சுகம் பெறுவது எப்படி




பாடல் எண். 59
நிட்டையிலே இருந்து மனத் துறவு அடைந்த
         பெரியோர்கள் நிமலன் தாளைக்
கிட்டையிலே தொடுத்து முத்தி பெறும் அளவும்
         பெரிய சுகம் கிடைக்கும்; வேட்கை
வெட்டையிலே மதிமயங்கும் சிறுவருக்கு
         மணம்பேசி, விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்து, நடுக் கட்டையிலே
         கிடத்துமட்டும் கவலை தானே.

இதன் பொருள் ---
                         
நிட்டையிலே இருந்து --- மனம் ஒருநிலைப் படுவதற்கான யோகத்திலே பொருந்தி இருந்து,

மனத் துறவு அடைந்த பெரியோர்கள் --- மனத்தில் தோன்றும் பற்றுக்களை முற்றவும் துறந்த பெரியோர்கள்

நிமலன் தாளைக் கிட்டையிலே தொடுத்து --- இயல்பாகவே மலம் அற்ற இறைவன் திருவடியை மனத்தில் இருத்தி தியானத்தில் இருக்கின்ற நிலை தொடங்கி,

முத்தி பெறும் அளவும் பெரிய சுகம் கிடைக்கும் --- உலகப் பாசங்கள் எல்லாவற்றையும் விட்டு, வீடுபேற்றினை அடையும் வரையிலும் பெரும் சுகத்தில் மூழ்கி இருப்பர்.

வேட்கை வெட்டையிலே மதிமயங்கும் சிறுவருக்கு --- பெண் மீது கொண்ட வேட்கையாகிய வெப்பத்திலே அறிவு மயக்கம் கொண்டு இருக்கும் சிறியோர்களுக்கு,
        
மணம் பேசி --- திருமணத்தைப் பேசி முடித்து,

விரும்பித் தாலி கட்டையிலே தொடுத்து ---  விருப்பத்துடன் பெண்ணின் கழுத்திலே தாலியைக் கட்டும் நாள் தொடங்கி,

நடுக் கட்டையிலே கிடத்து மட்டும் கவலை தானே ---  பின் நாளில் அவன் இறந்த பிறகு, சடலத்தைச் சுடுகாட்டிலே கொண்டு போய், கட்டையின் நடுவிலே கிடத்துகின்ற வரையிலே அவனுக்குக் கவலையே மிகுந்து இருக்கும்.

கருத்து --- பெண்ணாசையில் அறிவு மயக்கம் கொள்ளக் கூடாது. இல்லறத்தை நல்லறமாக நடத்துதல் வேண்டும். அதுவே துறவு நிலைக்கு முதல் படி. இல்லறத்தை இனிமையாக நடத்தி வந்தாலே பற்றுக்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தானாகவே நீங்கும் பக்குவம் வாய்க்கும்.           

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...