திருவான்மியூர் - 0707. குசமாகி ஆருமலை

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குசமாகி ஆருமலை (திருவான்மியூர்)

முருகா!
விலைமாதர் ஆசையால் அடியேன் மடியாமல்,
திருவடித் தாரமையைத் தந்து அருள்.


தனதான தானதன தனதான தானதன
     தனதான தானதன ...... தனதான


குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை
     குடிலான ஆல்வயிறு ...... குழையூடே

குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
     குழல்கார தானகுண ...... மிலிமாதர்

புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி
     புலையேனு லாவிமிகு ...... புணர்வாகிப்

புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
     பொலிவான பாதமல ...... ரருள்வாயே

நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
     நிகழ்போத மானபர ...... முருகோனே

நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
     நிபுணாநி சாசரர்கள் ...... குலகாலா

திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி
     சிவநாத ராலமயில் ...... அமுதேசர்

திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்
     திருவான்மி யூர்மருவு ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


குசம் ஆகி ஆரும் மலை, மரைமா நுண் நூலின் இடை,
     குடில் ஆன ஆல்வயிறு, ...... குழை ஊடே

குறிபோகும் மீன விழி, மதி மாமுகாரு மலர்,
     குழல்கார் அது ஆன, குணம் ...... இலிமாதர்,

புச ஆசையால், மனது உனை நாடிடாதபடி
     புலையேன் உலாவி, மிகு ...... புணர்வாகி,

புகழான பூமி மிசை மடிவாய் இறாதவகை
     பொலிவான பாதமலர் ...... அருள்வாயே.

நிச நாரணாதி திரு மருகா! உலாச மிகு
     நிகழ்போதம் ஆன பர ...... முருகோனே!

நிதி ஞானபோதம் அரன் இருகாதிலே உதவு
     நிபுணா! நிசாசரர்கள் ...... குலகாலா!

திசைமாமுக, ழி அரி, மகவான், முனோர்கள் பணி
     சிவநாதர், லம் அயில் ...... அமுத ஈசர்

திகழ்பால! மாகம் உற மணி மாளி மாடம்உயர்
     திருவான்மியூர் மருவு ...... பெருமாளே.


பதவுரை

         நிச நாரணாதி திரு மருகா --- உண்மைப் பொருளான நாராயணமூர்த்தியின் திருமருகரே!

         உலாச மிகு நிகழ் போதம் ஆன பர முருகோனே --- உள்ளத்தில் மிகுந்த ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் ஞானமே வடிவான மேலான முருகக் பெருமானே!

         நிதி ஞான போதம் --- பெறுதற்கு அரிய செல்வமாகிய உண்மை அறிவாகிய ஞானபோதத்தை

     அரன் இரு காதிலே உதவு நிபுணா --- சிவபிரானுடைய இரு செவிகளிலும் உபதேசித்து அருளிய வல்லமை உள்ளவரே!

      நிசாசரர்கள் குலகாலா --- அசுரர்களின் குலத்துக்கு காலனாக விளங்குபவரே!

      திசை மாமுக, ஆழி அரி, மகவான் முனோர்கள் பணி சிவநாதர் --- நான்கு திசைகளில் முகம் கொண்ட நான்முகன், சுதர்சனம் என்னும் சக்கரத்தைத் தரித்துள்ள திருமால், இந்திரன் முதலானவர்கள் பணிந்து வணங்குகின்ற சிவபெருமான்,

      ஆலம் அயில் அமுத ஈசர் திகழ் பால --- ஆலகால விடத்தை உண்ட அமுதைப் போன்ற ஈசரின் விளக்கம் பொருந்திய குழந்தையே!

      மாகம் உற --- வானத்தை அளவும்படியா,

     மணி மாளி மாடம் உயர் --- அழகிய மாளிகைகள் மாடங்கள் உயர்ந்து இருக்கும்,

     திருவான்மியூர் மருவு பெருமாளே --- திருவான்மியூர் என்னும் திருத்தலத்தை விரும்பி எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

      குசமாகி ஆரும் மலை --- மலை போல வளர்ந்துள்ள முலைகள்,

      மரைமா நுண் நூலின் இடை --- தாமரைத் தண்டின் நூலைப் போன்ற நுண்ணிய இடை,

      குடில் ஆன ஆல் வயிறு --- உள் வாங்கி உள்ள ஆல இலை போன்ற வயிறு,

      குழை ஊடே குறி போகும் மீனவிழி --- காதில் அணிந்துள்ள குண்டலங்களைக் குறித்துப் போகின்ற மீன் போன்ற கண்கள்,

      மதிமா முகாரு மலர் --- முழுநிலவைப் போன்ற, மலர்ந்த தாமரை போன்ற முகம்,

      குழல் கார் அது ஆன --- மேகத்தைப் போன்ற கூந்தல் கொண்ட

     குணம் இலி மாதர் --- நற்குணம் இல்லாத விலைமாதரின்

      புச ஆசையால் --- தோள்களைத் தழுவ வேண்டும் என்று எழுந்த ஆசை காரணமா,

     மனது உனை நாடிடாத படி --- என் மனம் உன்னை நாடாத படிக்கு,

     புலையேன் உலாவி --- கீழ்மகனாகிய நான் இங்கும் அங்கும் உலவித் திரிந்து,

     மிகு புணர்வாகி --- தீய வழிகளையே விரும்பிச் சேர்ந்து,   

      புகழான பூமிமிசை மடிவாய் இறாத வகை --- பெருமைக்குரிய இந்தப் பூமியிலே பிறப்பெடுத்து இறந்து மடியாமல்படிக்கு,

       பொலிவு ஆன பாதமலர் அருள்வாயே --- ஒளி பொருந்திய திருவடித் தாமரையைத் தந்து அருள் புரிவீராக.


பொழிப்புரை


      உண்மைப் பொருளான நாராயணமூர்த்தியின் திருமருகரே!

     உள்ளத்தில் மிகுந்த ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் ஞானமே வடிவான மேலான முருகக் பெருமானே!

      பெறுதற்கு அரிய செல்வமாகிய உண்மை அறிவாகிய ஞானபோதத்தை

     சிவபிரானுடைய இரு செவிகளிலும் உபதேசித்து அருளிய வல்லமை உள்ளவரே!

       அசுரர்களின் குலத்துக்கு காலனாக விளங்குபவரே!

      நான்கு திசைகளில் முகம் கொண்ட நான்முகன், சுதர்சனம் என்னும் சக்கரத்தைத் தரித்துள்ள திருமால், இந்திரன் முதலானவர்கள் பணிந்து வணங்குகின்ற சிவபெருமான், ஆலகால விடத்தை உண்ட அமுதைப் போன்ற ஈசரின் விளக்கம் பொருந்திய குழந்தையே!

      வானத்தை அளவும்படியா, அழகிய மாளிகைகள் மாடங்கள் உயர்ந்து இருக்கும், திருவான்மியூர் என்னும் திருத்தலத்தை விரும்பி எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

      மலை போல வளர்ந்துள்ள முலைகள், தாமரைத் தண்டின் நூலைப் போன்ற நுண்ணிய இடை, உள் வாங்கி உள்ள ஆல இலை போன்ற வயிறு, காதில் அணிந்துள்ள குண்டலங்களைக் குறித்துப் போகின்ற மீன் போன்ற கண்கள், முழுநிலவைப் போன்ற, மலர்ந்த தாமரை போன்ற முகம், மேகத்தைப் போன்ற கூந்தல் கொண்ட நற்குணம் இல்லாத விலைமாதரின் தோள்களைத் தழுவ வேண்டும் என்று எழுந்த ஆசை காரணமா, என் மனம் உன்னை நாடாத படிக்கு கீழ்மகனாகிய நான் இங்கும் அங்கும் உலவித் திரிந்து, தீய வழிகளையே விரும்பிச் சேர்ந்துபெருமைக்குரிய இந்தப் பூமியிலே பிறப்பெடுத்து இறந்து மடியாமல்படிக்கு, ஒளி பொருந்திய தேவரீரின் திருவடித் தாமரையைத் தந்து அருள் புரிவீராக.


விரிவுரை


இத் திருப்புகழின் முற்பகுதி பொது மாதரின் அங்க அழகைச் சொல்கின்றது. புற அழகு மிகுந்து இருந்தாலும், உள்ளத்தில் அழகு இல்லாதவர்களாகிய அவர்கள் அழகில் மயங்கி, மனம் தடுமாறி அழியாமல் ஆண்டுகொள்ள வேண்டும் என்று முருகப் பெருமானிடம் வேண்டுகின்றார்.

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டு அழகும்
மஞ்சள் அழகும் அழகு அல்ல, - நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

என்கிறது நாலடியார்.

வாரி விடப்பட்ட கூந்தல் அழகும், நன்கு உடுத்தப்பட்ட வண்ண உடை அழகும், முகத்தில் ஒப்பனைக்காகப் பூசப்படுகின்ற மஞ்சள் அழகும் ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன ஆகமாட்டா.  உள்ளத்தால் நல்லவர்களாய் வாழும், நடுநிலை தவறாத வழியில் செலுத்தும் கல்வி அழகே ஒருவருக்குச் சிறந்த அழகு ஆகும்.

இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடின் வனப்பும்,
நடைவனப்பும், நாணின் வனப்பும், - புடைசால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல, எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு.              

என்கிறது ஏலாதி என்னும் நூல்.

இடுப்பின் அழகும், தோள்களின் அழகும், செல்வத்தின் அழகும், நடையின் அழகும், நாணத்தின் அழகும், பக்கங்கள் தசை கொழுவிய கழுத்தின் அழகும், உண்மை அழகு ஆகா.
இலக்கணத்தோடு கூடிய இலக்கியக் கல்வியழகே உண்மை அழகு ஆகும்.

புற அழகு ஒரு நாள் மாறும் தன்மை உடையது. உயிருக்கு அப்போதைக்கு நன்மை தருவது போல் தோன்றி, பின்னர் துன்பத்தையே தருவது.

அக அழகு என்றும் மாறாது. உயிருக்கு என்றும் நலம் தருவது.

புற அழகில் ஆசை கொண்டு அறிவு மயங்கும். அந்த மயக்கத்தைக் கெடுத்து அருள் புரிய ஆறுமுகப் பரம் பொருளை வழிபடுதல் வேண்டும்.

உடம்பின் தன்மையை மணிமேகலை என்னும் காப்பியம் காட்டுவதைப் பின்வருமாறு காண்க.

தண் அறல் வண்ணம் திரிந்து வேறு ஆகி,
வெண்மணல் ஆகிய கூந்தல் காணாய்;

பிறைநுதல் வண்ணம் காணாயோ நீ,
நரைமையில் திரைதோல் தகையின்தறு ஆயது;

விறல்வில் புருவம் இவையுங் காணாய் ,         
இறவின் உணங்கல் போன்றுவேறு ஆயின;

கழுநீர்க் கண்காண், வழுநீர் சுமந்தன;
குமிழ்மூக்கு இவைகாண் உமிழ்சீ ஒழுக்குவ;

நிரைமுத்து அனைய நகையும் காணாய்,
சுரைவித்து ஏய்ப்பப் பிறழ்ந்து வேறு ஆயின;

இலவ இதழ்ச் செவ்வாய் காணாயோ நீ,
புலவுப் புண்போல் புலால் புறத்து இடுவது;

வள்ளைத் தாள்போல் வடிகாது இவைகாண்,
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன;

இறும்பூது சான்ற முலையும் காணாய்,            
வெறும் பை போல வீழ்ந்து வேறு ஆயின;

தாழ்ந்து ஒசி தெங்கின் மடல்போல் திரங்கி
வீழ்ந்தன இளவேய்த் தோளும் காணாய்;

நரம்பொடு விடுதோல் உகிர்த்தொடர் கழன்று
திரங்கிய விரல்கள் இவையுங் காணாய் ;         

வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்;

ஆவக் கணைக்கால் காணாயோ நீ,
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ;

தளிர் அடி வண்ணம் காணோயோ, நீ,                       
முளிமுதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல்;

பூவினும் சாந்தினும் புலால்மறைத்து யாத்துத்
தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் ......

குளிர்ந்த கரு மணல் போன்ற நிறம் திரிந்து வேறுபட்டு வெள்ளிய மணலைப் போல் நரைத்த கூந்தலைக் காண்பாய்,

வெண்மையுடன் திரைந்த தோலினால் அழகின்றி இருக்கும் பிறைபோன்ற நுதலின் இயல்பை நீ காணவில்லையோ,

வெற்றி பொருந்திய வில் படை போன்ற புருவங்களாகிய இவையும் இறால் மீனின் வற்றல் போல் வேறுபட்டன காண்பாய்,

கழு நீர் மலர் அனைய கண்கள் வழுவாகிய நீரைச் சுமந்தன காண்.

குமிழம் பூப்போலும் மூக்காகிய இவை உமிழுகின்ற சீயைச் சொரிவன காண்,

வரிசைப் படுத்திய முத்துக்களைப் போன்ற பற்களும், சுரை விதையைப் போலப் பிறழ்ந்து வேறுபட்டன காண்பாய்,

முருக்கமலர் போன்ற சிவந்த வாய், புலால் நாற்றம் பொருந்திய புண்ணைப்போல் தீ நாற்றத்தை வெளியிடுவதை நீ காணோயா,

வள்ளைத் தண்டுபோல் வடிந்த காதுகளாகிய இவைகள், உள்ளிருந்த ஊன் வாடிய வற்றலைப் போன்று இருப்பன பாராய்,

வியப்பு மிக்க கொங்கைகளும் உள்ளீடு இல்லாத பையைப் போல வீழ்ந்து வேறுபட்டன காண்பாய்,

இளைய மூங்கில் போன்ற தோள்களும், தாழ்ந்து வளைந்த தென்னை மடல்போல் திரைந்து வீழ்ந்தன காணாய்,

நரம்புடன் தோலும் நகத்தின் தொடர்ச்சியைக் கழன்று திரைந்த விரல்களாகிய இவற்றையும் காண்பாய்,

வாழைத் தண்டு போன்ற துடைகள் இரண்டும் தாழைத் தண்டுபோல் வற்றி இருத்தலைக் காண்பாய்,

அம்புப் புட்டிலைப் போன்ற கணைக்கால்கள் தம்மிடம் பொருந்திய நரம்பினையும் என்பினையும் வெளியே காட்டுவனவற்றை நீ காணவில்லையோ,

தளிர்போலும் அடிகளின் வண்ணம் முதிர்ந்த தென்னையில் உலர்ந்து உதிர்ந்த காயின் வற்றல் போன்றிருப்பதை நீ காணாயோ,

மலராலும் சாந்தாலும் புலால் நாற்றத்தை மறைத்து, ஆடையாலும் அணிகலனாலும் முன்னோர் அமைத்த, வஞ்சத்தைத் தெரிந்து கொள்வாய்.

 
மேலும் இந்த உடம்பானது நாம் செய்த வினையின் காரணமாக வந்தது. மேலும் வினைகளைப் புரிவதற்கு விளை நிலமாக உள்ளது. புனையப்படுவன ஆகிய மணப் பொருள்கள் இல்லாமல் போனால், வெற்று உடம்பானது புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டுவது. முதுமை அடைந்து சாகும் தன்மை உடையது. கொடிய நோய்களுக்கு இருப்பிடமாக உள்ளது. பற்றுக்களுக்குப் பற்றும் இடமாக விளங்குவது, குற்றங்களுக்குக் கொள்கலமாக உள்ளது.  புற்றில் அடங்கியுள்ள பாம்பு போலச் சினம் முதலாகிய உட்பகைஞர்களுக்குத் தங்கும் இடமாக உள்ளது. அவலம், கவலை, துன்பம், கேடு முதலிவை நீங்காத உள்ளத்தைத் தன்னிடத்தில் உடையது. மக்கள் உடம்பின் தன்மை இது என்று உணர்ந்து, இந்த உடம்பை, கைப்பையின் உட்புறத்தை மேற்புறமாகத் திருப்பிப் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றது மணிமேகலை என்னும் காப்பியம்.

வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது,
புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது,
மூத்து விளிவு உடையது, தீப்பிணி இருக்கை ,    
பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்,
புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை,
அவலக் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது,
மக்கள் யாக்கை இது என உணர்ந்து         
மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்....

நாலடியாரும் இதனையே வலியுறுத்துகின்றது...

தோல்போர்வை மேலும் தொளை பலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பு ஆனால், - மீப்போர்வை
பொய்ம் மறையாக் காமம் புகலாது, மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.                      

உள் இருக்கும் அழுக்குகளை மறைக்கும் மேற்போர்வையாகிய ஆடையின் பெருமையை உடையது இவ்வுடம்பு. என்றால், அந்த உடம்பைக் கொண்டு காமத்தால் மகிழாமல், அம்மேற் போர்வையாகிய ஆடையை, அழுக்கு மறைக்கும் திரையாகவும், மற்றொரு போர்வையாகிய தோல் போர்வையை ஒரு பையின் திருப்பமாகவும், நினைத்துப் பார்த்து விருப்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.

கைப் பை ஒன்றிலே பொருள்களை வாங்கித் திணித்து வைக்கின்றோம். வைத்துள்ள பொருள்களால் பையின் உட்புறம் அழுக்கு அடைந்து இருக்கும். ஆனால் பையின் வெளிப்புறம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பையின் உட்புறம் மைற்புறமாகத் திருப்பிப் பார்த்தால் அதில் உள்ள அழுக்கு விளங்கும். அதுபோல, இந்த உடம்பிலே, பல அழுக்குகள் நிறைந்து உள்ளன. "சீ வார்ந்து, ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில்" என்பார் மணிவாசகப் பெருமான். "புன்புலால் உடம்பின் அசுத்தமும், இதில் பொருந்தி நான் இருக்கின்ற புணர்ப்பும்" என்பார் வள்ளல் பெருமான்.

இந்த உடம்பின் தன்மையை பட்டினத்து அடிகள், "கோயில் திரு அகவல்" என்னும் பாடலில் விளக்குமாறு காண்க...

விழுப் பொருள் அறியா வழுக்கு உறு மனனும்,
ஆணவ மலத்து உதித்து அளைந்து, அதின் ஊடு
நிணவைப் புழு என நெளிந்திடு சிந்தையும்;
படிறும், பாவமும், பழிப்பு உறு நினைப்பும்,
தவறும், அழுக்காறும், இவறு பொய்ச்சாப்பும்,
கவடும், பொய்யும், சுவடும், பெரும் சினம்,
இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும்,
பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும்,
முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும்,
இடும்பையும், பிணியும் இடுக்கிய ஆக்கையை;
உயிர் எனும் குருகு விட்டு ஓடும் குரம்பையை;
எலும்பொடு நரம்பு கொண்டு இடையில் பிணித்து,
கொழும் தசை மேய்ந்தும் ஒழுக்கும் விழும் குடிலை;
செம்பு எழு உதிரச் சிறுகுழுக் குரம்பையை;
மல உடல் குடத்தை, பல உடல் புட்டிலை;
தொலைவு இலாச் சோற்றுத் துன்பக் குழியை;
கொலை படைக்கலம் பல கிடக்கும் கூட்டை;
சலிப்பு உறு வினைப் பலசரக்குக் குப்பையை;
கோள்சரக்கு ஒழுகும் பீறல் கோணியை;
கோபத் தீ மூட்டும் கொல்லன் துருத்தியை;
ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை;
புலராக் கவலை விளை மரப் பொதும்பை;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தை;
காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை;
மக்கள் வினையின் மயங்கும் திகிரியை;
கடுவெளி உருட்டிய சகடக் காலை;
பாவச் சரக்கொடு பவக்கடல் புக்கு
காமக் காற்று எடுத்து அலைப்ப,
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை;
இருவினை விலங்கொடும் இயங்கு புன்கலனை,
நடுவன் வந்து அழைத்திட நடுங்கிடும் யாக்கையை,
பிணம் எனப் படுத்து, யான் புறப்படும் பொழுது
அடிமலர்க் கமலத்துக்கு அபயம், நின் அடைக்கலம்....


குசமாகி ஆரும் மலை ---

பெண்களின் முலைகள் மலை போன்று பருத்து உள்ளன. அதனை மேலும் அழகு படுத்துவர் விலைமாதர்.  காமுகர் அதன் அழகில் மயங்குவர்.

சிலந்தி போலக் கிளைத்து முன் எழுந்து
திரண்டு விம்மிச் சீ பாய்ந்து ஏறி,
உகிரால் கீற உலர்ந்து உள் உருகி,
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரி மொட்டு என்றும்
குலையும், காமக் குருடர்க்கு ஒன்று உரைப்பேன்.     ---  பட்டினத்தார்.

செப்பு என்றனை முலையை, சீசீ சிலந்தி அது
துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே? - வப்பு இறுகச்

சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய், கீழ்த்துவண்டு
வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே, - தாழ்ந்த அவை

மண்கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய், முதிர்ந்து உடையாப்
புண்கட்டி என்பவர் வாய்ப் பொத்துவையே? - திண்கட்டும்

அந் நீர்க் குரும்பை அவை என்றாய், மேல் எழும்பும்
செந்நீர்ப் புடைப்பு என்பார் தேர்ந்திலையே, - அந்நீரார்

கண்ணீர் தரும் பருவாய்க் கட்டு உரைப்பார், சான்றாக
வெண்ணீர் வரல்கண்டும் வெட்கிலையே? - தண்ணீர்மைச்

சாடி என்பாய் நீ, அயலோர் தாதுக் கடத்து  இடும் மேல்
மூடி என்பார் மற்று அவர்வாய் மூடுதியோ?         ---  வள்ளல்பெருமான்.

மரைமா நுண் நூலின் இடை ---

பெண்களின் இடையை தாமரைத் தண்டின் நூல், உடுக்கை, துடி என்றெல்லாம் புகழ்ந்து கூறுவர்.

நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி என்று சொல்லித் துதித்தும்,     ---  பட்டினத்தார்.

.....       .....           .....           ....நூல் இடைதான்
உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய், கைதொட்டுக்
கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே,       ---  வள்ளல்பெருமான்.


குடில் ஆன ஆல் வயிறு ---

பெண்களின் வயிறு ஆலம் இலையைப் போன்று உள்ளதாகக் கூறுவர்.

மலமும், சலமும், வழும்பும், திரையும்
அலையும் வயிற்றை ஆல் இலை என்றும், ---  பட்டினத்தார்.

.....           .....           .....       மேடு அதனை
ஆல் இலையே என்பாய், அடர் குடரோடு ஈருளொடும்
தோல் இலையே ஆல் இலைக்கு, ன் சொல்லுதியே.    ---  வள்ளல்பெருமான்.
                          
குழை ஊடே குறி போகும் மீனவிழி ---

காதில் அணிந்துள்ள குண்டலங்களைக் குறித்துப் போகின்ற மீன் போன்ற கண்கள்.

தண்ணீர் பீளை தவிராது ஒழுகும்
கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்,
உள்ளும் குறும்பியும் ஒழுகும் காதை
வள்ளத் தண்டின் வளம் என வாழ்த்தியும்.  ---  பட்டினத்தார்.

மதிமா முகாரு மலர் ---

முழுநிலவைப் போன்ற, மலர்ந்த தாமரை போன்ற முகம்.

அந்த மதி முகம் என்று ஆடுகின்றாய், ஏழ்துளைகள்
எந்த மதிக்கு உண்டு? தனை எண்ணிலையே,     ---  வள்ளல்பெருமான்.
 
குழல் கார் அது ஆன ---

மேகத்தைப் போன்ற கூந்தல்.

கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத்
தக்க தலை ஓட்டில் முளைத்து எழுந்த
சிக்கின் மயிரைத் திரள் முகில் என்றும்,
சொல்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்;            ---  பட்டினத்தார்.

......           ......           ......  அல்அளகம்
மையோ கருமென் மணலோ என்பாய், மாறி,
ஐயோ! நரைப்பது அறிந்திலையோ?    --- வள்ளல்பெருமான்.


குணம் இலி மாதர் ---

நற்குணம் சிறிதும் இல்லாதவர் விலைமாதர்.

......           ......           ......  வீழ்ந்தார் உள்
வீட்டால் முலையும், எதிர் வீட்டால் முகமும் உறக்
காட்டா நின்றார் கண்டும் காய்ந்திலையே, - கூட்டாட்குச்

செய்கை இடும்படி தன் சீமான் தனது பணப்
பை கையிடல் கண்டும் பயந்திலையே, - சைகை அது

கையால் ஒருசிலர்க்கும், கண்ணால் ஒருசிலர்க்கும்,
செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே, - எய்யாமல்

ஈறு இகந்த இவ்வகையாய், இம்மடவார் செய்கையெலாம்
கூறுவனேல், அம்ம! குடர் குழம்பும்; - கூறும்இவர்

வாய் ஒருபால் பேச, மனம்ஒருபால் செல்ல, உடல்
ஆய்ஒருபால் செய்ய அழிவார்காண்; - ஆயஇவர்

நன்று அறியார், தீதே நயப்பார், சிவதலத்தில்
சென்று அறியார், பேய்க்கே சிறப்பு எடுப்பார், - இன்று இவரை

வஞ்சம் என்கோ? வெவ்வினையாம் வல்லியம் என்கோ?பவத்தின்
புஞ்சம் என்கோ? மாநரக பூமி என்கோ? - அஞ்சுறும் ஈர்

வாள் என்கோ? வாய்க்கு அடங்கா மாயம் என்கோ? மண்முடிவு
நாள் என்கோ? வெய்ய நமன் என்கோ? - கோள்என்கோ?

சாலம் என்கோ? வான் இந்த்ர சாலம் என்கோ? வீறு ஆல
காலம் என்கோ? நின் பொல்லாக் காலம் என்கோ? - ஞாலம்அதில்

பெண் என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்,
மண் நின்றார் யார் நடுங்க மாட்டார் காண்.....          --- வள்ளல்பெருமான்.

புச ஆசையால் மனது உனை நாடிடாத படி ---

விலைமாதர்கள் தோள்களைத் தழுவ வேண்டும் என்று எழுந்த ஆசை காரணமா, மனமானது இறைவனை நாடாது,

புலையேன் உலாவி மிகு புணர்வாகி ---

புலையன் - கீழ்மகன், இழிந்தவன்.

புணர்தல் - பொருந்துதல், கலவி செய்தல், அளவளாவுதல், மேற்கொள்ளுதல்.

இழிகுணம் படைத்தோனுக்கு இழிவான செயல்களில் ஈடுபடுதலிலேயே விருப்பம் மிகுந்து இருக்கும். பெண்ணாசை கொண்ட மனமானது, அதில் பொருந்தி இருத்தலையே தொழிலாகக் கொண்டு இருக்கும்.


புகழான பூமி மிசை மடிவாய் இறாத வகை ---

பெருமைக்குரிய பூமி என்றார். பூமிக்கு, "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை" தான் உள்ளது என்றார் திருவள்ளுவ நாயனார். இந்த உலகில் எல்லோரையும் போல ஏதோ பிறந்தார், இருந்தார், மடிந்தார் என்று இருக்கக் கூடாது. பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே" என்று அப்பர் பெருமான் பாடியதைப் போல் வாழ்வி அமையக் காடது.

"பெரும் காரியம்போல் வரும் கேடு உடம்பால்
     ப்ரியம் கூர வந்து ...... கருவூறிப்
பிறந்தார், கிடந்தார், இருந்தார், தவழ்ந்தார்,
     நடந்தார், தளர்ந்து ...... பிணமானார்;

அருங்கான் மருங்கே எடுங்கோள்! சுடுங்கோள்!
     அலங்காரம் நன்று இது ...... எனமூழ்கி
அகன்று, ஆசையும்போய் விழும்பாழ் உடம்பால்
     அலந்தேனை அஞ்சல் ...... எனவேணும்".   ---  திருப்புகழ்.

வேடிக்கை மனிதர்களாக ஆகாமல், அறிவினால் நிறையப் பெற்று, அந்த அறிவைக் கொண்டு பிற உயிர்கள் படும் துன்பத்தைப் போக்கி, ஈட்டிய பொருகளை இல்லாதவர்க்கும் கொடுத்து, பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதலை மேற்கொண்டு வாழ்தல் வேண்டும்.

வேடிக்கை மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை, பாரதியாரின் பாடல் ஒன்றினால் அறியலாம்...

"தேடிச் சோறு நிதம் தின்று, — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி, — மனம்
வாடித் துன்பம் மிக உழன்று, — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து, — நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி, — கொடுங்
கூற்றுக்கு இரை எனப் பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?"

"பிறக்கும்பொழுது கொடுவந்தது இல்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவது இல்லை, இடைநடுவில்
குறிக்கும்இச் செல்வம் சிவன் தந்தது என்று, கொடுக்க அறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன், கச்சிஏகம்பனே".     --- பட்டினத்தார்.

திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, உலகத்தில் பிறக்கும் காலத்தில் ஒரு பொருளையும் உடன் கொண்டு வந்தது இல்லை. பிறந்து, பிறகு இறக்கும் காலத்திலும் ஒரு பொருளையும் கொண்டு போவது இல்லை. இடைக் காலத்தில் தோன்றும் பொருட்செல்வம், நமது வினைப்பயன் காரணமாக, சிவபெருமானால் அளிக்கப் பெற்றது என்று உறுதியாக நம்பி,  அப்பொருளைக் கொண்டு உயிருக்கு உறுதி தரும் நல்வினையை, பிறவியை அறுக்கும் பெருமருந்தாகிய பதிபுண்ணியத்தை ஆற்றி வருவதே நல்வழி என்று கொண்டு,  இல்லை என்று இரப்பவருக்கு இல்லை என்னாமல் கொடுத்து உதவத் தெரியாமல், வாழ்நாளை வீழ்நாளாக்கி மாண்டுபோகும் கீழ்மக்களுக்கு என்ன சொல்வேன். 

"நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து,
ஒன்றின ஒன்றின வல்லே, செயின்,செய்க;
சென்றன சென்றன, வாழ்நாள், செறுத்துஉடன்
வந்தது வந்தது கூற்று".                   ---  நாலடியார்.

நின்று இருக்கும் என்றும் நிலைத்து இருக்கும் என்றும் நினைத்து, நாம் தேடிய செல்வம் நிலைத்து இருக்காது. ஒரு நாள் நம்மை விட்டுப் போய்விடும். எனவே, இப்போதே, செல்வம் இருக்கும்போதே பிறர்க்கு உதவி செய்து வாழவேண்டும். நல்ல செயல்களைச் செய்துவிட வேண்டும். இல்லை என்றால், ஒவ்வொரு நாளாகக் கழியும் நமது வாழ்நாள் திடீர் என்று முடிந்து விடும். சினத்தோடு வருகின்ற காலன் நமது உயிரை முற்றிலுமாகக் கவர்ந்து ணென்று விடுவான்.           

"என்ஆனும் ஒன்றுதம் கைஉறப் பெற்றக்கால்,
பின்ஆவது என்று பிடித்துஇரா, - முன்னே
கொடுத்தார் உயப்போவர், கோடுஇல்தீக் கூற்றம்
தொடுத்துஆறு செல்லும் சுரம்".            --- நாலடியார்.         

யாதாயினும் ஒரு பொருளைத் தமது கையில் கிடைக்கும்படி பெறுவராயின், மூப்புக் காலத்தில் பயன்படுவதென்று இறுகப் பிடித்துக்கொண்டு சும்மா இராமல், இளமையிலேயே அறம் செய்தவர், நடுவுநிலைமையுள்ள அருளில்லாத கூற்றுவன் கயிற்றால் கட்டிக் கொண்டு போகின்ற காட்டு வழியில் இருந்து தப்பி, புண்ணிய உலகம் புகுவார்.

"அன்ன விசாரம் அதுவே விசாரம், அது ஒழிந்தால்,
சொன்ன விசாரம் தொலையா விசாரம், நல் தோகையரைப்
பன்ன விசாரம் பலகால் விசாரம், இப் பாவி நெஞ்சுக்கு
என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சிஏகம்பனே".       --- பட்டினத்தார்.
                                             
திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே,  பொய்யாகிய உடம்பைப் போற்றி வளர்க்கும் பொருட்டு மனிதனுக்கு முதலில் எழுகின்ற கவலை உணவைப் பற்றியது.  அந்தக் கவலை எவ்வகையிலாவது நீங்கினால், அடுத்து உடம்பைக் கிடத்த நல்ல படுக்கை, இருக்க வீடு, உடுத்த உடை தேவைப்படுவதால், அதற்கான பொருளைத் தேடுவது அடுத்த கவலை ஆகிறது. இவையெல்லாம் வாய்த்துவிட்டால், அழகு மிக்க மயில் போலும் சாயலை உடைய இளம்பெண்களைப் புகழ்ந்து பேசும் இந்த விசாரம் பலகாலத்து விசாரமாக உள்ளது.  சித்த சாந்தம் அடையாத, இந்தப் பாவியின் மனத்திற்கு  வேறு என்ன கவலையை வைத்தாய்.

"உடுக்கத் துகில் வேணும், நீள்பசி
     அவிக்கக் கனபானம் வேணும், நல்
     ஒளிக்குப் புனல் ஆடை வேணும், மெய் ......உறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணும், உள்
     இருக்கச் சிறுநாரி வேணும், ஒர்
     படுக்கத் தனிவீடு வேணும், இவ் ...... வகை யாவும்

கிடைத்துக் க்ருகவாசி ஆகிய
     மயக்கக் கடல்ஆடி, நீடிய
     கிளைக்குப் பரிபாலனாய் உயிர் ...... அவமே போம்.
க்ருபைச் சித்தமும், ஞான போதமும்
     அழைத்துத் தரவேணும், ஊழ்பவ
     கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ...... ஒருநாளே".         ---  திருப்புகழ்.

"வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கில் சென்று
சரிக்கு ஓதுவேன், அஞ்செழுத்தும் சொலேன், தமியேன் உடலம்
நரிக்கோ, கழுகு, பருந்தினுக்கோ, வெய்ய நாய்தனக்கோ,
எரிக்கோ, இரை எதுக்கோ, இறைவா, கச்சிஏகம்பனே".   --- பட்டினத்தார்.

திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, செவ்வரிகளை உடையதும், அழகிய வேலை ஒத்ததும் ஆகிய கண்களை உடைய பெண்களின் காம மயக்கத்தில் போய், அவருடைய நட்பு வேண்டி, அவர்களைப் புகழ்ந்து பேசுவேன்.  உனது மந்திரமாகிய திருவைந்தெழுத்தை ஓதமாட்டேன். ஆதலால், அடியேனது உடம்பானது, விழுந்தால், நரிக்கு உணவாகுமா? கழுக்குக்கா?, பருந்தினுக்கா?, கொடிய நாயினுக்கா? அல்லது நெருப்பில் தான் இட்டு சுடப்படுமா?   வேறு எதற்கு இரை ஆவேன்.

"வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு, உன் நெறி மறந்து, மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன்" என்று பாடினார் சுந்தரர் பெருமான். 

"வைப்பு மாடு என்று, மாணிக்கத்து ஒளி என்று மனத்திடை உருகாதே, செப்புநேர் முலை மடவரலியர் தங்கள் திறத்திடை நைவேனை" என்றும், "குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை" என்றும் மணிவாசகப் பெருமான் பாடியருளியதையும் கருத்தில் கொள்க.

"வேனில் வேள் மலர்க்கணைக்கும், வெண் நகை, செவ்வாய், கரிய
பால்நலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே,
உன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்
வான்உளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே."

என்ற மணிவாசகப் பெருமான் பாடினார்.

"சுடர்இலை நெடுவேல் கரும்கணார்க்கு உருகித்
துயர்ந்து நின்று, அலமரும் மனம், நின்
நடம்நவில் சரண பங்கயம் நினைந்து
நைந்து நைந்து உருகும் நாள் உளதோ"

என்றும்,

"பெண்அருங்கலமே, அமுதமே, எனப் பெண்
பேதையர்ப் புகழ்ந்து அவம் திரிவேன்,
பண்உறும் தொடர்பில் பித்த என்கினும், நீ
பயன்தரல் அறிந்து, நிற் புகழேன்"

என்றும் சோணசைமாலை என்னும் நூலில் சிவப்பிரகாச சுவாமிகள் பாடியுள்ளதையும் நோக்குக.

"தத்தை அங்கு அனையார் தங்கள் மேல் வைத்த
தாயாவினை நூறு ஆயிரம் கூறு இட்டு,
அத்தில் அங்கு ஒரு கூறு உன்பால் வைத்தவருக்கு
அமர் உலகு அளிக்கும் நின் பெருமை.."

என்னும் திருவிசைப்பாப் பாடல் வரிகளையும் நோக்குக.

இறைவன் திருவருளால் பெற்றது இந்த அருமையான உடம்பு. அதனைக் கொண்டு நல்வழியில் வாழ்ந்து, இறையருளைப் பெற வேண்டுமானால், இறைவன் பொருள்சேர் புகழைப் பேச வேண்டும்.  ஆனால்,  பொருள் கருதி அது உள்ளவர்களைப் புகழ்ந்து பேசியும், இன்பம் கருதி, பொருள் கொண்டு, அதைத் தரும் பொதுமகளிரைப் புகழ்ந்து கொண்டும் வாழ்நாளை வீணாள் ஆக்கி, முடிவில் பயனில்லாமல் இறப்பில் படுகிறோம்.  பிறகு இந்த உடம்பு என்னாகும் என்று சுவாமிகள் கவலைப் படுகின்றார். நாமும் படவேண்டும்.

"முப்போதும் அன்னம் புசிக்கவும், தூங்கவும், மோகத்தினால்
செப்புஓது இளமுலையாருடன் சேரவும், சீவன்விடும்
அப்போது கண்கலக்கப் படவும் வைத்தாய், ஐயனே,
எப்போது காணவல்லேன், திருக்காளத்தி ஈச்சுரனே".    --- பட்டினத்தார்.

காலை, பகல், இரவு என்னும் மூன்று வேளையும், எப்போதும் தூராத குழியாகிய வயிற்றை நிரப்புதற்கு சோற்றை உண்ணவும்,  உண்டபின் உறங்கவும், காம மயக்கத்தால் செப்புக் கலசங்கள் போலும் தனங்களை உடைய இளமாதர்களுடன் புணரவும், உயிர் நீங்குகின்ற காலத்திலே இவற்றையெல்லாம் எண்ணி வருத்தப்படவும் வைத்தாய். சுவாமீ, திருக்காளத்தியில் எழுந்தருளிய பெருமானே, உமது திருவடியை எப்போது காணத் தக்கவன் ஆவேன்.

"இரைக்கே இரவும் பகலும் திரிந்து இங்கு இளைத்து, மின்னார்
அரைக்கே அவலக் குழியருகே அசும்பு ஆர்ந்து ஒழுகும்
புரைக்கே உழலும் தமியேனை ஆண்டு அருள், பொன்முகலிக்
கரைக்கே கல்லால நிழல்கீழ் அமர்ந்துஅருள் காளத்தியே".    ---  பட்டினத்தார்.

சொர்ணமுகி என்னும் பெயர் அமைந்த பொன்முகலி ஆற்றின் கரையிலே, கல்லால மரத்தின் நிழலிலே கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திருக்காளத்தி நாதா! வயிறு புடைக்க உண்பதற்கே இரவும் பகலும் உழன்று, இளைத்து, மாதரின் கடிதடத்திலே உள்ள துன்பத்திற்கு இடமான வழுவழுப்பு நீர் பொருந்திக் கசிகின்ற பள்ளத்திலே ஆசை வைத்து உழலும், அடியேனை ஆண்டு அருள் புரிவாயாக.

, இந்தக் கருத்துகளை எல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டு, இறைவன் தந்த அருமையான இந்த உடம்பினைச் சுமந்து வாழவேண்டும்.

உலாச மிகு நிகழ் போதம் ஆன பர முருகோனே ---

உல்லாச என்னும் சொல் உலாச என்று இடையில் குறைந்து வந்தது.

போதம் - அறிவு. இங்கே மெய்யறிவு, உண்மை அறிவு, மெய்ஞ்ஞானத்தைக் குறிக்கும்.

இறைவன் ஞான வடிவானவன். அறிவு வடிவானவன்.

வேதம் முதலிய நூல்களும் ஒன்று கூடி, முயன்றும் அறியமாட்டாத அறிவு ஒன்று உளது.  அந்த அறிவையும் கடந்து அப்பால் சென்றால், அங்கே ஒரு அறியாமை உளது. அதனையும் கடந்த இடத்தில் விளங்கும் அறிவே இறைவனுக்குத் திருமேனியாக விளங்குகின்றது.

அறிவுஒன்று அறநின்று அறிவார் அறிவில்
பிறிவுஒன்று அரநின்ற பிரான் அலையோ.. ---  கந்தர் அநுபூதி.

கலையறிவுகட்கும் அப்பால் உள்ள நுண்ணறிவுக்கும் அப்பால்பட்ட மூல இருளுக்கும் அப்பால்பட்டு உள்ல அறிவு அது. அது இத் தன்மைத்து என்று எவரால் இயம்புதல் முடியும்?

அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.        ---  கந்தர் அநுபூதி.

மிகப் பெரிய அநுபவத்தால் அறிகின்றது. அதனை நம் போன்றோர் எழுதவோ, கூறவோ, நினைக்கவோ முடியாது.

பலகாலும் செய்த மாதவப்பயனால், அவனருளே கண்ணாகக் கொண்டு காண்கின்றபோது, அந்த அறிவு, அறிவுக்கு அறிவாகப் புலப்படும். அதனை அறிவதுவே மேலான இன்பம்.

அறிவை அறிபவர் அறியும் இன்பம் தனை...     ---  (அகரமுதலென) திருப்புகழ்.

அதனை, இறைவனிடமே வேண்டிப் பெறவேண்டும்.

சுருதி மறைகள், இருநாலு திசையில் அதிபர், முநிவோர்கள்,
     துகள்இல் இருடி எழுபேர்கள், ...... சுடர்மூவர்,
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர், நவநாதர்,
     தொலைவில் உடுவின் உலகோர்கள், ...... மறையோர்கள்,

அரிய சமயம் ஒருகோடி, அமரர் சரணர் சதகோடி,
     அரியும் அயனும் ஒருகோடி, ...... இவர்கூடி
அறிய அறிய அறியாத அடிகள் அறிய அடியேனும்
     அறிவுள் அறியும் அறிவுஊற ...... அருள்வாயே..        ---  திருப்புகழ்.

குகையில் நவ நாதரும், சிறந்த
     முகை வனச சாதனும், தயங்கு
          குணமும், அசுர ஈசரும், தரங்க ...... முரல்வேதக்
குரகத புராரியும், ப்ர சண்ட
     மரகத முராரியும், செயம் கொள்
          குலிச கை வலாரியும், கொடுங்கண் ...... அறநூலும்,

அகலிய புராணமும், ப்ர பஞ்ச
     சகலகலை நூல்களும், பரந்த
          அருமறை அநேகமும், குவிந்தும் ...... அறியாத,
அறிவும் அறியாமையும் கடந்த
     அறிவு திருமேனி என்று உணர்ந்து, உன்
          அருண சரண அரவிந்தரம் என்று ...... அடைவேனோ?   --- திருப்புகழ்.

ஆன்மா எல்லாப் பற்றுக்களையும் விட்டு, இறையருளையே பற்றி, தன் வசமிழந்து நிற்கவேண்டும். அப்படி எல்லாப் பற்றுக்களும் அற்று, தன்னை இழந்து நிற்கும் நிலையில் ஆன்மா இறைத் தன்மையைப் பெற்று நிற்கும். உல்லாசமாகவும் நிராகுலமாகவும் இருக்கும் நிலையை அது பெறும். உண்மை ஞானத்தால் கிடைக்கும் இந்த ஆனந்த நிலை சொல்லுக்கு அடங்காது.


நிதி ஞான போதம் ---

ஆணவ வல்லிருளால் அறிவு விளக்கம் பெறாமல், துன்பத்திலையே உழலுகின்ற உயிர்களுக்குப் பெறுதற்கு அரிய செல்வம் ஆவதும், மெய்யின்பத்தை அருள்வதும் உண்மை அறிவாகிய ஞானபோதமே ஆகும்.

அரன் இரு காதிலே உதவு நிபுணா ---

அதனைப் பெறுவது எப்படி என்று எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு, குருநாதராக எழுந்தருளி உபதேசித்து அருளியவர் முருகப் பெருமான்.

கயிலைமலையின் கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த காலத்தில், சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த அமரர்கள் அனைவரும் குமாரக் கடவுளை வனங்கிச் சென்றனர். வணங்காது சென்ற பிரமனை முருகப் பெருமான் அழைத்து, பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை, அறுமுகனார் சிறைப்படுத்தி முத்தொழிலும் புரிந்து தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கென வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக்கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகமெவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய உன்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபக எறிந்த வள்ளலை நோக்கி,

அமரர் வணங்குங் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வைரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையிலிருத்தி, எல்லார்க்குஞ் செய்யும் வணக்கமும் நினக்கே எய்துந் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! "ஓம்" எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்றெறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழற வல்லேம்” என்றனர்.

அரனார் கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்ததென்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும் திருத்தணிகை மலையை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறு ஊர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர்.

குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப்பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பாலவென்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் உஞற்றியதால் அத்தணிகைமலை, கணிக வெற்பு எனப் பெயர் பெற்றதென்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவமியற்றக் கதிர்வேல் அண்ணல் தோன்றலும், ஆலமுண்ட அண்ணல் எழுந்து குமரனை வணங்கி வடதிசை நோக்கி நின்று பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து பிரணவோபதேசம் பெற்றனர்.

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும், தாழ்வயிற்
சதுர்பட வைகுபு, தா அரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.       --- தணிகைப் புராணம்.

நாத போற்றி என முது தாதை கேட்க, அநுபவ
 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”             --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

நாதா குமரா நம என்று அரனர்
 ஓதாய் என, ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி

தமிழ்விரக, உயர் பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”  --- (கொடியனைய) திருப்புகழ்.

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.
                                                           --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு
     செவி மீதிலும் பகர் செய் ......   குருநாதா!          --- திருப்புகழ்.

அவ்வாறு கூறிய அமுதமொழி இரண்டு செவிகளிலும் நிரம்பியது என்பது பொருள்.


திசை மாமுக, ஆழி அரி, மகவான் முனோர்கள் பணி சிவநாதர் ---
  
நிசைக்கு ஒரு முகம் ஆக நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்டவன் பிரமதேவன்.சுதர்சனம் என்னும் சக்கரத்தைத் தரித்துள்ள திருமால். இந்திரன் முதலான தேவர்கள், யந்திரன், சீரியன், வால்மீகி, காமதேனு, பிருங்கி, வேதங்கள், இயமன் ஆகிய முன்னோர்கள் பணிந்து வணங்குகின்ற பரம்பொருள் சிவபெருமான்,

ஆலம் அயில் அமுத ஈசர் திகழ் பால ---

ஆலகால விடத்தை உண்ட அமுதைப் போன்ற ஈசரின் விளக்கம் பொருந்திய குழந்தைவேலன்.

மால் அயன் ஆதி வானவர்கள் இறவாமையைப் பெறுதல் வேண்டி, திருப்பற்கடலைக் கடையல் உற்றனர்.  மந்தரகிரியை மத்தாகவும், வாசுகியைத் தாம்பாகவும் கொண்டு, தேவாசுரர் பன்னெடும் காலம் வருந்தி, பலப்பல மருந்துப் பொருள்களைக் கடலில் விடுத்து, மெய்யும் கையும் தளரக் கடைந்தனர். அமிர்தத்திற்கு மாறாக, ஆலகால விடம் தோன்றியது. அது கண்ட அரி, அயன், இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அஞ்சி, அந்தோ ஒன்றை நினைக்க ஒழிநிதிட்டு வேறு ஒன்று ஆகியதே இதனுடைய வெம்மை உலகங்களை எல்லாம் கொளுத்துகின்றது. நமது உயிர் வெதும்புகின்றது. என் செய்வோம் என்று புலம்பி, வாடி, திருக்கயிலையை அடைந்தனர்.  திருநந்தி தேவரிடம் விடை பெற்று, திருக்கோயிலுள் சென்று, சிவபெருமானுடைய திருவடியில் வீழ்ந்து, எழுந்து கரங்களைக் கூப்பி முறையிடுவாரானார்கள்.

"எந்தையே! சிந்தையில் தித்திக்கும் தெள்ளமுதே! கருணைக் கடலே! கண்ணுதல் கடவுளே! அடியேங்கள் தேவரீருடைய திருவருளால் அமரத்துவம் பெற நினையாமல், பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற முயன்றோம். அதற்கு மாறாக ஆலகால விடம் வெளிப்பட்டது. அதன் வெம்மையால் உலகங்களும், உயிர்களும் யாமும் துன்புறுகின்றேம். எமக்கு இன்றே இறப்பும் எய்தும் போலும். தேவரீரே எமக்குத் தனிப்பெரும் தலைவர். முதலில் விளைந்த விளைவுப் பொருளைத் தலைவருக்குத் தருதல் உலக வழக்கு. அடியேங்கள் பெரிதும் முயன்று பாற்கடலைக் கடைந்த போது, முதலில் விளைந்த பொருள் விடம். அதனைத் தங்கட்க்கு காணிக்கையாகத் தருகின்றோம்.  அதனை ஏற்றுக் கொண்டு எம்மை ஆட்கோள்வீர்" என்று இனிமையாகவும், கனிவுடனும் முறையிட்டனர். அதனைக் கேட்டு அருளிய அந்திவண்ணராகிய அரனார் சுந்தரரைக் கொண்டு, ஆலகால விடத்தைக் கொணர்வித்து, நாவல் பழம் போல் திரட்டி, உண்டால் உள்முகமாகிய ஆன்மாக்கள் அழியும் என்றும், உமிழ்ந்தால் வெளிமுகமாகிய ஆன்மாக்கள் அழியும் என்றும் திருவுள்ளம் கொண்டு, உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்திலு தரித்து, நீலகண்டர் ஆயினார். அன்று எம்பெருமான் அவ்விடத்திலே அவ் விடத்தை உண்ணாராயின், தேவர் அனைவரும் பொன்றி இருப்பர். அத்தனை பேருக்கும் வந்த கண்டத்தை நீக்கியது பெருமானுடைய கண்டம். இனிய ஒரு உணவுப் பொருளைக் கூட நம்மால் கண்டத்தில் நிறுத்த முடியாது. வாயிலோ வயிற்றிலோ வைக்கலாமேயன்றி, கண்டத்தில் நிலைபெறச் செய்ய முடியாது. எனில், எம்பெருமான் ஆலகால விடத்தைக் கண்டத்தில் தரித்தது எத்துணை வியப்பு.

கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!   --- திருவாசகம்.

ஆலங்குடி யானை, ஆலாலம் உண்டானை,
ஆலம் குடியான் என்று ஆர் சொன்னார், ஆலம்
குடியானே ஆயின் குவலையத்தார் எல்லாம்
மடியாரோ மண் மீதிலே.                 --- காளமேகப் புலவர்.

வானவரும் இந்திரரும் மால்பிரமரும் செத்துப்
போன இடம் புல்முளைத்துப் போகாதோ --- ஞானம்அருள்
அத்தர் அருணேசர் அன்பாக நஞ்சுதனை
புத்தியுடன் கொள்ளாத போது.        --- அருணாசலக் கவிராயர்.


மாகம் உற மணி மாளி மாடம் உயர் திருவான்மியூர் மருவு பெருமாளே ---

வானத்தை அளவும்படியாஅழகிய மாளிகைகள் மாடங்கள் உயர்ந்து இருக்கும், திருவான்மியூர் என்னும் திருத்தலத்தை விரும்பி எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவர் முருகப் பெருமான்.

மாளி - மாளிகை என்னும் சொல் இடைக்குறையாக நின்றது.

திருவான்மியூர் சென்னைமாநகரின் தென் பகுதியில் அமைந்துள்ள அற்புதமான திருத்தலம். திருஞானசம்பந்தர், அப்பர் வழிபட்ட திருவூர்.  இறைவர் மருந்தீசுவரர், பால்வண்ணநாதர், வேதபுரீசுவரர். இலிங்கத் திருமேனி சற்று வடபக்கமாகச் சாய்ந்துள்ளது. இறைவியார், சொக்கநாயகி, சுந்தரநாயகி. தலமரம் வன்னி.

"தாழ்ந்துபல முறைபணிந்து, தம்பிரான் முன்நின்று
வாழ்ந்து, களிவரப் பிறவி மருந்து ஆன பெருந்தகையைச்
சூழ்ந்தஇசைத் திருப்பதிகச் சொன்மாலை வினாவுரையால்
வீழ்ந்தபெருங் காதலுடன் சாத்தி, மிக இன்புற்றார்".

திருஞானசம்பந்தப் பெருமான், "பிறவி மருந்து" ஆகிய திருவான்மியூர் இறைவரைப் பாடிபரவினார் என்று பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டினார்.

"திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து, பணிந்து, அன்பினொடும்
பெருவாய்மைத் தமிழ்பாடி, அம்மருங்கு பிறப்பு அறுத்துத்
தருவார் தம் கோயில் பல சார்ந்து, இறைஞ்சி, தமிழ்வேந்தர்
மருஆரும் மலர்ச்சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார்".

அப்பர் பெருமான் திருவான்மியூர் மருந்தை வந்து பணிந்ததை, தெய்வச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் இவ்வாறு காட்டினார்.

, மருந்தீசர் என்னும் திருநாமம் இறைவருக்கு உள்ளது.

"நீதி, நின்னைஅல்லால் நெறியாதும் நினைந்துஅறியேன்,
ஓதீ நான்மறைகள், மறையோன்தலை ஒன்றினையும்
சேதீ, "சேதம் இல்லாத் திருவான்மியூர்" உறையும்
ஆதீ, உன்னைஅல்லால் அடையாதுஎனது ஆதரவே".

என்னும் திருஞானசம்பந்தப் பெருமானாரின் தேவாரப் பாடலில்,  "சேதம் இல்லாத் திருவான்மியூர்" என்று சிறப்பிக்கப்பட்டு இருப்பது அருமை.

"விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்டர் நாயகன் தன்அடி சூழ்மின்கள்,
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்,
வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே".

"பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு,நீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்குஅறுத்து
அருளு மாவல்ல ஆதியாய் என்றலும்
மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே".

"ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னம் கழல்அடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே".

எனத் திருவான்மியூர் இறைவரை அப்பர் பெருமான் பாடிய அருட்பாடல்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவன.

கருத்துரை

முருகா! விலைமாதர் ஆசையால் அடியேன் மடியாமல், திருவடித் தாரமையைத் தந்து அருள்.

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...