திருமயிலை - 0706. வருமயில் ஒத்தவர்

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வருமயில் ஒத்தவர் (திருமயிலை)
  
முருகா!
விலைமாதர் மீது பற்று வைத்து அழியாமல்,
உமது திருவருளில் பற்று வைத்து,
அழியாத பதத்தைப் பெற அருள்.

 
தனதன தத்தன தானா தானன
     தனதன தத்தன தானா தானன
          தனதன தத்தன தானா தானன ...... தனதான


வருமயி லொத்தவ ரீவார் மாமுக
     மதியென வைத்தவர் தாவா காமிகள்
          வரிசையின் முற்றிய வாகா ராமியல் ...... மடமாதர்

மயலினி லுற்றவர் மோகா வாரிதி
     யதனிடை புக்கவ ராளாய் நீணிதி
          தருவிய லுத்தர்கள் மாடா மாமதி ...... மிகமூழ்கி

தருபர வுத்தம வேளே சீருறை
     அறுமுக நற்றவ லீலா கூருடை
          அயிலுறை கைத்தல சீலா பூரண ...... பரயோக

சரவண வெற்றிவி நோதா மாமணி
     தருமர வைக்கடி நீதா வாமணி
          மயிலுறை வித்தவு னாதா ராமணி ...... பெறுவேனோ

திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
     தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
          திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி ...... தொதிதீதோ

தெனவரி மத்தள மீதார் தேமுழ
     திடுவென மிக்கியல் வேதா வேதொழு
          திருநட மிட்டவர் காதே மூடிய ...... குருபோதம்

உரை செயு முத்தம வீரா நாரணி
     உமையவ ளுத்தர பூர்வா காரணி
          உறுஜக ரக்ஷணி நீரா வாரணி ...... தருசேயே

உயர்வர முற்றிய கோவே யாரண
     மறைமுடி வித்தக தேவே காரண
          ஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள் ...பெருமாளே.


பதம் பிரித்தல்
  
வரும் மயில் ஒத்தவர், ஈவார் மாமுக
     மதி என வைத்தவர், தாவா காமிகள்,
          வரிசையின் முற்றிய வாகார் ஆம்,இயல் ...... மடமாதர்

மயலினில் உற்றவர், மோகா வாரிதி
     அதன்இடை புக்கு அவர் ஆளாய், நீள்நிதி
          மரு இயல் உத்தர்கள், மாடா மாமதி, ...... மிகமூழ்கி

தரு பர உத்தம! வேளே! சீர்உறை
     அறுமுக! நல்தவ! லீலா! கூர் உடை
          அயில் உறை கைத்தல! சீலா! பூரண! ...... பரயோக

சரவண! வெற்றி விநோதா! மாமணி
     தரும் அரவைக் கடி நீதா! ஆம் அணி
          மயில் உறை வித்த! உன் ஆதாராம் அணி ......பெறுவேனோ?

திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
     தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
          திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி ...... தொதிதீதோ

தெனவரி மத்தள மீதார் தே முழவு
     திடு என மிக்கு இயல் வேதாவே தொழு,
          திருநடம் இட்டவர் காதே மூடிய, ...... குருபோதம்

உரை செயும் உத்தம வீரா! நாரணி
     உமையவள் உத்தர பூர்வ ஆகார அணி
          உறு ஜகரட்சணி, நீர ஆவாரணி ...... தருசேயே!

உயர்வரம் முற்றிய கோவே! ஆரண
     மறைமுடி வித்தக! தேவே! காரண!
          ஒரு மயிலைப் பதி வாழ்வே தேவர்கள் ...பெருமாளே.


பதவுரை

         திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ என --- திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ என்ற தாள ஒத்துடன் பொருந்த

       மத்தளம் மீது ஆர் --- நிறைவுடன் மத்தளம் ஒலிக்கின்ற போது,

     தேம் முழ திடு என --- இனிமையான முழவு வாத்தியம் திடு திடு என முழங்,

      மிக்கு இயல் வேதாவே தொழு --- மிகுந்த தகுதியினை உடைய பிரமதேவர் தொழுது வணங்க,

     திருநடம் இட்டவர் காதே மூடிய --- திரு நடனம் புரிந்தவராகிய  சிவபெருமான் தமது திருச்செவிகளைப் பொத்தி இருந்து போது,

     குருபோதம் உரை செய்யும் உத்தம --- ஞானகுருநாதனாக எழுந்தருளி ஞானப் பொருளை உபதேசித்த மேலானவரே!

     வீரா --- வீரம் மிக்கவரே!

      நாரணி --- நாராயணரின் தங்கை

     உமையவள் --- உமாதேவியார்,

     உத்தர பூர்வ ஆகார --- வடக்கு, கிழக்கு (தெற்கு, மேற்கு) ஆகிய நான்கு திசைகளுக்கு ஆதாரமானவள்,

     அணி உறு ஜகரக்ஷணி --- பெருமை பொருந்திய உலகங்களைக் காப்பவள்,

     நீர ஆவாரணி தருசேயே --- திரோதான சத்தி என்னும் மறைப்பு ஆற்றலாக விளங்குபவள் தந்தருளிய குழந்தையே!

      உயர் வரம் முற்றிய கோவே --- மேலான வரங்களைத் தரும் தலைவரே!

     ஆரண மறைமுடி வித்தக --- வேத வேதாந்தங்களின் முடிவான ஞானப் பொருளே!

     தேவே --- தேவதேவரே!

     காரண --- மூலப் பொருள் ஆனவரே!

      ஒரு மயிலைப் பதி வாழ்வே --- ஒப்பற்ற திருமயிலாப்பூர் என்னும் திருத்தலத்தில் அடியவர்களின் வாழ்வாக எழுந்தருளி இருப்பவரே!

     தேவர்கள் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      வரும் மயில் ஒத்தவர் --- அசைந்து ஆடி வருகின்ற மயிலைப் போன்ற சாயலை உடையவர்கள்,

     ஈவார் மாமுக மதி என வைத்தவர் --- பொருள் ஈபவர்கள் வந்தால் முழு நிலவைப் போல முகத்தை வைத்துக் கொள்பவர்கள்,

     தாவா காமிகள் --- கொள்ளை ஆசைக்காரிகள்,

      வரிசையின் முற்றிய வாகு ஆர் ஆம் இயல் மடமாதர் --- ஒழுங்காக வளர்ந்துள்ள அழகிய தோள்கள் பொருந்திய தன்மை உள்ள இளமாதர்கள் மீது

      மயலினில் உற்று --- காம மயக்கம் கொண்டு,

     அவர் மோகா வாரிதி அதன் இடை புக்கு --- அவர்கள் தரும் மோக இன்பமாகிய கடலில் விழுந்து,

     அவர் ஆளாய் --- அவர்க்கு ஆட்பட்டு,

     நீள் நிதி மரு இயல் உத்தர்கள் --- பெரும் பொருளை விரும்புகின்ற பொருளாசைக்காரர்கள் ஆகிய அவர்,
        
     மாடா --- அருகில்,

     மாமதி மிக மூழ்கி ---  சிறந்த அறிவானது கெட்டுபோய், காம இருளில் மூழ்கிக் கிடப்பவன் அடியேன்.

      தருபர உத்தம --- திருவருளைத் தருகின்ற மேலானவரே!

     வேளே --- எல்லோராலும் விரும்பப்படுபவரே!

     சீர் உறை அறுமுக --- பெருமை வாய்ந்த ஆறுமுகப் பரம்பொருளே!

     நல் தவ லீலா --- நல்ல தவத்தைப் புரியும் அடியாருடன் அருள்விளையாடல்கள் புரிபவரே!

     கூர் உடை அயில் உறை கைத்தல --- கூர்மை பொருந்திய வேலாயுதத்தைத் திருக்கையில் தாங்கியவரே!

     சீலா --- அருட்குணம் உடையவரே!

     பூரண --- இளம்பூரணரே!

      பரயோக --- மேலான யோக மூர்த்தியே!

     சரவண --- சரவணப் பொய்கையில் அவதரித்தவரே!

     வெற்றி விநோதா --- அருள் வெற்றி பொருந்திய திருவிளையாடல்களைப் புரிபவரே!

     மாமணி தரும் அரவைக் கடி நீதா ஆம் அணிமயில் உறை வித்த --- உயர்ந்த மாணிக்கத்தைத் தருகின்ற பாம்புக்கு அச்சத்தை விளைகக்கின்ற மயில் மீது எழுந்தருளிய ஞானபண்டிதரே!

     உன் ஆதார ஆம் அணி பெறுவேனோ --- உனது பற்று என்னும் பெருமையை அடியேன் பெறுவேனோ?
  
பொழிப்புரை
  
         திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ என்ற தாள ஒத்துடன் பொருந்த, நிறைவுடன் மத்தளம் ஒலிக்கின்ற போது, இனிமையான முழவு வாத்தியம் திடு திடு என முழங், மிகுந்த தகுதியினை உடைய பிரமதேவர் தொழுது வணங்க, திரு நடனம் புரிந்தவராகிய சிவபெருமான் தமது திருச்செவிகளை பொத்தி இருந்து போது, ஞானகுருநாதனாக எழுந்தருளி ஞானப் பொருளை உபதேசித்த மேலானவரே!

     வீரம் மிக்கவரே!

      நாராயணரின் தங்கை; உமாதேவியார்; வடக்கு, கிழக்கு (தெற்கு, மேற்கு) ஆகிய நான்கு திசைகளுக்கு ஆதாரமானவள்; பெருமை பொருந்திய உலகங்களைக் காப்பவள்; திரோதான சத்தி என்னும் மறைப்பு ஆற்றலாக விளங்குபவள் தந்தருளிய குழந்தையே!

      மேலான வரங்களைத் தரும் தலைவரே!

     வேத வேதாந்தங்களின் முடிவான ஞானப் பொருளே!

     தேவதேவரே!

     மூலப் பொருள் ஆனவரே!

     ஒப்பற்ற திருமயிலாப்பூர் என்னும் திருத்தலத்தில் அடியவர்களின் வாழ்வாக எழுந்தருளி இருப்பவரே!

     தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

       அசைந்து ஆடி வருகின்ற மயிலைப் போன்ற சாயலை உடையவர்கள். பொருள் ஈபவர்கள் வந்தால் முழு நிலவைப் பொல முகத்தை வைத்துக் கொள்பவர்கள். கொள்ளை ஆசைக்காரிகள். ஒழுங்காக வளர்ந்துள்ள அழகிய தோள்கள் பொருந்திய தன்மை உள்ள இளம் விலைமாதர்கள் மீது காம மயக்கம் கொண்டு, அவர்கள் தரும் மோக இன்பமாகிய கடலில் விழுந்து, அவர்க்கு ஆட்பட்டு, பெரும் பொருளை விரும்புகின்ற பொருளாசைக்காரர்கள் ஆகிய அவர்கள் அருகில் சிறந்த அறிவானது கெட்டுபோய், காம இருளில் மூழ்கிக் கிடப்பவன் அடியேன்.

      திருவருளைத் தருகின்ற மேலானவரே!

     எல்லோராலும் விரும்பப்படுபவரே!

     பெருமை வாய்ந்த ஆறுமுகப் பரம்பொருளே!

     நல்ல தவத்தைப் புரியும் அடியாருடன் அருள்விளையாடல்கள் புரிபவரே!

     கூர்மை பொருந்திய வேலாயுதத்தைத் திருக்கையில் தாங்கியவரே!

     அருட்குணம் உடையவரே!

     இளம்பூரணரே!

      மேலான யோக மூர்த்தியே!

     சரவணப் பொய்கையில் அவதரித்தவரே!

     அருள் வெற்றி பொருந்திய திருவிளையாடல்களைப் புரிபவரே!

     உயர்ந்த மாணிக்கத்தைத் தருகின்ற பாம்புக்கு அச்சத்தை விளைகக்கின்ற மயில் மீது எழுந்தருளிய ஞானபண்டிதரே!

     உமது பற்று என்னும் பெருமையை அடியேன் பெறுவேனோ?


விரிவுரை


வரும் மயில் ஒத்தவர் ---

அசைந்து ஆடி வருகின்ற மயிலைப் போன்ற சாயலை உடையவர்கள் பெண்கள்.  இயல்பாக அப்படி இல்லையாயினும், செயற்கையாக நடந்து வந்து மயக்குபவர்கள் விலைமாதர்கள்.


ஈவார் மாமுக மதி என வைத்தவர் ---

பொருள் தருபவர்கள் நேர்ப்பட்டபோது முழு நிலவைப் போல முகத்தை மலர்த்தி அவர்களை எதிர்கொள்ளும் சாகசத்தைப் புரிபவர்கள்.

தாவா காமிகள் ---

தாவா --- குறையாத, கெடுதல் இல்லாத,

என்றும் குறையாத ஆசை உடையவர்கள் விலைமாதர்கள். எப்படி எல்லாம் ஆடவரை மயக்க முடியுமோ அப்படி எல்லாம் மயக்குவதில் வல்லவர்கள்.

வரிசையின் முற்றிய வாகு ஆர் ஆம் இயல் மடமாதர் ---

ஒழுங்காக வளர்ந்துள்ள வாகான தோள்கள் பொருந்திய தன்மை உள்ள இளமாதர்கள்  விலைமாதர்கள்.

நீள் நிதி மரு இயல் உத்தர்கள் ---

மருவுதல் - விரும்புதல். பெரும் பொருளை விரும்புகின்ற பொருளாசைக்காரர்கள்.

நிதியை மருவி, அதனை உடைய ஆதவரை மருவுகின்றவர்கள். "மருவு பெண்ணாசை" என்றார் வள்ளல்பெருமான். மருவுகின்ற பெண்களின் ஆசை.

மயலினில் உற்று, அவர் மோகா வாரிதி அதன் இடைபுக்கு, அவர் ஆளாய் ---

மோகம் - ஆசை, காம மயக்கம், மாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி, மன மயக்கம்.

வாரிதி - கடல்.

ஐம்புலன்களின் வழியே சென்று இன்பத்தை அனுபவிக்க ஆசை கொண்டு, அதிலேயே மனம் மயக்கம் கொள்ளுவது. ஐம்புலன்கள் உயிரில்லாத அஃறிணைப் பொருள்கள். என்றாலும், உயிர் அவைகளுடன் தொடர்பு கொண்டு, அவை தம்மினும் வேறு என்று உணராது, அவைகளைத் தன்னுடன் கூட்டி மயங்கி, அவைகட்கு உட்பட்டு இருக்கும் நிலையை மிகவும் விரும்பும். புலன்களின் வழியே செல்வதால், உயிருக்கு மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூவாசைகளும் உண்டாகின்றன. பொருள் அல்லாதவற்றைப் பொருள் என்றும்,, நிலையில்லாதவற்றை நிலையின என்றும் உணர்ந்து ஆன்ம அறிவு மயங்கி அழிகின்றது.

மோகக் கடலில் முழுகிக் கிடப்பதால் துன்பக் கடலிலே அது கிடந்து துடிக்கின்றது. அதை விட்டுக் கரை ஏறும் வழி தெரியாமல் தவிக்கின்றது.

ஆசை உள்ளம் படைத்தவன் விலங்கு.
அன்பு உள்ளம் படைத்தவன் மனிதன்.
அருள் எள்ளம் படைத்தவன் தேவன்.

ஆசைக் கடலில் அகப்பட்டு, விலங்குத் தன்மையை அடைந்து, மனிதன் கேட்டினை அடைகின்றான். ஆசைக் கடலில் அகப்பட்டு, அருள் அற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லல் படுகின்றது.  துன்பக் கடலில், தோணியாகிய பிறவியில் இங்கும் அங்குமாக உழன்று, முத்தியாகிய கரையை ஏற வழி அறியாமல் தியங்குகின்றது.

மூவாசைகளில், மண்ணாசை,பொன்னாசை என்னும் இரண்டும் மனிதப் பிறவி வந்த பின் உண்டாகின்றது. ஆனால், பெண்ணாசையானது பிறவிகள்தோறும் தொடர்ந்து வருவது. அதை எளிதில் ஒழிக்க முடியாது. அதனால் திருமால், பிரமன், இந்திரன் முதலியோரும் பட்டபாடு யாவரும் அறிந்ததே.
  
தாது மாமலர் முடியாலே, பத-
     றாத நூபுர அடியாலே, கர
          தாளம் ஆகிய நொடியாலே, மடி ...... பிடியாலே,
சாடை பேசிய வகையாலே, மிகு
     வாடை பூசிய நகையாலே, பல
          தாறு மாறுசொல் மிகையாலே, அன ...... நடையாலே,

மோதி மீறிய முலையாலே, முலை
     மீதில் ஏறிய கலையாலே, வெகு
          மோடி நாணய விலையாலே, மயல் ...... தருமானார்
மோக வாரிதி தனிலே நாள்தொறும்
     மூழ்குவேன், னது அடியார் ஆகிய
          மோன ஞானிகள் உடனே சேரவும் ...... அருள்வாயே.     --- திருப்புகழ்.

மாடா ---

மாடு - அருகு. விலைமாதர்களின் உறவை விட மனம் இல்லாமல், இரவும் பகலும் அவர் அருகிலேயே இருப்பர் ஆடவர்.

"கடி உலவு பாயில் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிது ஆய கயவன், அறிவீனன்" என்றர் பிறிதொரு திருப்புகழில்.

மாமதி மிக மூழ்கி ---  

விலைமாதர் மீது வைத்த ஆசையால் சிறந்த அறிவானது கெட்டுபோய், காம இருளில் மூழ்கிக் கிடக்கும் நிலை வரும்.

உன் ஆதார ஆம் அணி பெறுவேனோ ---

ஆதாரம் - பற்றுக்கோடு.  அணி - பெருமை.

மாதர் மயல் பற்றில் விழுந்து அழுந்தி அழிவதை விடுத்து, இறைவனது திருவடிப் பற்றைப் பற்றி அருளைப் பெற்று உய்யவேண்டும். இறைவனைப் பற்றுக்கோடாகப் பற்றுவதே உயிர்க்குப் பெருமை தருவது ஆகும்.

பற்றி விடாஅ இடும்பைகள், பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

யான் என்னும் அகப்பற்று ஆகிய அகங்காரம், எனது என்னும் புறப்பற்று ஆகிய மமகாரம். இந்த இருவகைப் பற்றுக்களும் நீங்கிய நிலையே பிறவியைப் போக்கும். பற்றுக்களை நீக்காத நிலையில், வாழ்க்கையில் உண்டாகும் பிறப்பு இறப்புக்கள் ஆகிய நிலையாமையே காணப்படும்.      

பற்றுக பற்று அற்றான் பற்றினை, அப் பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

மலப் பற்றுக்களை இயல்பாகவே நீங்கி விளங்குவோனைப் பற்றுக்கோடாக அன்பு என்னும் உயிர் அறிவால் பிடித்துக் கொள்க. அவனது அருள் அறிவை, அவன் வழங்கும் அருள் உணர்வாலே ஏன் பற்றிக் கொள்ள வேண்டும் என்றால், உலகப் பற்றுக்களாகிய யான் எனது என்னும் அகங்கார மமகாரங்களில் இருந்து விடுபடுவதற்கு.

என்றார் திருவள்ளுவ நாயனார்.

பாடுவார்இசை பல்பொருள் பயன் உகந்து அன்பால்
கூடுவார் துணைக் கொண்ட தம் பற்று அறப் பற்றித்
தேடுவார் பொருள் ஆனவன் செறிபொழில் தேவூர்
ஆடுவான் அடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.   --- திருஞானசம்பந்தர்.

இசைபாடுபவர்களுக்கும், பல்பொருள் பயனாக அவன் இருத்தலை அறிந்து உணர்ந்து அன்பால் அவன் திருவடி உணர்வில் கூடுவார்களுக்கும், உலகில் துணையாகக் கொண்டுள்ளவர்கள் மேல் செலுத்தும் பற்றுக்களை விட்டு, அவனையே பற்றித் தேடுவார்களுக்கும் பற்றவேண்டிய பொருளாய் இருப்பவனும், செறிந்த பொழில்களை உடைய தேவூரில் திருநடனம் புரிபவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளை அடைந்தோம். ஏனவே, அல்லல்கள் இல்லாதவர் ஆனோம்.

புற்றானை, புற்றுஅரவம் அரையின் மிசைச்
சுற்றானை, தொண்டு செய்வார் அவர்தம்மொடும்
அற்றானை, அந்தணர் காழி அமர்கோயில்
பற்றானைப் பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே.      --- திருஞானசம்பந்தர்.

புற்று வடிவானவனை. புற்றில் வாழும் பாம்பினைத் தனது அரையின் மீது சுற்றியவனை. தனக்குத் தொண்டு செய்பவர்களோடு தன் எளிவந்து பழகி அருள்பவனை. அந்தணர்கள் நிறைந்த சீகாழிப்பதி மீது பற்று உடையவனைப் பற்றி நிற்பவர்களுக்குப் பாவம் இல்லை.
  
பற்று அற்றார்சேர் பழம்பதியை, பாசூர் நிலாய பவளத்தை,
சிற்றம்பலத்து எம் திகழ்கனியை, தீண்டற்குஅரிய திருவுருவை,
வெற்றியூரில் விரிசுடரை,  விமலர் கோனை, திரைசூழ்ந்த
ஒற்றியூர்எம் உத்தமனை உள்ளத்து உள்ளே வைத்தேனே. --- அப்பர்.

உலகப் பற்று அற்றவர்கள் சேரும் பழைய திருத்தலங்களில் திகழ்பவன். பாசூரில் உறையும் பவளம் போல் திருமேனியன். திருச்சிற்றம்பலத்தில் கற்றவர் விழுங்கும் கனியாக உள்ளவன். தீண்டுதலுக்கு அரிய திருஉருவம் உடையவன். வெற்றியூரில் விரிந்த ஒளியாக உள்ளவன். தூயவர்கள் தலைவன். ஒருபுறம் கடலால் சூழப்பட்டுள்ள திரு ஒற்றியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமானாகிய அவனை அடியேன் உள்ளத்தில் நிலையாக இருத்தி வைத்தேன்.


பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்;
பரகதிக்குச் செல்வது ஒரு பரிசு வேண்டில்;
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்;
சொல்லுகேன் கேள், நெஞ்சே! துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும்;
உன்னை அல்லால் ஒருதெய்வம் உள்கேன் என்றும்;
புற்று அரவக்கச்சு ஆர்த்த புனிதா! என்றும்;
பொழில் ஆரூரா என்று என்றே போற்றா நில்லே. --- அப்பர்.

நெஞ்சே ! நான் சொல்வதனைக் கேட்பாயாக. உன்னைப் பற்றி நிற்கும் பாவங்களை அழிக்க வேண்டினால், மேம்பட்ட வழிக்குச் செல்ல வேண்டும் தன்மையை விரும்பினால், உன்னைச் சுற்றி நிற்கும் வினைகளைப் போக்க நீ விரும்பினால், சும்மா இராமல் நான் சொல்வதைக் கேள். எனக்கு உறவினரும் துணையும் நீயே.உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நான் பரம்பொருளாக நினையேன். புற்றில் வாழும் பாம்பினை அரையிலே கச்சாக அணிந்த தூயோனே! சோலைகள் சூழ்ந்த ஆரூரனே! என்று எம் பெருமானைப் பலகாலும் துதிப்பாயாக.


கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்,
கண்அப்ப விண்அப்புக் கொடுத்தான் கண்டாய்,
படிமலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்,
பற்றுஅற்றார் பற்றுஅவனாய் நின்றான் கண்டாய்,
அடிமலிந்த சிலம்புஅலம்பத் திரிவான் கண்டாய்,
அமரர்கணம் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்,
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்,
கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே.      --- அப்பர்.

திருக்கோடிகாவில் விரும்பி உறையும் அழகனே மணம் கமழும் கொன்றை மலரை அணிந்து விளங்கும் சடையினை உடையவன் ஆவான். கண்ணை அப்பிய கண்ணப்பரின் அரும் செயலுக்கு, விண்ணுலகைப் பொருந்துதலை ஈடாகக் கொடுத்தவன் ஆவான். உலகில் நிறைந்த பல பிறவிகளிலும் அடியேன் பிறத்தலை அறுப்பாவன் ஆவான்.  பற்றுக்கள் அற்று நின்ற அடியார்களுக்குப் பற்றுக்கோடாய் நின்றவன். திருவடிகளில் தங்கிய சிலம்பு மிக்கு ஒலிப்பத் திரிபவன். தேவர் கூட்டம் வணங்கிப் பரவும் தலைவன். மிகுதியான கொடிகள் கட்டப்பட்ட மதில்களை உடைய தில்லையம்பதியில் கூத்தனாய் விளங்குபவன் ஆவான்.


பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான்,
கொற்றக் குதிரையின்மேல் வந்து அருளித் தன்அடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல்புகழே
பற்றி இப் பாசத்தைப் பற்று அற, நாம் பற்றுவான்
பற்றிய பேரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். --- திருவாசகம்.

தனது அடியார்களுக்கு அல்லாமல், தனது தன்மையை யாராலும் அளவிட முடியாத நிலையில் விளங்கும் தலைவன் திருப்பெருந்துறையில் எழுந்தருளி விளங்குபவன். வெற்றி பொருந்திய குதிரையின் மேல் எழுந்தருளி வந்து, தனது அடியார்களிடத்து உள்ள குற்றங்களை ஒழித்து, குணங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களைச் சீராட்டி, அவர்களைச் சுற்றி உள்ள சுற்றத்தவர்கள் தொடர்பை அறுப்பவன். சிவபெருமானது புகழையே பற்றி, நாம் கொண்டுள்ள பற்றுக்கள் பற்று அறக் கெடும்படி, நாம் பற்றிய பேரின்பத்தைப் புகழ்ந்து பாடி இன்பம் அடைவோமாக.

 
பற்றுஆங்கு அவை அற்றீர், பற்றும் பற்று ஆங்கு அது பற்றி
நல்தாம் கதி அடைவோம் ஏனில், கெடுவீர் ஓடி வம்மின்
தெற்றார் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கு அவன் கழல் பேணினரொடும் கூடுமின் கலந்தே. ---  திருவாசகம்.

உலகப் பற்றுக்களாகிய யான் எனது என்னும் பற்றுக்களை விட்டு, இறைவனைப் பற்றுகின்றததையே பற்றாகக் கொண்டு, அதனைப் பிடித்து நல்ல கதியை அடைய விரும்பினால், ஓடி வாருங்கள். பின்னப்பட்ட சடையினை உடையவனும் நிலை பெற்ற திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனுமாகிய எம்பெருமானது, புகழைக் கற்ற நெறியிலே நின்று, அவனது திருவடியை விரும்பினவராகிய அடியவர்களோடு, கலந்து இருப்பீர்களாக.

அப்பொன் பதியின் இடை வேளாண்
     குலத்தை விளக்க அவதரித்தார்;    
செப்பற்கு அரிய பெருஞ்சீர்த்திச்
     சிவனார் செய்ய கழல் பற்றி
எப்பற்றினையும் அற எறிவார்.
     எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார்,
     எம்பிரானார் விறன்மிணடர்.          ---  பெரியபுராணம்.


கடத்தைப் பற்று எனப்பற்றி, கருத்து உற்றுக் களித்திட்டு,
     கயற்கண் பொற்பு இணைச் சித்ரத் ...... தனமாதர்
கலைக்குள் பட்டு, றக்கத்திச் சலித்துக் கட்டளைச் சொல்,பொய்த்
     திரைக்குள் பட்டு, றச் செத்திட்டு ...... உயிர்போனால்,

எடுத்துக்கொட்டி இடக் கட்டைப் படத் தெட்டத் தணல் தட்டக்
     கொளுத்தி, சுற்று அவர், பற்று அற்று ...... அவர்போம் முன்,
இணக்கிப் பத்திமைச் செச்சைப் பதத்தைப் பற்றுகைக்கு, சொல்
     தமிழ்க் கொற்றப் புகழ் செப்பித் ...... திரிவேனோ?      --- திருப்புகழ்.

பல்லாயிரங்கோடி பற்றுக்களைக் கொண்ட மனம், அப் பற்றுக்களில் இருந்து மீள வேண்டுமாயின், பற்றற்ற பரமனைப் பற்றி நிற்க வேண்டும். பரமனைப் பற்றினால் ஏனைய பற்றுக்கள் தாமே விலகிவிடும்.

விளக்கு ஏற்றினால் இருள் தானே விலகிவிடும்.

பற்றுக்கள் அஞ்ஞானத்தால் வருகின்றன. ஞானமே முருகன் திருவடி. "ஞானக் கழலோனே" என்கின்றார் அடிகளார்.  ஆதலால், திருவடியாகிய ஞானத்தைப் பற்றினால், அஞ்ஞானத்தால் வரும் பற்றுக்களும், நெருப்பில் பட்ட பஞ்சு போல் தாமே தீய்ந்து போய்விடும்.
  
மத்தளம் மீது ஆர், தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு திருநடம் இட்டவர் ---

சிவபெருமான் திருநடனம் புரிகின்ற போது திருமால் மத்தளம் கொட்டுவார். பிரமன் தாளம் போடுவார். திருநந்தி தேவர் முழவம் வாசிப்பார். வாணன் குடமுழவு வாசிப்பான்.

சந்தும் அகிலும் தழைப் பீலிகளும் சாதி பலவுங்கொண்டு
உந்தி இழியும் நிவவின் கரைமேல், உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப்பரிய தெய்வப் பதியுள் சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே.         --- திருவிசைப்பா.

துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,
    உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
    தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
    தமருகம், குடமுழா, மொந்தை வாசித்து
அத்தனை விரவினோடு ஆடும் எங்கள்
    அப்பன் இடம் திரு ஆலங்காடே. --- பதினோராம் திருமுறை.
  
திருநடம் இட்டவர் காதே மூடிய குருபோதம் உரை செய்யும் உத்தம ---

திரு நடனம் புரிந்தவராகிய சிவபெருமான் தமது திருச்செவிகளை பொத்தி இருந்து கேட்க, ஞானகுருநாதனாக எழுந்தருளி ஞானப் பொருளை உபதேசித்தவர் முருகப் பெருமான்.

உபதேசம் பெறும்போது காதை மடக்கிப் பொத்திக் கவனமாய்க் கேட்கவேண்டும்.

போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப்
         பொழில்கொள் ஆல் நிழல் கீழ்அறம் புரிந்து,
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து
         அருளினாய், பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்து இழியும் புனல் கங்கை
         நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த
தீர்த்தனே! நின்தன் திருவடி அடைந்தேன்,
         செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.  ---  சுந்தரர்.

நீர ஆவாரணி  ---

ஆவாரணம் - மறைப்பு.  திரோதான சத்தியைக் குறித்தது.

திரோதான சத்தி என்னும் மறைப்பு ஆற்றலாக விளங்குபவள் உமாதேவி.

கருத்துரை

முருகா! விலைமாதர் மீது பற்று வைத்து அழியாமல், உமது திருவருளில் பற்று வைத்து, அழியாத பதத்தைப் பெற அருள்.


No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...