திருமயிலை - 0705. நிரைதரு மணிஅணி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நிரைதரு மணியணி (திருமயிலை)

முருகா!
மாதர் மயலால் விளையும் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபட்டு
 திருவருள் இன்பத்தில் திளைத்து இருக்க அருள்.


தனதன தனதன தாந்த தானன
     தனதன தனதன தாந்த தானன
          தனதன தனதன தாந்த தானன ...... தனதான
  
நிரைதரு மணியணி யார்ந்த பூரித
     ம்ருகமத களபகில் சாந்து சேரிய
          இளமுலை யுரமிசை தோய்ந்து மாமல ...... ரணைமீதே

நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதி
     முகம்வெயர் வெழவிழி பாய்ந்து வார்குழை
          யொடுபொர இருகர மேந்து நீள்வளை ...... யொலிகூர

விரைமலர் செறிகுழல் சாய்ந்து நூபுர
     மிசைதர இலவிதழ் மோந்து வாயமு
          தியல்பொடு பருகிய வாஞ்சை யேதக ...... வியனாடும்

வினையனை யிருவினை யீண்டு மாழ்கட
     லிடர்படு சுழியிடை தாழ்ந்து போமதி
          யிருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வது ....மொருநாளே

பரையபி நவைசிவை சாம்ப வீயுமை
     யகிலமு மருளரு ளேய்ந்த கோமளி
          பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை ...... சதகோடி

பகவதி யிருசுட ரேந்து காரணி
     மலைமகள் கவுரிவி தார்ந்தமோகினி
          படர்சடை யவனிட நீங்கு றாதவள் ...... தருகோவே

குரைகடல் மறுகிட மூண்ட சூரர்க
     ளணிகெட நெடுவரை சாய்ந்து தூளெழ
          முடுகிய மயில்மிசை யூர்ந்து வேல்விடு....முருகோனே

குலநறை மலரளி சூழ்ந்து லாவிய
     மயிலையி லுறைதரு சேந்த சேவக
          குகசர வணபவ வாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நிரைதரும் மணி அணி ஆர்ந்த, பூரித
     ம்ருகமத களப அகில் சாந்து சேரிய,
          இளமுலை உரம் மிசை தோய்ந்து, மாமலர் ...... அணைமீதே,

நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து, மாமதி
     முகம் வெயர்வு எழ, விழி பாய்ந்து, வார்குழை
          யொடு பொர இருகரம் ஏந்து நீள்வளை ...... ஒலிகூர,

விரைமலர் செறிகுழல் சாய்ந்து, நூபுரம்
     இசைதர, இலவ இதழ் மோந்து, வாய்அமுது
          இயல்பொடு பருகிய வாஞ்சையே தக ......இயல்நாடும்

வினையனை, இருவினை ஈண்டும் ஆழ்கடல்
     இடர்படு சுழியிடை தாழ்ந்து போம் மதி,
          இருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வதும் ....ஒருநாளே?

பரை, அபிநவை,சிவை, சாம்பவீ, உமை,
     அகிலமும் அருள் அருள் ஏய்ந்த கோமளி,
          பயிரவி, திரிபுரை, ஆய்ந்த நூல்மறை ...... சதகோடி

பகவதி, இருசுடர் ஏந்து காரணி,
     மலைமகள், கவுரி, விதார்ந்த மோகினி,
          படர்சடையவன் இடம் நீங்கு உறாதவள் .....தருகோவே!

குரைகடல் மறுகிட, மூண்ட சூரர்கள்
     அணிகெட, நெடுவரை சாய்ந்து தூள்எழ,
          முடுகிய மயில்மிசை ஊர்ந்து வேல்விடு....... முருகோனே!

குலநறை மலர் அளி சூழ்ந்து உலாவிய,
     மயிலையில் உறை தரு சேந்த! சேவக!
          குக! சரவணபவ! வாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.


பதவுரை

      பரை -- பராசத்தி,

     அபிநவை -- என்றும் புதிதாக உள்ளவள்,

     சிவை --- சிவனின் தேவி,

     சாம்பவீ --- சம்புவின் தேவி,

     உமை -- உமாதேவி

     அகிலமும் அருள அருள் ஏய்ந்த கோமளி --- எல்லா உலகங்களையும் ஈன்றருளிய அருள் வடிவான அழகி,

     பயிரவி --- அச்சம் தருபவள்,

     திரிபுரை --- மும்மூர்த்திகளுக்கும் முதல்வி,

     நூல் மறை சத கோடி ஆய்ந்த --- எண்ணில்லாத மறைகளும், அருள் நூல்களும் ஆராய்கின்றவள்,(சதகோடி என்றது எண்ணற்ற என்னும் பொருளில் வந்தது)

     பகவதி --- திரு, செல்வம், புகழ், ஞானம், வீரம், வைராக்யம் எனும் ஆறு குணங்களை உடையவள்,

      இருசுடர் ஏந்து காரணி --- சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு சுடர்களையும் தரித்துள்ள மூலப்பொருளானவள்,

     மலைமகள் --- மலை வளர் காதலி,

     கவுரி --- பொன் போலும் திருமேனியள்,

     விதார்ந்த மோகினி --- பல உருவம் கொள்ளும் அழகி,

     படர் சடையவன் இட நீங்கு உறாதவள் தருகோவே --- படர்ந்த சடையினை உடைய சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் நீங்காது உறைபவள் பெற்றருளிய செல்வமே!

      குரைகடல் மறுகிட --- ஒலிக்கின்ற கடலானது கலங்கும்படி,

     மூண்ட சூரர்கள் அணிகெட --- கோபம் மூண்டு எந்த அசுரர்களின் படை அணிவகுப்புக் குலையும்படியும்,

     நெடுவரை சாய்ந்து தூள்எழ --- பெரிய கிரவுஞ்ச மலையானது விழுந்து பொடிபடவும்,

     முடுகிய மயில்மிசை ஊர்ந்து --- விரைந்து செல்லும் மயில் வாகனத்தில் சென்று,

     வேல்விடு முருகோனே --- வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப் பெருமானே!

     குல நறை மலர் அளி சூழ்ந்து உலாவிய --- நல்ல தேன் பொருந்திய மலர்களை வண்டுகள் சூழ்ந்து உலாவுகின்,

     மயிலையில் உறைதரு சேந்த --- திரு மயிலாப்பூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள சிவந்த திருமேனியை உடையவரே!

     சேவக --- வீரம் நிறைந்தவரே!

     குக --- அடியார்களின் இதயக் குகையில் எழுந்தருளி இருப்பவரே!

     சரவணபவ --- சரவணப் பொய்கையில் அவதரித்தவரே!

    வாய்ந்த தேவர்கள் பெருமாளே ---  தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

     நிரைதரு மணி அணி ஆர்ந்த --- வரிசையாய் அமைந்த நவமணிகளால் ஆன அணிகலன்கள் அணியப் பெற்று,

     பூரித -- பூரித்து உள்ள,

     ம்ருகமத --- கத்தூரி,

     களப --- சந்னக் குழம்பு,

     அகில்--- அகில் முதலியவைகளின்

     சாந்து சேரிய இளமுலை --- கலவை பூசப்பட்டுள்ள இளமை வாய்ந்த முலைகள்.

      உரம் மிசை தோய்ந்து --- மார்பிலே பொருந்தி, (உரம் - மார்பு)

     மாமலர் அணைமீதே --- நல்ல மலர்ப் படுக்கையின் மீது,

     அரை துகில் நெகிழ்தர வீழ்ந்து --- இடுப்பில் உள்ள ஆடை தளர விழுந்து,

      மா மதிமுகம் வெயர்வு எழ --- நல்ல ஒளி பொருந்திய முகத்திலே வியர்வை துளிர்க்க,

     விழி பாய்ந்து --- கண்கள் பாய்ந்து,

     வார் குழையொடு பொர --- நீண்ட குண்டலங்கள் உள்ள காதுகளோடு போர் புரிய,

     இருகரம் ஏந்து நீள்வளை ஒலி கூர ---  இரண்டு கைகளிலும் அணிந்துள்ள பெரிய வளையல்கள் ஒலி செய்ய,

      விரைமலர் செறிகுழல் சாய்ந்து --- நறுமணம் உள்ள மலர்கள் நிறைந்துள்ள கூந்தல் சரியவும்,

     நூபுரம் இசைதர --- கால்களில் அணிந்துள்ள சிலம்புகள் ஒலிக்கவும்,

     இலவ இதழ் மோந்து --- இலவ இதழ் போன்ற வாயிதழை முத்தமிட்டு,

     வாய் அமுது இயல்பொடு பருகிய வாஞ்சையே --- வாயில் ஊறும் அமுதம் போன்ற எச்சிலை விரும்பிப் பருகுவதையே,

     தக இயல் நாடும் வினையனை --- தகுந்த ஒழுகலாறாகக் கொண்டுள்ள தீவினை மிகுந்தவனை,

     இருவினை ஈண்டும் ஆழ்கடல் --- நல்வினை தீவினை என்னும் இருவினைகளால் பொருந்திய பிறவிக் கடலில்,

     இடர் படுசுழி இடை --- துன்பமாகிய சுழியிலே அகப்பட்டு,

     தாழ்ந்து போம் மதி --- தாழ்ந்த நிலையை அடைகின்ற எனது அறிவானது, ( போகும் என்ற சொல்லானது இடைக் குறைந்து போம் என்று ஆனது)

     இருகதி பெற --- பெரிய கதியைப் பெறுவதற்கு,

     அருள் சேர்ந்து வாழ்வதும் ஒரு நாளே --- தேவரீரது திருவருளைப் பெற்று வாழும் ஒரு நாள் உண்டாகுமோ?

பொழிப்புரை


         பராசத்தி, என்றும் புதிதாக உள்ளவள், சிவனின் தேவி, சம்புவின் தேவி, உமாதேவி, எல்லா உலகங்களையும் ஈன்றருளிய அருள் வடிவான அழகி, அச்சம் தருபவள், மும்மூர்த்திகளுக்கும் முதல்வி, எண்ணில்லாத மறைகளும், அருள் நூல்களும் ஆராய்கின்றவள், திரு, செல்வம், புகழ், ஞானம், வீரம், வைராக்யம் எனும் ஆறு குணங்களை உடையவள், சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு சுடர்களையும் தரித்துள்ள மூலப்பொருளானவள், மலைவளர் காதலி, பொன் போலும் திருமேனியள், பல உருவம் கொள்ளும் அழகி,  படர்ந்த சடையினை உடைய சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் நீங்காது உறைபவள் பெற்றருளிய செல்வமே!

     ஒலிக்கின்ற கடலானது கலங்கும்படி கோபம் மூண்டு எந்த அசுரர்களின் படை அணிவகுப்புக் குலையும்படியும், பெரிய கிரவுஞ்ச மலையானது விழுந்து பொடிபடவும், விரைந்து செல்லும் மயில் வாகனத்தில் சென்று, வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப் பெருமானே!

         நல்ல தேன் பொருந்திய மலர்களை வண்டுகள் சூழ்ந்து உலாவுகின், திரு மயிலாப்பூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள சிவந்த திருமேனியை உடையவரே!

     வீரம் நிறைந்தவரே!

     அடியார்களின் இதயக் குகையில் எழுந்தருளி இருப்பவரே!

     சரவணப் பொய்கையில் அவதரித்தவரே!

     தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

         வரிசையாய் அமைந்த நவமணிகளால் ஆன அணிகலன்கள் அணியப் பெற்று, பூரித்து உள்ள, கத்தூரி, சந்னக் குழம்பு, அகில் முதலியவைகளின் கலவை பூசப்பட்டுள்ள இளமை வாய்ந்த முலைகள் மார்பிலே பொருந்தி, நல்ல மலர்ப் படுக்கையின் மீது,
இடுப்பில் உள்ள ஆடை தளர விழுந்து, நல்ல ஒளி பொருந்திய முகத்திலே வியர்வை துளிர்க்க, கண்கள் பாய்ந்து, நீண்ட குண்டலங்கள் உள்ள காதுகளோடு போர் புரிய, இரண்டு கைகளிலும் அணிந்துள்ள பெரிய வளையல்கள் ஒலி செய்ய,
நறுமணம் உள்ள மலர்கள் நிறைந்துள்ள கூந்தல் சரியவும், கால்களில் அணிந்துள்ள சிலம்புகள் ஒலிக்கவும், இலவ இதழ் போன்ற வாயிதழை முத்தமிட்டு, வாயில் ஊறும் அமுதம் போன்ற எச்சிலை விரும்பிப் பருகுவதையே, தகுந்த ஒழுகலாறாகக் கொண்டுள்ள தீவினை மிகுந்தவனை, நல்வினை தீவினை என்னும் இருவினைகளால் பொருந்திய பிறவிக் கடலில், துன்பமாகிய சுழியிலே அகப்பட்டு, தாழ்ந்த நிலையை அடைகின்ற எனது அறிவானது, பெரிய கதியைப் பெறுவதற்கு,
தேவரீரது திருவருளைப் பெற்று வாழும் ஒரு நாள் உண்டாகுமோ?

விரிவுரை


நிரைதரு மணி அணி ஆர்ந்த ....... தக இயல் நாடும் வினையனை ---

வரிசையாய் அமைந்த நவமணிகளால் ஆன அணிகலன்கள் அணியப் பெற்று, பூரித்து உள்ள, கத்தூரி, சந்னக் குழம்பு, அகில் முதலியவைகளின் கலவை பூசப்பட்டுள்ள இளமை வாய்ந்த முலைகள் மார்பிலே பொருந்தி, நல்ல மலர்ப் படுக்கையின் மீது,
இடுப்பில் உள்ள ஆடை தளர விழுந்து, நல்ல ஒளி பொருந்திய முகத்திலே வியர்வை துளிர்க்க, கண்கள் பாய்ந்து நீண்ட குண்டலங்கள் உள்ள காதுகளோடு போர் புரிய, இரண்டு கைகளிலும் அணிந்துள்ள பெரிய வளையல்கள் ஒலி செய்ய,
நறுமணம் உள்ள மலர்கள் நிறைந்துள்ள கூந்தல் சரியவும், கால்களில் அணிந்துள்ள சிலம்புகள் ஒலிக்கவும், இலவ இதழ் போன்ற வாயிதழை முத்தமிட்டு, வாயில் ஊறும் அமுதம் போன்ற எச்சிலை விரும்பிப் பருகுவதையே, தகுந்த ஒழுகலாறாகக் கொண்டுள்ளவர் தீவினை மிகுந்தவர்கள் என்கின்றார் அடிகளார்.

இத்தகைய கயவர்கள் கூட்டம் தகாது என்கின்றார் வள்ளல்பெருமான்.

மனம்விரும்பு உணவு உண்டு, நல்
         வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு
                  மலர்சூடி, விளையாடி,மேல்
கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு
                  கலந்து மகிழ்கின்ற சுகமே
         கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்
                  கயவரைக் கூடாது அருள்,
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
                  தலம் ஓங்கு கந்தவேளே!
         தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
                  சண்முகத் தெய்வமணியே!     

இருவினை ஈண்டும் ஆழ்கடல், இடர் படுசுழி இடை தாழ்ந்து போம் மதி --- 

போகும் என்னும் சொல்லானது இடைக் குறைந்து போம் என்று ஆனது.

செய்த வினைகளின் காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள் வருதலின், பிறவியேப் பெருங்கடல் என்றனர் நம் முன்னோர். பிறவியானது வினையினால் வருகின்றது. பிறவியினால் வினையே விளைகின்றது. "வினையின் வந்தது, வினைக்கு விளைவு ஆயது" என்றார் மணிமேகலை ஆசிரியர்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார்
இறைவன் அடி சேராதார்.

என்றார் திருவள்ளுவ நாயனார்.

காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரை இன்றி வருதலின், "பிறவிப் பெருங்கடல்" என்றார் என்னும் பரிமேலழகர் உரை சிந்தனைக்கு உரியது.

காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் கடலில் அலைகள் சிறிதும் பெரிதுமாக வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடலால் சூழப்பட்டு உள்ளது இந்த நிலவுலகம். இந்த நிலவுலகத்தில் எடுத்துள்ள இந்தப் பிறப்பினை அடிகளார் இங்குக் குறித்தார் எனக் கொள்ளலாம்.

"தனியனேன் பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு, பற்று ஒன்று இன்றி,
கனியை நேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு, காமவான் சுறவின் வாய்ப்பட்டு,
இனி என்னே உய்யுமாறு என்று என்று எண்ணி,
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை,
முனைவனே! முதல் அந்தம் இல்லா மல்லல்
கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே"

என்றார் மணிவாசகப் பெருமான்.

கடலில் வீழ்ந்தோர் கரை ஏறுதல் அரிது. பிறவியில் வீழ்ந்தோறும் முத்திக் கரையில் ஏறுதல் அரிது. அதனால் பிறவியைக் கடல் என்றார். 'பிறவிப் பெருங்கடல்' என்றார் திருவள்ளுவ நாயனாரும். கடலில் அலை ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், ஓயாது. அது போல, வாழ்வில் துன்பம் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், ஓயாது. அதனால் துன்பத்தை அலை என்றார். புயல் காற்று, கலக்கத்தைச் செய்யும், மகளிரின் தோற்றமும் கண்டாரைக் கலங்கச் செய்யும், அதனால் மகளிரைப் புயல் காற்று என்றார். சுறாமீன், தன் வாயில்பட்டாரை உள்ளே விழுங்கும். ஆசை வயப்பட்டோரும் அல்லலில் அழுந்துவர். அதனால் காமத்தைச் சுறாமீன் என்றார்.

தெப்பத்தைக் கொண்டு கடலைக் கடக்கலாம். திருவைந் தெழுத்தாகிய மந்திரத்தைக் கொண்டு பிறவி என்னும் கடலைக் கடக்கலாம். அதனால், ஐந்தெழுத்தைப் 'புணை' என்றார். 'வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத்து' என்றார் சேக்கிழார் சுவாமிகள். மீகாமன் தெப்பத்தால் மக்களைக் கரையில் சேர்க்கிறான். இங்கு முதல்வன் அஞ்செழுத்தால் மணிவாசகப் பெருமானை முத்தியில் சேர்த்தான் என்பதால், 'முனைவனே! முதல் அந்தம் இல்லா மல்லல் கரைகாட்டி ஆட்கொண்டாய்' என்றார்.

இப்பிறவி என்னும் ஓர் இருட்கடலில் மூழ்கி, நான்
                 என்னும் ஒரு மகரவாய்ப்பட்டு,
      இருவினை எனும் திரையின் எற்றுண்டு, புற்புதம்
                 எனக்கொங்கை வரிசைகாட்டும்
 துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்ட மாருதச்
                 சுழல்வந்து வந்து அடிப்ப,
      சோராத ஆசையாம் கான் ஆறு வான்நதி
                 சுரந்தது என மேலும் ஆர்ப்ப,
    கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்
                 கைவிட்டு, மதிமயங்கி,
      கள்ள வங்கக் காலர் வருவர் என்று அஞ்சியே
                 கண் அருவி காட்டும் எளியேன்,
    செப்பரிய முத்தியாம் கரை சேரவும் கருணை
                 செய்வையோ? சத்து ஆகி, என்
      சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
                 தேசோ மயானந்தமே!

என்றார் தாயுமான அடிகளார்.

துன்பக் கடல்இடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந்து ஏற்றும் திறத்தன, மாற்று அயலே
பொன்பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும், ப்பொய்பொருந்தா
அன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே.

என்றருளினார் அப்பர் பெருமான்.
                                                                                                              
அறிவு இல் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்,
கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும்,
இனையன பலசரக்கு ஏற்றி, வினை எனும்
தொல்மீ காமன் உய்ப்ப, அந்நிலைக்
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்
புலன் எனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்பு எனும் பெருங்கடல் உறப்புகுந்து அலைக்கும்
துயர்த் திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்து,
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து,
நிறை எனும் கூம்பு முரிந்து, குறையா
உணர்வு எனும் நெடும்பாய் கீறி,புணரும்
மாயப் பெயர்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம், அலங்கல்
மதியுடன் அணிந்த பொதி அவிழ் சடிலத்துப்
பை அரவு அணிந்த தெய்வ நாயக!
தொல் எயில் உடுத்த தில்லை காவல!
வமபு அலர் தும்பை அம்பலவாண! நின்
அருள் எனும் நலத்தார் பூட்டி,
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.

என்று கோயில் நான்மணிமாலையில் அருளினார் பட்டினத்து அடிகள்.

பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந்து, ளுத்து, சும்பு
         ஒழுகிய பொய்க்கூரை
இத்தை மெய் எனக் கருதி நின்று, டர்க்கடல்
         சுழித் தலைப் படுவேனை....

பிறவி என்னும் கடலில் தோன்றுகின்ற துன்பமாகிய நீர்ச்சுழியில் அகப்பட்டுள்ள அடியேன் என்கின்றார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில்.

இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி,
     இடர்கள் பட்டு அலையப் ...... புகுதாதே,
திருவருள் கருணைப் ...... ப்ரபையாலே,
     திரம் எனக் கதியைப் ...... பெறுவேனோ?  --- திருப்பகழ்.

பிறவிக் கடலைக் கடக்கத் துணைபுரியும் ஓடக்காரன் முருகப்பெருமானே என்கின்றார் அடிகளார்...

"யாது நிலை அற்று அலையும் ஏழு பிறவிக் கடலை
ஏறவிடும் நல்கருணை ஓடக்காரனும்"....

எனவரும் திருவேளைக்காரன் வகுப்புப் பாடல் வரியை எண்ணுக.

இருகதி பெற, அருள் சேர்ந்து வாழ்வதும் ஒரு நாளே ---

இரு - பெரிய.

கதி - பரகதி, வீடுபேறு.

வீடுபேற்றை உயிர் அடையவேண்டுமானால் இறைவன் திருவருளைப் பெறவேண்டும்.

கருத்துரை

முருகா! மாதர் மயலால் விளையும் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபட்டு, திருவருள் இன்பத்தில் திளைத்து இருக்க அருள். 


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...