சீர்காழி - 5


3.013     திருப்பூந்தராய்                     பண் - காந்தார பஞ்சமம்
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மின்அன எயிறுஉடை விரவ லோர்கள்தம்
துன்னிய புரம்உகச் சுளிந்த தொன்மையர்,
புன்னைஅம் பொழில்அணி பூந்த ராய்நகர்
அன்னம்அன் னந்நடை அரிவை பங்கரே.

            பொழிப்புரை :மின்னலைப் போன்ற பற்களையுடைய பகையசுரர்களின் நெருங்கிய புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்த பழமையானவரான சிவபெருமான் , புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில் , அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந் தருளுகின்றார் .


பாடல் எண் : 2
மூதுஅணி முப்புரத்து எண்இ லோர்களை
வேதுஅணி சரத்தினால் வீட்டி னார்அவர்,
போதுஅணி பொழில்அமர் பூந்த ராய்நகர்த்
தாதுஅணி குழல்உமை தலைவர் காண்மினே.

            பொழிப்புரை :பழமையான அணிவகுப்பையுடைய முப்புரத் திலிருந்த அளவற்ற அசுரர்களை வெம்மையுடைய அம்பினால் அழித்தவராகிய சிவபெருமான் , மலர்கள் நிறைந்த அழகிய சோலை களையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் மகரந்தப் பொடிகள் தங்கிய கூந்தலையுடைய உமாதேவியின் தலைவராய் வீற்றிருந்தருளுகின்றார். அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள்.


பாடல் எண் : 3
தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப்
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்,
பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர்க்
கருக்கிய குழல்உமை கணவர் காண்மினே.

            பொழிப்புரை :செருக்குக் கொண்ட திரிபுரத்தசுரர்கள் அழியு மாறும், தேவர்களின் இன்பம் பெருகுமாறும் , மேருமலையை வில்லாகப் பிடித்த சிவபெருமான் , அலைவீசுகின்ற கடல் பக்கங்களில் சூழ்ந்திருக்க , பெருமையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவாராய் , கூந்தலுக்கு உவமையாகக் கூறப்படும் பொருள்களெல்லாம் தமக்கு அத்தகைய நிறமும் , அழகும் இல்லையே என்று வருத்தமுறும்படி அழகிய , கரிய கூந்தலையுடைய உமா தேவியின் கணவர் ஆவார் . அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள் .


பாடல் எண் : 4
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
மாகம்ஆர் புரங்களை மறித்த மாண்பினர்,
பூகம்ஆர் பொழில்அணி பூந்த ராய்நகர்ப்
பாகுஅமர் மொழிஉமை பங்கர் காண்மினே.

            பொழிப்புரை :வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், மேரு மலையை வில்லாகவும் கொண்டு , ஆகாயத்தில் திரிந்த திரிபுரங்களை அழித்த மாண்புடைய சிவபெருமான் , கமுக மரங்கள் நிறைந்த சோலைகளால் அழகுடன் திகழும் திருப்பூந்தராய் என்னும் திருத் தலத்தில் வெல்லப்பாகு போன்று இனிமையாகப் பேசுகின்ற உமா தேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் . அவரைத் தரிசித்துப் பிறவிப்பயனை அடையுங்கள் .


பாடல் எண் : 5
வெள்எயி றுஉடைய அவ் விரவ லார்கள்ஊர்
ஒள்எரி ஊட்டிய ஒருவ னார், ஒளிர்
புள்அணி புறவினில் பூந்த ராய்நகர்க்
கள்அணி குழல்உமை கணவர் காண்மினே.

            பொழிப்புரை :வெண்ணிறப் பற்களையுடைய அசுரர்களின் திரிபுரங்கள் , ஒளி பொருந்திய நெருப்பால் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் சிவபெருமான் . மின்னுகின்ற பறவைகளை உடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானார் தேன்கமழும் கூந்தலையுடைய உமாதேவியின் கணவராவார் . அப்பெருமானாரைத் தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள் .


பாடல் எண் : 6
துங்குஇயல் தானவர் தோற்ற மாநகர்
அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர்,
பொங்கிய கடல்அணி பூந்த ராய்நகர்
அம்கயல் அனகணி அரிவை பங்கரே.

            பொழிப்புரை :அசுரர்களின் நெடிய வடிவங்களைப் போன்று தோற்றத்தையுடைய பெரிய முப்புரங்களையும், நெருப்பால் அழியுமாறு செய்த அக்கினிக் கணையை உடைய சிவபெருமான், பொங்கும் கடலையுடைய அழகிய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமான் அழகிய கயல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவர் . அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப்பயனைப் பெறுங்கள் .


பாடல் எண் : 7
அண்டர்கள் உய்ந்திட அவுணர் மாய்தரக்
கண்டவர், கடல்விடம் உண்ட கண்டனார்,
புண்டரீ கவ்வயல் பூந்த ராய்நகர்
வண்டுஅமர் குழலிதன் மணாளர் காண்மினே

            பொழிப்புரை :சிவபெருமான் எல்லா அண்டத்தவர்களும் நன்மை அடையும் பொருட்டுத் திரிபுர அசுரர்களை மாய்த்தவர் . கடலில் தோன்றிய நஞ்சை உண்ட கருநிறக் கண்டத்தர் . தாமரை மலர்கள் பூத்துள்ள வயல்களையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர் . பூவிலுள்ள தேனை உண்ணும்பொருட்டு வண்டு அமர்கின்ற கூந்தலையுடைய உமாதேவியின் மணாளர் ஆவார் . அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள் .


பாடல் எண் : 8
மாசின அரக்கனை வரையின் வாட்டிய,
காய்சின எயில்களைக் கறுத்த கண்டனார்,
பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க்
காசைசெய் குழல்உமை கணவர் காண்மினே.

            பொழிப்புரை :சிவபெருமான் குற்றம் செய்த அரக்கனான இராவணனைக் கயிலை மலையின்கீழ் அடர்த்தவர் . கோபத்தால் பிற உயிர்களைத் துன்புறுத்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்த நீலகண்டர் . அந்தணர்கள் நிறைந்து விளங்குகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் , வீற்றிருந்தருளும் அவர் காயாம்பூவைப் போன்ற கருநிறக் கூந்தலையுடைய உமாதேவியின் கணவராவார் . அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள் .


பாடல் எண் : 9
தாம் முகம் ஆக்கிய அசுரர் தம்பதி
வேமுகம் ஆக்கிய விகிர்தர், கண்ணனும்
பூமகன் அறிகிலாப் பூந்த ராய்நகர்க்
கோமகன், எழில்பெறும் அரிவை கூறரே.

            பொழிப்புரை :தம் விருப்பம்போல் தேவர்கட்குத் துன்பம் செய்த அசுரர்களின் மூன்று நகரங்களை வெந்தழியுமாறு செய்த விகிர்தர் சிவபெருமான் . திருமாலும் , பிரமனும் அறிய ஒண்ணாதவர் . திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமான் அழகிய உமாதேவியைத் தம் உடம்பின் ஒரு கூறாகக் கொண்டவர் . அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள் .


பாடல் எண் : 10
முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்
அத்தகும் அழல்இடை வீட்டி னார்,அமண்
புத்தரும் அறிஒணாப் பூந்த ராய்நகர்க்
கொத்துஅணி குழல்உமை கூறர் காண்மினே.

            பொழிப்புரை :சிவபெருமான் மூன்று தரத்தினராகிய அசுரர்கள் மிகுந்த முப்புரங்களை நெருப்பில் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் . சமணர்களாலும் , புத்தர்களாலும் அறிய ஒண்ணாதவர் . திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர் , பூங்கொத்துக்களால் அழகுபடுத்தப்பட்ட கூந்தலையுடைய உமாதேவியைத் தம் உடம்பின் ஒரு கூறாகக் கொண்டவர் . அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள் .


பாடல் எண் : 11
புரம்எரி செய்தவர், பூந்த ராய்நகர்ப்
பரம்மலி குழல்உமை நங்கை பங்கரை,
பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர்
சிரம்மலி சிவகதி சேர்தல் திண்ணமே.

            பொழிப்புரை :முப்புரம் எரித்த சிவபெருமான் திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் அடர்த்தியான கூந்தலையுடைய உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் . அப் பெருமானை ஞானசம்பந்தன் நவின்ற இம்மெய்ம்மைப் பதிகத்தால் போற்ற வல்லவர்கள் தலையானதாகக் கருதப்படுகின்ற சிவகதியை நிச்சயம் பெறுவர் .

                                                            திருச்சிற்றம்பலம்


1.047   திருச்சிரபுரம்                 பண் - பழந்தக்கராகம்
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பல்அடைந்த வெண்தலையில் பலிகொள்வது அன்றியும்போய்,
வில்அடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தல்என்னே,
சொல்அடைந்த தொல்மறையோடு அங்கம் கலைகள்எல்லாம்
செல்அடைந்த செல்வர்வாழும் சிரபுரம் மேயவனே.

            பொழிப்புரை :பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய பழமையான வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும், பிற கலைகளையும் கற்றுணர்ந்த செல்வர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப்பதியுள் எழுந்தருளிய இறைவனே! பற்கள் பொருந்திய வெண்மையான தலையில் பல இடங்களுக்கும் போய்ப் பலியேற்பதோடு வில் போன்ற புருவத்தை உடைய உமையம்மையை உன் திருமேனியில் கொண்டுள்ள காரணம் யாதோ?


பாடல் எண் : 2
கொல்லைமுல்லை நகையினாள்ஓர் கூறுஅதுஅன்றியும் போய்,
அல்லல் வாழ்க்கைப் பலிகொண்டு உண்ணும் ஆதரவு என்னைகொலாம்,
சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
செல்லநீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே.

            பொழிப்புரை :சொல்லச் சொல்ல நீண்டு செல்லும் பெருமையாள ரும், பழமையான கலைகளைக் கற்று வல்லவர்களுமாகிய அறிஞர்கள் வாழ்வதும், வழங்கத் தொலையாத செல்வவளத்தை உடையதுமான சிரபுரம் மேவிய இறைவனே! முல்லை நிலத்தே தோன்றிய முல்லையரும்பு போன்ற பற்களை உடைய உமையம்மை ஓர் கூற்றில் விளங்கவும் சென்று அல்லற்படுவோர் ஏற்கும் பலி உணவை ஏற்று உண்ணுதலில் விருப்பம் கொள்வது ஏனோ ?


பாடல் எண் : 3
நீர்அடைந்த சடையின்மேல்ஓர் நிகழ்மதி அன்றியும்போய்,
ஊர்அடைந்த ஏறுஅதுஏறி உண்பலி கொள்வது என்னே,
கார்அடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டுஇசைப்பச்
சீர்அடைந்த செல்வம்ஓங்கு சிரபுரம் மேயவனே.

            பொழிப்புரை :வண்டுகள் சீகாமரம் என்னும் பண்ணைப் பாடி மகிழ்ந்துறைவதும், மேகங்கள் தவழும் சோலைகளால் சூழப்பெற்றதும், அறநெறியில் விளைந்த செல்வம் பெருகி விளங்குவதுமாகிய சிரபுரம் மேவிய இறைவனே! கங்கையை அணிந்த சடைமுடியின் மேல் விளங்கும் பிறைமதி ஒன்றை அணிந்து, பல ஊர்களையும் அடைதற்கு ஏதுவாய ஆனேற்றில் ஏறிச் சென்று, பலரிடமும் பலி கொள்வது ஏனோ?


பாடல் எண் : 4
கைஅடைந்த மானினோடு கார்அரவு அன்றியும்போய்,
மெய்அடைந்த வேட்கையோடு மெல்இயல் வைத்தல்என்னே,
கைஅடைந்த களைகள்ஆகச் செங்கழு நீர்மலர்கள்
செய்அடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே.

            பொழிப்புரை :களையெடுப்போர் கைகளில், மிக அதிகமான களைகளாகச் செங்கழுநீர் மலர்கள் வந்தடையும் அழகிய வயல்களால் சூழப்பட்ட சிரபுரம் மேவிய இறைவனே! கைகளில் மான், கரிய பாம்பு ஆகியவற்றைக் கொண்டு உனது திருமேனியில் பெரு விருப்போடு உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டுள்ளது ஏனோ?


பாடல் எண் : 5
புரம்எரித்த பெற்றியோடும் போர்மத யானைதன்னை
கரம்எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னே,
மரம் உரித்த தோல் உடுத்த மாதவர் தேவரோடும்
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே.

            பொழிப்புரை :  மரத்தை உரித்ததால் ஆன மரவுரி என்னும் ஆடையை அணிந்த முனிவர்களும் தேவர்களும் கைகளைத் தலை மிசைக் கூப்பி வணங்கும் சிரபுரம் மேவிய இறைவனே! திரிபுரங்களை எரித்தழித்த பெரு வீரத்தோடு போர் செய்ய வந்த மதயானையைக் கையால் தூக்கி அதன் தோலை உரித்துப்போர்த்த, காரணம் யாதோ?


பாடல் எண் : 6
கண்ணுமூன்றும் உடையதுஅன்றி, கையினில் வெண்மழுவும்,
பண்ணுமூன்று வீணையோடு, பாம்புஉடன் வைத்தல்என்னே,
எண்ணுமூன்று கனலும்ஓம்பி எழுமையும் விழுமியராய்த்
திண்ணம்மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே.

            பொழிப்புரை : ஆகவனீயம், காருகபத்தியம், தக்ஷிணாக்கினி என்று எண்ணப்படும் முத்தீயையும் வேட்பதுடன் எழு பிறப்பிலும் தூயவராய் உறுதிப்பாட்டுடன் தேவ யாகம், பிதிர்யாகம், இருடியாகம் ஆகிய மூன்று வேள்விகளையும் புரியும் அந்தணாளர் வாழும் சிரபுரம் மேவிய இறைவனே; முக்கண்களை உடையவனாய்க் கைகளில் வெண்மழு, பண் மூன்றுடைய வீணை, பாம்பு ஆகியன கொண்டுள்ள காரணம் யாதோ?


பாடல் எண் : 7
குறைபடாத வேட்கையோடு கோல்வளையாள் ஒருபால்,
பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மை என்னே,
இறைபடாத மென்முலையார் மாளிகை மேல்இருந்து
சிறைபடாத பாடல்ஓங்கு சிரபுரம் மேயவனே.

            பொழிப்புரை :சிறிதும் சாயாத மெல்லிய தனங்களை உடைய இள மகளிர் மாளிகைகளின் மேல் இருந்து குற்றமற்ற பாடல்களைப் பாடும் மகிழ்ச்சி மிகுந்துள்ள சிரபுரம் மேவிய இறைவனே, குன்றாத வேட்கையோடு திரண்ட கைவளைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாக அளவற்ற இன்பத்துடன் புணர்தற்குக் காரணம் என்னையோ.


பாடல் எண் : 8
மலை எடுத்த வாள்அரக்கன் அஞ்ச ஒருவிரலால்
நிலை எடுத்த கொள்கையானே, நின்மலனே, நினைவார்
துலை எடுத்த சொல்பயில்வார், மேதகு வீதிதோறும்
சிலை எடுத்த தோளினானே, சிரபுரம் மேயவனே.

            பொழிப்புரை :கயிலை மலையை எடுத்த வாள்வலி உடைய இரா வணன் அஞ்சுமாறு கால் விரல் ஒன்றினால் அடர்த்துத் தன் நிலையை எடுத்துக் காட்டிய செயலைப் புரிந்தவனே, குற்றமற்றவனே, தன்னை நினைவாரும் இருவினையொப்புடன் தோத்திரிக்கும் அன்பர்களும் மேன்மை மிக்க வீதி தொறும் வாழ விசயனுக்காக வில்லைச் சுமந்த தோளினை உடையவனே! சிரபுரம் மேவியவனே! கொள்கையனே என்று பாடம் இருக்கலாம். நிலை எடுத்த கொள்கை என்னே என்று பொருள் கொள்ளின் ஏனைய திருப்பாடல்களுடன் ஒக்கும்.


பாடல் எண் : 9
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலும்அஞ்சப் பண்ணிநீண்ட தத்துவம் மேயதுஎன்னே,
நாலுவேதம் ஓதலார்கள் நம்துணை என்று இறைஞ்சச்
சேலும் மேயும் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே.

            பொழிப்புரை :நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள் நம் துணைவனே என்று போற்றி இறைஞ்சச் சேல்மீன்கள் மேயும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேவிய இறைவனே! தாமே பெரியர் என வந்த திருமாலும் தாமரை மலரில் உறையும் நான்முகனும் இயலாது மிகவும் அஞ்சுமாறு செய்து மிக நீண்ட திருவுருவைக் கொண்டது ஏன்?


பாடல் எண் : 10
புத்தரோடு சமணர்சொற்கள் புறன்உரை என்று இருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த பான்மை அது என்னைகொலாம்,
மத்தயானை உரியும்போர்த்து, மங்கையொடும் உடனே
சித்தர்வந்து பணியும் செல்வச் சிரபுரம் மேயவனே.

            பொழிப்புரை :மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்து உமையம்மையாருடன் சித்தர்கள் பலரும் பணியச் செல்வச் சிரபுரநகரில் மேவிய இறைவனே! புத்தர்கள் சமணர்கள் ஆகிய புறச்சமயிகளின் வார்த்தைகள் புறனுரை என்று கருதும் பத்தர் வந்து பணியுமாறு செய்த பான்மையாதோ? உரியும் - உம்மை இசைநிறை.


பாடல் எண் : 11
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை,
அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தன்உரை
பங்கம் நீங்கப் பாடவல்ல பத்தர்கள், பார் இதன்மேல்
சங்கமோடு நீடிவாழ்வர், தன்மையி னால் அவரே.

            பொழிப்புரை :தென்னைகள் நீண்டு வளர்ந்து பயன்தரும் சோலைகள் சூழ்ந்த சிரபுரம் மேவிய இறைவனை ஆறு அங்கங்களுடன் விரிந்துள்ள வேதங்களை அறிந்துணர்ந்த அழகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிக வாசகங்களைத் தம் குற்றங்கள் நீங்கப் பாடவல்ல பக்தர்கள் இவ்வுலகில் அடியவர் கூட்டங்களோடு வாழும் தன்மையினால் வாழ்நாள் பெருகிவாழ்வர்.
                                                            திருச்சிற்றம்பலம்



1.109   திருச்சிரபுரம்                  பண் - வியாழக்குறிஞ்சி
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வார்உறு வனமுலை மங்கைபங்கன்
நீர்உறு சடைமுடி நிமலன்இடம்,
கார்உறு கடிபொழில் சூழ்ந்த அழகார்
சீர்உறு வளவயல் சிரபுரமே.

            பொழிப்புரை :கச்சணிந்த அழகிய தனபாரங்களை உடைய உமை யம்மையின் கணவனும், கங்கையை அணிந்த சடைமுடியை உடைய நிமலனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், மேகங்கள் தோயுமாறு வானளாவிய மணம் கமழும் பொழில் சூழ்ந்த அழகிய சிறப்புப் பொருந்திய வளமையான வயல்களை உடைய சிரபுரம் ஆகும்.


பாடல் எண் : 2
அங்கமொடு அருமறை அருள்புரிந்தான்,
திங்களொடு அரவுஅணி திகழ்முடியன்,
மங்கையொடு இனிது உறை வளநகரம்
செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே.

            பொழிப்புரை :ஆறங்கங்களோடு அரிய வேதங்கள் நான்கையும் அருளிச் செய்தவனும், திங்கள் பாம்பு ஆகியவற்றை அணிந்து விளங்கிய முடியினனும் ஆகிய சிவபெருமான் உமைமங்கையோடு மகிழ்வாக உறையும் வளமையான நகரம் செங்கயல்கள் துள்ளி விளையாடும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் ஆகும்.


பாடல் எண் : 3
பரிந்தவன் பன்முடி அமரர்க்கு ஆகி,
திரிந்தவர் புரம் அவை தீயின்வேவ
வரிந்தவெஞ் சிலைபிடித்து அடுசரத்தைத்
தெரிந்தவன், வளநகர் சிரபுரமே.

            பொழிப்புரை :பல்வகையான முடிகளைச் சூடிய அமரர்களிடம் மிக்க பரிவுடையவனாகி வானவெளியில் திரிந்த அவுணர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு வரிந்து கட்டிய கொடிய வில்லைப் பிடித்துக் கொல்லும் அம்பினை ஆராய்ந்து தொடுத்த பெருமானது வளநகர் சிரபுரமாகும்.


பாடல் எண் : 4
நீறுஅணி மேனியன், நீள்மதியோடு
ஆறுஅணி சடையினன், அணிஇழையோர்
கூறு அணிந்து, இனிதுஉறை குளிர்நகரம்
சேறுஅணி வளவயல் சிரபுரமே.

            பொழிப்புரை :திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வளைவாக நீண்ட பிறைமதியோடு கங்கையை அணிந்த சடையினை உடையவனும் ஆகிய சிவபிரான், அழகிய அணிகலன்களைப் பூண்ட உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு இனிதாக உறையும் குளிர்ந்த நகரம் சேற்றால் அழகிய வளமான வயல்கள் சூழ்ந்த சிரபுரமாகும்.


பாடல் எண் : 5
அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச்
சரம் துரந்து எரிசெய்த சங்கரன் ஊர்,
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவுஅணி சிரபுரமே.

            பொழிப்புரை :வெல்லுதற்கரிய வலிமையினையுடைய அசுரர்களின் முப்புரங்களும் அழியுமாறு கணையைத் தொடுத்து எரித்த சங்கரனாகிய சிவபெருமானது ஊர், குருந்தமரம் கொடிகளாகப் படரும் மாதவி எனும் குருக்கத்தி ஆகியன நிறைந்த அழகிய புதர்களால் சூழப் பட்ட சிரபுரம் என்னும் நகரமாகும்.


பாடல் எண் : 6
கலைஅவன், மறைஅவன், காற்றொடுதீ,
மலைஅவன், விண்ணொடு மண்ணும்அவன்,
கொலையவன் கொடிமதில் கூட்டுஅழித்த
சிலையவன், வளநகர் சிரபுரமே.

            பொழிப்புரை :கலைகளாக விளங்குபவனும், வேதங்களை அருளியவனும் காற்று, தீ, மலை, விண், மண் முதலியனவாகத் திகழ்பவனும் கொடிகள் கட்டப்பெற்ற அசுரர்களின் முப்புரங்களை அவற்றின் மதில்களோடு கூட்டாக அழித்த மேருவில் ஏந்திய கொலையாளனும் ஆகிய சிவபெருமானது வளநகர் சிரபுரமாகும்.


பாடல் எண் : 7
வான்அமர் மதியொடு மத்தம்சூடி,
தானவர் புரம்எய்த சைவன்இடம்,
கான்அமர் மடமயில் பெடைபயிலும்
தேன் அமர் பொழில் அணி சிரபுரமே.

            பொழிப்புரை :வானத்தில் உலவும் பிறைமதியையும், ஊமத்த மலரையும் முடியிற் சூடி, அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சைவன் இடம், காடுகளில் வாழும் இள ஆண் மயில்கள் பெண் மயில்களோடு கூடி மகிழ்வதும் இனிமை நிறைந்து விளங்குவதுமான சிரபுரமாகும்.


பாடல் எண் : 8
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்துஅழியக்
கறுத்தவன், கார் அரக் கன்முடிதோள்
இறுத்தவன், இருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன், வளநகர் சிரபுரமே.

            பொழிப்புரை :தன்னோடு உடன்பாடு இல்லாது மாறுபட்டு ஒழுகிய அசுரர்களின் முப்புரங்களும் கெட்டு அழியுமாறு சினந்தவனும், கரிய அரக்கனாகிய இராவணனின் தலை தோள் ஆகியவற்றை நெரித்தவனும், மிக்க சினம் உடைய இயமனை அழித்தவனுமான சிவ பிரானது வளநகர் சிரபுரமாகும்.


பாடல் எண் : 9
வண்ணநன் மலர்உறை மறையவனும்
கண்ணனும் கழல்தொழக் கனல் உருவாய்
விண்உற ஓங்கிய விமலன் இடம்
திண்ணநல் மதில் அணி சிரபுரமே.

            பொழிப்புரை :செவ்வண்ணமுடைய நல்ல தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் தன் திருவடிகளைத் தொழுது நிற்குமாறு கனல் உருவாய் விண்ணுற ஓங்கி நின்ற விமலனாகிய சிவபிரானது இடம் உறுதியான நல்ல மதில்களால் அழகுறும் சிரபுர வளநகராகும்.

  
பாடல் எண் : 10
வெற்றுஅரை உழல்பவர், விரிதுகிலார்,
கற்றிலர், அறவுரை புறன் உரைக்க,
பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே.

            பொழிப்புரை :ஆடையில்லாத இடையோடு திரிந்துழல்வோரும், விரித்த ஆடையைப் போர்வையாகப் போர்த்தியுள்ளவரும், மெய் நூல்களைக் கல்லாதவரும் ஆகிய சமண பௌத்தர்கள் அறவுரை என்ற பெயரில் புறம்பான உரைகளைக் கூறக்கேட்டு அவற்றைப் பொருட்படுத்தாதவனாய்ப் பகைவராகிய அவுணர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு அழித்தருளிய சிவபிரான் எழுந்தருளிய வளநகர் சிரபுரமாகும்.

பாடல் எண் : 11
அருமறை ஞானசம் பந்தன், அந்தண்
சிரபுர நகர் உறை சிவனடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே.

            பொழிப்புரை :அரிய மறைகளை ஓதாது உணர்ந்த ஞானசம்பந்தன் அழகிய தண்ணளியை உடைய சிரபுர நகரில் எழுந்தருளிய சிவபெருமான் திருவடிகளைப் பரவிப் போற்றிய இப்பதிகச் செந்தமிழ் பத்தையும் ஓத வல்லவர் செல்வத்துடன் புகழ் நிறைந்து ஒளியுடன் திகழ்வர்.

                                                            திருச்சிற்றம்பலம்
  

1.097   திருப்புறவம்                             பண் - குறிஞ்சி
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த
மைஆர் கண்டன், மாது உமைவைகும் திருமேனிச்
செய்யான், வெண்நீறு அணிவான், திகழ்பொன் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவம்மே.

            பொழிப்புரை :பொய் கூறாத நாவினை உடைய அந்தணர்கள் வாழும் திருப்புறவம் என்னும் சீகாழிப்பதி, இளையாத வெற்றியை உடைய அசுரர்களின் முப்புரங்களை எரித்த நீலகண்டன், உமையம்மையை ஒருகூறாகக் கொண்டு எழுந்தருளும், செய்ய திருமேனியனாய் வெண்ணீறு அணிந்தவனாய் விளங்கும் அழகிய பதியாகும்.


பாடல் எண் : 2
மாதுஒருபாலும், மால்ஒருபாலும் மகிழ்கின்ற
நாதன்என்று ஏத்தும் நம்பரன், வைகும் நகர்போலும்
மாதவி மேய வண்டு இசைபாட மயில்ஆடப்
போதுஅலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம்மே.

            பொழிப்புரை :குருக்கத்தியில் மேவிய வண்டுகள் இசைபாடவும் மயில்கள் ஆடவும், அவற்றிற்குப் பரிசிலாகப் புன்னை மரங்கள் விரிந்த மலர்களின் மகரந்தங்களைப் பொன்னாக அளிக்கும் இயற்கை வளம்சான்ற புறவம் என்னும் பதி, உமையம்மையை ஒரு பாகமாகவும் திருமாலை ஒரு பாகமாகவும் கொண்டு மகிழ்கின்ற நம் மேலான தலைவன் வைகும் நகராகும்.


பாடல் எண் : 3
வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே
புற்றுஆர் அரவின் படம் ஆடவும்,இப் புவனிக்குஓர்
பற்றாய் இடுமின் பலிஎன்று அடைவார் பதிபோலும்,
பொன்தா மரையின் பொய்கை நிலாவும் புறவம்மே.

            பொழிப்புரை :என்றும் நீர் வற்றாத கங்கையும், பிறையும் பொருந்திய சடையின்மேல் புற்றை இடமாகக் கொண்ட பாம்புபடத்துடன்ஆட , இவ்வுலகிற்கு ஒரு பற்றுக்கோடாகி , எனக்குப் பலி இடு மின் என்று பல ஊர்களுக்கும் செல்லும் சிவபிரானது பதி, அழகிய தாமரைகள் மலர்ந்துள்ள பொய்கை விளங்கும் புறவம் என்னும் பதியாகும்.


பாடல் எண் : 4
துன்னார் புரமும், பிரமன் சிரமும் துணிசெய்து,
மின்ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட,
பல்நாள் இடுமின் பலிஎன்று அடைவார் பதிபோலும்,
பொன்ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவம்மே.

            பொழிப்புரை :பகைவர்களாகிய திரிபுர அசுரர்களின் முப்புரங் களையும், பிரமனின் தலைகளில் ஒன்றையும் அழித்து, மின்னல் போல் ஒளி விடும் சடைமுடி மேல் பாம்பும் மதியும் பகை நீங்கி விளையாடு மாறு சூடிப் பல நாள்களும் சென்று பலியிடுமின் என்று கூறித் திரிவானாகிய சிவபிரானது பதி, பொன்னாலியன்ற முப்புரிநூலை அணிந்த அந்தணர்கள் வாழும் புறவமாகும்.
  

பாடல் எண் : 5
தேவா, அரனே, சரண்என்று இமையோர் திசைதோறும்
காவாய், என்று வந்து அடைய, கார் விடம்உண்டு,
பாஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும்
பூஆர் கோலச் சோலை சுலாவும் புறவம்மே.

            பொழிப்புரை :பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த விடத்தின் கொடுமை தாங்காது, தேவர்கள் திசைதோறும் சூழ்ந்து நின்று `தேவனே! அரனே! உனக்கு அடைக்கலம் எங்களைக் காவாய்` எனச் சரண்அடைய, அக்கடலில் தோன்றிய கரிய விடத்தை உண்டு, பாடல்களாக அமைந்த வேதங்களைப் பயிலும் சிவபெருமான் வாழும் பதி, மலர்கள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த புறவம் என்னும் பதியாகும்.


பாடல் எண் : 6
கற்றுஅறிவு எய்திக் காமன்முன்ஆகும் முகவுஎல்லாம்
அற்று அரனே, நின் அடிசரண்என்னும் அடியோர்க்குப்
பற்று அதுஆய பாசுபதன், சேர் பதிஎன்பர்,
பொன்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவம்மே.

            பொழிப்புரை :மெய்ந்நூல்களைக் கற்று, அதனால் நல்லறிவும் பெற்று, காமனாகிய மன்மதனின் குறிப்பினால் ஆகும் காமவிருப்பமெல்லாம் அற்று, `அரனே! நின் திருவடிகளே சரண்` என்று கூறும் அடியவர்கட்குப் பற்றுக்கோடாய்ப் பாசுபதன் எழுந்தருளிய பதி, பொன் நிறைந்து விளங்கும் மாடவீடுகளின் ஒளி சூழ்ந்த புறவம் என்னும் பதியாகும் என்பர்.
  

பாடல் எண் : 7
எண்திசையோர் அஞ்சிடு வகை கார்சேர் வரைஎன்னக்
கொண்டுஎழு கோல முகில்போல் பெரிய கரிதன்னைப்
பண்டுஉரி செய்தோன் பாவனை செய்யும் பதிஎன்பர்,
புண்டரி கத்தோன் போல்மறை யோர்சேர் புறவம்மே.

            பொழிப்புரை :எண்திசையில் உள்ளாரும் அஞ்சிடுமாறு கரிய மலைபோலவும், நீரை முகந்து கொண்டெழுந்த அழகிய கரிய மேகம் போலவும் வந்த பெரிய களிற்று யானையை முற்காலத்தில் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்த சிவபிரான் விரும்பியிருக்கும் பதி, தாமரை மலர் மேல் உறையும் நான்முகன் போல வேதங்களில் வல்ல அந்தணர்கள் வாழும் புறவமாகும்.


பாடல் எண் : 8
பரக்கும் தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத்
துரக்கும் செந்தீப் போல்அமர் செய்யுந் தொழில்மேவும்
அரக்கன் திண்தோள் அழிவித்தான், அக் காலத்தில்
புரக்கும் வேந்தன் சேர்தரும் மூதூர் புறவம்மே.

            பொழிப்புரை :எங்கும் பரவிய பழமையான புகழை உடைய தேவர்களின் கடல் போன்ற படையை, ஊழித்தீப்போன்று அழிக்கும் தொழிலில் வல்ல இராவணனின் வலிய தோள்வலியை அக்காலத்தில் அழித்தருளி, அனைத்து உலகங்களையும் புரந்தருளும் வேந்தனாக விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய பழமையான ஊர் புறவமாகும்.

  
பாடல் எண் : 9
மீத்திகழ் அண்டம் தந்த அயனோடு மிகுமாலும்
மூர்த்தியை நாடிக் காணஒணாது, முயல்விட்டு ஆங்கு
ஏத்த, வெளிப்பாடு எய்தியவன் தன் இடம்என்பர்,
பூத்திகழ் சோலைத் தென்றல்உலாவும் புறவம்மே.

            பொழிப்புரை :மேலானதாக விளங்கும் உலகங்களைப் படைத்த பிரமனும், புகழால் மேம்பட்ட திருமாலும் அழலுருவாய் வெளிப்பட்ட சிவமூர்த்தியின் அடிமுடிகளைக்காண இயலாது தமது முயற்சியைக் கைவிட்டு ஏத்த, அவர்கட்குக் காட்சி தந்தருளிய சிவபிரானது இடம், மலர்கள் நிறைந்த சோலைகளில் தென்றல் வந்து உலாவும் புறவமாகும்.

  
பாடல் எண் : 10
வையகம்,நீர்,தீ வாயுவும்,விண்ணும் முதல்ஆனான்,
மெய்அலதேரர், உண்டு இலைஎன்றே நின்றேதம்
கையினில் உண்போர் காணஒணாதான் நகர்என்பர்,
பொய்அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவம்மே.

            பொழிப்புரை :மண், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களில் நிறைந்து, அவற்றின் முதலாக விளங்கும் இறைவனாய், உண்மையல்லாதவற்றைப் பேசி உண்டு இல்லை என்ற உரைகளால் அத்தி நாத்தி எனக்கூறிக் கொண்டு தம் கைகளில் உணவேற்று உண்போராய சமணரும், புத்தரும் காண ஒண்ணாத சிவபிரானின் நகர், நெஞ்சிலும் பொய்யறியாத பூசுரர் வாழும் புறவமாகும்.


பாடல் எண் : 11
பொன்இயல் மாடப் புரிசைநிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
தன்இயல்பு இல்லாச் சண்பையர் கோன்,சீர்ச் சம்பந்தன்,
இன்னிசை ஈர்ஐந்து ஏத்தவல்லோர்கட்கு இடர்போமே.

            பொழிப்புரை :பொன்னால் இயன்ற மாடங்களின் மதில்கள் சூழ்ந்த, புறவம் என்னும் பதியில் நிலைபெற்று விளங்கும் சிவபிரானின் சேவடிகளை, நாள்தோறும் பணிந்து, சீவபோதம் அற்றுச் சிவபோதம் உடையவனாய்ப் போற்றும் சண்பையர் தலைவனாகிய புகழ்மிக்க ஞானசம்பந்தன், இன்னிசையோடு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடி ஏத்தவல்லவர்கட்கு, இடர் போகும்.

                                                            திருச்சிற்றம்பலம்

1.066   திருச்சண்பைநகர்                        பண் - தக்கேசி
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பங்கம்ஏறு மதிசேர்சடையார், விடையார், பலவேதம்
அங்கம்ஆறும் மறைநான்கு அவையும் ஆனார், மீன்ஆரும்
வங்கம்மேவு கடல்வாழ்பரதர் மனைக்கே நுனைமூக்கின்
சங்கம்ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே.

            பொழிப்புரை :மீன்கள் நிறைந்ததும், கப்பல்களை உடையதும் ஆன கடலிடையே வாழும் பரதவர்கள் வீட்டு முற்றங்களில் கூரிய மூக்கினை உடைய சங்குகள் முத்துக்களை ஈனுகின்ற கடற்கரை ஊராகிய சண்பை நகரில் மேவிய இறைவர் கலை குறைந்த பிறைமதி சேர்ந்த சடையினர். விடை ஊர்தியர், பலவாய் விரிந்த நான்கு வேதங்களாகவும் ஆறு அங்கங்களாகவும் விளங்குபவர்.


பாடல் எண் : 2
சூதகம்சேர் கொங்கையாள்ஓர் பங்கர், சுடர்க்கமலப்
போதுஅகம்சேர் புண்ணியனார், பூத கணநாதர்,
மேதகம்சேர் மேகம்அந்தண் சோலையில் விண்ஆர்ந்த
சாதகம்சேர் பாளைநீர்சேர் சண்பை நகராரே.

            பொழிப்புரை :வானகத்தே திரிந்து வாழும் சாதகப் பறவைகள் உண்ணுமாறு மேன்மை பொருந்திய மேகங்கள் பெய்த மழை நீர் அழகிய குளிர்ந்த சோலைகளில் விளங்கும் தெங்கு கமுகு இவற்றின் பாளைகளில் சேரும் சண்பை நகர் இறைவர், சூது ஆடு கருவி போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். ஒளி பொருந்திய தாமரை மலரைச் சூடிய புண்ணிய வடிவினர். பூதகணங்களின் தலைவர்.


பாடல் எண் : 3
மகரத்துஆடு கொடியோன்உடலம் பொடிசெய்து, அவனுடைய
நிகர் ஒப்புஇல்லாத் தேவிக்குஅருள்செய் நீல கண்டனார்,
பகரத்தாரா அன்னம்பகன்றில் பாதம் பணிந்துஏத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே.

            பொழிப்புரை :எல்லோரும் புகழத்தாரா அன்னம் அன்றில் முதலிய பறவைகள் தம் திருவடிகளை வணங்கிப் போற்றுமாறு தகரம் புன்னை தாழை முதலிய மரங்களின் பொழில்கள் சூழ்ந்த சண்பைநகரில் விளங்கும் இறைவர், மகரமீன் வடிவு எழுதப்பட்டு ஆடும் கொடியை உடைய மன்மதனது உடலை நீங்குமாறு செய்து, அழகில் தன்னொப்பில்லாத அவனுடைய மனைவி வேண்ட அவள் கண்களுக்கு மட்டும் மன்மதனைப் புலனாகுமாறு அருள் செய்த நீலகண்டர் ஆவார்.


பாடல் எண் : 4
மொய்வல்அசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சு அதுஉண்ட
தெய்வர், செய்ய உருவர், கரிய கண்டர், திகழ்சுத்திக்
கையர், கட்டங்கத்தர், கரியின் உரியர், காதலால்
சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே.

            பொழிப்புரை :அன்போடு சைவர்களும் பாசுபதர்களும் வழிபடும் சண்பை நகர் இறைவர். வலிமை செறிந்த அசுரர்களும் தேவர்களும் கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சு முழுவதையும் உண்டருளிய தெய்வமாவார். அவர் சிவந்த திருமேனி உடையவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். சுத்தியைக் கொண்டகையினர். மழுவினர் - யானைத் தோலைப் போர்த்தியவர்.


பாடல் எண் : 5
கலமார்கடல்உள் விடம் உண்டுஅமரர்க்கு அமுதம் அருள்செய்த
குலம்ஆர் கயிலைக் குன்றுஅதுஉடைய, கொல்லை ஏருதுஏறி,
நலம்ஆர் வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை
சலம்ஆர் கரியின் மருப்புக் காட்டும் சண்பை நகராரே.

            பொழிப்புரை :மக்கட்கு நன்மை தரும் மரமாகிய தென்னையிலிருந்து வெண்மை நிறத்தோடு வெளிவரும் மணம் மிக்க பாளை கபடம் மிக்க யானையின் மருப்புப் போலத் தோன்றும் சோலைவளம் மிக்க சண்பைநகர் இறைவர் மரக்கலங்கள் நிறைந்த கடலிடையே தோன்றிய விடத்தை உண்டு அமரர்கட்கு அமுதம் அருள் செய்தவர். மலைக் குலங்களில் மேம்பட்ட கயிலை மலைக்கு உரியவர். முல்லை நிலத்து ஆனேற்றை ஊர்ந்து வருபவர்.


பாடல் எண் : 6
மாகரம்சேர் அத்தியின் தோல் போர்த்து, மெய்ம்மால்ஆன
சூகரம் சேர் எயிறுபூண்ட சோதியன், மேதக்க
ஆகரம் சேர் இப்பிமுத்தை அந்தண் வயலுக்கே
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பை நகராரே.

            பொழிப்புரை :கடலில் வாழும் சிப்பிகள் தந்த முத்துக்களை அழகியதாய்க் குளிர்ந்த வயல்களுக்குக் கடல் அலைகள் உந்தி வந்து சேர்க்கும் சண்பை நகர் இறைவன் நீண்ட கையினை உடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துள்ள திருமேனியில் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான பன்றியின் பல்லை அணிகலனாகப் பூண்ட ஒளி வடிவினன்.


பாடல் எண் : 7
* * * * * * * *
பாடல் எண் : 8
இருளைப் புரையும் நிறத்தில் அரக்கன் தனைஈடு அழிவித்து,
அருளைச் செய்யும் அம்மான், ஏர்ஆர் அம்தண் கந்தத்தின்
மருளைச் சுரும்பு பாடிஅளக்கர் வரைஆர் திரைக்கையால்
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே.

            பொழிப்புரை :அழகிய மணத்தோடு மருள் என்னும் பண்ணை வண்டுகள் பாட, கடல் மலை போன்ற அலைக் கைகளால் முத்துக்களையும் பவளங்களையும் கொணர்ந்து சேர்க்கும் சண்பைநகர் இறைவன் இருள் போன்ற கரியநிறத்தினன் ஆகிய இராவணனின் வீரத்தை அழித்து அவன் உணர்ந்து வருந்த அருள் செய்த தலைவன்.


பாடல் எண் : 9
மண்தான்முழுதும் உண்டமாலும் மலர்மிசை மேல்அயனும்
எண்தான்அறியா வண்ணம் நின்ற இறைவன், மறைஓதி,
தண்டுஆர்குவளைக் கள்அருந்தித் தாமரைத் தாதின்மேல்
பண்தான் கொண்டு வண்டுபாடும் சண்பை நகராரே.

            பொழிப்புரை :தண்டிலே மலர்ந்த குவளை மலர்களின் தேனை உண்டு தாமரை மலர்களில் நிறைந்துள்ள மகரந்தங்களில் தங்கி வண்டுகள் பண்பாடும் சண்பை நகர் இறைவன் உலகங்கள் முழுவதையும் உண்ட திருமால் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகன் ஆகியோர் மனத்தாலும் அறிய ஒண்ணாதவாறு நின்றவன் வேதங்களை ஓதி வெளிப்படுத்தியவன்.


பாடல் எண் : 10
போதியாரும் பிண்டியாரும் புகழ்அல சொன்னாலும்
நீதியாகக் கொண்டுஅங்குஅருளும் நிமலன், இருநான்கின்
மாதிசித்தர், மாமறையின் மன்னிய தொல் நூலர்,
சாதிகீத வர்த்தமானர், சண்பை நகராரே.

            பொழிப்புரை :அணிமா முதலிய எண்வகைச் சித்திகளில் வல்ல சித்தர், பழமையான நூல்களாகிய வேதப் பொருள்களில் நிலைபெற்று நிற்பவர், சகாரம் முதலாகப் பாடப்படும் பாட்டில் நிலைத்திருப்பவர் ஆகிய சண்பைநகரார், புத்தர்களும் சமணர்களும் புகழ் அல்லவற்றைக் கூறினாலும் அவற்றைப் புகழ் மொழிகளாகக் கொண்டருளும் நிமலர்.


பாடல் எண் : 11
வந்தியோடு பூசைஅல்லாப் போழ்தின் மறைபேசிச்
சந்திபோதில் சமாதிசெய்யும் சண்பை நகர்மேய
அந்திவண்ணன் தன்னை, அழகுஆர் ஞானசம் பந்தன்சொல்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே.

            பொழிப்புரை :அடியவர்கள் வந்தனையோடு பூசை செய்யும் காலங்கள் அல்லாத ஏனைய பொழுதுகளில் வேதப் பொருள்களைப் பேசியும், மூன்று சந்தியா காலங்களிலும் தியானம் சமாதி நிலையில் நின்று வழிபடும் சண்பைநகர்மேய, மாலைக்காலம் போன்ற செம்மேனியனாகிய இறைவனை, ஞானசம்பந்தன் அருளிய அழகிய இப்பதிகப் பொருளை மனத்தில் நிறுத்திப் பாடவல்லவர் சிவகதி சேர்வர்.
                                                            திருச்சிற்றம்பலம்


1.034   சீகாழி                              பண் – தக்கராகம்
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அடல்ஏறு அமரும் கொடிஅண்ணல்
மடல்ஆர் குழலா ளொடுமன்னும்
கடல்ஆர் புடைசூழ் தருகாழி
தொடர்வார் அவர்தூ நெறியாரே.

            பொழிப்புரை :வலிமை பொருந்திய இடபம் பொறிக்கப்பட்ட கொடியைத்தனதாகக் கொண்ட தலைவனாகிய சிவபிரான், மலர் சூடிய கூந்தலை உடைய உமையம்மையோடு எழுந்தருளியிருப்பதும், கடலால் புடை சூழப்பட்டதுமான சீகாழிப்பதியை இடைவிடாது சென்று வழிபடுபவர் தூயநெறியில் நிற்பவராவர்.


பாடல் எண் : 2
திரையார் புனல்சூ டியசெல்வன்,
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்,
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமின்நின்றே.

            பொழிப்புரை :அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய செல்வனாகிய சிவபிரான் மலைமகளோடு மகிழ்ந்து எழுந்தருளியிருப்பதும், கரையை உடைய நீர்நிலைகளால் சூழப்பட்டதுமான சீகாழிப்பதியை வரிசையான பூக்களைக் கொண்டு நின்று தூவி வழிபடுமின்.


பாடல் எண் : 3
இடியார் குரல் ஏறுஉடை எந்தை,
துடியார் இடையா ளொடுதுன்னும்
கடியார் பொழில்சூழ் தருகாழி
அடியார் அறியார் அவலம்மே.

            பொழிப்புரை :இடியை ஒத்த குரலையுடைய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்ட எம் தந்தையாகிய இறைவன், துடி போலும் இடையினை உடைய உமையம்மையோடு எழுந்தருளியிருப்பதும், மணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை வணங்கும் அடியவர்கள், துன்பத்தை அறியார்கள்.


பாடல் எண் : 4
ஒளிஆர் விடம் உண்ட ஒருவன்
அளிஆர் குழல்மங் கையொடுஅன்பாய்க்
களிஆர் பொழில்சூழ் தருகாழி
எளிதுஆம் அதுகண் டவர்இன்பே.

            பொழிப்புரை :நீலநிற ஒளியோடு கூடிய ஆலகால விடத்தை உண்டருளிய ஒப்பற்றவனாகிய சிவபிரான், வண்டுகள் மணத்தைத் தேடி வந்து நாடும் கூந்தலை உடைய உமையம்மையோடு, அன்புடன் களிக்கும், பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியைக் கண்டவர்க்கு இன்பம் எளிதாம்.


பாடல் எண் : 5
பனிஆர் மலர்ஆர் தருபாதன்
முனிதான் உமையோ டுமுயங்கிக்
கனிஆர் பொழில்சூழ் தருகாழி
இனிதுஆம் அதுகண் டவர்ஈடே.

            பொழிப்புரை :தண்மை பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய சிவபெருமான் உமையம்மையோடு கூடி உலக உயிர்கட்குப் போகத்தைப் புரிந்தருளினும், தான் முனிவனாக விளங்குவோன். அத்தகையோன் எழுந்தருளியதும் கனிகள் குலுங்கும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியைச் சென்று கண்டவர்க்குப் பெருமை எளிதாக வந்தமையும்.


பாடல் எண் : 6
கொலைஆர் தரும் கூற்றம் உதைத்து
மலையான் மகளோடு மகிழ்ந்தான்,
கலையார் தொழுது ஏத்திய காழி
தலையால் தொழுவார் தலையாரே.

            பொழிப்புரை :கொலைத் தொழில் நிறைந்த எமனை உதைத்து அழித்து மலையரையன் மகளாகிய உமையம்மையோடு மகிழ்ந்து உறைபவனாகிய சிவபெருமான் விரும்புவதும், மெய்ஞ்ஞானியர் தொழுதேத்துவதுமாகிய சீகாழிப்பதியைத் தலையால் வணங்குவார் தலையாயவராவார்.


பாடல் எண் : 7
திருவார் சிலையால் எயில்எய்து
உருவார் உமையோடு உடன் ஆனான்
கருஆர் பொழில்சூழ் தருகாழி
மருவாதவர் வான் மருவாரே.

            பொழிப்புரை :அழகிய வில்லால் மூவெயில்களை எய்தழித்து எழில் தவழும் உமையம்மையோடு உடனாய் விளங்கும் சிவபெருமான் எழுந்தருளியிருப்பதும், கருநிறம் பொருந்திய சோலைகளால் சூழப்பெற்றதுமான சீகாழிப் பதியை அடையாதவர் விண்ணுலக இன்பங்களை அடையாதவராவர்.


பாடல் எண் : 8
அரக்கன் வலி ஒல்க அடர்த்து
வரைக்கும் மகளோடு மகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூ வுநினைந்தே.

            பொழிப்புரை :இராவணனது வலிமை சுருங்குமாறு அவனைத் தளர்ச்சியெய்த அடர்த்து மலைமகளோடு மகிழ்ந்த சிவபிரான் விளங்குவதும் மேலும் மேலும் பெருகிவரும் நீர் சூழ்ந்ததுமான சீகாழிப்பதியை நினைந்து வரிசையான மலர்களைத்தூவுமின்.


பாடல் எண் : 9
இருவர்க்கு எரிஆகி நிமிர்ந்தான்
உருவில் பெரியா ளொடுசேரும்
கருநல் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே.

            பொழிப்புரை :திருமால் பிரமன் ஆகிய இருவர் பொருட்டு எரி உருவாகி நிமிர்ந்த சிவபிரான் அழகிற்சிறந்த பெரியநாயகி அம்மையோடு எழுந்தருளியிருப்பதும் கரிய நல்ல கடலின் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதியை மனத்தால் நினைய நம் வினைகள் மாய்ந்து பிரியும்.


பாடல் எண் : 10
சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற
அமைந்தான் உமையோடு உடன்அன்பாய்க்
கமழ்ந்துஆர் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.

            பொழிப்புரை :சமணர்களும் சாக்கியர்களும் புறங்கூற, உமை யம்மையோடு ஒருசேர அன்பாய்ச் சிவபிரான் எழுந்தருளியிருப்பதும், மணம் கமழ்ந்து நிறையும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியைத் தம் மனத்தே தியானித்து, மலர் தூவித்தொழுதலே சிறந்த தொண்டாகும்.


பாடல் எண் : 11
நலமா கியஞா னசம்பந்தன்
கலம்ஆர் கடல்சூழ் தருகாழி
நிலையாக நினைந்தவர் பாடல்
வலர் ஆனவர்வான் அடைவாரே.

            பொழிப்புரை :நன்மையை மக்கட்கு நல்குவதும் மரக்கலங்களை உடைய கடலால் சூழப்பெற்றதுமான சீகாழிப் பதியை உறுதியாக நினைந்தவர்களும், ஞானசம்பந்தரின் பாடல்களில் வல்லவராய் ஓதி வழிபட்டவர்களும் விண்ணக இன்பங்களை அடைவர்.

                                                            திருச்சிற்றம்பலம்


1.081   சீகாழி                              பண் - குறிஞ்சி
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நல்லார், தீமேவும் தொழிலார், நால்வேதம்
சொல்லார், கேண்மையார், சுடர்பொன் கழல்ஏத்த,
வில்லால் புரம்செற்றான் மேவும் பதிபோலும்
கல்ஆர் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.

            பொழிப்புரை :நல்லவர்களும், நாள்தோறும் வேள்விகளைச் செய்பவர்களும், நான்கு வேதங்களை ஓதுபவர்களும், அன்புடையவர்களும் ஆகிய அந்தணர்கள், ஒளி பொருந்திய அழகிய தன் திருவடிகளைப் போற்ற, மேருவில்லால் முப்புரங்களை அழித்த சிவபெருமான் எழுந்தருளிய தலம், மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழி நகராகும்.


பாடல் எண் : 2
துளிவண் தேன்பாயும் இதழி தூமத்தம்
தெளிவெண்  திங்கண் மாசுண நீர் திகழ்சென்னி
ஒளிவெண் தலைமாலை உகந்தான் ஊர்போலும்
களிவண்டு யாழ்செய்யும் காழிந் நகர்தானே.

            பொழிப்புரை :வளமான தேன் துளிபாயும் கொன்றை மலர், தூய ஊமத்தம் மலர், தெளிந்த வெண்மையான பிறை மதி, பாம்பு, கங்கை ஆகியன விளங்கும் சென்னிக்கண், ஒளி பொருந்திய வெள்ளிய தலை மாலையை விரும்பிச்சூடிய சிவபிரானது ஊர், கள்ளுண்டு களித்த வண்டுகள், யாழ்போல ஒலிக்கும், சீகாழி நகராகும்.


பாடல் எண் : 3
ஆலக் கோலத்தின் நஞ்சு உண்டு அமுதத்தைச்
சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான், தன்மையால்
பாலற்கு ஆய்நன்றும் பரிந்து பாதத்தால்
காலன் காய்ந்தான். ஊர் காழிந் நகர்தானே.

            பொழிப்புரை :பாற்கடலில் தோன்றிய ஆலகாலம் எனப்படும் அழகிய நஞ்சினை உண்டு, அமுதம் முழுவதையும் தேவர்களுக்கு ஈந்தருளிய தன்மையை உடையவனாய் மார்க்கண்டேயன் பொருட்டுத் தன்பாதத்தால் காலனை உதைத்த சிவபிரானது ஊர், சீகாழிநகராகும்.


பாடல் எண் : 4 முதல் 7 வரை
* * * * * * * * * *
பாடல் எண் : 8
இரவில் திரிவோர்கட்கு இறைதோள் இணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தான் இடம்போலும்,
பரவித் திரிவோர்க்கும், பால்நீறு அணிவோர்க்கும்,
கரவுஇல் தடக்கையார் காழிந் நகர்தானே.

            பொழிப்புரை :இரவில் திரியும் நிசாசரராகிய அசுரர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் இருபது தோள்களையும் நெரித்து, பின் அவன் வருந்திய அளவில் கைகளில் ஏந்தும் வாள் வழங்கிய சிவபிரானது இடம், இறைவனைப் பரவித்திரியும் அடியவர்கட்கும், பால் போன்ற திருநீற்றை அணிபவர்கட்கும், ஒளியாமல் வழங்கும் நீண்ட கைகளையுடைய, வள்ளன்மை மிக்க, அடியார் வாழும், சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 9
மாலும் பிரமனும் அறியா மாட்சியான்,
தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்,
ஏலும் பதிபோலும், இரந்தோர்க்கு எந்நாளும்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.

            பொழிப்புரை :திருமால், பிரமன் ஆகியோர் அறிய முடியாத மாட்சிமையை உடையவனும், மான்தோலும், முப்புரி நூலும் பொருந்திய மலை போன்ற மார்பினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளும் பதி, தம்பால் இரந்தவர்களுக்கு எந்நாளும் பிறிதொரு நாளையோ, நேரத்தையோ குறிக்காது உடனே பொருள் வழங்கும் செல்வர்கள் வாழ்கின்ற சீகாழி நகராகும்.

  
பாடல் எண் : 10
தங்கை இட உண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை உணராதே, பேணித் தொழுமின்கள்,
மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான், மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தான், ஊர் காழிந் நகர்தானே.

            பொழிப்புரை :உணவளிப்போர் தங்கள் கைகளிலே தர, அதனை வாங்கி உண்ணும் சமணர்களும் தாழ்ந்த சீவரம் என்னும் கல்லாடையை உடுத்திய புத்தர்களும் ஆகியவர்களின் தீயொழுக்கத்தை மனத்துக் கொள்ளாமல், உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்து ஏற்றவனும், மலரணிந்த சென்னியில் கங்கையைத் தரித்தவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளிய காழிநகரைப் பேணித்தொழுவீர்களாக.


பாடல் எண் : 11
வாசம் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈசன் நகர்தன்னை, இணைஇல் சம்பந்தன்
பேசும் தமிழ்வல்லோர், பெருநீர் உலகத்துப்
பாசந்தனை அற்று, பழியில் புகழாரே.

            பொழிப்புரை :பிறைமதியைச் செஞ்சடையில் வைத்த சிவபிரானது மணங்கமழ்கின்ற சீகாழிப்பதியாகிய நகரை, ஒப்பற்ற ஞானசம்பந்தன் போற்றிப் பேசிய இத்திருப்பதிகத் தமிழில் வல்லவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகில் பாசங்களை நீக்கிப் பழியற்ற புகழோடு வாழ்வர்.

                                                            திருச்சிற்றம்பலம்



1.102   சீகாழி                                        பண் - குறிஞ்சி
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
உரவுஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும்
கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக்காழி
அரவுஆர் அரையா, அவுணர் புரமூன்று எரிசெய்த
சரவா, என்பார் தத்துவ ஞானத் தலையாரே.

            பொழிப்புரை :ஞானம் நிறைந்த கலை உணர்வோடு, கவிதைகள் பாடும் புலவர்களுக்கு ஒரு நாளும் கரவாத வள்ளன்மை மிக்க கைகளை உடைய கற்றவர்கள் வாழும் ஒலிமிக்க காழி மாநகரில் விளங்கும் பாம்பை இடையில் அணிந்துள்ள பரமனே! அசுரர்களின் முப்புரங்களையும் எரித்த அம்பை ஏந்தியவனே! என்று போற்றுபவர், தத்துவ ஞானத்தில் தலையானவராவர்.


பாடல் எண் : 2
மொய்சேர் வண்டுஉண் மும்மத நால்வாய் முரண்வேழக்
கைபோல் வாழை காய்குலை ஈனுங் கலிக்காழி
மைசேர் கண்டத்து எண்தோள் முக்கண் மறையோனே,
ஐயா, என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே.

            பொழிப்புரை :சூழ்ந்து மொய்த்தலை உடைய வண்டுகள் தங்கி உண்ணும் மும்மதங்களையும், தொங்குகின்ற வாயையும், முரண்படு தலையும் உடைய களிற்று யானையின் கை போல வாழை மரங்கள் காய்களை ஈனும் ஒலி நிறைந்த காழிப்பதியில், நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடையவனாய் விளங்கும் மறையோனே! தலைவனே! என்பவர்களை அல்லல்கள் அடையா.


பாடல் எண் : 3
இளகக் கமலத்து ஈன்கள் இயங்கும் கழிசூழக்
களகப் புரிசைக் கவின்ஆர்சாருங் கலிக்காழி
அளகத் திருநல் நுதலி பங்கா, அரனே, என்று
உளகப் பாடும் அடியார்க்கு உறுநோய் அடையாவே.

            பொழிப்புரை :முறுக்கவிழ்ந்த தாமரை மலர்கள் பிலிற்றிய தேன் ஓடுகின்ற கழிகள் சூழப் பெற்றதும், சுண்ணாம்பினால் இயன்ற அழகு பொருந்திய மதில்களை உடையதுமான, ஆரவாரம் மிக்க காழிப்பதியில் அழகிய கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய உமையம்மையின் கணவனே, அரனே! என்று மனம் உருகிப் பாடும் அடியவர்களை மிக்க துன்பங்கள் எவையும் அடையா.


பாடல் எண் : 4
எண்ணார் முத்தம் ஈன்று மரகதம் போல்காய்த்துக்
கண்ணார் கமுகு பவளம் பழுக்கும் கலிக்காழிப்
பெண்ஓர் பாகா, பித்தா, பிரானே, என்பார்க்கு,
நண்ணா வினைகள், நாள்தொறும் இன்பம் நணுகும்மே.

            பொழிப்புரை :அழகிய கமுக மரங்கள், எண்ணத்தில் நிறையும் அழகிய முத்துக்களைப் போல அரும்பி மரகதம் போலக் காய்த்துப் பவளம் போலப் பழுக்கும் ஆரவாரம் மிக்க காழிப்பதியில் விளங்கும் பெண்ணோர் பாகனே! பித்தனே! பிரானே! என்பவர்களை வினைகள் நண்ணா. நாள்தோறும் அவர்கட்கு இன்பங்கள் வந்து சேரும்.


பாடல் எண் : 5
மழைஆர்சாரல் செம்புனல் வந்துஅங்கு அடிவருடக்
கழைஆர் கரும்பு கண்வளர் சோலைக் கலிக்காழி
உழைஆர் கரவா, உமையாள் கணவா, ஒளிர்சங்கக்
குழையா, என்று கூறவல்லார்கள் குணவோரே.

            பொழிப்புரை :மேகங்கள் தங்கிய குடதிசை மலைச்சாரல்களி லிருந்து சிவந்த நிறமுடைய தண்ணீர் வந்து அடிகளை வருட, அதனால் மூங்கில் போன்று பருத்த கரும்புகளில் கணுக்கள் வளரும் சோலைகளை உடைய ஒலிமிக்க சீகாழிப்பதியில் எழுந்தருளிய மானேந்திய கையனே, உமையம்மையின் கணவனே! ஒளி பொருந்திய சங்கக் குழையை அணிந்தவனே என்று கூறிப் போற்ற வல்லவர்கள் குணம் மிக்கவராவர்.


பாடல் எண் : 6
குறிஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு
கறிஆர் கழிசம் பிரசம் கொடுக்கும் கலிக்காழி
வெறிஆர் கொன்றைச் சடையா, விடையா, என்பாரை
அறியா வினைகள், அருநோய் பாவம் அடையாவே.

            பொழிப்புரை :தாள ஒலிக் குறிப்போடு கூடிய அலைகளை உடைய, மலைகளிலிருந்து வரும் அருவிகள் இரு கரைகளுக்கும் உள்ளடங்கிய ஆறாக அடித்துக் கொண்டு வரும் மிளகின் கொடித்தண்டுகளின் சுவையைத் தன் தண்ணீருக்கு வழங்கும். ஆரவாரம் மிக்க காழிப்பதியில் எழுந்தருளிய மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்த சடையினனே! விடையை ஊர்ந்து வருபவனே! என்று கூறுபவரை வினைகள் அறியாது அகலும். அவர்களை அரிய நோய்கள் பாவங்கள் அடைய மாட்டா.


பாடல் எண் : 7
* * * * * * * * * * 
பாடல் எண் : 8
உலங்கொள் சங்கத்து ஆர்கலி ஓதத்து உதையுண்டு,
கலங்கள் வந்து கார்வயல் ஏறும் கலிக்காழி,
இலங்கை மன்னன் தன்னை இடர்கண்டு அருள்செய்த
சலங்கொள் சென்னி மன்னா, என்னத் தவம்ஆமே.

            பொழிப்புரை :வலிய சங்குகளை உடைய கடலினது வெள்ளத்தால் மோதப்பட்டுத் தோணிகள் வந்து கரிய வயலின்கண் சேரும் ஒலி மிக்க சீகாழியில் எழுந்தருளிய, இலங்கை மன்னன் இராவணனை முதலில் துன்புறுத்திப்பின் அருள் செய்த, கங்கை சூடிய திருமுடியினை உடைய மன்னவனே! என்று சிவபிரானைப் போற்றத் தவம் கைகூடும்.


பாடல் எண் : 9
ஆவிக் கமலத்து அன்னம் இயங்கும் கழிசூழக்
காவிக் கண்ணார் மங்கலம் ஓவாக் கலிக்காழி,
பூவில் தோன்றும் புத்தேளொடு மால்அவன்தானும்
மேவிப் பரவும் அரசே, என்ன வினைபோமே.

            பொழிப்புரை :ஓடைகளில் உள்ள தாமரை மலர்களில் வாழும் அன்னங்கள் நடமாடும் உப்பங்கழிகள் சூழ்ந்திருப்பதும், நீலமலர் போன்ற கண்களை உடைய மகளிரது மங்கல ஒலி ஓவாது கேட்பதுமாகிய செழிப்புமிக்க சீகாழியில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் வந்து பரவும் அரசனாக விளங்கும் பெருமானே என்று சொல்ல நம் வினைகள் போகும்.


பாடல் எண் : 10
மலைஆர் மாடம் நீடு உயர்இஞ்சி மஞ்சுஆரும்
கலைஆர் மதியம் சேர்தரும் அந்தண் கலிக்காழித்
தலைவா, சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிஒண்ணா
நிலையாய், என்னத் தொல்வினை ஆய நில்லாவே.

            பொழிப்புரை :மலை போலுயர்ந்த மாட வீடுகளின், மேகங்கள் தவழும் நீண்டுயர்ந்த மதில்களில் கலைகள் நிறைந்த மதி வந்து தங்கும் அழகிய குளிர்ந்த ஒலிமிக்க காழிப் பதியின் தலைவனே! சமண புத்தர்களால் என்றும் அறிய ஒண்ணாத நிலையினனே! என்று போற்ற நம் தொல்வினைகள் நில்லா.


பாடல் எண் : 11
வடிகொள் வாவிச் செங்கழுநீரில் கொங்கு ஆடிக்
கடிகொள் தென்றல் முன்றினில் வைகும் கலிக்காழி
அடிகள் தம்மை, அந்தம்இல் ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர் தம்மேல் பழிபோமே.

            பொழிப்புரை :தேன் மணங்கொண்ட வாவியில் மலர்ந்த செங்கழுநீர்ப் பூவின் மகரந்தங்களில் படிந்து அவற்றின் மணத்தைக் கொண்ட தென்றல், முன்றிலில் வந்து உலாவும் ஒலிமிக்க காழிப்பதியில் வீற்றிருக்கும் அடிகளை, முடிவற்ற புகழை உடைய ஞானசம்பந்தன் இவ்வுலகிடைப் போற்றிப் பாடிய பாடல்களை வல்லவர்கள் மேல் வரும் பழிகள் போகும்.

                                                திருச்சிற்றம்பலம்

2.011   சீகாழி                                   பண் - இந்தளம்
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நல்லானை, நான்மறை யோடுஇயல் ஆறுஅங்கம்
வல்லானை, வல்லவர் பால்மலிந்து ஓங்கிய
சொல்லானை, தொல்மதில் காழியே கோயிலாம்
இல்லானை, ஏத்தநின் றார்க்குஉளது இன்பமே.

            பொழிப்புரை :நன்மையே வடிவானவன். நான்கு மறைகள், அவற்றோடு இயலும் ஆறு அங்கங்கள் ஆகியனவற்றில் வல்லவன். அவற்றைக் கற்றுணர்ந்த அந்தணர்பால் நிறைந்து அவர்கள் ஓதும் துதிகளைத் தன் வடிவாகக் கொண்டவன். பழமையான மதில்கள் சூழ்ந்த காழிப்பதியில் விளங்கும் கோயிலைத் தனது வீடாகக் கொண்டவன். அத்தகையோனை ஏத்துவோர்க்கு இன்பம் உண்டாம்.


பாடல் எண் : 2
நம்மானம் மாற்றி, நமக்கு அருளாய்நின்ற
பெம்மானை, பேயுடன் ஆடல் புரிந்தானை,
அம்மானை, அந்தணர் சேரும் அணிகாழி
எம்மானை, ஏத்தவல் லார்க்குஇடர் இல்லையே.

            பொழிப்புரை :நம் குற்றங்களைத் தீர்த்து நமக்குக் கருணை காட்டும் தலைவன். பேய்களோடு ஆடல் புரிபவன். அரிய வீரன். அந்தணர்கள் வாழும் அழகிய காழிப்பதியில் விளங்கும் எம் கடவுள். அத்தகையோனை ஏத்துவார்க்கு இடர் இல்லை.
  

பாடல் எண் : 3
அருந்தானை, அன்புசெய்து ஏத்தகில் லார்பால்
பொருந்தானை, பொய்அடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை, வேதியர் ஓதி மிடைகாழி
இருந்தானை, ஏத்துமின், நும்வினை ஏகவே.

            பொழிப்புரை :தன்னிடம் அன்பு செய்து ஏத்தாதார் அளிக்கும் படையலை உண்ணாதவன். பொய்யாக அடிமை செய்வாரிடம் பொருந்தாதவன். புதுமைக்கும் புதியவன். நான்குவேதங்களை ஓதும் வேதியர் நிறைந்த காழிப்பதியில் இருப்பவன். அத்தகையோனை நும் இடர்போக ஏத்துவீராக.


பாடல் எண் : 4
புற்றானை, புற்றுஅர வம்அரை யின்மிசைச்
சுற்றானை, தொண்டுசெய் வார்அவர் தம்மொடும்
அற்றானை, அந்தணர் காழி அமர்கோயில்
பற்றானை, பற்றிநின் றார்க்குஇல்லை பாவமே.

            பொழிப்புரை :புற்று வடிவானவன். புற்றில் வாழும் பாம்பினைத் தன் அரைமீது சுற்றியவன். தனக்குத் தொண்டு செய்பவர்களோடு தன் பெருமைகளை விடுத்துப் பழகியருள்பவன். அந்தணர்கள் நிறைந்த காழிப்பதி மீது பற்றுடையவன். அவனைப் பற்றி நிற்பவர்கட்குப் பாவம் இல்லை.


பாடல் எண் : 5
நெதியானை, நெஞ்சுஇடங் கொள்ளநி னைவார்தம்
விதியானை, விண்ணவர் தாம்வியந்து ஏத்திய
கதியானை, கார்உல வும்பொழிற் காழியாம்
பதியானை, பாடுமின் நும்வினை பாறவே.

            பொழிப்புரை :நமக்கு நிதியாக விளங்குவோன். தம் நெஞ்சில் அவன் எழுந்தருளுமாறு நினைப்பவர்க்கு நன்னெறி காட்டுபவன். மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சீகாழியைத்தன் ஊராகக் கொண்டவன். அத்தகையோனை நும் வினை நீங்கப் பாடுவீராக.


பாடல் எண் : 6
செப்பான மென்முலை யாளைத்தி கழ்மேனி
வைப்பானை, வார்கழல் ஏத்திநி னைவார்தம்
ஒப்பானை, ஓதம் உலாவு கடல்காழி
மெய்ப்பானை, மேவிய மாந்தர் வியந்தாரே.

            பொழிப்புரை :செப்புப் போன்ற மென்மையான தனங்களைக் கொண்ட உமையம்மை திருமேனியின் இடப்பாகமாக வைத்துள்ளவன். தன் திருவடிகளை நினைபவர்களிடம் ஒப்பப் பழகுபவன். கடல் நீர் உலாவுவதும், கடற்கரையை அடுத்துள்ளதுமான காழிப்பதியில் மெய்ப்பொருளாக விளங்குபவன். அத்தகையோனை விரும்பி வழிபட்ட மக்கள் பிறரால் வியந்துபோற்றப்படும் புகழ் உடையோர் ஆவர்.


பாடல் எண் : 7
துன்பானை, துன்பம் அழித்துஅருள் ஆக்கிய
இன்பானை, ஏழிசை யின்நிலை பேணுவார்
அன்பானை, அணிபொழில் காழிந கர்மேய
நம்பானை, நண்ணவல் லார்வினை நாசமே.

            பொழிப்புரை :நம்மைத் திருத்துமாறு துன்பங்களைத் தருபவன். நாம் துயர் உறும் போது, அத்துன்பங்களைத் தீர்த்து அருளைப், புரியும் இன்ப வடிவாய் இருப்பவன். ஏழிசையின் கூறுகளை அறிந்து பாடிப் போற்றுவாரிடம் அன்பு செய்பவன். அழகிய பொழில் சூழ்ந்த காழிநகரில் நம்மால் விரும்பப்படுபவனாய் எழுந்தருளியிருப்பவன். அத்தகையோனை அடைந்து போற்ற வல்லாரின் வினைகள் அழியும்.


பாடல் எண் : 8
குன்றானை, குன்றுஎடுத் தான்புயம் நால்ஐந்தும்
வென்றானை, மென்மல ரானொடு மால்தேட
நின்றானை, நேரிழை யாளொடும் காழியுள்
நன்றானை, நம்பெரு மானை நணுகுமே.

            பொழிப்புரை :மலைகளைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். தான் எழுந்தருளிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் இருபது தோள்களையும் வென்றவன். மெல்லிய தாமரை மலரில் வாழும் நான்முகனும் மாலும் தேட ஓங்கி நின்றவன். உமையம்மையோடு காழிப்பதியுள் நன்மைகளைச் செய்பவனாய் வீற்றிருப்பவன். அத்தகைய நம் பெருமானை அடைந்து வழிபடுவீர்களாக.


பாடல் எண் : 9
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்அவை கேட்டுவெகு ளேன்மின்,
பூவாய கொன்றையி னானை, புனற்காழிக்
கோவாய கொள்கையி னான்அடி கூறுமே.

            பொழிப்புரை :தம் கொள்கைக்கு அழிவு வந்தபோதும் விடாது வாது செய்யும் சமணர் சாக்கியர்களின் பொருந்தாத உரைகளைக் கேட்டு அவர்களையோ சைவத்தையோ, வெகுளாது கொன்றைப்பூவணிந்தவனும், புனல் சூழ்ந்த காழிநகரின் தலைவனாய் மேலான சிவநெறிக்கு உரியவனும் ஆகிய சிவபெருமான் திருவடிகளைப் புகழ்ந்து போற்றுவீர்களாக.


பாடல் எண் : 10
* * * * * 
பாடல் எண் : 11
கழியார்சீர் ஓதம்மல் கும்கடல் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானை உகந்துஉள்கி,
தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழ்ஆர
மொழிவார்கள் மூவுலகும் பெறுவார்களே.

            பொழிப்புரை :கழிகளின் வழியே வரும் மிக்க கடல்நீர் நிறைந்ததும் கடற்கரையை அடுத்துள்ளதுமான காழிப்பதியுள் கோயில் கொண்டு நீங்காது உறையும் இறைவனை, நினைந்து மகிழ்ந்து அவனைப் பொருந்தியவனாய், ஞானசம்பந்தன் பாடிய தமிழை மனம் பொருந்த மொழிந்து போற்றுபவர்கள் மூவுலகையும் பெறுவார்கள்.

                                                            திருச்சிற்றம்பலம்


2.049   சீகாழி                              பண் - சீகாமரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பண்ணின்நேர்மொழி மங்கை மார்பலர்
            பாடி ஆடிய ஓசை நாள்தொறும்
கண்ணின் நேர்அயலே பொலியும் கடல்காழிப்
பெண்ணின் நேர்ஒரு பங்கு உடைப்பெரு
            மானை, எம்பெரு மான்என்று என்று உன்னும்
அண்ண லார்அடியார், அருளாலும் குறைவுஇலரே.

            பொழிப்புரை :பண்ணிசை போலும் மொழிபேசும் மங்கையர் பலர் பாடி ஆடிய ஓசை கண்ணெதிரே அமைந்து விளங்கும் கடலை அடுத்துள்ள காழிப்பதியில் பெண்பாகனாக விளங்கும் பெருமானையே எம் தலைவன் என்று பலகாலும் கூறும் சிவனடியார்கள் பொருளோடு அருளாலும் குறைவிலர்.


பாடல் எண் : 2
மொண்டு அலம்பிய வார்தி ரைக்கடல்
            மோதி மீதுஎறி சங்க வங்கமும்
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
வண்டு அலம்பிய கொன்றை யான்அடி
            வாழ்த்தி ஏத்திய மாந்தர், தம்வினை
விண்டல் அங்குஎளிதாம், அதுநல் விதியாமே.

            பொழிப்புரை :நீரை முகந்து ஒலித்து வரும் நீண்ட திரைகள் மரக்கலங்களை மோதிக் கடலிலிருந்து எறியும் சங்குகள் தாழைமரங்கள் சூழ்ந்த வயல்களைச் சென்றடையும் பெருமைமிக்க காழிப்பகுதியில் வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலை சூடிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தித் துதிக்கும் மக்களின் வினைகள் நீங்குதல் எளிதாம். அதுவே நல்லூழையும் தருவதாகும்.


பாடல் எண் : 3
நாடு எலாம்ஒளி எய்த, நல்லவர்
            நன்றும் ஏத்தி வணங்கு வார்பொழில்
காடு எலாமலர் தேன்துளிக்கும் கடல்காழித்
தோடு உலாவிய காது உளாய், சுரி
            சங்க வெண்குழை யான், என்று என்று உன்னும்
வேடம் கொண்டவர்கள் வினை நீங்கல்உற்றாரே.

            பொழிப்புரை :நாடுமுழுவதும் சிறக்க வேண்டுமென்று நல்லவர்கள் நன்முறையில் ஏத்தி வணங்குவதும், நீண்ட சோலைகளில் எல்லாம் மலர்கள் தேன் துளித்து விளங்குவதுமான கடற்காழியுள் தோடணிந்த காதினர், வளைந்த சங்கவெண்குழைக்காதினர் என்று பலகாலும் சொல்லி நினையும் சிவவேடம் தரித்தவர்கள் வினை நீங்கப் பெறுவர்.


பாடல் எண் : 4
மையின் ஆர்பொழில் சூழ நீழலில்
            வாசம் ஆர்மது மல்க நாள்தொறும்
கையின் ஆர்மலர் கொண்டுஎழுவார் கலிக்காழி
ஐயனே, அரனே என்று ஆதரித்து
            ஓதி நீதியுளே நினைப்பவர்
உய்யு மாறுஉலகில் உயர்ந்தாரின் உள்ளாரே.

            பொழிப்புரை :கரிய பொழில் சூழ்ந்ததும், நிழலில் மணம் கமழும் தேன் ஒழுகி நிறைவதும், அடியவர்கைகள் நிரம்ப மலர் பறித்துக் கொண்டு எழுவதுமான பெருமையால் மிக்க காழிப்பதியை அடைந்து ஐயனே `அரனே` என்று ஆதரித்து முறையாக நினைப்பவர் உலகில் உயர்ந்தாரில் உள்ளவராவர்.


பாடல் எண் : 5
மலிக டுந்திரை மேல்நி மிர்ந்துஎதிர்
            வந்து வந்துஒளிர் நித்திலம் விழக்
கலி கடிந்த கையார் மருவும் கலிக்காழி
வலிய காலனை வீட்டி, மாணிதன்
            இன் உயிர்அளித் தானை வாழ்த்திட,
மெலியும் தீவினைநோய் அவை,மேவுவார் வீடே.

            பொழிப்புரை :நிறைந்து விரைந்து வரும் அலைகளில் எதிர்வந்து வந்து ஒளிரும் முத்துக்கள் விழுந்து நிறைவதும், வறுமை நீங்கப் பொருள் பொழியும் கையினராகிய வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான காழியில் வலியகாலனை அழித்து மார்க்கண்டேயர்க்கு இன்னுயிர் அளித்த இறைவனை வாழ்த்தத் தீவினைகள் மெலியும். வீட்டின்பம் வந்துறும்.


பாடல் எண் : 6
மற்றும் இவ்வுல கத்து ளோர்களும்
            வானு ளோர்களும் வந்து வைகலும்
கற்ற சிந்தையராய்க் கருதுங் கலிக்காழி,
நெற்றி மேல்அமர் கண்ணி னானை,
            நினைந்து இருந்துஇசை பாடுவார், வினை
செற்றமாந்தர் எனத் தெளிமின்கள் சிந்தையுளே.

            பொழிப்புரை :இவ்வுலகில் உள்ளோரும் வானுலகில் வாழ்வோரும் வைகலும் வந்து கற்றறிந்த மனம் உடையவராய்க் கருதி வழிபடும் காழிப்பதியில் நெற்றிக் கண்ணனாகிய பெருமானை நினைந்து இருந்து இசைபாடுவோர் வினைகளைப் போக்கிக்கொண்ட மாந்தர் ஆவர் எனச் சிந்தையில் தெளிவீர்களாக.


பாடல் எண் : 7
தான் நலம்புரை வேதிய ரொடு
            தக்க மாதவர் தாம்தொ ழப்பயில்
கானலின் விரைசேர விம்மும் கலிக்காழி
ஊனு ளா,ர்உயிர் வாழ்க்கையாய், உறவு
            ஆகி நின்றஒ ருவனே, என்றுஎன்று
ஆன்நலம் கொடுப்பார், அருள்வேந்தர் ஆவாரே.

            பொழிப்புரை :நன்மையும் பெருமையும் அமைந்த வேதியர்களோடு தக்க மாதவர்களும் தொழுது வணங்க, சோலைகளின் மணம் சேர்ந்து விம்மும் காழிப்பதியுள் ஊனுடம்புடையோர் உயிர்வாழ்தற்குப் பயனாய் அவர்க்கு உறவாகிநின்ற ஒருவனே என்று வாழ்த்தினால் நலம் கொடுக்கும் பெருமான் விளங்குகின்றான். அவனைத் தொழுவோர் அருள் வேந்தர் ஆவர்.


பாடல் எண் : 8
மைத்த வண்டுஎழு சோலை ஆலைகள்
            சாலி சேர்வய ல்ஆர வைகலும்
கத்து வார்கடல் சென் றுஉலவுங் கலிக்காழி
அத்தனே, அரனே, அரக்கனை
            அன்று அடர்த்துஉகந் தாய், உனகழல்
பத்தராய்ப் பரவும் பயன்ஈங்கு நல்காயே.

            பொழிப்புரை :வண்டுகள் இசைக்கும் கரிய சோலைகள், கரும்பு ஆலைகள் நெற்பயிர் வளரும் வயல்முதலியன நிறையுமாறு வைகலும் ஒலிக்கும் கடல் நீர் சென்றுலவும் காழிப்பதியுள் விளங்கும் தலைவனே அரனே இராவணனை அன்று அடர்த்து உகந்தவனே உன் திருவடிகளைப் பத்தராய்ப்பரவும் பயனை எங்கட்கு இம்மையிலேயே அருள்வாயாக.

பாடல் எண் : 9
பரும ராமொடு தெங்கு பைங்கத
            லிப்ப ருங்கனி உண்ண மந்திகள்
கருவரால் உகளும் வயல்சூழ் கலிக்காழித்
திருவின் நாயகன் ஆய மாலொடு
            செய்ய மாமலர்ச் செல்வன் ஆகிய
இருவர் காண்புஅரியான் எனஏத்துதல் இன்பமே.

            பொழிப்புரை :பருத்த கடப்ப மரங்களோடு தென்னை ஆகியன செறிந்தனவும் பசிய வாழையினது பெரிய கனிகளைக் குரங்குகள் உண்பனவுமான சோலைகளும், கரிய வரால் மீன்கள் துள்ளும் வயல்களும் சூழ்ந்துள்ள காழிப்பதியுள் விளங்கும் இறைவனைத் திருமகள் நாயகனான திருமால் செந்தாமரை மலரோனாகிய நான்முகன் ஆகிய இருவரும் காண்பரியானாய் விளங்குவோன் என ஏத்துதல் இன்பம் தரும்.


பாடல் எண் : 10
பிண்டம் உண்டுஉழல் வார்க ளும்,பிரி
            யாது வண்துகில் ஆடை போர்த்தவர்
கண்டு சேரகிலார், அழகார் கலிக்காழித்
தொண்டை வாய்உமை யோடு கூடிய
            வேடனே, சுட லைப்பொ டிஅணி
அண்டவா ணன்என்பார்க்கு அடையா அல்லல்தானே.

            பொழிப்புரை :சோற்றுத்திரளை உண்டு திரிபவர்களும், சற்றும் நீங்காது வளவிய நூலாடையைப் போர்த்துழல்பவரும் ஆகிய புறச்சமயத்தினர், கண்டு சேரும் நல்லூழ் அற்றவர். `அழகிய பெருமிதத்துடன் விளங்கும் காழிப்பதியில் கோவைக்கனி போலச் சிவந்த வாயினை உடைய உமையம்மையோடு கூடியவனே, வேட்டுவக் கோலம்கொண்டவனே சுடலைப் பொடிபூசி உலகெங்கும் நிறைந்தவனே` என்பாரை அல்லல்கள் அடையா.


பாடல் எண் : 11
பெயர்எ னும்இவை பன்னி ரண்டினும்
            உண்டுஎ னப்பெயர் பெற்ற ஊர்திகழ்
கயல்உலாம் வயல்சூழ்ந் துஅழகார் கலிக்காழி
நயன், நடன்கழல் ஏத்தி வாழ்த்திய
            ஞான சம்பந்தன் செந்த மிழ்உரை
உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே.

            பொழிப்புரை :பன்னிரண்டு பெயர்களை உடைய ஊர் எனப்புகழ் பெற்றதும், கயல்மீன்கள் உலாவும் வயல்சூழ்ந்து அழகு பெற்றதும் ஆகிய காழிப்பதியில் அழகிய நடனம்புரிந்து உறைவோனாகிய பெருமானின் திருவடிகளைப் போற்றி வாழ்த்திய ஞானசம்பந்தனின் இவ்வுரைமாலையை உயர்வு பெறுமாறு கருதி ஓதியவர் உலகத்தில் உயர்ந்தோர் ஆவர்.

                                                திருச்சிற்றம்பலம்

                                                                                       -----  தொடரும் -----

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...