திருவலிதாயம் - 0696. மருமல்லி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மருமல்லி ஆர் (திருவலிதாயம்)

முருகா!
உனது திருவடி ஞானத்தைப் பெ,
அடியார்களுக்கு உள்ள அன்பு மனத்தை
அடியேனுக்கு அருள்வாயாக.


தனதய்ய தானதன ...... தனதான


மருமல்லி யார்குழலின் ...... மடமாதர்

மருளுள்ளி நாயடிய ...... னலையாமல்

இருநல்ல வாகுமுன ...... தடிபேண

இனவல்ல மானமன ...... தருளாயோ

கருநெல்லி மேனியரி ...... மருகோனே

கனவள்ளி யார்கணவ ...... முருகேசா

திருவல்லி தாயமதி ...... லுறைவோனே

திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.

   
பதம் பிரித்தல்


மருமல்லி யார்குழலின் ...... மடமாதர்

மருள் உள்ளி நாய் அடியன் ...... அலையாமல்,

இருநல்ல ஆகும் உனது ...... அடிபேண,

இன வல்லம் ஆன மனது ...... அருளாயோ?

கருநெல்லி மேனி அரி ...... மருகோனே!

கன வள்ளியார் கணவ ...... முருகஈசா!

திருவல்லிதாயம் அதில் ...... உறைவோனே!

திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.


பதவுரை

      கருநெல்லி மேனி அரி மருகோனே --- கருநெல்லிக்காய் போலப் பச்சையும் கருப்பும் கலந்த திருமேனி நிறத்தோடு கூடிய திருமாலின் திருமருகரே!

      கன வள்ளியார் கணவ --- பெருமை வாய்ந்த வள்ளிநாயகியாரின் மணாளரே!

     முருக ஈசா --- முருகக் கடவுளே!

      திருவல்லிதாயம் அதில் உறைவோனே --- திருவலிதாயம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே!

      திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே --- சிறப்பு விளங்குகின்ற பெருந்தவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      மருமல்லி ஆர் குழலின் மடமாதர் --- நறுமணம் வீசும் மல்லிகை மலர்கள் நிறைந்த கூந்தலையுடைய இளம் பெண்கள் மீது உண்டான,

      மருள் உள்ளி --- காம மயக்கத்தால் அறிவு மயக்கம் கொண்டு,

     நாய் அடியன் அலையாமல் --- அடிநாயேன் அலைவுறாமல்,

      இரு நல்ல ஆகும் உனது அடி பேண --- அபரஞானம், பரஞானம் என்னும் இரண்டையும் அருளும் தேவரீரது திருவடிகளை விரும்பி வழிபட,

      இனவல்ல மான மனது அருளாயோ --- அடியார்கள் போற்றுகின்ற அன்புள்ள மனத்தை அடியேனுக்கு அருள்வாயாக.


பொழிப்புரை


         கருநெல்லிக்காய் போலப் பச்சையும் கருப்பும் கலந்த திருமேனி நிறத்தோடு கூடிய திருமாலின் திருமருகரே!

         பெருமை வாய்ந்த வள்ளிநாயகியாரின் மணாளரே!

     முருகக் கடவுளே!

         திருவலிதாயம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே!

         சிறப்பு விளங்குகின்ற பெருந்தவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

         நறுமணம் வீசும் மல்லிகை மலர்கள் நிறைந்த கூந்தலையுடைய இளம் பெண்கள் மீது உண்டான காம மயக்கத்தால் அறிவு மயக்கம் கொண்டு, அடிநாயேன் அலைவுறாமல், அபரஞானம், பரஞானம் என்னும் இரண்டையும் அருளும் தேவரீரது திருவடிகளை விரும்பி வழிபட, அடியார்கள் போற்றுகின்ற அன்புள்ள மனத்தை அடியேனுக்கு அருள்வாயாக.

விரிவுரை


         சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் பகுதியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. தற்போது வல்லீசுவரர் திருக்கோயில் என்று வழங்கப்படுகின்றது. சென்னை - ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைச் சாலையில் சென்றால் திருக்கோயிலை அடையலாம். திருஞானசம்பந்தப் பெருமானாரின் திருப்பதிகம் பெற்ற பெருமையை உடையது.

கனம் என்னும் சொல் பெருமை பொருந்திய என்னும் பொருளில் வந்தது.

இனம் என்னும் சொல்லுக்கு வகை, திறன், சுற்றம், சாதி, கூட்டம், திரள் என்று பொருள் வழங்கப்படும். இங்கு, அடியார் திருக்கூட்டத்தைக் குறித்து நின்றது.

மானம் என்னும் சொல்லுக்கு, மதிப்பு, பெருமை, அன்பு, பற்று, வலிமை என்று பொருள் வழங்கப்படும்.  இங்கு, அன்பு என்னும் பொருளில் வந்தது.

"இனமானவை அறியேனே" என்று "அணிசெவ்வி" எனத் தொடங்கும் வடதிருமுல்லைவாயில் திருப்பதிகத்தில் அடிகளார் அருளி இருப்பதை இங்கு வைத்து எண்ணுக.

அபரஞானம் --- உலகியல் அறிவு.

பரஞானம் --- அருளியல் தெளிவு.

இரண்டையும் அருள்வது இறைவனுடைய திருவடிகள்.

கருத்துரை

முருகா! உனது திருவடி ஞானத்தைப் பெ, அடியார்களுக்கு உள்ள அன்பு மனத்தை அடியேனுக்கு அருள்வாயாக.

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...