சீர்காழி - 6


2.059   சீகாழி                              பண் - காந்தாரம்
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நலங்கொள் முத்தும் மணியும் அணியும் திரள்ஓதம்
கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி,
வலங்கொள் மழுஒன்று உடையாய், விடையாய், எனஏத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா அருநோயே.

            பொழிப்புரை :அழகிய முத்துக்கள், மணிகள் அணிகலன்கள் ஆகியவற்றை நீர்ப் பெருக்குடைய கடலின் மரக்கலங்கள் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் ஆரவாரமுடைய காழிப்பதியில் வெற்றி விளைக்கும் மழு ஒன்றை ஏந்தியவனே! விடையூர்தியனே! என ஏத்தி மலர்மாலை முதலியன சூட்டி வழிபட வல்லாரைத் தீர்தற்கரிய நோய்கள் அடையா.


பாடல் எண் : 2
ஊர்ஆர் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து
கார்ஆர் ஓதம்  கரைமேல் உயர்த்தும் கலிக்காழி,
நீர்ஆர் சடையாய், நெற்றிக் கண்ணா, என்று என்று
பேர்ஆ யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.

            பொழிப்புரை :ஊர்தலை உடைய கடற் சங்குகளை மரக்கலங்கள் கடல் ஓதநீர் வழியே கொண்டு வந்து கரையில் சேர்க்கும் கலிக்காழியில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடையனே! நெற்றிக்கண்ணா! என்று பல முறையும் அவனது பேர் ஆயிரமும் பிதற்றப் பிணிகள் தீரும்.

  
பாடல் எண் : 3
வடிகொள் பொழிலின் மழலை வரிவண்டு இசைசெய்யக்
கடிகொள் போதில் தென்றல் அணையும் கலிக்காழி,
முடிகொள் சடையாய், முதல்வா, என்று முயன்றுஏத்தி
அடிகை தொழுவார்க்கு இல்லை அல்லல் அவலமே.

            பொழிப்புரை :திருத்தமான சோலைகளில் மழலையாய் வரிவண்டுகள் இசைபாட மணம் கமழும் மலர்களில் படிந்து தென்றல் வீதிகளை அடைந்து மணம் பரப்பி இதம் செய்யும் கலிக்காழியில் எழுந்தருளிய முடிகொள் சடையாய்! முதல்வா என்று தவம் முயன்று ஏத்தி அவன் அடிகளைத் தொழுவார்க்கு அல்லல் அவலம் ஆகியன இல்லை.


பாடல் எண் : 4
மனைக்கே ஏற வளம்செய் பவளம் வளர்முத்தம்
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலிக்காழி,
பனைக்கைப் பகட்டு ஈர்உரியாய், பெரியாய், எனப்பேணி
நினைக்க வல்ல அடியார், நெஞ்சில் நல்லாரே.

            பொழிப்புரை :ஆரவாரிக்கும் கடலின் ஓதம் பவளங்களையும் முத்துக்களையும் வீடுகளில் கொண்டு வந்து சேர்த்து வளம் செய்யும் கலிக்காழிப்பதியுள் எழுந்தருளிய, பனைபோன்ற கையை உடைய யானையை ஈர்ந்து அதன் தோலைப் போர்த்தவனே! பெரியாய் என விரும்பிப் பேணி நினைக்க வல்ல நெஞ்சினை உடையார் நன்னெஞ்சுடையார் ஆவர்.


பாடல் எண் : 5
பரிதி இயங்கும் பாரில் சீரார் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலிக்காழி,
சுருதி மறைநான்கு ஆன செம்மை தருவானைக்
கருதி எழுமின், வழுவா வண்ணம் துயர்போமே.

            பொழிப்புரை :கதிரவன் உலாவரும் உலகின்கண், சிறப்புமிக்க தொண்டுகளோடு சுருதிகளை அறிந்த விண்ணோரும் மண்ணோரும் விரும்பி வழிபடும் கலிக்காழியுள் மேவிய செவிவழியாகக் கேட்டு ஓதப்பெறும் நான்கு வேதங்களான செம்மையைத் தருபவனை நினைந்து, அவனை வழிபட, எழுந்தால் தவறாது உங்கள் துன்பங்கள் தீரும்.


பாடல் எண் : 6
மந்தம் மருவும் பொழிலில் எழில்ஆர் மதுஉண்டு
கந்தம் மருவ வரிவண்டு இசைசெய் கலிக்காழி,
பந்த நீங்க அருளும் பரனே, எனஏத்திச்
சிந்தை செய்வார், செம்மை நீங்காது இருப்பாரே.

            பொழிப்புரை :தென்றல் தவழும் பொழிலின்கண் எழுச்சியோடு தேனை உண்டு மணம் பொருந்தியனவாய் வரிவண்டுகள் இசை செய்யும் கலிக்காழியில் விளங்கும், பந்தங்கள் நீங்க அருளும் பரனே! என ஏத்தி அவனைச் சிந்தையில் நினைவார், செம்மை நீங்காதிருப்பர்.


பாடல் எண் : 7
புயல்ஆர் பூமி நாமம் ஓதி, புகழ்மல்கக்
கயல்ஆர் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழி,
பயில்வான் தன்னைப் பத்தி ஆரத் தொழுதுஏத்த
முயல்வார், தம்மேல் வெம்மைக் கூற்றம் முடுகாதே.

            பொழிப்புரை :மேகங்களால் வளம் பெறும் மண்ணுலகில் வாழும் கயல் போலும் விழிகளை உடைய பெண்கள் இறைவன் திருப்பெயர்களைப் புகழ் பொருந்த இசையோடு ஓதிஒலி செய்யும் கலிக்காழியுள் விளங்கும் அப்பெருமானை அன்பு மேலிடத் தொழுது ஏத்த முயல்வார் மேல் கொடிய கூற்றுவன் வந்தடையான்.
  

பாடல் எண் : 8
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான், அடியார்க்குக்
கரக்க கில்லாது அருள்செய் பெருமான் கலிக்காழி,
பரக்கும் புகழான் தன்னை ஏத்திப் பணிவார்மேல்,
பெருக்கும் இன்பம், துன்பம்ஆன பிணிபோமே.

            பொழிப்புரை :இராவணனின் முடி, தோள் ஆகியன நெரிய அடர்த்தருளிய, தன் அடியவர்கட்கு மறைக்காமல் அருளைச் செய்யும் பெருமான் எழுந்தருளிய கலிக்காழியை அடைந்து உலகம் முழுதும் பரவிய அப்புகழாளனை ஏத்திப் பணிவார்க்கு இன்பங்கள் பெருகும், துன்பந்தரும் பிணிகள் போம்.


பாடல் எண் : 9
மாணாய் உலகம் கொண்ட மாலும் மலரோனும்
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான், கலிக்காழி,
பூண்ஆர் முலையாள் பங்கத்தானை, புகழ்ந்துஏத்திக்
கோணா நெஞ்சம் உடையார்க்கு, இல்லைக் குற்றமே.

            பொழிப்புரை :பிரமசாரி வடிவினனாகி உலகை அளந்து கொண்ட திருமாலும் நான்முகனும் காணா வண்ணம் எரியுருவாய் நிமிர்ந்தான் உறையும் கலிக்காழியை அடைந்து அணிகலன்பூண்ட தனங்களைக் கொண்ட அம்பிகை பாகனைப் புகழ்ந்து போற்றித் திருகல் இல்லாத மனமுடைய அடியவர்க்குக் குற்றம் இல்லை.


பாடல் எண் : 10
அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்
கஞ்சி காலை உண்பார்க்கு அரியான், கலிக்காழித்
தஞ்சம் ஆய தலைவன் தன்னை நினைவார்கள்,
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே.

            பொழிப்புரை :அச்சத்துடன் துன்பம் தரும் பேச்சுக்களை மொழிந்து திரியும் சமணர்களாகிய அறிவிலிகளுக்கும் காலையில் கஞ்சியையுண்டு திரியும் தேரர்களுக்கும் அறிதற்கு அரியவன் உறையும் கலிக்காழியை அடைந்து தஞ்சமாக அடைதற்குரிய அத்தலைவனை நினைபவர்கள் இறப்பும் பிறப்பும் வாராத பேரின்ப உலகம் பெறுவர்.


பாடல் எண் : 11
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர்செல்வக்
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்
தாழு மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்
வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.

            பொழிப்புரை :உலக முடிவில் அழிவதான இம்மண்ணுலகில் அழியாது மிதந்த உயர் செல்வம் உடைய காழியில் எழுந்தருளிய ஈசனின் திருவடிகளைப் பேணும் ஞானசம்பந்தன் பணிவான உள்ளத்தோடு உரைத்த தமிழ் மாலையாகிய இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் நிலையான வாழ்வுடைய வானோர் உலகில் மகிழ்ந்துறைவர்.

திருச்சிற்றம்பலம்


2.075   சீகாழி                              பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
விண்இயங்கு மதிக்கண்ணி யான், விரி யும்சடைப்
பெண்நயம்கொள் திருமேனி யான்,பெரு மான்,அனல்
கண்நயம்கொள் திருநெற்றி யான்,கலிக் காழியுள்
மண்நயம்கொள் மறையாளர் ஏத்தும் மலர்ப் பாதனே.

            பொழிப்புரை :ஆரவாரம் நிறைந்த காழிப்பதியுள், உலகம் நலம் பெறமறைவல்ல அந்தணர் ஏத்தும் மலர்போன்ற திருவடிகளை உடைய இறைவன், விண்ணில் இயங்கும் பிறைமதிக் கண்ணியன்; விரியும் சடையோடு பெண்ணொரு பாகங்கொண்ட மேனியன்: பெரியோன்: அனல் விழியைக் கொண்ட நெற்றியன்.


பாடல் எண் : 2
வலிய காலன்உயிர் வீட்டினான்,மட வாளொடும்
பலிவி ரும்பியதொர் கையினான்,பர மேட்டியான்
கலியை வென்றமறை யாளர்தம்கலிக் காழியுள்
நலிய வந்தவினை தீர்த்து உகந்தஎம் நம்பனே.

            பொழிப்புரை :வறுமை முதலியவற்றைத் தவிர்க்க வேள்வி முதலியன செய்யும் மறையவர் வாழும் சீகாழிப்பதியுள் நம்மை நலிய வரும் வினைகளைத் தீர்த்து மகிழும் நம்பனாகிய இறைவன், வலிய காலன் உயிரைப் போக்கியவன்: உமையம்மையோடு கூடியிருப்பவன்: பலியேற்கும் கையினை உடையவன்: மேலானவன்.


பாடல் எண் : 3
சுற்றல் ஆம் நல்புலித்தோல் அசைத்து,அயன் வெண்தலைத்
துற்றல் ஆயதுஒரு கொள்கையான்சுடு நீற்றினான்,
கற்றல் கேட்டல்உடை யார்கள்வாழ்கலிக் காழியுள்,
மல் தயங்குதிரள் தோள்எம் மைந்தன்அவன் நல்லனே.

            பொழிப்புரை :கல்வி கேள்விகளில் வல்ல பெரியோர் வாழும் காழிப்பதியுள் மற்போர் செய்யத்தக்க திரண்ட தோள்களை உடைய வலியோனாகிய சிவபிரான் நல்லன். புலித்தோலை இடையிற்சுற்றிப் பிரமனது தலையோட்டில் உண்பலிதேரும் இயல்பினன்.


பாடல் எண் : 4
பல் அயங்குதலை ஏந்தினான்,படு கான்இடை
மல் அயங்குதிரள் தோள்கள் ஆரநடம் ஆடியும்,
கல் அயங்குதிரை சூழநீள்கலிக் காழியுள்,
தொல் அயங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே.

            பொழிப்புரை :கற்களையும் அசையச்செய்யும் கடல் அலை நீர் சூழும் காழிப்பதியுள் பழமையாகப் பரவிய புகழ் விரும்பிச்சேர்தற்கு உரிய ஒளி வண்ணனாகிய சிவபிரான், பற்கள் விளங்கும் தலையோட்டை ஏந்தியவன்: பலரும் இறந்தபின் எரிக்கப்படும் சுடுகாட்டில், மற்போருடற்ற வல்ல திரண்ட தோள்கள் அசைய நடனம் ஆடுபவன்.


பாடல் எண் : 5
தூநயம்கொள் திரு மேனியில் பொடிப்பூசிப்போய்,
நாநயம்கொள்மறை ஓதி, மாது ஒருபாகமாக்
கான்அயங்கொள் புனல் வாசம்ஆர் கலிக்காழியுள்
தேன்அயங்கொள்முடி ஆன் ஐந்துஆடிய செல்வனே.

            பொழிப்புரை :மாதொருபாகனாய், காடுகளில் படிந்துவரும் மணம்மிக்க நீர் சூழ்ந்த காழிப்பதியுள் தேன் மணம் கமழும் திருமுடியில் ஆனைந்தாடிய செல்வனாகிய சிவபிரான், தூய அழகிய திருமேனியில் திருநீறு பூசியவன்: நாநயம் பெற வேதங்களை அருளியவன்.


பாடல் எண் : 6
சுழி இலங்கும்புனல் கங்கையாள்சடை யாகவே,
மொழி இலங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்,
கழி இலங்கும்கடல் சூழுந்தண்கலிக் காழியுள்
பழி இலங்குந்துயர் ஒன்றுஇலாப் பரமேட்டியே.

            பொழிப்புரை :உப்பங்கழிகளோடு கூடிய கடல் சூழ்ந்திலங்கும் குளிர்ந்த காழிப்பதியுள் பிறர் பழிக்கும் துன்பம் ஒன்றுமில்லாத மேன்மையோனாகிய சிவபிரான், சுழிகளைக் கொண்ட கங்கையைச் சடையில் கொண்டுள்ளதன் மேலும் இனிய மொழியினளாகிய உமைமங்கையை ஒரு பாகமாக உகந்தவன்.


பாடல் எண் : 7
முடி இலங்கும்உயர் சிந்தையான்,முனி வர்தொழ
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே, அனல் ஏந்தியும்
கடிஇ லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள்,
கொடிஇ லங்கும் இடை யாளொடும்குடி கொண்டதே.

            பொழிப்புரை :முடியின் மேலிடத்தில் சிந்தையைச் செலுத்தும் முனிவர்கள் தொழ, நன்றாக வடிக்கப்பெற்று விளங்கும் கழல் காலில் ஆர்க்க அனலைக் கையில் ஏந்தி ஆடும் இறைவன், மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியுள் கொடிபோலும் இடையினளாகிய பார்வதிதேவியோடு குடி கொண்டுள்ளான்.


பாடல் எண் : 8
வல் அரக்கன்வரை பேர்க்கவந் தவன்தோள்முடி
கல் அரக்கி, விறல் வாட்டினான், கலிக் காழியுள்
நல் ஒருக்கியதொர் சிந்தையார்மலர் தூவவே
தொல் இருக்கும்மறை ஏத்துஉகந்து உடன் வாழுமே.

            பொழிப்புரை :கயிலைமலையைப் பெயர்க்க வந்த வலிய அரக்கனாகிய இராவணனின் தோள் முடி ஆகியவற்றை அம்மலையாலேயே அடர்த்து அவனது வலிமையைச் செற்ற சிவபிரான், ஒருமைப்பாடுடைய நற்சிந்தையார் மலர்தூவிப் போற்றவும் தொன்மையான இருக்கு வேதமொழிகளைப் பாடி வழிபடவும் மகிழ்ந்து உமையம்மையோடு விளங்குகின்றான்.


பாடல் எண் : 9
மருவு நான்மறை யோனும் மாமணி வண்ணனும்
இருவர் கூடிஇசைந்து ஏத்தவேஎரி யான்தன்ஊர்
வெருவ நின்றதிரை ஓதம்வார்வியன் முத்துஅவை
கருவை ஆர்வயல் சங்குசேர்கலிக் காழியே.

            பொழிப்புரை :பொருந்திய நான்மறைகளை ஓதுபவனாகிய பிரமன், நீலமணி போன்ற நிறத்தினை உடைய திருமால் ஆகிய இருவரும் கூடி ஏத்த எரிஉருவாய் நின்ற சிவபிரானது ஊர், அஞ்சுமாறு வரும் கடல் அலைகளையும் அதனால் பெருகும் ஓதநீரையும் பெரிய முத்துக்கள், சங்குகள் சேரும் கரிய வைக்கோலைக் கொண்டுள்ள வயல்களையும் உடைய காழியாகும்.


பாடல் எண் : 10
நன்றி ஒன்றும் உணராத வன் சமண்சாக்கியர்
அன்றிஅங்குஅவர் சொன்னசொல் அவைகொள்கிலான்,
கன்றுமேதி இளம் கானல்வாழ்கலிக் காழியுள்
வென்றி சேர்வியன் கோயில்கொண்ட விடையாளனே.

            பொழிப்புரை :கன்றும் அதன் தாயாகிய எருமையும் இளங்கானலில் வாழும் காழிப்பதியுள் வெற்றி பொருந்திய பெரிய கோயிலை இடமாகக் கொண்ட விடையூர்தியானாகிய சிவபிரான் நன்மையைச் சிறிதும் உணராத வலிய சமணர்களும் சாக்கியர்களும் தம்முள் மாறுபட்டுப் பேசும் பேச்சுக்களைக் கொள்ளாதவன்.


பாடல் எண் : 11
கண்ணு மூன்றும்உடை ஆதிவாழ்கலிக் காழியுள்
அண்ணல் அந்தண்அருள் பேணி,ஞானசம் பந்தன்சொல்
வண்ணம் மூன்றும் தமிழில் தெரிந்துஇசை பாடுவார்
விண்ணும் மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே.

            பொழிப்புரை :மூன்று கண்களை உடைய முதலோனாகிய சிவபிரான் வாழும் காழிப்பதியுள் அத்தலைவனின் தண்ணருளைப் பேணி ஞானசம்பந்தன் சொல்லிய இப்பாடல்களை மூவகை வண்ணங்களையும் தெரிந்து இசையோடு பாடுவார் விண்ணுலகும் மண்ணுலகும் விரிகின்ற புகழாளர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்


2.096   சீகாழி                    பண் - பியந்தைக்காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பொங்கு வெண்புரி வளரும் பொற்புஉடை மார்பன்,எம் பெருமான்,
செங்க ண்ஆடுஅரவு ஆட்டும் செல்வன்,எம் சிவன்உறை கோயில்,
பங்கம் இல்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும்
தங்கு வெண்திரைக் கானல் தண்வயல்  காழிநல் நகரே.

            பொழிப்புரை :வெண்மை மிக்க முப்புரிநூல் புரளும் அழகிய மார்பினனாகிய எம் பெருமானும், சிவந்த கண்களை உடைய ஆடும் பாம்பினைப் பிடித்து ஆட்டுபவனும், செல்வனும், ஆகிய எம் சிவபிரான் உறையும் கோயிலை உடையது, தோல்வியுறாத வேதங் களில் வல்லவர்களும் பத்தர்களும் பரவுவதும், வெண்மையான அலைகள் வீசும் கடற்கரைச்சோலைகளையும் வயல்களையும் உடைய தும் ஆகிய சீகாழி நன்னகர் ஆகும்.


பாடல் எண் : 2
தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி,
நாவ தால்அமிர் துஉண்ண, நயந்தவர் இரிந்திடக் கண்டு,
ஆவ என்றுஅரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்,
காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழில் காழிநல் நகரே.

            பொழிப்புரை :தேவர்களும், அசுரர்களும் கூடி, நாவினால் அமிர் தம் பெற்றுண்ணப் பெரிய கடலில் வலிய மந்தர மலையை மத்தாக நட்டுக் கடைந்த போது எழுந்த அரிய நஞ்சினைக் கண்டு ஆஆ என அலறி ஓடிச் சரண் அடைய, அந்நஞ்சினைத் திரட்டித் தானுண்டு தேவர் களைக் காத்தருளிய சிவபிரான் அமர்ந்தருளிய மூதூர், காவலாக அமைந்த மதில்கள் சூழ்ந்ததும் மணம் பொருந்திய பொழில்களை உடையதுமான சீகாழி நன்னகர் ஆகும்.


பாடல் எண் : 3
கரியின் மாமுகம் உடைய கணபதி தாதை,பல் பூதம்
திரிய இல்பலிக்கு ஏகும் செழுஞ்சுடர் சேர் தரு மூதூர்,
சரியின் முன்கைநன் மாதர் சதிபட மாநட மாடி,
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலிபுனல் காழிநல் நகரே.

            பொழிப்புரை :யானைமுகத்தோனாகிய கணபதியின் தந்தையும், பூதங்கள் பல சூழ்ந்து வர மனைகள் தோறும் உண் பலியேற்றுத் திரி பவரும், செழுமையான சுடர் போன்றவருமான சிவபிரான் எழுந் தருளிய மூதூர், வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய அழகிய மகளிர் காலில் தாளத்தட்டு நிற்கச் சிறந்த நடனத்தை ஆடிக் கொண்டு உரிய சிவநாமங்களை ஓதிப்போற்றும் ஒலிபுனல் சூழ்ந்த காழி நகராகும்.


பாடல் எண் : 4
சங்க வெண்குழைச் செவியன், தண்மதி சூடிய சென்னி,
அங்கம் பூண்என உடைய அப்பனுக்கு அழகிய ஊராம்,
துங்க மாளிகை உயர்ந்த தொகுகொடி வான்இடை மிடைந்து
வங்க வாண்மதி தடவும் அணிபொழில் காழிநல் நகரே.

            பொழிப்புரை :சங்கவெண்குழை அணிந்த செவியினனும், தண் மதி சூடிய சென்னியனும், எலும்புகளை மாலையாகக் கோத்து அணிந்த தலைவனுமாகிய சிவபிரானுக்கு அழகிய ஊராக விளங்கு வது, உயர்வான மாளிகைகளில் கட்டிய உயரிய கொடிகளின் தொகுதி கள் வானத்தில் சென்று, வெள்ளி போலத் திகழும் ஒளி பொருந்திய மதியைத் தடவும் அணி பொழில் காழி நன்னகராகும்.


பாடல் எண் : 5
மங்கை கூறுஅமர் மெய்யான், மான்மறி ஏந்திய கையான்,
எங்கள் ஈசன்என்று எழுவார் இடர்வினை கெடுப்பவற்கு ஊராம்,
சங்கை இன்றிநல் நியமம் தாம்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுஉயர் கீர்த்தி மறையவர் காழிநல் நகரே.

            பொழிப்புரை :உமையம்மை ஒரு பாதியாக அமைந்த திரு மேனியனும், மான்மறி ஏந்திய கையினனும், எங்கள் ஈசன் என்று எழுவார் துன்பங்கள் அவற்றுக்குக் காரணமான வினைகள் ஆகியவற்றைத் தீர்ப் பவனும் ஆகிய சிவபிரானுக்கு உரிய ஊர், ஐயம் இன்றி நல்ல நியமங்களை முறையே செய்து தகுதியால் கங்கை நாடு வரை பரவிய புகழுடைய மறையவர் வாழும் காழி நன்னகர் ஆகும்.


பாடல் எண் : 6
நாறு கூவிள மத்தம் நாகமும் சூடிய நம்பன்,
ஏறும் ஏறிய ஈசன், இருந்துஇனிது அமர்தரு மூதூர்,
நீறு பூசிய உருவர், நெஞ்சினுள் வஞ்சம்ஒன்று இன்றித்
தேறு வார்கள்சென்று ஏத்தும் சீர்திகழ் காழிநல் நகரே.

            பொழிப்புரை :மணம்வீசும் வில்வம், ஊமத்தை ஆகியவற்றோடு பாம்பையும் முடியில் சூடிய நம்பனும், விடை ஏற்றினை விரும்பி ஏறும் ஈசனும் ஆகிய சிவபிரான் மேவிய ஊர், திருநீறு பூசிய உருவினராய், நெஞ்சினில் வஞ்சம் சிறிதும் இன்றித் தெளிவு பெற்ற அடியவர்கள் சென்று தொழும் சீகாழிப் பதியாகும்.

  
பாடல் எண் : 7
நடம்அது ஆடிய நாதன், நந்திதன் முழவிடைக் காட்டில்,
விடம் அமர்ந்தொரு காலம் விரித்துஅறம் உரைத்தவற்கு ஊராம்,
இடம் அதாமறை பயில்வார், இருந்தவர், திருந்திஅம் போதில்
குடம் அதுஆர்மணி மாடம் குலாவிய காழிநல் நகரே.

            பொழிப்புரை :நந்தி மத்தளம் வாசிக்கச் சுடலையில் நடனம் ஆடிய தலைவனும், விடத்தை விரும்பி உண்டு முன் ஒரு காலத்தில் அறம் விரித்துச் சனகாதியர்க்கு உரைத்தருளியவனும் ஆகிய சிவ பிரானுக்கு உகந்த ஊர், விரிந்த மறைகளைப் பயின்ற அந்தணர்கள் வாழ்வதும் அழகிய போதிகையில் குடம் அமைந்தது போன்ற உறுப்புக்கள் திகழும் மணிமாடங்கள் விளங்குவதுமாகிய காழி நகராகும்.


பாடல் எண் : 8
கார்கொள் மேனியவ் அரக்கன் தன்கடும் திறலினைக் கருதி,
ஏர்கொள் மங்கையும் அஞ்ச, எழின்மலை எடுத்தவன் நெரிய,
சீர்கொள் பாதத்தொர் விரலால் செறுத்தஎம் சிவன்உறை கோயில்,
தார்கொள் வண்டுஇனம் சூழ்ந்த தண்வயல் காழிநல் நகரே.

            பொழிப்புரை :கரியமேனியனாகிய இராவணன் தன் வலிமையைப் பெரிதெனக் கருதி அழகிய உமைநங்கை அஞ்சுமாறு அழகிய கயிலை மலையை எடுத்தபோது அவன் நெரியுமாறு சிறப்புமிகு பாதத்தில் அமைந்த ஒரு சிறு விரலால் செற்ற சிவபிரான் உறையும் கோயில், மலர்களில் பொருந்திய தேனை உண்ண வண்டுகள் சூழ்ந்து விளங்குவதும் தண்வயல்களை உடையதுமான காழி நன்னகர் ஆகும்.


பாடல் எண் : 9
மாலும் மாமல ரானும் மருவிநின்று, இகலிய மனத்தால்
பாலும் காண்புஅரிது ஆய பரஞ்சுடர் தன்பதி ஆகும்,
சேலும் வாளையும் கயலும் செறிந்துதன் கிளையொடு மேய
ஆலும் சாலிநல் கதிர்கள் அணிவயற் காழிநல் நகரே.

            பொழிப்புரை :திருமாலும் பிரமனும் கூடி நின்று யார் பெரியர் என்று தம்முள் மாறுபட்ட மனத்தினராய் நிற்க, அவர்களிடையே தனது பக்கத்தையும் காண மாட்டாத வகையில் தோன்றி நின்ற பரஞ்சுட ராகிய சிவபிரானது பதி, சேல், வாளை, கயல் ஆகியன தம் கிளையொடு செறிந்து வாழ்வதும், ஆலும் நெற்கதிர்களைக் கொண்டது மான அணிவயல்களை உடைய காழி நன்னகராகும்.


பாடல் எண் : 10
புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழல் அடிஇணை காணும்
சித்தம் அற்றவர்க்கு இலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க்கு ஊராம்,
சித்த ரோடுநல் அமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்த னேஅருள் என்று முறைமைசெய் காழிநல் நகரே.

            பொழிப்புரை :அழகிய கழலணிந்த திருவடிகளைக் காணும் மன மற்ற பொய்மைமிக்க புத்தர், சமணர் ஆகியவர்க்கு இல்லாதவாறு திகழ்கின்ற நற்செழுஞ்சுடர்க்கு ஊர், சித்தர்களும், அமரர்களும் முறை யோடு செறிந்த நல்ல மலர்களைக் கொண்டு அருச்சித்து \"முத்தனே அருள்\" என வேண்டி நிற்கும் காழி நன்னகராகும்.


பாடல் எண் : 11
ஊழி ஆனவை பலவும் ஒழித்திடுங் காலத்தில் ஓங்கு.
* * * * * *

            பொழிப்புரை :பல ஊழிக்காலங்கள் மாறிமாறி வந்துறும் காலங்களிலும் அழியாது ஓங்கி நிற்கும் சீகாழி.

திருச்சிற்றம்பலம்



2.113   சீகாழி                    பண் - செவ்வழி
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பொடிஇலங்கும் திருமேனி யாளர், புலிஅதளினர்,
அடிஇலங்கும் கழல்ஆர்க்க ஆடும் அடிகள்இடம்,
இடிஇலங்கும் குரல்ஓதம் மல்க வெறிவார்திரைக்
கடிஇலங்கும் புனல்முத்து அலைக்குங்கடல் காழியே.

            பொழிப்புரை :திருநீறணிந்த திருமேனியர் . புலித்தோல் உடுத்தவர். திருவடிகளில் விளங்கும் கழல்கள் ஆர்க்க ஆடுபவர். அவர் உறையு மிடம் , இடிபோல் முழங்கும் கடல் அலைகளின் நீர்ப் பெருக்கு முத்துக் களை மிகுதியாகக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் காழிப்பதியாகும் .


பாடல் எண் : 2
மயல்இலங்கும் துயர்மாசு அறுப்பான்,அருந் தொண்டர்கள்
அயல்இலங்கப் பணிசெய்ய நின்ற அடிகள் இடம்,
புயல்இலங்கும் கொடையாளர் வேதத்துஒலி பொலியவே,
கயல்இலங்கும் வயல்கழனி சூழுங்கடல் காழியே.

            பொழிப்புரை :மயக்கம் தரும் பிறவித்துயராகிய மாசினைப் போக்க எண்ணிய தொண்டர்கள் தான் வாழும் இடங்கள் எங்கும் பணி செய்ய நின்ற சிவபிரான் உறையுமிடம் , மேகம் போல வரையாது கொடுக்கும் கொடையாளர்களுடன் வேதஒலிபரவும் சிறப்பினதாய , கயல்மீன்கள் தவழும் வயல்கள் சூழ்ந்த காழிப் பதியாகும் .


பாடல் எண் : 3
கூர்விளங்கும் திரிசூல வேலர்,குழைக் காதினர்,
மார்வுஇலங்கும் புரிநூல் உகந்த மணவாளன்ஊர்,
நேர்விலங்கல் அனதிரைகள் மோத, நெடுந்தாரைவாய்க்
கார்விலங்கல் எனக்கலந்து ஒழுகுங்கடல் காழியே.

            பொழிப்புரை :கூரிய முத்தலைச் சூலத்தை ஏந்தியவர் . குழை யணிந்த செவியினர் . மார்பில் முப்புரிநூல் விளங்கும் மணவாளக் கோலத்தினர் . அவருக்குரிய ஊர் , மலைபோலக் கடல் அலைகள் வந்தலைக்கும் காழிப் பதியாகும் .


பாடல் எண் : 4
குற்றம்இல்லார், குறைபாடு செய்வார் பழிதீர்ப்பவர்,
பெற்றநல்ல கொடிமுன் உயர்த்த பெருமான்இடம்,
மற்றுநல்லார், மனத்தால் இனியார், மறைகலைஎலாம்
கற்றுநல்லார், பிழைதெரிந்து அளிக்குங்கடல் காழியே.

            பொழிப்புரை :குற்றம் இல்லாதவர் . தம் குறைகளைக் கூறி வேண்டு பவருக்கு வரும் பழிகளைத் தீர்ப்பவர். விடைக்கொடியை உயர்த்தியவர். அப் பெருமானுக்குரிய இடம், நல்லவர், மனத்தால் இனியவர், வேதங்களைக் கற்றுணர்ந்து நல்லோர், செய்யும் பிழைதெரிந்து போக்கித் தலையளி செய்வோர் ஆகியவர்கள் வாழும் கடற்காழியாகும் .


பாடல் எண் : 5
விருதுஇலங்கும் சரிதைத் தொழிலார், விரிசடையினார்,
எருதுஇலங்கப் பொலிந்துஏறும் எந்தைக்கு இடம்ஆவது,
பெரிதுஇலங்கும் மறைகிளைஞர் ஓதப் பிழைகேட்டலால்,
கருதுகிள்ளைக் குலம்தெரிந்து தீர்க்கும்கடல் காழியே.

            பொழிப்புரை :வெற்றியமைந்த புராண வரலாறுகளை உடையவர் . விரிந்த சடையினர் . எருது விளங்க அதன்மேல் பொலிவோடு அமரும் எந்தை . அவருக்குரிய இடம் , பெருமை பொருந்திய வேதங்களைப் பயில்வோர் ஓதக்கேட்டு அதிலுள்ள பிழைகளைப் பலகாலும் கேட்டுப் பழகிய வாசனையால் கிளிக் குலங்கள் தெரிந்து தீர்க்கும் காழிப்பதியாகும் .


பாடல் எண் : 6
தோடுஇலங்கும் குழைக்காதர், தேவர், சுரும்பு ஆர்மலர்ப்
பீடுஇலங்கும் சடைப்பெருமை யாளர்க்கு இடம்ஆவது,
கோடுஇலங்கும் பெரும்பொழில்கள் மல்கப் பெரும் செந்நெலின்
காடுஇலங்கும் வயல்பயிலும் அந்தண்கடல் காழியே.

            பொழிப்புரை :தோடும் குழையும் விளங்கும் காதினர் . வேதங்களை அருளியவர் . வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்து பெருமையோடு இலங்கும் சடைமிசைக் கங்கையைச் சூடியவர் . அவ்வடிகட்கு இடம் பெரிய கிளைகளோடு கூடிய மரங்கள் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ளதும் செந்நெற்காடுகளை உடைய வயல்களை உடையதுமான காழிப்பதியாகும் .


பாடல் எண் : 7
மலைஇலங்கும் சிலையாக வேகம்மதில் மூன்றுஎரித்து
அலைஇலங்கும் புனல்கங்கை வைத்த அடிகட்கு இடம்,
இலைஇலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால்
கலைஇலங்கும் கணத்துஇனம் பொலியுங்கடல் காழியே.

            பொழிப்புரை :மேருமலையை வில்லாகக் கொண்டு முப் புரங்களை எரித்து , அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசை வைத்துள்ள அடிகட்கு இடம் , இலைகளோடு பூத்து விளங்கும் தாழை நீர் முள்ளி ஆகியவற்றின் மணத்துடன் வேதம் வல்லமறையவர் கணம் வாழும் காழிப்பதியாகும் .


பாடல் எண் : 8
முழுதுஇலங்கும் பெரும்பாருள், வாழும்முரண் இலங்கைக்கோன்
அழுதுஇரங்கச் சிரம்உரம் ஒடுங்க அடர்த்து,ஆங்குஅவன்
தொழுதுஇரங்க, துயர்தீர்த் துஉகந்தார்க்கு இடம்ஆவது,
கழுதும் புள்ளும் மதிற்புறம் அதுஆருங்கடல் காழியே.

            பொழிப்புரை :உலகில் மாறுபாடுடையவனாய் வாழ்ந்த இராவணன் அழுது இரங்க , அவன் தலை மார்பு ஆகியன ஒடுங்க அடர்த்துப் பின் அவன் தொழுது இரங்கிய அளவில் அவனது துயர் தீர்த்தருளிய இறைவற்கு இடம் வண்டும் பறவைகளும் மதிற்புறத்தே வாழும் கடற் காழியாகும் .


பாடல் எண் : 9
பூவினானும், விரிபோதின் மல்குந்திரு மகள்தனை
மேவினானும் வியந்துஏத்த, நீண்டு ஆர்அழலாய்நிறைந்து,
ஓவிஅங்கே அவர்க்குஅருள் புரிந்த ஒருவர்க்குஇடம்,
காவிஅம்கண் மடமங்கையர் சேர்கடல் காழியே.

            பொழிப்புரை :நான்முகனும் , தாமரைமலரில் வாழும் திருமகளை மருவி திருமாலும் வியந்து போற்ற , அழலுருவாய் நீண்டுப்பின் அதனின் நீங்கி அவர்களுக்கு அருள்புரிந்த இறைவற்கு இடம் , குவளை மலர் போலும் கண்களை உடைய அழகிய மகளிர் வாழும் கடற்காழியாகும் .


பாடல் எண் : 10
உடைநவின் றார்,உடைவிட் டுஉழல்வார், இரும்தவத்தார்
முடைநவின் றம்மொழி ஒழித்துஉகந்த முதல்வன்இடம்,
மடைநவின்ற புனல்கெண்டை பாயும்வயல் மலிதரக்
கடைநவின்ற நெடுமாடம் ஓங்குங்கடல் காழியே.

            பொழிப்புரை :உடையோடும் , உடையின்றியும் திரிபவரும் , கடுமையான விரதங்களைத் தவமாக மேற்கொள்பவருமான புத்தர் சமணர்களின் நாற்றமுடைய மொழிகளையொழித்து உகந்த முதல்வன் இடம் , கெண்டை மீன்கள் துள்ளிப் பாயும் நீர் நிறைந்த மடைகளோடு கூடிய வயல்கள் சூழ்ந்ததும் , வாயில்களை உடைய உயர்ந்த மாட வீடுகளைக் கொண்டுள்ளதுமான காழிப்பதியாகும் .


பாடல் எண் : 11
கருகுமுந்நீர் திரைஓதம் ஆரும் கடல்காழியுள்
உரகம்ஆரும் சடைஅடி கள்தம்பால் உணர்ந்து உறுதலால்
பெருகமல்கும் புகழ்பேணும் தொண்டர்க்கு,இசை ஆர்,தமிழ்
விரகன்சொன்ன இவை,பாடி ஆடக்கெடும் வினைகளே.

            பொழிப்புரை :கரிய கடல் அலைகளின் ஓதநீர் நிறைந்த காழிப் பதியுள் , பாம்பணிந்தவராய் விளங்கும் சடைகளை உடைய அடிகளின் அருளை உணர்ந்து ஓதுதலால் புகழ் பெருக வாழ்ந்து அன்பு செய்யும் தொண்டர்கள் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் சொன்ன இப்பதிகப் பாடல்களைப் பாடி ஆட அவர்களுடைய பாவங்கள் கெடும் .
                                                            திருச்சிற்றம்பலம்



3. 043   சீகாழி                                       பண் - கௌசிகம்
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சந்தம் ஆர்முலை யாள்தன கூறுஅனார்,
வெந்த வெண்பொடி ஆடிய மெய்அனார்,
கந்தம் ஆர்பொழில் சூழ்தரு காழியுள்
எந்தை யார்அடி என்மனத்து உள்ளவே

            பொழிப்புரை :இறைவர் அழகிய திருமுலைகளையுடைய உமாதேவியாரைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர் . வெந்த திருவெண்ணீற்றினைப் பூசிய திருமேனி உடையவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியுள் வீற்றிருந்தருளிய என் தந்தையாராகிய சிவபெருமானின் திருவடிகள் என் மனத்தில் நன்கு பதிந்துள்ளன .


பாடல் எண் : 2
மான் இடம்உடை யார்,வளர் செஞ்சடைத்
தேன் இடம் கொளும் கொன்றைஅம் தாரினார்,
கான் இடங்கொளும் தண்வயல் காழியார்,
ஊன் இடம்கொண்டுஎன் உச்சியில் நிற்பரே.

            பொழிப்புரை :மானை இடக்கரத்தில் ஏந்திய சிவபெருமான் நீண்ட சிவந்த சடைமுடியின்மீது , தேன் துளிக்கும் கொன்றைமாலையை அணிந்தவர் . நறுமணம் திகழும் குளிர்ந்த வயல்களையுடைய சீகாழியில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் இந்த உடலை இடமாகக் கொண்டு எனது உச்சியில் நிற்பர்.


பாடல் எண் : 3
மைகொள் கண்டத்தர், வான்மதிச் சென்னியர்,
பைகொள் வாள்அரவு ஆட்டும் படிறனார்,
கைகொள் மான்மறி யார், கடல் காழியுள்
ஐயன், அந்தணர் போற்ற இருக்குமே.

            பொழிப்புரை : நஞ்சுண்டதால் மை போன்ற கறுத்த கண்டத்தை உடையவரும், வானில் விளங்கும் சந்திரனைச் சடைமுடியில் சூடி, படமெடுத்தாடும் பாம்பினை ஆட்டும் படிறரும், இளமான்கன்றை இடக்கரத்தில் ஏந்தியுள்ள தலைவருமான சிவபெருமான் , அந்தணர்கள் போற்றக் கடல்சூழ்ந்த சீகாழியில் வீற்றிருந்தருளுகின்றார் .

  
பாடல் எண் : 4
புற்றில் நாகமும் பூளையும் வன்னியும்
கற்றை வார்சடை வைத்தவர், காழியுள்
பொன்தொ டியோடு இருந்தவர், பொற்கழல்
உற்ற போதுஉடன் ஏத்தி உணருமே.

            பொழிப்புரை :புற்றில் வாழும் பாம்பையும் , தும்பைப்பூ மாலையையும் , வன்னிப் பத்திரத்தையும் தமது கற்றையான நீண்ட சடைமேல் அணிந்து , சீகாழியில் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற சிவ பெருமானின் பொன்போன்ற திருவடிகளைச் சமயம் நேர்ந்தபொழுது தாமதியாது உடனே துதித்துத் தியானித்து அவனருளை உணர்வீர்களாக .


பாடல் எண் : 5
நலியும் குற்றமும் நம்உடல் நோய்வினை
மெலியு மாறுஅது வேண்டுதிரேல், வெய்ய
கலி கடிந்தகை யார்கடல் காழியுள்
அலைகொள் செஞ்சடை யார்அடி போற்றுமே.

            பொழிப்புரை :நம் மனத்தை வருத்தும் குற்றங்களும் , தீவினைகளால் நம் உடலை வருத்தும் நோய்களும் , மெலிந்து விலக விரும்புவீர்களாயின் , கையால் வேள்வி வளர்த்துக் கொடிய கலியினால் ஏற்படும் துன்பத்தை ஓட்டும் அந்தணர்கள் வாழ்கின்ற கடல்சூழ்ந்த சீகாழியில் , அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய செஞ்சடையானாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபடுங்கள் .
 

பாடல் எண் : 6
பெண்ஒர் கூறினர், பேயுடன் ஆடுவர்,
பண்ணும் ஏத்திஇசை பாடிய வேடத்தர்,
கண்ணும் மூன்றுஉடையார், கடல் காழியுள்
அண்ணல் ஆய அடிகள் சரிதையே.

            பொழிப்புரை :சிவபெருமான் உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாக உடையவர் . பேய்க்கணங்கள் சூழ ஆடுபவர் . உலகத்தார் போற்றும்படி நல்ல பண்களை ஏழிசைகளோடு பாடிய வேடத்தர் , மூன்று கண்களை உடையவர். இவை கடல்சூழ்ந்த சீகாழியில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானின் புகழை உணர்த்துபவைகள் ஆகும் .


பாடல் எண் : 7
பற்றும் மானும் மழுவும் அழகுஉற
முற்றும் ஊர்திரிந்து பலி முன்னுவர்
கற்ற மாநல் மறையவர் காழியுள்
பெற்றம் ஏறுஅது உகந்தார் பெருமையே.

            பொழிப்புரை :பெருமானார் தம் திருக்கரத்திலே மானையும், மழுவையும் அழகுற ஏந்தி , ஊர்முழுவதும் திரிந்து பிச்சை எடுக்க முற்படுவார் . வேதங்களை நன்கு கற்ற பெருமையுடைய நல்ல அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில் இடபத்தை வாகனமாக விரும்பி வீற்றிருந்தருளுகின்ற அச்சிவபெருமானது தன்மை இத்தன்மைத் தாகும் .


பாடல் எண் : 8
எடுத்த வல்அரக் கன்முடி தோள்இற
அடர்த்து உகந்துஅருள் செய்தவர், காழியுள்
கொடித் தயங்குநல் கோயிலுள் இன்புற
இடத்து மாதொடு தாமும் இருப்பரே.

            பொழிப்புரை : திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வல்லரக்கனான இராவணனின் முடியும் , தோளும் நெரியுமாறு அடர்த்து , பின் அவன் எழுப்பிய சாமகானத்தால் மகிழ்ந்து அருள் செய்த சிவபெருமான் சீகாழியில் கொடிகள் விளங்குகின்ற அழகிய திருக்கோயிலுள் தம் திருமேனியின் இடப்புறத்தில் உமாதேவியை உடனாகக் கொண்டு இன்புற வீற்றிருந்தருளுவர் .


பாடல் எண் : 9
காலன் தன்உயிர் வீட்டு கழல்அடி
மாலும் நான்முகன் தானும் வனப்புஉற
ஓலம் இட்டுமுன் தேடி உணர்கிலாச்
சீலம் கொண்டவன், ஊர்திகழ் காழியே.

            பொழிப்புரை : காலன் உயிரைப் போக்கிய இறைவன் திருவடியைத் திருமாலும் , பிரமனும் வனப்புறும் தோற்றத்தினராய் ஓலமிட்டுத் தேடியும் காணவொண்ணாத சிறப்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர் பெருமையுடன் திகழும் சீகாழியாகும் .


பாடல் எண் : 10
உருவம் நீத்தவர் தாமும், உறுதுவர்
தருவல் ஆடையி னாரும் தகவுஇலர்,
கருமம் வேண்டுதிரேல் கடல் காழியுள்
ஒருவன் சேவடியே அடைந்து உய்ம்மினே.

            பொழிப்புரை :தமது கடுமையான சமய ஒழுக்கத்தினால் உடலின் இயற்கை நிறம் மாறிக் கருநிறமான சமணர்களும் , துவர் நிறம் ஊட்டப் பட்ட ஆடையை உடுக்கின்ற புத்தர்களும் தகைமை யற்றவர்கள் . உங்களுக்கு நல்ல காரியம் கைகூட வேண்டுமென்று விரும்பினீர்களேயானால் , கடலை அடுத்த சீகாழியில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற சிவபெருமானின் சிவந்த திருவடிகளைச் சரணடைந்து உய்வீர்களாக !


பாடல் எண் : 11
கானல் வந்துஉல வுங்கடல் காழியுள்
ஈனம் இல்லி இணைஅடி ஏத்திடும்
ஞான சம்பந்தன் சொல்லிய நல்தமிழ்,
மானம் ஆக்கும், மகிழ்ந்துஉரை செய்யவே.

            பொழிப்புரை :கரையிலுள்ள சோலைகளிலிருந்து நறுமணம் வீசும் கடலை அடுத்த சீகாழியில் , அழிவற்று என்றும் நித்தப் பொருளாக விளங்கிடும் சிவபெருமானுடைய இரண்டு திருவடி களையும் வணங்கிடும் ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை மனமகிழ்ச்சியுடன் பாட அத்தமிழ் மேலான வீடுபேற்றைத் தரும் .

                                                            திருச்சிற்றம்பலம்




2.083   திருக்கொச்சைவயம்      பண் - பியந்தைக் காந்தாரம்
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண். 1
நீலநல் மாமிடற்றன், இறைவன், சினத்த
            நெடுமா உரித்த நிகரில்
சேல்அன கண்ணிவண்ணம் ஒருகூறுஉருக்கொள்
            திகழ்தேவன், மேவு பதிதான்,
வேல்அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை
            விழவுஓசை வேத ஒலியின்
சாலநல் வேலைஓசை தரும்மாட வீதி
            கொடிஆடு கொச்சை வயமே.                    

            பொழிப்புரை :நீல நிறம் பொருந்திய கண்டத்தினனும், வலிமை நிறைந்த சினம் மிக்க பெரிய யானையை உரித்தவனும், சேல்மீன் போன்ற கண்ணினளாகிய ஒப்பற்ற உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்ட வடிவினனும் ஆகிய சிவபிரான் மேவிய பதி, வேல்போன்ற கண்களைக் கொண்ட அழகிய பெண்கள் விளையாடும் ஒலியும், விழாக்களின் ஆரவாரமும், வேத ஒலியும், கடல் ஓசையும் நிறைந்த, கொடி ஆடும் மாட வீதிகளைக் கொண்டுள்ள கொச்சைவயமாகும்.


பாடல் எண். 2
விடைஉடைஅப்பன், ஒப்புஇல் நடம்ஆட வல்ல
            விகிர்தத்து உருக்கொள் விமலன்,
சடைஇடை வெள்எருக்க மலர்கங்கை திங்கள்
            தகவைத்த சோதி பதிதான்,
மடைஇடை அன்னம்எங்கும் நிறையப் பரந்து
             கமலத்து வைகும் வயல்சூழ்
கொடைஉடை வண்கையாளர் மறையோர்கள் என்றும்
            வளர்கின்ற கொச்சை வயமே.                         

     பொ-ரை: விடையை ஊர்தியாகக் கொண்ட தந்தையும்,
ஒப்பற்ற நடனங்கள் புரிபவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்ட விமலனும், சடையில் வெள் எருக்கமலர் கங்கை திங்கள் ஆகியவற்றைப் பொருந்தச் சூடிய ஒளிவடிவினனும் ஆகிய சிவபிரானது பதி, மடைகளில் அன்னப்பறவைகள் நிறைந்து பரவித் தாமரை மலர்கள் மேல் தங்கும் வயல்கள் சூழ்ந்ததும், கொடை வள்ளல்களாய் மறையவர்கள் வாழ்வதுமாகிய கொச்சை வயமாகும்.


பாடல் எண். 3
படஅரவு ஆடும்முன்கை உடையான், இடும்பை
            களைவிக்கும் எங்கள் பரமன்,
இடம்உடை வெண்தலைக்கை பலிகொள்ளும்இன்பன்,
            இடமாய வேர்கொள் பதிதான்,
நடம்இட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடு
             நளிர்சோலை கோலு கனகக்
குடம்இடு கூடம்ஏறி வளர்பூவை நல்ல
            மறையோது கொச்சை வயமே.                  

            பொ-ரை: படம் பொருந்திய பாம்பு ஆடும் முன்கையை
உடையவனும், துன்பங்களைப் போக்கும் எம் தலைவனும், அகன்ற வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலிகொள்ளும் இன்பனும் ஆகிய சிவபிரானுக்கு இடமாக விளங்கும் அழகிய தலம்,  மயில்கள் நடனமாட வண்டுகள் மது உண்டு பாடும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், பொற்கலசம் பொருந்திய கூடங்களில் நாகணவாய்ப் பறவைகள் வேதங்களை ஓதுவதுமாகிய கொச்சைவயமாகும்.


பாடல் எண். 4
எண்திசை பாலர்எங்கும் இகலிப் புகுந்து
            முயல்வுற்ற சிந்தை முடுகிப்
பண்டு ஒளி தீபமாலை இடுதூப மோடு
            பணிவுற்ற பாதர் பதிதான்,
மண்டிய வண்டல்மிண்டி வருநீர பொன்னி
            வயல்பாய வாளை குழுமிக்
குண்டுஅகழ் பாயும்ஓசை படைநீடது என்ன
            வளர்கின்ற கொச்சை வயமே.                   

            பொ-ரை: எண்டிசைப் பாலகர்களாகிய இந்திரன்
முதலானோர் எங்கும் சூழ்ந்து புகுந்து மன எழுச்சியோடு
விளக்குகளை வரிசையாக ஏற்றித்தூபம் இட்டு வழிபடும் திருவடிகளை உடைய சிவபிரானது பதி, செறிந்த வண்டல் மணலோடு வரும் பொன்னி நதியின் நீர் வயல்களில் பாய வாளை மீன்கள் கூடி ஆழமான இடங்களில் பாய்ந்து விளையாடும் ஓசை, படைகள்வரும் ஓசைபோல வளர்கின்ற கொச்சைவயமாகும்.


பாடல் எண். 5
பனிவளர் மாமலைக்கு மருகன், குபேர
            னொடுதோழ மைக்கொள் பகவன்,
இனியன அல்லவற்றை இனிதாக நல்கும்
            இறைவன், இடங்கொள் பதிதான்,
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்கள் ஓமம்
            வளர் தூமம் ஓடி அணவி,
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து
             நிறைகின்ற கொச்சை வயமே.                  

            பொ-ரை: பனிபடர்ந்த மலைக்கு மன்னாகிய இமவானின்
மருமகனும், குபேரனோடு தோழமை கொண்ட பகவனும், இனியன அல்லாதவற்றையும் இனிதாக ஏற்று அருள் நல்குபவனுமாகிய இறைவன் இடமாகக் கொண்டருளும் தலம், முனிவர் குழாங்களோடு அந்தணர்கள் வளர்க்கும் வேள்விப்புகை சென்று பரவி வளைந்த பிறையையும் வானையும் மறைத்து நிறையும் கொச்சை வயமாகும்.


பாடல் எண். 6
புலிஅதள் கோவணங்கள் உடைஆடை யாக
            உடையான், நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்,
            நலமா இருந்த நகர்தான்,
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை
            உடையார் நிறைந்து வளர,
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு
            வரைமேவு கொச்சை வயமே.                          

            பொ-ரை: புலித்தோலையும் கோவணத்தையும், தான்
பெற்றுடைய ஆடையாகக் கொண்டவனும், நினைக்கும் ஒருநொடிப் பொழுதில் உலகை நலிவு செய்து வந்த முப்புரங்களை எரிசெய்தழித்த நாதனும் ஆகிய சிவபிரான் மகிழ்வோடு விளங்கும் தலம், கலிகெட வேள்வி செய்யும் அந்தணர்களும் கலையுள்ளம் கொண்டவர்களும் நிறைந்து வாழ்வதும் அழகிய மண்டபங்களும் உயர்ந்த மாடங்களும்
நீண்ட மலைகள் போலத் தோன்றுவதுமாய கொச்சைவயமாகும்.


பாடல் எண். 7   -------------------

பாடல் எண். 8
மழைமுகில் போலும் மேனி அடல்வாள் அரக்கன்
            முடியோடு தோள்கள் நெரிய,
பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த, பேயொடு
            உடன்ஆடி மேய பதிதான்,
இழைவளர் அல்குல்மாதர் இசைபாடி ஆட
            விடும் ஊசல் அன்ன கமுகின்
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள்
            அடிதேடு கொச்சை வயமே.                      

            பொ-ரை: மழைமுகில் போன்ற கரிய மேனியையும் வலிய
வாளையும் உடைய அரக்கனாகிய இராவணன் தன் தலைகளோடு தோள்களும் நெரியவும், அவனது பிழை நீங்கவும் சிறந்த மலர்போன்ற திருவடியைச் சிறிதே ஊன்றியவனும், பேய்களோடு உடனாடி மகிழ்பவனும் ஆய சிவபிரான் எழுந்தருளியபதி, மேகலையணிந்த அல்குலை உடைய மகளிர் இசைபாடி ஆட, வானளாவ உயர்ந்த கமுக மரத்தழைகள் விண்ணில் செல்வார் அடிகளை வருடுமாறு உயர்ந்துள்ள கொச்சைவயமாகும்.


பாடல் எண். 9
வண்டுஅமர் பங்கயத்து வளர்வானும், வையம்
            முழுது உண்ட மாலும், இகலிக்
கண்டிட ஒண்ணும்என்று கிளறிப் பறந்தும்
            அறியாத சோதி பதிதான்,
நண்டுஉண நாரைசெந்நெல் நடுவே இருந்து
            விரைதேர, போது மதுவில்
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து
     வயல்மேவு கொச்சை வயமே.                          

            பொ-ரை: வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்மேல்
எழுந்தருளிய பிரமனும், உலகம் முழுவதையும் உண்ட திருமாலும் தம்முள் மாறுபட்டு அடி முடிகளைக் காண்போம் என்று திருமால் பன்றியாய் நிலத்தைக் கிளறியும் பிரமன் அன்னமாய்ப் பறந்து சென்றும் அறிய முடியாதவாறு சோதிவடிவாய் நின்ற சிவபிரானது பதி, நண்டு உண்ணவும் நாரைகள் செந்நெல் நடுவே இருந்து இரைதேட, நிரம்பிய தேனுடன் தாமரை மலரோடு குவளை மலர்கள்
வயலிடையே மலரும் கொச்சைவயமாகும்.


பாடல் எண். 10
கையினில் உண்டுமேனி உதிர்மாசர் குண்டர்,
             இடுசீவ ரத்தின் உடையார்,
மெய்உரை யாதவண்ணம் விளையாட வல்ல
             விகிர்தத் துஉருக்கொள் விமலன்,
பைஉடை நாகவாயில் எயிறுஆர மிக்க
             குரவம் பயின்று மலர,
செய்யினில் நீலமொட்டு விரியக்கமழ்ந்து
             மணநாறு கொச்சை வயமே.                          

            பொ-ரை: கையில் உணவை ஏற்று உண்டு உடலினின்று
உதிரும் அழுக்கினரும், குண்டர்களும், சீவர உடையினராகிய ஆகிய சமணரும், புத்தரும் மெய்யுரையாதவாறு செய்து விளையாடவல்ல வேறுபட்ட பல்வகை உருக்கொண்டருளும் பரமனாகிய திருச்சிற்றம்பலம் சிவபிரானது பதி, படப் பாம்பின் எயிறு போன்று குரவம் மலர, வயல்களில் நீல மலர்கள் அலர, இவற்றால் மணம் சிறந்து விளங்கும் கொச்சைவயமாகும்.


பாடல் எண். 11
இறைவனை, ஒப்புஇலாத ஒளிமேனி யானை,
             உலகங்கள் ஏழும் உடனே
மறைதரு வெள்ளமேவி வளர்கோயில் மன்னி
            இனிதா இருந்த மணியை,
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
             தமிழ்மாலை பாடும்அவர் போய்,
அறைகழல் ஈசன்ஆளும் நகர்மேவி, என்றும்
             அழகா இருப்பது அறிவே.                             

            பொ-ரை: எங்கும் நிறைந்தவனை, ஒப்பில்லாத ஒளி
மயமான திருமேனியனை, ஏழுலகங்களையும் மறைக்குமாறு ஊழி வெள்ளம் பரவியகாலத்தும் அழியாது மிதந்து வளர்ந்த திருத்தோணிமலைக் கோயிலில் மன்னி இனிதாக இருந்த மாணிக்கத்தைக் குறைவற்ற ஞானம்பெற்ற இனிய ஞானசம்பந்தன் பாடிப்பரவிய தமிழ் மாலைப் பத்தையும் பாடிப் போற்றுபவர் ஒலிக்கின்ற கழல் அணிந்த ஈசன் ஆட்சி செய்யும் சிவலோகத்தை அடைந்து இனிதாக ஞானவடிவினராய் வீற்றிருப்பர்.
                                                திருச்சிற்றம்பலம்




2.089   திருக்கொச்சைவயம்      பண் - பியந்தைக்காந்தாரம்
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அறையும் பூம்புன லோடும் ஆடுஅர வச்சடை தன்மேல்
பிறையும் சூடுவர், மார்பில் பெண்ஒரு பாகம் அமர்ந்தார்,
மறையின் ஒல்ஒலி ஓவா மந்திர வேள்வி அறாத
குறைவில் அந்தணர் வாழும் கொச்சை வயம்அமர்ந் தாரே.

            பொழிப்புரை :வேதம் ஓதுவதால் உண்டாகும் ஒல்லென்னும் ஒலி நீங்காத மந்திரங்களோடு கூடிய வேள்விகள் நிகழ்வதும் குறைவற்ற அந்தணர்கள் வாழ்வதுமாய கொச்சை வயத்தில் எழுந்தருளியுள்ள இறைவர், ஒலிக்கின்ற அழகிய கங்கையோடு ஆடும் பாம்பையும் அணிந்துள்ள சடைமேல், பிறையையும் சூடியிருப்பவர். திருமேனி யில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர்.


பாடல் எண் : 2
சுண்ணத்தர், தோலொடு நூல்சேர் மார்பினர், துன்னிய பூதக்
கண்ணத்தர், வெங்கனல் ஏந்திக் கங்குல்நின்று ஆடுவர், கேடுஇல்
எண்ணத்தர், கேள்விநல் வேள்வி அறாதவர் மால்எரி ஓம்பும்
வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சை வயம்அமர்ந் தாரே.

            பொழிப்புரை :வேதங்களை உணர்ந்தவர்களும், நல்லவேள்வி களைத் தவறாது செய்பவரும், மேம்பட்ட எரியோம்பும் தன்மையர் என்று சொல்லத் தக்கவருமாகிய அந்தணர் வாழும் கொச்சை வயத்தில் எழுந்தருளிய இறைவர், திருநீறு அணிந்தவர். மான்தோலோடு முப்புரிநூலை அணிந்த மார்பினர். சூழ்ந்த பூதகணங்களை உடையவர். கொடிய கனலைக் கையில்ஏந்தி இரவில் நடனம் புரிபவர். குற்றமற்ற மனத்தில் உறைபவர்.


பாடல் எண் : 3
பாலை அன்னவெண் ணீறு பூசுவர், பல்சடை தாழ
மாலை ஆடுவர், கீதம் மாமறை பாடுதல் மகிழ்வர்,
வேலை மால்கடல் ஓதம் வெண்திரை கரைமிசை விளங்கும்
கோல மாமணி சிந்தும் கொச்சை வயம்அமர்ந் தாரே.

            பொழிப்புரை :வேலை எனப்படும் பெரிய கடல் நீரின் வெள்ள மாகப் பெருகிய ஓதத்தின் அலைகள் அழகிய சிறந்தமணிகளைக் கரை மிசைச் சிந்தும் கொச்சை வயத்தில் எழுந்தருளிய இறைவர், பால் போன்ற திருவெண்ணீற்றைப் பூசியவர். சடைகள் பலவும் தாழ்ந்து தொங்க, மாலைக் காலத்தே நடனம் புரிபவர். வேதகீதங்கள் பாடுதலை விரும்புபவர்.
  

பாடல் எண் : 4
கடிகொள் கூவிள மத்தம் கமழ்சடை நெடுமுடிக்கு அணிவர்
பொடிகள் பூசிய மார்பில் புனைவர்நன் மங்கையொர் பங்கர்
கடிகொள் நீடுஒலி சங்கின் ஒலியொடு கலைஒலி துதைந்து
கொடிகள் ஓங்கிய மாடக் கொச்சை வயம் அமர்ந்தாரே.

            பொழிப்புரை :மணவீடுகளில் நீண்டு ஒலிக்கும் சங்குகளின் ஒலி யோடு, கலைகள் பலவற்றின் ஒலிகளும் சேர்ந்து ஒலிப்பதும் நீண்ட கொடிகள் விளங்கும் மாடங்களை உடையதுமான கொச்சை வயத்தில் விளங்கும் இறைவர், வில்வம், ஊமத்தை ஆகியவற்றின் மணம் கமழ் கின்ற சடையின்கண் நீண்ட கண்ணி சூடியவர். திருநீறு அணிந்துள்ள மார்பின்கண் கொண்டுள்ள உமையம்மைக்குத்தம் திருமேனியில் பாதியை வழங்கியவர்.


பாடல் எண் : 5
ஆடல் மாமதி உடையார், ஆயின பாரிடம் சூழ
வாடல் வெண்தலை ஏந்தி வையகம் இடுபலிக்கு உழல்வார்,
ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொடு ஆடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயம்அமர்ந் தாரே.

            பொழிப்புரை :ஆடும் இளமயில்கள் அழகிய தம் பெண்ணினத் தோடு மகிழ்ந்து கூடும் தண்ணிய பொழில்கள் சூழ்ந்த கொச்சைவயத்தில் அமர்ந்துள்ள பெருமான், வானவெளியில் திரியும் சிறந்த மதியைச் சூடியவர். பொருந்திய பூதகணங்கள் சூழ ஊன்வற்றிய வெண்டலையைக் கையில் ஏந்தி உலகில் மகளிர் இடும் பிச்சைக்கு உழல்பவர்.


பாடல் எண் : 6
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர்சடை தன்மேல்
துண்ட வெண்பிறை அணிவர், தொல்வரை வில்அது வாக
விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேல்
கொண்ட கோலமது உடையார், கொச்சை வயம்அமர்ந் தாரே.

            பொழிப்புரை :கொச்சைவயத்தில் அமர்ந்துள்ள பெருமான் நீர் செறிந்த கங்கையும் பாம்பும் தங்கிய நீண்ட சடைமுடியில், வெள்ளிய பிறைத் துண்டத்தை அணிந்தவர். பழமையான மேருமலையை வில்லாகக் கொண்டு பகைகொண்ட அசுரர்தம் மூவரணங்களும் கொடிய எரியில் வெந்தழியுமாறு செய்து, விடைமீது அருள் புரியும் கோலத் துடன் காட்சி தருபவர்.


பாடல் எண் : 7
* * * * *
பாடல் எண் : 8
அன்றுஅவ் ஆல்நிழல் அமர்ந்து, அறவுரை நால்வர்க்கு அருளிப்
பொன்றி னார்தலை ஓட்டில் உண்பது, பொருகடல் இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர், வான்தோய்
குன்றம் அன்னபொன் மாடக் கொச்சை வயம்அமர்ந் தாரே.

            பொழிப்புரை :வானில் தோயும் மலை போன்ற அழகிய மாட வீடு களைக் கொண்ட கொச்சை வயத்தில் அமர்ந்துள்ள இறைவர், அக் காலத்தில் ஆல்நிழற்கீழ் இருந்து நால்வர்க்கு அறம் அருளியவர். இறந்த பிரமனது தலையோட்டில் உண்பவர். கடல் பொரும் இலங்கை மன்னன் இராவணனை வலியழியுமாறு ஊன்றிய கால் விரலினர்.


பாடல் எண் : 9
சீர்கொண் மாமல ரானும் செங்கண்மால் என்றுஇவர் ஏத்த
ஏர்கொள் வெவ்அழல் ஆகி எங்கும் உறநிமிர்ந் தாரும்
பார்கொள் விண்அழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழி யோடும்
கூர்கொள் வேல்வலன் ஏந்திக் கொச்சை வயம்அமர்ந் தாரே.

            பொழிப்புரை :பால்போன்று இனிய மொழி பேசுபவளாகிய உமையம்மையாரோடு கையில் கூரிய வேலை வெற்றிபெற ஏந்தியவராய்க் கொச்சை வயத்தில் விளங்கும் பெருமானார், சிறப் பமைந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் செங்கண் மாலும் போற்றித் துதிக்க அழகிய கொடிய அழலுருவாகி நிமிர்ந்தவர். நிலம் விண்முதலான ஐம் பூத வடிவினர்.
           

பாடல் எண் : 10
குண்டர் வண்துவர் ஆடை போர்த்ததொர் கொள்கை யினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய்யல, மைஅணி கண்டன்
பண்டை நம்வினை தீர்க்கும் பண்பினர், ஒண்கொடி யோடும்
கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயம்அமர்ந் தாரே.

            பொழிப்புரை :குண்டர்களாகிய சமணர்களும், செறிந்த துவர் ஊட்டப்பட்ட ஆடையைப் போர்த்துள்ள தனிக்கொள்கையுடைய புத்தர்களுமாகிய வலியர்கள் பேசும் பேச்சுக்கள் மெய்யல்லாதவை. அவற்றைக் கருதாதவர்க்கு அருள்புரிபவர். நீலமணி போன்ற கண்டத்தை உடையவர். நாம் செய்த பழவினைகளைத் தீர்த்தருளும் பண்பினர். ஒளிபொருந்திய கொடி போன்ற உமையம்மையாரோடு மேகங்கள் தவழும் மணி மாடங்களை உடைய கொச்சை வயத்தில் எழுந் தருளியிருப்பவர்.


பாடல் எண் : 11
கொந்து அணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய
அந்த ணன்அடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன்
சந்தம் ஆர்ந்துஅழகு ஆய தண்தமிழ் மாலைவல் லோர்போய்
முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே.

            பொழிப்புரை :கொத்தாக மலர்ந்த பூக்களுடன் கூடிய அழகிய பொழில் சூழ்ந்த கொச்சை வயம் என்னும் நகரில் மேவிய அந்தணனாகிய இறைவன் திருவடிகளை ஏத்தும் அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய சந்தம் பொருந்திய அழகிய இத்தமிழ் மாலையை ஓதிப் பரவ வல்லவர், வினைகள் கெட முற்படச் சென்று வானவர்களோடு அவர்கள் உலகில் புகவல்லவர் ஆவர்.

                                                திருச்சிற்றம்பலம்



3. 089    திருக்கொச்சைவயம்            பண் - சாதாரி
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
திருந்துமா களிற்றுஇள மருப்பொடு திரள்மணிச் சந்தம் உந்திக்
குருந்துமா குரவமும் குடசமும் பீலியும் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்
பொருந்தினார் திருந்துஅடி போற்றிவாழ் நெஞ்சமே, புகல்அதுஆமே.

            பொழிப்புரை : நெஞ்சமே ! அழகான இளயானைத் தந்தங்களோடு , திரட்சியான இரத்தினங்களையும் , சந்தன மரங்களையும் அடித்துக் கொண்டு , குருந்து , மா , குரவம் , குடசம் முதலிய மரவகைகளையும் , மயிலின் தோகைகளையும் சுமந்து கொண்டு பரவி , பெரிய வயல்களில் பாய்கின்ற நெடிய கரைகளையுடைய காவிரி நதி சூழும் திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானின் அழகிய திருவடிகளைப் போற்றி வாழ்வாயாக ! அத்திருவடியே நமக்குச் சரண்புகும் இடமாகும் .


பாடல் எண் : 2
ஏலம்ஆர் இலவமோடு இனமலர்த் தொகுதியாய் எங்கும் நுந்திக்
கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையும் கொண்டுகோட்டாறு
ஆலியா வயல்புகும் அணிதரு கொச்சையே நச்சிமேவும்
நீலம்ஆர் கண்டனை நினைமட நெஞ்சமே, அஞ்சல் நீயே.

            பொழிப்புரை : மடநெஞ்சமே ! மணம் கமழும் ஏலம் , இலவங்கம் இவைகளோடு நறுமணம் கமழும் மலர்களையும் தள்ளிக் கொண்டு , அழகிய மிளகுக் கொடிகளோடு , நன்கு பழுத்த கனிகள் கொன்றை மலர்கள் ஆகியவற்றை அலைகள் வாயிலாக அடித்துக் கொண்டு ஆரவாரத்துடன் பாயும் காவிரி நதியின் நீர் வயல்களில் புகுகின்ற அழகிய திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் நீலகண்டரான சிவபெருமானை நினைப்பாயாக ! நீ அஞ்சாதே .


பாடல் எண் : 3
பொன்னுமா மணிகொழித்து எறிபுனல் கரைகள்வாய் நுரைகள் உந்திக்
கன்னிமார் முலைநலம் கவரவந்து ஏறுகோட் டாறுசூழ
மன்னினார், மாதொடும் மருவிடம் கொச்சையே மருவின், நாளும்
முன்னைநோய் தொடருமாறு இல்லைகாண் நெஞ்சமே, அஞ்சல் நீயே.

            பொழிப்புரை : நெஞ்சமே ! பொன்னையும் , பெரிய மணிகளையும் ஒதுக்கிக் கரையில் எறிகின்ற ஆற்றுநீர் நுரைகளைத் தள்ளிக் கொண்டு , கன்னிப்பெண்களின் மார்பில் பூசியிருந்த சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களை அகற்றிக் கரைசேர்க்கின்ற காவிரி சூழ்ந்திருக்க , உமாதேவியாரோடு நிலைபெற்று இருப்பவராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கொச்சைவயம் என்னும் இத் திருத்தலத்தையே எக்காலத்தும் பொருந்தி வாழ்வாயாக ! அவ்வாறு வாழ்ந்தால் தொன்றுதொட்டு வரும் மலநோயானது இனி உன்னைத் தொடராது . நீ அஞ்சல் வேண்டா .


பாடல் எண் : 4
கந்தம்ஆர் கேதகைச் சந்தனக் காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையின் பவர்அளிக் குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட் டாறுசூழ் கொச்சைமேய
எந்தையார் அடிநினைந்து உய்யலாம் நெஞ்சமே, அஞ்சல் நீயே.

            பொழிப்புரை : நெஞ்சமே ! மணம் பொருந்திய தாழை , சந்தனக் காடு என்பவற்றைச் சூழ்ந்து , வாழைத் தோட்டங்களின் பக்கமாக வந்து , மா மரத்தையும் , வள்ளிக் கொடியின் திரளையும் , மொய்க்கும் வண்டுகளையும் குவளையையும் மோதி ஓட , பூங்கொத்துக்கள் அணிந்த நீண்ட கூந்தலையுடைய பெண்கள் குதித்துக் கொண்டு நீராடும் காவிரிநதி சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளிய எந்தையாரான சிவபெருமானின் திருவடிகளைத் தியானித்து நாம் உய்தி பெறலாம் . நீ அஞ்சவேண்டா .


பாடல் எண் : 5
மறைகொளும் திறலினார் ஆகுதிப் புகைகள்வான் அண்டமிண்டிச்
சிறைகொளும் புனல்அணி செழும்பதி திகழ்மதில் கொச்சை தன்பால்
உறைவிடம் எனமனம் அதுகொளும் பிரமனார் சிரம்அறுத்த
இறைவனது அடிஇணை இறைஞ்சிவாழ் நெஞ்சமே, அஞ்சல் நீயே

            பொழிப்புரை : நெஞ்சமே ! வேதங்களை அவற்றின் பொருள் உணர்ந்து ஓதும் வன்மை படைத்த அந்தணர்கள் இயற்றுகின்ற வேள்விப் புகை ஆகாயத்தை அளாவி நெருங்குதலால் மழை பொழிய , அந்நீர் தங்கிய கரைகளையுடைய நீர்நிலைகளால் அழகுடன் விளங்கும் செழும்பதியாகிய , மதில்கள் விளங்குகின்ற திருக்கொச்சை வயம் என்னும் திருத்தலத்தை , தாம் எழுந்தருளும் இடமாகக் கொண்ட மனமுடையவரும் , பிரமனின் சிரமறுத்தவருமான சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் வணங்கி வாழ்வாயாக ! நீ அஞ்சவேண்டா .


பாடல் எண் : 6
சுற்றமும் மக்களும் தொக்கஅத் தக்கனைச் சாடி அன்றே
உற்றமால் வரைஉமை நங்கையைப் பங்கமா உள்கினான்,ஓர்
குற்றம் இல்அடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சைமேவி
நல்தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய், நாளும் நெஞ்சே.

            பொழிப்புரை : நெஞ்சமே ! சிவனை நினையாது செய்த தக்கன் வேள்வியைத் தகர்த்து , அதற்குத் துணையாக நின்ற சுற்றத்தார்களையும், மற்றவர்களையும் தண்டித்து, தன் மனைவி தாட்சாயனி தக்கன் மகளான தோடம் நீங்க இமயமலை அரையன் மகளாதற்கும், தன் திருமேனியில் ஒரு பாகமாதற்கும் நினைத்தருளியவனும் , ஒரு குற்றமுமில்லாத அடியவர்கள் குழுமிய வீதிகள் சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து , திரிகரணங்களும் ஒன்றிச் சிவவழிபாடு செய்பவர்கட்கு அதன் பயனை அளித்து அருள்புரிகின்றவனுமாகிய சிவபெருமானை எந்நாளும் நீ விரும்பி வாழ்வாயாக !
  

பாடல் எண் : 7
கொண்டலார் வந்திடக் கோலவார் பொழில்களில் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித்து ஏறிமா முகில்தனைக் கதுவுகொச்சை,
அண்டவா னவர்களும் அமரரும் முனிவரும் பணியஆலம்
உண்டமா கண்டனார் தம்மையே உள்குநீ, அஞ்சல் நெஞ்சே.

            பொழிப்புரை : நெஞ்சமே ! மேகங்கள் வந்தவுடன் , அழகிய நீண்ட சோலைகளிலுள்ள குரங்குகள் கூடி , தங்கட்கு முன்னே காணப்படுகின்ற மூங்கில்களைப் பற்றி ஏறி , அந்தக் கரிய மேகங்களைக் கையால் பிடிக்கின்ற திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , அண்ட வானவர்களும் , தேவர்களும் , முனிவர்களும் வந்து பணிய , ஆலகால விடத்தினை உண்டு அவர்களைக் காத்த பெருமையுடைய கழுத்தினையுடைய சிவபெருமானையே எப்பொழுதும் நீ நினைத்துத் தியானிப்பாயாக ! நீ அஞ்சல் வேண்டா .
  

பாடல் எண் : 8
அடல்எயிற்று அரக்கனார் நெருக்கிமா மலைஎடுத்து ஆர்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிரல் ஊன்றினார் உறைவிடம், ஒளிகொள் வெள்ளி
மடல்இடைப் பவளமும் முத்தமும் தொத்துவண் புன்னைமாடே
பெடையொடும் குருகுஇனம் பெருகுதண் கொச்சையே, பேணுநெஞ்சே.

            பொழிப்புரை : நெஞ்சமே ! வலிமை வாய்ந்த பற்களையுடைய அரக்கனான இராவணன் பெரிய திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க , ஆரவாரித்த அவனது வாய்களுடன் உடலும் நெரியும்படித் தன் காற்பெருவிரலை ஊன்றினவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற , ஒளிபொருந்திய வெள்ளியைப் போன்ற இதழ்களை யுடைய பூக்களின் இடையிடையே பவளம் போன்ற செந்நிறப் பூக்களும் , முத்துக்களைப் போன்ற அரும்புகளும் , அமைந்த பூங்கொத்துக்களையுடைய செழித்த புன்னைமரங்களின் பக்கத்தில் பறவை இனங்கள் தங்கள் பெடைகளோடு வளர்தலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை நீ போற்றி வழிபடுவாயாக !


பாடல் எண் : 9
அரவினில் துயில்தரும் அரியும்நல் பிரமனும் அன்றுஅயர்ந்து,
குரைகழல் திருமுடி அளவுஇட அரியவர், கொங்குசெம்பொன்
விரிபொழில் இடைமிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரியநல் மிடறுஉடைக் கடவுளார், கொச்சையே கருதுநெஞ்சே.

            பொழிப்புரை : நெஞ்சமே ! பாம்புப் படுக்கையில் துயிலும் திருமாலும் , நல்ல பிரமதேவனும் சோர்வடையும்படி , ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும் , திருமுடியையும் அளவிடுதற்கு அரியவராய் , பூக்களிலுள்ள மகரந்தமானது செம்பொன் துகளைப்போல உதிர்கின்ற சோலைகளுக்கு இடையில் , மலை மகளான உமாதேவியார் மகிழும்படி , கரிய , அழகிய கழுத்தினை யுடையவராய்ச் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை நீ எப்பொழுதும் தியானிப்பாயாக !


பாடல் எண் : 10
கடுமலி உடல்உடை அமணரும் கஞ்சிஉண் சாக்கியரும்
இடும்அற வுரைதனை இகழ்பவர், கருதும்நம் ஈசர், வானோர்
நடுஉறை நம்பனை, நான்மறை யவர்பணிந்து ஏத்தஞாலம்
உடையவன், கொச்சையே உள்கிவாழ் நெஞ்சமே, அஞ்சல் நீயே.

            பொழிப்புரை : நெஞ்சமே ! கடுக்காய்களைத் தின்னும் சமணர்களும் , கஞ்சி உணவை உண்கின்ற புத்தர்களும் , சொல்லுகின்ற சமயபோதனைகளை இகழ்பவர்களாகிய அடியவர்கள் நினைந்து போற்றும் நம் இறைவனும் , தேவர்கள் தன்னைச் சுற்றி நின்று தொழ அவர்கள் நடுவுள் வீற்றிருந்தருளும் நண்பனும் , நான்கு வேதங்களையும் நன்கு கற்ற அந்தணர்கள் பணிந்து போற்ற இந்த உலகம் முழுவதையும் தனக்கு உடைமைப் பொருளாக உடையவனுமாகிய சிவபெருமானது திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தைத் தியானித்து நல்வாழ்வு வாழ்வாயாக ! நீ அஞ்ச வேண்டா.


பாடல் எண் : 11
காய்ந்துதம் காலினால் காலனைச் செற்றவர், கடிகொள்கொச்சை
ஆய்ந்துகொண்டு இடம்என இருந்தநல் அடிகளை ஆதரித்தே,
ஏய்ந்ததொல் புகழ்மிகும் எழில்மறை ஞானசம் பந்தன்சொன்ன
வாய்ந்தஇம் மாலைகள் வல்லவர் நல்லர்வான் உலகின்மேலே.

            பொழிப்புரை : தம் அடியவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் கோபித்துக் காலால் உதைத்து மாய்த்தவரும் , காவலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தினைத் தாம் வீற்றிருந்தருளுதற்கு ஏற்ற இடமென ஆராய்ந்து எழுந்தருளியுள்ள நம் தலைவருமான சிவபெருமானிடம் பக்தி கொண்டு , பொருந்திய தொன்மையான புகழ்மிகுந்த , அழகிய , மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய சிறப்புடைய இத்தமிழ் மாலைகளை ஓதவல்லவர்கள் நன்மைதரும் வானுலகில் மேன்மையுடன் வீற்றிருப்பர் .

                                                            திருச்சிற்றம்பலம்




1. 079   திருக்கழுமலம்                       பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அயில்உறு படையினர், விடையினர், முடிமேல்
            அரவமும் மதியமும் விரவிய அழகர்,
மயில்உறு சாயல் வனமுலை ஒருபால்
            மகிழ்பவர், வான்இடை முகில்புல்கு மிடறர்,
பயில்வுறு சரிதையர், எருது உகந்துஏறிப்
            பாடியும் ஆடியும் பலிகொள்வர், வலிசேர்
கயிலையும் பொதியிலும் இடம்என உடையார்,
            கழுமலம் நினையநம் வினை கரிசுஅறுமே.

            பொழிப்புரை :கூர்மை பொருந்திய சூலப்படையை உடைய வரும், விடை ஊர்தியினரும், முடிமேல் அரவு மதி ஆகியன விரவிய அழகுடையவரும், ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையையும், அழகிய தனபாரங்களையும் உடைய உமையம்மையை ஒரு பாலாகக் கொண்டு மகிழ்பவரும், வானகத்தே பொருந்திய மேகம் போன்ற கரியமிடற்றினரும், எல்லோராலும் போற்றப்படும் புராணவரலாறுகளை உடையவரும், இடபத்தில் மகிழ்ந்தேறிப் பாடியும் ஆடியும் சென்று பலியேற்பவரும், வலிமை சேர்ந்த கயிலை, பொதியில் போன்ற அழகிய மலைகளைத் தம் இடங்களாக உடையவரும் ஆகிய சிவபெருமான் உறையும் கழுமலத்தை நினைய நம் வினைத்தீமை அறும்.


பாடல் எண் : 2
கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்,
            கொடுமுடி உறைபவர், படுதலைக் கையர்,
பண்டலர் அயன்சிரம் அரிந்தவர், பொருந்தும்
            படர்சடை அடிகளார், பதி அதன்அயலே
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும்  
            மறிகடல் திரைகொணர்ந்து எற்றிய கரைமேல்
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும்
            கழுமலம் நினையநம் வினைகரிசு அறுமே.

            பொழிப்புரை :மேகம் நீல மலர் ஆகியன போன்ற அழகியமிடற்றை உடையவரும், கயிலைச் சிகரத்தில் உறைபவரும், உயிரற்ற தலையோட்டைக் கையில் ஏந்தியவரும், முற்காலத்தில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கொய்தவரும், அழகுறப் பொருந்தும் விரிந்த சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானதுபதி, பக்கலின் சுருண்டு விழும் கடல் அலைகள் வண்டல் மண், இலவங்கம், சங்குகள் சுறா ஆகியனவற்றைக் கொணர்ந்து வீசும் கரைமேல் நீர்முள்ளி தாழை நெய்தல் ஆகியன பூத்து விளங்கும் கழுமல நகராகும். அதனை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.


பாடல் எண் : 3
எண்இடை ஒன்றினர், இரண்டினர் உருவம்,
            எரிஇடை மூன்றினர், நான்மறையாளர்,
மண்இடை ஐந்தினர், ஆறினர் அங்கம்,
            வகுத்தனர் ஏழ்இசை, எட்டுஇருங்கலைசேர்,
பண்இடை ஒன்பதும் உணர்ந்தவர், பத்தர்
            பாடிநின்று அடிதொழ மதனனை வெகுண்ட
கண்இடைக் கனலினர், கருதிய கோயில்
            கழுமலம் நினையநம் வினைகரிசு அறுமே.

            பொழிப்புரை :எண்ணத்தில் ஒன்றாயிருப்பவர், சிவம் சக்தி என உருவத்தால் இரண்டாயிருப்பவர். நெருப்பில் மூன்றாயிருப்பவர். நான்கு மறைகளை அருளியவர். மண்ணிடைச் சுவை ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்ற ஐந்து தன்மையர். வேதத்தின் ஆறு அங்கங்களாக இருப்பவர். ஏழிசைகளை வகுத்தவர். எண்வகைக் கலைகளில் ஒன்றாய இசைத்துறையில் ஒன்பான் கலையையும் உணர்ந்தவர். பக்தர்கள் பாடி நின்று திருவடிகளை வணங்க வீற்றிருப்பவர். மன்மதனைக் கண்ணிடைத் தோன்றிய கனலால் வெகுண்டவர். அத்தகைய பெருமான் விரும்பி உறையும் கழுமலத்திலுள்ள கோயிலை நினைய நம் வினைகளின் தீமை முற்றிலும் நீங்கும்.

  
பாடல் எண் : 4
எரிஒரு கரத்தினர், இமையவர்க்கு இறைவர்,
            ஏறுஉகந்து ஏறுவர், நீறுமெய்பூசித்
திரிதரும் இயல்பினர், அயலவர் புரங்கள்
            தீஎழ விழித்தனர், வேய்புரை தோளி
வரிதரு கண்இணை மடவரல் அஞ்ச
            மஞ்சு உறநிமிர்ந்தத் ஓர் வடிவொடும் வந்த
கரிஉரி மருவிய அடிகளுக்கு இடமாம்,
            கழுமலம் நினையநம் வினைகரிசு அறுமே.

            பொழிப்புரை :ஒருகரத்தில் எரி ஏந்தியவர். தேவர்கட்குத் தலைவர். விடையை விரும்பி ஊர்பவர். திருநீற்றை மெய்யிற் பூசித்திரியும் இயல்பினர். பகைமை பூண்டவர்களாய அசுரர்களின் மூன்று புரங்களும் தீயில் அழியுமாறு விழித்தவர். மூங்கில் போன்ற திரண்ட தோள்களையும், வரி பரந்த கண்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறு மேகம் திரண்டு நிமிர்ந்து வந்தாற் போன்ற கரிய வடிவோடு தம்பால் வந்த யானையின் தோலை உரித்து அதனை அணிந்தவர். அத்தகைய பெருமானுக்கு இடமாக விளங்கும் கழுமலத்தை நினைய நம் வினைத்தீமை நீங்கும்.


பாடல் எண் : 5
ஊர் எதிர்ந்து இடுபலி தலைகலன்ஆக
            உண்பவர், விண்பொலிந்து இலங்கிய உருவர்,
பார் எதிர்ந்து அடிதொழ விரைதரு மார்பில்
            படஅரவு ஆமைஅக்கு அணிந்தவர்க்கு இடமாம்,
நீர்எதிர்ந்து இழிமணி நித்திலம் முத்தம்
            நிரைசுரி சங்கமொடு ஒண்மணி வரன்றிக்
கார்எதிர்ந்து ஓதம்வன் திரைகரைக்கு எற்றும்
            கழுமலம் நினையநம் வினைகரிசு அறுமே.

            பொழிப்புரை :ஊர்மக்கள் வரவேற்று இடும் பலியைத் தலையோட்டில் ஏற்று உண்பவர். வானத்தில் பொலிவோடு இலங்கும் திருவுருவினர். மண்ணுலக மக்கள் விரும்பி வந்து தம் திருவடிகளை வணங்க மணம் கமழும் மார்பகத்தே படப்பாம்பு ஆமைஓடு உருத்திராக்கம் ஆகியன அணிந்தவர். அவர் தமக்கு இடமாய் உள்ளதால், மேகங்கள் படியும் வெண்மையான வலிய கடல் அலைகள் மிகுதியான நீருடன் இழிந்துவரும் மணிகள், முத்துக்கள், ஒழுங்குற நிறைந்த வளைந்த சங்குகள், ஒளி பொருந்திய பவளமணி ஆகியவற்றைக் கரையில் கொணர்ந்து வீசும் கழுமலத்தை நினைய நம் வினைத் தீமை நீங்கும்.


பாடல் எண் : 6
முன்உயிர்த் தோற்றமும், இறுதியும் ஆகி,
            முடிஉடை அமரர்கள் அடிபணிந்து ஏத்த,
பின்னிய சடைமிசைப் பிறைநிறைவித்த
            பேர்அருளாளனார், பேணிய கோயில்,
பொன்இய்ல் நறுமலர் புனலொடு தூபம்
            சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி,
கன்னியர் நாள்தொறும் வேடமே பரவும்
            கழுமலம் நினையநம் வினைகரிசு அறுமே.

            பொழிப்புரை :உயிர்கட்கு முதலில் தோற்றத்தையும் பின்னர் இறுதியையும் வழங்குவோராய், முடியணிந்த தேவர் கணங்கள் தம் திருவடிகளைப் பணிந்து போற்ற, வட்டமாக, முறுக்கிய சடையின் மேல் பிறையைச் சூடிய பெருங்கருணையாளராகிய சிவபிரான் விரும்பிய கோயிலை உடையதும், பொன்போன்ற மணம் பொருந்திய மலர்கள் புனல் தூபம் சந்தனம் முதலியன ஏந்திய கையினராய்க் கன்னியர்கள் நாள்தோறும் வந்து இறைவர் கொண்டருளிய வடிவங் களைப் போற்றி வழிபடுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைத் தீமைகள் நீங்கும்.


பாடல் எண் : 7
கொலைக்கு அணித்தா வரு கூற்றுஉதை செய்தார்,   
      குரைகழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின்
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார்தம்
            நெடுந்துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடமாம்,
மலைக்கு அணித்தாவர வன்திரை முரல
            மதுவிரி புன்னைகள் முத்துஎனஅரும்பக்
கலைக்கணம் கானலின் நீழலில் வாழும்
            கழுமலம் நினையநம் வினைகரிசு அறுமே.

            பொழிப்புரை :மார்க்கண்டேயர் உயிரைக் கொல்லுதற்கு அணித்தாக வந்த கூற்றுவனை உதைத்தவர். ஒலிக்கின்ற கழல் அணிந்த தமது திருவடியைப் பணிந்தவர்கட்கு உரியதாக அருளிச் செய்த வீட்டின்பமாகிய நிலை அணியதாக வரவும் அவர்தம் நெடுந்துயர் போகவும் நினைக்கும் எம் நிமலர். அவர்க்கு இடமாக விளங்குவதும், தோணி மலைக்கு அருகில் வரும் வலிய அலைகள் ஒலிப்பதும், தேன் நிறைந்த புன்னைகள் முத்தென அரும்பவும் கடற்கரைச் சோலைகளின் நீழலில் மானினங்கள் வாழ்வதுமாய கழுமல நகரை நினைய நம் வினைக் குற்றங்கள் நீங்கும்.


பாடல் எண் : 8
புயம்பல உடையதென் இலங்கையர் வேந்தன்
            பொருவரை எடுத்தவன் பொன்முடி திண்தோள்
பயம்பல படஅடர்த்து அருளிய பெருமான்,
            பரிவொடும் இனிதுஉறை கோயில் அதுஆகும்,
வியன்பல விண்ணினும் மண்ணினும் எங்கும்
            வேறுவேறு உகங்களில் பெயர் உளதுஎன்னக்
கயம்பல படக்கடல் திரைகரைக்கு எற்றும்
            கழுமலம் நினையநம் வினைகரிசு அறுமே.

            பொழிப்புரை :தோள்கள் பலவற்றை உடைய தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க அவன் பொன்முடிகளையும், வலிய தோள்களையும் அச்சம் பல உண்டாகுமாறு அடர்த்தருளிய பெருமான் விருப்போடு மகிழ்ந்துறையும் கோயிலை உடையதும் அகன்ற விண்ணுலகிலும் மண்ணுலகிலும் வேறுவேறு யுகங்களில் வேறுவேறு பெயர்களுடையதாய் விளங்கு வதும் நீர்த்துளி பலவாகத் தோன்ற கடல் அலைகள் தொடர்ந்து வந்து கரையில் வீசுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.


பாடல் எண் : 9
விலங்கல் ஒன்று ஏந்திவன் மழை தடுத்தோனும்
            வெறிகமழ் தாமரை யோனும் என்றுஇவர்தம்
பலங்களால் நேடியும் அறிவு அரிதுஆய
            பரிசினன், மருவி நின்று இனிது உறைகோயில்,
மலங்கிவன் திரைவரை எனப்பரந்து எங்கும்   
            மறிகடல் ஓங்கிவெள் இப்பியும் சுமந்து,
கலங்கடல் சரக்கொடு நிரக்கவந்து ஏறும்
            கழுமலம் நினையநம் வினைகரிசு அறுமே.

            பொழிப்புரை :கோவர்த்தனத்தைக் குடையாகக் கவித்துக் கொடிய மழையைத் தடுத்த திருமாலும், மணம்கமழ் தாமரையில் தோன்றிய பிரமனும் ஆகிய இவர்கள் தம் வலிமையினால் தேடியும் அறிய முடியாத தன்மையனாகிய சிவபெருமான், விரும்பி வந்து மகிழ்வாக உறையும் கோயில், வெள்ளிய அலைகள் ஒன்றோடொன்று கலந்து மலைகளைப் போலப் பரவி எங்கும் கரையில் மோதி மீளும் கடலில் பெருமிதத்துடன் கப்பல்கள் தம் சரக்கொடு வெள்ளிய முத்துச் சிப்பிகளையும் சுமந்து கரையை நோக்கி வரும் கழுமலமாகும் அதனை நினைய நும்வினைத் தீமை நீங்கும்.


பாடல் எண் : 10
ஆம்பல தவம்முயன்று அறவுரை சொல்லும்
            அறிவுஇலாச் சமணரும் தேரரும், கணிசேர்
நோம்பல தவம்அறி யாதவர், நொடிந்த
            மூதுரை கொள்கிலா முதல்வர், தம்மேனிச்
சாம்பலும் பூசிவெண் தலை கலனாகத்
            தையலார் இடுபலி வையகத்து ஏற்றுக்
காம்புஅ னதோளியொடு இனிது உறைகோயில்,
            கழுமலம் நினையநம் வினைகரிசு அறுமே.

            பொழிப்புரை :இயன்ற பலவகையான தவங்களை மேற்கொண்டு பிறர்க்கு அறவுரை கூறும் அறிவற்ற சமணரும் புத்தரும், எண்ணத்தக்க வருத்தத்தைத் தரும் தவம் பலவற்றை அறியாதவராய்க் கூறும் பழமொழிகளை ஏற்று அருளாத தலைவர், தம் மேனி மீது திருநீற்றைப் பூசிக் கொண்டு வெண்டலையை உண்கலனாக் கொண்டு மகளிர் இடும் பலியை உலகில் ஏற்று மூங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் கோயிலை உடைய கழுமலத்தை நினைய நம் வினைக்குற்றம் தீரும்.


பாடல் எண் : 11
கலிகெழு பார் இடை ஊர் எனவுளது ஆம்
            கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர்மேல்,
வலிகெழு மனமிக வைத்தவன், மறைசேர்
            வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
ஒலிகெழு மாலைஎன்று உரைசெய்த பத்து,         
            உண்மையினால் நினைந்து ஏத்தவல்லார்மேல்
மெலிகெழு துயர்அடையா, வினைசிந்தும்,
            விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே.

            பொழிப்புரை :ஆரவாரம் மிக்க உலகில் ஊர் எனப்போற்ற விளங்கும் கழுமலத்தை விரும்பிக் கோயில் கொண்டுள்ள இறைவரிடம், உறுதியோடு தன் மனத்தை வைத்தவனும், வேதங்களிலும் கலைகளிலும் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன், இசையோடு பாடிய மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும், உண்மையோடு நினைந்து ஏத்த வல்லவரை, மெலிவைத்தரும் துன்பங்கள் சாரா. வினைகள் நீங்கும், விண்ணவரினும் மேம்பட்ட ஆற்றலை அவர்கள் பெறுவார்கள்.


திருச்சிற்றம்பலம்


1.129   திருக்கழுமலம்                பண் - மேகராகக்குறிஞ்சி
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
சேவுயரும் திண்கொடியான் திருவடியே
            சரண்என்று, சிறந்தஅன்பால்
நாஇயலு மங்கையொடு நான்முகன்தான்
            வழிபட்ட நலம்கொள்கோயில்,
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்ட,
            செங்குமுதம் வாய்கள்காட்ட,
காவிஇரும் கருங்குவளை கருநெய்தல்
            கண்காட்டும் கழுமலமே.

            பொழிப்புரை :விடை வடிவம் எழுதி உயர்த்திய வலிமையான கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று நாவின்கண் பொருந்திய கலைமகளோடு வந்து நான்முகன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில்; வாவிகள்தோறும் மலரும் வளவிய தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும் செங்கழுநீர் மலர்கள் வாய்களையும், காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் கழுமலத்தின்கண் விளங்குவதாகும்.


பாடல் எண் : 2
பெருந்தடம்கண் செந்துவர்வாய்ப் பீடுஉடைய
            மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண் நீறு அலங்கரித்தான்
            அமரர்தொழ அமரும் கோயில்,
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
            இறைவனது தன்மைபாடிக்
கருந்தடம்கண் ணார்கழல்பந்து அம்மானைப்
            பாட்டு அயரும் கழுமலமே.

            பொழிப்புரை :அகன்ற விழிகளையும், பவளம் போலச் சிவந்த வாயையும் உடைய பெருமை மிக்க மலைமகளாகிய உமையம்மை பிரியாத திருமேனியில், அருமையான திருவெண்ணீற்றுப் பொடியை அழகுறப் பூசிய சிவபிரான் தேவர்கள் தன்னை வணங்க எழுந்தருளி யுள்ள திருக்கோயில், வள்ளன்மையோடு விளங்கும் நீண்ட கைகளை உடைய முத்தீ வேட்கும் அந்தணர்களின் வீடுகள்தோறும் கரியவான பெரிய கண்களை உடைய மகளிர் இறைவனுடைய இயல்புகளைக் கூறிக்கொண்டு கழற்சிக்காய் அம்மானை பந்து ஆகியன ஆடி மகிழும் கழுமல நகரின் கண் உள்ளது.


பாடல் எண் : 3
அலங்கல்மலி வானவரும் தானவரும்
            அலைகடலைக் கடைய, பூதம்
கலங்கெழு கடுவிடம் உண்டு இருண்டமணி
            கண்டத்தோன் கருதும்கோயில்,
விலங்கல்அமர் புயல்மறந்து மீன்சனிபுக்கு
            ஊன்சலிக்கும் காலத்தானும்
கலங்கல்இலா மனப்பெரு வண்கை உடைய
            மெய்யர்வாழ் கழுமலமே.

            பொழிப்புரை :மலர்மாலை அணிந்த தேவர்களும் அசுரர்களும் கூடி அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்தபோது பூதங்களும் கலங்குமாறு எழுந்த கொடிய நஞ்சை, அவர்களைக் காத்தற்பொருட்டுத் தான் உண்டு, கரிய மணி போன்ற மிடற்றினன் ஆகிய சிவபிரான் தனது உறைவிடம் என்று மகிழ்வோடு நினையும் கோயில்; மலைகள் மீது தங்கி மழை பொழியும் மேகங்கள் மழை பொழிவதை மறத்தற்குரியதான மகரராசியில் சனி புகுந்து உணவு கிடைக்காமல் மக்கள் உடல் இளைக்கும் பஞ்ச காலத்திலும் மனம் கலங்காது பெரிய வள்ளன்மையோடு மக்களைக் காக்கும் உண்மையாளர் வாழும் கழுமலத்தின்கண் உள்ளது.


பாடல் எண் : 4
பார்இதனை நலிந்துஅமரர் பயம்எய்தச்
            சயம்எய்தும் பரிசு,வெம்மைப்
போர்இசையும் புரமூன்றும் பொன்ற ஒரு
            சிலைவளைத்தோன் பொருந்தும் கோயில்,
வார்இசைமென் முலைமடவார் மாளிகையின்
            சூளிகைமேல் மகப்பாராட்டக்
கார்இசையும் விசும்பு இயங்கும் கணங்கேட்டு
            மகிழ்வு எய்தும் கழுமலமே.

            பொழிப்புரை :மண்ணுலக மக்களை வருத்தியும், தேவர்களை அஞ்சுமாறு செய்தும், வெற்றி பெறும் இயல்பினராய்க் கொடிய போரை நிகழ்த்தும் அவுணர்களின் முப்புரங்களும் அழிய ஒப்பற்ற வில்லை வளைத்த சிவபிரான் உறையும் கோயில்; கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய மகளிர் மாடவீடுகளின் உச்சியில் நின்று தம் குழந்தைகளைப் பாடிப் பாராட்டும் இசையை மேகங்கள் உலாவும் வானவெளியில் உலாவும் கந்தருவர்கள் கேட்டு மகிழும் கழுமல நகரில் உள்ளதாகும்.


பாடல் எண் : 5
ஊர்கின்ற அரவம் ஒளி விடுதிங்க
            ளொடுவன்னி மத்தம் மன்னும்
நீர்நின்ற கங்கை நகு வெண்தலைசேர்
            செஞ்சடையான் நிகழும் கோயில்,
ஏர்தங்கி மலர்நிலவி இசைவெள்ளி
            மலைஎன்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களால் கவின்பெருகு
            சுதைமாடக் கழுமலமே.

            பொழிப்புரை :ஊர்ந்து செல்லும் அரவு, ஒளிவிடும் திங்கள், வன்னி, ஊமத்த மலர், நீர்வடிவான கங்கை, நகும் வெண்டலை ஆகியன சேர்ந்த செஞ்சடையை உடைய சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயில்; அழகு பொருந்திய வெள்ளி மலைகள் போல விளங்கி நிற்பனவும் மலர்களால் அலங்கரிக்கப்பெற்று அவற்றை மொய்க்கும் கரிய வண்டுகளின் கணங்களால் சூழப்பெற்றுக் கவின்மிகுவனவுமாய வெண்மையான சுதையால் அமைந்த மாட வீடுகள் நிறைந்த கழுமலநகரில் உள்ளது.


பாடல் எண் : 6
தருஞ்சரதம் தந்துஅருள் என்று அடிநினைந்து
            தழல் அணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடுஆர்தோ
            ழமை அளித்த பெருமான்கோயில்,
அரிந்த வயல் அரவிந்தம் மதுவுகுப்ப,
            அதுகுடித்துக் களித்துவாளை
கருஞ்சகடம் இளகவளர் கரும்புஇரிய
            அகம்பாயும் கழுமலமே.

            பொழிப்புரை :மெஞ்ஞானியர்க்குத் தரும் உண்மை ஞானத்தை எங்கட்கும் தந்தருள் என்று திருவடிகளை நினைந்து, தீ நடுவில் நின்று தவம் செய்யும் பெரிய சதுரப்பாடு உடையவர்கட்கும் மழை நீரில் நின்று தவமியற்றுபவர்கட்கும் பெருமை மிக்க தோழமையை வழங்கியருளும் சிவபிரான் உறையும் கோயில்; நெல்லறுவடை செய்த வயலில் முளைத்த தாமரை மலர்கள் தேனைச் சொரிய, அதனைக் குடித்துக் களித்த வாளை மீன்கள் வயற்கரைகளில் நிற்கும் பெரிய வண்டிகள் நிலைபெயரவும் கரும்புகள் ஒடியவும் துள்ளிப் பாயும் கழுமல வளநகரில் உள்ளதாகும்.


பாடல் எண் : 7
புவிமுதல்ஐம் பூதமாய், புலன்ஐந்தாய்,
            நிலன்ஐந்தாய், கரணம் நான்காய்,
அவைஅவைசேர் பயன்உருவாய், அல்லஉரு
            வாய்நின்றான் அமரும்கோயில்,
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு
            கொம்பு தைப்பக் கொக்கின் காய்கள்
கவண் எறிகல் போல்சுனையில் கரைசேரப்
            புள்இரியும் கழுமலமே.

            பொழிப்புரை :மண், புனல் முதலிய பூதங்கள் ஐந்து. சுவை ஒளி முதலிய புலன்கள் ஐந்து. அவற்றுக்கு இடமாகிய மெய், வாய் முதலிய பொறிகள் ஐந்து. வாக்கு பாதம் முதலிய செய்கருவிகள் ஐந்து. மனம் புத்தி முதலிய உட்கருவிகள் நான்கு ஆகிய ஆன்ம தத்துவங்களாகவும் அவற்றின் பயனாகவும், உருவமாகவும் அருவமாகவும் நிற்கின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயில், தவம் செய்ய முயல்வோர் இறைவனை அருச்சிக்க மரங்களில் பூத்த மலர்களைப் பறித்துக் கொண்டு விடுத்த கொம்புகள் நிமிர்ந்து தாக்குதலால் மாமரத்தில் காய்த்த காய்கள் விண்டு கவணிலிருந்து வீசப்பட்ட கல்போல சுனைகளில் வீழ ஆங்கு உறைந்த பறவைகள் அஞ்சி அகலும் வளமான கழுமலவளநகரில் உள்ளதாகும்.


பாடல் எண் : 8
அடல்வந்த வானவரை அழித்து உலகு
            தெழித்து உழலும் அரக்கர்கோமான்
மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல்
            பணிகொண்டோன் மேவும் கோயில்,
நடவந்த உழவுஅரிது நடஒணா
            வகை பரலாய்த் தென்று, துன்று
கடல்வந்த சங்குஈன்ற முத்துவயல்
            கரை குவிக்கும் கழுமலமே.

            பொழிப்புரை :வலிமை பொருந்திய தேவர்கள் பலரை அழித்து உலகை அச்சுறுத்தித் திரிந்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் வலிமைமிக்க இருபது தோள்களையும் கால் விரலால் நெரிய ஊன்றி அவனைப் பணிகொண்ட சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயிலை உடையது, நாற்று நடவந்த உழவர்கள் இவை நாற்று நடுவதற்கு இடையூறாய்ப் பரற்கற்கள் போலத் தோன்றுகின்றனவே என்று கூறுமாறு கடலின்கண் இருந்துவந்த சங்குகள் முத்துக்களை வயல்களில் ஈன்று குவிக்கும் கழுமலமாகும்.


பாடல் எண் : 9
பூமகள்தன் கோன் அயனும் புள்ளினொடு
            கேழல்உரு ஆகிப் புக்கிட்டு
ஆம்அளவுஞ் சென்றுமுடி அடிகாணா
            வகைநின்றான் அமரும் கோயில்,
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
            கொண்டு அணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து
            நின்று ஏத்தும் கழுமலமே.

            பொழிப்புரை :திருமகளின் கேள்வனாகிய திருமாலும், நான் முகனும் பன்றி உருவம் எடுத்தும், அன்னப்பறவை வடிவமெடுத்தும், தேடப் புகுந்து தம்மால் ஆமளவும் சென்று அடிமுடி காணாதவராய்த் தோற்று நிற்க, அழலுருவாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, பல்வகைப் பாக்களில் அமைந்துள்ள அருங்கலைகளை அறிந்த புலவர்கள் பல மலர்களைக் கொண்டு அருச்சித்து முறையோடு விருப்பங்கள் நிறைவேறக்கண்டு களிகூர்ந்து போற்றும் கழுமல நகராகும்.


பாடல் எண் : 10
குணம்இன்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை
            மெய்த்தவமாய் நின்றுகையில்
உணல் மருவுஞ் சமணர்களும் உணராத
            வகைநின்றான் உறையும் கோயில்,
மணம்மருவும் வதுவைஒலி விழவின்ஒலி
            இவை இசைய மண்மேல் தேவர்
கணம்மருவு மறையின்ஒலி கீழ்ப்படுக்க
            மேல்படுக்கும் கழுமலமே.

            பொழிப்புரை :நற்குணங்கள் இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்களும், அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான் உறையும் கோயிலை உடையது, ஆடவர் பெண்டிரை மணக்கும் திருமணத்தில் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின் ஓசையும், பூசுரர்களாகிய அந்தணர்கள் ஓதும் வேத ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும்.


பாடல் எண் : 11
கற்றவர்கள் பணிந்துஏத்தும் கழுமலத்துள்
            ஈசன்தன் கழன்மேல், நல்லோர்
நல்துணையாம் பெருந்தன்மை ஞானசம்
            பந்தன்தான் நயந்துசொன்ன
சொல்துணை ஓர்ஐந்தினொடு ஐந்து இவைவல்லார்,
      தூமலராள் துணைவர்ஆகி
முற்றுஉலகம் அதுஆண்டு, முக்கணான்
            அடிசேர முயல்கின்றாரே.

            பொழிப்புரை :கற்றவர்களாலே பணிந்து வழிபடப்பெறும் கழுமலத்துள் விளங்கும் இறைவருடைய திருவடிகளின் மேல், நல்லோர்க்கு நற்றுணையாகும் பெருந்தன்மையையுடைய ஞானசம்பந்தன் விரும்பிப் போற்றிப்பாடிய, ஓதுவார்களுக்குத் துணையாய் அமைந்த சொற்களையுடைய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர், திருமகள் கேள்வராய் இவ்வுலகம் முழுவதையும் அரசாண்டு சிவனடி கூடும் முயற்சியைச் செய்கின்றவராவர்.

                                                            திருச்சிற்றம்பலம்

3. 118   திருக்கழுமலம்                  பண் - புறநீர்மை
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மடல்மலி கொன்றை துன்றுவாள் எருக்கும்
            வன்னியும் மத்தமும் சடைமேல்
படல்லி திரைகள் மோதிய கங்கைத்
            தலைவனார் தம்இடம் பகரில்,
விடல்ஒளி பரந்த வெண்திரை முத்தம்
            இப்பிகள் கொணர்ந்துவெள் அருவிக்
கடல்ஒலி ஓதம் மோதவந்து அலைக்கும்
            கழுமல நகர்எனல் ஆமே.

            பொழிப்புரை : இதழ்கள் நிறைந்த கொன்றை மாலையும் , நெருங்கிய ஒளியுடைய வெள்ளெருக்க மாலையும் , ஊமத்தம் பூ மாலையும் அணிந்த சடையின்மேல் , ஒலி அடங்கிய அலை மோதும்படியான கங்கைக்குத் தலைவரான சிவபெருமான் வீற்றிருந் தருளும் இடம் எது என்றால் , ஒலி மிகுந்த வெள்ளிய அலைகள் முத்துக்களையும் , சிப்பிகளையும் அடித்துக் கொணர்ந்து ஒதுக்கும் கடலினொலி தன் வெள்ளப் பெருக்கைக் கரைமோதச் செய்யும் திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .


பாடல் எண் : 2
மின்னிய அரவும் வெறிமலர் பலவும்
            விரும்பிய திங்களும் தங்கு
சென்னிஅது உடையான், தேவர்தம் பெருமான்,
            சேய்இழை யொடும்உறை விடம்ஆம்,
பொன்இயல் மணியும் முரிகரி மருப்பும்
            சந்தமும் உந்துவன் திரைகள்
கன்னியர் ஆடக் கடல்ஒலி மலியும்
            கழுமல நகர்எனல் ஆமே.

            பொழிப்புரை : மின்னும் பாம்பும் , நறுமணம் கமழும் மலர்களும், இறைவனின் திருவடியைச் சரணடைந்த பிறைச்சந்திரனும் தங்கிய தலையுடையவர் சிவபெருமான். அவர் தேவர்கட்கெல்லாம் தலைவர் . அப்பெருமான் செம்மையான ஆபரணமணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம், பொன், மணி, யானையின் வளைந்த தந்தம், சந்தனக்கட்டை இவற்றை உந்தித் தள்ளுகின்ற வலிய அலைகளையுடையதும், கன்னிப்பெண்கள் கடற்கரையில் விளையாடுதலையுடையதும், கடலொலி மிகுதலையுடையதுமான திருக்கழுமலநகர் எனலாம்.


பாடல் எண் : 3
சீர்உறு தொண்டர் கொண்டுஅடி போற்றச்
            செழுமலர் புனலொடு தூபம்
தார்உறு கொன்றை தம்முடி வைத்த
            சைவனார் தங்குஇடம் எங்கும்,
ஊர்உறு பதிகள் உலகுடன் பொங்கி
            ஒலிபுனல் கொளஉடன் மிதந்த
கார்உறு செம்மை நன்மையால் மிக்க
            கழுமல நகர்எனல் ஆமே.

            பொழிப்புரை : பெருமை மிக்க சிவதொண்டர்கள் நறுமலரும் , நீரும் , தூபமுங் கொண்டு திருவடிகளைப் பூசிக்கும்படி , கொன்றை மாலையினைத் தமது திருமுடிமேல் வைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , பலவூர்களைத் தம்பாற் கொண்டுள்ள பதிகளை உலகுடன் கொள்ளும்படி கடல் பொங்கி எழுந்தபோது திருவருளால் தோணிபோல் மிதந்து மழையினாற் பெறும் நன்மைகள் குறைவறச் சிறந்துள்ள திருக்கழுமலநகர் எனலாம் .


பாடல் எண் : 4
மண்ணினார் ஏத்த, வான்உளார் பரச
            அந்தரத்து அமரர்கள் போற்ற,
பண்ணினார் எல்லாம் பலபல வேடம்
            உடையவர் பயில்விடம், எங்கும்
எண்ணினால் மிக்கார், இயல்பினால் நிறைந்தார்,
            ஏந்துஇழை அவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பம் கண்டுஒளி பரக்கும் 
            கழுமல நகர்எனல் ஆமே.

            பொழிப்புரை : மண்ணுலக மெய்யன்பர்கள் போற்றி வணங்கவும் , வானத்திலுள்ள தேவர்கள் துதிக்கவும் , பிரமன் , திருமால் முதலியோர்கள் போற்றவும் விளங்கி , எல்லாவற்றையும் ஆக்கியருளியவரும் , பலபல சிவமூர்த்தங்களாக விளங்குபவருமான சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இறைவனின் திருவடி மறவா நினைவால் சிறந்த உள்ளம் உடையவர்களும் , செவ்விய அணிகலன்கள் அணிந்துள்ள மகளிரும் அவரொடு நீங்காது ஒன்றித்து வாழும் ஆண்மை மிக்க ஆடவர்களும் , காணுந்தோறும் இன்பம் நுகரத் திருவருள் ஒளியைப் பரப்புகின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .


பாடல் எண் : 5
சுருதியான் தலையும், நாமகள் மூக்கும்,
            சுடர்அவன் கரமும், முன் இயங்கு
பரிதியான் பல்லும் இறுத்து, அவர்க்கு அருளும்
            பரமனார் பயின்றுஇனிது இருக்கை,
விருதின்நான் மறையும், அங்கம் ஓர்ஆறும்,
            வேள்வியும் வேட்டவர் ஞானம்
கருதினார், உலகில் கருத்துஉடை யார்சேர்
            கழுமல நகர்எனல் ஆமே.

            பொழிப்புரை :பிரமனது தலையையும் , சரஸ்வதியின் மூக்கையும் , தீக்கடவுளின் கையையும் , காலம் காட்டி முன் செல்லும் சூரியனின் பல்லையும் இறுத்து , பின் உமாதேவி வேண்ட அவர்கட்கு அருளும் புரிந்த சிவபெருமான் பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடமாவது , வழிவழிக் கேட்கும் தொழிலாகப் பயின்று வரும் புகழுடைய நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் அறிந்து, அவற்றின்படி வேத வேள்விகளைச் செய்பவர்களும் , ஞான வேட்கை உடையவர்களும் , உலகில் பிறந்ததன் பெரும்பயனை அடைய விரும்பும் கருத்துடையவர்களும் வசிக்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .


பாடல் எண் : 6
புற்றில்வாள் அரவும் ஆமையும் பூண்ட
            புனிதனார், பனிமலர்க் கொன்றை
பற்றிவான் மதியஞ் சடைஇடை வைத்த
            படிறனார், பயின்றுஇனிது இருக்கை,
செற்றுவன் திரைகள் ஒன்றொடுஓன்று ஓடிச்
            செயிர்த்துவண் சங்கொடு வங்கம்
கல்துறை வரைகள் கரைக்குவந் துஉரைக்கும்
            கழுமல நகர்எனல் ஆமே.

            பொழிப்புரை : புற்றில் வாழுந் தன்மையுடைய ஒளிமிக்க பாம்பையும் , ஆமையோட்டையும் ஆபரணமாகப் பூண்ட புனிதரும் , குளிர்ச்சி பொருந்திய கொன்றை மலருடன் , வானத்திலுள்ள சந்திரனையும் சடையில் வைத்த எம் உள்ளம் கவர் கள்வருமான சிவபெருமான் பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடம் , வலிய அலைகள் ஒன்றோடொன்று மோதிப் பொரும் கடலானது வளமையான சங்குகளோடு , கப்பல்களையும் கொண்டு வந்து மலைகள் போலக் கரை வந்து சாரச் செய்யும் திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .


பாடல் எண் : 7
அலைபுனல் கங்கை தங்கிய சடையார்,
            அடல்நெடு மதில்ஒரு மூன்று
கொலைஇடைச் செந்தீ வெந்துஅறக் கண்ட
            குழகனார் கோயில் அதுஎன்பர்,
மலையின்மிக் குஉயர்ந்த மரக்கலம் சரக்கு
            மற்றுமற்று இடைஇடை எங்கும்
கலைகளித்து ஏறிக் கானலில் வாழும்
            கழுமல நகர்எனல் ஆமே.

            பொழிப்புரை : அலைகளோடு கூடிய கங்கையைத் தாங்கிய சடையை உடையவர் சிவபெருமான் . நீண்ட மூன்று மதில்களும் கொலை நிகழ்வதாகிய போரினிடையே செந்தீயினால் வெந்தழியும்படி செய்தவர் , இளமையும் , அழகுமுடைய சிவபெருமான் ஆவார் . அவர் வீற்றிருந்தருளும் கோயிலையுடைய திருத்தலமாவது , மலைகளை விட மிக்குயர்ந்த சரக்கு மரக்கலங்கள் கடற்கரையில் நிற்க , கடற்கரைச் சோலைகளில் மான்கள் மகிழ்ந்து ஓடி வாழ்தலுடைய திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .


பாடல் எண் : 8
ஒருக்கமுன் நினையாத் தக்கன்தன் வேள்வி
            உடைதர உழறிய படையார்,
அரக்கனை வரையால் ஆற்றல்அன்று அழித்த
            அழகனார் அமர்ந்துஉறை கோயில்,
பரக்கும்வண் புகழார், பழிஅவை பார்த்துப்
            பலபல அறங்களே பயிற்றிக்
கரக்குமாறு அறியா வண்மையார், வாழும்
            கழுமல நகர்எனல் ஆமே.

            பொழிப்புரை : இறைவனை நினையாது முற்காலத்தில் தக்கன் செய்த யாகமாவது ஒருங்கே அழியும்படி கலக்கிய பூதப்படைகளை உடையவரும் , அரக்கனான இராவணனது ஆற்றலை மலையைச் சற்றே கால்விரலால் ஊன்றி நெருக்குதலால் அழித்த அழகருமான சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயிலுள்ள திருத்தலமாவது பரவுதலையுடைய மெய்ம்மையான புகழையுடையவரும் , குற்றங்கள் வாராவண்ணம் நன்கு ஆராய்ந்து ஒல்லும் வகையான் ஓவாது அறம்புரியும் மிக்க பயிற்சியுடையாரும் , கனவிலும் கரக்கும் எண்ணம் இல்லாத வள்ளன்மையுடையாரும் ஆகிய செந்நெறிச் செல்வர்கள் வாழும் கழுமலநகரெனக் கூறலாம் .


பாடல் எண் : 9
அருவரை பொறுத்த ஆற்றலி னானும்
            அணிகிளர் தாமரை யானும்
இருவரும் ஏத்த எரிஉரு வான
            இறைவனார் உறைவிடம் வினவில்,
ஒருவர்இவ் வுலகில் வாழ்கிலா வண்ணம்
            ஒலிபுனல் வெள்ளம்முன் பரப்ப,
கருவரை சூழ்ந்த கடல்இடை மிதக்கும்
            கழுமல நகர்எனல் ஆமே.

            பொழிப்புரை : கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கிய ஆற்றலுடைய திருமாலும் , அழகிய செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஏத்தித் துதிக்கும்படியாகத் தீப்பிழம்பின் உருவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , ஒருவரும் இவ்வுலகில் வாழ இயலா வண்ணம் , பேரூழிக் காலத்தில் பெருவெள்ளம் பெருக்கெடுக்க , அப்பரப்பில் கருவரை போன்ற திருமால் கிடந்து அறிதுயில் கொள்ளும் கடலிடைத் திருத்தோணி போன்று மிதந்த சிறப்பு வாய்ந்த திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .


பாடல் எண் : 10
உரிந்துஉயர் உருவில் உடைதவிர்ந் தாரும்
            அத்துகில் போர்த்துஉழல் வாரும்
தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச்
            செம்மையார், நன்மையால் உறைவுஆம்
குருந்துஉயர் கோங்கு கொடிவிடு முல்லை
            மல்லிகை சண்பகம் வேங்கை
கருந்தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும்
            கழுமல நகர்எனல் ஆமே.

            பொழிப்புரை : உயர்ந்த தமது உடலின்றும் உடையினை நீக்கிய சமணர்களும் , மிக்க ஆடையினை உடல் முழுவதும் போர்த்துத் திரியும் புத்தர்களும் ஆராய்ந்துணரும் அறிவிலாது ஏனைச் செந்நெறியாளர்களை இழிமொழிகளால் இகழ்ந்துரைப்பர். அப்புன் மொழிகளைப் ` புறம் கேளோம் ` என்ற மறையின்படி ஒரு பொருளாகக் கொள்ளாத செம்மையாளர்கட்கு நன்மைபுரியும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , குருந்து , கோங்கு , முல்லை , மல்லிகை , சண்பகம் , வேங்கை ஆகிய மலர்களைக் கரிய அகன்ற கண்களையுடைய மங்கையர்கள் கொய்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம் .


பாடல் எண் : 11
கானல்அம் கழனி ஓதம்வந் துஉலவும்
            கழுமல நகர்உறை வார்மேல்,
ஞானசம் பந்தன் நல்தமிழ் மாலை
            நன்மையால் உரைசெய்து நவில்வார்,
ஊனசம் பந்தத்து உறுபிணி நீங்கி,
            உள்ளமும் ஒருவழிக் கொண்டு,
வான்இடை வாழ்வர், மண்மிசைப் பிறவார்,
            மற்றுஇதற்கு ஆணையும் நமதே.

            பொழிப்புரை : கடற்கரைச் சோலைகளை அடுத்த வயல்களில் கடல்நீர் வந்து பாய்தலையுடைய திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனைப் போற்றிப் பாடிய ஞான சம்பந்தனுடைய நல்ல தமிழ்மாலைகளைப் பத்தியோடு பொருள் உணர்ந்து பாடித் துதிப்பவர்கள் உடலுடன் தொடர்பு கொண்டதான பிறவிப் பிணி நீங்கி , உள்ளம் ஒருமைப்பாட்டினையுடைய சிவலோகத்தில் வாழ்வர் . மீண்டும் நிலவுலகில் வந்து பிறவார் . இதற்கு ஆணையும் நம்முடையதே ஆகும் .

                                                            திருச்சிற்றம்பலம்
                                                                                    ---- தொடரும் -----

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...