திருஅரதைப்
பெரும்பாழி
(அரித்துவாரமங்கலம்)
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
மக்கள் வழக்கில் அரித்துவாரமங்கலம் என்று அழைக்கப்படுகின்றது.
கும்பகோணம் - அம்மாபேட்டை சாலை வழியில்
உள்ள திருஅவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கின்றது.
தஞ்சாவூரில் இருந்தும் கும்பகோணத்தில் இருந்தும்
நகரப் பேருந்துகள் இத்திருத்தலத்திற்கு உள்ளன.
கும்பகோணத்திலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவர்
: பாதாள வரதர், பாதாளேசுவரர்
இறைவியார்
: அலங்காரவல்லி
தலமரம் : வன்னி
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - பைத்த
பாம்போடு.
பிரம்மாவுக்கும் திருமாலுக்கும்
தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது திருப்பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில்
தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. பிரமன்
அன்னப் பறவையின் வடிவை எடுத்துக் கொண்டு திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால்
திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே
வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியை தரிசித்ததாக
பொய் கூறும்படி சொன்னார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதையறிந்த சிவன் தாழம்பூவை
பூசைக்குப் பயன்படுத்தக்கூடாது என்றும், பிரமனுக்கு
பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார்.
அடிமுடி
காண்பார் அயன்மால் இருவர்
படி
கண்டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி,
அடி
கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,
முடிகண்டேன்
என்று அயன் பொய் மொழிந்தானே.
என்னும்
திருமூலர் வாக்கால் இதனை அறிக.
திருமால்
வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க
முயன்றார். முடியாமல் போக, திருமால் தன்
தோல்வியை ஒப்புக்கொண்டார். திருமால்
இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார் என்று
தலபுராணம் கூறுகிறது. எனவே தான் இத்தலம் அரித்துவாரமங்கலம் ஆனது. சிவனின் திருவடி
தரிசனம் காண திருமால் பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலத்தானத்தில் உள்ளது. இதை
கல்வைத்து மூடியுள்ளார்கள். கோயில் சிவாச்சாரியாரிடம் கேட்டால் அவர் காண்பிப்பார்.
தேவாரப்
பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே
காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில்
புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக்
கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச்
சொல்வதானால்
1. திருக்கருகாவூர்
(முல்லைவனம்) - விடியற்கால வழிபாட்டிற்குரியது.
2. அவளிவநல்லூர் (பாதிரி
வனம்) - காலை வழிபாட்டிற்குரியது.
3. அரதைப் பெரும்பாழி
(ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால
வழிபாட்டிற்கு உகந்தது.
4. ஆலங்குடி (திரு
இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
5. திருக்கொள்ளம்புதூர்
(வில்வவனம்) - அர்த்தஜாம வழிபாட்டிற்குரியது.
கிழக்கு
நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. வெளிப் பிரகாரத்தில்
விநாயகர், பதஞ்சலி
வியாக்ரபாதருடன் நடராஜர், காசி விசுவநாதர், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர், சம்பந்தர், சுந்தரர், லிங்கோத்பவர், சத்தமாதர்கள் உள்ளனர். மூலவர் சுயம்பு
லிங்க மூர்த்தி வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் பன்றியின்
(வராகத்தின்) கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு
கூறுகிறது. சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். அம்மன் துர்க்கை அம்சமாக
இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. அம்பாள் நின்ற
திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில்
உள்ளது.
சிவனே
நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை
தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை
தரிசித்தால் "ஹரித்துவார்" தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள
ஈசுவரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும்.
வள்ளல்
பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "விரும்பும் விரதப் பெரும்பாழி விண்ணவர்கள் ஏத்தும்
அரதைப் பெரும்பாழி ஆர்ந்தோய்" என்று போற்றி உள்ளார்.
காலை
6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 403
பாடும்
அரதைப்பெரும் பாழியே முதலாக,
சேடர்பயில்
திருச்சேறை, திருநாலூர், குடவாயில்,
நாடியசீர்
நறையூர்தென் திருப்புத்தூர் நயந்துஇறைஞ்சி,
நீடுதமிழ்த்
தொடைபுனைந்துஅந் நெடுநகரில் இனிது அமர்ந்தார்.
பொழிப்புரை : போற்றப் பெறுகின்ற `அரதைப் பெரும்பாழி' முதலாக அறிவுடையவர்கள் வாழ்கின்ற `திருச்சேறையும்', `திருநாலூரும்', `திருக்குடவாயிலும்', சிறப்புகள் பலவும் தாமே நாடி
வருதற்குரிய `திருநறையூரும்', `தென்திருப்புத்தூரும்' ஆகிய இப்பதிகளை விருப்புடன் வழிபட்டு, நீண்ட தமிழ் மாலைகளைப் பாடி, அத்தென் திருப்புத்தூரில் இனிதே
வீற்றிருந்தார் பிள்ளையார்.
குறிப்புரை : இப்பதிகளில் அருளிய
பதிகங்கள்:
பதியின்
பெயர் பாட்டுமுதற்குறிப்பு பண்
அரதைப்பெரும்பாழி
- பைத்தபாம்போடு கொல்லி - தி.3 ப.30
திருச்சேறை
-
முறியுறு சாதாரி - தி.3 ப.86
திருநாலூர்மயானம்
- பாலூரும் சீகாமரம் - தி.2 ப.46
திருக்குடவாயில்
1.திகழுந்திருமாலொடு இந்தளம் - தி.2 ப.22 2.கலைவாழும் காந்தாரம் - தி.2 ப.58
திருநறையூர்ச்
சித்தீச்சரம்
1.ஊருலாவு - தக்கராகம் - தி.1 ப.29 2.பிறைகொள்சடையர்
- தக்கேசி - தி.1 ப.71
3.நேரியனாகும் -
பியந்தைக்காந்தாரம் - தி.2 ப.87
தென்
திருப்புத்தூர் - மின்னும் சடைமேல் -
காந்தாரம் - தி.2 ப.63
திருஅரதைப்பெரும்பாழி
இதுபொழுது அரித்துவாரமங்கலம் என வழங்கப்பெறுகிறது.
திருநாலூர்மயானம், திருநாலூர் எனவும், நாலூர் மயானம் எனவும் இரு
பதிகளாகவுள்ளன. இப்பதிகம் நாலூர் மயானத்திற்குரிய பதிகமாகும். குடவாயில், குடவாசல் என வழங்கப்படுகிறது.
திருநறையூர் - பதியின் பெயர். சித்தீச்சரம் - திருக்கோயிலின் பெயர்.
தென்திருப்புத்தூர், அரிசில்கரைப்புத்தூர்
என வழங்கப்பெறுகிறது.
திருஞானசம்பந்தர்
திருப்பதிகம்
3. 030 திருஅரதைப் பெரும்பாழி பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பைத்த
பாம்போடு, அரைக் கோவணம், பாய்புலி,
மொய்த்த
பேய்கள் முழக்கம் முது காட்டுஇடை
நித்தமாகந்
நடம் ஆடி வெண்ணீறு அணி
பித்தர்
கோயில் அரதைப்பெரும் பாழியே.
பொழிப்புரை :இடுப்பில்
படத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, கோவணமும்
புலித்தோலும் அணிந்து , பூதகணங்கள் சூழ்ந்து, முழங்கச் சுடுகாட்டில் நிலைபெற்ற நடனம்
ஆடி , திருவெண்ணீறு அணிந்த
பித்தரான சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே ஆகும் .
பாடல்
எண் : 2
கயல
சேல கரும் கண்ணியர் நாள்தொறும்
பயலை
கொள்ளப் பலி தேர்ந்து உழல் பான்மையார்,
இயலை
வானோர் நினைந்தோர்களுக்கு எண்அரும்
பெயரர்
கோயில் அரதைப்பெரும் பாழியே.
பொழிப்புரை :கயல்மீன் போன்றும் , சேல் மீன் போன்றும் அழகிய கருநிறக்
கண்களையுடைய மகளிர் நாள்தோறும் பசலை நோய் கொள்ளுமாறு அழகிய தோற்றத்துடன் பலியேற்று
உழலும் தன்மை யுடையவர் சிவபெருமான் . அவருடைய தன்மைகள் வானவர்களும் , அடியவர்களும் எண்ணுதற்கு அரிய . பல
திருப்பெயர்களைக் கொண்டு விளங்கும் அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப்
பெரும்பாழியே .
பாடல்
எண் : 3
கோடல்
சாலவ் வுடையார், கொலை யானையின்
மூடல்
சாலவ் வுடையார், முளி கான்இடை
ஆடல்
சாலவ் வுடையார், அழகு ஆகிய
பீடர்
கோயில் அரதைப்பெரும் பாழியே.
பொழிப்புரை :அடியவர்களின்
வேண்டுதல்களை ஏற்று இறைவர் அருள்புரிபவர் . கொல்லும் தன்மையுடைய யானையின் தோலை
உரித்துப் போர்த்துக் கொண்டவர் . அருவருக்கத்தக்க சுடுகாட்டில் நடனம் புரிபவர் .
அழகிய பெருமையுடைய அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே .
பாடல்
எண் : 4
மண்ணர், நீரார், அழலார், மலி காலினார்,
விண்ணர், வேதம் விரித்து
ஓதுவார், மெய்ப்பொருள்
பண்ணர், பாடல் உடையார், ஒரு பாகமும்
பெண்ணர், கோயில் அரதைப்பெரும்
பாழியே.
பொழிப்புரை :நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என்ற ஐம்பூதங்களாக விளங்குபவர் இறைவர்
. வேதத்தின் உண்மைப் பொருளை விரித்து ஓதுபவர் . மெய்ப்பொருளாகியவர் . பண்ணோடு
கூடிய பாடலில் விளங்குபவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு
விளங்குபவர் . அப்பெருமானார் கோயில் கொண்டருளுவது திருஅரதைப்பெரும்பாழியே .
பாடல்
எண் : 5
மறையர்
வாயின் மொழி, மானொடு வெண்மழுக்
கறை
கொள் சூலம் உடைக் கையர்,கார் ஆர்தரும்
நறைகொள்
கொன்றை நயந்தார், தரும் சென்னிமேல்
பிறையர், கோயில் அரதைப் பெரும்
பாழியே.
பொழிப்புரை :சிவபெருமான் வேதங்களை
அருளிச்செய்தவர், மானும், வெண்மழுவும், சூலமும் ஏந்திய கையர். கார் காலத்தில்
மலரும் தேன் துளிக்கும் நறுமணமுடைய கொன்றை மாலையை விரும்பி அணிந்து உள்ளவர்.
சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவர். அப் பெருமான் கோயில் கொண்டருளுவது திரு
அரதைப் பெரும்பாழியே .
பாடல்
எண் : 6
புற்று
அரவம் புலித்தோல் அரைக் கோவணம்
தற்று, இரவில் நடம் ஆடுவர், தாழ்தரு
சுற்று
அமர் பாரிடம் தொல் கொடியின்மிசைப்
பெற்றர்
கோயில் அரதைப் பெரும் பாழியே.
பொழிப்புரை :புற்றில் வாழும்
பாம்பையும் , புலித்தோலையும் , கோவணத்தையும் இடையில் அணிந்து , இரவில் நடனமாடும் சிவபெருமான் , பூதகணங்கள் சூழ்ந்து நின்று வணங்க இடபக்
கொடியுடையவர் . அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே .
பாடல்
எண் : 7
துணை
இறுத்து அம் சுரி சங்கு அமர் வெண்பொடி,
இணை
இல் ஏற்றை உகந்து ஏறுவரும்,
எரி
கணையினால்
முப்புரம் செற்றவர், கையினில்
பிணையர்
கோயில் அரதைப்பெரும் பாழியே.
பொழிப்புரை :அழகிய சுரிந்த
சங்கினாலாகிய குழைகளைக் காதில் அணிந்தும் , திருவெண்ணீற்றைப் பூசியும் விளங்குபவர்
இறைவர், ஒப்பற்ற இடபத்தை
விரும்பி வாகனமாக ஏறுபவரும் , அக்கினிக் கணையைச்
செலுத்தி முப்புரங்களை அழித்தவரும் , கையினில்
இள மான்கன்றை ஏந்தியவருமான அச்சிவபெருமான் கோயில் கொண்டு அருளுவது திருஅரதைப்
பெரும்பாழியே ஆகும் .
பாடல்
எண் : 8
சரிவு
இலா வல் அரக்கன் தடம் தோள்தலை
நெரிவில்
ஆரவ்வடர்த்தார், நெறி மென்குழல்
அரிவை
பாகம் அமர்ந்தார், அடியாரொடும்
பிரிவு
இல் கோயில் அரதைப்பெரும் பாழியே.
பொழிப்புரை :தளர்ச்சியே இல்லாத
வல்லசுரனான இராவணனின் வலிமையான பெரிய தோள்களும் , தலைகளும் நெரியுமாறு அடர்த்த
சிவபெருமான் , அடர்த்தியான மென்மை
வாய்ந்த கூந்தலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , அடியவர்களோடு பிரிவில்லாது
வீற்றிருந்தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே .
பாடல்
எண் : 9
வரி
அரா என்பு அணி மார்பினர்,
நீர்மல்கும்
எரி
அராவும் சடை மேல் பிறை ஏற்றவர்,
கரிய
மாலோடு அயன் காண்பரிது ஆகிய
பெரியர்
கோயில் அரதைப்பெரும் பாழியே.
பொழிப்புரை :வரிகளையுடைய பாம்பு , எலும்பு ஆகியவற்றை ஆபரணமாக அணிந்த
மார்பினர் இறைவர் . கங்கையைத் தாங்கிய நெருப்புப் போன்ற சிவந்த சடையில்
பிறைச்சந்திரனைச் சூடியவர் . கருநிறத் திருமாலும் , பிரமனும் காண்பதற்கரிய ஓங்கிய பெருமை
யுடைய சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே .
பாடல்
எண் : 10
நாண்
இலாத சமண் சாக்கியர் நாள்தொறும்
ஏண்
இலாதம் மொழியவ்வெழில் ஆயவர்,
சேண்
உலா மும்மதில் தீ எழச் செற்றவர்
பேணு
கோயில் அரதைப்பெரும் பாழியே.
பொழிப்புரை :சமணர்களும் , புத்தர்களும் நாள்தோறும் பெருமையற்ற
சொற்களை மொழிகின்றனர் . அவற்றை ஏலாது அழகுடையவராய் , ஆகாயத்தில் திரியும் முப்புரங்களை
எரிந்து சாம்பலாகுமாறு அழித்த சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயில்
திருஅரதைப் பெரும்பாழியே .
பாடல்
எண் : 11
நீரின்
ஆர் புன்சடை நிமலனுக்கு இடம் எனப்
பாரினார்
பரவு அரதைப்பெரும் பாழியைச்
சீரின்
ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய்
ஏரின்
ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லையாம் பாவமே.
பொழிப்புரை :கங்கையை மெல்லிய
சடையில் தாங்கிய நிமலனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் எனப் பூவுலகத் தோரால்
போற்றி வணங்கப்படும் திருஅரதைப் பெரும்பாழியைப் போற்றி , புகழுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன்
அருளிய சிறப்புடைய இத்தமிழ்ப்பதிகத்தை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment