண் இரண்டு என்றார். `காகத்திரு
கண்ணிற்கு ஒன்றே மணி கலந்தாங்கு` (தி.8 திருக்கோவையார், 71) என்பதால்
காண்டலில் இரு கண்களும் ஒரு நோக்குடையவாகும். பெருமானைக் கண்டு மகிழ்தலிலும், சைவ
நன்னெறியைக் காத்தலிலும் இருவரும் ஒரு நோக்கினராதலை அவரவர் தம் வரலாற்றால்
அறியத்தகும். அடுத்து, இருட்கடுவுண்டவர் அருளும் உலகம் எல்லாம்
ஈன்றாள் தன் திருவருளும் எனக்குறிப்பிடு கின்றார். இறைவி இறைவனின் வேறல்லள். `அருளது
சத்தியாகும் அரன் தனக்கு` (சித்தியார், சூ.5 பா.9) என்னும் ஞான நூலும் ஆதலின் பிள்ளையாரும்
நாவரசரும் மெய்வடிவில் வேறாகத் தோன்றினும், உணர்வில் ஒன்றாவர் என்பது பெறப்படும். `இருவரே
மெய்வடிவில் ஏந்திழை நல்லார் ஒருவரே தம்மில் உயிர்` என வருவதும் காண்க. இவ்வாற்றான்
இம்மூவகை உவமைகளும், உள்ள நிறைகாதலினால் ஒருவர் ஒருவரிற்
கலந்து நிற்கும் உண்மையை விளக்கி நிற்பனவாதல் அறியலாம். வரலாற்றில் இவர்கள்
இருவரும் மும்முறை கூடுதற்கு ஏற்ப, மூவகை உவமைகள் அமைந்திருப்பதும் அறிந்து
மகிழ்தற்குரியதாம்.
பெ.
பு. பாடல் எண் : 186
பண்பயில்வண்டு
அறைசோலை சூழும் காழிப்
பரமர்திருக் கோபுரத்தைப் பணிந்து,உள்
புக்கு,
விண்பணிய
ஓங்குபெரு விமானம் தன்னை
வலங்கொண்டு, தொழுது,விழுந்து, எழுந்த எல்லைச்
சண்பைவரு
பிள்ளையார், "அப்பர் உங்கள்
தம்பிரா னாரைநீர் பாடீர்" என்னக்
கண்பயிலும்
புனல்பொழிய அரசும் வாய்மைக்
கலைபயிலும் மொழிபொழியக் கசிந்து பாடி.
பொழிப்புரை : இசை பாடுகின்ற வண்டுகள் ஒலிக்கின்ற
சோலைகள் சூழ்ந்த சீகாழியில் இறைவரின் திருக்கோபுரத்தை வணங்கி, உள்ளே
புகுந்து, வானமும்
பணியத் தக்கவாறு உயர்ந்து விளங்கும் விமானத்தை வலமாக வந்து வணங்கிக் கீழே விழுந்து
எழுந்தபோது, சீகாழிப்பதியில் தோன்றிய ஆளுடைய பிள்ளையார் `அப்பரே!
நீவிர் உங்கள் தம்பிரானரைப் பாடுங்கள்` என்று கூற நாவுக்கரசரும் பெருகிய நீர்
கண்களில் பொழிய, மெய்ப்பொருளாய திருவருள் நலம் பொருந்திட, மெய்த்திரு
மொழிகளை உள்ளம் உருகப் பாடி.
பெ.
பு. பாடல் எண் : 187
பெரியபெரு
மாட்டியுடன் தோணி மீது
பேணிவீற் றிருந்தருளும் பிரான்முன்
நின்று,
பரிவுறுசெந்
தமிழ்மாலை பத்தி யோடும்,
"பார்கொண்டு மூடி"எனும் பதிகம்
போற்றி,
அரியவகை
புறம்போந்து, பிள்ளை யார்தம்
திருமடத்தில் எழுந்தருளி, அமுது
செய்து,
மருவியநண்பு
உறுகேண்மை அற்றை நாள்போல்
வளர்ந்துஓங்க, உடன்பலநாள் வைகும் நாளில்.
பொழிப்புரை : உமையம்மையாருடன் திருத்தோணியில்
வீற்றிருக்கும் தோணியப்பரின் திருமுன்பு நின்று, அன்புகூரும் செந்தமிழ் மாலையாகப்
பத்திமை மிகப் `பார் கொண்டு மூடி` எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி, அங்கிருந்து
நீங்குதற்கரிய வகையால் வெளியில் வந்து, திருஞானசம்பந்தரின் திருமடத்தில்
இருந்து அமுது உண்டருளிப் பொருந்திய நண்புடன் கூடிய கேண்மையானது அன்று போலவே
என்றும் வளருமாறு உடனாகப் பல நாள்கள் இருந்த காலத்தில்.
குறிப்புரை : இறைவன் திருமுன்பு பாடியருளியது `பார்
கொண்டு மூடி` (தி.4 ப.82) எனத் தொடங்கும் திருவிருத்தப்
பதிகமாகும்.
பெ.
பு. பாடல் எண் : 188
அத்தன்மை
யினில்அரசும் பிள்ளை யாரும்
அளவளா வியமகிழ்ச்சி அளவி லாத
சித்தநெகிழ்ச்
சியினோடு செல்லும் நாளில்,
திருநாவுக் கரசர்திரு வுள்ளந் தன்னில்
மைத்தழையும்
மணிமிடற்றார் பொன்னி நாட்டு
மன்னியதா னங்கள்எல்லாம் வணங்கிப் போற்ற
மெய்த்துஎழுந்த
பெருங்காதல், பிள்ளை யார்க்கு
விளம்புதலும், அவரும்அது மேவி நேர்வார்.
பொழிப்புரை : அங்ஙனம் நாவரசரும் ஞானசம்பந்தரும்
ஒருவருடன் ஒருவர் உரையாடியதால் அடைந்த மகிழ்ச்சி அளவின்றிப் பெருக, மன
நெகிழ்ச்சியுடன் செல்லும் நாள்களில், நஞ்சு பொருந்திய அழகான கழுத்தையுடைய
சிவபெருமான், காவிரி பாயும் சோழநாட்டில் நிலை பெற இருந்தருளும் பதிகளை
எல்லாம் வணங்கிப் போற்றவேண்டும் எனும் உள்ளத்தெழுந்த பெருங்காதலை நாவரசர்
ஞானசம்பந்தருக்குக் கூறுதலும், அவரும் அதனை ஏற்பாராய்.
குறிப்புரை : இவர்கள் இருவரும் இப்பதியிலிருந்த
பொழுது அப்பர் பாடிய பிற பதிகங்கள்:
1. `படையார் மழு` (தி.4 ப.83) எனத் தொடங்கும் திருவிருத்தம்.
(இப்பதிகத்துள் இப்பாடல் ஒன்றே கிடைத்துள்ளது)
2. `மாதியன்று` (தி.5 ப.45) எனத் தொடங்கும் திருக்குறுந்தொகை.
திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்
4. 082
திருக்கழுமலம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பார்கொண்டு
மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதம் எல்லாம்
நால்அஞ்சு
புள்ளினம் ஏந்தின என்பர், நளிர்மதியம்
கால்கொண்ட
வண்கைச் சடைவிரித்து ஆடுங் கழுமலவர்க்கு
ஆள்அன்றி
மற்றும் உண்டோ, அந்தண்ஆழி அகல்இடமே.
பொழிப்புரை : இவ்வுலகினை ஊழிவெள்ளம் மூடி முழுகச்
செய்த காலத்தில் உன் பாதங்களை எல்லாம் இருபது பறவைகள் சுமந்தன என்று கூறுவர் .
குளிர்ந்த பிறை தங்குதலைக் கொண்டதாய், கங்கைக்குத் தங்குமிடம் வழங்கிய
வள்ளன்மையை உடைய சடையை விரித்துக்கொண்டு ஆடும் திருக்கழுமலத்துப் பெருமானே ! அழகிய
குளிர்ந்த கடலாற் சூழப்பட்ட உலகத்துயிர்கள் உனக்கு அடிமையாதல் அன்றி வேறாதலும்
உண்டோ ?
பாடல்
எண் : 2
கடைஆர்
கொடிநெடு மாடங்கள் எங்கும் கலந்துஇலங்க
உடையான், உடைதலை
மாலையும் சூடி, உகந்துஅருளி
விடைதான்
உடைய அவ் வேதியன் வாழும் கழுமலத்துள்,
அடைவார்
வினைகள் அவைஎள்க நாள்தொறும் ஆடுவரே.
பொழிப்புரை : முகப்பிலே கொடிகள் கட்டப்பட்ட பெரிய
மாடவீடுகள் வீதிகள் முழுதும் நெருக்கமாக அமைந்து விளங்க ,
எல்லா ஆன்மாக்களையும்
தனக்கு அடிமையாக உடைய வேதியன் ஆகிய சிவபெருமான் தலைமாலையைச் சூடிக்கொண்டு
மகிழ்ந்து காளை வாகனனாய்க் காட்சி வழங்கும் திருக்கழுமலத்தை அடையும் அடியவர்கள்
தங்கள் நல்வினை தீவினைகள் யாவும் அஞ்சி அகலப் பிறவிப்பிணி தீர்ந்தோம் என்று
நாடோறும் மகிழ்ந்து கூத்தாடுவர் .
பாடல்
எண் : 3
திரைவாய்ப்
பெருங்கடல் முத்தம் குவிப்ப முகந்துகொண்டு,
நுரைவாய்
நுளைச்சியர் ஓடிக் கழுமலத்துள் அழுந்து,
விரைவாய்
நறுமலர் சூடிய விண்ணவன் தன்அடிக்கே
வரையாப்
பரிசுஇவை நாள்தொறு நம்தமை ஆள்வனவே.
பொழிப்புரை : பெரிய கடல் தன் அலை வாயிலாக
முத்துக்களைக் கரையில் சேர்க்க நுரையோடுகரை சேர்ந்த அம் முத்துக்களை நெய்தல்
நிலமகளிர் முகந்து கொண்டு ஓட , அத்தகைய வளம் நிறைந்த கழுமலத்துள்
நிலையாக இருக்கும் , நறுமணம் கமழும் பூக்களைச் சூடிய
சிவபெருமானுடைய திருவடிகளைச் சூடி , விண்ணவனாகிய அவர் திருவடிக்கே இவை
நீக்கலாகாத பரிசுகளென அர்ப்பணிப்பர் . அத்திருவடிகள் நாடொறும் நம்மை ஆள்வனவாம் . (
நுளைச்சியர் முகந்து கொண்டோடிச் சூடி அர்ப்பணிக்கும் பரிசினவான திருவடிகள் நம்மை
ஆள்வன என முடிக்க.)
பாடல்
எண் : 4
விரிக்கும்
அரும்பதம் வேதங்கள் ஓதும் விழுமியநூல்
உரைக்கில்
அரும்பொருள் உள்ளுவர் கேட்கில், உலகம் முற்றும்
இரிக்கும்
பறையொடு பூதங்கள் பாடக் கழுமலவன்
நிருத்தம்
பழம்படி ஆடும் கழல்நம்மை ஆள்வனவே.
பொழிப்புரை : வேதங்களின் சொற்களால் விரித்துரைக்கப்
படுபவனாய் , மேம்பட்ட நூல்களாற் சிறப்பித்து ஓதப்படுபவனாய், சொற்களால்
மக்கள் விளக்கிச் சொல்லமுடியாத அரும் பொருளாய் , தன் பெருமையைக் கேட்பவர்
தியானிக்கத்தக்கவனாய் , உள்ள கழுமலப் பெருமான் தன் ஓசையால்
பலரையும் அச்சுறுத்தும் பறையின் ஒலியோடு பூதங்கள் பாடத் தான் பண்டு ஆடும் அந்த
வகையிலேயே ஆடுவதற்குப் பயன்படுத்தும் திருவடிகள் நம்மை அடிமையாக ஏற்பனவாகும் .
பாடல்
எண் : 5
சிந்தித்து
எழுமனமே, நினை யாமுன் கழுமலத்தைப்
பந்தித்த
வல்வினை தீர்க்கவல் லானை, பசுபதியை,
சந்தித்த
காலம் மறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு
முந்தித்
தொழுகழல் நாள்தொறும் நம்தமை ஆள்வனவே.
பொழிப்புரை : மனமே ! கழுமலத்தைத் தியானித்த அளவிலேயே
நம்மைக் கட்டியிருக்கும் கொடிய வினைகளைப் போக்கவல்லவனாய் ,
ஆன்மாக்களுக்குத்
தலைவனாய் உள்ள பெருமானைத் தரிசித்த அந்த நேரத்திலேயே வினையை நீக்கிவிடுவோம் என்று
உறுதியாக எண்ணிக்கொண்டிருக்கும் அடியவர்கள் முற்பட்டுத்தொழும் திருவடிகளே நம்மை
நாடோறும் அடிமையாக ஏற்பனவாகும் .
பாடல்
எண் : 6
நிலையும்
பெருமையும் நீதியும் சாலஅழகு உடைத்தாய்,
அலையும்
பெருவெள்ளத்து அன்று மிதந்த இத் தோணிபுரம்,
சிலையில்
திரிபுரம் மூன்றுஎரித்தார் தம் கழுமலவர்
அலரும்
கழல்அடி, நாள்தொறும் நம்தமை ஆள்வனவே.
பொழிப்புரை : என்றும் நிலைத்திருக்கும் உறுதியும் , அந்த
உறுதியைப் பெறுவதற்குரிய பெருமையும் , உறுதிக்கும் பெருமைக்கும் அடிப்படையான
அங்கு வாழும் நன்மக்களுடைய நேர்மையும், மிகவும் அழகுடையனவாக , எங்கும்
திரியும் அலைகளை உடைய ஊழிப் பெருவெள்ளத்தில் மிதந்த இத்தோணிபுரத்தில்
உகந்தருளியிருப்பவரும் , வில்லால் முப்புரங்களையும் தீயூட்டி
எரித்த பெருமானுமாம் அவருடைய மலர்ந்த , கழல்களை அணிந்த திருவடிகள் நாள்தோறும்
நம்மை அடிமையாக ஏற்பனவாகும் .
பாடல்
எண் : 7
முற்றிக்
கிடந்து முந்நீரின் மிதந்து, உடன் மொய்த்துஅமரர்
சுற்றிக்
கிடந்து தொழப்படு கின்றது, சூழ்அரவம்
தெற்றிக்
கிடந்துவெம் கொன்றளம் துன்றிவெண் திங்கள்சூடும்
கற்றைச்
சடைமுடி யார்க்குஇடம் ஆய கழுமலமே.
பொழிப்புரை : எம் பெருமானுடைய திருமேனியைச் சுற்றிப்
பாம்புகள் பின்னிக் கிடக்க , விரும்பத்தக்க கொன்றைமலர் பொருந்த , வெள்ளிய
பிறையைச்சூடும் கற்றையான சடையை உடைய எம்பெருமானுக்கு உறைவிடமாகிய
கழுமலத்திருத்தலம் எல்லா நலன்களும் நிரம்பப் பெற்றதாய் ஊழிப்பெருவெள்ளத்துள்
கடலில் மிதந்து தேவர்கள் கூட்டமாக வந்து வணங்கித் தொழப்படும் சிறப்புடையது .
கொன்றையும் துன்றி - பாடம் .
பாடல்
எண் : 8
உடலும்
உயிரும் ஒருவழிச் செல்லும் உலகத்து உள்ளே,
அடையும்
உனைவந்து அடைந்தார், அமரர் அடிஇணைக்கீழ்
நடையும்
விழவொடு நாள்தொறும் மல்கும் கழுமலத்துள்
விடையன்
தனிப்பதம், நாள்தொறும் நம்தமை ஆள்வனவே.
பொழிப்புரை : உடலும் அவ்வுடலைச் செலுத்தும் உயிரும்
உலகியல் பொருள்களிலேயே புறப்பற்றும் அகப்பற்றும் கொண்டு வாழ்க்கையை நடத்தும்
இவ்வுலகிலே , கூத்தும் திருவிழாக்களும் நாள்தோறும் மிகுதியாக நிகழும்
கழுமலத்துள், தேவர்கள் சென்று அடையத்தக்க சரணியன் ஆன உன்னை அணுகி உன்
திருவடிக்கீழ்ச் சரணாக மக்கள் அடைந்துள்ளனர் . அத்தகைய காளை வாகனனாகிய உன் ஒப்பற்ற
திருவடிகளே நாள்தோறும் நம்மை ஆள்வன .
பாடல்
எண் : 9
பரவைக்
கடல் நஞ்சம் உண்டதும் இல்லை,இப் பார்முழுதும்
நிரவிக்
கிடந்து தொழப்படு கின்றது நீண்டுஇருவர்
சிரமப்
படவந்து சார்ந்தார் கழல்அடி காண்பதற்கே,
அரவக்
கழல்அடி நாள்தொறும் நம்தமை ஆள்வனவே.
பொழிப்புரை : பரந்த கடலில் தோன்றிய நஞ்சினை உண்ணாமல்
கழுத்திலேயே இறுத்திவிட்டாய் . அந்நீலகண்டம் இவ்வுலகத்தார் எல்லோராலும் வரிசையாக
வணங்கித் தொழப்படுகின்றது . தீத்தம்பமாக நீண்ட வடிவெடுத்தாயாக , அத்தகைய
உன் திருவடிகளைக் காணத் தம் முயற்சியால் திருமாலும் பிரமனும் முயன்று , பின்
வழிபாட்டால் காண்பதற்கு வந்து சேர்ந்துள்ளனர் . அத்தகைய கழல்கள் ஒலிக்கும்
திருவடிகளே நாளும் நம்மை ஆள்வன .
பாடல்
எண் : 10
கரைஆர்
கடல்சூழ் இலங்கையர் கோன்தன் முடிசிதறத்
தொலையா
மலர்அடி ஊன்றலும், உள்ளம் விதிர்விதிர்த்துத்
தலையாய்க்
கிடந்து உயர்ந்தான்,தன் கழுமலம் காண்பதற்கே
அலையாப்
பரிசுஇவை, நாள்தொறும் நம்தமை ஆள்வனவே.
பொழிப்புரை : கரையை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை
மன்னனான இராவணனுடைய முடிகள் நெரியுமாறு , ஒருகாலத்தும் அழிவில்லாத மலர் போன்ற
திருவடி விரலை ஊன்றிய அளவில் அவன் உள்ளம் நடுநடுங்கித் தலை பத்தும் வீழ்ந்து
வணங்கிக் கிடக்குமாறு கயிலைமலைக்கண் உயர்ந்து விளங்கிய பெருமானுடைய
திருக்கழுமலத்தலத்தைத் தரிசிப்பதனால், பிறவிப் பிணியில் வருந்தாத தன்மையை
வழங்கும் அப்பெருமானுடைய திருவடிகளாகிய இவை நம்மை நாள்தோறும் அடிமையாக ஏற்பனவாகும்
.
திருச்சிற்றம்பலம்
4. 083
திருக்கழுமலம் திருவிருத்தம்
திருச்சிற்றமபலம்
பாடல்
எண் : 1
படையார்
மழுஒன்று பற்றிய கையன் பதிவினவில்,
கடையார்
கொடிநெடு மாடங்கள் ஓங்கும் கழுமலமாம்,
மடைவாய்க்
குருகுஇனம் பாளை விரிதொறும் வண்டுஇனங்கள்
பெடைவாய்
மதுஉண்டு பேராது இருக்கும் பெரும்பதியே.
பொழிப்புரை : படையாக ஒருமழு ஆயுதத்தைக் கையில் ஏந்திய
சிவபெருமானுடைய திருத்தலம் யாது என்று வினாவினால் , நகர்ப்புற வாயிலில் கொடிகள் உயர்ந்து
விளங்கும் நெடும் மாடங்களைக் கொண்டு விளங்கும் திருக்கழுமலமே அதுவாம் .
அப்பதியானது நீர்மடைகளிற் பூம்பாளை விரியுந் தோறும் அவற்றிற் சொரியுந் தேனைப் பெண்வண்டுகள்
முன்னதாக உண்ணவிட்டு அவற்றின் கடைவாயிற் சொட்டுந் தேனை ஆண் வண்கள் அருந்திக்
கொண்டு பிரியாதிருக்கும் பெரும்பதியுமாம் .
திருச்சிற்றமபலம்
5.
045 திருத்தோணிபுரம்
திருக்குறந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மாதுஇ
யன்று மனைக்குஇரு என்றக்கால்,
நீதி
தான்சொல நீஎனக்கு ஆர்எனும்,
சோதி
ஆர்தரு தோணி புரவர்க்குத்
தாதி
யாவன்நான், என்னும்என் தையலே.
பொழிப்புரை : சிவபெருமான்மேற் காதல் மிகுந்து , ` மனைக்
கண் இரு ` என்று
நான் கூறியபோது , ` எனக்கு நீதி சொல்ல நீ என்ன உறவுடையை ?` என்று
சொல்வதோடு , ` ஒளி நிறைந்த தோணிபுரத்து இறைவர்க்குத் தாதியாக நான் ஆவேன் ` என்றும்
கூறுகின்றனள் என் மகள் .
பாடல்
எண் : 2
நக்கம்
வந்து பலியிடுஎன் றார்க்குஇட்டம்
மிக்க
தையலை வெள்வளை கொள்வது
தொக்க
நீர்வயல் தோணி புரவர்க்குத்
தக்கது
அன்று தமது பெருமைக்கே.
பொழிப்புரை : நீர்வளம் தொகுத்த வயல்களை உடைய தோணி
புரத்து இறைவர் நிர்வாணமாய் வந்து ` பலி இடுக ` என்றார்க்கு இட்டம் மிகுந்த என்
பெண்ணின் வெள்வளைகளை அவர்கொள்வது தமது பெருமைக்குச் சிறிதும் தகுதியுடையதன்று.
பாடல்
எண் : 3
கெண்டை
போல்நய னத்துஇம வான்மகள்
வண்டு
வார்குழ லாள்உடன் ஆகவே,
துண்ட
வான்பிறைத் தோணி புரவரைக்
கண்டு
காமுறு கின்றனள் கன்னியே.
பொழிப்புரை : கெண்டைமீன் போன்ற கண்ணை உடைய இமவான்
மகளாகிய வண்டுகள் செறிந்த நீண்ட குழலாள் உடனாக உறையும் வெள்ளிய பிறைமதி அணிந்த
தோணிபுரத்து இறைவரைக் கண்டு இப்பெண் காமுறுகின்றனள் .
பாடல்
எண் : 4
பாலை
யாழ்மொழி யாள்அவள் தாழ்சடை
மேலள்
ஆவது கண்டனள், விண்உறச்
சோலை
யார்தரு தோணி புரவர்க்குச்
சால
நல்லள் ஆகின்றனள், தையலே.
பொழிப்புரை : பாலையாழின் இனிய இசையை ஒத்த மொழியாளாகிய
கங்கை தாழ்சடையின்மேல் உள்ளவளாதலைக் கண்டும் , விண்ணை மிக்குப் பொருந்திய சோலைகள்
செறிந்த தோணி புரத்திறைவர்க்கு மிகவும் நல்லவளாகின்றனள் இப் பெண் .
பாடல்
எண் : 5
பண்ணின்
நேர்மொழி யாள்பலி இட்டஇப்
பெண்ணை
மால்கொடு பெய்வளை கொள்வது,
சுண்ணம்
ஆடிய தோணிபு ரத்து உறை
அண்ண
லாருக்குச் சால அழகிதே.
பொழிப்புரை : சுண்ணமாடிய தோணிபுரத்து உறைகின்ற
அண்ணலாராகிய சிவபெருமானுக்குப் பலியிட்டவளும் பண்ணை ஒத்த இனிய மொழியாளுமாகிய
இப்பெண்ணுக்கு மயக்கம் கொடுத்துப் பெய்யப் பெற்ற வளைகளையும் கொள்வது சால அழகுடைய
செயலோ ?
பாடல்
எண் : 6
முல்லை
வெண்நகை மொய்குழ லாய்உனக்கு
அல்லன்
ஆவது அறிந்திலை, நீ, கனித்
தொல்லை
ஆர்பொழில் தோணி புரவர்க்கே
நல்லை
ஆயிடு கின்றனை, நங்கையே.
பொழிப்புரை : முல்லையரும்புகளைப் போன்ற ஒளிச்
சிரிப்பையும் , வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும் உடைய நங்கையே ! கனிகள்
உடையதாகிய பொழில் சூழ்ந்த பழைய தோணிபுரத்து இறைவர்க்கு நீ நல்லவளாகின்றனை ; ஆயினும்
உனக்கு அவன் அல்லனாவதனை நீ அறிந்திலை .
பாடல்
எண் : 7
ஒன்று
தான்அறி யார்உல கத்தவர்,
நின்று
சொல்லி நிகழ்ந்த நினைப்புஇலர்,
துன்று
வார்பொழில் தோணி புரவர்தம்
கொன்றை
சூடும் குறிப்புஅது வாகுமே.
பொழிப்புரை : தலைவிக்குற்ற நோயின் காரணம் வேறொன்றாதலை
இவ்வுலகத்தவர் அறியார் ; நின்று சொல்லி அவளுக்கு நிகழ்ந்த
நினைப்பு இல்லாதவர்கள் ; நெருங்கிய நீண்டுயர்ந்த பொழில்களை உடைய
தோணிபுரத்து இறைவருடைய கொன்றை மலரைச் சூட விழையும் குறிப்பே அந்நோய்க்குக்
காரணமாகும் .
பாடல்
எண் : 8
உறவு
பேய்க்கணம், உண்பது வெண்தலை,
உறைவது
ஈமம், உடலில்ஓர் பெண்கொடி,
துறைகள்
ஆர்கடல் தோணி புரத்துஉறை
இறைவ
னார்க்குஇவள் என்கண்டுஅன்பு ஆவதே.
பொழிப்புரை : உறவு பேய்க்கூட்டங்கள் ; உண்பதோ
வெண் தலையில் ; வாழ்வதோ சுடுகாட்டில் ; உடலின் ஒரு கூற்றிலோ ஒரு பெண்கொடி ; துறைகள்
பொருந்திய கடலை அடுத்த தோணிபுரத்து உறைகின்ற இறைவனாராகிய பெருமானிடத்து இவள்
இவற்றுள் எதனைக்கண்டு அன்பு ஆயினள் ?
பாடல்
எண் : 9
மாக
யானை மருப்புஏர் முலையினர்,
போக
யானும் அவள்புக்க தேபுகத்
தோகை
சேர்தரு தோணி புரவர்க்கே
ஆக
யானும் அவர்க்குஇனி ஆளதே.
பொழிப்புரை : மேகம் போன்ற கரிய யானையின் தந்தங்களைப்
போன்ற தனங்களை உடையவர் காதலித்துச் செல்ல அவர்பின் யானும் சென்று காதலிக்க அவர்
அழகில் ஈடுபட்டு அடிமையேன் ஆயினேன் .
பாடல்
எண் : 10
இட்டம்
ஆயின செய்வாள்என் பெண்கொடி,
கட்டம்
பேசிய கார் அரக்கன் தனைத்
துட்டு
அடக்கியதோணி புரத்துஉறை
அட்ட
மூர்த்திக்கு அன்புஅது ஆகியே.
பொழிப்புரை : என் பெண் கொடியாகிய மகள் , தன்
தொல்லைகளால் உழந்து இசைபாடிய இராவணனாகிய கரிய அரக்கனது தீய செயலை அடக்கிய
தோணிபுரத்து இறைவராகிய அட்டமூர்த்திக்கு அன்புகொண்டவளாகித் தன் விருப்பத்திற்கு
உரியனவற்றைச் செய்பவளாயினள் .
திருச்சிற்றம்பலம்
-----------------------------------------------------------------------------------------------------------
சுந்தரர் திருப்பதிக வரலாறு
சுவாமிகள், தில்லையில் கூத்தப்பெருமான்
திருக்கூத்தில் திளைத்துப் பரவித் திருவாரூர் செல்லும் பொழுது, உமையம்மை
தந்தருளிய திருமுலைப்பால் அமுதுண்டு வளர்ந்தவராகிய திருஞானசம்பந்தப் பெருமான்
பிறந்தருளும் பெரும் பேறு பெற்ற திருக்கழுமலம் அணைந்து, 'ஆளுடைய பிள்ளையார் திரு அவதாரம் செய்த
தலத்துள்ளும் மிதியேன்' என்று எல்லையில் நின்று வணங்கி, வலமாக
வரும்பொழுது, பெருமான் காட்சி கொடுக்கக் கண்டு,
"கழுமல வளநகர்க்
கண்டுகொண்டேன்" என்று பாடியருளியது இத்திருப்பதிகம்.
பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்
பெரி
புராணப் பாடல் எண் : 256/110
நின்றுகோ
புரத்தை நிலம் உறப் பணிந்து,
நெடும்திரு வீதியை வணங்கி,
மன்றல்ஆர்
செல்வ மறுகின் ஊடுஏகி,
மன்னிய திருப்பதி அதனில்
தென்திரு
வாயில் கடந்துமுன் போந்து,
சேட்படும் திரு எல்லை இறைஞ்சி,
கொன்றைவார்
சடையான் அருளையே நினைவார்
கொள்ளிடத் திருநதி கடந்தார்.
பொழிப்புரை : திருக்கோபுரவாயிற்கு வெளியே நின்று, நிலமுறப்
பணிந்து வணங்கி, அதனையடுத்த தேரோடும் திருவீதியையும் வணங்கி, நறுமணம்
கமழ்கின்ற நிறைந்த செல்வத்தை உடைய ஆவண வீதிவழியே சென்று, நிலைபெற்ற அத்திருப்பதியின் தெற்கு
வாயிலைக் கடந்து, முன்னே எழுந்தருளித் தொலைவில் இருக்கும் அத்திரு எல்லையை
வணங்கிக், கொன்றை
மலர்களால் ஆய மாலையை முடித்த நீண்ட சடைமுடியையுடைய சிவபெருமானின் திருவருளையே
சிந்தித்து ஒழுகும் நம்பியாரூரர், கொள்ளிடம் என்னும் பேராற்றைக் கடந்து
சென்றருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 257/111
புறம்தருவார்
போற்றுஇசைப்பப் புரிமுந்நூல் அணிமார்பர்,
அறம்பயந்தாள்
திருமுலைப்பால் அமுதுஉண்டு வளர்ந்தவர்தாம்
பிறந்துஅருளும்
பெரும்பேறு பெற்றதுஎன முற்று உலகில்
சிறந்தபுகழ்க்
கழுமலம்ஆம் திருப்பதியைச் சென்றுஅணைந்தார்.
பொழிப்புரை : தம்மைச் சூழ்ந்துவரும் அடியவர்கள்
போற்றி உரைக்க, மூன்று முறுக்குகளையுடைய பூணூலை அணிந்த மார்பினையுடைய
நம்பியாரூரர், அறம் வளர்க்கும் தாயாகிய உமையம்மையார் திருமுலைப்பாலுடன் ஞான
அமுதைக் குழைத்து ஊட்ட உண்டு வளர்ந்த ஆளுடைய பிள்ளையார் பிறந்து அருளுதற்கு ஏதுவான
பெரியபேற்றைப் பெற்றது என்று உலகிலுள்ளார் யாவரும் போற்றி மகிழும் புகழால், சிறந்த
சீகாழி என்னும் திருப்பதியை அடைந்தருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 258/112
"பிள்ளையார் திரு அவதாரம் செய்த
பெரும்புகலி
உள்ளும்
நான் மிதியேன்" என்று ஊர்எல்லைப் புறம்வணங்கி,
வள்ளலார்
வலமாக வரும்பொழுதில், மங்கை
இடம்
கொள்ளும், மால்
விடையானும் எதிர்காட்சி கொடுத்துஅருள.
பொழிப்புரை : ஆளுடைய பிள்ளையார் தோன்றுதற்கு
இடனான
பெருமை பொருந்திய சீகாழி என்னும் திருப்பதியின் எல்லையையும் நான் மிதிக்க மாட்டேன்
என்று அத்திருப்பதியின் புற எல்லையைச் சூழ்ந்து வணங்கிய ஆரூரர், அப்பதியை
வலமாக வருமிடத்து, உமையம்மையை ஒரு கூற்றில்
வைத்திருப்பவரும் மிகப் பெரிய ஆனேற்றை ஊர்தியாக உடையவருமான தோணியப்பர் அவர் எதிராக
எழுந்தருளிக் காட்சி கொடுத்தருள,
குறிப்புரை : ஞானசம்பந்தர் தோன்றிய சிறப்புடையதாதலின்
சீகாழிப் பதியினகத்து நடந்து செல்லுதலும் தவறென்று கருதிய ஆரூரர், அப்பதியின்
புறமாக வலம் வந்தார். ஆரூரருக்கு ஆளுடைய பிள்ளையார் மீதிருந்த அளவற்ற பத்திமை
இதனால் விளங்கும்.
பெ.
பு. பாடல் எண் : 259/113
மண்டியபேர்
அன்பினால் வன்தொண்டர் நின்றுஇறைஞ்சி,
"தெண்திரைவே லையில்மிதந்த திருத்தோணி
புரத்தாரைக்
கண்டுகொண்டேன்
கயிலையினில் வீற்றுஇருந்த படி"என்று
பண்தரும்
இன்னிசை பயின்ற திருப்பதிகம் பாடினார்.
பொழிப்புரை : இவ்வாறு எளிவந்தருளிய இறைவனின்
திருக்காட்சியை நிறைந்த பேரன்போடு வணங்கி நின்ற நம்பியாரூரர், தெளிந்த
அலைகளையுடைய கடலில் ஒருகாலத்து மிதந்த திருத்தோணிபுரத்தின்கண் வீற்றிருக்கும்
பெருமானைத் `திருக்கயிலையின் கண் இருந்தருளிய திருக்கோலமாக இங்குக் கண்டு
மகிழ்ந்தேன்` என்று பண் அமைந்த இனிய இசையோடு கூடிய திருப்பதிகத்தைப்
பாடியருளினார்.
சுந்தரர் திருப்பதிகம்
7.058
திருக்கழுமலம் பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
சாதலும்
பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்துத்
தன்அருள் தந்தஎம் தலைவனை, மலையின்
மாதினை
மதித்து அங்கொர் பால்கொண்ட மணியை,
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை,
ஏதில்என்
மனத்துக்கு ஓர் இரும்புஉண்ட நீரை,
எண்வகை ஒருவனை,
எங்கள்பி ரானை,
காதில்வெண்
குழையனை, கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
பொழிப்புரை : இவ்வுடம்பின் கால எல்லையில் இதன் கண்
நின்று சாதலும் , பின்பு வேறோர் உடம்பிற் பிறத்தலும் என்னும் இரண்டனையும்
விலக்கி , இவ்வொரு
பிறப்பிலே என்னைப் படைத்து , அவ்வாற் றானே இதன்கண் வந்து தனது
திருவருளை எனக்கு அளித்தருளியவனும் , மலைமங்கையை நன்கு மதித்துத் தன்
திருமேனியின் ஒருகூற்றில் வைத்த மாணிக்கம் போல்பவனும் , வானினின்றும் வந்த வெள்ளத்தைச்
சடையிடையில் வைத்தருளினவனும் , அயலதாகிய என் நெஞ்சிற்கு , அயலாகாது
, காய்ந்த
இரும்பு கவர்ந்த நீர்போல , உள்ளே கலந்து நிற்பவனும் , எட்டுவகைப்
பொருளாய் நிற்கும் ஒருவனும் , காதில் வெள்ளிய குழையை அணிந்தவனும் ஆகிய
எங்கள் தலைவனை , அடியேன் , அவன் கயிலையில் வீற்றிருந்த வாறே , ஊழிக்காலத்தில்
உலகத்தைக் கடல் கொள்ளவும் தான் கொள்ளப்படாது மிதந்து நின்ற , ` திருக்கழுமலம்
` என்னும்
இவ்வள நகரிடத்திற் கண்டு கொண்டேன் ; அதனால் இனி ஒரு குறையும் இலனாயினேன் .
பாடல்
எண் : 2
மற்றுஒரு
துணைஇனி மறுமைக்கும் காணேன்,
வருந்தல்உற் றேன்,மற
வாவரம் பெற்றேன்,
சுற்றிய
சுற்றமும் துணை என்று கருதேன்,
துணை என்று நான்தொழப் பட்டஒண் சுடரை,
முத்தியும்
ஞானமும் வானவர் அறியா
முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக்
கற்பனை
கற்பித்த கடவுளை, அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
பொழிப்புரை : சூழ்ந்துள்ள சுற்றத்தாரையும் துணையென்று
நினையாது , ` இவனே துணை ` என்று தெளிந்து , நாள்தோறும்
என்னால் வணங்கப்படுகின்ற , ஒளியையுடைய விளக்குப் போல்பவனும் , வீடா
வதும் , ஞானமாவதும்
, அவற்றை
அடைவிப்பனவாய் அமைந்த , தேவராலும் அறியப்படாத அளவற்ற நெறிகளாவனவும்
இவை என்ப தனைப் படிமுறையானே அறிவித்து , மெய்ப்பொருளை எனக்கு உணர்த்தியருளிய
கடவுளும் ஆகிய பெருமானை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , ` திருக்கழுமலம்
` என்னும்
இவ்வளநகரிற் கண்டு கொண்டேன் ; அதனால் , முன்பு அவனை மறந்து வருந்திய யான், இனி
ஒருபோதும் அவனை மறவாது இருக்கும் திருவருளைப் பெற்றேன் ; ஆகவே , இம்மைக்கேயன்றி மறுமைக்கும் இனி மற்றொரு
துணையை நாடேன் .
பாடல்
எண் : 3
திருத்தினை
நகர் உறை சேந்தன் அப்பன், என்
செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை, அம்பொன்
ஒருத்தனை
அல்லது இங்கு ஆரையும் உணரேன்,
உணர்வுபெற் றேன்,உய்யும்
காரணம் தன்னால்,
விருத்தனை, பாலனை, கனவிடை
விரவி
விழித்து எங்கும் காணமாட் டாதுவிட்டு
இருந்தேன்,
கருத்தனை, நிருத்தம்செய்
காலனை, வேலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
பொழிப்புரை : திருத்தினை நகரின்கண்
எழுந்தருளியிருக்கின்ற , முருகக்கடவுட்குத் தந்தையும் , என்னுடைய
முன்னை வினைகளை யெல்லாம் விலக்குகின்ற , செம்பொன்போலும் சிறப்புடையவனும் , அழகிய
பொன்போலும் திருமேனியையுடைய ஒப்பற்றவனும் ஆகிய எங்கள் சிவபெருமானையல்லது வேறு
யாரையும் யான் இவ்வுலகில் இறைவராக உணரேன் ; யான் உய்யுங் காரணங் கூடினமையால்
இத்தகைய உணர்வைப் பெற்றேன் ; ஆயினும் , விருத்தனும் , பாலனும் ஆகிய அவனை , யான்
கனவில் என் அருகே கண்டு , நனவில் எங்குங் காணமாட்டாது
பிரிந்திருந்தேன் ; இதுபோழ்து , யாவர்க்கும் தலைவ னும் , நடனம்
புரிகின்ற திருவடிகளையுடையவனும் ஆகிய அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , கடலை
அடுத்துள்ள , ` திருக் கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக்
கண்டுகொண்டேன் ; அதனால் , இனி அப்பிரிவு இலனாயினேன் .
பாடல்
எண் : 4
மழைக்கு
அரும்பும் மலர்க் கொன்றையி னானை,
வளைக்கல் உற்றேன், மறவாமனம்
பெற்றேன்,
பிழைத்துஒரு
கால்இனிப் போய்ப்பிற வாமைப்
பெருமைபெற் றேன்,பெற்றது
ஆர்பெறு கிற்பார்,
குழைக்கரும்
கண்டனைக் கண்டுகொள் வானே
பாடுகின் றேன்,
சென்று கூடவும்
வல்லேன்,
கழைக்கரும்பும்
கத லிப்பல சோலைக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
பொழிப்புரை : மழையினால் அரும்புகின்ற கொன்றையினது
மலரைச் சூடினவனாகிய எங்கள் பெருமானை என்றும் மறவாது நினைக்கின்ற மனத்தைப்
பெற்றேனாதலின் , யான் அவனைப் புறம் போகவொட்டாது என்னிடத்தே பிணித்துக்
கொள்ளுதலைப் பொருந்தினேன் ; இனி ஒருபோதும் இந்நிலையினின்றும் தவறி
உலகிற் போய்ப் பிறவாத பெருமையைப் பெற்றுவிட்டேன் ; யான் பெற்ற இப்பேற்றினை வேறு யார் பெற
வல்லார் ! இவ்வாறாதலின் , அவனை இனியொருகால் இவ்விடத்து யான்
நேர்படக் காணாதேயும் , இவ்வுடம்பு நீங்கியபின் அவனை அடையவும்
வல்லேன் ; என்றாலும்
, அவனைக்
காணாது என் நெஞ்சம் அமையாமையின் , காதிற் குழையை யுடைய நீல கண்டனாகிய அவனை
மீளக் காணுதல் வேண்டியே பாடி நிற்கின்றேன் ; இந்நிலையில் அவனை , இதுபோழ்து
, அவன்
கயிலையில் வீற்றிருந்தவாறே , கழைக் கரும்பும் , வாழையும்
பல சோலையுடன் நிறைந்துள்ள , ` திருக்கழுமலம் `
என்னும் இவ்வள
நகரிடத்துக் கண்டு கொண்டேன் ; இனியொரு குறையும் இலனாயினேன் .
பாடல்
எண் : 5
குண்டலம் குழைதிகழ் காதனே என்றும்,
கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்,
வண்டு
அலம்பும் மலர்க் கொன்றையன் என்றும்,
வாய்வெரு வித்தொழு தேன்,விதி
யாலே,
பண்டைநம்
பலமன மும் களைந்து ஒன்றாய்ப்
பசுபதி பதிவினவி, பல
நாளும்
கண்டலங்
கழிக்கரை ஓதம்வந்து உலவும்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
பொழிப்புரை : யான் , உறக்கத்தில் ,
` குண்டலமும் , குழையும்
விளங்குகின்ற காதினை உடையவனே ` என்றும் , ` கொடிய மழுவாகிய ஒளியையுடைய படையை
உடையவனே ` என்றும்
, ` வண்டுகள்
ஒலிக்கின்ற கொன்றை மலரைச் சூடியவனே ` என்றும் வாய்பிதற்றி , விழித்த
பின் , பழக்கமாய்
நமக்கு உள்ள பலவாறான மனத்தை ஒழித்து ஒரு நெறிப்பட்ட மனத்தையுடையேனாய் , அவனது
தலங்களை வினாவி அறிந்து , ` அத்தலத்திற் கிடைப்பான் ` என்று
எண்ணிப் பல நாளும் சென்று முறைப்படியே வணங்கினேன் ; அவ்வாற்றால் வருமிடத்து , தாழைகளையுடைய
கழிக்கரையிடத்துக் கடல் அலைகள் வந்து உலவுகின்ற , ` திருக்கழுமலம் `
என்னும் இவ்
வளநகரிடத்தே அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே
கண்டுகொண்டேன் ; இனி , அக் குறையிலேனாயினேன் .
பாடல்
எண் : 6
வரும்பெரு
வல்வினை என்றுஇருந்து எண்ணி,
வருந்தல் உற்றேன்,மற
வாமனம் பெற்றேன்,
விரும்பிஎன்
மனத்திடை மெய்குளிர்ப்பு எய்தி,
வேண்டிநின் றேதொழு தேன்,விதி
யாலே,
அரும்பினை, அலரினை, அமுதினை, தேனை,
ஐயனை, அறவன்என் பிறவிவேர் அறுக்கும்
கரும்பினை, பெருஞ்செந்நெல்
நெருங்கிய கழனிக்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
பொழிப்புரை : ` அளவற்ற
வலிய வினைகள்வந்து வருத்துமே ; என் செய்வது ` என்று எண்ணியிருந்து வருந்தினேன்; அங்ஙனம்
வருந்தாத படி எம்பெருமானை மறவாத மனம் வாய்க்கப்பெற்றேன் ;
அதனால் , என்
மனத்தால் அவனை விரும்பி, மெய்சிலிர்த்து,
என்னை இகழா
தொழியுமாறு அவனை இரந்து நின்று, முறைப்படியே வணங்கினேன்; அதனால், அரும்பும், பூவும்
, அமுதும்
, தேனும்
, கரும்பும்
போல இன்பம் தருபவனும், யாவர்க்கும் தலைவனும், அறவடிவினனும், எனது
பிறவியை வேரோடு அறுப்பவனும் ஆகிய அவனை , அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே , மிக்க
செந்நெல் நிறைந்த வயல்களையுடைய, ` திருக்கழுமலம் `
என்னும் இவ்
வளநகரிடத்துக் கண்டு கொண்டேன் .
பாடல்
எண் : 7
அயல்அவர்
பரவவும், அடியவர் தொழவும்,
அன்பர்கள் சாயலுள் அடையல் உற்று
இருந்தேன்,
முயல்பவர்
பின்சென்று முயல்வலை யானை
படும்என மொழிந்தவர் வழிமுழுது எண்ணி,
புயலினை, திருவினை, பொன்னினது
ஒளியை,
மின்னினது உருவினை, என்னிடைப்
பொருளை,
கயலினம்
சேலொடு வயல்விளை யாடும்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
பொழிப்புரை : மேகமும், செல்வமும் போல்பவனும், பொன்
னொளியும் மின்னொளியும் போலும் திருமேனியை
யுடையவனும், என்னிடத்துக் கிடைத்த பொருள் போல்பவனும்
ஆகிய எங்கள் பெருமானை யான் அடைய நினைந்து , அதன் பொருட்டுச் சேய்மையில் உள்ளார்
அவனைத் துதிக்கவும் , அண்மையில் உள்ளார் அவனை வணங்கவும் , அவற்றுள்
ஒன்றையும் செய்யாது , அவனைத் தங்கள் வன்மையால் அடைய
முயல்பவர்கள் பின்னே சென்று, ` முயல் அகப்படும் வலையில் யானை அகப்படும்
` என்று
சொல்லிய அவர்களது சொல்லைக்கேட்டு, அவ்வழியையே முற்றிலும் கடைப்பிடித்து , அவனிடத்து
அன்புடையாரது தோற்றத்தை மேற்கொண்டிருந்தேன்; ஆயினும், எனது முன்னைத் தவத்தால் , அவனை, அவன்
கயிலையில் வீற்றிருந்தவாறே, கயல் மீன்களும்,
சேல்மீன்களும்
வயலின்கண் விளையாடுகின்ற, ` திருக்கழுமலம் `
என்னும் இவ்
வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் ; அதனால் எண்ணம் கைகூடப்பெற்றேன் .
பாடல்
எண் : 8
நினைதரு
பாவங்கள் நாசங்கள் ஆக
நினைந்து,முன் தொழுதுஎழப் பட்டஒண் சுடரை,
மனைதரு
மலைமகள் கணவனை, வானோர்
மாமணி மாணிக்கத் தை,மறைப்
பொருளை,
புனைதரு
புகழினை, எங்களது ஒளியை,
இருவரும் ஒருவன் என்று உணர்வுஅரியவனை,
கனைதரு
கரும் கடல் ஓதம்வந்து உலவும்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
பொழிப்புரை : நினைத்து உணரப்படும் கருத்துப்
பொருள்களாகிய பாவங்கள் அழிதல் உளவாகும்படி , யான் , மனத்தால் நினைந்தும் , கையால்
தொழுதும் எழப்பட்ட , ஒளி பொருந்திய ஞாயிறு போல்பவனும் , தனக்கு
மனைவியைத் தர விரும்பிய மலைக்கு மகளாகிய உமைக்குக் கணவனும் , தேவர்களது
தலைமணியாகிய மாணிக்கம் போல்பவனும் , வேதத்தின் பொருளாய் உள்ளவனும் , அழகியவாகச்
சொல்லப்படுகின்ற புகழை உடையவனும் , எங்கள் விளக்குப் போல்பவனும் , மாலும்
அயனும் , ` இன்னன் ` என்று அறிதற்கு அரியவனும் ஆகிய இறைவனை , அடியேன்
, அவன்
கயிலையில் வீற்றிருந்தவாறே , ஒலிக்கின்ற கரிய கடலினது அலைகள் வந்து
உலவுகின்ற , ` திருக்கழுமலம் ` என்னும் இவ் வளநகரிடத்துக்
கண்டுகொண்டேன் .
பாடல்
எண் : 9
மறையிடைத்
துணிந்தவர் மனையிடை இருப்ப,
வஞ்சனை செய்தவர் பொய் கையுள் மாய,
துறைஉறக்
குளித்து உளதாக வைத்து உய்த்த
உண்மை எனும் தகவு இன்மையை ஓரேன்,
பிறைஉடைச்
சடையனை, எங்கள்பி ரானை,
பேர்அரு ளாளனை,
கார்இருள் போன்ற
கறைஅணி
மிடறுஉடை அடிகளை, அடியேன்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே
பொழிப்புரை : வேள்வி முதலிய கருமங்களையே மெய்யென்று
துணிந்தவர்கள் பற்றுவிடமாட்டாது மனைவாழ்க்கையிலே கட்டுண்டு கிடத்தலும் , முற்றத்
துறந்தவர்போலக் காட்டினோரது பொய்யாகிய தவங்கள் ஏனையோரது முயற்சிகளோடொப்பக் கடிதில்
அழிந்து போதலும் கண்கூடாய் இருக்க , அவற்றை மேற்கொண்டவர்கள் , தாம்
சேற்றில் அழுந்தியிருத்தலை அறியாது , நல்ல நீர்த்துறையிலே நன்கு மூழ்கியிருப்பதாகக்
கருதி , பிறரையும்
தம் வழியிலே செல்லக் காட்டிய தீநெறியாகிய பொருந்தா நெறியை , யான்
பொருட்படுத்தாது வந்து , பிறையை யுடைய சடையை உடையவனும் , எங்கள்
தலைவனும் , கருணையை மிக உடையவனும் , ஆகிய சிவபெருமானை அடியேன் , அவன்
கயிலையில் வீற்றிருந்தவாறே , ` திருக்கழுமலம் `
என்னும் இவ்
வளநகரிடத்துக் கண்டுகொண்டேன் .
பாடல்
எண் : 10
செழுமலர்க்
கொன்றையும் கூவிள மலரும்
விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்டு,
அழுமலர்க்
கண்இணை அடியவர்க்கு அல்லால்,
அறிவு அரிது அவன்திரு அடியிணை இரண்டும்,
கழுமல
வளநகர்க் கண்டுகொண்டு, ஊரன்,
சடையன்தன் காதலன் பாடிய பத்தும்,
தொழுமலர்
எடுத்தகை அடியவர் தம்மைத்
துன்பமும் இடும்பையும் சூழகி லாவே
பொழிப்புரை : செழுமையான கொன்றையினது மலரும் , வில்வ
இலையாகிய மலரும் கலந்துள்ள சடைமுடியையுடைய தலைவனை நினைந்து , அன்பினால்
அழுகின்ற மலர்போலும் கண்ணிணையுடைய அடியார்க்கல்லது அறிதற்கரிய இணையாகிய அவன்
திருவடிகள் இரண்டினையும் , ` திருக்கழுமலம் `
என்னும் இவ்
வளநகரிடத்துக் கண்டுகொண்டு , சடையனார்க்கு மகனாகிய நம்பியாரூரன்
பாடிய இப் பத்துப் பாடல்களாலும் தொழுகின்ற , மலரைத் தாங்கிய கைகளை யுடைய அடியார்களை , துன்பமும்
, இடும்பையும்
அணுகமாட்டா.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment