திருமயிலை - 0701. இணையது இலதாம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இணையது இலதாம் (திருமயிலை)

முருகா!
விலைமாதர் மயலில் அழுந்தி அழியாமல்
ஆட்கொண்டு அருள்.


தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான


இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு
     இருகுழையின் மீத டர்ந்து ...... அமராடி

இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த
     இருநயனர் வாரி ணங்கு ...... மதபாரப்

பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு
     பருவரதி போல வந்த ...... விலைமானார்

பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற
     படுகுழியி லேம யங்கி ...... விழலாமோ

கணகணென வீர தண்டை சரணமதி லேவி ளங்க
     கலபமயில் மேலு கந்த ...... குமரேசா

கறுவிவரு சூர னங்க மிருபிளவ தாக விண்டு
     கதறிவிழ வேலெ றிந்த ...... முருகோனே

மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த
     மலையவிலி னாய கன்றன் ...... ஒருபாக

மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து
     மயிலைநகர் வாழ வந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இணை அது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு,
     இருகுழையின் மீது அடர்ந்து, ...... அமர் ஆடி,

இலகுசிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த
     இருநயனர், வார் இணங்கு ...... மதபாரப்

பணைமுலையின் மீது அணிந்த தரள மணியார், துலங்கு
     பருவ ரதி போல வந்த ...... விலைமானார்,

பயிலும் நடையால் உழன்று, அவர்களிட மோகம் என்ற
     படு குழியிலே மயங்கி ...... விழல் ஆமோ!

கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க,
     கலப மயில் மேல் உகந்த ...... குமர ஈசா!

கறுவி வரு சூரன் அங்கம் இருபிளவு ஆதாக விண்டு,
     கதறி விழ, வேல் எறிந்த ...... முருகோனே!

மணிமகுட வேணி கொன்றை அறுகு மதி ஆறு அணிந்த
     மலைய விலின் நாயகன் தன் ...... ஒருபாக

மலையரையன் மாது தந்த சிறுவன் எனவே வளர்ந்து
     மயிலைநகர் வாழ வந்த ...... பெருமாளே.


பதவுரை


         கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க --- கண கண என்று ஒலிக்கும் வீர தண்டைகள் திருவடிகளில் விளங்க,

     கலப மயில் மேல் உகந்த குமர --- தோகையினை உடைய மயிலின் மேல் மகிழ்ந்து ஏறும் குமாரக் கடவுளே!

     ஈசா --- எப் பொருட்கும் இறைவரே!

      கறுகி வரு சூரன் அங்கம் --- கோபத்துடன் வந்த சூரபதுமனுடைய உடல்,

     இரு பிளவதாக விண்டு கதறி விழ --- இரு கூறுகளாகப் பிளந்து அவன் அலறி விழும்படியாக

     வேல் எறிந்த முருகோனே --- வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப் பெருமானே!

      மணி மகுட வேணி --- அழகிய சடையினை உடைய திருமுடியில்,

     கொன்றை --- கொன்றை மலரையும்,

     அறுகு --- அறுகம் புல்லையும்,

     மதி --- பிறைச் சந்திரனையும்,

     ஆறு அணிந்த --- கங்கை நதியையும் சூடியுள்ள,

     மலைய விலின் நாயகன் தன் ஒரு பாக --- முப்புரங்களை எரித்த காலத்தில்  மேரு மலையையே வில்லாகக் கொண்ட தலைவரான சிவபெருமானது திருமேனியின் ஒரு பாகத்தில்,

       மலை அரையன் மாது --- மலை அரசனாகிய இமவானின் திருமகளாகிய பார்வதி தேவியார்,

     உகந்த சிறுவன் எனவே வளர்ந்து --- மகிழும் சிறுவனாக வளர்ந்து,

      மயிலை நகர் வாழ வந்த பெருமாளே --- திருமயிலாப்பூர் என்னும் திருத்தலம் சிறப்புற்று விளங்க எழுந்தருளி இருக்கும் பெருமையில் மிக்கவரே!

      இணை அது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு --- ஒப்பு இல்லை என்று சொல்லும்படியாக உள்ள இரண்டு கயல் மீன்கள் என்னும்படி புரண்டு,

      இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி --- குழை அணிந்த இரு காதுகளின் மேலே நெருங்கிப் போர் புரிந்து,

      இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் --- விளங்கும் வில்லை உடைய காமவேள் செலுத்திய மலர் அம்பைக் காட்டிலும் சிறந்த இரு கண்களை உடையவர்களும்,

      வார் இணங்கும் அதி பாரம் பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் --- கச்சுப் பொருந்தி உள்ள பருத்த பெருத்த முலைகளின் மீது முத்துமாலையினை அணிந்தவர்களும்,

      துலங்கு பருவ ரதி போல வந்த விலை மானார் --- ஒளிரும்  இளமைப் பருவம் வாய்ந்த இரதியைப் போல வந்தவர்களும் ஆகிய விலைமாதர்கள்

      பயிலும் நடையால் உழன்று --- மேற்கொள்ளுகின்ற செயல்களினால் எனது மனமானது நிலை திரிந்து

     அவர்கள் இட மோகம் என்ற படு குழியிலே மயங்கி விழல் ஆமோ --- அவர்கள் இடுகின்ற மோகம் என்னும் படுகுழியில் விழுந்து அடியேன் மயங்குதல் தகுமோ? தகாது.

பொழிப்புரை


     கண கண என்று ஒலிக்கும் வீர தண்டைகள் திருவடிகளில் விளங்க, தோகையினை உடைய மயிலின் மேல் மகிழ்ந்து ஏறும் குமாரக் கடவுளே!

     எப் பொருட்கும் இறைவரே!

     கோபத்துடன் வந்த சூரபதுமனுடைய உடல், இரு கூறுகளாகப் பிளந்து அவன் அலறி விழும்படியாக வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப் பெருமானே!

         அழகிய சடையினை உடைய திருமுடியில், கொன்றை மலரையும், அறுகம் புல்லையும், பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும் சூடியுள்ள, முப்புரங்களை எரித்த காலத்தில்  மேரு மலையையே வில்லாகக் கொண்ட தலைவரான சிவபெருமானது திருமேனியின் ஒரு பாகத்தில் உள்ள  மலை அரசனாகிய இமவானின் திருமகளாகிய பார்வதி தேவியார் மகிழும் சிறுவனாக வளர்ந்து, திருமயிலாப்பூர் என்னும் திருத்தலம் சிறப்புற்று விளங்க எழுந்தருளி இருக்கும் பெருமையில் மிக்கவரே!

     ஒப்பு இல்லை என்று சொல்லும்படியாக உள்ள இரண்டு கயல் மீன்கள் என்னும்படி புரண்டு, குழை அணிந்த இரு காதுகளின் மேலே நெருங்கிப் போர் புரிந்து, விளங்கும் வில்லை உடைய காமவேள் செலுத்திய மலர் அம்பைக் காட்டிலும் சிறந்த இரு கண்களை உடையவர்களும், கச்சுப் பொருந்தி உள்ள பருத்த பெருத்த முலைகளின் மீது முத்துமாலையினை அணிந்தவர்களும், ஒளிரும் இளமைப் பருவம் வாய்ந்த இரதியைப் போல வந்தவர்களும் ஆகிய விலைமாதர்கள் மேற்கொள்ளுகின்ற செயல்களினால் எனது மனமானது நிலை திரிந்து, அவர்கள் இடுகின்ற மோகம் என்னும் படுகுழியில் விழுந்து அடியேன் மயங்குதல் தகுமோ? தகாது.


விரிவுரை

இணை அது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு, இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி, இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் ---

பெண்களின் கண்களை தாமரை மலருக்கும், செங்கழுநீர் மலருக்கும், வேலுக்கும், மன்மதனுடைய அம்புக்கும், வாளுக்கும், கயல் மீனுக்கும், சேல் மீனுக்கும், மானின் கண்களுக்கும், வண்டுக்கும், ஆலாகால விடத்திற்கும், மாவடுவிற்கும் ஒப்பாகக் கூறுவர்.

அழகாக ஒளி பொருந்தி இருப்பதால் தாமரை,  செங்கழுநீர் மலர் என்பர்.

பார்வையானது உள்ளத்தில் பாய்ந்து தாக்குவது போன்று இருத்தலால் வேல், வாள், மன்மதனுடைய அம்பு என்பர்.

மீனின் வடிவத்தோடு இருத்தலால் கயல், சேல் என்பர்.

மாம்பிஞ்சினைப் பிளந்தது போன்று இருத்தலால் மாவடு என்று கூறுவர்.

மகர மீன் போலச் செய்யப்பட்ட குழைகளைப் பெண்கள் தமது காதுகளில் அணிந்து இருப்பர். அந்த மகர மீன்களோடு, கயல், சேல் என்று வருணிக்கப்படும் கண்கள் போர் புரிவது போன்று அமைந்து இருக்கும்.

ஆலகால விடமானது உண்டாரைக் கொல்லும்.
பெண்களின் கண்கள் கண்டாரையும் கொல்லும் தன்மை வாய்ந்தன.

மகர குண்டலம் மீதே மோதுவ,
     வருண பங்கயமோ? பூ ஓடையில்
          மருவு செங்கழு நீரோ? நீ விடு ...... வடிவேலோ?
மதன் விடும் கணையோ? வாளோ? சில
     கயல்கள் கெண்டைகளோ? சேலோ? கொலை
          மறலி என்பவனோ? மானோ? மது ...... நுகர் கீத

முகர வண்டு இனமோ? வான் மேல் எழு
     நிலவு அருந்து புளோ? மாதேவர் உண்
          முதிய வெங்கடுவோ? தே மாவடு ...... வகிரோ?பார்
முடிவு எனும் கடலோ? யாதோ என,
     உலவு கண்கொடு நேரே சூறைகொள்,
          முறை அறிந்த பசாசே போல்பவர் ...... உறவு ஆமோ  ---  திருப்புகழ்.

வரிக்கலையின் நிகரான விழிக்கடையில் இளைஞோரை
           மயக்கியிடு மடவார்கள்           மயலாலே
      மதிக்குளறி, உளகாசும் அவர்க்கு உதவி, மிடியாகி,
          வயிற்றில் எரி மிக மூள,           அதனாலே
ஒருத்தருடன் உறவாகி, ஒருத்தரொடு பகையாகி,
          ஒருத்தர்தமை மிகநாடி,             அவரோடே
      உணக்கையிடு படுபாவி எனக்கு, உனது கழல்பாட
           உயற்சிபெறு குணசீலம்            அருள்வாயே.        --- திருப்புகழ்.

வார் இணங்கும் அதி பாரம் பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் ---

பெண்களின் முலைகள் மலை போலப் பருத்து, கச்சுக்குள் பொருந்தி, காணும் ஆடவரை மலைய வைப்பவை.

சிலந்தி போலக் கிளைத்து முன் எழுந்து
திரண்டு விம்மி, சீ பாய்ந்து ஏறி,
உகிரால் கீற உலர்ந்து, உள் உருகி,
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரி மொட்டு என்றும்
குலையும் காமக் குருடர்க்கு ஒன்று உரைப்பேன்.

கொப்புளம் போல இரண்டாகி, முன் பக்கத்தில் தோன்றி, திரட்சி பெற்று, பூரித்து, சீப்பெருகி ஏறி, நகத்தால் கிழிக்க உலர்ந்து போய் மனம் உருகி, சில காலத்திற்குப் பின் தாங்கி வற்றிப் போய்விடுகின்ற தனங்களைப் பார்த்து தாமரை மொட்டு என்று குழறுகின்ற காமாந்தகாரத்தில் முழுகிக் கிடக்கும் குருடருக்குச் சொல்லுவேன் என்கின்றார் பட்டினத்து அடிகள்.

சீறும் வினை அது பெண் உரு ஆகி, திரண்டு உருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்
பீறும் மலமும் உதிரமும் சாயும் பெரும் குழி விட்டு
ஏறும் கரை கண்டிலேன் இறைவா, கச்சி ஏகம்பனே

என்றார் பட்டினத்து அடிகள்.

இருவினையின் சம்பந்தத்தால் தேகமும், தேக சம்பந்தத்தால் ஊழ்வினையும், ஊழ்வினையால் பலவகைத் துன்பங்களும் தோன்றுவது போல, பெண்களைக் காண்டல், சிந்தித்தல், அவர் சொல் கேட்டல் முதலியன பலவகைத் துன்பத்திற்கும் ஆதாரமாக இருப்பதால், "சீறும் வினை அது பெண் உரு ஆகி" என்றும், மானுட உறுப்புக்கள் முப்பத்திரண்டுள், நீண்டும், பரந்தும், தடித்தும், மாமிசம் பெற்றும், திரண்டும் உருண்டும் இருக்க வேண்டிய அந்த அந்த அவயவங்களுக்கு உரிய அழகு நிரம்பப் பெற்று இருத்தலினால், திரண்டு, உருண்டு கூறும் முலையும் இறைச்சியும் ஆகி என்றார் பட்டினத்து அடிகள்.

காமவேட்கையானது அரும் தவராலும் அகற்றுதற்கு முடியாத வேகம் உடையது. ஆகையால், மாயைக்குச் சூழ ஒண்ணா வடிவேற் கடவுளது திருவருளை நாடுகிறார். முருகவேளது திருவருள் துணைகொண்டே விலக்கற்கரிய அவ்வாசையை நீக்க வேண்டும். அவனது அருளாலேயே ஆசையாகிய கட்டு தூள்படும். நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகளாயினஎன்ற அருள் மொழியைக் காண்க.

இதனைச் சிதம்பர சுவாமிகள் திருவாக்காலும் உணர்க.

மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநகரம், --- ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகு இல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.

விழியாலும், மொழியாலும், முலையாலும் ஆடவருக்குக் காம மயக்கத்தை உண்டு பண்ணுபவர் பெண்கள் என்பதால்,

"கருங்குழல், செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து
எய்த்து இடை வருந்த எழுந்து, புடைபரந்து,
ஈர்க்ககு இடை போகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்"

என்று அருளினார் மணிவாசகப் பெருமான்.

நடைஉடையிலே அருக்கி, நெடிய தெரு வீதியிற்குள்
     நயனம் அதனால் மருட்டி, ...... வருவாரை
நணுகி, மயலே விளைத்து, முலையை விலை கூறி விற்று,
     லளிதம் உடனே பசப்பி ...... உறவாடி,

வடிவு அதிக வீடுபுக்கு, மலர் அணையின் மீது இருத்தி,
     மதனன் உடை ஆகமத்தின் ...... அடைவாக
மருவி, உளமே உருக்கி, நிதியம் உளதே பறிக்கும்
     வனிதையர்கள் ஆசை பற்றி ...... உழல்வேனோ?       --- திருப்புகழ்.

பெண்ஆகி வந்தது ஒரு மாயப்பிசாசம் பிடித்திட்டு, ன்னைக்
கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்
புண்ணாம் குழி இடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க
எண்ணாது, னைமறந்தேன் இறைவா கச்சி ஏகம்பனே.      --- பட்டினத்தார்.

துலங்கு பருவ ரதி போல வந்த விலை மானார் பயிலும் நடையால் உழன்று ---

துலங்குகின்ற இளமைப் பருவம் பொருந்தியவளும், எல்லோரையும் காமவயப்படுமாறு மயக்கும் தொழிலைப் புரிகின்ற மன்மதனுடைய தேவியாகிய இரதியைப் போன்று அழகு பொருந்தப் பெற்று, பொருள் பற்றிய ஆசையினாலே, அதனை உடைய ஆடவர்களை மயக்கி, முலையை விலை கூறுகின்ற பெண்கள் புரியும் சாகசச் செயல்களால் ஆடவரின் மனமானது பட்டு, நிறை திரிந்து, நிலை திரிந்து உழலும்.

அவர்கள் இட மோகம் என்ற படு குழியிலே மயங்கி விழல் ஆமோ ---

அப்படி விலைமாதல்கள் இடுகின்ற மோகம் என்னும் படுகுழியில் மயங்கி விழுதல் கூடாது என்பதால், முருகப் பெருமானின் அருளை வேண்டிப் பாடினார் அடிகளார்.

கருத்துரை

முருகா! விலைமாதர் மயலில் அழுந்தி அழியாமல் ஆட்கொண்டு அருள்.


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...