குருடனுக்குக் குருடன் வழி காட்டுதல் கூடாது.





41. குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்தல்

அருள்மிகுத்த ஆகமநூல் படித்தறியார்!
     கேள்வியையும் அறியார்! முன்னே
இருவினையின் பயனறியார்! குருக்களென்றே
     உபதேசம் எவர்க்கும் செய்வார்!
வரம்மிகுத்த தண்டலைநீள் நெறியாரே!
     அவர்கிருபா மார்க்கம் எல்லாம்
குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி
     காட்டிவரும் கொள்கை தானே.

இதன் பொருள் ---

     வரம் மிகுத்த தண்டலை நீள் நெறியாரே --- நன்மை மிக்க திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலிலே எழுந்தருளிய சிவபெருமானே!

     அருள் மிகுத்த ஆகம நூல் படித்து அறியார் --- இறைவன் அருளை மிகுதியாகப் பெறுவதற்குத் துணை புரியும் ஆகம நூல்களைக் கற்று அறிய மாட்டார்,

     கேள்வியையும் அறியார் --- கற்கவில்லை ஆயினும், பெரியோர்களை அடுத்துக் கேட்டும் அறிய மாட்டார்,

     முன்னே  இருவினையின் பயன் அறியார் --- முற்பிறவிகளில் செய்த நல்வினை என்னும் புண்ணியத்தின் பயனையும், தீவினை என்னும் பாவத்தின் பயனையும் அறியாதவராய் இருப்பார்,

(ஆனாலும், வேடம் மட்டும் பூண்டு, சிலர்,)

     குருக்கள் என்றே எவர்க்கும் உபதேசம் செய்வார் --- குருநாதர் என்று எல்லோர்க்கும் உபதேசம் செய்வார்கள்,

     அவர் கிருபா மார்க்கம் எல்லாம் --- அப்படி அவர்கள் போதிக்கின்ற அருள்நெறி எல்லாம்,

     குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்து --- குருட்டுத் தன்மை உடைய ஒருவனுக்கு, இன்னொரு குருடன் தனது கோலைக் கொடுத்து,

     வழிகாட்டி வரும் கொள்கை தானே --- வழி காட்டியது போலத் தான் முடியும்.


     விளக்கம் --- கண் பார்வை கொண்டு வழிகாட்டத் தெரிந்தவன், கண்ணில்லாத ஒருவனுக்குத் தனது கோலைக் கொடுத்து வழி நடத்தினால் பொருத்தமாக இருக்கும்.

     பார்வையே இல்லாது கோலைக் கொண்டு வழி நடக்கும் ஒருவன், இன்னொரு குருடனுக்குத் தனது கோலைக் கொடுத்து வழிகாட்டுவது துன்பத்தில் முடியும்.

     ஒருவன் அருள் நூல்களைக் கற்றுத் தெளிந்து இருக்கவேண்டும். "கற்றிலன் ஆயினும் கேட்க" என்றாற்போல், பெரியவர்களை அடுத்து இருந்து, அருள் நூல்களைக் கேட்டுத் தெளிவு பெற்று இருக்கவேண்டும். அதன் வாயிலாக, பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மை விளங்கும். அதனால் உண்மை அறிவு விளங்கப் பெறும். அப்படி உண்மை அறிவு விளங்கப் பெற்ற ஒருவன், அது இல்லாத ஒருவனுக்குக் குருவாக இருந்து வழி காட்டலாம். அதுதான் முறைமை. ஆனால், எந்தத் தகுதியும் இல்லாமல், வெறும் வேடத்தை மட்டுமே புனைந்துகொண்டு, தன்னைக் குருநாதராக எண்ணிக் கொண்டு, பிறருக்கு உபதேசம் செய்வது என்பது தீமையில் முடியும்.

பார்வை உள்ளவன் பார்வை இல்லாதவனுக்கு வழியைக் காட்டலாம். பார்வை இல்லாதவன், பார்வை இல்லாத இன்னொருவனுக்கு சரியான வழியைக் காட்ட முடியாது. இருவரும் குழியில் விழுவர்.

ஞானி ஒருவன், அஞ்ஞானிக்கு அருள் உபதேசம் புரியலாம்.
அஞ்ஞானி, இன்னொரு அஞ்ஞானிக்கு உபதேசம் புரிந்தால், இருவருமே நரகம் புகுவர், பிறவிக் குழியிலும் விழுவர்.

இதனைப் பின்வரும் திருமந்திரப் பாடலால் தெளியலாம்.

"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்,
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்,
குருடும் குருடும் குருட்ட்டு ஆடட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே".

உண்மை உணர்ச்சியில்லாதவர் அகக்கண் குருடாகிய அறியாமையினை நீக்கும் மெய்க் குருவினைக் கைக் கொள்ள மாட்டார். அறியாமையை அகற்றும் நெறியே தெரியாத பொய்க் குருவினை மெய் எனக் கொள்வர். அங்ஙனம் கொள்ளுவதால் வழிகாட்டத் தெரியாத குருடும் குருடும் கூடிக் குருட்டு ஆட்டம் ஆடிக் கொண்டு குழியில் விழுவதுபோன்று, அகக்கண் இல்லாத பொய்க் குருவினைக் கொண்டு கருக்குழியில் வீழ்வர்.

குருடு - அஞ்ஞானம்.

குழி விழுமாறு - குருடும் குருடும் சேர்ந்தால் குழியில் விழுவதுபோல, அஞ்ஞானம் நீங்காத குருவைக் கொண்டால், கொண்டவனும் குருவும் பிறவிக் குழியில் விழவேண்டியது தான்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...