திரு மயிலை - 0697. அமரும் அமரரினில்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அமரும் அமரரினில் (திருமயிலை)

முருகா!
திருவடி இன்பத்தை அருள் புரிவாயாக.


தனன தனதனன தனன தனதனன
     தனன தனதனன ...... தனதான


அமரு மமரரினி லதிக னயனுமரி
     யவரும் வெருவவரு ...... மதிகாளம்

அதனை யதகரண விதன பரிபுரண
     மமைய னவர்கரண ...... அகிலேச

நிமிர வருள்சரண நிபிட மதெனவுன
     நிமிர சமிரமய ...... நியமாய

நிமிட மதனிலுண வலசி வசுதவர
     நினது பதவிதர ...... வருவாயே

சமர சமரசுர அசுர விதரபர
     சரத விரதஅயில் ...... விடுவோனே

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
     தரர ரரரரிரி ...... தகுர்தாத

எமர நடனவித மயிலின் முதுகில்வரு
     மிமைய மகள்குமர ...... எமதீச
  
இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு
     மெமது பரகுரவ ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


அமரும் அமரரினில் அதிகன், அயனும், அரி
     அவரும் வெருவ வரும் ...... அதிகாளம்

அதனை அதகரண விதன! பரி புரணம்
     அமை அனவர் கரண! ...... அகிலஈச!

நிமிர அருள் சரண! நிபிடம் அது என, உன
     நிமிர சமிரமய! ...... நியம் ஆய

நிமிடம் அதனில் உணவல சிவசுத வரவ!
     நினது பதவி தர ...... வருவாயே.

சமரச அமர சுர அசுர விதரபர!
     சரத விரத அயில் ...... விடுவோனே!

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
     தரர ரரரரிரி ...... தகுர்தாத

எமர நடன இத மயிலின் முதுகில்வரும்
     இமைய மகள் குமர! ...... எமது ஈச!

இயல்இன் இயல் மயிலை நகரில் இனிது உறையும்
     எமது பர குரவ! ...... பெருமாளே.


பதவுரை


      சமரச அமர சுர விதர பர அசுர --- ஒற்றுமையான பெருந்தன்மை பொருந்திய அமரர்களுக்கு பகைவர்களாகிய அசுரர்கள் மேல்

      சரத விரத அயில் விடுவோனே --- சத்தியமான ஞானசக்தி ஆகிய வேலாயுத்ததை விடுத்து அருளியவரே!

      தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத --- தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத என்னும் ஒலியில்

      எமர நடன இத மயிலின் முதுகில் வரும் --- எம்மினத்தைச் சேர்ந்தவராகிய அடியாரகளுக்கு அருள் பெருக இதமாகத் திருநடனம் புரிகின்ற மயிலின் முதுகின் மேல் வருகின்ற

      இமைய மகள் குமர --- இமவான் மகளாகிய உமாதேவியார் அருளிய திருக்குமாரரே!

     எமது ஈச --- எமது இறைவரே!

      இயலின் இயல் --- பெருமையோடு விளங்குகின்ற

     மயிலை நகரில் இனிது உறையும் --- திருமயிலை நகரம் என்னும் திருத்தலத்திலே இனிதே எழுந்தருளி உள்ள

      எமது பர குரவ --- எங்களின் மேலான குருநாதனாகிய

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

      அமரும் --- தேவர்களும்,

     அமரரினில் அதிகன் --- தேவர்களின் தலைவனான இந்திரனும்,

     அயனும் --- பிரமதேவனும்,

     அரி --- திருமாலும்,

      அவரும் வெருவ வரும் அதிகாளம் அதனை --- ஆகிய எல்லோரும் அஞ்சும்படியாக வந்த ஆலகால விடத்தினால் வந்த

      விதன அத கரண --- மனச் சஞ்சலத்தை அதம் செய்தவரே!

      பரிபுரணம் அமை அனவர் கரண --- சிந்தை நிறைவு உடையோர் உள்ளத்தில் எழுந்தருளி இருப்பவரே!
    
     அகில ஈச --- எல்லா உலகங்களுக்கும் தலைவரே!

      நிமிர அருள் சரண --- ஞானத்தை வழங்கும் திருவடிகளை உடையவரே!

      அது நிபிடம் என உன --- அந்து ஆலகால விடமானது தம்மை நெருங்கி வருகிறது என்று (தேவர்களும் மற்றவரும்) நினைத்த அளவிலேயே,

      நிமிர சமிர மய --- இமைப் பொழுதில்  வாயு வேகத்தில்,

      நியம் ஆய --- ( தம்மைச் சரண் அடைந்தவர்களைக் காப்பதே) நீதி என்று கொண்டு,

     நிமிடம் அதனில் --- நிமிட நேரத்தில்

      உணவல சிவ வர சுத --- உண்டு அருளிய சிவபிரானுடைய அருட்புதல்வரே!

      நினது பதவி தர வருவாயே --- தேவரீரது திருவடி நிலையை அருள் புரிய வருவாயாக.


பொழிப்புரை


         ஒற்றுமையான பெருந்தன்மை பொருந்திய அமரர்களுக்கு பகைவர்களாகிய அசுரர்கள் மேல் சத்தியமான ஞானசக்தி ஆகிய வேலாயுத்ததை விடுத்து அருளியவரே!

         தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத என்னும் ஒலியில், எம்மினத்தைச் சேர்ந்தவராகிய அடியாரகளுக்கு அருள் பெருக இதமாகத் திருநடனம் புரிகின்ற மயிலின் முதுகின் மேல் வருகின்ற, இமவான் மகளாகிய உமாதேவியார் அருளிய திருக்குமாரரே!

     எமது இறைவரே!

         பெருமையோடு விளங்குகின்ற திருமயிலை நகரம் என்னும் திருத்தலத்திலே இனிதே எழுந்தருளி உள்ள எங்களின் மேலான குருநாதனாகிய பெருமையில் மிக்கவரே!

         தேவர்களும், தேவர்களின் தலைவனான இந்திரனும், பிரமதேவனும், திருமாலும், ஆகிய எல்லோரும் அஞ்சும்படியாக வந்த ஆலகால விடத்தினால் வந்த மனச் சஞ்சலத்தை அதம் செய்தவரே!

         சிந்தை நிறைவு உடையோர் உள்ளத்தில் எழுந்தருளி இருப்பவரே!
    
     எல்லா உலகங்களுக்கும் தலைவரே!

         ஞானத்தை வழங்கும் திருவடிகளை உடையவரே!

         அந்து ஆலகால விடமானது தம்மை நெருங்கி வருகிறது என்று (தேவர்களும் மற்றவரும்) நினைத்த அளவிலேயே, இமைப் பொழுதில்  வாயு வேகத்தில், (தம்மைச் சரண் அடைந்தவர்களைக் காப்பதே) நீதி என்று கொண்டு, நிமிட நேரத்தில் உண்டு அருளிய சிவபிரானுடைய அருட்புதல்வரே!

         தேவரீரது திருவடி நிலையை அருள் புரிய வருவாயாக.


விரிவுரை


சமரச அமர சுர விதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே ---

சமரசம் - ஒற்றுமை, நடுவுநிலைமை,

விதரம் - பிளப்பு.

சரதம் - உண்மை, மெய்ம்மை.

விரதம் - உறுதி.

ஒற்றுமையான பெருந்தன்மை பொருந்திய அமரர்களுக்குப் பகைவர்களாகிய அசுரர்கள் மேல், சத்தியமான ஞானசக்தி ஆகிய வேலாயுத்ததை விடுத்து அருளியவர் முருகப் பெருமான்.

மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ ---

சென்னை நகரின் மத்தியில் திருமயிலை என்னும் மயிலாப்பூரில் திருக்கோயில் உள்ளது. சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருமயிலைக்கு நகரப் பேருந்து வசதிகள் உண்டு. திருமயிலை புறநகர் இரயில் நிலையம் திருக்கோயிலுக்கு மிக அண்மையில் உள்ளது.

சிவனைப்போலவே பிரமனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார். பிரமதேவர் ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்து விடுவார். மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மா படைக்கப்படுவார். ஆக, பிரமதேவர் ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார். சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரமன் ஆணவம் கொண்டதால், அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார். எனவே இவர், கபால ஈசுவரர் என்றழைக்கப்பட்டு கபாலீசுவரர் ஆனார். திருத்தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.

மேற்கு வெளிப் பிரகாரத்தில் அருணகிரிநாதரின் திருவுருவம் ஒரு சிறிய சந்நிதியில் சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும் அதன் அருகில் புன்னைவனநாதர் சந்நிதியும் உள்ளது. அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். புன்னைவனநாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்  சிற்பமாக இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது. தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறுதிருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மேற்கு நோக்கி மயில் மீது எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 10 பாடல்கள் உள்ளது.

பார்வதிதேவி சிவனிடம், திருவைந்தெழுத்து மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடனம் ஆடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார். இப்போது குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிறப்பாயாக என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.

திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம்.

திருமயிலாப்பூரிலே சிவநேசர் என்பவர் ஒருவர் இருந்தார்.  அவர் ஒரு வணிகர், சிவன் அடியார். செல்வத்தில் சிறந்தவர். அவர் திருஞானசம்பந்தப் பெருமானுடைய பெருமைகளைக் கேள்வியுற்று, அவர்பால் பேரன்பு உடையவராய் வாழ்ந்திருந்தார்.   அவருக்கு மகப்பேறு இல்லாமல் இருந்தது. அவர் புரிந்த தவம் அடியார்க்கு அமுது படைத்தலும், அவர்க்கு வேண்டியன செய்தலுமே. அதன் பயனாக அவருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. பூம்பாவை என்னும் திருநாமம் சூட்டினார். பெண் குழந்தை பிறை என வளர்ந்து வந்தது. "என் மகளுக்குக் கணவனாக வாய்க்கிறவனுக்கே எனது அருநிதி உரியது" என்று சொல்லி வந்தார். அந் நாளில் அவரிடம் சிலர் வந்து திருஞானசம்பந்தப் பெருமான் பாண்டி நாட்டில் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறினர். சிவநேசர் அவர்களுக்குப் பொன்னையும் மணியையும் வாரி வாரி வழங்கினார். மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், "என் மகள், என் நிதி, எனக்கு உள்ள மற்ற எல்லாவற்றையும், என்னையும் பிள்ளையாருக்கே கொடுத்தேன்" என்று சுற்றத்தாருக்கு எல்லாம் கேட்குமாறு அறிவிக்கை செய்து இன்பக் கடலில் திளைத்தார். 

ஒருநாள், பூம்பாவையார் நந்தவனத்துள் சென்றார். பூக் கொய்யும் வேளையில், மல்லிகைப் பந்தரிலே மறைந்து இருந்த பாம்பு தீண்டியது. சாய்ந்த அம்மையாரைச் சேடியர்கள் கன்னிமாடத்துக்குக் கொண்டு சென்றார்கள். மணி, மந்திர, மருந்து முறைகள் செய்யப்பட்டன.  பயனில்லை. பூம்பாவையாரிடம் உயிர் நீங்கும் குறிகள் தோன்றின. துயரக் கடலில் அழுந்திய சிவநேசர் ஒருவாறு தெளிவு பெற்று, "இந்த விடத்தை மாற்றுவோருக்கு நிதி குவியல் குவியலாக வழங்கப்படும்" என்று பறையறைவித்தார். அரச மருத்துவர்களும், மந்திரவாதிகளும் தங்களால் இயன்றவரை மூன்று நாள்கள் முயன்றும் பயனில்லை. அது கண்ட சிவநேசர், "பூம்பாவை திருஞானசம்பந்தப் பெருமானுக்கு உரியவள். நான் ஏன் வருந்த வேண்டும். இவள் உடலை எரித்து, எலும்பையும் சாம்பலையும் பெருமான் வரும்வரை சேமித்து வைத்தல் வேண்டும்" என எண்ணி, அவ்வாறே செய்து, சாம்பலையும் எலும்பையும் குடத்தில் இட்டு, அக்குடத்தை அலங்கரித்து வைத்து இருந்தார்.

ஒரு நாள், திருஞானசம்பந்தப் பெருமான் திருவொற்றியூரில் எழுந்தருளி இருப்பதைக் கேள்வியுற்றார். திருமயிலாப்பூரிலே இருந்து திருவொற்றியூர் வரை நடைப்பந்தல் அமைத்து, திருஞானசம்பந்தப் பெருமானை திருமயிலாப்பூருக்கு வரவேற்றார். அப்பொழுது அடியவர்கள், சிவநேசருக்கு உற்றதை, திருஞானசம்பந்தப் பெருமானுக்கு அறிவித்தார்கள்.

திருஞானசம்பந்தப் பெருமான், தம்முடன் இருந்த சிவநேசரை நோக்கி, "என்புக் குடத்தைக் கொண்டு வாரும்" என்றார்.  சிவநேசர் என்புக் குடத்தைக் கொண்டு வந்து கோபுரத்திற்கு எதிரே திருமுன்னர் வைத்தார். அவ் ஊரில் உள்ளாரும், பிற ஊராரும், சமணர்களும், மற்றவரும் அங்கே வந்து சூழ்ந்தார்கள்.  திருஞானசம்பந்தப் பெருமான் திருவருளைச் சிந்தித்து, "மட்டிட்ட" என்னும் திருப்பதிகத்தை எடுத்து, "போதியோ பூம்பாவாய்" என்று பாடலானார். பூம்பாவையார் குடத்தில் உருப்பெற்றார்.  "உரிஞ்சாய வாழ்க்கை" என்னும் திருப்பாட்டைப் பெருமான் பாடியதும்,  குடம் உடைந்தது. பூம்பாவையார் பன்னிரண்டு வயது உடையவராய் வெளித் தோன்றினார். திருக்கடைக் காப்புச் சாத்தப் பெற்றதும், அடியவர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து அஞ்செழுத்தை ஓதித் துதித்தார்கள். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். பூம்பாவையார் திருஞானசம்பந்தப் பெருமானை வணங்கி நின்றார். பெருமான் சிவநேசரைப் பார்த்து, "உமது அருமை மகளை அழைத்து வீட்டிற்குச் செல்க" என்றார்.  சிவநேசர் திருஞானசம்பந்தப் பெருமானைத் தொழுது, "இவளைத் திருமணம் செய்து அருளல் வேண்டும்" என்றார்.  திருஞானசம்பந்தப் பெருமானோ, "நீர் பெற்ற பெண், விடத்தால் மாண்டாள். பின்னர் சிவன் அருளால் நாம் தோற்றுவித்தோம்.  உமது உரை தகாது" என்று மறுத்தார். சிவநேசரும் அவர்தம் உறவினரும் மயங்கி நின்றனர். பெருமான் திருக்கோயில் சென்று வழிபட்டார். சிவநேசர், பூம்பாவையாரை வேறு ஒருவருக்கும் மணம்செய்து கொடுக்க விரும்பவில்லை.  அம்மையார் கன்னிமடாத்திலேயே தவம் கிடந்து, சிவனடி சேர்ந்தார்.

இக்கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் திருஞானசம்பந்தர் இருக்கிறார். திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனிப் பெருவிழாவின்  8ம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது திருஞானசம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர். ஒரு கும்பத்தில் சாம்பலுக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, திருஞானசம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவை  உயிருடன் எழுந்ததை பாவனையாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அறுபது, எண்பதாம் திருமணம் செய்ய ஏற்ற தலம் இது.

         பங்குனிப் பெருவிழாவின்போது, இக்கோயிலில் நடக்கும் பன்னிருதிருமுறை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் 8ம் நாளில், 63 நாயன்மார்களும் வீதியுலா செல்கின்றனர். இதேபோல் மாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் கடலாட்டு விழாவும் பிரசித்தி பெற்றது. அப்போது சிவன் கடலுக்குச் சென்று தீர்த்த நீராடி வருகிறார். திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் 6-வது பாடலில் கடலாட்டு விழாவைப் பற்றியும், பக்தர்கள் கடலாடுவதை இறைவன் பார்த்தபடி இருப்பதையும் குறிப்பிடுவதால் தேவார காலத்தில் இத்தலம் கடலருகே இருந்தது என்பது தெரிய வருகிறது.

இக் காலத்தில் அடியார்கள் சிலர், "மயிலையே கயிலை, கயிலையே மயிலை" என்று முழங்குகின்றனர். உணர்ச்ச் மேலீட்டால் இது நிகழ்கின்றது. திருக்கயிலை திருக்கயிலையே. திருமயிலை திருமயிலையே. கயிலாய நாதனையே காணலாமே என்று திருக்கோயில்களைச் சிறப்பித்து அப்பர் பெருமான் பாடி உள்ளார். ஆ, எந்தத் திருக்கோயில் ஆனாலும், அதில் கயிலாய நாதனைக் காணலாம்.


அமரும், அமரரினில் அதிகன், அயனும், அரி, அவரும் வெருவ வரும் அதிகாளம் அதனை விதன அதகரண ---

அதிகன் - மேலானவன், மேம்பட்டவன், மகான், பெரியோன்.

இங்கே தேவர்களில் மேம்பட்டவனான இந்திரனைக் குறித்தது.

அதிகாளம் - ஆலகால விடம்.

அதம் - கேடு, அழிவு.
   
பரிபுரணம் அமை அனவர் கரண ---
  
பரிபுரணம் அமை - முழுமைத் தன்மை பொருந்தி, நிறைவு உடைய.

அனவர் - அன்னவர்.

கரணம் - உள்ளம்.

சிந்தை நிறைவு உடையோர் உள்ளத்தில் எழுந்தருளி இருப்பவன் இறைவன்.
    
நிமிர அருள் சரண ---

நிமிரம் - சோறு, ஞானம்.

சரணம் - திருவடி.

ஞானத்தை வழங்கும் திருவடிகளை உடையவன் இறைவன். உலகியல் ஞானம் என்னும் அபரஞானத்தையும், அருளியல் ஞானம் என்னும் பரஞானத்தையும் உயிர்களுக்கு அருள்வது இறைவனுடைய திருவடிகள்.


கருத்துரை

முருகா! திருவடி இன்பத்தை அருள் புரிவாயாக.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...