பாவி மகன் படும் துயரம்





பாடல் எண். 60
ஆஈன, மழைபொழிய, இல்லம் வீழ,
     அகத்தினள் நோய் தனில் வருந், அடிமை சாவ,
மாஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட,
         வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள,
சாவோலை கொண்டு ஒருவன் எதிரே செல்ல,
     தள்ள ஒணா விருந்து வர, சர்ப்பம் தீண்ட,
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க,
         பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே.

இதன் பொருள் ---

     பாவி மகன் --- உலகில் பாவப்பட்ட பிறவியாய் இருக்கும் இந்த மகன் ஆனவன்,   

     ஆ ஈன --- தன்னால் வளர்க்கப்படும் பசுவானது கன்றை ஈனும் வேளையில் (அதற்கு மருத்துவம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது)

     மழை பொழிய --- அதற்கு இடையூறாக மழையானது பெய்யவும், ( அந்த மழை காரணமாக)

     இல்லம் வீழ --- தனது வீடானது இடிந்து விழவும், (அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது)

     அகத்தினள் நோய் தனில் வருந்த --- தனது மனைவியானவள் பிரசவ வேதனையில் துன்பப் படவும் (என்ன செய்யலாம் என்று வருந்தும் சமயத்தில்)

     அடிமை சாவ --- தனது பணியாளாகிய பெண் ஆனவள் இறந்து போகவும்,

(அப்போது விதை விதைக்கும் சமயமாய் இருந்ததால், இன்று விட்டால் நாளைக்கு நிலமானது)

     மா ஈரம் போகும் என்று விதை கொண்டு ஓட --- ஈரம் காய்ந்து போகும் என்று எண்ணி (அடிமைப் பெண்ணையும் அடக்கம் செய்யாமல், அப்படியே விட்டு விட்டு) விதையை எடுத்துக் கொண்டு நிலத்தை நோக்கி விரைந்து ஓடவும்,

     வழியிலே --- போகும் வழியில் (அந்த நேரம் பார்த்து)

     கடன்காரர் மறித்துக் கொள்ள --- கடன் கொடுத்தவர்க்கள், பெற்ற கடனைக் கொடுத்துவிட்டுப் போ என்று வழியை மறித்துக் கொள்ளவும்,

(கடன்கார்ருக்கு ஒரு வழியாகப் பதில் சொல்லி விட்டு, வருகின்ற வேளையில்)

     சாவோலை கொண்டு ஒருவன் எதிரே செல்ல ---  உறவினர் இறந்து பட்ட செய்தியைத் தாங்கி ஒருவர் எதிரே வரவும், (அதை அறிந்து மேலே செல்கையில்)

     தள்ள ஒணா விருந்து வர --- தவிர்க்க முடியாத விருந்தினர் எதிரே வரவும் ( அவரைத் தனது இல்லத்திற்கு அனுப்பிவிட்டு மேலே செல்லும்போது)

     சர்ப்பம் தீண்ட --- பாம்பு ஒன்று வந்து தனது காலில் கடிக்கவும், (அதனால் விஷம் ஏறி மயங்குகின்ற நேரத்தில், அவனது துன்ப நிலையை உணராத)

     பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்க --- புலவர்கள் வந்து கவிகளைப் பாடி, பரிசுப் பொருள்களைக் கேட்கவும்,

         படும் துயரம் பார்க்க ஒண்ணாதே --- இப்படிப் பல துன்பங்கள் நேர்ந்த போதும் ஒன்றும் பரிகாரம் தேட இயலாமல் வருந்துகின்ற நேரத்தில், பாம்பு தீண்டியதாலும் படுகின்ற துன்பத்தைப் பார்த்துப் பொறுக்க முடியவில்லையே.


இப் பாடல் சிறிது மாற்றம் பெற்றுப் பின்வருமாறு சில பதிப்புக்களில் வந்துள்ளது.

ஆஈன, மழைபொழிய, இல்லம் வீழ,
     அகத்து அடியாள் மெய்நோவ, அடிமை சாவ,
மாஈரம் போகுது என்று விதை கொண்டு ஓட,
         வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள,
கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்க,
         குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க,
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க,
         பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே.

"அகத்தினள் நோய் தனில் வருந்த" என்பது, "அகத்து அடியாள் மெய் நோவ" என்றும்,

"சாவோலை கொண்டு ஒருவன் எதிரே செல்ல", என்பது, "கோ வேந்தர் உழுது உண்ட கடமை கேட்க" என்றும்,

"தள்ள ஒணா விருந்து வர, சர்ப்பம் தீண்ட" என்பது, "குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க" என்றும்

பேதங்கள் கொண்டு வந்துள்ளது.

கருத்து --- தீவினையின் பயனை ஒருவன் அனுபவிக்க நேரும்போது , துன்பங்கள் தொடர்ந்து வரும்.  "பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்" என்பது வழக்கு மொழி ஆதல் அறிக.


1 comment:

  1. பாடல் எண், 60 அல்ல. 77 ஆகும்

    ReplyDelete

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...