55. உயர்வு இல்லாதவை
வேதியர்க்கு
அதிகமாம் சாதியும், கனக மக
மேருவுக்கு அதிக மலையும்,
வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்கு அதிக
மேதினியில் ஓடு நதியும்,
சோதிதரும்
ஆதவற்கு அதிகமாம் காந்தியும்,
சூழ்கனற்கு அதிக சுசியும்,
தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,
சுருதிக்கு உயர்ந்த கலையும்,
ஆதிவட
மொழி தனக்கு அதிகமாம் மொழியும், நுகர்
அன்னதா னந்த னிலும்ஓர்
அதிகதா னமும்இல்லை என்றுபல நூல்எலாம்
ஆராய்ந்த பேர் உரைசெய்வார்!
ஆதவன்
பிரமன்விண் ணவர் முனிவர் பரவவரும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே.
இதன் பொருள் ---
ஆதவன் பிரமன் விண்ணவர் முனிவர் பரவ வரும் அண்ணலே
--- கதிரவன்
நான்முகன் வானவர் முனிவர் முதலோர் வாழ்த்த, அவர்க்கு அருள் புரிய வரும் முதல்வரே!
அருமை மதவேள் --- அருமை மதவேள்
என்பான்,
அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே ---
சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
வேதியர்க்கு அதிகம் ஆம் சாதியும் ---
மறையவர்களுக்கு மேலான சாதியும்,
கனக மகமேருவுக்கு அதிக மலையும் ---
பொன்மயமான மாமேருவினும் பெரிய மலையும்,
மேதினியில் வெண்திரை கொழித்து வரு கங்கா நதிக்கு அதிகம் ஓடும்
நதியும்
--- உலகிலே வெண்மையான அலைகளைக்
கொழித்து ஓடுகின்ற கங்கை நதியினை விடவும் மேலாக ஓடும் நதியும்,
சோதி தரும் ஆதவற்கு அதிகம் ஆம் காந்தியும்
--- ஒளியைத் தரும் கதிரவனில் மேம்பட்ட ஒளிப்பொருளும்,
சூழ் கனற்கு அதிக சுசியும் --- சூழும்
தீயினும் மேம்பட்ட தூய பொருளும்,
தூய தாய் தந்தைக்கு மேலான தெய்வமும் ---
தூயவரான தாய் தந்தையரினும் மேலான தெய்வமும்,
சுருதிக்கு உயர்ந்த கலையும் ---
வேதத்தினும் மேம்பட்ட நூல்களும்,
ஆதி வடமொழி தனக்கு அதிகம் ஆம் மொழியும் --- முதன்மையான
வடமொழியினும் உயர்ந்த மொழியும்,
நுகர் அன்ன தானந்தனிலும் ஓர் அதிக தானமும்
--- உண்பதற்கு அளிக்கப்படும் அன்னதானத்தை விடவும் மேலானதொரு தானமும்,
இல்லை என்று பல நூல் எலாம் ஆராய்ந்த பேர்
உரை செய்வார் --- இல்லை எனப் பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்த மேலோர் கூறுவார்கள்.
விளக்கம் --- உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது
தமிழ் மொழியே. இறைவன் அருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே. இறைவன்
சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும், பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி
சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும்
அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது.
முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ். கல் புணையை நல் புணை ஆக்கியது தமிழ். எலும்பைப்
பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில்
இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ். குதிரைச்
சேவகனாக வரச்செய்தது தமிழ். கல் தூணில் காட்சி தரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச்
செய்ய வைத்தது தமிழ். இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது
தமிழ். ஆதலால் நம் அருணகிரியார் “அரிய தமிழ்” என்று வியக்கின்றார்.
"வடமொழியும்
தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்" என்றார் அப்பர் பெருமான்.
வடமொழிப்பற்றும்
சாதிப்பிரிவினையும் மிகுந்து இருந்த காலத்திலே இந்தச் சதகம் எழுதப்பட்டு இருக்கலாம்..
இல்லையானால், வேதியரே உயர்ந்த
சாதி என்றும், வடமொழியே சிறந்த மொழி
என்றும், வேதமே உயர்ந்த நூல்
என்றும் கூறியிருக்க மாட்டார். ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்' என்று திருவள்ளுவர் கூறுவதாலும், வேதத்தினும் தமிழருக்குத் திருக்குறளே
ஆதாரம் ஆதலாலும், வடமொழியினும்
முற்பட்ட மொழி, தமிழ் என ஆராய்ச்சியாளரால் வரையறை செய்யப்பட்டதாலும் ஆசிரியர்
சொன்னவை பொருந்தாதவை ஆகின்றன. உலகில் இரண்டே சாதிகள் தான் உள்ளன என்கின்றார் ஔவையார்,
சாதி
இரண்டு ஒழிய வேறு இல்லை சாற்றுங்கால்,
நீதி
வழுவா நெறிமுறையில் - மேதினியில்
இட்டார்
பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்,
பட்டாங்கில்
உள்ள படி.
பின்வரும்
பாரதியார் பாடலையும் கருத்தில் கொள்வோம்.
ஜாதி
மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்
இத் தேசத்தில் எய்தினர் ஆயின்,
வேதியர்
ஆயினும் ஒன்றே - அன்றி
வேறு
குலத்தினர் ஆயினும் ஒன்றே.
ஈனப்
பறையர்க ளேனும் அவர்
எம்முடன்
வாழ்ந்து இங்கு இருப்பவர் அன்றோ?
சீனத்தர்
ஆய் விடுவாரோ? - பிற
தேசத்தர்
போல் பல தீங்கு இழைப்பாரோ?
ஆயிரம்
உண்டு இங்கு ஜாதி - எனில்
அன்னியர்
வந்து புகல் என்ன நீதி? - ஓரு
தாயின்
வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டை
செய்தாலும் சகோதரர் அன்றோ?
‘உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' ஆகையால் அன்னதானம்
சிறந்ததாயிற்று.
No comments:
Post a Comment