மக்களில் தீமை செய்யும் கிரகங்கள்.
42. மக்களில் தீமை செய்யும் கிரகங்கள்

அன்னை தந்தையர் புத்தி கேளாத பிள்ளையோ
     அட்டமச் சனி ஆகுவான்,
அஞ்சாமல் எதிர்பேசி நிற்கும் மனையாள் வாக்கில்
     அங்காரகச் சன்மம் ஆம்,

தன்னை மிஞ்சிச் சொன்ன வார்த்தை கேளா அடிமை
     சந்திராட்டகம் என்னலாம்,
தன்பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ
     சார்ந்த சன்மச் சூரியன்,

நல்நயம் இலாத வஞ்சனை செய்த தமையன் மூன்-
     றாம் இடத்தே வியாழம்,
நாள்தொறும் விரோதம் இடு கொண்டோன் கொடுத்துளோன்
     ராகு கேதுக்கள் எனலாம்,

மன்அயனை அன்று சிறை தனில் இட்டு நம்பற்கு
     மந்திரம் உரைத்த குருவே!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் ---

     அன்று மன் அயனை சிறைதன்னில் இட்டு நம்பற்கு மந்திரம்  உரைத்த குருவே --- முன்னொரு காலத்தில் நிலைபெற்ற பிரமதேவனைச் சிறையில் வைத்துச் சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த குருநாதரே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     அன்னை தந்தையர் புத்திகேளாத பிள்ளையோ அட்டமச் சனி ஆகுவான் --- தாய் தந்தையர் கூறும் அறிவுரைகளைக் கேளாத பிள்ளையானவன், அவர்களுக்கு எட்டாமிடத்துச் சனி போன்றவன்.

     அஞ்சாமல் எதிர் பேசி நிற்கும் மனையாள் வாக்கில் அங்காரகச் சன்மம் ஆம் --- அச்சம் இல்லாமல் எதிர்த்துப் பேசி நிற்கின்ற மனைவியானவள் வாக்கிலே இருக்கும் செவ்வாய் எனப் பிறந்தவள்.

     தன்னை மிஞ்சிச் சொன்ன வார்த்தை கேளா அடிமை சந்திர அட்டகம் என்னலாம் --- தன்னை மிஞ்சியவன் ஆகி, தான் ஒருவன் சொல்லுகின்ற வார்த்தைகளைக் கொள்ளாத வேலைக்காரனை எட்டாம் இடத்துத் திங்கள் (சந்திராஷ்டகம்) என்று சொல்லலாம்.

     தன் பங்கு தா என்று சபை ஏறு தம்பியோ சார்ந்த சன்மச் சூரியன் --- சொத்தில் தனக்கு உரிய பங்கினைக் கொடுக்கச் சொல்லி வழக்காடு மன்றத்திற்குச் செல்லுகின்ற தம்பி ஆனவன் பிறப்பிடத்திலே (சன்மத்திலே) கதிரவன் ஆவான்.

     நல் நயம் இலாத வஞ்சனை செய்த தமையன் மூன்றாம் இடத்தே வியாழம் --- நல்ல இனிமை இல்லாமல், வஞ்சனை செய்கின்ற அண்ணன் என்பவன் மூன்றாம் வீட்டிலே குரு ஆவான்.

     நாள்தொறும் விரோதம் இடு கொண்டோன் கொடுத்தோன் இராகு கேதுக்கள் எனலாம் --- எப்போதும் பகைமை பாராட்டுகின்ற கொண்டானும் கொடுத்தானும் எனப்படும் சம்பந்திகள் ஒருவர்க்கொருவர் இராகுவையும் கேதுவையும் போன்றவர் என்று சொல்லலாம்.

          விளக்கம் --- இராசிக்கு எட்டாம் வீட்டில் சனியும், சந்திரனும், வாக்குத் தானத்தில் செவ்வாயும், சன்ம இராசியில் சூரியனும், மூன்றாம் வீட்டில் வியாழனும், இராகு கேதுக்களும் கொடிய கோள்கள் என்று சோதிட நூல் கூறுவதாகச் சொல்லுவர்.

     கருத்து --- தாய் தந்தையர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு பிள்ளைகள் நடந்தால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நன்மை. கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரிமாறிக் கொள்ளவேண்டும். குடும்ப நலன் கருதி கணவன் சொல்லுவதை உடனே எதிர் நின்று மறுத்தல் கூடாது. தக்க காலம் பார்த்துச் சொல்லுதல் நன்மையைத் தரும். பணியாளன் என்பவன் தலைவன் சொற்படி நடத்தல் அவனுக்கும் நன்மை, தலைவனுக்கும் நன்மை. பங்காளிச் சண்டை கூடாது. தம்பி அண்ணனை நம்ப வேண்டும். அண்ணனும் தம்பியை ஏமாற்றுதல் கூடாது. சம்பந்திகள் தங்களுக்குள் பகைமை பாராட்டுதல் கூடாது.

No comments:

Post a Comment

நாயோட்டு மந்திரம்

  நாயோட்டு மந்திரம் -----         ‘ நமச்சிவாய வாழ்க ;  நாதன்தாள் வாழ்க ’  என்று தொடங்கும் திருவாசகத்தில் முதன்முதலாக வருகின்ற "சிவபுராண...