சீர்காழி - 7



2.039   திருக்ஷேத்திரக்கோவை               பண் - இந்தளம்
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
ஆரூர்தில்லை அம்பலம், வல்லம், நல்லம்
            வடகச்சியும், அச்சிறு பாக்கம்,நல்ல
கூரூர், குட வாயில், குடந்தை,வெண்ணி
            கடல்சூழ்கழிப் பாலை,தென் கோடி,பீடார்
நீரூர்வயல் நின்றியூர், குன்றியூரும்,
            குருகாவையூர், நாரையூர், நீடுகானப்
பேரூர், நல் நீள்வயல் நெய்த்தானமும்,
            பிதற்றாய், பிறை சூடிதன் பேரிடமே.

            பொழிப்புரை :பிறைசூடிய பெருமானின் பெருந்தலங்களாய ஆரூர்தில்லையம்பலம் முதலானதலங்களின் பெயர்களைப் பலகாலும் சொல்லிக்கொண்டிரு. உனக்குப் பெரும்பயன் விளையும்.


பாடல் எண் : 2
அண்ணாமலை, ஈங்கோயும், அத்திமுத்தாறு
            அகலாமுது குன்றம், கொடுங்குன்றமும்,
கண்ணார்கழுக் குன்றம், கயிலை,கோணம்,
            பயில்கற்குடி, காளத்தி, வாட்போக்கியும்,
பண்ணார்மொழி மங்கைஓர் பங்குஉடையான்
            பரங்குன்றம், பருப்பதம், பேணிநின்றே
எண்ணாய் இர வும்பகலும் இடும்பைக்
            கடல் நீந்தலாம் காரணமே.

            பொழிப்புரை :அண்ணாமலை ஈங்கோய்மலை முதலான தலங்களை விரும்பி இரவும் பகலும் எண்ணின் துன்பக்கடலை நீந்தற்குக் காரணமாய் அமையும்.


பாடல் எண் : 3
அட்டானம்என்று ஓதிய நால்இரண்டும்,
            அழகன்உறை காஅனைத் தும்,துறைகள்
எட்டாம்,திரு மூர்த்தியின் காடுஒன்பதும்,
            குளமூன்றும், களம்அஞ்சும், பாடிநான்கும்,
மட்டுஆர்குழ லாள் மலை மங்கைபங்கன்
            மதிக்கும் இடமாகிய பாழிமூன்றும்,
சிட்டானவன் பாசூர், என்றே விரும்பாய்
            அரும்பாவங்கள் ஆயின தேய்ந்துஅறவே.

            பொழிப்புரை :இறைவனின் எட்டு வீரட்டங்களையும் அழகனாகிய அப்பெருமானுறையும் காடு, துறை, நாடு, குளம், களம், பாடி, பாழி என முடியும் தலங்களையும் அரிய பாவங்கள் தேய்ந்தொழிதற் பொருட்டு விரும்புவாயாக.

            அட்டானம் என்று ஓதி. நால் இரண்டு --  அட்ட வீரட்டத் தலங்கள்.

கா அனைத்தும் - திருவானைக்கா,  திருநெல்லிக்கா, திருக்கோடிகா.

துறைகள் எட்டு --  இப்போது உள்ளவை, 13.  அன்பிலாலந்துறை, ஆவடுதுறை, கடம்பந்துறை, தென்குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை, சோற்றுத்துறை, பராய்த்துறை, பால்துறை, பெணுபெருந்துறை, மயிலாடுதுறை, மாந்துறை, வெண்துறை, பாலைத்துறை.  இவற்றில் எட்டு எதுவோ.

காடு ஒன்பது - இப்போது உள்ளவை 10.  ஆலங்காடு, கச்சிநெறிக்காரைக்காடு, கொள்ளிக்காடு, சாய்க்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, பனங்காடு, மறைக்காடு, வெண்காடு, வேற்காடு. இவற்றில் ஒன்பது எதுவோ.

குளம் மூன்று -  இப்போது இருப்பது கடிக்குளம் ஒன்றே.

களம் அஞ்சு - இப்போது இருப்பது முன்றே, நெடுங்களம், அஞ்சைக்களம், வேட்களம்.

பாடி நான்கு - இப்போது இருப்பது மூன்றே.  ஆப்பாடி, எதிர்கொள்பாடி, மழபாடி.

பாழி மூன்று - இப்போது இருப்பது அரதைப்பெரும்பாழி ஒன்றே.


பாடல் எண் : 4
அறப்பள்ளி, அகத்தியான் பள்ளி,வெள்ளைப்
            பொடிப்பூசி ஆறுஅணிவான்அமர் காட்டுப்பள்ளி,
சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி,
            திருநனிபள்ளி, சீர் மகேந்திரத்துப்
பிறப்புஇல்லவன் பள்ளி,வெள் ளச்சடையான்
            விரும்பும் இடைப் பள்ளி,வண் சக்கரமால்
உறைப்பால்அடி போற்றக் கொடுத்தபள்ளி ,
            உணராய்மட நெஞ்சமே உன்னிநின்றே.

            பொழிப்புரை :நெஞ்சமே! கோயில் எனப்பொருள் தரும் பள்ளி என முடிவன வாய கொல்லி அறைப்பள்ளி அகத்தியான் பள்ளி முதலான தலங்களை உன்னி உணர்வாயாக, உனக்குப் பயன்பலவிளையும்.


பாடல் எண் : 5
* * * * * * *
ஆறை,வட மாகறல், அம்பர், ஐயாறு,
            அணியார்பெரு வேளுர், விளமர்,தெங்கூர்,
சேறை,துலை புகலூர், அகலாது இவை
            காதலித் தான் அவன் சேர்பதியே

            பொழிப்புரை :சிவபிரான் காதலித்து உறையும் பதிகள் பழை யாறை மாகறல் முதலான தலங்களாகும் . அவற்றைச் சென்று தொழு வீர்களாக .


பாடல் எண் : 6
மனவஞ்சர் மற்று ஓட, முன் மாதராரும் 
            மதிகூர் திருக்கூடலில் ஆலவாயும்,
இனவஞ்சொல் இலாஇடை மாமருதும்,
            இரும்பைப்பதி மாகாளம், வெற்றியூரும்,
கனம்அம்சின மால்விடை யான்விரும்பும்
            கருகாவூர், நல்லூர், பெரும்புலியூர்,
தனமென்சொலில் தஞ்சம்என் றேநினைமின்
            தவமாம் மலமாயின தான்அறுமே.

            பொழிப்புரை :வஞ்சமனத்தவர் போயகல மதிகூர் மாதர்கள் வாழும் ஆலவாய் இடைமருது முதலான தலங்கள் நமக்குப் புகலிடமாவன எனநினைமின். அதுவே தவமாகும். மும்மலங்களும் அற்று ஒழியும்.


பாடல் எண் : 7
மாட்டூர்,மடப் பாச்சி லாச்சிராமம்,
            மயிண்டீச்சரம், வாதவூர், வாரணாசி,
காட்டூர்,கடம் பூர், படம் பக்கங்கொட்டும்
            கடல்ஒற்றியூர், மல் துறை யூரவையும்,
கோட்டூர், திரு வாமாத்தூர், கோழம்பமும்,
            கொடுங்கோ வலூர், திருக் குணவாயில்.

            பொழிப்புரை :மாட்டூர் பாச்சில் ஆச்சிராமம் முதலியன இறைவன் உறையும் சிறந்த தலங்கள்.


பாடல் எண் : 8
* குலாவுதிங்கட்சடையான்
குளிரும் பரிதிநியமம்,
போற்றூர்அடி யார்வழி பாடுஒழியாத்தென்
            புறம்பயம், பூவணம், பூழியூரும்,
காற்றுஊர்வரை அன்றுஎடுத் தான்முடிதோள்
            நெரித்தான்உறை கோயில் என்றென் றுநீகருதே.

            பொழிப்புரை :திருப்பரிதிநியமம், திருப்புறம்பயம் முதலான தலங்கள் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியவற்றை நெரித்த சிவபிரான் உறையும் கோயில்கள் என நீ கருதுக.
  

பாடல் எண் : 9
நெற்குன்றம், ஓத் தூர், நிறை நீர்மருகல்,
            நெடுவாயில், குறும்பலா, நீடுதிரு
நற்குன்றம், வலம்புரம், நாகேச்சுரம்,
            நளிர்சோலைஉஞ் சேனைமா காளம்,வாய்மூர்,
கல்குன்றம் ஒன்று ஏந்தி மழைதடுத்த
            கடல்வண்ணனும் மாமல ரோனும்காணாச்
சொற்குஎன்றுமா தொலைவுஇலா தான் உறையும்
            குடமூக்கு,என்று சொல்லிக் குலாவுமினே.

            பொழிப்புரை :நெற்குன்றம், ஓத்தூர் முதலியதலங்களை எண்ணி மகிழ்வாயாக.

            குறிப்புரை :குறும்பலா - திருக்குற்றாலத் தலவிருட்சம். கற்குன்றம் - கோவர்த்தனகிரி. காணாச்சொற்கு - காணாதபுகழ்க்கு. தொலைவு - அழிவு.


பாடல் எண் : 10
குத்தங்குடி, வேதி குடி,புனல்சூழ்
            குருந்தங்குடி, தேவன் குடி,மருவும்
அத்தங்குடி, தண்டிரு வண்குடியும்,
            அலம்பும் சலம் தன்சடை வைத்துஉகந்த
நித்தன் நிமலன் உமை யோடுங்கூட
            நெடுங்காலம் உறைவிடம் என்று சொல்லாப்
புத்தர்புறங் கூறிய புன்சமணர்
            நெடும்பொய் களைவிட்டு நினைந்துஉய்மினே.

            பொழிப்புரை :குத்தங்குடி, வேதிகுடி முதலான குடிஎன முடியும் தலங்கள் சிவபிரான் உமையம்மையாருடன் கூடி நெடுங்காலம் வீற்றிருப்பன என்று எண்ணி வழிபடாப் பௌத்தர் சமணர்கூறும் பொய்மொழிகளை விட்டு அத்தலங்களை நினைந்துய்மின்.


பாடல் எண் : 11
அம்மானை அருந்தவம் ஆகிநின்ற
            அமரர்பெரு மான்பதியான உன்னிக்
கொய்ம்மாமலர்ச் சோலை குலாவுகொச்சைக்கு
            இறைவன் சிவஞானசம் பந்தன்சொன்ன
இம்மாலை ஈர்ஐந்தும் இருநிலத்தில்
            இரவும்பக லும்நினைந்து ஏத்திநின்று
விம்மாவெரு வாவிரும்பும் அடியார்
            விதியார் பிரியார் சிவன்சேவடிக்கே.

            பொழிப்புரை :தலைவனும் அரிய தவவடிவாக விளங்கும் தேவர் முதல்வனும் ஆகிய சிவபெருமான் உறையும் திருத்தலங்களை நினைந்து கொய்யத் தக்கனவான நறுமண மலர்களைக் கொண்டுள்ள சோலைகள் செறிந்த கொச்சையம் பதிக்குத் தலைவனாகிய சிவஞான சம்பந்தன் பாடிய இப்பதிகப்பாமாலையை நிலவுலகில் இரவும் பகலும் நினைந்து விம்மியும் அஞ்சியும் விரும்பிப் போற்றும் அடியவர், நிறைந்த நல்லூழ் உடையவராவர். மறுமையில் சிவன் சேவடிகளைப் பிரியாதவராவர்.

                                                திருச்சிற்றம்பலம்
      

3. 040  பொது       தனித்திருஇருக்குக்குறள்    பண் - கொல்லி
                                                திருச்சிற்றம்பலம்        

பாடல் எண் : 1
கல்ஆல் நீழல் , அல்லாத் தேவை
நல்லார் பேணார் , அல்லோம் நாமே.

            பொழிப்புரை :கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்கட்கு அறநெறி உரைத்தருளிய சிவபெருமானை அன்றிப் பிறிதொரு தெய்வத்தை மெய்யுணர்ந்த ஞானிகள் பொருளாகக் கொள்ளார் . நாமும் அவ்வாறே சிவனையன்றி வேறு தெய்வத்தை வழிபடோம் .


பாடல் எண் : 2
கொன்றை சூடி , நின்ற தேவை
அன்றி ஒன்று , நன்று இலோமே.

            பொழிப்புரை :கொன்றை மலரைச் சூடிவிளங்கும் சிவபெருமானை அன்றி , பிறிதொரு தெய்வம் முக்திச் செல்வம் தருவதாக நாம் கருதோம் .


பாடல் எண் : 3
கல்லா நெஞ்சின் , நில்லான் ஈசன்
சொல்லாதாரோடு ,  அல்லோம் நாமே.

            பொழிப்புரை :இறைவனை இடைவிடாது தியானிக்காதவர் உள்ளத்தில் அவன் நில்லான் . ஆதலால் அப்பெருமானின் பெருமைகளைப் போற்றாதவர்களோடு நாங்கள் சேரோம் .


பாடல் எண் : 4
கூற்று உதைத்த , நீற்றி னானைப்
போற்றுவார்கள் , தோற்றினாரே.

            பொழிப்புரை :மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த கூற்றுவனைத் தன் திருப்பாதத்தால் உதைத்த , தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள சிவபெருமானைப் போற்றுபவர்களே பிறந்ததன் பயனை அடைவர் .


பாடல் எண் : 5
காட்டுள் ஆடும் , பாட்டு உளானை
நாட்டு உளாரும் , தேட்டு உளாரே.

            பொழிப்புரை :சுடுகாட்டில் நடனம் ஆடும் இறைவன் அடியாரேத்தும் பாமாலையை உடையவன் . சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று தம் உள்ளத்தில் நிலைநிறுத்தியவர்களே பேரின்பச் செல்வத்தில் திளைப்பவர்கள் .


பாடல் எண் : 6
தக்கன் வேள்விப் , பொக்கம் தீர்த்த
மிக்க தேவர் , பக்கத்தோமே.

            பொழிப்புரை :முழுமுதற்பொருளான சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியின் குற்றத்தைத் தீர்த்த வல்லமையும் , அருளுமுடைய சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் யாம் உள்ளோம் .


பாடல் எண் : 7
பெண்ஆண்ஆய , விண்ணோர் கோவை
நண்ணாதாரை , எண்ணோம் நாமே.

            பொழிப்புரை :பெண்ணாகவும் , ஆணாகவும் ஆகி தேவர்கள் போற்றும் தலைவரான சிவபெருமானை மனம் , வாக்கு , காயம் ஆகிய திரிகரணங்களாலும் வழிபடாதவர்களை நாம் நெஞ்சாலும் நினைப்பதில்லை .


பாடல் எண் : 8
தூர்த்தன் வீரம் , தீர்த்த கோவை
ஆத்தம் ஆக , ஏத்தினோமே.

            பொழிப்புரை : துன்மதியால் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்து , பின் அவன் தன் தவறுணர்ந்து சாமகானம்பாடி இறைஞ்ச அவனுக்கு ஒளி பொருந்திய வாளும் , நீண்ட வாழ்நாளும் அருளிய இறைவனை நாம் விரும்பிப் போற்றி வணங்கினோம் .


பாடல் எண் : 9
பூவினானும் , தாவினானும்
நாவினாலும் , நோவினாரே.

            பொழிப்புரை : தாமரைப்பூவின்மேல் வீற்றிருந்தருளும் பிரமனும் உலகத்தைத் தாவிஅளந்த திருமாலும் , இறைவனின் திருமுடியையும் , திருவடியையும் உடல்வருந்தித் தேடியும் காணாதவர்களாய்ப் பின்னர் நாவால் அவனைப் போற்றி உருகிநின்றனர் .


பாடல் எண் : 10
மொட்டு அமணர் , கட்டர் தேரர்
பிட்டர் சொல்லை , விட்டு உளோமே.

            பொழிப்புரை :தலைமயிரைப் பறித்து மொட்டைத் தலையுடன் விளங்கும் சமணர்களும் , கட்டான உடலமைப்புடைய புத்தர்களும் , சைவசமய நெறிக்குப் புறம்பாகக் கூறுவனவற்றை நாம் பொருளாகக் கொள்ளாது விட்டோம் .


பாடல் எண் : 11
அந்தண் காழிப் , பந்தன் சொல்லைச்
சிந்தை செய்வோர் , உய்ந்து உளோரே.

            பொழிப்புரை :அழகிய குளிர்ச்சி பொருந்திய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய இத்திருப்பதிகத்தைச் சிந்தனை செய்து பாடுபவர்கள் உய்தி பெற்றவர்களாவர் .
                                                            திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------------
 

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

            திருஞானசம்பந்தப் பெருமானார் திருப்பேணுபெருந்துறையும், திருத்திலதைப் பதியும் வழிபட்டுத் திருவீழிமிழலைக்கு மீண்டும் எழுந்தருளி அங்கே வீற்றிருக்கின்றார்கள். அப்போது சீகாழிப் பதியிலுள்ள அந்தணர்கள் வீழிமிழலைக்கு வந்து பிள்ளையாரைச் சீகாழிக்கு எழுந்தருளும்படி வேண்டிக் கொள்கின்றனர். சுவாமிகள் ‘தோணிநாதர் கழல் இறைஞ்ச, நாளைக்கு வீழிநாதன் அருள்பெற்றுப் போகலாம்‘ என்று அருளிச் செய்திருந்தனர். அன்றிரவு சுவாமிகள் கனவில், ‘தோணியில் நாம் அங்கிருந்தவண்ணம் தூமறைவீழி மிழலை தன்னுள், சேணுயர் விண்ணின் இழிந்த இந்தச் சீர்கொள் விமானத்துக் காட்டுகின்றோம் பேணும்படியால் அறிதி‘ என்று காழி நாதர் திருவாய் மலர்ந்தனர். இதனை அறிந்த சுவாமிகள் விம்மிதமுற்று, விடிந்ததும் எழுந்து திருமஞ்சனம் முடித்து வீழிக் கோயிலில் விண்ணிழி விமானத்துட்சென்று வணங்கினார். அங்கே திருத்தோணியில் காணும் திருவோலக்கத்தைக் கண்டு வியந்து வினாவுரையாக ‘மைம்மரு பூங்குழல்‘ என்ற இந்தத் திருப்பதிகத்தைப் பாடியருளுகிறார்கள்.

            இத்திருப்பதிகத்தின் ஒன்பதாம் பாடலில் வீழிமிழலையில் பெருமான் ‘எறிமழு வோடிள மான்கை யின்றி‘ இருந்த பண்டைய நிலையைக் கூறி மகிழ்கிறார்கள். காழிக்காட்சியாகச் சுவாமிகள் வீழியிற் கண்டதைச் சேக்கிழார்பெருமான் ‘மறியுற்ற கையரைத் தோணிமேல் முன் வணங்கும்படி அங்குக் கண்டு‘ என்று குறிப்பிடுகின்றார்கள். இது அறிஞர்க்குப் பெருவிருந்தாகும்.

            வினாவுரை: - காழியில் அம்மையப்பராக எழுந்தருளியிருக்கும் காட்சியை வீழிமிழலையிற் காட்ட, தரிசித்த சம்பந்தப் பெருமான் வினாவாக உரைத்தன.


பெரிய புராணப் பாடல் எண் : 550
சேண்உயர் மாடப் புகலி யுள்ளார்
            திருஞான சம்பந்தப் பிள்ளை யாரைக்
காணும் விருப்பில் பெருகும் ஆசை
            கைம்மிகு காதல் கரை இகப்பப்
பூணும் மனத்தொடு தோணி மேவும்
            பொருவிடை யார்மலர்ப் பாதம் போற்றி
வேணு புரத்தை அகன்று போந்து
            வீழி மிழலையில் வந்து அணைந்தார்.

            பொழிப்புரை : வானளாவ உயர்ந்த மாடங்களை உடைய சீகாழியில் வாழ்கின்ற மறையவர்கள், திருஞானசம்பந்தப் பிள்ளை யாரைச் சென்று காணவேண்டும் என்ற விருப்பத்தால், பெருகும் ஆசைமீதூரத் திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவரின் மலரடி களை வணங்கி, விடைபெற்றுச் சீகாழியினின்றும் திருவீழிமிழலையை அடைந்தார்கள்.


பெ. பு. பாடல் எண் : 551
"ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து
            ஓங்கிய காழி உயர் பதியில்
வாழி மறையவர் தாங்கள் எல்லாம்
            வந்து மருங்குஅணைந் தார்கள்" என்ன
வீழி மிழலையின் வேதி யர்கள்
            கேட்டு,மெய்ஞ் ஞானம்உண் டாரை முன்னா
ஏழிசை சூழ்மறை எய்த ஓதி
            எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார்.

            பொழிப்புரை : ஊழிக்காலத்தில் பெருகும் நீர் வெள்ளத்தில் ஆழாமல் மிதந்த சீகாழியில், பெருவாழ்வை உடைய அந்தணர்கள் எல்லாம் வந்து, தம் பதியின் அருகே சேர்ந்தனர் எனத் திருவீழி மிழலையில் வாழும் மறையோர்கள் கேள்வியுற்று, மெய்ஞ்ஞான அமுது உண்ட பிள்ளையாரை எண்ணி மனத்துள் கொண்டு, ஏழிசை சூழும் மறைகளில் வல்ல அந்தச் சீகாழி மறையவர்பால் சேர்ந்து, முறைப்படி எதிர்கொண்டு வரவேற்று, அவர்களை அழைத்துக் கொண்டு நகரத்துள் புகுந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 552
சண்பைத் திருமறை யோர்கள் எல்லாம்
            தம்பிரா னாரைப் பணிந்து போந்து,
நண்பிnd பெருகிய காதல் கூர்ந்து
            ஞானசம் பந்தர் மடத்தில் எய்தி,
பண்பில் பெருகும் கழும லத்தார்
            பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே,
"எண்பெற்ற தோணி புரத்தில் எம்மோடு
            எழுந்தரு ளப்பெற வேண்டும்" என்றார்.

            பொழிப்புரை : சீகாழியினைச் சேர்ந்த மறையவர்களெல்லாம் கோயிலுள் சென்று, தம் இறைவரை வணங்கிச் சென்று, நட்பால் பெருகிய பெரு விருப்பம் மிக்கு, ஞானசம்பந்தரின் திருமடத்தைச் சேர்ந்து, நற்பண்பினால் பெருகும் சீகாழியில் உள்ளவர்களுக்கு உரிமை உடைய சம்பந்தரின் திருவடிகளை வணங்கித் தலைமீது கொண்டு, `மேன்மையுடைய திருத்தோணிபுரத்தில் எம்முடனே எழுந்தருளும் பேறு யாங்கள் பெற வேண்டும்' என வேண்டிக் கொண்டனர்.


பெ. பு. பாடல் எண் : 553
என்றுஅவர் விண்ணப்பம் செய்த போதில்,
            ஈறுஇல் சிவஞானப் பிள்ளை யாரும்,
"நன்றுஇது சாலவும், தோணி மேவும்
            நாதர் கழல்இணை நாம் இறைஞ்ச
இன்று கழித்து, மிழலை மேவும்
            இறைவர் அருள்பெற்றுப் போவது" என்றே
அன்று புகலி அரும றையோர்க்கு
            அருள்செய்து அவர்க்கு முகம்அளித்தார்.

            பொழிப்புரை : என அவர்கள் வேண்டிக்கொண்டபோது எல்லையில்லாத சிவஞானம் பெற்ற சம்பந்தரும் `மிகவும் நல்லது' ஆனால் திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருவடி களை நாம் வணங்குவதற்கு இன்று கழிந்து நாளைத் திருவீழிமிழலை இறைவரின் அருளைப் பெற்று நாம் போகலாம்!' எனக் கூறி, அன்று அவர் சீகாழி மறையவர்களுக்கு அருள் செய்தார்.


பெ. பு. பாடல் எண் : 554
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும்
            வேதியர்க்கு ஆய விருந்து அளிப்பப்
பால்பட்ட சிந்தைய ராய்ம கிழ்ந்து
            பரம்பொருள் ஆனார் தமைப் பரவும்
சீர்ப்பட்ட எல்லை இனிது செல்லத்
            திருத்தோணி மேவிய செல்வர் தாமே
கார்ப்பட்ட வண்கைக் கவுணி யர்க்குக்
            கனவிடை முன்நின்று அருள்செய் கின்றார்.

            பொழிப்புரை : மேன்மையுடைய திருவீழிமிழலை அந்தணர்கள், சீகாழியினின்றும் வந்த அந்தணர்களுக்கு விருந்தளிக்க, ஏற்ற அவர் களும் அன்பு கொண்ட உள்ளம் உடையராகி, மகிழ்ந்து இறைவரை வழிபட்டுப் போற்றும் சீர்மை பொருந்திய கால எல்லை இனிதாய்க் கழியத் திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவர், தாமே மேகம் போன்ற வண்மையுடைய பிள்ளையாருக்குக் கனவில் தோன்றி அருள் செய்வாராய்,


பெ. பு. பாடல் எண் : 555
"தோணியில் நாம்அங்கு இருந்த வண்ணம்
            தூமறை வீழிமிழலை தன்னுள்
சேண்உயர் விண்ணின்று இழிந்த இந்தச்
            சீர்கொள் விமானத்துக் காட்டு கின்றோம்,
பேணும் படியால் அறிதி" என்று
            பெயர்ந்துஅருள் செய்ய, பெருந்த வங்கள்
வேணு புரத்தவர் செய்ய வந்தார்
            விரவும் புளகத் தொடும் உணர்ந்தார்.

            பொழிப்புரை : அச் சீகாழியில் `தோணியில் தாம் இருந்த காட்சியை இங்குத் தூய மறைவடிவாகிய திருவீழிமிழலையுள் விண் ணினின்றும் இழிந்த இந்தச் சிறப்புடைய விமானத்திடம் காணும்படி காட்டுகின்றோம். கண்டு வழிபடும் வகையினால் அறிவாயாக!' என்று கூறி மறைந்து போக, சீகாழிப் பதியினர் முன் செய்த தவத்தால் தோன்றிய பிள்ளையார், தம் உடலில் தோன்றிய மயிர்க்கூச்சலுடன் துயிலுணர்ந்து எழுந்தார்.


பெ. பு. பாடல் எண் : 556
அறிவுற்ற சிந்தைய ராய்எ ழுந்தே
            அதிசயித்து உச்சிமேல் அங்கை கூப்பி
வெறிஉற்ற கொன்றையி னார்ம கிழ்ந்த
            விண்ணிழி கோயிலில் சென்று புக்கு
மறிஉற்ற கையரைத் தோணி மேல்முன்
            வணங்கும் படிஅங்குக் கண்டு வாழ்ந்து
குறியில் பெருகும் திருப்ப திகம்
            குலவிய கொள்கையில் பாடு கின்றார்.

            பொழிப்புரை : விழிப்புற்ற சிந்தையுடையவராய் எழுந்து அதிசயம் அடைந்து, தலையின் மேலே அழகிய கைகளை வைத்துக் கூப்பித் தொழுது, மணம் பொருந்திய கொன்றை மலரைச் சூடிய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளும் விண்ணிழி விமானமுடைய கோயிலுள் புகுந்து மானேந்திய கையையுடைய இறைவரைத் திருத்தோணியின் மேல் முன் வணங்கும் அந்த வண்ணமே அங்குக் கண்டு, வாழ்வடைந்து, அக்குறிநிலையின் பெருமை காட்டும் திருப்பதிகத்தைப் பொருந்திய கொள்கையால் பாடுபவராய்,


பெ. பு. பாடல் எண் : 557
"மைம்மரு பூங்குழல்" என்று எடுத்து
            மாறுஇல் பெருந் திருத்தோணி தன்மேல்
"கொம்மை முலையினாள் கூட நீடு
            கோலம் குலாவும் மிழலை தன்னில்
செம்மை தருவிண் இழிந்த கோயில்
            திகழ்ந்த படிஇது என்கொல்" என்று
மெய்ம்மை விளங்கும் திருப்ப திகம்
            பாடி மகிழ்ந்தனர் வேத வாயர்.

            பொழிப்புரை : `மைம்மரு பூங்குழல்' (தி.1 ப.4) எனத் தொடங்கி ஒப்பில்லாத பெருந் திருத்தோணி மீது இளங் கொங்கையையுடைய திருநிலைநாயகி அம்மையாருடன் கூடநீடும் திருக்கோலம், விளக்கம் உடைய திருவீழிமிழலையில் செம்மை தருகின்ற விண்ணிழி விமானத் தில் விளங்க இருந்த வண்ணம் இது என்? என வினவும் பொருளுடன் உண்மை விளங்கும் திருப்பதிகத்தை, மறைவாயினரான சம்பந்தர் பாடியருளினார்.

            குறிப்புரை : `மைம்மரு பூங்குழல்' (தி.1 ப.4) எனத் தொடங்கும் திருப்பதிகம் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். `புகலி நிலாவிய புண்ணியனே, மிழலை விண்ணிழி கோயில் விரும்பியது என்கொல்? சொல்லாய்' எனும் பொருண்மை பாடல் தொறும் அமைந்திருத்தலின், அதுகொண்டு இவ்வரலாற்றுப் பின்னணியை ஆசிரியர் அமைத்துக் கூறுவாராயினர்.


பெ. பு. பாடல் எண் : 558
செஞ்சொல் மலர்ந்த திருப்ப திகம்
            பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி
அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார்
            ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து
மஞ்சுஇவர் சோலைப்புகலி மேவும்
            மாமறை யோர்தமை நோக்கி வாய்மை
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த
            நீர்மைத் திறத்தை அருள்செய் கின்றார்.

            பொழிப்புரை : செம்மையான சொற்கள் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடித் திருக்கடைக்காப்பும் பாடி நிறைவுசெய்து, கைகளைக் கூப்பி, நிலத்தில் விழுந்து எழுபவரான பிள்ளையார், பெருகிய ஆனந்தம் தம்மை அலைப்ப வெளியே வந்து, மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியினின்றும் வந்த மறையவர்களை நோக்கி, உண்மைவடிவாய்த் தம் உள்ளத்தில் நிறைந்த திருவருள் குறிப்பால் உணர்த்தப் பெற்ற அருளியல்பை அருளிச் செய்பவராய்,


பாடல் எண் : 559
பிரம புரத்தில் அமர்ந்த முக்கண்
            பெரிய பிரான்பெரு மாட்டி யோடும்
விரவிய தானங்கள் எங்கும் சென்று
            விரும்பிய கோயில் பணிந்து போற்றி
வருவது மேற்கொண்ட காதல் கண்டுஅங்கு
            அமர்ந்த வகைஇங்கு அளித்தது என்று
தெரிய உரைத்துஅருள் செய்து, "நீங்கள்
            சிரபுர மாநகர் செல்லும்" என்றார்.

            பொழிப்புரை : சீகாழியில் வீற்றிருக்கின்ற முக்கண்களை உடைய பெருமான், தம் பெருமாட்டியுடன் வீற்றிருக்கும் இடங்கள் எங்கும் சென்று, விரும்பிப் பணிந்து போற்றி வருதலை அப்பெருமான் தாம் அறிந்துகொண்டு, அங்குத் திருத்தோணியில் வீற்றிருந்த வகையினை இங்குக் காணுமாறு அளித்தார்\' என்று விளங்கக் கூறி, `நீங்கள் சீகாழிக்குச் செல்லுங்கள்\' என்றுரைத்தார்.

            குறிப்புரை : காழிக்காட்சியை வீழியிற் காட்டியது, காழிக்குத் தாம் வருதலைத் தவிர்க்கும் திருவுளக் குறிப்பாதலை உணர்ந்த பிள்ளையார், அங்கிருந்து அழைக்க வந்தார்க்குக் கூறி அனுப்பி வைத்தார்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.004   திருப்புகலி -  திருவீழிமிழலை       பண் – நட்டபாடை
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற
            வாள்நுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்கள்ஏத்தப்
            புகலி நிலாவிய புண்ணியனே,
எம்இறை யேஇமை யாதமுக்கண்
            ஈச,என் நேச, இது என்கொல்சொல்லாய்,
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை
            விண்இழி கோயில் விரும்பியதே.

            பொழிப்புரை :கற்றையாகச் செறிந்து கருமை மருவி வளர்ந்த அழகிய கூந்தலையும், ஒளி சேர்ந்த நுதலையும், மான் விழி போன்ற விழியையும் உடைய உமையம்மையோடு, பொய் பேசாத அந்தணர்கள் ஏத்தப் புகலியில் விளங்கும் புண்ணியம் திரண்டனைய வடிவினனே, எம் தலைவனே! இமையாத முக்கண்களை உடைய எம் ஈசனே!, என்பால் அன்பு உடையவனே, வாய்மையே பேசும் நான்மறையை ஓதிய அந்தணர் வாழும் திருவீழிமிழலையில் திருமாலால் விண்ணிலிருந்து கொண்டுவந்து நிறுவப்பட்ட கோயிலில் விரும்பியுறைதற்குரிய காரணம் என்னையோ? சொல்வாயாக!

            குருவருள்: `பொய் மொழியா மறையோர்` என்று காழி அந்தணர்களை எதிர்மறையால் போற்றிய ஞானசம்பந்தர் `மெய்ம்மொழி நான்மறையோர்` என வீழி அந்தணர்களை உடன்பாட்டு முகத்தால் கூறியுள்ள நுண்மை காண்க.`பொய்யர் உள்ளத்து அணுகானே` என்ற அருணகிரிநாதர் வாக்கினையும் இதனோடு இணைத்து எண்ணுக. சீனயாத்திரீகன் யுவான்சுவாங் என்பவன் தனது யாத்திரைக் குறிப்பில் பொய், களவு, சூது, வஞ்சகம் இல்லாதவர்கள் என இந்தியரின் சிறப்பைக் குறித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாம். ஞானசம்பந்தர் காலமும் யுவான்சுவாங் காலமும் கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆகும்.

  
பாடல் எண் : 2
கழல்மல்கு பந்தொடு அம்மானை முற்றில்
            கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழில்மல்கு கிள்ளையைச் சொல்பயிற்றும்
            புகலி நிலாவிய புண்ணியனே,
எழின்மல ரோன்சிரம் ஏந்திஉண்டுஓர்
            இன்புறு செல்வம் இது என்கொல்சொல்லாய்,
மிழலையுள் வேதியர் ஏத்திவாழ்த்த
            விண்இழி கோயில் விரும்பியதே.

            பொழிப்புரை :மகளிர்க்குப் பொருந்திய கழங்கு, பந்து, அம்மானை, முற்றில் ஆகிய விளையாட்டுகளைக் கற்ற சிற்றிடைக் கன்னிமார்கள், சோலைகளில் தங்கியுள்ள கிளிகட்குச் சொற்களைக் கற்றுக் கொடுத்துப் பேசச் செய்யும் திருப்புகலியில் விளங்கும் புண்ணியனே! அழகிய தாமரை மலரில் விளங்கும் பிரமனது தலையோட்டில் பலியேற்றுண்டு இன்புறும் செல்வனே! திருவீழிமிழலையில் வேதியர்கள் போற்றித் துதிக்க விண்ணிழி கோயிலை நீ விரும்பியதற்குக் காரணம் என்ன? சொல்வாயாக!


பாடல் எண் : 3
கன்னியர் ஆடல் கலந்துமிக்க
            கந்துக ஆடை கலந்துதுங்கப்
பொன்இயல் மாடம் நெருங்குசெல்வப்
            புகலி நிலாவிய புண்ணியனே,
இன்னிசை யாழ்மொழி யாள்ஓர் பாகத்து
            எம்இறையே, இது என்கொல்சொல்லாய்,
மின்இயல் நுண்இடை யார்மிழலை
            விண்இழி கோயில் விரும்பியதே.

            பொழிப்புரை :கன்னிப் பெண்கள் விளையாட்டை விரும்பிப் பந்தாடுதற்குரிய தெருக்களில் கூடியாட உயர்ந்த பொன்னிறமான அழகுடன் விளங்கும் மாடங்கள் நெருங்கும் செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே! யாழினது இனிய இசைபோலும் மொழி பேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட எம் தலைவனே! மின்னல் போன்ற நுண்ணிய இடையினை உடைய அழகிய மகளிர் மருவும் திருவீழிமிழலையில் விண்ணிழி விமானத்தை நீ விரும்பியதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக!


பாடல் எண் : 4
நாகப ணம் திகழ் அல்குல் மல்கு
            நல்நுதல் மான்விழி மங்கையோடும்
பூகவ னம்பொழில் சூழ்ந்த அந்தண்
            புகலி நிலாவிய புண்ணியனே,
ஏகபெ ருந்தகை ஆயபெம்மான்
            எம்இறையே, இது என்கொல்சொல்லாய்,
மேகம்உ ரிஞ்சுஎயில் சூழ்மிழலை
            விண்இழி கோயில் விரும்பியதே.

            பொழிப்புரை :பாம்பின் படம் போன்று திகழும் அல்குலையும், அழகு மல்கும் நுதலையும், மான் விழி போன்ற விழியையும் உடைய பார்வதிஅம்மையுடன் வளமான கமுகஞ்சோலைகள் சூழ்ந்து விளங்கும் அழகும் தண்மையும் உடைய சீகாழிப் பதியில் விளங்கும் புண்ணியனே! தன்னொப்பார் இன்றித் தானே முதலாய பெருமானே! எம் தலைவனே! மேகங்கள் தோயும் மதில்கள் சூழ்ந்த திருவீழி மிழலையில் விண்ணிழி விமானக் கோயிலை விரும்பியது ஏன்! சொல்வாயாக.


பாடல் எண் : 5
சந்துஅளறு ஏறு தடம்கொள் கொங்கைத்
            தையலொ டும்தள ராதவாய்மைப்
புந்தியி னால்மறை யோர்கள் ஏத்தும்
            புகலி நிலாவிய புண்ணியனே,
எந்தமை ஆள்உடை ஈச எம்மான்
            எம்இறையே, இது என்கொல்சொல்லாய்,
வெந்தவெண் நீறுஅணி வார்மிழலை
            விண்இழி கோயில் விரும்பியதே.

            பொழிப்புரை :சந்தனக் குழம்பு பூசிய பெரிதான தனங்களை உடைய உமையம்மையோடு, உண்மையில் தவறாத புத்தியினை உடைய நான்மறை அந்தணர்கள் போற்றும் புகலியில் விளங்கும் புண்ணியனே! எம்மை அநாதியாகவே ஆளாய்க் கொண்டுள்ள ஈசனே! எம் தலைவனே! எமக்குக் கடவுளே! வெந்த திருவெண்ணீற்றை அணிந்த அடியவர் வாழும் திருவீழிமிழலையுள் விண்ணிழி கோயிலை நீ விரும்புதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக!


பாடல் எண் : 6
சங்குஒளி இப்பி சுறாமகரம்
            தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல்
பொங்குஒலி நீர்சுமந்து ஓங்குசெம்மைப்
            புகலி நிலாவிய புண்ணியனே,
எங்கள்பி ரான்இமை யோர்கள்பெம்மான்
            எம்இறையே, இது என்கொல்சொல்லாய்,
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை
            விண்இழி கோயில் விரும்பியதே.

            பொழிப்புரை :ஒளி உடைய சங்கு, முத்துச் சிப்பிகள், சுறா, மகரம் ஆகிய மீன்கள், ஆகிய இவற்றைத் தாங்கி வரிசை வரிசையாய் வரும் கடல் அலைகளால் மேலும் மேலும் பொங்கும் ஒலியோடு கூடிய ஓதநீர் ஓங்கும் செம்மையான புகலியில் விளங்கும் புண்ணியனே! எங்கள் தலைவனே! இமையோர் பெருமானே! எம் கடவுளே! கதிரவன் தோயும் பொழில்களாற் சூழப்பெற்ற விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக!


பாடல் எண் : 7
காமன் எரிப்பிழம் பாகநோக்கிக்
            காம்புஅன தோளியொ டும்கலந்து
பூமரு நான்முகன் போல்வர்ஏத்தப்
            புகலி நிலாவிய புண்ணியனே,
ஈமவ னத்து எரி ஆட்டுஉகந்த
            எம்பெருமான், இது என்கொல்சொல்லாய்,
வீமரு தண்பொழில் சூழ்மிழலை
            விண்இழி கோயில் விரும்பியதே.

            பொழிப்புரை :மன்மதன் தீப்பிழம்பாய் எரியுமாறு கண்ணால் நோக்கி, மூங்கில் போலும் தோளினையுடைய உமையம்மையோடும் கூடி, தாமரை மலரில் விளங்கும் நான்முகன் போல்வார் போற்றப் புகலியில் விளங்கும் புண்ணியனே! சுடுகாட்டில் எரியாடலை விரும்பும் எம்பெருமானே! மலர்கள் மருவிய குளிர்ந்த பொழில்களால் சூழப் பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக!


பாடல் எண் : 8
இலங்கையர் வேந்துஎழில் வாய்த்ததிண்தோள்
            இற்றுஅல றவ்விரல் ஒற்றி ஐந்து
புலங்களைக் கட்டவர் போற்அந்தண்
            புகலி நிலாவிய புண்ணியனே,
இலங்குஎரி ஏந்திநின்று எல்லிஆடும்
            எம்இறையே, இது என்கொல்சொல்லாய்,
விலங்கல்ஒண் மாளிகை சூழ்மிழலை
            விண்இழி கோயில் விரும்பியதே.

            பொழிப்புரை :இலங்கையர் தலைவனாகிய இராவணன் அழகிய வலிய தோள்கள் ஒடிந்து, அலறுமாறு தன் கால் விரலால் சிறிது ஊன்றி, ஐம்புல இன்பங்களைக் கடந்தவர்களாகிய துறவியர் போற்ற, அழகிய தண்மையான புகலியில் விளங்கும் புண்ணியனே! விளங்கும் தீப்பிழம்பைக் கையில் ஏந்தி இரவில் இடுகாட்டில் ஆடும் எம் தலைவனே! மலை போன்ற ஒளி பொருந்திய மாளிகைகளால் சூழப்பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.


பாடல் எண் : 9
செறிமுள ரித்தவிசு ஏறிஆறும்
            செற்றுஅதில் வீற்றிருந் தானுமற்றைப்
பொறிஅர வத்துஅணை யானும்காணாப்
            புகலி நிலாவிய புண்ணியனே,
எறிமழு வோடுஇள மான்கைஇன்றி
            இருந்தபிரான், இது என்கொல்சொல்லாய்,
வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை
            விண்இழி கோயில் விரும்பியதே.

            பொழிப்புரை :மணம் செறிந்த தாமரைத் தவிசில் அறுவகைக் குற்றங்களையும் விலக்கி ஏறி அதில் வீற்றிருக்கும் நான்முகனும், புள்ளிகளையுடைய பாம்பினைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும் காண இயலாதவனாய்ப் புகலியில் விளங்கும் புண்ணியனே! பகைவரைக் கொல்லும் மழுவாயுதத்தோடு இளமான் ஆகியன கையின்கண் இன்றி விளங்கும் பெருமானே! மணம் கமழும் அழகிய பொழில்களால் சூழப்பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.


பாடல் எண் : 10
பத்தர்க ணம்பணிந்து ஏத்தவாய்த்த
            பான்மையது அன்றியும் பல்சமணும்
புத்தரும் நின்றுஅலர் தூற்றஅந்தண்
            புகலி நிலாவிய புண்ணியனே,
எத்தவத் தோர்க்கும்இ லக்காய்நின்ற
            எம்பெருமான், இது என்கொல்சொல்லாய்,
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை
            விண்இழி கோயில் விரும்பியதே.

            பொழிப்புரை :தன்னிடம் பத்திமையுடையோர் பணிந்து போற்றும் பான்மையோடுகூடச் சமணரும், புத்தரும் அலர் தூற்ற, அழகிய குளிர்ந்த புகலியின்கண் விளங்கும் புண்ணியனே! எவ் வகையான தவத்தை மேற்கொண்டோரும் அடைதற்குரிய இலக்காய் நின்ற எம்பெருமானே! சதுரப்பாடுடைய அறிஞர்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.


பாடல் எண் : 11
விண்இழி கோயில் விரும்பிமேவும்
            வித்தகம் என்கொல் இது என்றுசொல்லிப்
புண்ணிய னைப்புக லிந்நிலாவும்
            பூங்கொடி யோடு இருந் தானைப்போற்றி,
நண்ணிய கீர்த்தி நலம்கொள்கேள்வி
            நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன,
பண்இயல் பாடல்வல் லார்கள், இந்தப்
            பாரொடு விண்பரி பாலகரே.

            பொழிப்புரை :விண்ணிழி கோயில் விரும்பிய புண்ணியனைப் போற்றி ஞானசம்பந்தன் சொன்ன பாடல் வல்லார்கள் பாரொடு விண்ணகத்தையும் பரிபாலனம் புரிவர். புகலிப்பதியில் விளங்கும் புண்ணியனாய், அழகிய இளங்கொடி போன்ற உமையம்மையோடு விளங்குவானைத் துதித்துத் திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பிய வித்தகம் என்னையோ சொல்லாய் என்று கேட்டுப் புகழால் மிக்கவனும் நலம்தரும் நூற்கேள்வி உடையவனும் நான்மறை வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய பண்ணிறைந்த இப்பதிகத் திருப்பாடல்களை ஓதுபவர் நிலவுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆளும் சிறப்புடையவராவர்.

                                                            திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------------


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

            சைவசமயப் பரமாசாரியாராகிய திருஞானசம்பந்தப் பெருமானார் பாண்டி நாட்டில் எழுந்தருளி இருக்கின்ற பொழுது, குலச்சிறையாரும், மங்கையர்க்கரசியாரும் உடன் வர, பாண்டிய மன்னனின் வெப்பு நோயை நீக்க வந்தார். வானுலகத்தில் இருந்து மண்ணுலகத்து இருளை நீக்க வந்த மதிக்கொழுந்தாகிய பெருமானாரைக் கண்டவுடன், பாண்டியன் கண்ணாரக் கண்டு கையாரத் தொழுது வரவேற்றான். தனது தலைமாட்டின் பக்கம் பொன்னால் ஆன பீடத்தைக் காட்டிப் பெருமானை எழுந்தருளுவிக்கச் செய்தான். பெருமானாரைக் கண்ணாரக் கண்ட மாத்திரத்திலேயே, பாண்டின் தனது வெப்பு நோய் சிறிதே தணிந்ததைப் போல் உணர்ந்தான்.  அதுவரை அழிவுற்று இருந்த அவன் மனமானது இப்பொழுது நேர் நின்றது. பெருமானாரைப் பாரத்து, "தேவரீர் திருப்பதி யாது?" என வினவினான் செல்கதிக்கு அணியன் ஆன பாண்டியன்.  "பொன்னி வளநாட்டுக் கன்னி மதில் தவழும் கழுமலம் நாம் கருதும் ஊர்" என்று பன்னிருபெயர்க் கொண்டு இத் திருப்பதிகத்தினைப் பெருமான் அருளிச் செய்தார்.


பெரிய புராணப் பாடல் எண் : 751
குலச்சிறை யார்முன்பு எய்தக் கொற்றவன் தேவி யாரும்
தலத்திடை இழிந்து சென்றார், தண்தமிழ் நாட்டு மன்னன்,
நிலத்திடை வானின் நின்று நீள்இருள் நீங்க வந்த
கலைச்செழுந் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டான்.

            பொழிப்புரை : மன்னனிடம் அறிவித்த பின்பு, குலச்சிறையார் ஞானசம்பந்தரின் திருமுன்பு சேர, அரசமாதேவியாரும் அரண்மனை வந்து தம் சிவிகையினின்றும் இறங்கி வந்தனர். குளிர்ந்த தமிழ் நாட்டின் மன்னனான பாண்டியன், வானத்தினின்றும் நீண்ட இருள் நீங்குமாறு, நிலத்தில் வந்து நிறைந்த, நிறை நிலவு எனவரும் கவுணியர் பெருமானைக் கண்டான்.


பெ. பு. பாடல் எண் : 752
கண்டஅப் பொழுதே வேந்தன் கைஎடுத்து, எய்த நோக்கித்
தண்துணர் முடியின் பாங்கர்த் தமனியப் பீடம் காட்ட,
வண்தமிழ் விரகர் மேவி அதன்மிசை இருந்தார், மாயை
கொண்டவல் லமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார்.

            பொழிப்புரை : பார்த்த அப்பொழுதே மன்னன் கைகளைத் தூக்கி வழிபடும் பண்பினை நோக்கி, குளிர்ந்த மலர்களையுடைய தன் முடியின் பக்கத்தில் இடப்பட்ட பீடத்தில் அமருமாறு கைகளைக் காட்டிட, வளம் மிக்க தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் அப்பீடத்தின் மீது அமர்ந்தருளினர். மாயங்களைக் கொண்ட அமணர்கள் எல்லோ ரும் தம் மனத்துள் எழுந்த குறிப்பால் அச்சம் கொண்டனர்.


பெ. பு. பாடல் எண் : 753
செழியனும் பிள்ளை யார்தம் திருமேனி காணப் பெற்று
விழியுற நோக்க லாலே, வெம்மைநோய் சிறிது நீங்கி,
அழிவுறும் மனம் நேர்நிற்க, அந்தணர் வாழ்வை நோக்கி,
"கெழுவுறு பதியாது" என்று விருப்புடன் கேட்ட போது.

            பொழிப்புரை : பாண்டியனும் ஞானசம்பந்தரின் திருமேனியைக் காணப் பெற்றவனாய், விழி பொருந்த நோக்கியதால், வெப்பு நோய் மேலும் சிறிது நீங்கப் பெற்று, ஒருநிலையில் நில்லாத தன் மனம் ஒருமையுற்று நிற்ப, அந்தணர் தம் பெருவாழ்வெனத் தோன்றிய ஞானசம்பந்தரைப் பார்த்து, `உமது ஊர் யாது?\' என்று விருப்புடன் வினவ,

            குறிப்புரை : முன்னர் மீனவன் செவியினூடு ஞானசம்பந்தர் என்னும் நாமமந்திரம் சொல்ல அவன், அயர்வு நீங்கியது என்றார். பின்னர் அவர் தம் திருவுருக் கண்டபோது, வெப்பு நோய் சிறிது நீங்கவும் மனம் ஒரு நெறிப்படவுமானது என்றார். இதுபொழுது அவரைப் பார்த்த அளவில் அவரது ஊர் யாது எனக் கேட்க, அவரும் தம் திருவாயாலேயே சொல்ல, அதனைக் கேட்கவும் நேருகிறது. படிப்படியாக நிகழ்வுறும் இந்நிகழ்ச்சி, `முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள், பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்' எனவரும் அருள் வாக்கை நினைவு கூரவைக்கும். இது பெண்ணின் அநுபவம், பெருமானின் பெயரும் வண்ணமும் ஊரும் கேட்கும் அளவில் அமைகிறது. இப்பாண்டியனின் அநுபவமோ காணும் பேற்றையும் பெறுமாறு அமைந்துள்ளது. இனி, அவள்தன் தலைவனின் ஆரூரைப் பிறர் சொல்லக் கேட்க, பாண்டியனோ ஊரின் பெயரை உரியவரே சொல்லக் கேட்கின்றான். அவள் பெற்ற அநுபவம் அகவழியது. பாண்டியன் பெறும் அநுபவம் புறவழியது; குருவருள் அநுபவமாக அமைவது, இனி ஞானச் செல்வரின் திருக்கைகளால் திருநீறு பூசப்பெறும் பேறும், அவர்தம் உரையளவானும், பதிக அளவானும் கேட்கப் பெறும் உபதேசப் பேறும் பெறவுள்ளமையும் நினைவு கூரத் தக்கன. இவ்வாறெல்லாம் ஒப்பிட்டுக் காண உவகை தரும்.


பெ. பு. பாடல் எண் : 754
"பொன்னிவளம் தருநாட்டுப் புனற்பழனப் புறம்பணைசூழ்
கன்னிமதிற் கழுமலம்நாம் கருதும்ஊர்" எனச்சிறந்த
பன்னிரண்டு பெயர்பற்றும் பரவியசொல் திருப்பதிகம்
தென்னவன்முன்பு அருள்செய்தார் திருஞான சம்பந்தர்.

            பொழிப்புரை : காவிரியாறு பாய்ந்து வளத்தை அளிக்கும் சோழ நாட்டில் நீர் நிறைந்த வயல்களையுடைய மருத நிலம் சூழ்ந்த அழியாத மதிலால் சூழப்பெற்ற `திருக்கழுமலம்\' (சீகாழி) என்பது எமது ஊரா கும் என்று சிறப்புடைய பன்னிரண்டு பெயர்களையும் போற்றிய கருத் துடைய திருப்பதிகத்தை ஆளுடைய பிள்ளையார் அம்மன்னனின் முன்பு பாடியருளினார்.

            குறிப்புரை : `பிரமனூர்' (தி.2 ப.70) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகத்தில் காழிக்குரிய பன்னிரண்டு பெயர்களுள.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

2.070   திருக்கழுமலம் திருச்சக்கரமாற்று        பண் - காந்தாரம்
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பிரமனூர், வேணுபுரம், புகலி,
            வெங்குரு, பெருநீர்த் தோணி
புரம்,மன்னு பூந்தராய், பொன்னம்
            சிரபுரம், புறவம், சண்பை,
அரன்மன்னு தண்காழி, கொச்சை
            வயம், உள்ளிட்டுஅங்கு ஆதி ஆய,
பரமன்ஊர் பன்னிரண்டாய் நின்றதிருக்
            கழுமலம், நாம் பரவும் ஊரே.

            பொழிப்புரை :இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப்பெயர்களைத் தனித்தனியே முதலிற் கொண்டு பன்னிரு பாடல்களாக அமைந்துள்ளது. கழுமலத்தின் பெயரை மட்டும் பெரும்பாலும் முடிவாகக் கொண்டுள்ளது. நாம் பரவும் ஊர் பிரமனூர் முதலாகக் கொச்சைவயம் உள்ளிட்ட பன்னிரண்டு திருப்பெயர்களை உடைய கழுமலமாகும்.


பாடல் எண் : 2
வேணுபுரம், பிரமனூர், புகலி,பெரு
            வெங்குரு, வெள்ளத்து ஓங்கும்
தோணிபுரம், பூந்தராய், தூநீர்ச்
            சிரபுரம், புறவம், காழி,
கோணிய கோட்டாற்றுக் கொச்சை
            வயம்,சண்பை கூரும் செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும்
            கழுமலம்நாம் கருதும் ஊரே.

            பொழிப்புரை :நாம் கருதும் ஊர் வேணுபுரம் முதலாக சண்பைச் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு செல்வம் கருதிய வையகத்தார் ஏத்தும் கழுமலமாகும்.


பாடல் எண் : 3
புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை, புறவம், காழி,
நிகர்இல் பிரமபுரம், கொச்சைவயம், நீர்மேல் நின்ற மூதூர்,
அகலிய வெங்குருவோடு, அந்தண் தராய், அமரர் பெருமாற்கு இன்பம்
பகரு நகர்நல்ல கழுமலம்நாம் கைதொழுது பாடும் ஊரே.

            பொழிப்புரை :நாம் கைதொழுது பாடும் ஊர் புகலி முதலாக பூந்தராய் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக்கொண்ட, சிவபெருமானுக்கு இன்பம் தரும் நல்ல கழுமலமாகும்.


பாடல் எண் : 4
வெங்குரு, தண்புகலி, வேணுபுரம்,
            சண்பை, வெள்ளம் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம், பூந்தராய்,
            தொகுபிரம புரம்,தொல் காழி,
தங்கு பொழிற்புறவம், கொச்சை
            வயம்,தலைபண்டு ஆண்ட மூதூர்
கங்கை சடைமுடிமேல் ஏற்றான்
            கழுமலம்நாம் கருதும் ஊரே.

            பொழிப்புரை :நாம் கருதும் ஊர் வெங்குரு முதலாக சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடையதும், கங்கையணிந்த சடை முடியினை உடைய சிவபிரான் எழுந்தருளியதும் ஆகிய கழுமலமாகும்.


பாடல் எண் : 5
தொல்நீரில் தோணிபுரம், புகலி, வெங்குரு, துயர்தீர் காழி,
இன்னீர வேணுபுரம், பூந்தராய், பிரமனூர், எழில்ஆர் சண்பை,
நல்நீர பூம்புறவம், கொச்சை வயம்,சிலம்பன் நகரா, நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழும்ஊரே.

            பொழிப்புரை :நாம் புகழும் ஊர், கடல்மேல் மிதந்த தோணிபுரம் முதலாகச் சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும், நல்ல பொன் போன்ற சடையினை உடையான் எழுந்தருளியதுமான பொலிவுடைய கழுமலமாகும்.


பாடல் எண் : 6
தண்அம் தராய்,புகலி, தாமரையான் ஊர்,சண்பை, தலைமுன்ஆண்ட
வண்ண நகர்கொச்சை வயம்,தண் புறவம்,சீர் அணிஆர் காழி,
விண்ணியல்சீர் வெங்குரு,நல் வேணுபுரம், தோணிபுரம், மேலால் ஏந்து
கண்ணுதலான் மேவியநல் கழுமலம்நாம் கைதொழுது கருதும் ஊரே.

            பொழிப்புரை :நாம் கைதொழுது கருதும் ஊர், தண்மையான பூந்தராய் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடைய இருகண்களுக்கு மேல் நெற்றியில் நிமிர்ந்துள்ள கண்ணை உடையோனாகிய சிவபிரான் மேவிய கழுமலமாகும்.


பாடல் எண் : 7
சீர்ஆர் சிரபுரமும், கொச்சைவயம், சண்பையொடு, புறவம், நல்ல
ஆராத் தராய்,பிரம னூர்,புகலி, வெங்குருவொடு அந்தண் காழி,
ஏரார் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம், என்று என்றுஉள்கிப்
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பரிய பெருமான் ஊரே.

            பொழிப்புரை :சீர் பொருந்திய சிரபுரம் முதலாகத் தோணிபுரம் நிறைவாய்ப் பன்னிரு திருப்பெயர்களை நினைந்து இவ்வூரைப் பிரியாதவனாய், திருமாலும் பிரமனும் வழிபட்டும் காண்பரிய பெருமானாய் உள்ள சிவபிரானது ஊர் கழுமலம்.


பாடல் எண் : 8
புறவம், சிரபுரமும்,  தோணிபுரம், சண்பை,மிகு புகலி, காழி,
நறவ மிகுசோலைக் கொச்சை வயம்,தராய், நான்முகன் தன்ஊர்,
விறல்ஆய வெங்குருவும், வேணுபுரம், விசயன் மேல் அம்புஎய்து
திறலால் அரக்கனைச் செற்றான்தன் கழுமலம்நாம் சேரும் ஊரே.

            பொழிப்புரை :நாம் சேர்வதற்குரிய ஊர் புறவம் முதலாக வேணுபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டது. அது அருச்சுனனோடு விற்போர் செய்தவனும் இராவணனை அடர்த்தவனும் ஆகிய சிவபிரானது கழுமலமாகும்.


பாடல் எண் : 9
சண்பை, பிரமபுரம், தண்புகலி, வெங்குரு,நல் காழி, சாயாப்
பண்புஆர் சிரபுரமும், கொச்சை வயம்,தராய், புறவம், பார்மேல்
நண்புஆர் கழுமலம்,சீர் வேணுபுரம், தோணிபுரம், நாண்இலாத
வெண்பல் சமணரொடு சாக்கியரை வியப்புஅழித்த விமலன் ஊரே.

            பொழிப்புரை :நாணமற்ற வெண்பற்களைக்கொண்ட சமணர்கள், சாக்கியர்கள் ஆகியோரின் பெருமைகளை அழித்த விமலனது ஊர், சண்பை முதலாகத் தோணிபுரம் ஈறாகப் பன்னிரு பெயர்களைக் கொண்ட ஊராகும்.


பாடல் எண் : 10
செழுமலிய பூங்காழி, புறவம், சிரபுரம்,சீர்ப் புகலி, செய்ய
கொழுமலரான் நல்நகரம், தோணிபுரம், கொச்சைவயம், சண்பை, ஆய
விழுமியசீர் வெங்குருவொடு, ஓங்குதராய், வேணுபுரம், மிகுநன் மாடக்
கழுமலம். என்று இன்னபெயர் பன்னிரண்டும் கண்ணுதலான் கருதும்                                                                        ஊரே.

            பொழிப்புரை :செழுமையான அழகிய காழி முதலாக வேணுபுரம் ஈறாகப் பன்னிருபெயர்களைக் கொண்டது கண்ணுதலான் கருதும் ஊராகும்.

   
பாடல் எண் : 11
கொச்சை வயம்,பிரமனூர், புகலி, வெங்குரு, புறவம்,  காழி,
நிச்சல் விழவுஓவா நீடார் சிரபுரம், நீள் சண்பை மூதூர்,
நச்சஇனிய பூந்தராய், வேணுபுரம், தோணிபுரம், ஆகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரும் ஊரே.

            பொழிப்புரை :நாம் விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும் நம்மேல் வரும் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான கழுமலமாகும்.


பாடல் எண் : 12
காவி மலர்புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை, நாளும்
பாவியசீர்ப் பன்னிரண்டு நல் நூலாப் பத்திமையால், பனுவன் மாலை,
நாவில் நலம்புகழ்சீர் நான்மறையான், ஞானசம் பந்தன் சொன்ன,
மேவிஇசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு உளாரே.

             பொழிப்புரை :குவளை மலர் போலும் கண்களை உடைய மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை நாள்தோறும் புகழ்மிக்க பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன் பாடிய இப்பனுவல்மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில் ஒருவராக எண்ணப்பெறும் மேலான விருப்புடையவர் ஆவர்.
                                                            திருச்சிற்றம்பலம்
-----------------------------------------------------------------------------------------------------------

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 873
செய்தவத்தால் சிவபாத இருதயர்தாம் பெற்றுஎடுத்த
வைதிகசூ ளாமணியை, மாதவத்தோர் பெருவாழ்வை,
மைதிகழும் திருமிடற்றார் அருள்பெற்ற வான்பொருளை,
எய்திய பூம் புகலியிலே இருந்தநாள் மிகநினைந்தார்.

            பொழிப்புரை : முன் செய்த தவத்தால் பெற்றெடுத்த சிவபாத இருதயரும், தம் திருமகனாராய் மறைவழிப் பட்டவர்களின் மணி முடியாய் நிற்பவரை, மாதவத்தோர்களாகிய சிவஞானியர்களின் பெருவாழ்வாக இருந்தருளுபவரை, நஞ்சுடைய திருக்கழுத்தை உடைய இறைவரின் திருவருள் பெற்று மெய்ப் பொருளாய் விளங்கு பவரைச் சீகாழியில் தங்கியிருந்த அந்நாள்களில் மிகவும் நினைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 874
"ஆனபுகழ்த் திருநாவுக் கரசர்பால் அவம்செய்த
மானம்இலா அமணருடன் வாதுசெய்து வெல்வதற்கும்
மீனவன்தன் நாடுஉய்ய வெண்ணீறு பெருக்குதற்கும்
போனவர்பால் புகுந்தபடி அறிவன்"எனப் புறப்படுவார்.

            பொழிப்புரை : `திருவருளாலாய புகழையுடைய திருநாவுக் கரசரிடம் பிழை செய்த, மானம் இல்லாத சமணர்களுடன் வாதம் செய்து, அவரை வெற்றி கொள்வதற்கும், பாண்டிய நாடு உய்யும் வண்ணம் திருநீற்று நெறியைப் பெருக்குதற்கும் சென்றருளிய பிள்ளையாரிடம் நிகழ்ந்தவற்றை அறிவேன்\' என்று சிவபாத இருதயர் புறப்படுவாராகி,


பெ. பு. பாடல் எண் : 875
துடிஇடையாள் தன்னோடும் தோணியில் வீற்றிருந்தபிரான்
அடிவணங்கி, அலர்சண்பை அதனின்றும் வழிக்கொண்டு,
படியின்மிசை மிக்குஉளவாம் பரன்கோயில் பணிந்துஏத்தி,
வடிநெடுவேல் மீனவன்தன் வளநாடு வந்துஅணைந்தார்.

            பொழிப்புரை : துடியைப் போன்ற இடையுடைய திருநிலை நாயகியம்மையாருடனாகத் திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கி, அழகிய சீகாழியினின்றும் புறப்பட்டு வரும் வழியில் இம்மண்ணுலகில் மேம்பட்டு விளங்கும் சிவபெருமானின் கோயில்கள் பலவற்றையும் வணங்கிப் போற்றிக் கூரிய வேல் ஏந்திய பாண்டியனின் வளம்மிக்க நாட்டில் வந்து சேர்ந்தார்.

  
பெ. பு. பாடல் எண் : 876
மாமறை யோர் வளம்பதிகள் இடைத்தங்கி வழிச்செல்வார்
தேமருவு நறும்பைந்தார்த் தென்னவன்தன் திருமதுரை
தாம்அணைந்து திருஆல வாய்அமர்ந்த தனிநாதன்
பூமருவும் சேவடிக்கீழ்ப் புக்குஆர்வத் தொடுபணிந்தார்.

            பொழிப்புரை : சிறந்த அந்தணரான சிவபாத இருதயர், வளம் மிக்க பாண்டிய நாட்டுப் பதிகளுள் தங்கிச் செல்வாராய்த் தேன் பொருந்திய மணம் கமழும் பசுமையான வேப்ப மாலையையுடைய பாண்டியனின் தலைநகரமான மதுரையை அடைந்து, திருஆலவாயில் விரும்பி வீற்றிருக்கும் ஒப்பற்ற முதல்வரான சொக்கநாதப் பெருமா னின் மலர்கள் பொருந்திய சிவந்த திருவடிகளின் கீழ்ச் சென்று மிக்க ஆர்வத்துடன் வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 877
அங்கணரைப் பணிந்துபோந்து, அருகுஅணைந்தார் தமைவினவ,
"இங்குஎம்மைக் கண்விடுத்த காழியார் இளஏறு
தங்கும்இடம் திருநீற்றுத் தொண்டர்குழாஞ் சாரும்இடம்
செங்கமலத் திருமடம்மற்று இது" என்றே தெரிந்துஉரைத்தார்.

            பொழிப்புரை : இறைவரை வணங்கி வெளியே வந்து அருகில் வந்து சேர்ந்த நகர மக்களான அடியார்களை, ஞானசம்பந்தர் தங்கியுள்ள மடம் hற்றி வினவ, இங்குக் குருடராய் இருந்த எம்மைக் கண் திறக்கச் செய்து ஒளிநெறி காட்டிய சீகாழிப் பதியினரின் இளஞ்சிங்கமான திருஞானசம்பந்தர் தங்கும் இடமாவது, திருநீற்றுத் தொண்டர் கூட்டம் சூழும் இடமாய்ச் செந்தாமரை போன்ற திருமடம் இதுவேயாகும் என அவர்கள் அறிந்து கூறினர்.


பெ. பு. பாடல் எண் : 878
செப்புதலும் அதுகேட்டுத் திருமடத்தைச் சென்றுஎய்த,
"அப்பர்எழுந் தருளினார்" எனக்கண்டோர் அடிவணங்கி,
ஒப்பில்புகழ்ப் பிள்ளையார் தமக்குஓகை உரைசெய்ய
"எப்பொழுது வந்துஅருளிற்று" என்று எதிரே எழுந்தருள.

            பொழிப்புரை : அவர்கள் அங்ஙனம் கூறக் கேட்ட சிவபாத இருதயர், அம்மடத்தில் சென்று சேர, அங்கு அவரைக் கண்டவர்கள் அடிவணங்கி, ஒப்பில்லாத புகழையுடைய ஞானசம்பந்தருக்கு, அந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கூறவே, அவர் `எப்பொழுது வந்தருளி யது\' என வினவிக் கொண்டு எதிரே எழுந்தருள,


பெ. பு. பாடல் எண் : 879
சிவபாத இருதயர்தாம் முன்தொழுது சென்றஅணையத்
தவமான நெறிஅணையும் தாதையார் எதிர்தொழுவார்,
அவர் சார்வு கண்டுஅருளித் திருத்தோணி அமர்ந்துஅருளிப்
பவபாசம் அறுத்தவர்தம் பாதங்கள் நினைவுற்றார்.

            பொழிப்புரை : சிவபாத இருதயர் தாம் அப்பிள்ளையார் முன்பு தொழுது சென்றருளத் தவநெறியில் நின்றருளும் தந்தையார் எதிரில், தாமும் தொழுவாராகி, பிள்ளையார், அவரைக் கண்ட அளவில் திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் பிறவிப் பிணிப்பை அறுத் தருளியவரான தோணியப்பரின் திருவடியினை நினைவு கூர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 880
இருந்தவத்தோர் அவர்முன்னே இணைமலர்க்கை குவித்துஅருளி,
"அருந்தவத்தீர், எனைஅறியாப் பருவத்தே எடுத்துஆண்ட
பெருந்தகை,எம் பெருமாட்டி உடன்இருந்ததே" என்று
பொருந்துபுகழ்ப் புகலியின்மேல் திருப்பதிகம் போற்றிசைத்தார்.

            பொழிப்புரை : பெரிய தவத்தினரான அச்சிவபாத இருதயர் முன்னே, மலர் அனைய இரண்டு கைகளையும் கூப்பியருளி, `அரிய தவத்தையுடையவரே! என்னை அறியாப் பருவத்தில் எடுத்தாண்ட பெருந்தகையாரான தோணியப்பர் எம் பெரியநாயகி அம்மையா ருடன் நன்கு எழுந்தருளியிருந்ததே!\' என்ற கருத்துடன் பொருந்தும் புகழுடைய சீகாழியின் மேல் திருப்பதிகத்தினைப் பாடுபவராய்,


பெ. பு. பாடல் எண் : 881
"மண்ணில்நல்ல" என்றெடுத்து மனத்துஎழுந்த பெருமகிழ்ச்சி
உள்நிறைந்த காதலினால் கண்அருவி பாய்ந்துஒழுக,
அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள்செய்தார்
தண்நறும்பூஞ் செங்கமலத் தார்அணிந்த தமிழ்விரகர்.

            பொழிப்புரை : `மண்ணில் நல்ல\' என்று தொடங்கித் திருவுள் ளத்தில் எழுந்த பெருமகிழ்ச்சியுடன் உளம் நிறைந்த ஆசைப் பெருக் கால், கண்களிலிருந்து அருவி எனக் கண்ணீர் பாய்ந்து வழிய, தோணி யப்பர் இனிதாய் இருந்தமை பற்றித் தம் தந்தையை வினவிக் குளிர்ந்த மணமுடைய அழகிய செந்தாமரை மாலையை அணிந்த தமிழ் வல்லுந ரான பிள்ளையார் திருப்பதிகத்தைத் திருவாய் மலர்ந்தருளினார்.

            குறிப்புரை : இத்தொடக்கமுடைய திருப்பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.3 ப.24). ஒருவர் தம் பதியை விடுத்துப் பிறபதிக்குச் சென்று அங்குத் தங்கியிருக்கும்பொழுது, தம் பதியிலிருந்து ஒருவர் வரக் காணின், நம்மவர் நலமாக இருக்கின்றார்களா? என வினவுதல் இயற்கை. உலகியல் வயப்பட்ட இவ்வழக்கு, அருளியல் வயப்பட்ட பிள்ளையாரிடமும் அமைந்திருந்தது. எனினும் இவ்வினா அருளியல் வயப்பட்டதாய்த் தம் உடல் தந்தையாரைக் கண்ட பொழுதே உயிர்த் தந்தையாரும், தாயாரும் திருவுள்ளத்திற்கு வர அருளப்பட்டதாகும். தோணிபுரத்து வீற்றிருக்கும் அம்மையப்பரிடம் அவருக்கிருந்த உணர்வுதானும் அரியதும் பெரியதும் ஆயதை இந் நிகழ்ச்சி விளக்குவதாகும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

3. 024    திருக்கழுமலம்                              பண் - கொல்லி
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம், வைகலும்
எண்ணில், நல்ல கதிக்கு யாதும்ஓர் குறைவுஇலை,
கண்ணில்நல் அஃதுஉறும், கழுமல வளநகர்ப்
பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.

            பொழிப்புரை :உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம் . தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம் . இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


பாடல் எண் : 2
போதைஆர் பொற்கிண்ணத்து அடிசில்பொல் லாதுஎனத்
தாதையார் முனிவுறத் தான்எனை ஆண்டவன்,
காதைஆர் குழையினன், கழுமல வளநகர்ப்
பேதையாள் அவளொடும், பெருந்தகை இருந்ததே.

            பொழிப்புரை :பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட , பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து ` யார் தந்த அடிசிலை உண்டனை ?` என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார் . அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 3
தொண்டுஅணை செய்தொழில் துயர்அறுத் துஉய்யலாம்,
வண்டுஅணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்துணை நெற்றியான், கழுமல வளநகர்ப்
பெண்துணை ஆக,ஓர் பெருந்தகை இருந்ததே.

            பொழிப்புரை :தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு , வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும் , நெற்றியில் ஒரு கண் கொண்டும் , கழுமலம் என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 4
அயர்வுஉளோம் என்று,நீ அசைவுஒழி, நெஞ்சமே,
நியர்வளை முன்கையாள் நேரிழை அவளொடும்
கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே.

            பொழிப்புரை :நெஞ்சமே ! வினையால் இத்துன்பம் வந்தது என்று எண்ணித் தளர்ச்சியுற்றுச் சோம்பியிருத்தலை ஒழிப்பாயாக . ( இறைவனை வழிபட்டு இத்துன்பத்திலிருந்து விடுபடவேண்டும் என்பது குறிப்பு ). ஒளிமிக்க வளையல்கள் முன்கைகளில் விளங்க , சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு , கயல்மீன்கள் அருகிலுள்ள வயல்களில் குதிக்குமாறு நீர்வளமும் , நிலவளமுமிக்க திருக்கழுமலம் என்னும் வளநகரில் பல பெயர்கள் கூறிப் போற்றும்படி பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 5
அடைவுஇலோம் என்று, நீ, அயர்வுஒழி நெஞ்சமே,
விடைஅமர் கொடியினான், விண்ணவர் தொழுதுஎழும்
கடைஉயர் மாடம்ஆர் கழுமல வளநகர்ப்
பெடைநடை அவளொடும், பெருந்தகை இருந்ததே.

            பொழிப்புரை :நெஞ்சமே ! நமக்குப் புகலிடம் இல்லையே என்று தளர்ச்சி அடைவதை ஒழிப்பாயாக ! இடபக் கொடியினைக் கொண்டு விண்ணவர்களும் தொழுது போற்றும்படி , கடைவாயில்கள் உயர்ந்த மாளிகைகளையுடைய கழுமலம் என்னும் வளநகரில் பெண்அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 6
மற்றொரு பற்றுஇலை, நெஞ்சமே, மறைபல
கற்றநல் வேதியர், கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேர்அல்குல் திருந்துஇழை அவளொடும்
பெற்று,எனை ஆள்உடைப் பெருந்தகை இருந்ததே.

            பொழிப்புரை :நெஞ்சமே ! இறைவனைத் தவிர மற்றோர் பற்று எதுவுமில்லை . நான்கு வேதங்களையும் நன்கு கற்று , கற்றதன்படி ஒழுகுகின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கழுமலம் என்னும் வளநகரில் சிற்றிடையும் , பெரிய அல்குலும் உடைய , அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு , என்னை ஆட்கொண்ட பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 7
குறைவளை வதுமொழி குறைவுஒழி நெஞ்சமே,
நிறைவளை முன்கையாள் நேர்இழை அவளொடும்,
கறைவளர் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே.

            பொழிப்புரை :நெஞ்சமே ! மனக்குறை கொண்டு மொழியும் சொற்களை விடுவாயாக . நிறைந்த வளையல்களை முன்கையில் அணிந்து , சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு , இருண்ட சோலைகளையுடைய அழகிய திருக்கழுமலம் என்னும் வளநகரில் , பிறைச்சந்திரனைச் சடைமுடியில் சூடிப் பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 8
அரக்கனார் அருவரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால், நீடுயாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான், கழுமல வளநகர்ப்
பெருக்குநீர் அவளொடும், பெருந்தகை இருந்ததே.

            பொழிப்புரை :பெருமையுடைய கயிலைமலையை எடுத்த அரக்கனான இராவணன் அலறும்படி தம் காற்பெருவிரலை ஊன்றி இறைவர் அம்மலையின்கீழ் அவனை நெருக்கினார் . பின் அவன் தன் தவறுணர்ந்து நீண்ட யாழை எடுத்து இன்னிசையோடு பாட , கூர்மையான வாளை அருளினார் . திருக்கழுமலம் என்னும் வளநகரில் உயிர்கட்கு மிக்க இன்னருள் செய்யும் உமாதேவியோடு பெருந்தகை யாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 9
நெடியவன் பிரமனும் நினைப்பரிது ஆய்அவர்
அடியொடு முடிஅறி யாஅழல் உருவினன்,
கடிகமழ் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிடிநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே.

            பொழிப்புரை :நினைந்துருகும் தன்மையில்லாத திருமாலும், பிரமனும் அடிமுடி அறியாவண்ணம் சிவபெருமான் அழலுருவாய் ஓங்கி நின்றனன் . நறுமணம் கமழும் சோலைகளை உடைய திருக்கழுமலம் என்னும் வளநகரில் பெண்யானையின் நடைபோன்று விளங்கும் நடையை உடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 10
தார்உறு தட்டுஉடைச் சமணர்சாக் கியர்கள்தம்
ஆர்உறு சொல்களைந்து, அடியிணை அடைந்துஉய்ம்மின்,
கார்உறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேர்அறத் தாளொடும், பெருந்தகை இருந்ததே.

            பொழிப்புரை :மாலை போன்று, பாயை விரும்பி ஆடையாக அணிந்துள்ள சமணர்களும், புத்தர்களும், இறையுண்மையை எடுத்துரைக்காது, தமக்குப் பொருந்தியவாறு கூறுதலால், அவற்றை விடுத்து , இறைவனின் திருவடிகளை வழிபட்டு உய்வீர்களாக . பசுமைவாய்ந்த அழகிய சோலைகள் வளர்ந்துள்ள திருக்கழுமலம் என்னும் வளநகரில் பேரறத்தாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 11
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோடு இருந்தஎம் பிரான்தனை,
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவார், அவர்கள்போய் விண்ணுலகு ஆள்வரே.

            பொழிப்புரை :நீர்வளமும் , தேன்வளமும் பெருகிய திருக்கழுமல வளநகரில் , மேல்நோக்கி வளைந்த பெரிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவ பெருமானை , அருந்தமிழ் வல்லவனான ஞானசம்பந்தன் செழுந்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓத வல்லவர்கள் விண்ணுலகை ஆள்வர் .
                                                            திருச்சிற்றம்பலம்
                                                                                                               ----- தொடரும் -----


No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...