இது அப்பர் பெருமான்
அருளிய, ஆறாம் திருமுறையில் உள்ள திருத்தாண்டகப் பாடல்.
திருச்சிற்றம்பலம்
"அரும் துணையை, அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை, அகன்ஞாலத்து அகத்துள் தோன்றி
வரும் துணையும் சுற்றமும்
பற்றும் விட்டு,
வான்புலன்கள் அகத்து
அடக்கி, மடவா ரோடும்
பொருந்து அணைமேல்
வரும்பயனைப் போக மாற்றி,
பொதுநீக்கித் தனைநினைய
வல்லோர்க்கு என்றும்
பெரும் துணையை, பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாள் எல்லாம்
பிறவா நாளே".
திருச்சிற்றம்பலம்
இப் பாடலின் பொருள்----
ஒப்பற்ற துணைவன்
இறைவன். அடியவர்களின் துயரைப் போக்கும்
அமுதம் போன்றவன். பரந்த இவ்வுலகில் பிறப்பு எடுத்த பின்னர் உடன்தோன்றுகின்ற துணைவர், ஏனைய சுற்றத்தார், செல்வம் இவற்றின்
மீது வைத்த பாசத்தை விடுத்து, பெரிய புலன்களின் மேல் செல்லும்
மனத்தை அடக்கி, மகளிரோடும் படுக்கையில் நுகரும்
சிற்றின்பப் பயனை அடியோடு நீக்கி,
ஏனைய தெய்வங்களோடு
பொதுவாக நினைப்பதனை விடுத்து, தன்னையே விரும்பி, நினைத்தலில் வல்ல அடியவர்களுக்கு
எக்காலத்தும் உடனாய் நின்று உதவும் துணைவன் ஆகிய பெரும்பற்றப்புலியூரானைப் பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.
விளக்கம் ---
அரும் துணை --- கிடைத்தற்கு அரிய துணை. எத்தனையோ துணைகள் இருந்தாலும், சில சிலகாலமே இருக்கும். உடலுக்குத் துணையாக வருபவைகளும் உள்ளன.
அவை எல்லாம் உடல் நீங்கியபோது நீங்கிவிடும். ஆனால் உயிருக்கு வாய்த்த துணையே பெறும்
துணை. பெறுதற்கு அரிய தணையாக வாய்த்த பரம்பொருள் என்றும், எல்லாப் பிறவிகளிலும் துணையாய் வரும்.
அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்து --- இறைவனே அடியவர்கள்
படுகின்ற பிறவித் துன்பங்களைப் போக்குபவன். பவரோக வயித்தியநாதன் அவன்.
பெரும்பற்றப் புலியூர் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும்.
பொதுநீக்கித் தனைநினைய
வல்லோர்க்கு என்றும்
பெரும் துணையை ---
மனிதனால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள் பல உண்டு. எல்லாமும்
தெய்வங்கள் ஆகா. செத்துப் பிறக்கின்ற தெய்வங்களும் உண்டு. "செத்துப் பிறப்பதே
தேவு என்று பத்தி செய் மனப் பாறை" என்றார் அப்பர் பெருமான் பிறிதொரு பாடலில்.
ஒரு பிறப்பும் எடுக்காத, என்றும்
அழியாத பொருளே தெய்வம் ஆகும். அப்படிப் பார்த்தால் சிவபெருமானே முழுமுதற் கடவுள்
ஆவார்.
"அத் தேவர் தேவர், அவர்
தேவர் தேவர் என்று இங்ஙன்
பொய்த் தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பற்று ஏதும் இல்லாது, என்
பற்று அற, நான் பற்றி நின்ற
மெய்த் தேவர் தேவர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பீ"
என்னும் திருவாசகப் பாடல் கருத்தைச் சிந்தித்தல் நலம்.
,உலகில் எந்தச் சமயமும் சாராத, சமயம் கடந்த முதல் ஞானியாகிய திருவள்ளுவ நாயனார்,
"மலர் மிசை ஏனகினான் மலர் அடி" என்று திருக்குறளில்
காட்டினார். அதற்கு உரை வகுத்த, பரிமேலழகர்
பெருமான், "அன்பால் நினைவாரது உள்ளக்
கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின்" என்று காட்டியதும்
சிந்தனைக்கு உரியன.
இறைவன் என்பவனுக்கு ஒரு உருவம், ஒரு பெயர் எதுவும் இல்லை. "ஒரு நாமம், ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு, ஆயிரம் திருநாமம் பாடி" என்பார் மணிவாசகப் பெருமான்.
இறைவனுக்கு அவரவர் கருத்தின்படி, பல்வேறு
உருவங்களைக் கற்பித்துக் கொண்டு, அவரவர்
விரும்பிய பெயர்களை வைத்துக் கொள்ளுகின்றனர். எந்த வடிவில் எந்தப் பெயரால்
அழைத்தாலும், அப்படி அழைக்கின்றவரின்
இதயமாகிய தாமரையில், அவர்
நினைந்த வடிவோடு எழுந்தருள்பவனே, தனக்கு
என்று ஒரு உருவமும், ஒரு பெயரும் இல்லாதவனாளகிய இறைவன். அவனை உள்ளன்போடு அழைக்கவேண்டும்.
"ஆர் ஒருவர் உள்குவார் உள்ளத்து உள்ளே, அவ் உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்" என்றார் அப்பர் பெருமான்.
"கருதுவார் கருதும் உருவமாம்" என்றது ஒன்பதாம்
திருமுறையாகிய திருவிசைப்பா.
வெறும் நூல்களை ஓதிய அறிவை மட்டுமே கொண்டு சிந்திப்பவர்களுக்கு
இந்த உண்மை தெளியாது. அனுபவ அறிவைக் கொண்டு, இறையருளோடு
சிந்தித்தால் உண்மை விளங்கும்.
நூல்
அறிவு பேசி நுழைவு இலாதார் திரிக,
நீல
மணிமிடற்றான் நீர்மையே - மேல்உலந்தது,
எக்கோலத்து
எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து
அவ்வுருவே ஆம்".
என்றார்
காரைக்கால் அம்மையார்.
நுண்ணறிவைப்
பெறாமல், ஏட்டுக் கல்வி வழி
வந்த அறிவவினையே பெரிதாக மதித்து,
வீணாகப்
பேசிப் பேசியே திரிவர். நீலகண்டப் பெருமானுடைய புகழ்ப் பெருமையே விரும்பத் தக்கது.
யார் எந்த வடிவில் இருந்து, எந்த உருவத்தினைக்
கொண்டு, எந்த தவத்தைச்
செய்தாலும், அவர் கருதிய அந்தக் கோலத்தில், அந்தத் திருவுருவோடு வெளிப்பட்டு
அருள்பவன் அவனே ஆகும்.
No comments:
Post a Comment